Thursday, 27 August 2009

பழையன புகுதலும் புதியன கழிதலும்: இர்பான் பதான் -- திராவிட் விவகாரம் தேர்வா சமரசமா?




ஒவ்வொரு முறை அணி அறிவிக்கும் போதும் தேர்வுக் குழு நம்மை ஆச்சரியப்படுத்த, சில நேரம் சிரிக்க வைக்க, தவறுவதில்லை. இளைஞர்களை ஆதரிக்கிறோம் என இதுவரை சொல்லி வந்த தேர்வுக்குழு இர்பான் பதானை ஊருக்கு அனுப்பி 35 வயதில் டிராவிட்டுக்கு ஒருநாள் கிரிக்கெட் மீண்டும் ஆட டிக்கேட் கொடுத்துள்ளது. இந்நிலையில் தேர்வாளர்களிடம் ஒரு நிலையான தேர்வுத் திட்டம் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது. ஆனால் அவர்களிடம் எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை. சென்னை பிரம்மாரிக்களின் சமையல் போல் சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி அவசர கால முடிவுகள் மட்டும் எடுக்கிறார்கள் தேர்வாளர்கள். இந்த விதமான தகிடுதித்த நடவடிக்கைகள் ஸ்ரீகாந்துக்கு சரளமாக வரக்கூடியது என்றாலும், அவரை மட்டுமே நாம் குற்றம் சாட்ட முடியாது. நெருக்கடி நிலையில் ஒரு புது அணித்தலைவர் தேர்வாகும் போதான கட்டாயத்தின் போது மட்டுமே இளைஞர்களை கண்டுபிடித்து ஊக்கமளிப்பது, நிலைமை சீரடைந்ததும், ஸ்திரமான வீரர்களை குளிர்பதனத்தில் பாதுகாப்பதும் இந்தியாவின் நெடுங்கால தேர்வுக் கலாச்சாரம். இக்கலாச்சாரத்தின் கண்ணி மட்டுமே தற்போதைய தேர்வுக்குழு.

இளைஞர்களை கலவரப்படுத்தும் ராணுவ வாரியம்

வத்தலான இளைய ஆட்டக்காரர்கள் கொண்ட இலங்கை, இங்கிலாந்து போன்ற அணிகள் தொடர்ந்து புதிய வீரர்களை கண்டுபிடித்து, பரீட்சித்து, போஷிப்பதை தேர்வுக் கொள்கையாக கொண்டுள்ளனர். உதாரணங்கள்: மலிங்கா, மெண்டிஸ், போப்பார, ஓவைஸ் ஷா. புது வீரர்கள் அணிக்குள் ஆரோக்கியமான போட்டிச்சூழலை ஏற்படுத்துவதுடன், எதிரணியினரை அதிர்ச்சியடைய வைத்து அவரகளின் ஆட்டத்திட்டத்தை குலைப்பார்கள். இங்கிலாந்து ஒரு ஆட்டக்காரர் மேல் அபாரமான பொறுமையும் நம்பிக்கையும் காட்டி பலவருடங்கள் வளர்த்தெடுத்து அதனால் பின்னர் அணித்திறனை பல மடங்கு உயர்த்தியது: ஓய்வு பெறப்போகும்\பெற்ற ஆண்டிரூ ஃப்ளிண்டாஃப். 1998-இல் அறிமுகமாக இவர் முதல் 4 வருடங்கள் ஒளிவிடாத நட்சத்திரமாகவே அணியில் இடம்பெற்றார். 2002 வரை ஃப்லிண்டாஃபின் மட்டை சராசரி 19. பந்து சராசரி 47. அதற்குப் பின் அவர் ராட்சத வளர்ச்சி கண்டார். இந்தியாவில் நாம் அப்படி யாரையாவது ஊட்டி வளர்த்ததுண்டா? இருக்கிறவர்களை அச்சுறுத்தி துரத்தி கடித்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு ராணுவ பயிற்சி முகாம். சமீபத்தில் தனது தம்பிக்காக யூசுப்பதான் தேர்வாளர்களை கடிய, ஒரு கிரிக்கெட் ஆணைய பதவியாளர் மாமா திரும்ப கடித்தார்: " பாருங்க, ரெண்டே ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொதப்பியதற்காக வாசிம் ஜாஃபரை அணியிலிருந்து விலக்கினோம். அவர் வாயே திறக்கலையே; யூசுப் ஏன் ஓவராக புகார் செய்கிறார்; அவர் இடமே நிரந்தரமில்லையே". மிரட்டலில் கலங்கிப் போன யூசுப் உடனே இந்திய கிரிக்கெட் வாரியமே சிறந்தது, முதன்மையானது என்று கண்ணில் ஒற்றி மன்னிப்பு கேட்டார். நமது அணியில் 30க்கு மேல் டெஸ்டு போட்டி சராசரி கொண்ட யுவ்ராஜின் ஆசனவாயில் இன்னமும் அரை இஞ்சு ஆழத்தில் தேர்வாளரின் ஆப்பு தொங்குகிறது. டெஸ்டு போட்டிகளின் போது ஒரு வாரம் கழிப்பறை பக்கம் போகாத கடுகடுப்பு யுவியின் முகத்தில் காணப்படுவதன் காரணம் இதுவே, இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளி மட்டுமே. அணித்தலைவர் மற்றும் பிராந்தியத் தேர்வாளர்களின் விருப்பு மற்றும் ஜீரணக் கோளாறு பொறுத்தே பெரும்பாலானவர்கள் கழற்றி விடப்பட்டு தக்கவைக்கப் படுவது.

நமது தேர்வாளர்கள் 20 பேர்ப் பட்டியலில் இருந்து சீட்டுக்குலுக்கி, இங்கி பிங்கி சொல்லி ஏறத்தாழ ஒரே அணியை திரும்பத் திரும்ப தருவதற்கு எதற்கு ஊதியம் என்ற கேள்வி உள்ளது. உள்ளூரில் நடக்கும் ஆட்டங்களை சிற்றுண்டி கிடைக்காத நாய்களும், வெளிக்குப் போகும் காகங்களும் மட்டுமே பார்க்கின்றன. ஆட்டம் பார்க்காமல் காகித புள்ளி விபரங்கள், முன்முடிவுகளை வைத்து பேருக்கு அலசி தெரிந்தவர்களை வைத்து ஒப்பேற்றுவதே இப்போது சீக்காவின் குழுவினர் கண்ணியமாக செய்வது. உதாரணமாக, தற்போது இலங்கை மற்றும் சேம்பியன்ஸ் டிராஃபி தொடர்களுக்கான அணிகளில் இடம்பெற்றுள்ள ஒரே ஆல்ரவுண்டரான அபிஷேக் நாயரின் பந்து வீச்சை குரு நானக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற புச்சிபாபு தொடர் ஆட்டமொன்றில் இன்று பார்த்தேன். மொட்டை மாடி பாட்டி போட்ட அப்பள வடாம் போல் அவரை நொறுக்கி எடுக்கிறார்கள். வேகமாக வீசும் ஆர்வத்தில் குறை நீளத்தில் வீசுகிறார். இவர் எப்படி 150 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள இர்பானுக்கு பதிலீடாக முடியும். இது சாருஆன்லைனில் ஆசோகமித்திரனை எழுதவைப்பது போல் ஆகும். சமீப ஆட்ட நிலை தான் தேர்வு அளவுகோல் என்றால், சீக்கா சார், நீங்கள் நேரில் வந்து அபிஷேக் நாயர் அப்பளம் போடுவதை பார்க்க வேண்டும்.

இந்தியத் திறமையை கண்டுபிடிக்க வெள்ளைக்காரர்




கடந்த பத்து வருடங்களில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் தேர்வாளர்கள் கண்டடைந்துள்ளனர்: 2. சகீர் மற்றும் இஷாந்த. பாக்கிஸ்தான் வருடத்துக்கு இரண்டு பேரையாவது களத்தில் இறக்குகிறது. அனைவரும் உலகத்தரம். வேகப்பந்து வறுமைக்கு காரணம் ஆடுதளம் என்பது புருடா; நிஜக்காரணம் என்னவெனில் புதிய திறமையை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் நோக்கமோ செயல்முறைமையோ நமது தேர்வாளர்களுக்கு இல்லை. வாசிம் அக்ரமை இம்ரான் கான் தெருவில் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது போல், கம்ரான் கான் எனும் இளம் புயலை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் பயிற்சி இயக்குனர் பெரி ஒரு உள்ளூர் 20-20 ஆட்டத்தில் பார்த்து பிரமித்து அணிக்குள் கொண்டு வந்தார். கம்ரான் கான் தனது உள்ளூர் ஆட்டவாழ்வில் பெரும்பாலும் டென்னிஸ் பந்து வீசியே பழகியிருந்தார். சிகிச்சைக்கு பணமின்றி தாயை பறிகொடுத்த, இந்தியாவில் ஒடுக்கப்பட்டு வரும் மதத்தை சேர்ந்தவர் அவர். உடுத்தவும் மாற்றவும் ஒரே ஆடையுடன் தேர்வு ஆட்டங்களில் பங்கேற்க செல்லும் போது பிளாட்பார்த்தில் தூங்கும் அளவிற்கே ஒரு சின்ன துரு பிடித்த இரும்பு ஸ்பூனுடன் பிறந்தவர். யாரேனும் பற்றி தூக்கி விட பாவம் அவர் தோளில் அந்த நூல் இல்லை. உத்திரபிரதேச மாநில அணி பக்கம் போனேலே பிச்சைக்காரன் என கம்ரானை துரத்தி விடுவார்கள். ஆன ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஐ.பி.எல்லில் ஒரு ஆட்டத்தில் 12 க்கு 3 விக்கெட்டுகள் எடுத்து கடைசி ஓவரில் கங்குலியை முக்கியமான தருணத்தில் வெளியேற்றி கம்ரான் ஆட்ட நாயகனான போது பல தேர்வாளர்கள், வாரிய அதிகாரிகள் முகத்தில் கரியை அவர் பூசியிருக்க வேண்டும். கம்ரானிடம் லகுவாக வேகம் உள்ளது. அத்தோடு கட்டுப்பாடு, ஆவேசம், முனைப்பு, வேட்கை, உழைப்பு என பலவும். ஆனால் நமது முன்னாள் வீரர்கள், வாரியம், தேர்வாளர்கள் இவரைப் பற்றி இன்றளவும் வாய் திறக்கவில்லை. வீசும் முறையில் ஐயம் என்று தடை செய்து சிலுவையில் அறைந்து விட்டார்கள். ரஞ்சியில் வருடங்களாய் செக்கிழுத்த பல பந்தாளர்களுக்கு கம்ரானின் தரம் இல்லை. இது நமது கிரிக்கெட் அமைப்பின் ஆதாரத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. தற்போது 140க்கு மேல் பந்து வீச உள்ளூர் வட்டாரத்தில் யாரும் இல்லை. நமது உள்ளூர் வீச்சாளர்களின் வேக சராசரி 125 கி.மீ எனலாம. கம்ரானை கண்டுபிடிக்க ஒரு வெளிநாட்டவர் வரவேண்டி இருந்தது.

ஓய்வா சுயநலமா?

நமது தேர்வாளர்கள் மத்தியஸ்தர்கள் மட்டுமே. திராவிட் விசயத்தில் இவர்களின் சந்தர்ப்பவாதத் தேர்வு இந்திய கிரிக்கெட்டை காயப்படுத்துமே தவிர காப்பாற்றாது.

பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய கிரிக்கெட்டை சேவித்துள்ள் மூத்த வீரருக்கு தரப்படும் மரியாதைபூர்வ வெளியேற்றம் தான் திராவிடுக்கான தேர்வுக் காரணம். எகிறும் பந்தை சமாளிக்க திராவிட் உள்ளே வருகிறார் என்பது அபத்தமான காரணம்: திராவிட் புல்ஷாட் அடித்தே பத்து வருடத்துக்கு மேல் இருக்கும். ஆனால் திராவிடுக்கான ஓய்வு வாய்ப்பினால் மனீஷ் பாண்டே, சன்னி சோஹல் போன்ற தரமான ஆட்டக்காரர்களுக்கு ங்ங்ங்... என்று ஒரு மணிச்சத்தமும் சங்கூதலும் தொடர்ந்து கேட்கலாம். இது நிச்சயம் ஆரோக்கியமானதல்ல.




இந்தியாவில் பிறந்த இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் நசீர் ஹுசேன் தனது Playing with Fire நூலில் தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுக்க நேர்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை குறிப்பிடுகிறார். இங்கிலாந்தின் மிகச்சிறந்த அணித்தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட ஹுசேன் 2004-இல் தென்னாப்பிரிக்காவுடன் ஒரு தொடரை தோற்ற பின் அணியில் இருந்து ஓய்வு பெறுவது பற்றின யோசனையில் தடுமாறினார். அவரது மட்டையாட்டம் கீழமட்டத்தில் துவள, கடுமையான நெருக்கடி மற்றும் அழுத்தத்தில் இருந்தார். ஆசுவாசத்திற்காக நியூசிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசிப் போட்டியில் ஓய்வு பெறுவதாய் அரைமனதாய் முடிவு செய்தார். ஆனால் மிகச்சிறப்பாக ஆடி (கங்குலி போல்) அந்த கடைசி ஆட்டத்தில் சதம் அடித்தார். அவர் நினைத்தால் ஆட்ட்த்தொழிலை தொடர்ந்திருக்க முடியும். ஆனால் அன்று இங்கிலாந்துக்காக மற்றொருவர், இளைஞர், தனது முதல் போட்டியில் சதம் அடித்து கவனத்தை கவர்ந்திருந்தார். போட்டி முடிந்ததும் எதிர்காலம் பற்றின பெரும் உற்சாகத்துடன், உணர்ச்சி வேகத்தில் வார்த்தைகள் தடுமாற தனது பெற்றோருடன் அந்த இளைஞர் தொலைபேசியில் உரையாடியதை நசீர் கவனித்தார். அத்தருணம் அவர் முடிவெடுத்தார். இந்த இளைஞரின் பாதையில் நாம் குறுக்கே நிற்கக் கூடாது என்று; உடனே ஓய்வை அறிவித்தார். நசீர் ஹுசேனின் இடத்தை அன்று பிடித்த அந்த இளைஞர் தாம் இன்று இங்கிலாந்து அணியின் தலைவர்: ஆண்டுரூ ஸ்டுராஸ். கங்குலி கடுமையான மீடியா நச்சரிப்பு தாங்காமலே விலகினார். அவர் நாற்காலி இன்னமும் நுனிப்பகுதி மட்டுமே ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது. சின்ன உலுக்கலில் யுவ்ராஜ் விழுந்து விடுவார். நசீர் ஹுசேனின் அதே நிலைமையில் தற்சமயம் திராவிட் உள்ளார். அவரது மனத்தின் வலிமை நமக்குத் தெரியும், ஆனால் விரிவு? தனது கோட்டையின் கதவுகள் புதிய கரங்களால் தொடர்ந்து தட்டப்படும் போது அவரது எதிர்வினை என்னவாக இருக்கும்? வரும் தொடர்களில் திராவிட் சதங்கள் அடிக்கும் பட்சத்தில் தேர்வுக் கோட்டைக் கதவின் பூட்டுகள் இறுகும்; இளைஞர்களுக்காக அவரை விலக்குவதும் சிரமமாகும். இந்திய கிரிக்கெட்டின் முன் உள்ள முக்கிய கேள்விக்குறி திராவிடின் ஓய்வு முடிவு.

கபிலுக்கு பின் நெடுங்காலக் காத்திருப்பில் நமக்கு எதேச்சையாகவே, கிரெக் சேப்பலின் பயிற்சி மற்றும் ஊக்குவிப்பால், கிடைத்த ஒரே ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான். ஆல்ரவுண்டர்கள் அபூர்வமானவர்கள். ஆட்டத்திறனின் எதாவது ஒரு பரிமாணத்தைக் கொண்டு மட்டுமே கூட அணியில் நிலைக்கக் கூடியவர்கள் பெரும்பாலானோர். ஹேட்லி, கிரெயின்ஸ், கபில் போன்றோர் மட்டுமே தொடர்ந்து மட்டை பந்தாட்டங்கள் இரண்டிலும் சோபித்தனர். ஆல்ரவுண்டர்களில் பலர் ஒரு கட்டத்தில் உடற் தகுதி அல்லது ஆட்ட நிலை காரணமாக ஒரு பரிமாணத்தில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்து விடுகிறார்கள். இங்கிலாந்தின் ஃப்லிண்டாஃப், நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், ஐ.பி.எல் முன்வரை தென்னாப்பிரிக்காவின் காலிஸ், பாக்கிஸ்தானின் ஷோயப் மாலிக், இலங்கையின் சமரவீரா என இதற்கு ஏராள உதாரணங்கள். பொதுவாக ஆல்ரவுண்டர்கள் விசயத்தில் அனைத்து அணிகளில் பொறுமையாகவே உள்ளன, இந்தியாவைத் தவிர. தற்போது பந்து வீச்சில் மட்டும் தோய்வடைந்துள்ள இர்ஃபானுக்கு ஒரு ஐந்தாவது பந்து வீச்சாளரின் இடத்தில் வீச்சு பழைய நிலையை எட்டும் வரை குறைந்த ஓவர்கள் மட்டும் வீசி, ஏழாவதாக இறங்கி அதிரடி மட்டை ஆட்டம் ஆடும் பொறுப்பு தரப்படலாம். ஏழு மட்டையாளர்களை இறக்கும் அபத்தத்தையும் இதனால் தவிர்க்கலாம்; சமநிலைப் பெறு அணியும் வலுப்படும். அபிஷேக் நாயரை போலன்றி இர்ஃபான் உச்ச ஆட்ட நிலைக்கு திரும்பும் பட்சத்தில் அவரை டெஸ்டு போட்டிகளிலும் பயன்படுத்தலாம்.

டிராவிடின் சுமூக ஓய்வுக்காக சாம்பிராணிக் குச்சி பற்ற வைக்க முனையும் முன் தேர்வாளர்கள் ஒரு நம்பிக்கையின் சுடரை ஏற்ற முயல வேண்டும். நமக்குத் தேவை ஒளி புகை அல்ல.
Read More

Saturday, 22 August 2009

அரவிந்த அடிகாவின் வெள்ளைப் புலி: அத்தியாயம் 2




ஒரு சில சீன சுயதொழில் முனைவோரை உருவாக்க கற்றறியலாம் என எதிர்பார்க்கிறீர்கள், அதனால் தான் நீங்கள் வருவது. இது என்னை திருப்தி செய்கிறது. சர்வதேச மரபொழுங்குப்படி என் தேசத்தின் பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் உங்களை விமான நிலையத்தில் மலர்செண்டுகள், சிறு கையடக்க சந்தன காந்தி சிலைகள் மற்றும் இந்தியாவின் கடந்த, நிகழ், எதிர்காலங்கள் பற்றின் முழுத்தகவல்களும் அடங்கின சிறுபுத்தகத்துடன் சந்திப்பார்கள் என்பது எனக்கு உறைத்தது. அப்போதுதான் ஆங்கிலத்தில் நான் அதனை சொல்ல வேண்டியிருந்தது, சார். மிக சத்தமாக. அது இரவு 11:37-க்கு. ஐந்து நிமிடங்களுக்கு முன்பு.




நான் சும்மா ஏசுவதோ சபிப்பதோ இல்லை. நான் செயல் மற்றும் மாற்றத்தின் ஆள். அப்போதே அங்கேயே உங்களுக்கு கடிதம் எழுத ஆரம்பித்தேன். முதலில் பழமையான சீன தேசத்தின் பாலான என் அபிமானத்தை சொல்ல வேண்டும். வித்தியாச கிழக்கிலிருந்து துடிப்பான கதைகள் எனும், முன்பு பழைய தில்லியின் ஞாயிறு பழைய புத்தக சந்தையில் பொழுது கழித்து சற்று ஞானமைடைய முயன்று கொண்டிருந்த நாட்களில், பாதையோரமாய் நான் கண்டடைந்த, புத்தகத்தில் தான் உங்களது வரலாறு பற்றி படித்தேன். இந்த புத்தகம் பெரும்பாலும் ஹாங்காங்க்கின் கடற்கொள்ளையர்கள் மற்றும் தங்கம் பற்றினதாக இருந்தது, ஆனாலும் அது கொஞ்சம் உதவிகரமான தகவல்களும் கொண்டிருந்தது: நீங்கள் சீனர்கள் விடுதலை மற்றும் தனிமனித சுதந்திர காதலர்கள் என அது சொன்னது. பிரிட்டிஷார் உங்களை அடிமையாக்க பார்த்தனர், ஆனால் நீங்கள் அதை அனுமதிக்கவில்லை. நான் அதை போற்றுகிறேன், திரு. பிரீமியரே.

பாருங்கள், நான் முன்பு வேலையாளாக இருந்தேன். மூன்று நாடுகள் மட்டும்தான் தங்களை அன்னியர்களால் ஆள அனுமதித்ததில்லை: சீனா, அஃப்கானிஸ்தான் மற்றும் அபிசீனியா. நான் வியந்து பாராட்டும் மூன்று தேசங்கள் இவை மட்டுமே. சீனர்களின் சுதந்திர மோகம் மீதான மரியாதை காரணமாக மற்றும் எங்களது முன்னாள் முதலாளி, வெள்ளையன், ஆசனப்புணர்ச்சி, குறும்பேசி பயன்பாடு மற்றும் போதை பழக்கம் காரணமாய் தன்னை அழித்துக் கொண்ட நிலையில், பூமியின் எதிர்காலம் மஞ்சள் மற்றும் மரநிற மனிதர்களிடம் உள்ளது எனும் நம்பிக்கையாலும், நான் உங்களுக்கு, இலவசமாக, பெங்களூர் பற்றின உண்மையை சொல்ல முன்வருகிறேன். என் வாழ்வின் கதையை சொல்வதன் மூலமாக.

பாருங்கள், நீங்கள் பெங்களூர் வந்து, ஒரு போக்குவரத்து விளக்கின் முன் நிற்கையில், ஒரு சிறுவன் ஒடி வந்து உங்கள் கார் ஜன்னலை தட்டுவான், கையில், கண்ணாடி தாளில் கவனமாக பொதியப்பட்ட, அமெரிக்க வியாபார நூல் ஒன்றின் திருட்டு பிரதியை கொண்டிருப்பான், கீழ்வருவது போன்ற தலைப்புடன்:

"வியாபார வெற்றிக்கான பத்து ரகசியங்கள்"
அல்லது
"ஏழு எளிய நாட்களில் சுயதொழில் அதிபர் ஆகுங்கள்!"

அந்த அமெரிக்க நூல்களில் காசை விரயம் செய்யாதீர்கள். அவை ரொம்பவே நேற்றையவை. நான் தான் இன்று. முறையான கல்வியைப் பொறுத்தவரையில், நான் ஓரளவு குறைந்துபட்டிருக்கலாம், நான் அவசியமானவை அனைத்தையும் படித்துள்ளேன். எக்காலத்துக்குமான நான்கு மகாகவிஞர்களின் படைப்புகளை மனப்பாடமாக தெரியும்: ரூமி, இக்பால், மிர்சா காலிப் மற்றும் பெயர் மறந்து போன நான்காவது நபர் ஒருவர். நான் சுயமாய் கற்ற சுயதொழில் முனைவோன்.

இருப்பதிலேயே சிறந்த வகை அதுதான், நம்புங்கள். நான் எப்படி பெங்களூர் வந்து, அதன் மிக வெற்றிகரமான, ஆனால் மிகக்குறைவாய் அறியப்படுகிற, வணிகன் ஆனேன் என்ற கதையை நீங்கள் கேட்ட பின், மனிதனின் இந்த அற்புதமான, குறிப்பாக மஞ்சள் மற்றும் மர நிற மனிதர்களுடைய, உங்களது மற்றும் என்னுடைய, இருபத்தி-ஒன்றாம் நூற்றாண்டில் சுயதொழில் முனைவு எப்படி பிறந்து, உரமூட்டப்பட்டு, உருவாக்கப்படுகிறது என்ப்தை பற்றி அனைத்தையும் அறிவீர்கள். இப்போது நள்ளிரவுக்கு சற்று முன்னான பொழுது, மேதகையரே. நான் பெச தோதான நேரம். நான் இரவெல்லாம் விழித்திருப்பேன், மேதகையரே. மேலும், இந்த 150 சதுர அடி அலுவலகத்தில் வேறு யாரும் இல்லை. நானும் எனக்கு மேலே சரவிளக்கும் மட்டுமே, சரவிளக்குக்கு தனதான ஒரு ஆளுமை இருந்தாலுமே. அது மிகப்பெரிய் ஒன்று, முழுக்க வைர வடிவ கண்ணாடித் துண்டுகளால் ஆனது, அப்படியே 1970களில் படங்களில் காட்டுவன போன்றது.


பெங்களூரில் இரவில் தேவையளவு குளுமையாக இருந்தாலும், ஒரு சின்ன காற்றாடியை, ஐந்து மிக மெல்லிசான அலகுகள் கொண்டது, சரவிளக்கு நேர் மேலே வைத்துள்ளேன். பாருங்கள், அது சுழலும் போது அதன் சிறு அலகுகள், சரவிளக்கின் வெளிச்சத்தை நறுக்கி அறைக்கு குறுக்காய் வீசுகின்றன. அப்படியே பெங்களூரின் மிகச்சிறந்த நடன விடுதிகளில் உள்ள விட்டு விட்டு மின்னும் விளக்கைப் போன்றது. சுயதொழில்முனைவோனுக்கான சாபம் அவன் எப்போதும் தன் வியாபாரத்தை க்ண்காணிக்க வேண்டும். நான் இப்போது சிறு காற்றாடியை இயக்கப் போகிறேன், இதனால் சரவிளக்கின் ஒளி அறையைச்சுற்றி சுழலும். நான் ஓய்வுமனநிலையில் உள்ளேன், சார். நீங்கள் அப்படியே என நம்புகிறேன். நாம் ஆரம்பிக்கலாம்.

நாம் அதை செய்யும் முன்பு, சார், நான் எனது முன்னாள் முதலாளி காலம் சென்ற திரு. அசோக்கின் முன்னாள் மனைவிடம் கற்றுக் கொண்ட வார்த்தைத் தொடர் இதுவே: what a fucking joke.
Read More

Tuesday, 18 August 2009

நன்கு வெளிச்சமுள்ள ஒரு சுத்தமான இடம்



நன்கு பிந்தி விட்டிருந்தது. மின்வெளிச்சத்திற்கு குறுக்கே நின்ற மரத்தின் நிழலில் அமர்ந்திருந்த ஒரு முதியவரைத் தவிர அந்த மதுபானக் கடையிலிருந்து யாவரும் வெளியேறி விட்டிருந்தனர். அத்தெருவில் பகலில் தூசு மண்டியிருக்கும்; ஆனால் இரவில் பொழியும் பனியில் தூசி படிந்து விடும்; அம்முதியவர் நேரங்கடந்து அங்கு அமர்ந்திருக்க விரும்பினார் -- ஏனெனில் அவர் செவிடு; மேலும் அப்போது இரவில் அங்கு அமைதியாயிருந்தது; அவர் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். மதுபானக் கடையிலிருந்த இரு மேஜைப் பணியாளர்களுக்கு அவர் சற்று போதையில் இருப்பது புரிந்தது. அவர் ஒரு நல்ல வாடிக்கையாளராய் இருந்த போதும், மப்பு ஏறி விட்டால் காசு தராமலேயே போய் விடுவார்; அதனால் அவரை அவர்கள் கண்காணித்தனர்.

"போன வாரம் அவர் தற்கொலை செஞ்சுக்கப் பார்த்தார்", ஒரு பணியாளன் சொன்னான்.

"ஏன்?"

"அவர் எல்லா நம்பிக்கையையும் இழந்து நொறுங்கிப் போய் விட்டார்"

"எதைப் பற்றி?"

"ஒன்றும் இல்லை"

"ஒன்றும் இல்லை என்று உனகெப்பிடி தெரியும்"

"அவரிடம் பூத்த பணம் இருக்கு"

கடைக் கதவின் அருகிலுள்ள சுவருக்கு நெருக்கமாய் இடப்பட்டிருந்த மேஜை அருகே அவர்கள் அமர்ந்திருந்து, காற்றில் மெல்ல ஆடும் மரத்தின் இலைகளின் நிழலில் முதியவர் அமர்ந்திருந்ததை தவிர பிற மேஜைகள் காலியாயிருந்த மொட்டை மாடியையும் நோட்டம் விட்டனர். தெருவில் ஒரு பெண்ணும், சிப்பாயும் கடந்து சென்றனர். அவனது சட்டை கழுத்துப் பட்டியிலுள்ள பித்தளை எண் தெருவிளக்கு வெளிச்சத்தில் ஜுவலித்தது. முக்காடு அணியாத அப்பெண் அவனோடு விரைந்தாள்.

"அவன் படை வீரங்ககிட்ட மாட்டிக்கப் போறான் பாரு"

"அவனுக்கு வேண்டியது கிடைத்த பெறவு மாட்டினாத்தான் என்ன?"

"அவன் இந்த தெருவை விட்டு இப்பவே போய் விட்டால் அவனுக்கு நல்லது. படை வீரர்கள் அவனை பிடித்து விடுவார்கள். அவங்க அஞ்சு நிமிடம் முந்திதான் போனாங்க"

"எம்பது வயசு இருக்கும் இல்லை அவருக்கு"

"எம்பதுண்ணு தான் பார்த்தா தெரியுது"

"அவரு வீட்டுக்கு போய் தொலைய மாட்டாராண்ணு தோணுது. மூணு மணிக்கு முன்னால ஒருக்காலும் தூங்க முடியறுதில்லை. அந்த நேரங்கெட்ட வேளையிலையா தூங்கப் போகிறது?"

"அவருக்கு பிடிச்சிருக்கு, ராவெல்லாம் முழிச்சிருக்காரு"

"அவரு ஒத்தக்கட்டை. நான் தனியாயில்லை. வீட்டுல ஒருத்தி எனக்காக காத்திருக்கிறாள்"

"அவருக்கும் பொண்டாட்டி இருந்தாள் "

"இப்ப அவருக்கு பொண்டாட்டி இருந்தாலும் ஒண்ணுக்கும் களியாது"

"உனக்கெப்பிடிடே அது சொல்ல ஒக்கும். பொண்டாடிக்காரி இருந்தா நல்லா இருந்திருப்பாரு"

"மருமகள் பாத்துக்கிறாள் இல்லையா. நீதானே சொன்னே, கயிறு அறுத்து காப்பாத்தினாள் என்று"

"சரிதான், இல்லேண்ணு சொன்னேனா இப்போ"

"இந்த வயசு வரைக்கும் எனக்கு வாழ வேண்டாம். மூப்பிலு ஆனாலே குணம் கெட்டுப் போய் விடும்"

"எப்பவுமே அப்பிடி அகாது. இந்த மூப்பிலப் பாரு, கண்ணியமான மனுசன். சிந்தாம குடிப்பாரு. இப்பக்கூட அவரு மப்புதான், ஆனாப் பாரு"

"எனக்கு அவரைப் பார்க்க வேண்டாம். வீட்டுக்கு போக மாட்டாராண்ணு இருக்கு. வேலை பாக்கியவள பத்தி
அவருக்கு கவலை கெடையாது"

முதியவர் தன் கோப்பையிலிருந்து தலை உயர்த்தி சதுக்கத்தைப் பார்த்தார். பின்னர் மேஜைப் பணியாளர்களை நோக்கினார்.
"இன்னொரு பிராந்தி", தன் கோப்பையைக் காட்டி அவர் சொன்னார். அவசரத்திலிருந்த மேஜைப் பணியாளன் அவரிடம் சென்றான்.

அந்த பணியாளன் கோப்பையில் மேலும் கொஞ்சம் பிராந்தி ஊற்றி, அது தளும்பி, தண்டு வழி வழிந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஏந்துத் தட்டுகளின் மேலுள்ள தட்டில் சிந்தியது.

"நன்றி" என்றார் முதியவர். மேஜைப் பணியாளன் பொத்தலை மதுபானக் கடைக்குள் திரும்ப எடுத்துச் சென்றான். அவன் தன் சக பணியாளனுடன் மேஜை அருகில் மீண்டும் அமர்ந்தான்.

"சிக்கு ஏறியாச்சு அவருக்கு", அவன் சொன்னான்.

"எல்லா ராத்திரியும் அவரு சிக்குதான்"

"எதுக்கு தற்கொலை பண்ணப் பார்த்தான்"

"எனக்கு எப்பிடி தெரியும்"

"எப்பிடி செஞ்சானாம்"

"கயித்தில தூக்கு மாட்டித் தொங்கினாரு"

"யாரு கயித்த வெட்டினது?"

"அவரோட மருமகள்"

"ஏன் அப்பிடி செய்தாள்?"

"அவரொட ஆத்துமாவுக்கு பயந்துதான்"

"எவ்வளவு பணம் வைத்திருக்கிறான்"

"பூத்த பணம் இருக்கு"

நிழலில் அமர்ந்திருந்த அந்த முதியவர் தன் கோப்பையால் ஏந்துத் தட்டை தட்டினார். இளைய பணியாளன் அவரிடம் செண்றான்.

"என்ன வேணும்?"

முதியவர் அவனை நோக்கினார். "இன்னொரு பிராந்தி", அவர் சொன்னார்.

"மப்பு ஏறீரப் போவுது", அந்த பணியாளன் சொன்னான். முதியவர் அவனைப் பார்த்தார். மேஜைப் பணியாளன் அங்கிருந்து அகன்றான்.

"ராத்திரி பூரா நவுர மாட்டான்", அவன் தன் சகபணியாளனிடம் சொன்னான்.

"இப்பவே எனக்கு தூக்கத்துல கண்ணு கறங்குது. மூணு மணிக்க முன்னால ஒரு நாளும் தூங்க முடியறதில்ல. அவன் போன வாரமே தற்கொலை பண்ணி செத்துப் போயிருக்கணும்"

அந்த பணியாளன் ஒரு பிராந்தி பொத்தலையும், மற்றொரு ஏந்துத் தட்டையும் கடையின் உள்ளிருந்த கவுண்டரிலிருந்து எடுத்துக் கொண்டு, முதியவரின் மேஜைக்கு வீறாப்பாய் நடந்து சென்றான். ஏந்துத் தட்டை கீழே வைத்துவிட்டு கோப்பையை பிராந்தியால் நிரப்பினான்.

"நீ போன வாரமே தற்கொலை செஞ்சு மண்டையப் போட்டிருக்கணும்", அவன் அந்த செவிட்டு மனிதரிடம் சொன்னான். முதியவர் தன் விரலால் சுட்டிக் காட்டி சொன்னார்.

"இன்னும் கொஞ்சம்"

"முடிஞ்சு போச்சு", முட்டாள்கள் குடிகாரர்களிடமோ, வெளிநாட்டவரிடமோ பேசுகையில் முழு வாக்கிய அமைப்பை தவிர்த்து பேசும் பாணியில் அவன் சொன்னான், "இதுக்கு மேலே இன்னிக்கு ராத்திரி கெடையாது. மூடியாச்சு"

"இன்னொண்ணு: என்றார் முதியவர்.

"இல்ல. முடிஞ்சுப் போச்சு".

மேஜைப் பணியாளன் மேஜை ஓரத்தை ஒரு துண்டால் வழித்து தலையை ஆட்டினான்.

முதியவர் எழுந்து நின்று, ஏந்துத் தட்டுகளை எண்ணி, ஜேப்பிலிருந்து தோல் பையை எடுத்து மதுவுக்கு பணம் செலுத்தி விட்டு, டிப்சாக அரை பெசட்டா விட்டுச் சென்றார்.

அந்த மேஜைப் பணியாளன் அவர் தெருவில் நடந்து போவதைப் பார்த்தான். தள்ளாடியவாறு, ஆனால், கம்பீரத்துடன், நடந்து செல்லும் மூப்பேறிய ஒரு கிழவர்.

"அவர இன்னும் கொஞ்சம் இருந்து குடிக்க விட்டிருக்கலாமில்லையா?"
அவசரமில்லாத மேஜைப் பணியாளன் கேட்டான்.

அவர்கள் ஷட்டரை மூடிக் கொண்டிருந்தனர்.

"மணி ரெண்டரை தாண்டலியே"

"எனக்கு வீட்டுக்கு தூங்கப் போணும்"

"ஒரு மணி நேரத்துல என்ன ஆவப் போவுது?"

"அவரை விட எனக்குத்தான் அதோட அருமை தெரியும்"

"ஒரு மணி நேரம் எல்லாருக்கும் ஒண்ணுதான்"

"நீயே ஒரு மூப்பிலு மாதிரிதான் பேசுகிறாய். அவருக்கு வீட்டுல குப்பி வாங்கீட்டு போய் குடிக்க வேண்டியது தானே?"

"அது இங்க மாதிரி வருமா"

"அது இல்லதான்", மனைவி உடைய மேஜைப் பணியாளன் ஒத்துக் கொண்டான். அநியாயமாக நடக்க அவனுக்கு இஷ்டமில்லைதான். ஆனால் அவன் அவசரத்திலிருந்தான்.

" சரி நீ? வழக்கமான நேரத்துக்கு முந்தி வீட்டுக்கு போக ஒனக்கு பயம் இல்லியா?"

"என்ன அசிங்கப்படுத்திறியா?"

"இல்லை, சும்மா ஒரு ஜோக்குக்கு சொன்னேன்"

"இல்லை", என்றான் அவசரத்திருந்த பணியாளன். உலோக ஷட்டர்களை இழுத்து மூடி விட்டு எழுந்தவாறே, "எனக்கு நம்பிகை இருக்கு. நிரம்பவே இருக்கு"

"ஒனக்கென்ன இளவயசு, நம்பிக்கை, வேலை எல்லாம் இருக்கு", முதிய மேஜைப் பணியாளன் சொன்னான்,
"ஒனக்குத்தான் எல்லாம் இருக்கே"

"உனக்கு என்னதான் இல்லேங்கிற?"

"வேலையைத் தவிர எல்லாம் இருக்கு"

"எனக்கு உள்ளதெல்லாம் உனக்கும் இருக்கு இல்லையா"

"இல்லை. எனக்கு எப்பவும் நம்பிக்கை இருந்ததில்லை. வயசும் ஏறீருச்சு"

"சரிதான் விடு. உௗறாமல் கடையைப் பூட்டு"

"மதுபான விடுதியில ராத்திரி ரொம்ப நேரம் இருக்க விரும்புறவங்களில் நானும் ஒருத்தன்", அந்த முதிய மேஜைப் பணியாளன் சொன்னான், " ராத்திரி தூக்கம் வராத, விளக்கு தேவப்படுகிற எல்லாரையும் சேர்த்து"

"எனக்கு வீட்டுக்குப் போயி நல்லா தூங்கணும்"

"நம்ம ரெண்டு வேரும் ரெண்டு வகையானவங்க", முதிய மேஜைப் பணியாளன் சொன்னான். அவன் வீட்டுக்குப் போக தயாராய் ஆடை அணிந்திருந்தான். "இது இளமையையும், நம்பிக்கையையும் பொறுத்த விசயம் இல்லை, அந்த சமாச்சாரங்கள் அழகாயிருந்தாலும் கூட. ஒவ்வொரு ராத்திரி இந்த மதுபான விடுதிய பூட்டும்போது இந்த இடம் யாருக்காவது தேவைப்படுமே என்று நினைச்சு மனசு வராது"

"அட, அதுக்குத்தான் ராத்திரி பூரா பிராந்திக் கடைங்க திறந்திருக்கின்றன அல்லவா"

"உனக்கு புரியாது. இது சுத்தமான, ரம்மியமான மதுபான விடுதி. நல்ல வெளிச்சமும் இருக்கு. அதோட, இப்போது இலைகளோட நிழலும் உண்டு"

"நல்லிரவு", என்றான் இளம் மேஜைப் பணியாளன்.

"நல்லிரவு", என்றான் மற்றவன். மின்சார விளக்கை அணைத்து விட்டு, அவன் தனக்குத் தானே உரையாடலை தொடர்ந்தான். வெளிச்சம் முக்கியம்தான், ஆனா அதோட அந்த இடம் சுத்தாமாவும், ரம்மியமாவும் இருக்கணும். நிச்சயமா பாட்டு வேண்டாம். இந்த நேரங்கெட்ட வேளையில பிராந்திக் கடைங்க தான் தொறந்திருக்கும் என்பதால் அங்கேயே நின்று கண்ணியமா குடிக்க முடியாது. அவனுக்கு எதைப் பாத்து பயம்?
அது பயமோ, நடுக்கமோ ஒன்றும் இல்லை. அவனுக்கு நன்றாகவே தெரந்த்ிருந்த சூன்யம்தாம் அது. அது இது மட்டும் தான்; வெளிச்சம் மட்டுந்தான் அதுக்கு வேணும்; அதோட கொஞ்சம் சுத்தமும், ஒழுங்கும்.

சிலர் அதிலேயே வாழ்ந்தும் ஒருக்காலும் உணர்ந்ததில்ல; ஆனால் அது சூனியம், அதோட பிறகு சூனியம், அதோட சூனியம், அதோட பிறகு சூனியம் என்று அவனுக்குத் தெரியும். சூனியத்திலிருக்கும் எமது சூனியமே, சூனியமே உமது நாமமாகட்டும், உமது ராஜ்ஜியமே சூனியம். சூனியத்தில் இருப்பது போல் அவர்கள் சூனியத்தில் சூனியமாவார்கள். எங்கள் சூனியத்தை நாங்கள் சூனியமாக்கும் போது எங்கள் சூனியத்தை சூனியமாக்குங்கள். சூனியத்துள் எம்மை சூனியமாக்காதீராக. ஆனால் சூனியத்திருலிருந்து எம்மை ரட்சிப்பீராக. இன்மை முழுக்க நிறைந்த இன்மையே உமக்கு ஸ்தோத்திரம். இன்மை உம்மோடு உள்ளது. அவன் புன்னகைத்தான்; ஜுவலிக்கும் நீராவி குளம்பி யந்திரம் இருந்த ஒரு பார் முன்னால் நின்றான்.

"என்ன வேணும்", என்றான் பார் பணியாளன்.

"சூனியம்"

"இன்னொரு அரைலூசு வந்தாச்சு", என்ற பார் பணியாளன், அங்கிருந்து அகன்றான்.

"ஒரு சின்ன கோப்பை", என்றான் அந்த மேஜைப் பணியாளன்.

பார் பணியாள் அவனுக்கு ஊற்றிக் கொடுத்தான்.

"வெளிச்சம் நல்ல பிரகாசமாவும், ரம்மியமாவும் இருக்கு, ஆனா பார் சுத்தமாயில்ல", என்றான் அந்த மேஜைப் பணியாளன்.

பார் பணியாள் அவனைப் பார்த்தான், ஆனால் பதில் இறுக்கவில்லை. உரையாட நேரம் இப்போது ரொம்ப பிந்தி விட்டது.

"இன்னொரு சின்ன கோப்பை வேணுமா?", பார் பணியாள் கேட்டான்.

"இல்லை, நன்றி", என்று விட்டு அந்த மேஜைப் பணியாள் வெளியேறினான். அவன் பார்களையும், பிராந்திக் கடைகளையும் வெறுத்தான். ஒரு சுத்தமான, நல்லா வெளிச்சம் இருக்கக்கூடிய மதுபான விடுதி இவை போலன்றி ரொம்பவே வித்தியாசமானது. இப்போது இன்னும் ஏதும் யோசிக்காம, அவன் தன்னோட அறைக்குப் போவான். படுக்கையில் கிடந்து கொண்டே, முடிவாக பகல் வெளிச்சத்தில தூங்க ஆரம்பிப்பான். "வேறே ஒன்றும் இல்ல, வெறுமனே தான்", அவன் தனக்குத் தானே சொன்னான், "ஓருவேளை இது தூக்கமில்லாத வியாதியா க கூட இருக்கும். பல பேருக்கு இது இருக்கும்".

தமிழில்
ஆர்.அபிலாஷ்
Read More

படைப்பின் G-spot: எழுத்தும் வாசிப்பும் (பகுதி 1)

என் நண்பன் சார்லஸோடு பெரியாரியம், திருமா என்று மணிக்கணக்காய் வறுத்து விட்டு, தலைப்பு தாவினேன். ரஜினி வசனத்தை திரித்து "காதலிக்கும் போது உன் ஆளுமைக்கு தோதான பெண்ணென்றால் மடக்குவது எளிதாக இருக்கும்" என்ற போது அவன் மேலும் சூடானான்: " அடப்பாவி ... எனக்கு இதுவரை தெரியாம போச்சேடா". பெரும்பாலான மொழியியல் இலக்கிய விமர்சன சித்தாந்தங்கள் கருவிகள் பொறுத்த வரையிலும் இதுவே நிகழ்கிறது. வாசகர்களை எதிர்நோக்கி பயன்படுத்தப்படும் விமர்சனக் கருவிகள் எழுத்தாளனுக்கு கணிசமாய் பயன்படக் கூடியவை. இவை பரிச்சயமானால் நமது முன்னோடிகளின் வெற்றிகளை வடிவ ரீதியில் புரிந்து கொள்ளலாம்; பாணியை பொதுவாய் போலச்செய்யும் விபத்து நேராமல். இதனால் ஒரு சுமாரான கதை அல்லது கவிதையை சிறப்பான ஒன்றாக எழுதலாம். காதலனுக்கே காம நுட்பங்கள் பிரயோசனமானவை. நான் இக்கட்டுரையை என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களை நோக்கி முன்வைக்கிறேன். நாம் காக்னிடிவ் பொயடிக்ஸ் (Cognitive Poetics) எனும் விமர்சன முறையிலிருந்து மைய உருவம் (figure) மற்றும் பின்புலம் (ground) ஆகிய கருவிகள் பற்றி விவாதிக்கப் போகிறோம்.

காக்னிடிவ் பொயடிக்ஸ் காக்னிடிவ் சைக்கோலஜி (Cognitive Psychology) கோட்பாடுகளை இலக்கிய ஆய்வுக்கு பயன்படுத்தும் விமர்சனப்பள்ளி. ரூவன் த்ஸர், ரொனால்டு லாங்கேக்கர், மார்க் டெர்னர், பீட்டர் ஸ்டாக்குவெல் ஆகியோர் இப்பள்ளியின் நட்சத்திர சிந்தனையாளர்கள்.

'பெட்ரோல் விலை உயர்கிறது' என செய்தி படிக்கும் போது விலையின் அளவை உயர்தல் எனும் திசை-அமைப்பு வழி புரிந்து கொள்கிறோம். உங்களில் ஒருவருக்கு திசையுணர்வு இல்லையெனில் இந்த செய்தி பாதிக்காது. "விலை உயர்கிறது" என்பதில் ஒரு உருவகம் உள்ளது ("பாய்ஸின்" 'எகிறிக் குதித்தேன்' பாடலின் காட்சியமைப்புடன் ஒப்பிடுங்கள்). உருவகம் போன்று மொழியின் கட்டமைப்புகளை மொழியியல் வரம்புகளுக்கு மட்டும் நின்று அலசாமல், புரிதல் அடிப்படையில் அணுகுவதே இந்த விமர்சனப் பள்ளியின் அடிப்படை. பெட்ரோல் விலை உயர்வை போல், நாம் ஒரு புரிதலை பிறிதொன்றின் அடிப்படையிலே நிகழ்த்துகிறோம். இதற்கு மிக சுவாரஸ்யமான உதாரணம் காக்னிடிவ் சைக்காலஜியில் வருகிறது. கீழ்வரும் படத்தை பாருங்கள். வெள்ளை வண்ணத்தை குவிமையமாய் கொண்டு கறுப்பை அதற்கு பின்னணியாக்கி கவனித்தால், ஒரு குடுவை தெரியும்; மாறாக எனில் இரு முகங்களின் பக்கவாட்டு நிழல்கோட்டு தோற்றம்.



பொருட்களை அல்லது கூறுகளை முரண் அடிப்படையில் புரிவது மனித இயல்பு என்பது பார்வை புலனுணர்வு விதிகளில் முக்கியமானது. உதாரணமாக, சமவெளியின்றி மலைகளை காண முடியாது. மேலுளள் படத்தில் கறுப்பு நிழல்களை மட்டும் கவனித்தீர்கள் என்றால் வெள்ளை பரப்பை நீங்கள் பின்புலமாக கொண்டீர்கள் என்று அர்த்தம். நிழல்கள் மைய உருவம் ஆகின்றன. வெள்ளை எனில் கறுப்பு பின்புலமாகிறது. வெள்ளை மைய உருவமாகிறது. ஒரு இலக்கிய படைப்பை நாம் பல சமயங்களில் புரிவது இந்த மைய உருவ -- பின்புல அடிப்படையிலே. இந்த பிரபலமான படத்தின் சுவாரஸ்யம் என்ன? பின்புலமும், மைய உருவமும் இடம் மாறுவதனால் கிடைக்கும் இருவேறு பார்வைகள். ஒரு இலக்கிய படைப்பில் இது நிகழும் போது அதன் இயல்பான பொருள் ஆழத்தினால், விரிவினால் அனுபவ ரீதியிலான தரிசனங்கள் கிடைக்கின்றன. மேலும் ஒரு இலக்கிய படைப்பில் எது மைய உருவம் அல்லது பின்புலம் ஆக வேண்டும் என்பதை எழுத்தாளன் தகவல்களை அளிக்கும் விதத்தில் அல்லது அவற்றின் அளவின் அடிப்படையில் தீர்மானிக்கலாம். ஒரு வாசகனின் வாசிப்பு பயிற்சி மற்றும் சூழமைவு சார்ந்தும் குவிமையம் வேறுபடலாம். இப்போது ஒரு எழுத்தாளன் பிரதியில் மைய உருவ -- பின்புலத்தின் சம நிலையை கட்டுப்படுத்த பயன்படுத்தும் சில தந்திரங்கள்.

மைய உருவத்துக்கு கீழ்கண்ட தகுதிகள் இருக்கும்:

(1) புலத்திலிருந்து தன்னை பிரித்து காட்டும் படி தெளிவாக விளிம்புகள் கொண்டு, தன்னில் முழுமையானது தான் மைய உருவம். பெரும்பாலான புனைவுகளில் பாத்திரங்களே மைய உருவம். இவற்றின் பெயரே பிரித்துக் காட்டும் முக்கிய விளிம்பு. உதாரணமாக "காடு" நாவலின் குட்டப்பன் -- ரசாலம். மைய உருவமாகும் பாத்திரங்கள் தனித்துவமும், முழுமையும் கொண்டிருக்கும். அவற்றின் மனவியல் கூறுகள், சம்பவங்களுக்கு எதிர்வினையாற்றும் பாங்கால் இவ்வாறு தனித்துவம் பெறுகின்றன. உதாரணமாக கோப, காம ஆரவாரங்களில் மற்றவர் ஆழ்கையில் விலகலுடன் பங்கேற்று உணரும் பெருமாள் ("காமரூபக் கதைகள்").

(2) பின்புலத்தின் நிலையாக இருக்க, மைய உருவம் நகரும். மைய உருவத்தை அதன் நகர்வை இவ்வாறு காட்டசெயல்-விருப்ப வினைச்சொற்களை, செய்வினைச் சொற்களை பயன்படுத்துவோம் .பின்புலத்தை உருவாக்க படைப்பாளி அடைமொழி- அல்லது இருப்பு-சார் வினைச்சொற்கள் அல்லது செயப்பாட்டு வினைச்சொற்களால் அதைக் கட்டுகிறான்.

"அமெரிக்காவில் நியுஜெர்ஸியில் டெலிபோன் நிறுவனத்தில் வேலை செய்யப் போகிறோம்". (மறுபடி-2; சுஜாதா).
இந்த வசனத்தில், italicized வினைஅடைச்சொற்கள் பின்புலத்தை நிறுவ, மைய உருவத்தின் நகர்வை அல்லது செயலை (வேலை) காட்ட செயல்விருப்ப வினைச்சொற்கள் பயன்படுகின்றன (செய்யப் போகிறோம்). அடுத்த சொற்றொடரில் சுஜாதா இருப்புசார் வினைச்சொற்களை கொண்டு பின்புலத்தையும் செயல்விருப்ப வினைச்சொற்களை பயன்படுத்தி மைய உருவத்தையும் சுருக்கமாக காட்சிபூர்வமாய் உருவாக்குக்கிறார்

"உள்ளே சென்றதும் இருட்டாக இருந்த நடையை கடந்ததும், பிரமிப்பாக பெரிய மைதானம்" ("துடிப்பு; தேர்ந்தெடுத்த கதைகள், இரண்டாம் தொகுதி")
சுஜாதா சென்றதும், கடந்ததும் ஆகின சொற்களை கதைப்பாத்திரத்துக்கு அளித்து லாவகமாய் இங்கு அதனை மைய உருவம் ஆக்குகிறார். "இருட்டாக", "பிரமிப்பாக" "இருந்த" எனும் இருப்பு-சார் வினையடைச்சொற்களால் நடையையும், மைதானத்தையும் பின்புலங்களாக வடிவமைக்கிறார். நடையை இருட்டாக உணர்ந்தான்; மைதானம் கண்டு பிரமித்தான் என்றால், இத்தனை கச்சிதமான, தூலமாக தோன்றும் ஒரு காட்சிபூர்வ அனுபவத்தை சுஜாதாவால் அளிக்க முடியாது.

(3) காலத்தாலும், வெளியினாலும் பின்புலத்திற்கு முன் வருவதே மைய உருவம். "ஜெயமோகனின் பூமியின் முத்திரைகள்" குறு நாவலில் இருந்து சில வரிகள்:

"நான் எதிர்பாராமல் ஃபாபதரின் கல்லறையை கண்டேன். அது அங்கிருப்பதைக் கூட எதிர்பாராதவன் போல் சிறு அதிர்ச்சியுடன் பார்த்தேன். துடைப்பப் புல் இடுப்பளவு உயரத்துக்கு மண்டி மற்றக் கல்லறைகளை விட மிகவும் பாழடைந்து காணப்பட்டது".

முதலில், இரண்டாம் விதிப்படி italicized வினைச்சொற்களை பாகுபடுத்த வேண்டும் . "காணப்பட்டது" (செயப்பாட்டு வினை) "பார்த்தேன்" (செய்வினை) ஆகிய இரண்டின் இலக்கண முரண் கொண்டு ஜெ.மோ கல்லறைத் தோட்டத்தை எளிதில் பின்புலமாக சித்தரிக்கிறார். அடுத்து அவர் கதைசொல்லியை முதலில் வர செய்கிறார் ('நான்'). அடுத்து வருபவை பெரும்பாலும் கல்லறைத் தோட்டம் பற்றின செய்திகளாக இருந்தாலும் கூட காலத்தாலும், வெளியாலும் கதைசொல்லி முந்துவதால் அவனே இங்கு மைய உருவமாக ஆகிறான். இதே கதையில் வரும் மற்றொரு பத்தியுடன் இதனை ஒப்பிடுவோம்:

"மவுனம் எங்களை மூச்சுத் திணற செய்தபடி கவிந்திருந்தது. மேல் பறம்பு வீட்டின் முன்புறமிருந்து வெளியே வளைந்து நீண்ட தென்னை மரத்தின் நிழல் சற்று தள்ளி சாலையில் செம்மண் பரப்பில் விழுந்து கிடந்தது. வானில் மிதக்கும், மிகப்பெரிய, ஏராளமான சிறகுள்ள பறவை ஒன்றின் நிழல் போல அது மெலிதாக அசைந்து கொண்டிருந்தது.

நீ நாளை சர்ச்சுக்கு வருவாயா?" என்றான் ஜான்."

கதைசொல்லி (முதலில் தரப்பட்டு மைய உருவமாகிறான்) நிற்கும் வெளியில் (பின்புலம்) தான் பறம்பு வீட்டின் நிழல் விழுகிறது. நிழலுக்கு ஏகப்பட்ட அடைச்சொற்கள், அடைவினைகள் தருகிறார் ஜெ.மோ. அதிகப்படியான நுண்தகவல்களால் பின்புலத்துக்கு அதிக பரப்பு ஒதுக்குகிறார். ஒரு பெரிய சித்திரத்துக்கு ஓவியன் எளிய கோடுகள் தீட்டி, வண்ணங்களை திட்டுத் திட்டாய் கத்தி கொண்டு பரப்புவது போல் பின்புலத்தை எதற்கோ தயாரிக்கிறார். அடுத்த கட்டமாக இறுதியில் ஜெ.மோ செயல்விருப்ப வினைச்சொல் ஒன்றை ('அசைந்து') பொருத்தி பின்புலத்தை (மௌனம் கவிந்த மனம் மற்றும் நிழல் கவிந்த சாலை பரப்பு) உயிர்பெறச் செய்கிறார். அதனை மைய உருவமாக்குகிறார். நிழலை அதன் சலனம் எழுப்புகிறது. பின்புலம் இவ்வாறு இங்கு மிக அழகான படிமமாக விகாசிக்கிறது .

பின்புலம் ஜுரத்தில் இருந்து விழித்த குழந்தை போல் மைய உருவமாய் பரிணமிப்பதற்கு மற்றொரு பிரசித்தமான எடுத்துக்காட்டு தாமஸ் ஹார்டியின் Return of the Native நாவலில் வரும் இயற்கை. தலைப்பு சொந்த ஊரான எக்டன் ஹீத் எனும் இங்கிலாந்திலுள்ள வெசக்ஸ் புதர்க்காடு கிராமத்துக்கு திரும்பும் இளைஞன் கிளிம் பற்றியது. கதைத்திட்டம் மேலும் கிளிம்மின் அத்தை மகள் தாமஸின், யுஸ்டேஷியா வை ஆகிய பெண்களின் எதிர்பால் உறவுகளை சொல்வது என்றாலும் இந்நாவலில் புதர்க்காட்டின் இயற்கை பற்றின் பல நுண்தகவல்களை பக்கம் பக்கமாய் தருகிறார் ஹார்டி. இளங்கலை பாடத்திட்டத்தில் இந்நாவலை வகுப்பில் வாசிக்கும் போது கிளைமாக்ஸ் காட்சியில் மாணவர்கள் பொறுமை மொத்தமாய் இழந்து விட்டோம் . யுஸ்டேஷியா ஏரியில் குதிக்கும் சத்தம் கேட்டு கணவன் கிளிம், கள்ளக்காதலன் வில்டேவ், அவனது மனைவி தாம்ஸின், அவளது ஒருதலைக் காதலன் வென் என ஆளாளுக்கு காப்பாற்ற விரைகிறார்கள். இப்போது இரண்டு பக்கத்துக்கு வழியில் தெரியும் இயற்கை பற்றின் விஸ்தீரமான வர்ணனை வருகிறது. பேஜாராகி பற்களுக்குள் பொறுமினோம்.

இப்போது புரிகிறது: ஆனால் இதுவொரு நெடுந்தொடர் தந்திரமல்ல; ஹார்டியை பொறுத்தமட்டில் புதர்காடு பின்புலம் மட்டுமல்ல, உயிருள்ள மையப்பாத்திரம்: மைய உருவம்.

அடுத்து வரும் விதிகளுக்கும் "பூமியின் முத்திரைகள்" பத்திகள் சிறந்த உதாரணமே.

(4) மைய உருவம் அதிக நுணுக்கமாய் விவரிக்கப்பட்டு, குவிமையப்பட்டு, அதிக வெளிச்சம் கொண்டு அல்லது அதிக ஈர்ப்புடையதாக இருக்கும்.

(5) அது களத்தில் உள்ள பிறவற்றின் மீதாகவோ, முன்னதாகவோ, அல்லது அவற்றை விட பெரிதாகவோ தெரியும். அப்படியாகின் பிறவை பின்புலமாகும்.

பின்புலம் பரப்பில் புலப்படாமல், கற்பனையில் முழுக்க எழுவதாக அமையலாம். பூமா ஈஸ்வரமூர்த்தியின் இச்சிறு கவிதையில் போல்:

பிறக்கையில்

"பிறக்கையில்
அழுததற்கு
காலடிகள்
அர்த்தம் சொல்லும் இனி ..." ("பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்")

பிறக்கையில் காலடித்து அழும் மைய உருவமான சிசுவின் பின்புலம் எது? இலவம் பஞ்சென தான் மிதக்கப் போகும் காலவெளியா? சிக்கலான, அச்சமூட்டும் சுழல்பாதைகளால் ஆன வாழ்வின் வெளியா? புலனாகாத கற்பனையில் விரியும் பின்புலம் தான் இக்கவிதை தரும் அலாதியான வாசிப்பனுவத்திற்கு காரணம்.

பின்புலமும் மைய உருவமும் படைப்பின் நிகழ்தல் ஊடே இடம் மாறுவதில் அல்லது இரண்டும் ஒன்றாகையில்அல்லது புது மைய உருவம் தோன்றி முந்தின மைய உருவத்தின் இடம் பிடிக்கையில் மிகச்சிறந்த வாசிப்பனுபவம் நேரலாம். இதை கவிதையில் எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை முதலில் காணலாம்.

கவிதையில் மைய உருவமும், பின்புலமும்

கவிதை வாசிப்பு பிரக்ஞையில் உறைக்கும் முன்னே நிகழ்ந்து முடிகிறது தான். ஆனாலும் அதன் இயக்கமுறையை ஆராய்ந்து புரிகையில் மேலும் பல நுட்பங்கள் திறக்கும்; அதுவரை மூட்டமாய் இருந்த கவிதையின் G-spot அகப்படும்; அதன் முதுகெலும்பு இடைவட்டுகள் வெதுவெதுப்பாய் கையில் வழுவும். மனுஷ்யபுத்திரனின் ஒரு அற்புதக் கவிதை:

ஒரு அற்புதத்துக்காக

"ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை

அற்புதங்கள் இனி நிகழாதென
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக் கொண்டேயிருக்கும்
ஒரு கணம்" ("நீராலானது")

இக்கவிதையின் பின்புலம் அருவமானது: அதாவது, காலம்; மேலும் குறிப்பாய் ஒரு அற்புதம் நிகழும் காலம். இவ்வரிகளில் மூன்று மைய உருவங்கள் ஒவ்வொன்றாய் மின்கம்பி மழைத்துளிகள் போல் வழுவிச் செல்கின்றன. முதல் மைய உருவம் அற்புதம். அற்புதமே இல்லை எனும் சகுனங்கள் அடுத்த மைய உருவம். இவை இரண்டையும் செங்கோலால் உந்தி விட்டு வந்தமர்கிறது மூன்றாவதாய் ஒன்று: அற்புதத்துக்கு மிக முந்தைய ஒரு கணம். இந்த கணம் நாம் முதலில் கண்ட பின்புலத்தின் இரட்டைப் பிறவி போல் தெரிகிறது அல்லவா? கவிதையை மீண்டும் மீண்டும் படியுங்கள்.

G-spot கிடைச்சுதா?

(இக்கட்டுரையின் தொடர்ச்சியாக, மைய உருவமும் பின்புலமும் கதை சொல்லலின் ஊடே ஏறத்தாழ இசை நாற்காலி விளையாட்டு போல் இடம் மாறுவதை ஹெமிங் வே மற்றும் சுஜாதாவின் சிறுகதைகளை முன்வைத்து அடுத்த வாரம் விவாதிக்கலாம்.)
Read More

Sunday, 16 August 2009

தமிழக கிரிக்கெட் வீரர்களின் நெடுங்காலப் புறக்கணிப்பும் அவசர தேர்வுகளும்





இந்திய கிரிக்கெட் அணியின் பின்வாசல் எச்சக்கலைகள் தமிழக வீரர்கள். ஜார்க்கண்டிலிருந்து ஒருவர் அணித்தலைவர் ஆகும் போது தமிழக வீரர்களால் இதுவரை தேசிய அணியில் நிலைக்கக் கூட முடியவில்லை. ஸ்ரீகாந்த் இந்திய தேர்வாளர் தலைவர் ஆகிட நிலைமை ஒரு U திருப்பம் எடுத்து மீடியனில் மோதி நிற்கிறது.

தமிழக வீரர்களின் உதாசீனப் பட்டியல் பெரிசு. தொண்ணூறுகளில் இருந்து தற்போது வரை மாநில அளவிலான சிறந்த மட்டையாட்ட அணிகளில் தமிழகமும் ஒன்று. ஷரத், ரமேஷ், பதானி, ஸ்ரீராமிலிருந்து பரத்வாஜ், விஜய், தினேஷ் கார்த்திக், முகுந்த் வரை அனைவரும் ரன் எந்திரங்கள். இவர்களில் தேசிய அணியில் ஓரளவு பெயர் பெற்றவர்கள் மூவர்.

ராபின் சிங். 7 ஆண்டு காத்திருப்புக்கு பிறகு ஆறுதல் பூச்செண்டாக ராபின் சிங் தேசிய ஒருநாள்அணியில் சேர்க்கப்பட்டார். இவருக்கு தோதான இடம் எண் 3 தான். அவ்விடத்தில் கிடைத்த குறுகின கால வாய்ப்பில் (இலங்கைத்தொடர்) சதம் அடித்து ஒரு ஆட்டத்தை வென்றார். அந்த தொடரில் இந்தியா அதிக பட்ச ஓட்டங்கள் எடுத்தது அந்த ஆட்டத்தில் மட்டுமே. பிறகு எந்த காரணமும் இன்றி அவரிடமிருந்து மூன்றாவதாய் ஆடும் வாய்ப்பு அடுத்த தொடரிலிருந்து பறிக்கப்பட்டது. எப்போதும் எண் 6 இல் ஆடியதால் ராபினால் அடுத்து சதம் அடிக்க முடியவில்லை. கங்குலி தலைவரானதும் அவசர அவசரமாக கழற்றி விடப்பட்டார். காரணம் மற்ற நட்சத்திரங்களைப் போல் அதிக சதங்கள் அடிக்க வில்லை என்பது. ராபின் அதிகம் அலட்ட மாட்டார். ஓய்வு பெற்ற பின் மட்டும் " நான் என் ஆட்ட உச்சத்தை கடந்து விட்ட பின் தான் தேசிய அணியில் ஆட வாய்ப்பு வந்தது" என்று கொஞ்சம் புலம்பினார்.

பதானி. நெருக்கடி விரும்பி. மும்பைக்கு எதிரான இறுதி ரஞ்சி ஆட்டத்தில் தமிழ்நாட்டுக்காக ராபினுடன் இணைந்து இவர் சதம் அடிக்க, கவனித்த சச்சின் தனியே அழைத்து மெச்சினார். சச்சின் ஆதரவில் தேர்வாளர் கவனம் மற்றும் வாய்ப்பு. தொடர்ந்து தேசிய ஒருநாள் அணியில் 2 வருடங்கள். ஒரே தொடரில் சொதப்ப நிரந்தரமாய் வெளியேற்றப்பட்டார். 40 ஆட்டங்களில் ஒரு சதம் 4 அரை சதங்கள். ஒருநாள் ஆட்ட சராசரி 30. அணியில் ஐந்தாவது இடத்தில் ஆடுபவருக்கு இது ஒன்றும் மோசமில்லை. தேர்வாளர்களின் ஞாபக மறதிக்கு காரணம் பதானிக்கு காட்பாதர் இல்லாதது.

தினேஷ் கார்த்திக் மூவரிலும் அதிர்ஷ்டசாலி. தோனி வந்த பிறகும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது. ஆனாலும் நிலைக்கவில்லை. காரணம் இவரது பலவீனங்கள்: நிலையின்மை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாய் பதற்றம், அதன் விளைவாய் அவசர அல்லது ஆமை ஆட்டம்.

இனி வாய்ப்பு சரிவர கிடைக்காதவர்கள்.

சடகோபன் ரமேஷ். 19 டெஸ்டு ஆட்டங்களில் சராசரி 37. இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய புதிர் இவரது புறக்கணிப்பு. 1999-இல் சேப்பாக்கில் ரமேஷ் ஷோயப், அக்ரம், சக்லைன், வகார் போன்ற தரமான பந்து வீச்சாளர்களை படு கெத்தாக சந்தித்து ஓட விட்டதை நாம் மறக்க முடியாது. ஜிம்பாப்வேவில் காயம் பட்டு விலகிய பின் ரமேஷ் பதானி மாதிரி ஓரங்கட்டப்பட்டார். இத்தனைக்கும் அவருக்கு அக்ரம், கவாஸ்கர் என்று ஆதரவாளர்கள். தினமும் விடிகாலை துயில் களைந்து, போர்வை உதறி கடுமையாய் வலையில் பயின்று, உள்ளூர் ஆட்டங்களில் நிலையாய் ஆடி ஓட்டங்கள் குவித்து, "இதற்கு என் மனைவியின் ஊக்குவிப்பே காரணம்" என்று பேட்டி கொடுத்து, ஒரு வருடத்துக்கு பிறகு ரமேஷுக்கு ஆஸ்திரேலியா போக வாய்ப்பு வந்தது. அங்கு முன்னணி நட்சத்திரங்கள் சொதப்பின பயிற்சி ஆட்டத்தில் ரமேஷ் மட்டும் நிலைத்து ஆடி 80 அடித்தார். ஆனாலும் அந்த பயணம் முழுக்க புறக்கணிக்கப்பட்டார். பிறகு தொடர்ந்தும். ரமேஷுக்கு பதிலாக அவர் இடத்துக்கு ஒரு நிரந்தர தரமான துவக்க ஆட்டக்காரர் (காம்பிர்) வர 7 வருடங்கள் ஆயின என்பதே இவரது நெடுங்கால உதாசீனிப்பு தேர்வாளர்களின் ஒரு குரூரமான வேடிக்கை என்பதை விளக்குகிறது. ரமேஷுக்கும் தமிழக தேர்வாளர் ஒருவருக்கும் ஏற்பட்ட தகராறே இதற்கு காரணம் என்பது புரளி. இதை உறுதி செய்யும் விதம் அவர் தமிழக அணியிலிருந்து விலகி ஒரிசா அணிக்கு போனார். யாரும் திரும்பிப் பார்க்காததால் கேரள அணிக்கு சென்றார். ஒன்றும் வேலைக்காகாது என "கலக்கப் போவது யாரு" நிகழ்ச்சியில் தேர்வாளராக, பிறகு "சந்தோஷ் சுப்பிரமணியம்" படத்தில் அண்ணனாக தலையாட்டிப் போனார். இடையே வாசிம் அக்ரம் ஒருதடவை கேட்டார் " அந்த ரமேஷ் எங்கே? ".

ரமேஷை விட குறைவாக சராசரி 30 கொண்டுள்ள வாசிம் ஜாபர் தேர்வாளர்களின் செல்லப் பிள்ளை. இதுவரை 30 டெஸ்டு ஆட்டங்கள் ஆடி விட்டார். கடந்த ஆஸி பயணத்தில் முதல் டெஸ்டில் சேவாக்கை கூட உட்கார வைத்து இந்த மும்பைக்கருக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். இந்த புதிரையெல்லாம் விளக்க முடியாது. சிலருக்கு ரொம்ப அழகான மனைவி வாய்ப்பது போல்.

ஷரத். இவருக்கு தொண்ணூறின் ஆரம்பத்தில் ஒரு வாகன விபத்தில் முழங்கை முறிந்தது. இது இவரது ஆட்ட முறையை பிற்பாடு மாற்றியது. வழக்கமான சரளம் இழந்து சற்று தடுமாறி ஆடினாலும் அதிகபட்ச ஓட்டங்களை ஒவ்வொரு பருவத்திலும் குவித்தார். ஏறத்தாழ எல்லா ஆட்டங்களிலும் குறிப்பிடும்படியாய் ஓட்டங்கள் எடுத்தார். தேர்வாளர்கள் தவறாமல் தவிர்த்தனர். 100 ஆட்டங்கள் ஆடி 8390 ஓட்டங்கள் மற்றும் 27 சதங்கள் அடித்த நிலையில் அவர் தேசிய அணியில் ஆடும் கனவை இழந்திருந்தார். "மாநில அணிக்கு பங்களிப்பதில் ஒரு சந்தோசம் உள்ளது" என்று ஒரு உறுத்தலான அமைதியுடன் செப்பினார். பிறகு "கேரள அணிக்கு பயிற்சியாளராகி கரை தேற்றப் போறேன்" என்று ஓய்வு பெற்றார். படித்து பெருமூச்சு விட்டேன். தேர்வாளர்களும் ஒருவேளை. சதம் சதமாய் அடித்து எத்தனை நாட்கள் அவர்களது பாராமுகத்துக்கு புட்டம் திருப்பி காட்டுவது.

ஸ்ரீராம் ஏறத்தாழ ஷரத் மாதிரி. 8703 ஓட்டங்கள் மற்றும் 30 சதங்கள். கிடைத்த 8 ஒருநாள் போட்டிகளில் பந்து வீச்சில் சிறந்தார். ஒன்பதாவது நிறுத்தத்தில் அனாதரவாக நின்றார். அடுத்த ரொம்ப நாட்கள் கழித்து ஸ்ரீராமுக்கு மீண்டும் வாய்ப்பு வங்கதேசத்துக்கு எதிராக. 3 விக்கெட்டுகள் சாய்த்து அரை சதம் அடித்தும், விசிலடித்து இறக்கி விட்டார்கள். தொடர்ந்து உள்ளூர் ஆட்டங்களில் சதங்கள் செதுக்கி, பிறகு சலித்து ஐ.சி.எல்லில் இணைந்திட, ' கல்லாய் போக' என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சபித்த வீரர்கள் பட்டியலில் இப்போது. பல வருடங்களுக்கு முன் ராஜ் டீவியில் ஸ்ரீராமை ஸ்ரீகாந்த் பேட்டி கண்டார். அப்போது ஸ்ரீ 'எதிர்கால பிரகாச நட்சத்திரம்'. அவர் சீக்காவிடம் சொன்னார்: 'நான் இடது கை சுழல் பந்து வீச்சாளனாகத்தான் பள்ளிக் காலத்தில் ஆரம்பித்தேன். அப்புறம் மட்டையாளனாகி விட்டேன்'

சீக்கா கடிந்து கொண்டார்: 'வீணடிச்சுட்டியே ஸ்ரீராம், நீ சுழல்பந்துலேயும் கவனம் செலுத்தி ஒரு ஆல்ரவுண்டர் ஆகியிருக்கலாம். அப்போ சுலபமா இந்திய அணியில இடம் பிடிக்கலாம்'

ஸ்ரீராம் பவ்யமாக தலைகுனிந்து நகம் பார்த்தார்: 'ஆமா'

கூடவே விக்கெட் கீப்பராக, ஆப் சுழல்பந்து , கால் சுழல்பந்து, வேகப் பந்து வீச்சாளராகவும் ஸ்ரீராம் இருந்திருக்கலாம். முன்னணி வீரர்கள் யாராவது காயமடைய வாய்ப்பு வந்திருக்கும்.

ஸ்ரீராம் கால்பக்கம் வரும் பந்தை இடதுகையால் விரும்பி அடிக்கக் கூடியவர் (சந்தர்பவுல் மாதிரி). அதனால் 'அபிஷ்டு' என்று தேர்வாளர்கள் இவரை விலக்கி வைத்து விட்டனரா?

இவர் தேசிய அணியில் அறிமுமான புதிதில் கவாஸ்கர் சொன்னார்: 'இந்த இளைஞர் முதன் முதலில் மட்டையாட களமிறங்கும் போது கைதட்டி ஊக்குவிப்பவர்களில், வெற்றி பெற வாழ்த்துபவர்களில் நானும் இருப்பேன்'. அது சரியாய் கேட்கவில்லை.

கவனிக்காமல் விட்ட நட்சத்திரம்.

ராஜகோபால் சதீஷ் திருச்சிக்காரர். வறிய பின்னணி. கிரிக்கெட் பயில தினமும் 20 கிலோ மீட்டர் தொலைவை மிதிவண்டியில் கடந்தார். பொறியியல் முடித்து சென்னைக்கு வந்து சிறிது சிறிதாய் மாநில அணியில் இடம் பிடித்தாலும் நிலைக்க வில்லை. பிறகு அஸ்ஸாம் அணிக்கு திரும்பி தமிழகத்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்தார். இரண்டு பருவங்களுக்கு 55 சராசரியில் ஓட்டங்கள் எடுக்க, தமிழக அணிக்கு திரும்ப அழைத்தார்கள். அங்கு மீண்டும் நிலைக்க முடியாமல் 28 வது வயதில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிரி வாரியமான ஐ.சி.எல்லில் சேர்ந்தார். அங்கு அவரது அணியை காப்பாற்றும்படியான அதிரடி ஆட்டம் பார்த்து முன்னாள் ஆட்டக்காரரும், சிறந்த வர்ணனையாளருமான டோனி கிரெயிக் சொன்னார்: "இவர் உலகத் தரம். டோனி அணியில் இருக்க வேண்டியவர் ". அவர் அன்று 36 பந்துகளில் எடுத்த 76 ஓட்டங்கள் நவித் உல் ஹசன், சாமி, சக்லைன் உள்ளிட்ட உலகத்தர பாக்கிஸ்தான் வீச்சாளர்களுக்கு எதிராக அடித்தவை. சதீஷின் நெருக்கடி ஆட்டம் டோனியை நினைவூட்டுகிறது, பீல்டிங் யுவ்ராஜையும். நாம் ஒரு ரத்தினத்தை இழந்திருக்கிறோம்.

தமிழகம் இதுவரை புறக்கணிக்கப்பட என்ன காரணம்? வடக்கத்திய, மேற்கத்திய அணித்தலைமைகளின் ஆதிக்கம் என்று கூற முடியாது. கங்குலிக்கு முன் வரை இந்திய அணியை கன்னட பிராமணர்கள் தான் ஆக்கிரமித்தனர். தமிழக அணிக்கு ஆதரவளிக்கும் தேர்வாளர்கள் கடந்த காலத்தில் (ஸ்ரீகாந்துக்கு முன்) இல்லை என்று காரணம் சொல்லப்படுகிறது. மற்றொரு ஊகம் தமிழக வீரர்கள் அணித்தலைமைக்கு அடங்காமல் வாய் நீட்டுவார்கள் என்பது. இதனால் தமிழர்களை பொதுவாய் அணித்தலைவர்கள் விரும்புவதில்லையாம். பலவீனமான பந்து வீச்சு காரணமாய் இதுவரை ரஞ்சி தொடர்களில் தமிழக அணி சோபிக்காததும் முக்கிய காரணம்.




ஸ்ரீகாந்த வந்த பிறகு நிலைமை மாறியுள்ளதை குறிப்பிட்டேன். முந்தை நிலைக்கு நேர்மாறாக தமிழக வீரர்களை தேசிய அணியில் நுழைப்பதில் இப்போது படு அவசரம் தெரிகிறது. ஸ்ரீகாந்த குழுவினர் டோனி ஏற்கனவே இருக்க தினேஷ் கார்த்திக்கை இரண்டாவது விக்கெட் காப்பாளராக தற்போது நியூசிலாந்துக்கு அனுப்பியது, இந்த வருடத்து ரஞ்சி தொடரில் 80 சராசரிக்கு 1260 ஓட்டங்கள் சேர்த்த, இந்திய தேர்வாளர்களின் பாசமலர், வாசிம் ஜாபருக்கு பதில், இந்த வருட ரஞ்சி தொடரில் சொதப்பின, ஒரே ஒரு டெஸ்டு ஆட்டம் மட்டுமே ஆடியுள்ள, எகிறும் பந்தை பலவீனமாய் கொண்டுள்ள தமிழக வீரர் முரளி விஜயை தேர்வு செய்தது, படுமிதமாக பந்து வீசும் பாலாஜியை கூட சேர்த்தது ஆகியவை இதற்கு உதாரணங்கள்.

முதுகு காயத்திற்கு பிறகு இந்த வருட ரஞ்சி தொடரில் தான் பாலாஜி, தொடர்ந்து பந்து வீசி, தன் பழைய உச்சத்துக்கு அருகில் வந்தார். ஆனால் கடந்த பிப்ரவரியில் தமிழக அணியின் பயிற்சியாளர் டபிள்யூ.வி. ராமன் "பாலாஜியின் வீசும் முறை மாற்றப்பட்டு விட்டதால், அதற்கு உடலின் தசை நினைவு பழக சில மாதங்கள் ஆகும். ஏப்ரலில் பாலாஜி என்ன நிலையில் உள்ளார் என்பதை வைத்து அவரது எதிர்காலத்தை கூற முடியும்" என்றார் . பாலாவின் அதிரடி நியூசிலாந்த் வாய்ப்பை அவர் பயிற்சியாளர் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏனென்றால் பாலாஜி முழுக்க பழைய பந்து வீச்சு நிலைக்கு, வேகத்துக்கு இன்னும் திரும்ப வில்லை. சமீப இலங்கைத் தொடரில் பாலாவின் 115 கிலோமீட்டர்-வேக பந்து வீச்சை பொருட்படுத்தாமல் எதிரணி மட்டையாளர்கள் சாத்தி விரட்ட, டோனி வேறு வழியின்றி அவருக்கு 5 ஓவர்களுக்கு மேல் அந்த ஆட்டத்தில் வழங்கவில்லை. பாலாவின் ஓட்டம் மற்றும் உடல் மொழியில் தயார்த்தன்மையோ, தன்னம்பிக்கையோ இல்லை. இந்நிலையில் தான், காயத்தில் இருந்து திரும்பி பந்து வீச ஆரம்பித்திருக்கும் ஸ்ரீசாந்த், மற்றும் போன ஐ.பி.எல் 1-இல் அசத்திய திரிவேதி ஆகியோரை புறக்கணித்து பாலாவை நியூசிலாந்துக்கு அனுப்பினார்கள்.

தமிழகத்தை பொறுத்த மட்டில் இந்நிலை ஒரு முழுங்க முடியாத யானை உருளை. இவர்களின் அவசர தேர்வு தகுந்த ஆட்டத்தால் நியாயப்படுத்தாமல் போனால், எதிர்காலத்தில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இரட்டை சிரமம் ஆகி விடும். ஏற்கனவே தமிழக வீரர்களின் தேர்வு அநியாயம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது (பார்க்க:http://blog.thecricfanclub.com/2009/02/14/indian-selection-saga-balajis-inclusion-defies-logic/ மற்றும் http://i3j3cricket.wordpress.com/tag/team-selection/). இந்த வீரர்கள் சொதப்பினால் ஒரு நெடுங்கால புறக்கணிப்பு துவங்கும். ஒரு தோதான உதாரணம் முன்னாள கீப்பர் சாபா கரீம். அப்போது கங்குலி ஆட்சி. சாபா கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டு முழுக்க குணமாகாத நிலையில் கங்குலியிடம் பொய் சொல்லி (ரெண்டு பேரும் வங்காளிகள்) வங்கதேசம் சென்ற அணியில் இடம் பிடித்தார். ஆனால் அந்த டெஸ்டு தொடரில் பார்வை தெளிவின்றி அசிங்கமாய் தடுமாறி காற்றில் துழாவினார். பந்துகளை அவரால் பிடிக்கவே முடியவில்லை. சவுரவ் தான் ஏமாற்றப்பட்டதாய் கொதித்தார். பிறகு சாபா ஒருபோதும் தேர்வு செய்யப்பட வில்லை. உள்ளூர் ஆட்டங்களில் 56 சராசரிக்கு ஓட்டங்கள் சேகரித்தும் கூட.

அடுத்து தேசிய அணியில் நியாயமாய் இடம் பெற வாய்ப்புள்ள தமிழக வீரர்கள் யார்? இப்போதைக்கு பத்ரி மட்டும் தான். இவரையும் கூட தேர்ந்தெடுத்தால் கண்ணு படும் என்று பத்ரியை ஸ்ரீகாந்த் நியுசிலாந்துக்கு அனுப்பவில்லை. சேப்பாக்கில் முகுந்த் ஆடிப் பார்த்திருக்கிறேன். குறைவான கால் நகர்த்தல் கொண்ட இடதுகை அதிரடிக்காரர். தரத்தில் விஜய்க்கு ஒரு படி கீழ் தான். தமிழக அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஷ்வின் நமது உள்ளூர் தரவரிசையில் இப்பொது முன்னிலையில் உள்ளார். இவரது மட்டையாட்டமும் முன்னேறி வருகிறது. யோ. மகேஷ் எனும் ஒல்லிப் பீச்சான் வேகப் பந்தாளரை ஐ.பி.எல்லில் டெல்லி டேர் டெவில்ஸ்சுக்காக ஆடிய போது பார்த்திருப்பீர்கள். இந்த 21 வயது சென்னை இளைஞரின் வீச்சின் கூர்மை மற்றும் பந்தை எக்குத்தப்பாய் எகிற விடும் பாங்கை முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா தனது Beyond the Blues நூலில் மிகவும் சிலாகித்துள்ளார்.

கிரிக்கெட்டில் டைமிங் முக்கியம். ஸ்ரீகாந்தின் நாற்காலி ஆடும் முன் இந்த வீரர்கள் உச்சத்தை வெளிப்படுத்தினால் கவனிக்கப் படுவார்கள். இல்லாவிட்டால் கேரளா, அஸ்ஸாம் பக்கம் டிக்கெட். பிறகு காய்கறிக்கூடை, போக்குவரத்து, ஏமாற்ற நினைவுகள் ...
Read More

அடிகாவின் "வெள்ளைப் புலி": கண்ணாடியில் தோன்றும் கோமாளி



இந்த வருடத்துக்கான புக்கர் பரிசை வென்றுள்ள அரவிந்த அடிகாவின் "வெள்ளைப் புலி" ஒன்றும் உன்னதமான நாவல் கிடையாதுதான். ஒரு சிக்கலை பல்வேறு கதாபாத்திரங்கள் வழி மேலும் சிடுக்காக்கி பின்னலாக்கி வளர்த்தெடுக்கும் பாணி இதில் இல்லை. ஒரு பிரச்சனை \ அவதானிப்பு \ மையக்கருத்தின் பல்வேறு பரிமாணங்களை அலசும் செவ்விலக்கிய போக்கும் கிடையாது. எந்த ஒரு சித்தாந்தத்தையும் அடிகா அலசிப் பார்ப்பதில்லை. நூலின் ஒவ்வொரு வரிக்கும் பகடி செய்வதும், சமூக பாவனைகளை அம்மணமாக்குவதுமே பணி. அதற்கான சாத்தியங்களைத் தேடி சம்பவங்களை நகர்த்தும் குழந்தைத்தனமான ஆர்வத்தில் அடிகா கதை அமைப்பு அல்லது பாத்திர வார்ப்பு ஆகியவற்றை கோட்டை விடுகிறார். உதாரணமாய், கதைசொல்லியான பல்ராம் ஒரு கொலை செய்து அதிலிருந்து தப்பித்து விட்டான் என்று ஆரம்பப் பக்கங்களிலேயே முடிச்சவிழ்க்கப் படுகிறது. இதற்கு அடுத்து மற்ற சிக்கல்கள், உண்மை வெளிப்பாடுகள் நிகழ்வதில்லை. ஒரு ஆரம்ப நிலை எழுத்தாளன் கூட இத்தொழில் நுட்பத்தை பொறுத்தமட்டில் கவனமாக இருப்பான். ஆனாலும் அங்கதத்துக்கான அடிகாவின் உற்சாகம் வாசகனுக்கு சீக்கிரம் தொற்றிக் கொள்கிறது. இத்தொழிற்நுட்பக் குறைகளை மறந்து, சேற்றை வாரி அடிக்கும் குழந்தை விளையாட்டில் பங்கெடுப்பது போல் நாவலோடு வாசகன் ஒன்றி விடுகிறான்.

16-ஆம் நூற்றாண்டில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் பொதுமக்களிடையே மிகப்பிரபலம் லியர், ஹேம்லெட் போன்ற சிக்கலான, கனமான தலைமை பாத்திரங்கள் அல்ல, கோமாளிகள். கதையின் விளிம்பில் பட்டும் படாமலும் நின்று மைய பாத்திரங்களின் ஜம்பத்தை, ஆணவத்தை, குதிரைக்கடிவாள பார்வையை பகடி செய்து அபத்தத்தை வெளிப்படுத்துவதே இந்த கோமாளியின் வேலை. உதாரணம் ஹென்ரி 1V நாடகம். இந்நாடகம் இளவரசன் ஹால் தன் பொறுக்கித்தனத்தை உதறி பொறுப்பாளனாகி அரச பொறுப்பை ஏற்பது பற்றியது. ஹாலின் உற்ற நண்பனான திருடனும், மொடக்குடிகாரனுமான பால்ஸ்டாப் எனும் கோமாளி இவனுக்கு நேர்முரணான பாத்திரம். இவன் வேலை எந்த வேலையும் செய்யாமலிருப்பது. மற்றொரு வேலை நாடகம் முழுக்க பொறுப்பு என்பதன் பின்னுள்ள ஆணவம், அதிகார மோகம், அதன் விளைவான அநீதி, அபத்தம் ஆகியவற்றை தன் பொறுப்பற்ற கோமாளித்தனங்கள் மூலம் பகடி செய்து காட்டுவது. இவன் உருவாக்கும் உரையாடலை பின்தொடர்கையில் வாழ்க்கையை ஒருவித எக்காளத்துடன், ஒட்டிக் கொள்ளாமல் உற்றுப் பார்ப்பது மட்டுமே நேர்மையான முறையோ எனப்படுகிறது. ஒரு வேலையை, பொறுப்பை எடுத்துக் கொள்கையில் அதன் பின்னுள்ள அரசியல், அநீதி, போலித்தனத்தை ஏற்றுக் கொள்வது அவசியமாகிறது. இன்றைய சமூகத்தில் அதிகார மையத்தின் விடாப்பிடியான கண்காணிப்பு மற்றும் கடுமையான பொதுமையாக்கல் காரணமாய் நிகழ்வுகளை தொடர்ந்து பிரதிபலிக்கும் ஒரு சாட்சியாய் மட்டுமே மனிதனால் எஞ்ச முடிகிறது. அப்போதும் உங்கள் வாயிலிருந்து சொல்லை உருவியெடுக்க, அதை மாற்றியமைக்க அதிகாரத்தின் கரங்கள் எப்போதும் காத்திருக்கின்றன. எந்த ஒரு சித்தாந்தத்தையும், கண்ணோட்டத்தையும் நம்பவோ, சார்ந்திடவோ முடியாத மிதவை மனநிலையில் இருக்கிறோம். ஈழப்படுகொலைகளை எதிர்ப்பவர்களை இலங்கை போர்த்தளபதி கோமாளிகள் என வர்ணிக்கும் போது, சமரச, பொதுமயமாக்கல் அரசியல் காரணமாய் கா.மு.க ஆகிவிட்ட தி.மு.க சர்க்கஸ் கூண்டுப் புலி போல் வேடிக்கை பார்ப்பதில் ஒரு கோமாளித்தனம் உள்ளது. உலகமயமாக்கலால் பிரஜை அடையாளம் அழிந்து விட்ட நிலையில் நாடுகளின் தேசிய அரசியல் சர்வதேச அரசியலின் பொம்மலாட்டமாக அபத்தக் கூத்தாகிறது. அமெரிக்காவுக்காக பாக் ராணுவம் தங்கள் ஆதரிக்கும் தாலிபான் படையினரையே தாக்குவது ஒரு அரசியல் அபத்தம். இந்த சூழலில் நுண்ணுர்வுள்ள நவீன மனிதன் நிகழ்வுகளின் நிச்சயத்தை நம்பாமல் நாடக மேடையின் ஓரமாய் நிற்கும் கோமாளி மட்டுமே. தடுக்கி விழுந்தும், பிறரை தடுக்கி விட்டும் கேலி செய்து சிரித்து அவன் தன் இருப்பை நியாயப்படுத்த வேண்டியுள்ளது.

"வெள்ளைப்புலி" இந்திய சமூகக் கட்டமைப்பு, அரசியல் நிலைப்பாடு, தேர்தல், நீதி, காவல், பிராந்திய மொழிப் பிரச்சனைகள் என ஒவ்வொரு கூறையும் இந்த விதூசகனின் கண்ணோட்டத்தில் பகடி செய்து பரிகசிக்கிறது. ஆனால் 16-ஆம் நூற்றாண்டு கோமாளியின் கருத்து சுதந்திரம் இன்றைய கண்காணிப்பு சூழலில் நமக்கு இல்லை. அதனால் இந்நாவலில் கதைசொல்லி சுயபகடி செய்கிறான். அவனுக்கு சொந்தமாய் பெயர் இல்லை. முன்னா, பல்ராம் என பல பெயர்களை உதிர்த்துச் செல்கிறான். தேநீர்க் கடையில் எடுபிடியாக ஆரம்பித்து கார் ஓட்டுனனாக உயரும் போதும் எதிலும் ஒட்டுறவு இல்லாமல் போலியான பாவனைகளுடன் காலம் கடத்துகிறான். ஒரு நாள் அவனுடைய முதலாளியை கொன்று விட்டு அவரது பெரும்பணத்தை திருடிக் கொண்டு பங்களூர் வந்து சுயதொழில் செய்து செல்வந்தனாகிறான். இங்கே இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும். கதைசொல்லிக்கு சமூக நியாயத்தில் நம்பிக்கை இல்லை. அதனால் கொலை சார்ந்த குற்றவுணர்வும் இல்லை. அவனது கொலைச் செயலுக்கு பழிவாங்கலாக எதிரிகள் அவன் குடும்ப உறவினர்களை கொன்றிருக்கலாம். அவர்களை காப்பாற்றிட அவன் முனையவில்லை. லாபத்துடன் சேர்ந்து கிடைக்கும் இழப்பாக இதை நியாயப்படுத்துகிறான். இவனது இந்த ஒட்டுறவற்ற, எதையும் நம்பாத மனப்பான்மை நாவலின் செயல்முறையை, வடிவத்தை தீர்மானித்துள்ளது. எந்த ஒரு கருத்தியல் அல்லது கண்ணோட்டத்தை அலசவோ அணுகவோ செய்யாமல் அனைத்தையும் அம்மணமாக்கி விட்டு அடிகாவின் நாவல் நின்று கொள்கிறது.

நாவலின் முற்பாதி குஜராத்தில் ஒரு கிராமத்திலும், பிற்பாதி தில்லி மற்றும் பங்களூரிலும் நடக்கிறது. அடிகாவின் கிராம வாழ்வு சித்திரிப்பு மிகையான ஒரு கேலிச் சித்திரமாக மட்டுமே எஞ்சுகிறது. தில்லி வாழ்வின் போது கார் ஓட்டியாக கதைசொல்லி உணரும் தனிமை, சலிப்பு, அதிர்ச்சி காத்திரமாய் உள்ளன. அடிகா இந்திய மக்களை முதலாளித்துவ விசுவாசம் மிகுந்த் அடிமைகளாய் வர்ணிக்கிறார். இந்திய சமூகம் ஒரு கோழிப்பண்ணை என உருவகிக்கிறார். இந்த பிரம்மாண்ட கூண்டின் கதவைத் திறந்து சாவியை உள்ளே வீசினால் கூட அடிமைகள் வெளியேறாமல் கதவை தாங்களே பூட்டி சாவியை விசுவாசமாக முதலாளியிடம் கொடுத்து விடுவார்கள் என்கிறார். இது ஒரு மிகையான சித்திரம். ஆண்டான்---அடிமை முறை இன்றைய சமூக கட்டமைப்பில் மிக நாசூக்காகவும், நுட்பமாகவுமே செயல்படுகிறது. நாவலில் கூறப்படும் அமைப்பு இன்று பொதுவாய் நிலுவையில் இல்லை. இன்றைய அடிமை பீட்டர் இங்கிலாந்து சட்டையும், ஆலன்சோலி கால்சட்டையும் டிசைனர் கண்ணாடியும் அணிகிறான்; அவன் மிக மெல்லிய நூலால் கட்டப்பட்டு ஆட்டுவிக்கப் படுகிறான். உச்சபட்ச சுதந்திரத்திற்கும், தீவிர கண்காணிப்பு நிலைக்கும் அவனுக்கு வேறுபாடு புரிவதில்லை.

அடிகா காட்டும் இந்தியா வெள்ளைக்கார பார்வையாளனுக்கு உவப்பாக இருக்கும்படி மேற்கின் பார்வையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாய் சில விமர்சகர்கள் (தமிழில் குறிப்பாய் இந்திரா பார்த்தசாரதி) "வெள்ளைப்புலியை" பந்தாடியுள்ளனர். இந்திய வாழ்வு பற்றிய அடிகாவின் சில எதிர்மறை தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டவை தான். உதாரணமாக, குஜராத் கிராமம் ஒன்றில் யாரையும் வாக்களிக்க அனுமதிக்காமல் அரசியல்வாதிகள் முடிவுகளை அறிவிக்கிறார்கள். மேற்கத்தியப் வாசகனே இலக்கு என்பதால் அவனது கண்ணோட்டத்தை ஆதரிக்க ஒரு வெள்ளைகாரியையும், அமெரிக்காவிலிருந்து திரும்பி இந்திய வாழ்வுக்கு இயைந்து போக முடியாத ஒரு பணக்கார இந்திய இளைஞரையும் அடிகா முக்கிய கதாபாத்திரங்களாய் நிறுவியுள்ளார். இந்திய கீழ்த்தட்டு மக்களை "அனுமார்கள்" என நாவல் அடையாளப்படுத்துவது வெள்ளை இனத்துவேச வெளிப்பாடுதான். மேலும் அடிகா கதைமாந்தர்களுக்கு உயிரோட்டம் அளிக்க முயன்றதாகக் கூடத் தெரியவில்லை. கோட்டோவியங்களாய் பக்கங்களிலிருந்து நழுவிப் போகிறார்கள். அவருக்கு படைப்பாக்கம் சார்ந்த தொழில்நுட்ப சூட்சுமம் கைவரவில்லை. கதைசொல்லி தன் முதலாளியை கொல்ல திட்டமிட்டு பின் குழப்பத்தில் தடுமாறும் கட்டத்தில் அவன் இலக்கில்லாமல் அலைந்து தில்லி புறநகர்ப் பகுதியை அடைகிறான். அங்கு அவனைத் தாண்டி ஒற்றைக் காளைமாட்டு வண்டி ஒன்று கசாப்பு மாடுகளின் தலைகள் அடுக்கப்பட்டு செல்கிறது. அருமையான படிமமாக உருவாக வேண்டிய இக்காட்சியைத் தொடர்ந்து பதவுரை தந்து அடிகா கெடுத்து விடுகிறார். தொழிற்நுட்பத்தை பொறுத்த வரையில் அடிகா மட்டம்தான். இவரது அங்கதத்தில் தொக்கி நிற்கும் காழ்ப்புணர்வும் ஒரு சமனிலை கொண்ட வாசகனுக்கு உவப்பானதல்ல.

இத்தனை குறைகளையும் நம்மை மறக்கச் செய்யும்படி இந்நாவலின் சுயபகடி அதன் தீவிரத்தன்மை குறையாமலே கடைசிவரை தக்க வைக்கப்படுகிறது. உள்ளூர் ஊழல் அரசியல்வாதியில் இருந்து இலக்கிய விமர்சகர்கள், தத்துவவாதிகள் என் யாரும் இவரது பகடிக்கு தப்புவதில்லை. இதை மிக எளிமையாக, நாசூக்காக செய்யத் தெரிவதே அடிகாவின் மகாபலமும், நாவலின் வெற்றியும். நான்கு மிகச்சிறந்த கவிஞர்களை அடிக்கடி பட்டியலிடும் கதைசொல்லி ரூமி, இக்பால், மிர்சா காலிப் என்று விட்டு ஒவ்வொரு முறையும் நான்காவது கவிஞர் பெயர் மறந்து விட்டதென்கிறார். இவ்வாறு பெயர்களை உதிர்த்து பெருமை தட்டும் இலக்கிய விமர்சகர்கள், புத்திஜீவிகளின் சில்லறைத்தனத்தை நக்கலடிக்கிறார். தன் முதலாளியைக் கொல்லும் முன் கதைசொல்லி பழைய தில்லியின் பிரபலமான பழைய புத்தகக் கடை தெருவொன்றில் உலாத்தி, ஓசியில் புத்தகங்கள் படிக்கிறான். அங்கிருந்து திரும்பும் போது சிதிலமான பழைய நூல்களின் சுவை வாயில் ஒட்டியுள்ளதாய் சொல்கிறான்: "பழைய புத்தகங்களோடு நேரம் செலவிட உங்களுக்குள் விசித்திர எண்ணங்கள் ஏற்படும்". இங்கு குறிக்கப்படுவது கதைசொல்லியின் கொலை எண்ணமே. புத்தகங்களின் சுவை குருதியின் சுவை. தத்துவ சிந்தனைக்கும் வன்முறைக்குமான மறைமுக உறவை ( நீட்சே--ஹிட்லர் )அடிகா இங்கு நுட்பமாய் அடிக்கோடிட்டு காட்டுகிறார். எனக்கு நாவலில் மிகப்பிடித்த இடம் இது.

இந்த 300-பக்க நாவல் ஒரே நாளில் படித்து விடும்படி லகுவானது. ஆரம்பகட்ட ஆங்கில வாசகர்களுக்கு நல்ல தேர்வு. இறுதி வரி வரை ஒரு புன்னகை உதட்டில் தங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
Read More

நடிகனை உருவாக்க முடியுமா?



நடிப்பில் ஒரு பிரதான வகை முறைமை நடிப்பு: கடுமையாய் தயாரித்துக் கொண்டு நடிப்பது. ஹாலிவுட்டில் மார்லன் பிராண்டோ, ராபர்ட் டினிரோ, தமிழில் விக்ரம் உடனடி உதாரணங்கள். அமீர்க்கானின் லகான் பற்றி பேசுகையில் அமிதாப் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்: "அமீர் பட சம்மந்தமான எல்லாவற்றுக்கும் தயாரித்துக் கொண்டு பக்காவாக செயல்படுவார் ... நடிப்பில் தன் தயாரிப்பு தெரியும் அளவிற்கு". சமீபத்தில் "நான் கடவுள்" படப்பிடிப்பில் பூஜாவுக்கு கண் மங்கலாகும்படி லென்ஸ் அணிவித்து நடிக்க விட்டது இவ்வகைதான். மீரா நாயரின் "மை ஓன் கன்டுரீ" (My Own Country) படம் அப்பிரகாம் வர்கீஸ் எனும் எய்ட்ஸ் மருத்துவரின் வாழ்க்கைக் கதை. இதில் வர்கீஸாக நடித்த நவீன் ஆண்டுருவீஸ் நிஜ வர்கீசோடு சில வாரங்கள் தங்கி அவரது உடல் மொழி, பாவனைகள், மருத்துவமனை, செய்கைகளை கவனித்து பின் நடித்தார்.

சில நடிகர்களுக்கு பெரும் தயாரிப்புகள் தேவைப்படுவதில்லை. ஏற்கனவே மனித இயக்கம் பற்றி ஆழ்மனதில் உள்ள அவதானிப்புகளை ஆகஷன் சொன்னவுடன் மீட்டுக் கொணர்ந்து நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். உதாரணம் மோகன்லால். "தசரதம்" என்னும் படத்தில் மன அழுத்தம் கொண்ட, திருமணம் தவிர்க்கும் ஊதாரி பாத்திரம் அவருக்கு. படம் பூரா லால் மற்ற கதாபாத்திரங்களின் கண்களை நேரில் சந்திக்காமல் சற்று கீழ் நோக்கியபடி பேசுவார். குறிப்பாய், ஒரு கட்டத்தில் செயற்கை கருத்தரிப்பில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முயல்வார். கர்ப்பமான வாடகைத் தாயை ஹார்லிக்ஸ் பழம் சகிதம் சந்திக்க செல்வார். அக்காட்சியிலும் அவளது கருப்பையை விலைக்கு வாங்க, அடாவடியாய் ஒப்பந்தம் பேசத் தயங்காதவர் கண்களை தொடர்ந்து சந்திக்க கூசுவார். இது இயக்குனரின் அறிவுறுத்தல் அல்லது தனது சுயதிட்டமிடல் இன்றி படப்பிடிப்பில் லால் உள்ளுணர்வு படி நடித்ததன் விளைவு. "தாளவட்டம்" எனும் படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பாத்திரத்தில் கண்களை பெரும்பாலும் சிமிட்டாமல் நடித்திருப்பார். இதுவும் இயக்குனர் எழுதி திட்டமிடாமலே நிகழ்ந்தது. இந்தியன் தாத்தாவாக கமல் அடிக்கடி முன்மயிர்க் கற்றையை விரல்களாய் சீர் செய்வது இவ்வகை நடிப்பு தான்

மம்முட்டிக்கு வணிக படங்களில் ஒரு முரட்டு ஆண் பிம்பம் உள்ளது. கொஞ்சம் தொப்பை தெரிய வேட்டியை மடித்து கட்டி, ஒரு கை மீசை முறுக்க நீள்வசனம் பேசியபடியே மறுகையால் வில்லனை குத்துவார் அல்லது கதா நாயகியை கன்னத்தில் அறைவார். ஆனால் பஷீரின் "மதிலுகள்" நாவலை அடூர் கோபால கிருஷ்ணன் எடுத்த அதே பெயர் கொண்ட படத்தில் மம்முட்டி சற்று பெண்மை சாயலுடன் நடித்திருப்பார். படம் திரையிடல் முடிந்த பின்னான இயக்குனர்--பார்வையாளர்கள் சந்திப்பில் நான் அடூரிடம் கேட்டேன்: "மம்முட்டியின் உடல் மொழியில் பெண்மை நளினம் உள்ளதே. இந்த படத்துக்காக அவர் பஷீரை நேரில் சந்தித்து அவதானித்து அதன்படி நடித்துள்ளாரா அல்லது உங்கள் அறிவுறுத்தலின் படியா?"

அடூர்: "அப்படி ஒன்றும் இல்லை. அது மட்டுமல்ல, பஷீர் தன்னை ஒரு கம்பீரமான ஆண்மகனாகவே கருதினார், நீங்கள் பார்த்தது மம்முட்டியின் பஷீர் என்கிற எழுத்தாளன்"

ரொம்ப பிற்பாடு தான் இந்த பதில் எனக்கு விளங்கியது. இந்த கருத்தின் படி, தாளவட்டத்தில் லால் கண் சிமிட்டாதது சரிதானா என்று மனவியலாளர் விஜய் நாகசாமியிடம் கேட்க வேண்டியதில்லை. நடிப்பு யதார்த்தத்தை ஒப்பிப்பதல்ல, அது ஒரு சங்கேத பரிமாற்றம். மம்முட்டி காட்டிய உடல்மொழி பஷீரிரினுடையதிலிருந்து மாறுபட்டிருக்கலாம். மனித மனத்தின் எதிர்மறை மற்றும் நேர்மறைப் பண்புகளை ஒன்றாக அரவணைக்கும் பஷீரின் தாய்மைக் கனிவை இந்த பெண்மை நளினம் கொண்டு வந்து விடுகிறதல்லவா! பஷீரை மம்முட்டி ஒப்பித்திருந்தால் இது நடந்திருக்காது.

இயக்குனர் சி.மகேந்திரன் (உதிரிப்பூக்கள்) தனது "நடிப்பு என்பது" என்ற நூலில் (கனவுப்பட்டறை வெளியீடு) இந்த இரண்டாவது வகை அவதானிப்பு நடிப்பை எளிதாக சற்று விரிவாக அலசுகிறார். தயாரிப்பு நடிப்பு சரித்திர நாயகப் பாத்திரங்களுக்கு மட்டுமே போதும் என்கிறார். மற்றபடியான அன்றாட பாத்திரங்களைப் பொறுத்தமட்டில் ஒரு கலைஞன் தன் ஆழ்மனதின் வழிகாட்டுதல் படியே நடிக்க வேண்டும். அதிகப்படியான திட்டமிடல் பல சமயங்களில் தட்டையான நடிப்பையே தருகிறது என்கிறார் மகேந்திரம். இதற்கு என் தனிப்பட்ட உதாரணங்கள் விக்ரமின் "பிதாமகன்" (சதா படக்கருவி பற்றின பிரக்ஞை என்கிறார் இயக்குனர் ராம்) மற்றும் "அம்பி" பாத்திரங்கள்.

பிரக்ஞை குறிக்கிடல் நடிப்புக்கு பாதகம் ஆவதற்கு ஒரு எளிய உதாரணம் மாறுவேட நடிப்பு. ஒரு எளிய நடிகன் கூட மாறுவேடத்தில் சிறப்பாய் நடித்து விடுவான். காரணம் அவன் மாறுவேடத்துள் தன் பிரக்ஞையை இழந்து மறைந்து கொள்வதே என்கிறார் மகேந்திரன். வேஷம் கலைந்து 'இதோ நான் தான்' என்கிற போது நடிக்கப் போகிறோம் என்கிற பதற்றத்தில் அவன் நடிப்பு மீண்டும் சீர்குலையும்.

ஒரு நல்ல நடிகன் எந்நேரமும் அவனை அறியாது சுற்றிலிமுள்ள மனிதர்களை கவனித்தபடி உள்ளான் என்கிறார் மகேந்திரன். சிறுவயதிலிருந்தான இந்த பிரக்ஞையற்ற அவதானிப்பு காரணமாய் அவனது ஆழ்மன சேகரிப்பில் எண்ணற்ற உடல் சித்திரங்கள் மற்றும் ஒலிக்குறிப்புகள் இருக்கும். படத்தளத்தில் இந்த நுண்ணிய அவதானிப்புகளே அவனுக்கு கைகொடுக்கின்றன. ஒரு மருத்துவனாய் நடிக்க அபிரகாம் வர்க்கீஸின் மருத்துவமனையில் நாட்குறிப்புடன் அலைய வேண்டியதில்லை. ஏற்கனவே வாழ்வில் சந்தித்த பலவித மருத்துவர்களின் (சிடுமூஞ்சி, பால்முகம், அவசரக்காரர், போலி, இளம், கிழம், வாயாடி ....) சித்திரங்கள் ஆழ்மன அடுக்குகளில் சொருகப்பட்டிருக்கும். அவை போதும். அவதானிப்பு நடிப்புக்கு ஒரு உதாரணம் தருகிறார். ஒரு படபுதிற்காக பல்வலி பாத்திரத்தில் நடிக்க நேர்முகம். ஏராளமானோர் வந்து பல்வலி அவஸ்தை பற்றி பக்க நீள வசனம் பேசி செல்கிறார்கள். ஒருவர் மட்டும் சைகை மூலம் தன் அவஸ்தையை மருத்துவரிடம் விளக்குகிறான். பார்த்து நின்ற தயாரிப்பாளர் கடுப்பாகிறார்: "என்னப்பா டைலாக் பேச மாட்டேங்குறியே". நடிக்க வந்தவன் இதற்கு ஆத்திரமாக 'உன் படத்துகு ஒரு கும்பிடு' என்று கை தூக்கி கூப்பி விட்டு கிளம்ப, இயக்குனர் அவனை திரும்ப அழைக்கிறார். தேர்வு செய்கிறார். அவர் அதற்கு இந்த காரணம் சொல்கிறார்: "பல்வலிக்காரர்களிடம் யாராவது விமர்சித்து பேசினால் பொத்துக் கொண்டு கோபம் வரும். இவரிடம் அந்த அவதானிப்பு உள்ளது".

இத்தகைய நடிப்புத் திறமை ஒரு கலைஞனுக்கு இயல்பிலேயே வேண்டும் என்கிறார் மகேந்திரன். ஒரு நடிகனை உருவாக்க முடியாது.

"மை ஓன் கண்டுறீ" ஒளிப்பதிவாளர் டியோன் பீப்புக்கு ஒரு அபூர்வ பழக்கம். எங்கு பயணித்தாலும் தனது படக்கருவியை கார் ஜன்னலருகே வைத்து அல்லது கையில் சுமந்த படி ஓட விடுவார். அவர் பார்த்தது பார்க்காதது அனைத்தும் ஒரு சுதந்திரமான நாட்குறிப்பு போல் அதில் பதியும். பல சமயங்களில அவர் எதிர்பாராத அருமையான காட்சிகளும். இலைதழைகள் சரமாய் தலைக்கு மேல் கடந்து மறையும் ஒரு காட்சிஅத்தகையது. "மை ஓன் கண்டுறீ" படத்தில் மீரா நாயர் அதை திரைக்கதையை ஒருங்கிணைக்கும் ஒரு படிமமாய், மையப் பாத்திரத்தின் மனநிலையின் குறியீடாய் பிற்பாடு பயன்படுத்தினார். ஒரு நடிப்புக் கலைஞனின் மனம் இந்த கண்டபடி ஓடும் படக்கருவி மாதிரிதான். சரியான நேரத்தில் சரியான சுருளை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதே நடிப்பின் சூத்திரம். கலைஞன் அல்லாத நடிகனுக்குள் இந்த 24-மணி நேர கருவி இருக்காது. அவன் சொல்லிக் கொடுத்ததை ஒப்பித்து விட்டு போய் விடுவான்.

'பாத்திரமாகவே வாழ்ந்து விடுவது' பற்றி நம்மிடையே ஒரு மயக்கம் உண்டு. உதாரணமாய் "நான் கடவுளில்" நடித்த பின் தனக்குள் ஆன்மீக அமைதி கூடி விட்டதாய், ஏறத்தாழ ஞானம் பிறந்ததாய் ஆர்யா ஒரு பேட்டியில் கூறினார். இது போதாதென்று படப்பிடிப்பு முடித்து அதே அகோரி தாடியுடன் வீட்டுக்குப் போய் அவர் தன் அம்மாவை வேறு பயமுறுத்தியிருக்கிறார். மகேந்திரன் இந்த நடிப்பு மயக்கத்தை விளக்க ஒரு சம்பவம் சொல்கிறார். ஒரு இயக்குனர் கழைக்கூத்தாடி பாத்திரத்தில் நடிக்க நிஜக்கூத்தாடியையே அழைத்து வருகிறார். தளத்தில் ஆக்ஷன் சொல்லியும் அவர் அசையவில்லை. இயக்குனர் வற்புறுத்த கூத்தாடி கயிற்றின் மேல் நின்ற படி சொல்கிறார்: "எல்லோரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்க, இல்லாங்காட்டி ஆட மாட்டேன்". நடிப்பு ஒரு பொய் என்று உணர்ந்த பின்னரே நல்ல நடிப்பு வரும் என்கிறார் மகெந்திரன்.

மகேந்திரன் சொல்ல வந்ததை துல்லியமாய் தெளிவாய் எழுதுகிறார். தயக்கமோ சிக்கலோ அற்ற நடை.
மேலும் குறிப்பிட வேண்டியவை மகேந்திரனின் நகைச்சுவை உணர்வும் ('எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த நடிகன்'; 'அவர் உயர்ந்த மனிதராய் வாழ்ந்தார் நடிக்கவில்லை' இப்படியான திடுக்கிடும் கருத்துக்கள்) மற்றும் அங்கங்கே வரும் விரிகோணத்தில் மகேந்திரனை வீங்கிக் காட்டும் கறுப்பு வெள்ளை மிரட்டல் படங்களின் விகாரம்.
இந்த அருமையான குறும்புத்தகத்தின் இத்துனூண்டு குறைகள்.
Read More

கிரிக்கெட் இனி மெல்ல சாகும் ...



20-20 கிரிக்கெட் போட்டிகளை மிகக் குறைந்த எண்ணிக்கையில் நடத்த வேண்டும் என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் மிக நூதனமான தீர்மானம். ஒருநாள் மற்றும் டெஸ்டு கிரிக்கெட் ஆட்ட வகைகளை 20-20 முழுங்கி விடும் என்ற அச்சம் பல முன்னாள் ஆட்டக்காரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உள்ளதே காரணம். வயசுக்கு வந்த பெண்ணை தாவணி கட்டி, முட்டை அடித்து குடிக்க வைத்து வீட்டு அறைக்குள் பதுக்கி வைப்பது போன்றது இந்த எதிர்மறை தீர்மானம்.
மிக சமீபமாய் நிகழ்ந்த தென்னாப்பிரிக்கா--ஆஸி தொடரைத் தவிர பிற டெஸ்டு ஆட்டங்கள் குளித்து கரையேறின எருமை மாடுகள் லட்சணமாய் தான் நடந்து முடிந்தன. பொதுவாய் டெஸ்டு ஆட்டம் நடக்கும் அரங்குகள் ஒருவித மென்வதை முகாம்கள். ஏன்: ஏறுவெயில், மோசமான இருக்கைகள், எதிரில் படுசலிப்பான காலந்தள்ளும் ஆட்டம், சுற்றிலும் ஒரு இஸ்லாமிய தொழுகை அரங்கை நினைவுபடுத்தும் படியாய் முழுக்க முழுக்க ஆண்கள். துப்பட்டாவால் தலை மூடின சில காதல் ஜோடிகளும் இருப்பு கொள்ளாமல் உணவுப் பந்தலுக்கும், புது இடங்களுக்குமாய் அலைகழியும் சூழல். இந்த அமானுஷ்ய இயக்கமின்மையை, பாதிகாலியான அரங்கத்தை டி.வி பார்வையாளர்களிடம் இருந்து மறைக்கவே வர்ணனையாளர்கள் ஓயாமல் முணுமுணுப்பது: "எங்கள் காலத்தில் எல்லாம் பந்து இன்னும் வழவழப்பாக இருக்கும்". இந்த நிலைமையில் முன்னாள் ஆட்ட மேதை பிரையன் லாரா "கிரிக்கெட் அழிந்து வரும் ஆட்டம்" என்று சமீபமாய் சொல்லியிருப்பது மிக முக்கியமானதாகிறது.
ஒரு டெஸ்டு ஆட்டம் வெற்றி அல்லது தோல்வி முடிவைத் தர (அ) வீரர்கள் 5 நாளும் அதிதீவிரமாய் ஆட வேண்டும் அல்லது (ஆ) படுமோசமாய் சொதப்ப வேண்டும். வாய்ப்பு (அ) யதார்த்தத்துக்கு ஒவ்வாதது. ஒரு மனிதனால் தன் உச்சகட்ட திறமைகளை தொடர்ச்சியாய் வெளிப்படுத்த முடியாது. வாய்ப்பு (ஆ)வைப் பொறுத்த மட்டில் ஆட்டம் பரபரப்பாய் 3வது அல்லது 4வது நாளில் முடிந்து பார்வையாளர்களுக்கு கிளர்ச்சி ஊட்டும்; ஆனால் நிர்வாகத்துக்கோ ஆட்டக்காரர்களுக்கோ விளம்பரம் செய்யும் வர்த்தக நிறுவனங்களுக்கோ துட்டு பெயராது. இதனால் போட்டி மனப்பான்மை அறவே இல்லாமல் ஆகி ஐந்து நாட்கள் நிலைத்தால் போதும் எனும் அரசு குமாஸ்தா மனப்பான்மை உருவாகி விட்டது. இப்படி ஆட்டக்காரர்கள்--நிர்வாகிகளின் சுயநலத்துக்காக மட்டுமே ஆடப்பட்டு வழிதவறின ஆடுகள் போன்று சில பார்வையாளர்கள் சிதறியிருக்க கனத்த மவுனத்தினிடையே நடக்கிறது டெஸ்டு கிரிக்கெட். இந்த சுயநலமிகளால் டெஸ்டு கிரிக்கெட் சீரழிக்கப்படுவதற்கு அதன் கோளாறான அடிப்படை அமைப்பும் காரணம். டெஸ்டு கிரிக்கெட்டை உயிர்ப்பிக்க அதன் விக்டோரியா ராணி கால ஆட்ட விதிகள், முறைகளை புனரமைக்க வேண்டும்.
டெஸ்டு அமைப்பை தூர்வாரும் முன் கிரிக்கெட் கிருஷ்ண கானசபா தீம்தரிகரிட...தோம் அல்ல, பாமரர்களும் கலந்து கொண்டு ஆர்ப்பரித்து பங்களிக்க வேண்டிய பொழுதுபோக்கு கலை என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதலாளிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆட்டமுறை மற்றும் ஆட்டக்காரர்களின் மனவியல்\தொழிற்நுட்ப விவரங்களை வல்லுநர்கள் நடுமண்டை சொறிந்தபடி சிலாகித்தாலும் அரங்கில் கூடும் பெருவாரியான பார்வையாளர்களின் பங்களிப்புதான் கிரிக்கெட்டை முழுமையாக்குகிறது. உதாரணமாய் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் ஆட்டமொன்றில் முன்கால் ஆட்டத்திலிருந்து கண்சிமிட்டும் அரைநொடியில் பின்சென்று விலகி சேவாக் வாஸின் பந்தில் தெர்டுமேன் பகுதிக்கு விளாசிய ஆறு. பண்டிதர்கள் சேவாகின் சமயோஜிதத்தை மெச்சி, ஆராய்ந்தாலும் வீரு தான் சற்றும் யோசிக்காமல் தன் உட்தூண்டுதலின் படி அடித்த ஷாட் அது என்று அவர்களின் வாயை அடைத்தார். இந்த ஷாட்டின் மகத்துவம் ஆயிரக்கணக்கானோர் சற்றும் சிந்திக்காமல் அதை உள்வாங்கி அடையும் மன-எழுச்சியில் உள்ளது. படம் வரைந்து விளக்குவதில் அல்ல. பார்வையாளர்கள் கொக்குகளாய் பூத்த மைதானத்தில் கிரிக்கெட் மியூசியத்தில் காத்திருக்கும் டினோசராக தனிமைப்படுகிறது.
மக்களின் கரகோஷம், ஈடுபாடு, உற்சாகம் தங்கள் ஆட்டத்தரத்தை உயர்த்தி உள்ளதாய் பல ஆட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர் (கபில்தேவிலிருந்து சச்சின் வரை). இதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாகி உள்ளது. உதாரணமாய் 1999 பாக் தொடரில் கொல்கத்தா டெஸ்டின் போது சச்சின் அக்தரின் முதல் பந்தில் பவுல்டாகியதற்கு அவர் அரங்கத்திற்குள் நுழைந்த போது லட்சக்கணக்கானோர் எழுந்து நின்று செய்த கரகோஷம் காரணம். ஒரு நொடி சச்சினின் கவனம் கலைந்து விட்டது.
கிரிக்கெட்டை தொலைக்காட்சி பிம்பத்திலிருந்து வெளியேற்றி அதை மக்களுக்கான ஆட்டமாக மாற்ற வேண்டும். எப்படி?
டெஸ்டு ஆட்டம் பகலில் பெரும்பாலாய் வேலை நாட்களில் நடப்பது. மக்கள் வேலை மெனக்கட்டு ஏழு மணிநேரத்துக்கு மேல் 5 நாட்கள் வெயிலில் காய்ந்து ஒரு ஆட்டத்தை பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாதது. இந்த ஆட்ட நிரலை முதலில் மாற்றியமைக்க வேண்டும்.
செயற்கை வெளிச்சத்தில் மாலைப் பொழுதில் டெஸ்டு ஆட்டத்தை நடத்தலாம். இதற்காக திட்டமிடல் ஏற்கனவே இங்கிலாந்தில் நடக்கிறது. டெஸ்டு போட்டியின் கால அளவு எத்தனை அபத்தமானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொதுவாக ஒருநாளில் 1 செஷ்னுக்கு 20 ஓவர்கள் விகிதம் 4 செஷ்ன்களில் 80 ஓவர்கள் வீசுவார்கள். இதை ஒரு நாளைக்கு 2 செஷ்ங்களாக (40 ஓவர்கள்) குறைக்கலாம். அடுத்து ஒவ்வொரு நாள் ஆட்டத்திற்கும் ஒருவித முழுமை கிடைக்கும்படி, அன்றைக்கு யார் ஜெயித்தார்கள் என்று தெளிவாய் புரியும்விதம் புள்ளிகள் வழங்கும் முறையை கொண்டு வரலாம். 40 ஓவர்களில் 6 ஓட்டசராசரி தக்கவைத்தால் 4 புள்ளிகள். 8க்கு ஆறு புள்ளிகள். தடுப்பாட்டத்திற்கு இந்த முறையில் அங்கீகாரம் இல்லை. 4க்கு கிழே சராசரி எடுத்தால் 0 புள்ளிகள்.
ஸ்டிரைக் ரேட் என்பது ஒரு பந்து வீச்சாளர் எத்தனை குறைந்த பந்துகள் வீசி எத்தனை விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பதை கணக்கிட்டு அவரது விக்கெட் வீழ்த்தும் திறனை கணிக்கும் ஒரு முறை. எத்தனை குறைவாய் ஸ்டிரை ரேட் உள்ளதோ அந்த அளவிற்கு சிறந்த வீச்சாளர். நாம் டெஸ்டின் ஒரு நாளில் ஒரு அணியின் ஒட்டுமொத்த ஸ்டிரைக் ரேட் சராசரியை கணக்கில் கொள்ளலாம். இதன்படி 35க்கு கீழே ஸ்டிரை ரேட் பெற்றால் 6 புள்ளிகள்; 40க்கு கிழே 4 புள்ளிகள். அதற்கு மேல் முட்டை. அதாவது 40 ஓவர்களில் குறைந்தது 8 விக்கெட்டுகள் வீழ்த்தினால் 6 புள்ளிகள். 6க்கு 4 புள்ளிகள்.
இந்த முறையில் மெத்தன ஆட்டத்திற்கு புள்ளிகள் இல்லை. ஒரு அணியின் வெற்றி அது பெற்றுள்ள புள்ளிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்பதால் டிரா ஆகும் வாய்ப்பு முழுக்க இல்லாமலாகிறது. வெற்றி-தோல்வி-ஒரே ஸ்கொர் (டை) மட்டுமே சாத்தியம். இதனால் அறிவியல் பூர்வமான துல்லிய முடிவுகள் சாத்தியம் ஆகும். (அதிர்ஷ்டம், நடுவர் தவறுகள் ஆகிய காரணிகளின் குறைந்த பட்ச குறுக்கீடுகளுடன்; ஆனால் ஒரு நடுவர் தவறு, சிறு ஆட்டப் பிசிறு காரணமாய் வெற்றி\தோல்வி எல்லாம் தீர்மானிக்கப்பட மாட்டாது.) பார்வையாளர்களுக்கு அன்றன்றைக்கு யார் முன்னணியில் என்பது துல்லியமாக தெரியும். 5வது நாளின் இறுதியில் அதிக புள்ளிகள் (மட்டையாட்ட, பந்து வீச்சு புள்ளிகள் சேர்த்து) பெற்றுள்ள அணிக்கே வெற்றி.
சமீபத்தில் நடந்த மேற்கிந்திய--இங்கிலாந்து, இலங்கை--பாக்கிஸ்தான் தொடர்களில் கடைசி நாளில் கூட நமக்கு யார் முன்னிலையில் என்பது தெரியாதபடி ஆடினார்கள். முதல் அணி இரண்டரை நாட்களில் 600 அடித்தால், இரண்டாவது அணி இரண்டே கால் நாளில் 615 அடித்து, அடுத்த அணியை மீதமிருக்கும் சில மணி நேரங்களில் விருப்பமிருந்தால் ஆட அழைத்து, எல்லாரும் கொட்டாவி விட முடித்துக் கொண்டார்கள். யாரும் ஜெயிக்காமல் எதற்கு ஒரு ஆட்டம்? நம் ஆட்டத்தில் இந்த கேள்வியே வராது.
பார்வையாளர்களை டிராவிட் போன்ற எதிர்மறை ஆட்டக்காரர்களிடம் இருந்து காப்பாற்ற வேறு சில விதிமுறைகள். பந்து புதிதாக இருக்கும் முதல் 20 ஓவர்களில் விக்கெட்டுகள் விழ வாய்ப்புகள் அதிகம். இன்றைய பெரும்பாலான டெஸ்டு துவக்க ஆட்டக்காரர்கள் (வீரு--காம்பிர் விதிவிலக்கு) இந்த கட்டத்தில் 60 ரங்களுக்கு மேல் எடுப்பதில்லை. கிரிக்கெட்டின் அரைத்தூக்க வேளை இது. புது விதிமுறைப்படி இந்த முதல் 20 ஓவர்களில் எல்லைக்கோட்டுக்கு 4 அடித்தால் 8 ஒட்டங்கள்; வெளியே 6 அடித்தால் 10 ஒட்டங்க்கள். ஆனால் ஒருநாள் ஆட்டங்களில் உள்ளது போன்ற பீல்டிங் கட்டுப்பாடுகள் இல்லை. இந்த புதுவிதிகளின் படி இந்த கட்டத்தில் 6 பந்துகளை எலைக்கோட்டுக்கும், 5 பந்துகளை அதற்கு வெளியேயும் அடித்து ஒருவர் முதல் செஷனிலே சதம் அடித்து விட முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் 300 அடிக்க கூட வாய்ப்பு உண்டு. இந்த தூண்டுதல் மட்டையாளர்களை அதிரடியாய் ஆட வைக்கும் என்பதால் விக்கெட்டுகள் துவளும் சாத்தியமும் உள்ளது. இதனால் எதிரணியினரின் வீச்சு சராசரி குறையும், புள்ளிகள் ஏறும். மட்டையாட்டம், பந்து வீச்சு இரண்டுக்கும் சாதகமான விதிமுறை இது. பந்து பழசாகிட டைமிங் செய்வது சிரமம் என்பதால் மட்டையாளர்கள் புதுப்பந்து மாற்றும் வேளையில் கட்டை போட ஆரம்பித்து விடுவார்கள். இதைத் தவிர்க்க பந்து மாற்றும் கட்டத்தில் எதிரணி தொடர்ந்து பழைய பந்துடனே ஆடுமானால் மேற்சொன்ன விதிமுறை பயன்பாட்டுக்கு வரும்.
இந்த விதிமுறை மாற்றங்களுக்குப் பின்னரும் ஆண்ட்ரூ ஸ்டுராஸ், காலிங்வுட், சமரவீரா போன்றோர் நளினமற்ற ஷாட்டுகளை மட்டுமே அடித்து சராசரியை தக்க வைக்கும் ஆனால் வசீகரமற்ற கிரிக்கெட்டை ஆடும் வாய்ப்புள்ளது. அதாவது நமது மெரீனா கடற்கறை காட்டு சுற்றல் ஆட்டமாக சர்வதேச கிரிக்கெட் மாறாமல் இருக்க சில வசீகரமான மற்றும் ஆபத்தான ஷாட்டுகளுக்கு அதிக ஓட்டங்கள் அறிவிக்கலாம். உதாரணமாய் கவர் டிரைவ், ஹுக், ஸ்விட்ச் ஹிட், லொஃப்ட், ஸ்டிரெயிட் டிரைவ் போன்றவை. 2003-04 இந்தியாவின் ஆஸி பயணத்தின் போது சிட்னியில் சச்சின் ஆட்டமிழக்காமல் 436 பந்துகளில் எடுத்த 241
ஞாபகமுள்ளதா? அன்று அவர் முழுக்க முழுக்க கால்பக்கம் மட்டுமே ஓட்டங்கள் எடுத்து பார்வையாளர்களை வேறுப்பேற்றினார். காரணம்? அவர் முந்தைய ஆட்டங்களில் ஆஃப் பக்கத்தில் அடித்து ஆட்டமிழந்தாராம். அதனால் இந்த ஆட்டத்தில் ஆஃப் குச்சிக்கு வந்த எந்த பந்தையும் அவர் தொடவில்லை. சரி, இம்முறை கால்பக்கத்தில் அடிக்கப் போய் ஆட்டம் இழந்திருந்தால்? அவர் ஆடியதிலேயே மிக பயந்தாங்கொள்ளி ஆட்டம் அது. இத்தகைய ஆட்டம் கிரிக்கெட்டுக்கு மோசமான விளம்பரம். மேற்சொன்ன விதிமுறை மாற்றத்திற்குப் பின் இது போன்ற தடுப்பாட்டங்கள் குறையும்.
தமிழை கல்லூரி வாத்தியார்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்றார் கா.நா.சு. கிரிக்கெட்டை குமாஸ்தா ஆட்டக்காரர்களிடம் இருந்தும், புராதான நிர்வாகிகளிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டும்.
Read More

ஐ.பி.எல்: நவீன கிரிக்கெட்டின் அசுரக் குழந்தை



" 'உயிர்மையில்' வெளிவந்த IPL 2-க்கு முன்னான கட்டுரை. இணைய வாசகர்களுக்காக மறுபிரசுரிக்கிறேன்."

எல்லா வீட்டிலும் தலையணையை குத்தியபடி நகராது கிரிக்கெட் பார்க்கும் ஒரு ஆட்ட வெறியர் இருந்த நிலைமையிலிருந்து போன வருடம் ஐ.பி.எல் ஒரு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது: குழந்தைகள், குடும்பப் பெண்கள், அத்தைகள், இளைஞிகள் என மொத்த குடும்பமும் பவுன்சருக்கும், புல்டாசுக்கும் வேறுபாடு தெரியாமல் பரபரப்பாக 20-20 பார்த்தனர், விவாதித்தனர். இந்திய அரசுக்கு நேரடி வருமானமாக 90 கோடி வந்தது. கிரிக்கெட்டை இவ்வளவு சாமர்த்தியமாக கலர்ப்பேப்பர் சுற்றி விற்க முடியுமா என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூக்கை சொறிந்தது. ஐ.பி.எல் தலைமை நிர்வாகி லலித் மோடி மீடியாவின் நாயகனானார். ஐ.சி.சி 50 வருடத்திற்கு மேல் கிரிக்கெட் எனும் வணிகப் பொருளை எவ்வாறு வீணடித்து வந்துள்ளது என்று லலித் மோடி உணர்த்தினார்.

ஒரு நாள் கிரிக்கெட்டின் முப்பது வருட வரலாற்றில் பவர் பிளே மற்றும் நோ பால் இலவச விளாசல் மட்டுமே ஐ.சி.சி அறிமுகப்படுத்திய புதுமைகள். (டெஸ்டுக்கு அது கூட இல்லை). ஆனால் அப்போது ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு நரை கூடி மயிர்கொட்டி விட்டிருந்தது. முதல் சில ஓவர்களிலே அதன் முடிவு கணிக்கும்படியாய் மாறி விட்டது. மேலும் ஏழெட்டு மணி நேரங்கள் செலவழித்து கிரிக்கெட் பார்ப்பது இந்த அவசர யுகத்தின் தாளகதிக்கு தோதல்ல. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் கிரிக்கெட் பிரபலமாகாதற்கு, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பேஸ்பால், சாக்கர் ஆட்டங்கள் முன் அது ஒளி மங்கியதற்கு முக்கிய காரணம் இதுவே. இளைய தலைமுறையைனரிடம் கிரிக்கெட்டை பரவலாக்கும் நோக்கத்துடனே இங்கிலாந்து கவுண்டி ஆட்டங்களில் 20-20 அறிமுகப்படுத்தினார்கள். 26000 பேர்களுக்கு மேல் பங்கேற்று ஓரளவு இங்கிலாந்தில் வெற்றி பெற்றாலும், ஆஸ்திரேலியா இதை பொருட்படுத்தவில்லை. அங்கு நடந்த முதல் சர்வதேச 20-20இல் ஆஸி- நீயுசிலாந்து அணியினர் 70-களின் மோஸ்தரில் ஆடை அணிந்து, வேடிக்கையாக மீசை வைத்து, வட்டப்பெயர்கள் சீருடையில் எழுதியபடி ஆடினர். இந்தியாவில் மாலை வேளை வெளிப்பொழுது போக்குக்கு சினிமாவை விட்டால் மத்திய வர்க்கத்திற்கு குறிப்பிடும்படியான வாய்ப்புகள், இடங்கள் இல்லை; மேலும் மற்ற நாடுகளில் போலல்லாது இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு போட்டி இல்லை. இந்த பொழுது போக்கு காலியிடத்தை கண்டு கொண்டு, வணிக குழுமங்கள், நடிகர்களை இணைத்துக் கொண்டு 20-20 கிரிக்கெட்டை முதன்முதலாய் வெற்றிகரமாய் விற்றதே மோடியின் சாமர்த்தியம். குழந்தைகள் மற்றும் வளர்ந்த அறிமுக பார்வையாளர்களைக் கவரும் சிக்சர்கள், குட்டைப்பாவாடைப் பெண்களின் கிளர்ச்சி நடனம், தலைகாட்டும் பிரபலங்கள், சுவையான உணவு ஆகியவற்றோடு ஒவ்வொரு அணிக்கும் தனிப்பட்ட விளம்பரப் பாட்டு, வண்ணமய ஆடை, பரந்துபட்ட ஊடக கவனத்திலிருந்து ஐ.பி.எல் பார்ப்பதை, விவாதிப்பதை ஒரு அந்தஸ்து சின்னமாக்கிய வெற்றிகரமான பிராண்டிங் வரை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்தனர் மோடி குழுவினர். ஆரம்பித்த சில வாரங்களில் திரைப்பட வசூல் மற்றும் மெகா தொடர்களின் ரேட்டிங்கை முடக்கும் அளவிற்கு ஐ.பி.எல் சமூகத்தின் கற்பனையை ஆக்கிரமித்திருந்தது.



இது நாள் வரை முதிய வீரர்களை ஓய்வு பெற வாரியங்கள் வற்புறுத்த மிரட்ட வேண்டியிருந்தது. ஆனால் ஐ.பி.எல்லில் கலந்து கொள்ள நட்சத்திர ஆட்டக்காரர்கள் சற்று முன்னதாகவே ஓய்வு பெற்றுக் கொண்டனர். இந்த வரிசையில் மெக்ராத், வார்னே, பிளமிங் போன்றோரின் அதிரடி ஓய்வுகள் சர்வதேச அரங்கில் ஒரு அதிர்வலையை பரப்பியது. பல நாடுகள் தங்கள் வீரர்களை இழக்க நேரிடுமோ என்று அஞ்ச, "பயப்பட வேண்டாம் நாங்கள் ஐ.பி.எல்லை சர்வதேச ஆட்டங்கள் நடக்காத பருவத்தில் மட்டுமே நடத்துவோம்" என்று சமாதானம் சொல்லி ஆசீர்வதித்தார் மோடி. வீரர்கள் மாதக்கணக்காய் சர்வதேச அரங்கில் பாடுபட்டு சம்பாதிப்பதில் பலமடங்கை ஐ.பி.எல்லில் சில வாரங்கள் சில மணி நேரங்கள் ஆடி சேர்த்து விட முடிவதால் அவர்கள் தேசிய அணிக்கு பங்களிப்பதை புறக்கணிப்பார்கள் என்பதே இந்த அச்சத்திற்கு காரணம். தங்கப்புதையல் வேட்டை யாருக்குத்தான் பிடிக்காது? ஐ.பி.எல்ல்லில் சேர்க்க மாட்டோம் என்று மோடி மிரட்ட, மும்பை தாக்குதல் கழித்து சில நாட்களிலேயே இங்கிலாந்து அணியினர் இந்தியா வந்து சமர்த்தாக டெஸ்டு தொடர் ஆடிச் சென்றார்கள். காயம் காரணமாக தாய் நாட்டு அணிகளின் சமீப, நடக்கப் போகும் ஆட்டங்களில் கலந்து கொள்ள மறுத்த நியூசிலாந்தின் ஜேகப் ஓரம் மேற்கிந்திய தீவுகளின் பிரேவோ ஆகியோர் தற்போது ஆர்வமாக ஐ.பில்.எல்லில் மட்டும் கலந்து ஆடுவது, இந்த நாட்டு வாரியங்களை மீண்டும் கலங்கடித்துள்ளது. ஐ.பி.எல் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட்டை ஆக்கிரமித்து ஆள்வது பற்றி கண்டனம் பல நாடுகளிலிருந்து எழுந்துள்ளது.

ஐ.பி.எல் அடுத்து செய்தது இந்திய அணிக்கான தேர்வு முறையை கேலிக்கூத்தாக்கியது. 12--15 வருடங்களாய் உள்ளூர் ஆட்டங்களில் ஆடிக்களைக்காமல் ஒரு சில ஐ.பி.எல் ஆட்டங்களில் சிறப்பாய் ஆடினாலே போதும், சர்வதேச அணியில் இடம் கிடைக்கும் என்ற நிலை உருவானது. குறிப்பாய் கோனி எனும் உள்ளூர் அளவில் முகவரி அற்ற பந்து வீச்சாளர் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் ஸ்டார்சுக்காக ஆடி நட்சத்திரமாகி, இந்திய அணியில் இடம் பெற்று, "மனைவிக்காக பெற்ற தாயை புறக்கணிக்கிறான் படுபாவி" என்று அவரது குடும்பத்தாரின் குடுமிச் சண்டையை டி.வியில் அலசும் அளவிற்கு பிரபலமானார். ரெய்னா ரஞ்சி, செலஞ்சர் தொடர்களில் ஓட்டங்கள் குவித்தும் திரும்பிப் பார்க்காத தேர்வாளர்கள் ஐ.பி.எல்லில் தோனி அணியில் அவர் ஜொலித்த உடனே வாசல் திறந்தனர். இதுவே ஓஜ்ஹா, யூசுப் பதான் விசயத்திலும் நடந்தது. பிரமாதமாக ஆடியும் கோட்டை விட்டவர் வேணுகோபால ராவு மட்டுமே. தனித்து நின்று ஹைத்ராபாத் அணியை வெற்றிக்கு அருகில் இவர் அழைத்து வந்த ஆட்டங்கள் சிறப்பானவை. முப்பது வயது வரை வருடாவருடம் வெயிலில் காய்ந்து பாடுபட்டு ஆடியும் சின்ன அளவில் இந்திய A பயணங்களுக்கு கூட தேர்வாகாத பல உள்ளூர் சீனியர்களை இந்த தேர்வுகள் ஏமாற்றமடைய வைத்துள்ளன. ரஞ்சி அறிமுகமின்றியே சர்வதேச தேர்வென்றால் உள்ளூர் ஆட்டங்களின் பொருளென்ன என்கின்றனர் இவர்கள்.

ஆனால் அஷோக் திண்டா, யோ.மகேஷ், ஸ்ரிவஸ் கோஸ்சுவாமி, அஸ்னோட்கர், கபீர்கான் போன்ற இளம் திறமைகளுக்கும், டெப்ரதா தோஸ், யோஹன்னன், ஷுக்ளா, மன்ஹால், சால்வி, பொவார், திரிவேதி, நீரஜ் பட்டேல் என உள்ளூர் ஆட்டங்களில் நெடுநாள் ஆடியும் புறக்கணிக்கப்பட்ட வீரர்களுக்கும் ஐ.பி.எல் கொஞ்சம் புகழும் நிறைய பணமும் பெற்றுத் தந்தது. ஆஸ்திரேலியாவின் மார்ஷ், வெர்னர் போன்ற ரத்தினங்களை சொந்த ஊர் தேர்வாளர்களுக்கு முன்னரே கண்டெடுத்தது ஐ.பி.எல் குழுவினர் தான். முக்கியமாய், இனிமேல் அதிர்ஷ்டமின்றியோ, இடமின்மை காரணமாகவோ இந்திய அணிக்குள் புக முடியாதவர்கள் திறமை துருவேற மறுக வேண்டாம். சர்வதேச கிரிக்கெட்டில் கிடைக்கும் அனைத்துமே மிக சீக்கிரமாய், குறைந்த காலத்தில் அவர்களுக்கு கிடைக்கும். சர்வதேச அணியில் ஆடினால் கூடுதல் பணத்திற்கு பேரம் பேசலாம் என்று மட்டும் இளைய தலைமுறை ஆட்டக்காரர்கள் இனி நினைக்கும்படி இந்திய அணியில் இடம் பெறுவது எதிர்காலத்தில் இரண்டாம் பட்சம் ஆகலாம். ரமேஷ், தினேஷ் மோங்கியா, கன்வல்ஜித் சிங் போன்று அபாரமான திறமைகள் வாய்ப்பில்லாது வீணாகும் அவலம் இனி நிகழாது.

ஐ.பி.எல்லின் மற்றொரு முக்கிய பாதிப்பு ஒரு நாள் ஆட்ட மட்டையாட்டத்தை மிக அதிரடியாக மாற்றியது. இதனால் 300 ஓட்டங்கள் பாதுகாப்பல்ல, 350 பரவாயில்லை என்கிற நிலைமை உருவாகி உள்ளது. ராவு, ரெய்னா உள்ளிட்ட பல இந்திய\உள்ளூர் வீரர்கள் கவலையின்றி பல அதிரடி ஷாட்களை ஆடும் தைரியத்தை ஐ.பி.எல்லில் தான் பெற்றனர். சேவாக்--காம்பிர் கூட்டணி இத்தனை ஆபாயகரமானதாக மாறினது ஐ.பி.எல்லில் அவர்களது வெற்றிகர இணை-ஆட்டங்களுக்குப் பிறகுதான். பின்-ஐ.பி.எல்லின் போது பந்து வீச்சாளர்களும் மெருகேறி உள்ளனர்; யார்க்கர், ஸ்லோப் பால் ஆகிய பந்துகளை சுலபமாக வீசுகின்றனர். இதனால் ஓட்டம் சேகரிப்பது மேலும் சவாலாகி விட்டது. 20-20 ஆட்டத்துக்கு உடற்தகுதி மற்றும் பீல்டிங் ஆதார அம்சங்கள் ஆகையால் இளைய தலைமுறை ஆட்டக்காரர்கள் இந்த துறைகளில் கவனம் செலுத்துகின்றனர். மறைமுகமாக இது இந்திய அணியின் உடற்தகுதி மற்றும் பீல்டிங் தகுதியை உயர்த்தவும் உதவும்.

ஐ.பி.எல்லில் கவனிக்க வேண்டிய மற்றொரு போக்கு இனம், நாடு, மாநிலம், மொழி போன்ற அடையாளங்கள் வலுவிழப்பது. யோ. மகேஷும், கார்த்திக்கும் மும்பை, தில்லிக்காக சென்னை அணிக்கு எதிராக ஆடுவதை, ஹர்பஜன் மும்பைக்காக தன் சொந்த மாநில அணியான பஞ்சாபுடன் மோதுவதை பார்வையாளர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஹெய்டனுக்காக கைதட்ட தமிழர்கள் பழகி விட்டார்கள். விசுவாசத்தின் பொருள் பின்-ஐ.பி.எல் வரலாற்றில் மாறி விட்டது. இந்த முகமற்ற தன்மையால் ஐ.பி.எல்லை உலகமயமாக்கலின் நீட்சி எனலாம். இதன் அடுத்த படியாக சொந்த நாட்டு அணிகளில் ஆட வாய்ப்பில்லாத முரளி கார்த்திக், ஆகாஷ் சோப்ரா, ரமேஷ் பவார் போன்ற தரமான வீரர்களை சற்று பலவீனமான கென்யா, ஜிம்பாப்வே, வங்கதேசம் போன்ற அணிகளுக்கு தற்காலிக கடனாக வழங்குவது பற்றி ஐ.சி.சி\பி.சி.சி.ஐ சிந்திக்க வேண்டும். சில சர்வதேச அணிகள் சில குறிப்பிட்ட துறைகளில் மட்டும் பலவீனமான உள்ளன. உதாரணமாக பாக்கிஸ்தானுக்கு தரமான சுழல்பந்து வீச்சாளர் இல்லை, இந்தியாவுக்கு ஆல்ரவுண்டர்களும். உபரியாக இத்தகைய ஆட்டக்காரர்கள் உள்ள நாடுகள் இவர்களை பரிமாறிக் கொண்டால் கிரிக்கெட்டின் தரத்தை அது வெகுவாக உயர்த்தும். உதாரணமாக வாய்ப்பில்லாத ஸ்காட்லாந்து ஆல்ரவுண்டர் ஹாமில்டனை இந்தியா சுளுவாக பேரம் பேசி வாங்கிக் கொள்ளலாம். எதிர்கால சர்வதேச கிரிக்கெட்டில் ஐ.பி.எல்லின் பாதிப்பாக இது அமையலாம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் பத்திரமாக ஒற்றை இரட்டை இலக்க ஓட்டங்கள் ஓடி மட்டுமே 6 ஓட்ட சராசரியை தக்கவைக்க தெரிந்ததனாலும் தான் நவீன மட்டையாளர்களால் தன்னம்பிக்கையுடன் 300க்கு மேற்பட்ட இலக்குகளை எட்ட முடிகிறது. ஒரு நாள் ஆட்டத்தில் எந்த கட்டத்தில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு காலம் கற்றுத் தந்த சில உத்திகள் உள்ளன. ஆனால் 20-20-இல் நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒரு ஓவரின் 4 பந்துகளை காற்றில் தூக்கி அடிப்பது, விக்கெட்டுகள் தொடர்ச்சியாய் சரிந்தால் இரண்டு ஓவர்கள் கட்டை போடுவது. 20-20க்கு என்று எந்த திட்டவட்டமான ஆட்ட முறை உத்திகளும் இன்னும் உருவாக இல்லை. அது தற்போது வரை ஒரு கற்றுக்குட்டி ஆட்டம் மட்டுமே. கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜான் புச்சண்ணன் அதிக அபாயமின்றி ஆரோக்கியமான ஓட்டசராசரியை (8--10 ஓட்டங்கள்) தக்கவைக்க ஒரு நடைமுறை சாத்தியமுள்ள திட்டத்தை பரிந்துரைக்கிறார். ஒரு மட்டையாளன் தனது சில வலுவான பவுண்டரி ஷாட்களை தேர்ந்து கொள்ள வேண்டும். அவற்றை அடிப்பதற்கான சாத்தியமுள்ள பந்துகளுக்கு காத்திருக்கு வேண்டும். மற்ற சமயங்களில் ஒன்று, இரண்டு ஓட்டங்கள் கொண்டு ஸ்கோரை தடையின்றி நகர்த்த வேண்டும். ஐ.பி.எல்லில் நிலைத்து ஆடி அதிக ஓட்டங்களை சேகரித்த ஹெய்டன், ஷோன் மார்ஷ் போன்றோர் இந்த முறையை பின்பற்றிவதை பார்க்கலாம். சமீபமாய் சச்சின் தென்னாப்பிரிக்க ஐ.பி.எல் முதல் ஆட்டத்தில் அடித்த அரை சதத்தில் அதிக ஓட்டம் தேவைப்படும் போதெல்லாம் குச்சிகளிருந்து முழுக்க விலகியோ, அல்லது குறுக்காக சென்றோ சில குறிப்பிட்ட ஷாட்களை மட்டுமே தொடர்ச்சியாக அடித்து விட்டு, அதற்கு தோதான பந்துகள் வாய்க்காத போது இயல்பான சம்பிரதாய ஆட்டத்துக்கு திரும்பினார். 200 ஸ்ரைக்கு ரேட்டில் ஆடக்கூடியவரகள் ஒருவர் இருவர் போதும் ஒரு அணிக்கு (சேவாக், ஹெய்டன், யூசுப்). பிறர் மேற்சொன்ன முறைப்படி ஆடலாம். ஒரு கட்டுக்கோப்பான திட்டத்துடன் ஆடினால் அணிகள் 180 ஓட்டங்களை சராசரியாக அடையலாம். அதாவது ஒரு நாள் ஆட்டத்தில் 275 போல. எதிர்காலத்தில் 250 (ஒருநாள் ஆட்டத்தில் 350) ஒரு வழமையான ஸ்கோராக இருக்க வேண்டும். 20-20 ஆட்டம் எதிர்காலத்தில் நிலைக்க இத்தகைய திட்டமிடலும், அதனாலான முன்னேற்றமும் அவசியம்.

தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் இரண்டாவது ஐ.பி.எல்லில் படுகுழப்படியாகவே அனைத்து அணிகளும் ஆடி வருகின்றன. அதனோடு பந்து வீச்சுக்கும் சாதகமான ஆடுதளமும், பருவ நிலையும் இணைந்திட சற்று சொதப்பலாகவே இந்த இரண்டாவம் வருகை தொடங்கி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் இப்போது கிரிக்கெட் ஆட்டப்பருவத்தின் இறுதி கட்டம். இதனால் தொடர்ந்து வருடம் முழுக்க பயன்படுத்தப்பட்டு பழசாகிப் போன ஆடுதளங்களில் ஐ.பி.எல் ஆட வேண்டிய கட்டாயம். வெயில் காய்ந்து வறண்டால் இந்த தளங்கள் வேகம் குறைந்து தூங்கும். பந்து எளிதில் மட்டைக்கு வராது. சராசரி சுழல் வீச்சளரை கூட அடிப்பது இதனால் சிரமம் ஆகிறது. தற்போது அங்கு மழைக்காலம் வேறு. மழையால் ஈரமானால் இதே ஆடுதளம் வேகப்பந்தாளர்களுக்கு ஏராள ஸ்விங் அளிக்கும். மட்டையாளர்களுக்காக அமைக்கப்பட்ட ஆட்டத்தில் பந்து வீச்சாளர்களின் கரம் ஓங்குவது நல்லதல்ல. அந்நாட்டில் பிரபலமான கால்பந்து, ரக்பை ஆட்டவரிசைகளின் பருவம் இது. வெடவெடக்கும் குளிரையும், மழையையும் எதிர்கொண்டு, பிற ஆட்டத்தொடர்களுக்கு மத்தியில் அரங்கத்துக்கு மக்கள் வரும் வாய்ப்புகள் குறைவு. இந்திய ஐ.பி.எல்லுடன் ஒப்பிட்டால் இம்முறை கூட்டம் பாதிதான். அதுவும் இரண்டாவது ஆடும் அணி சொதப்ப ஆரம்பித்தால் அரங்கு ஏறத்தாழ காலியாகி விடுகிறது. உள்ளூர் போட்டியின் கடைசி விக்கெட் ஆட்டம் வரை இந்திய பார்வையாளர்கள் காத்திருப்பார்கள். சேப்பாக்கில் இதை நேரடியாகவே பார்த்திருக்கிறேன். ஆட்டம் முடிந்து போலீஸ் விரட்டின பின்னரே கூட்டம் கலையும். நம்மூர் ரசிகர்களின் ஈடுபாடு நிச்சயம் தென்னாப்பிரிக்க மக்களுக்கு இல்லை. அவர்களுக்கு ஐ.பி.எல் ஒரு விநோத ஜல்லிக்கட்டு மட்டுமே. கடந்த வருட ஐ.பி.எல் இந்தியாவில் மட்டுமல்லாது பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் கூட பிரபலமானது. ஆனால் அப்போதே தென்னாப்பிரிக்காவில் மிகக்குறைந்த ஈடுபாடே காணப்பட்டது. 20-20க்கு சற்றும் தோதல்லாத, ஐ.பி.எல்லை விரும்பாத தென்னாப்பிரிகாவை தேர்ந்தெடுத்த லலித் மோடியின் வணிக கணிப்புகள் சொதப்பல் என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகளை மதிக்காமல், தான்தோன்றித்தனமாய் ஐ.பி.எல்லின் முதலாளிகள் நடந்து கொண்டது அதன் மதிப்பை பொதுமக்களிடையே வெகுவாக குறைத்துள்ளது. கடந்த ஆண்டு இந்திய அரசுக்கு 200 கோடி ரூபாய் ஐ.பி.எல்லிலிருந்து வரியாக மட்டுமே வந்தது. இந்த முறை தென்னாப்பிரிக்காவில் நடப்பதால் ஆட்டக்காரர்கள் வரியைத் தவிர்க்க வசதியுள்ளது. அரசியல்வாதிகள்--ஐ.பி.எல் பூர்ஷ்வா நிர்வாகிகளுக்கு இடையிலான இருங்கிணைவின்மையால் நம் நாட்டுக்கு நேரும் இந்த கொடிக்கணக்கான நஷ்டம் ஒருவித தேசதுரோகம் தான்.

அணிகள் 50க்கும் 100க்கும் ஆட்டமிழக்கும் தென்னாப்பிரிக்க ஐ.பி.எல் 20-20ன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்றாலும், அது இந்திய தேர்வாளர்களுக்கு சிறந்த மதிப்பிடும் களமாக உள்ளது. தென்னாப்பிரிக்காவின் சிரமமான ஆடுதளங்களில் ஆடும் இளைஞர்களில் நேர்த்தியான ஆட்ட உத்தியும், வேகப்பந்தை எதிர்கொள்ளும் திறனும் கொண்டவர்கள் மட்டுமே தேற முடியும். இந்தியாவின் தட்டையான தளங்களில் தூங்கிக் கொண்டே சதம் அடிக்கும் பல போலிகளுக்கு தென்னாப்பிரிக்க சூழல் சிறந்த உரைகல். அடுத்த 20-20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடக்கிறது. ஏறத்தாழ இதே போன்ற ஆட்டச்சூழல் தான் அங்கும். தென்னாப்பிரிக்காவில் தேறும் இளைஞர்களை நம்பி இங்கிலாந்துக்கும் அனுப்பலாம். உலகக்கோப்பையில் ஆடப்போகும் இந்திய அணியின் நிரந்தர வீரர்களுக்கு இந்த ஐ.பில்.எல் சிறந்த பயிற்சியாகவும் அமையும். 20-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற முயலும் ஸ்ரீசாந்த், ஆர்.பி. சிங், ஜொகீந்தர், அபிஷேக் நாயர் போன்றோருக்கு தங்களை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பும் கூட.



"Honey, I Blew up the Kid" பார்த்திருப்பீர்கள். ஐ.பி.எல் எனும் இந்த அசுரக்குழந்தையை சற்று கலக்கம் மற்றும் வியப்புடன் உள்ளூர்\சர்வதேச கிரிக்கெட் அமைப்பாளர்கள் கவனித்து வருகிறார்கள். ஒருநாள், டெஸ்டு ஆட்டங்கள் காலாவதியாகப் போவதை உள்ளூர அவர்கள் உணர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த வகைகளுக்கு மாற்றங்கள் கொண்டு வந்து குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பதில், 20-20 ஆட்டங்களின் எண்ணிக்கையை குறைக்க ஐ.சி.சி முடிவு செய்துள்ளது. இது நடமாடும் அசுரக் குழந்தையை பதற்றத்தில் படுக்கை விரிப்பால் மூடி மறைப்பதற்கு நிகரானது.
Read More

முத்தமும் கொலையும் தீர்மானமாகும் கணம் எது?





ஊரில் என் வீட்டுப் பின் சந்தில் குள்ளமாய் முன்வழுக்கை காதுவரை சிரிப்புடன் ஒரு ஆர்மோனிய வித்துவான் இருந்தார். பால்யத்தில் ஒரு நாள் நான் அவர் மகனைக் சந்திக்க வீட்டுக்கு சென்ற போது அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம். மனைவி இவரை விட ஒரு அடி அதிக உயரம். அவள் விடாமல் கரித்துக் கொட்ட இவர் கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கால் பெருவிரலை நிமிண்டிக் கொண்டிருந்தவர் சட்டென்று பக்கத்துத் திண்டில் தாவி ஏறினார். சுழன்றபடி ஒரு அறை விட்டார். அதிர்ச்சியில் சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை. திண்டில் ஏறி அடிப்பதை அவர் அத்தனை நேரமாய் திட்டமிட்டுக் கொண்டு அமைதி காத்தாரா என்பதை நேரில் கேட்க எனக்கு அப்போது தைரியம் வரவில்லை.

(தொழில்முறை தாக்குதல்கள் தவிர்த்து) நமக்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்திட கணவன்\மனைவி, நண்பர்கள்\தெரிந்தவர்களை கன்னத்தில் அறைகிறோம்; பூசல் மூள தோள், நெஞ்சில் குத்திக் கொள்கிறோம். லேசாய் தாக்கினாலே கடுமையாய் வலிதரக்கூடிய, செயலிழக்கக் கூடிய கண், விரைப்பை போன்ற போன்ற பகுதிகளை நோக்கி ஏன் கைகால் முதலில் நீள்வதில்லை. "தெரியாம அடிச்சுட்டேம்பா" என்று மன்னிப்பு கேட்கும் நாம் நிஜமாகவே திட்டமிடுவதில்லையா? தெரியாமல் அடிக்கும் நாம் ஏன் இத்தனை பாதுகாப்பாய் தாக்குகிறோம்?

சற்று சைவமாக ஒரு உதாரணம்: "தோ பார்!" என்று சொடக்கு போடும் சில மில்லி நொடிகள் முன்னாடி அச்செயலை தீர்மானிக்கிறோமா? ஆம் என்கின்றன எலெக்டுரோஎன்செபெலோகிராபி முறைப்படி செய்யட்ட சில ஆய்வுகள். நமது அகத்தூண்டுதல்-அற்ற உடனடி நடவடிக்கைகளின் போது மூளையின் தசை இயக்க நடவடிக்கையில் படிப்படியான எழுச்சி காணப்படுகிறது. இதை தயார் நிலைத் திறன் என்கிறார்கள் (readiness potential). திட்டமிட்ட அசைவுகளின் போது கூட 2 அல்லது 3 நொடிகளுக்கு முன்னரே நமது மூளை தயாராகி விடுகிறது. அதாவது ஒரு குட்டி ஒத்திகை நிகழ்கிறது. இத்தகவல் இலக்கியம் போன்ற நுண்கலைகளில் பிரக்ஞை இழப்பு பற்றின மனப்பாங்கு சற்று மிகை என்கிறது. இதன்படி படைப்பு மொழிக்கு படைப்பாளி ஓரளவுக்கு பொறுப்பாக வேண்டும்.

முன்கூட்டிய தயாராதலை எப்படி நிரூபிப்பது?

லவோ மற்றும் பலர் ஒரு மீது ஒரு fMRI ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுப் பங்கேற்பாளர்கள் ஒரு கடிகார முள்ளின் அசைவை கவனித்தபடி விரல் சொடுக்க வேண்டும். சொடுக்கும் முன் அச்செயலை செய்யப் போகும் உந்துதல் ஏற்பட்ட நேரத்தை குறிக்க வேண்டும். இந்த உந்துதல் ஏற்பட்ட வேளையில் பங்கேற்பாளர்களின் மூளையின் டார்சல் பிரீபிரண்டல் கார்டெக்ஸ் மற்றும் இண்டுரா பிரைட்டல் சல்க்கஸ் ஆகிய பகுதிகளில் நடவடிக்கைகள் அதிகமானதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். நாம் ஒரு செயலுக்கு தயாராவதற்கு மற்றும் திட்டமிடுவதற்கு பயன்படும் பகுதிகள் இவை.

சரி, செயலுக்கு முன்னாடியே மூளை ஏன் தயாராகிறது?
நாம் ஒவ்வொரு நொடியும் புலன்வழி நுகரும் செய்திகளை புரியும்படியாய் ஒருங்கமைக்க ஒரு மாதிரி தேவைப்படுகிறது. கிட்டத்தட்ட சி.பி.ஐ வெளியிடும் கணினி ஓவியம் போன்று. மேலும் நுணுக்கமாய் சொல்வதானால், நமக்குள் இருக்கும் புலன்சார் நரம்பணுக்கள் மீது டெண்ட்றைட்டுகள் எனும் வால்கள் உண்டு, அக்டோபஸ் பாணியில். இவை மில்லி நொடி பொழுதில் பில்லியன் தொடர்பற்ற புலன் தகவல்களை வாங்கி ஒன்றோடொன்று சமச்சீராய் பகிர்ந்து ஒரு சித்திரத்தை ஏற்படுத்த அல்லது 'உண்மையை' நமக்குத்தர வேண்டும். ஒவ்வொரு முறை உருவாகும் சித்திரமும் ஒரு மாதிரியாக நரம்பணுக்குள் அடுக்கப்படுகிறது. இத்தகைய எண்ணற்ற "உள்மாதிரிகளை" உருவாக்கும் எந்திரம் தான் நமது மூளை என்கிறார் டேன் ரைடர் எனும் ஆய்வாளர்.

இந்த உள்மாதிரிகளின் விசித்திரம் சம்மந்தமில்லாத, சில சமயம் குறைந்த பட்ச தகவல்களை வைத்து இவை ஒப்பேற்றும் குணமே. இவை நிலையான மாதிரிகள் அல்ல, இயங்காற்றல் மிக்கவை என்கிறார் ரைடர். அதாவது நம் மூளை ஒரு பொருளைப் பற்றின நகல் எடுத்து அடுத்த முறை அப்பொருளை எதிர்கொள்கையில் அப்படியே ஒப்பிப்பதில்லை. கருகரு தாடி மீசை கொண்ட உங்கள் திராவிட கழக நண்பர் ஒரு நாள் பழனிக்கு மொட்டை போட்டு சந்தனம் விபூதி அப்பியபடி வந்து நின்றால் " நீ யாரய்யா தெரியாது" என்று விலகாமல் "அட எழவே நீயா? " என்று சற்று வியப்புடன் அடையாளம் காண்பீர்கள். எப்படி? உங்கள் மூளை உங்கள் நண்பரின் தோற்றம் பற்றின குறைந்த பட்ச தகவல்கள் கொண்டு மிச்ச அடையாளங்களை யூகித்து சரியாய் சொல்கிறது. இந்த யூக அடிப்படையை ஒரு எளிய உதாரணம் கொண்டு மேலும் விளக்கலாம். உங்கள் வீட்டுக் குளியலறை ஷவரின் திருகு கைப்பிடியை ஒரு கோணத்தில் வலப்புறம் திருப்பினால் ஒரு குறிப்பிட்ட டிகிரி சூட்டில் நீர் சொரியும். இடது பக்கமும் அவ்வாறே ஒரு குறிப்பிட திருகலில் குளிர் நீர் ஒரு குறிப்பிட்ட டிகிரி குளிர்மையுடன் வரும். இப்போது ஒரு கற்பனை: உங்களுக்கு நரம்பியல் பாதிப்பால் நீரைத் தொட்டு வெப்பமோ குளிர்மையோ அறிய முடியாது. ஆனால் உங்களிடம் ஒரு மாதிரிப்படிவம் உள்ளது. உங்கள் ஷவர் அமைப்பின் ஒவ்வொரு ஆதாரக் கூறையும் பிரதிநித்துவப்படுத்தும்படி சற்று குழப்பமாய் அந்த மாதிரியின் மாறுபடும் மதிப்புகள் அமைந்திருக்கும். உங்களுக்கு கணக்குப் போட வரும் என்றால் எந்த கோணத்திலான திருகலுக்கு எந்த தட்பவெட்பத்தில் நீர் சொரிகிறது என்பதை கணித்து சுட்டுக் கொள்ளாமல் அல்லது உறைந்து போகாதபடி பாடியபடி வெதுவெதுப்பாய் குளிக்கலாம்.

மேற்சொன்ன தட்பவெட்ப கணக்குக் குளியல் போன்றே படுசிக்கலாகவே நரம்பணுக்கள் புலன் சமிக்ஞைகளை பரிசீலிக்கின்றன. ஆனாலும் அதன் பலன்கள் ஆபத்பாந்தவனாக, படுதமாஷாக, அபத்தமாக அமைகின்றன. உதாரணமாக சாலையைக் கடக்கும் போது எதிரே படுவேகத்தில் கார் வருகிறது; அது எந்த தூர வித்தியாசத்தில் எந்த அளவு விசையுடன் வருகிறது, ஹாரன் அடிக்கிறதா, ஓட்டுனருக்கு பிரேக் போட்டு உங்களை காப்பாற்றும் உத்தேசம் உள்ளதா போன்றவற்றை குறைந்தபட்ச தகவல்களைக் கொண்டு சரியாக யூகித்து அதற்கேற்றபடி வேகத்தை அதிகரித்து பத்திரமாய் சாலையைக் கடக்கிறோம். முன்னெப்போதும் பெரும் விசையுடன் எதிர்வரும் பொருளை சந்தித்திராதவர்களால் (உதாரணமாய், ஒரு வயது குழந்தை) மேற்சொன்ன சூழலை சமாளிக்க முடியாது. காரணம் அவர்கள் மூளைக்குள் அந்த சூழலுக்கான உள்மாதிரி இல்லை என்பதே. எதிர்காலத்துக்குள் சில நொடிகள் முன் தாவிக் குதிக்கும் நம் மூளை ஒரு மாந்திரிகக் கண்ணாடி.

சிறந்த நகைச்சுவைக்கு பொருத்தமின்மையும், அதன் காரணமான மெல்லிய அதிர்ச்சியும் ஆதாரமானவை. இந்த பொருத்தமில்லாத உணர்வும் அதிரிச்சியும் நம் புலன்சார் நரம்பணுவின் டெண்டுரைட் வால்கள் ஒரே நேரத்தில் அல்லது தொடர் வரிசையில் வரும் சமச்சீரற்ற தகவல்களை அர்த்தப்படுத்த திணறுவதால் ஏற்படுவது. உதாரணமாய் "திருமலை" படத்தில் விஜய்யுடன் பைக்கில் நேர்காணலுக்கு அவசரமாய் செல்லும் விவேக் போலீசாரால் மாற்றுப் பாதைகளில் திருப்பி அனுப்பப் பட்டு நாம் சற்றும் எதிர்பார்க்காதபடி திருப்பதிக்கே வந்து சேர்ந்திட ஒரு பக்தர் "கோவிந்தா கோவி...ந்தா" என்றபடி லட்டு தந்து ஆசீர்வதிக்கும் காட்சி. இரட்டை வசனங்களின் நகைச்சுவை வெற்றியும் இந்த கண நேர தகவல் குழப்பத்தினாலே. விவேக் "மைனர் குஞ்சை சுட்டுட்டேன்" எனும் போது "எந்த குஞ்சை" என்று நேரும் மில்லி நொடி குழப்பமே யோசிக்காமல் சிரிக்க வைக்கிறது. ரொம்ப யோசிக்க நேரம் கொடுத்தால் அது நல்ல நகைச்சுவை அல்ல. ஏனென்றால் நரம்பணுவின் டெண்ட்றைட் வால்கள் உடனடி சுதாரித்து விடும். இதனாலே நகைச்சுவைக்கு டைமிங் அவசியமாகிறது.

இதே காரணத்தினாலே குறுகின கால அவகாசத்தில் முடியக் கூடிய வடிவங்களான சிறுகதை, கவிதை போன்றவற்றுக்கு எதிர்பாராத திருப்பம் உத்தியாக உள்ளது. (பெரிய நாவலுக்கு திருப்பங்கள் அவசியமல்ல.)

தி.நகர் பேருந்து நிலையத்துக்கு எதிர்பக்கமுள்ள வரிசையான கடைகளில் ஒன்றின் பெயர்ப் பலகையில் பழைய இந்தியா டுடே பத்திரிகை விளம்பரம். அதில் நமது திராவிட இயக்கத் தலைவர்கள் ஜெயலலிதா, கருணாநிதி படங்கள். இருவரின் நெற்றியிலும் பெரிய சந்தனப் பட்டைகள். தலைவர்கள் ஆத்திகர்கள் ஆகிவிட்டதாய் ஏதாவது பரபரப்பு செய்தியோ என்று முதலில் பட்டது. நம்பிக்கை வராமல் நுட்பமாய் அந்த பலகையை கவனித்தேன். ஏதோ பண்டிகைக்கு சந்தனம் அடித்ததில் இரு தலைவர்கள் நெற்றியிலும் கச்சிதமாய் பூசியிருருக்கிறார்கள். ஆனாலும் அந்த ஆரம்ப நொடிகள் தந்த அபத்தத்தின் அதிர்ச்சியை விளக்க முடியாது. காரணம், ஒரு டெண்ட்ரைட்டுக்கு கருணாநிதி முகத்தின் காட்சி புலன் தகவல் செல்ல, அடுத்த டெண்ட்ரைட்டுக்கு கிடைப்பதோ பட்டை. இரண்டையும் பகிர்ந்து கொள்ள முடியாது அவை திணறினதே மேற்சொன்ன அரசியல் அபத்தம். (ஏனோ துண்டின் மஞ்சள் நிறம் நமக்கு சகஜமாகி விட்டது).

நமது மூளை தன்னிடம் உள்ள முன்மாதிரிகளின் பின்னணியில் பல்வேறு நரம்பியல் சமிக்ஞைகளைக் கொண்டு வலுவான ஆனால் எதிர்பாராத அனுபவங்களை நமக்குத் தருகின்றது. நாம் தினசரி சந்திக்கும் வாழ்வை கூர்ந்து கவனிக்கையில் எதிர்படும் புதுமை மற்றும் தவிர்க்க முடியாத வழமைக்கும் இதுவே காரணம். ஒரு பொருளோ நபரோ முழுக்க புதுசாகவோ (விளங்காது) அல்லது அச்சிட்டது போல் மாறுபாடற்றோ (நம்ப மாட்டோம் ) இருக்க முடியாது. "ஏய் வாடா" என்று மிரட்டலான தொனியில், கரகரப்பான குரலில் உங்கள் நண்பர் அழைப்பது பாசம் என்று உங்களுக்குள் மாதிரி உருவான பின், அதே நபர் "வாங்க" என்றால் அதன் பொருள் கோபம் என்று உங்களுக்குப் படும். ஓவியம், எழுத்து, சிற்பம் என அனைத்துக் கலைகளும் மாதிரிகளை செய்யும் நரம்பணுக்கள் போண்றவையே.

இலக்கியத்தில் புதிய மொழியை, கருத்துத் தளத்தை, படிம, குறியீடுகளை உருவாக்கும் முனைப்பு உள்ளது. ஒரு முன்னோடியை போலி செய்வதை ஏளனமாகவே பார்க்கிறோம். அனைத்துக் கலைகளிலும் புதுமைக்கு மவுசு ஜாஸ்தி. இந்த புதுமை கூட மந்திரவாதி தொப்பிக்குள்ளிருந்து முயல் தூக்குவது போல் ஏறத்தாழ வித்தைதான். உதாரணமாய் ஒரு சிறந்த கதையாளன் முன்னோடியின் கதையை (அதாவது மாதிரியை) புலப்படாத வண்ணம் திரும்ப எழுதும் வித்தை தெரிந்தவன் தான். ஒரு மாதிரியின் பள்ளங்களை சமூக மொழியின் கூறுகள் நிரப்ப, அது புது மாதிரியாகி மேலும் பல மாதிரிகளை உற்பத்தி செய்யும் எந்திரமாகிறது.

வன்முறை ஒரு ஆதி சமூகக் கூறு. பேவுல்பு, மெக்பத் போன்ற ஆங்கில செவ்விலக்கியங்கள் வன்முறையை தனிமனித அதிகார வெறியின் உந்துதலாய், தீமைக்கும் நன்மைக்குமான மனித மனதின் ஊசலாட்டமாய் விளக்குகின்றன. இரு கதைகளிலும் தனிமனித துரோகம் ஒரு முக்கிய தீமை. இன்று தனிமனித நோக்கம் மட்டுமே வன்முறை லட்சியமல்ல. அதன் வேர்கள் கண்காணாத, வரையிட முடியாத வெளிகளில் உறிஞ்சி விரைகின்றன. உதாரணம் தீவிரவாதம் மற்றும் சமகாலப் போர்கள். மும்பையிலும், இலங்கையிலும் குழந்தைகளும், அப்பாவிகளும் பலியானதற்கு அரசியல், பொருளாதார, சமூகவியல் காரணங்களே முக்கியமானவை. பல கோடி மக்களின் உள்ளங்கள் இந்த கூட்டுக் கொலைகளில் இதனால் இணைகின்றன. ஷேக்ஸ்பியரில் மெக்பத்தின் கத்தி அவரை வழி நடத்திட, "முன்கூறப்பட்ட கொலையின் வரலாறு" நாவலில் அதே கொலைக்கத்தி பல்வேறு பட்ட கைகள் வழி பயணமாகிறது. கொலைக்கு தனிமனிதன்றி சமூகமே காரணமாகிறது. கத்தியை கைமாற்றி விட்டதே மார்க்வெஸின் வெற்றி மற்றும் புதுமை. தஸ்தாவஸ்கியின் ரஸ்கோல்னிக்கோவும் ("குற்றமும் தண்டனையும்"), அரவிந்த் அடிகாவின் முன்னாவும் ("வெள்ளைப் புலி") ஒரே எந்திரம் தோற்றுவித்த இரு மாதிரிகள் தான். சமூகம் தரும் பல்வேறு தகவல்களை கெலிடோஸ்கோப்பு போல் சேர்த்து உலுக்கியதில் ரஸ்கோல்னிக்கோவுக்கு இருந்த லட்சியவாத எண்ணங்கள் முன்னாவுக்கு இல்லாமல் போனது. சமூகத்துக்காக ரஸ்கோல் பணயத்துக்கு கடன் தரும் பெண்ணைக் கொலை செய்ய, பொருளாதார உயர்வுக்காக, அதிகார வெற்றிக்காக மட்டுமே முன்னா தன் முதலாளியைக் கொல்லுகிறான். பின் நவீன வேளையில் அறத்தோடு நம் யுகத்தில் மனசாட்சியும் காலாவதி ஆகிட அதிகாரம் மட்டும் நிஜமாகிறது. அதனால் முன்னாவுக்கு குற்ற உணர்வுகள் இல்லை. ரஸ்கோலின் அதே மாதிரியில் தோன்றியும் அவனுக்கு பாவமன்னிப்பு பெற, புத்துயிர்க்க அவசியம் இல்லை. இதே தொனியில் ஒரு தமிழ்க்கவிதை:

" நீரடியில் கிடக்கிறது
கொலை வாள்

இன்று ரத்த ஆறுகள்
எதுவும் ஓடவில்லை
எனினும் ஆற்று நீரில் கரிக்கிறது ரத்த ருசி

இடையறாத
நதியின் கருணை
கழுவி முடிக்கட்டுமென்று
நீரடியில் கிடக்கிறது
கொலை வாள் "
(" நீராலானது ": மனுஷ்யபுத்திரன்)

ஆறாவது வரியின் "ரத்த ருசி" ஒவ்வொரு காங்கிரஸ் ஆதரவாளனின் நாவிலும் ருசிக்கும் இலங்கைத் தமிழ் அப்பாவியின் ரத்தம் தானே? இறுதியில் நாம் காண்பது இந்த கொலை வாள் யுகத்திலும் கலைஞனை உயிர்த்திட வைக்கும் கருணை மீதான நம்பிக்கை.

இதனிலிருந்து இயல்பாக இந்த கேள்வி தோன்ற வேண்டும். ஏன் ஆற்று நீரில் ஆர்.டி.எக்ஸ் மூட்டை என்று எழுதக் கூடாது? ஏன் மரம், கடல், சிறகு, ரயில் நிலையம், மழை போன்ற சில வார்த்தைகள் கவிதையில் திரும்பத் திரும்ப வருகின்றன?

"இதோடு
காகிதங்களை மூடுகிறேன்
பேனாவை ... கதவுகளை, இமைகளை
எல்லாவற்றையும் மூடி விடுகிறேன்"

இன்றைய முன்னணி எழுத்தாளர்கள் கணினியில் தட்டி, மின்னஞ்சலில் அனுப்பி, சில மணி நேரங்களில் இணையதளங்களில் பிரசுரிக்கும் சூழல் இருந்தும் "காகிதம்", "பேனா" போன்ற வார்த்தைகளின் அதிர்வுகளை முன்னவை தருவதில்லை. "மின்னஞ்சலை மூடுகிறேன் ... இமைகளை எல்லாவற்றையும் மூடி விடுகிறேன்" என்றால் அதே பொருளாழம் ஏற்படுவதில்லை. முந்தைய மாதிரியை சற்றே தகவமைத்து புதுமாதிரியை உருவாக்கி அதன் படி மட்டுமே புரிதல் நேர்கிறது. முன்மாதிரியை புதியதால் ஒரேயடியாய் இடம் மாற்றி அல்ல. "காகிதம்" மற்றொரு பொருள் கொண்டு புது மாதிரி ஆகி வாழுமே அல்லாமல் அழியாது.

வித்துவான் எறி நின்று அடித்தது, நீங்கள் விரல் சொடுக்கினது, மானுட தரிசனம், படைப்பாக்கங்களின் அர்த்தங்கள், அனைத்தும் நடப்பதற்கு சில கணங்கள் முன்பே மூளை நரம்பணுவினுள் மின்னியல் தெறிப்புகளில் மாதிரிகளால் ஒப்பிடப்பட்டு ஒத்திகையாகின்றன. அதன்படி ஏற்படுகின்றன\உருவாகின்றன. கொலைக் வாளின் பயணம் தொடர்கிறது.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates