தாமரை டிசம்பர் இதழில் வெளியான என் சிறுகதைமகிழ் கவனமாக பைக் கண்ணாடியில் தலை சீவிக் கொண்டான். பேராசிரியர் வீட்டு வாசலில் நாய் இருக்கும் அடையாளம் இல்லை. ஆனால் நிறைய பூந்தொட்டிகள் தாறுமாறாய் அடுக்கப்படிருந்தன. வாசல் பக்க தொட்டிகளில் ஜெவ்வந்தி மற்றும் வண்ணப்புள்ளி குரோட்டன்ஸ். இரண்டு பெரிய தொட்டிகளில் சூரிய காந்தி பூக்கள் மெல்ல தள்ளாடின. கறுத்த ஈர மண். முன்புற தொட்டிகள் இருந்த இடத்தில் கசிவின் தடம். பின்புறம் தொட்டிகளில் மிளகுச்செடி, சாம்பிலை குரோட்டன்ஸ் என பலவகைகள். ஆனால் அவை வாடி நின்றன. சில தொட்டிகள் இடுப்பு நொறுங்கி வேர்க்குவியல் சரிய சுவரில் சாய்ந்து நிதானித்தன. வாசல் கதவுக்கு மேலே ஒரு பூக்கொடி தொட்டி கம்பி பிணைப்பில் ஆடியது. அதில் மோதிடாது சுதாரிக்க வேண்டி இருந்தது. மகிழுக்கு ஆச்சரியம். பேராசிரியருக்கு என்றுமே தோட்டக்கலை, பூந்தொட்ட சமாச்சாரங்களில் ஆர்வம் இருந்ததில்லை. கடந்த முறை விச்சு வந்திருந்த போது லவ்பெர்ட்ஸ், கிளிகள், மைனாக்கள் என கூண்டுப் பறவைகளை வாசல் முகப்பில் தொங்க விட்டிருந்ததாக சொன்னான். மகிழுக்கு தெரிந்த வரையில் பேராசியருக்கு எந்த ஜீவராசியிலும் அனாவசியமாய் ஈடுபாடில்லை.அப்போது போல் இப்போதும் நம்ப முடியாதவற்றை அவன் பொருட்படுத்த இல்லை.
வாசலில் தொங்கின தேங்காய் அளவிலான வெங்கல மணி வெறும் அலங்காரத்துக்கு என்று பட்டாலும் அதன் நாவை தட்டி பார்த்தான். விரல் கூசியது. உலோகத்தின் முனகல் ஒலியின் தொடர்ச்சியாக பேராசிரியர் கதவு திறந்தார். “வா” என்ற படி நேராக சென்று வரவேற்பறை சோபாவில் அமர்ந்தார். பேராசிரியரின் சாலச்சிறந்த குணமாக அவன் கருதியது அவர் மக்கு பையன்களுக்கும் சமத்துகளுக்கும் வேறுபாடு காட்டியதில்லை என்பது. ஐந்து வருட படிப்பில் இருந்து பத்து வருடங்கள் கழித்தும் அவன் மறக்காத மற்றொரு விசயம் அவர் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் குலுக்கு சீட்டு போல் யாருக்கும் அமைவது. அவர் வினோதமான ஒரு சனநாயகத்தை கடைபிடித்தார். அதன் கணக்கு புரியாவிட்டாலும் அவரை நாடுவதே அவனுக்கு விருப்பமானதாக இருந்து வந்துள்ளது.
பேராசிரியர் முன்னிருந்த ஆஷ் டிரேயை அவன் வினோதமாய் பார்த்தான். அந்த பார்வையை அவர் விரும்ப இல்லை. இடது கையில் புத்தரது தாமரை போல் புத்தகம் ஏந்தியிருந்தார்: ஹாம்லெட். சின்ன எழுத்து, வழவழ தாள், கனமற்ற, கையடக்க பதிப்பு … எவ்ரிமேன் பதிப்பக சின்னம் படபடத்தது.
“உன் அம்மாவை காதலித்திருக்கிறாயா எப்போதாவது?”
ரொம்ப நேரம் யோசித்து என்ன யோசிக்கிறொம் என்பது கடைசியில் மகிழுக்கு புரியவில்லை. அவன் அசையவில்லை. பேராசிரியர் புன்னகைத்தார். நல்ல சகுனமாய் அதை கொண்டு மகிழ் வந்த விசயத்தை வெளியிட்டான்.
அந்த மங்கலான மஞ்சள் புத்தகங்கள் மற்றும் மரசாமான்களின் நிறச் சூழலாக இருக்கலாம்; பழுத்த வாசனை கிளர்த்தின நினைவுகளாக இருக்கலாம். அங்கு அவன் மிக சகஜமாக உணர்ந்தான். ஆனால் கைகளின் திடீர் பழுப்பு நிறம் தவிர. அங்குள்ள ஒளிச்சூழலின் விளைவு என்று நம்ப முயன்றான். பழுத்த தாளின் மென்மையை தோலில் உணரத் தொடங்கினான்.
”ஆங்கிலத்துறையில் ஓப்பனிங் இருக்கிறது தான். இரண்டு மாதமாக காலியாக தான் உள்ளது. சரியான ஆள் அமையவில்லை. தேர்வானவர்களும் குறைவான சம்பளம் என்றால் ஓடிப் போய் விடுகிறார்கள் “ புன்னகைத்தார் மீண்டும். அப்போது அவரது உதடு பக்கவாட்டு S எழுத்து போல் நெளிந்தது.
“ நீ அரியர்ஸ் வைத்திருந்தாய் அல்லவா”
“க்ளியர் செய்து விட்டேன்”
“உம்”
“ஐந்து வருடமாய் எந்த வேலையிலும் நிலைக்கவில்லை. சாதிரீதியாய் எல்லா இடத்திலும் நெருக்கடி தருகிறார்கள். உயர்பதவிகளில் எல்லாம் அவர்கள் இருக்கிறார்கள். அதுதான் சார் உங்க கிட்ட வந்தேன். இந்த கல்லூரியில் தான் எனக்கு பாதுகாப்பு கிடைக்கும்”
“எனக்கு சாதிகளில் நம்பிகை இல்லை”
“போன முறை நிரந்தர போஸ்டிங் வந்த போது லலிதாவுக்கு நீங்கள் தான் வாங்கிக் கொடுத்ததாக சொன்னாள்”
முழுப்பல்வரிசையை பளிச்சென்று காட்டினார், ஆனால் சிரிக்கவில்லை. ஒரு தினுசான பாவனை.
“சார் நீங்கள் தான் எப்படியாவது …”
முதுகை வளைத்து அவர் காலை பார்த்தபடி சொன்னான். அதற்கு மேல் வளையவில்லை.
மேஜையில் இருந்த ஹாம்லெட்டை நாடகீயமாய் விரல் ஊன்றி சுழல விட்டார். அதே தொடர்ச்சியில் “செய்யட்டுமா வேண்டாமா? To be or not to be” என்றார்.
“சார் நான் சிபாரிசுக்காக வரவில்லை; உங்கள் ஆதரவு … தேர்வுக் குழுவில் நீங்கள் தான் எக்ஸ்டெர்னல் என்றார்கள்”. மேலும் சற்று வளைந்தான்.
“பார்க்கலாம். உனக்காக பேசுகிறேன். ஆனால் பிரின்சிபால் பற்றி தான் தெரியுமே! He is very particular about qualification. கடுமையான கறாரான மனிதர். உனக்கு எம்.பில் வேறு கிடையாது. அப்புறம் மிஸிஸ் யசோதா கோபாலன் HOD, அவரிடம் பேசி விட்டாயா?”
யசோதாவும் பேராசிரியரும் பரம வைரிகள்.
“இல்லை சார், எனக்கு அவரிடம் போக வேண்டாம்.” வேண்டாமை அழுத்தினான். புன்னகைத்தார். இம்முறை மேலும், தெளிவு. அவனுக்கு மேலும் நம்பிக்கை சுரந்தது.
“சரி போய் வா, பார்க்கலாம். லலிதாவிடம் என்னுடைய புத்தகம் ஒன்று உள்ளது. நினைவுபடுத்து”
“சரி சார்”
“காப்பி கீப்பி சாப்புடுறியா…”
“இல்லை சார்”
அவர் தலை அசைத்து விட்டு உள்ளே எழுந்து சென்றார். அவன் தனியாக வெளியேறினான்.
அழைப்பு மணியை தட்ட தோன்றியது. வாசல் வராந்தாவின் வலது முனையில் இருந்து ஒரு கறுப்பு நாய் கழுத்து பட்டையுடன் மூச்சிரைக்க ஓடி வந்தது. ஒரு தொட்டியை கீழே தள்ளி உருட்டியது. அதே ஓட்டத்தில் இடது ஓர மாடிப்படியில் ஏறியது. இவனை பொருட்படுத்தவில்லை. மூச்சு திரும்பியது. தன்னைத்தானே முகர்ந்து பார்த்தான். ஒரு புத்தம் புது தாளின் வாசனை. பிறகு அதுவும் இல்லை என்று உணர்ந்தான். “என் வாசனை எங்கே?”
மாலை மொட்டை மாடியில் புறாக்காட்டம் திட்டுகளாய் சிதறிக் கிடந்தது. ஆவி கிளம்பியது. உலாத்திய படி மகிழ் ஒத்திகை பார்த்தான். நேர்முகத் தேர்வு ஒத்திகையில் இருந்து மிகக் குறைந்த அளவில் ஆனால் முக்கியமான வகையில் வேறுபட்டது.
“சரி மிஸ்டர் மகிழ்” கல்லூரி முதல்வர் கோப்புகளில் எதையோ தேடிய படி கேட்டார், “ஏன் இத்தனை கம்பனிகள் தாவி இருக்கிறீர்கள்? எங்கேயும் நாலு மாதத்திற்கு மேலாய் நிலைத்ததாக தெரியவில்லையே”. அவன் வழக்கமான தன் பதிலை ஆரம்பித்தான். அதை பிசிறின்றி ஒலி நாடா போல் சொல்ல பயின்றிருந்தான். பேராசிரியர் பக்கத்தில் இருந்த முதிய பெண் பக்கவாட்டில் சாய்ந்து தூங்கினார். ஆனால் மகிழ் பதிலை முடித்ததும் தலையாட்டினார். பேராசிரியர் கேள்விப் பொறுப்பை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அவரே கேட்டார். ”To be or not to be இதன் மிச்ச வரிகளை சொல்?” அவனது உள்ளுணர்வு சரியாகவே இருந்தது. ஹாம்லெட்டில் இருந்து தான் தயாரித்து வைத்திருந்த வரிகளை ஒப்பித்தான். முதல்வர் கண்களில் ஒளி தெறித்தது. ஆனால் அடுத்த கேள்வி அவனை தடம் புரட்டியது.
“ஷேக்ஸ்பியர் தனது சானெட்டுகளில் குறிப்பிடும் அந்த புரவலர் யார்?”
அவன் மேலும் சற்று பொறுத்து பார்த்தான். தவறி கேட்டு விட்டாரா அல்லது அடுத்த நபருக்கான கேள்வியா? பேராசிரியரின் பூனைக் கண்கள் அவனை முறைத்தன. அவரது இடது இமை விடாமல் துடித்தது. கண்ணாடியை துடைத்துக் கொண்டு அடுத்துக் கேட்டார். அவனது குளறுபடி பதில்களை அல்லது மௌனங்களை பொருட்படுத்தாது கேட்டபடியே இருந்தார். கண்ணாடி கழற்ற தெரிந்த அவரது பளபளக்கும் கண்களையே மகிழ் யோசித்தபடி இருந்தான். அனாதி காலத்துக்கு முற்பட்ட வேட்டை மிருக கண்கள். அக்கண்கள் அவன் வயிற்றுக்குள் உருண்டு துருவின,
“செமியாட்டிக்ஸின் தந்தை யார்?
“---”
“சரி மிக எளிதான ஒரு கேள்வி. சி.ஐ.சி கலைக்கல்லூரி மாணவன் என்ற முறையில் கட்டாயம் உனக்கு இதற்கு பதில் தெரிய வேண்டும்”
சுற்றுமுற்றும் அயர்ந்திருந்த முகங்கள் அசைந்து ஆமோதித்தன. முகத்தில் ரோமங்கள் கொண்ட ஒரு பெண்மணி வழமையான தாழ்வுணர்வு தோன்ற புன்னகைத்தார். இடுப்பு மடிப்பில் மூன்று மருக்கள். அவரை எப்போது முதலில் பார்த்தான் என்பது நினைவில்லை.
“புத்திஜீவிகளின் குழுவிடம் ஒரு ஒட்டகம் சென்றால் திரும்பி வரும்போது அது குதிரை ஆகி விடும். இதன் பொருள் என்ன?”
“உண்மைக்கும் பொய்க்கும் ஆன நுட்பமான இடைவெளியைப் பற்றின …”
குறுக்கிட்டார்: “No no தத்துவத்துக்கு எல்லாம் செல்லாதே …”
“அதாவது குதிரையை நாம் ஒட்டகமாக பார்த்தோமானால் ..” அதற்கு மேல் விக்கித்தான். ஓடி விட்டால் என்ன?
“ரொம்ப ஸிம்பிள் பா, language is arbitrary … அவ்வளவு தான்”
முகத்தில் சற்று கருணை தெரியும் போது எல்லாம் கையில் நெல்லிக்காய் வைத்திருப்பது போல் உருட்டினார். தொடர்ந்து கேள்விகள் உருள தேர்வுக் குழுவினர் ஒவ்வொருவராய் விழித்துக் கொண்டனர். பலரது விழிகளை சுற்றிலும் சுருக்கங்கள். பச்சாதாபம், வெறுமை, உறுதியற்ற வெறுப்பு. ஒருவர் தைரியமாக விழிகளை மீண்டும் மூடினார். பேராசிரியரை தவிர யாரும் அவன் கண்களை சந்திக்க முற்படவில்லை. விழித்தவர் பார்வைகள் வாசலை நோக்கி நிலைத்தன. பேராசிரியர் நிறுத்திக் கொண்டதும் குறிப்புப் அட்டையில் இருந்து முதல்வர் நிமிர்ந்தார். மகிழ் அனைவருக்கும் நன்றி சொல்லி தன் விண்ணப்பத்தை பரிசீலிக்கும் படி கழுத்தை வளைத்து வேண்டினான். பரவலான ஆமோதிப்பு புன்னகை மற்றும் உற்சாகமான ஒத்திசைவு தலையாட்டல். மகிழுக்கு முதல் முறையாக மனிதர்கள் பால் நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவர் எழுந்து கதவு கூட திறந்து விட்டார்.
நேர்முகத் தேர்வு முடித்து வந்தவரிடம் மகிழ் தேனீர்க்கடையில் உரையாடினான். நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பற்றி விசாரித்ததில் யாரிடம் விலாவரியாய் கேட்கப்படவில்லை என்று அறிந்தான். பெரும்பாலும் அப்பா, அம்மா, கல்விப் பின்ன்ணி போன்ற கேள்விகளே. வந்தவர்களில் ஒருவர் மட்டும் பெண் பால். சற்று குள்ளமாய் கூரிய மூக்கு குறுகிய இடையுடன் தெரிந்தாள். அவளை நோக்கும் அனைவரின் பார்வையிலும் ஒரு தாலாட்டு தெரிந்தது. இந்த சந்திப்பில் மகிழுக்கு நிறைய நண்பர்கள் வாய்த்தார்கள். “வேலை உங்களுக்கே கிடைக்கட்டும்” என்று அவனை வாழ்த்தினார்கள். அவனுக்கு ராஜ்குமாரை அதிகம் பிடித்திருந்தது. பிற்பாடு பலமுறை சந்தித்துக் கொண்டார்கள். இருவருக்கும் ஒரே எண்ண அலைகள். குறிப்பாய் வேலை என்பது வீண் சுமை என்று நம்பினார்கள். “அந்த பாப்பாவுக்கு தான் கண்டிப்பா கொடுப்பாங்க” என்றான் ரா.குவிடம், உதட்டில் நுரை படிய கண்ணாடிக் கோப்பையை ஆட்டியபடி.
“அவருக்கு கிறித்துவர்கள் என்றால் பிடிக்காது”
மகிழ் இதைச் சொன்னதும் ரா.குவின் கண்கள் பளிச்சிட்டன. அவன் கிறித்துவன்.
“அதோட சாருக்கு பெண்கள் மீதான பலவீனத்தையும் கணக்கிடும் போது … அந்த சோன்பப்டிக்கு தான் வாய்ப்புண்ணு தோணுது”
ரா.கு புன்னகைத்தான். உரையாடல் அப்பெண்ணில் முடியும்போது அவர்கள் வழக்கமாய் ஆசுவாசித்தனர். அது ஒரு பிரியமான முற்றுப் புள்ளியாக எப்போதும் அமைந்தது.
மகிழ் அடுத்து பங்கேற்ற நேர்முகங்களில் எளிய அறிமுகக் கேள்விகள் கேட்கப்பட்டு சுறுசுறுப்பாக சம்பள பேரத்துக்கு நகர்ந்தார்கள். முக்கியமான கேள்வி: “இதுதான் நாங்க வழக்கமா தரது, ஓ.கேயா?”
இரண்டு இடங்கள் ஓகேயாகி, ஒவ்வொரு இடத்திலும் ரெண்டு மூன்று மாதங்களுக்கு மேல் அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை. மேலாண்மைக்கு தன்னை பிடிக்கவில்லை என்று மோப்பம் கிடைத்ததும் காரணம் சொல்லாது கிளம்பினான். “உனக்கு ஏற்ற வேலைதான் என்ன?” என்று உறவினர்கள், நண்பர்கள், பரிச்சயக்காரர்கள், கடன் தந்தவர்கள், புதிய அறிமுகங்கள் கேட்டார்கள். எளிய பதில்கள் தர பிரயாசைப்பட்டான். பதில்கள் கண்டுபிடிப்பதற்கு மற்றொரு வேலை முயலலாம் என்று அப்போது தான் முடிவெடுத்தான்.
ஒரு பிரபலமான ஊடக குழுமத்தினர் நடத்தும் எப்.எம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் காலியிடங்கள் உள்ளதாய் தெரிய வந்தது. குழுமத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் பேராசிரியருக்கு நெருக்கமானவர்கள். ஒரு தொலைபேசி அழைப்பு போதும். வேலை நிச்சயம். பேராசிரியரை மீண்டும் அணுகினான். அப்போது தான் அது நடந்தது. அதற்கு பின் அவன் இதுவரையில் சொன்னது போல் யோசிக்கவில்லை.
தொலைபேசியில் பேராசிரியர் குரலில் கோபம் ஆறியிருக்கவில்லை. ‘அன்னிக்கு எல்லாக் கேள்விகளுக்கும் முன்கூட்டியே பதில் சொல்லித் தரல்ல? ஆனா நீ நேர்முகத்தில் சொதப்பி என் மானத்த வாங்கீட்ட”. மகிழ் மறுத்துரைக்க வில்லை. உண்மைகள் மீது சுவாரஸ்யம் இழந்திருந்தான். வீட்டுக்கு வரச்சொன்னார். “பார்க்கலாம்” என்று பட்டென்று வைத்தார். சனிக்கிழமை செல்வதாய் முடிவு.
இம்முறை அவன் துணைக்கு ரா.குவை அழைத்தான். அன்று நடந்த நேர்முகத்தில் சி.ஐ.சி கலைக்கல்லூரியில் அவனுக்கு வேலை கிடைத்ததாய் அவன் சொன்னான். மகிழ் அதற்கு மேல் உரையாடலை வளர்க்கவில்லை. ஆனால் ரா.கு ஆங்கிலத்தில் தொடர்ந்தான்: “என் பெயரால் உன் பேராசிரியர் குழம்பியிருக்க வேண்டும். என் அப்பா அந்த பிரபல கன்னட நடிகரின் பெரிய விசிறி. அப்படி அவர் இட்ட பெயரால் நான் முதன்முறையாக பயனுற்றிருக்கிறேன். இதுவரை இந்த பெயரை எப்படி வெறுத்திருக்கிறேன் தெரியுமா”. புன்னகையுடன் சிகரெட் புகையை பிசிறு பிசிறாய் வெளியிட்டான்.
சனிக்கிழமை மாலை. பேராசிரியர் வீட்டு முற்றத்தில் பல வீனோதமான தாவரத் தொட்டிகள் புதிதாக நின்றன. ஏறத்தாழ வாசலை மறித்தன. குறுக்கு நெடுக்காக எறும்புகளின் சாரிகள் வேறு. இறந்த சிறு உடல் உறுப்புகளை கலவரமின்றி சுமந்து சென்றன. வாசலில் கிடந்த நாய் பற்களை காட்டி உறுமினதால் மேற்கொண்டு வர ரா.கு மறுத்தான். நாய் மகிழை பொருட்படுத்தவில்லை. அதன் கவனம் எறும்புகள் மீது இருந்தது. வால் காற்றுக்கு தன்னிச்சையாக விசிறியது. அதில் எறும்புகள் சில பறந்தன. வெண்கல மணியின் நாவைக் காணவில்லை.
“சார்”
வரவேற்பறையில் சிறுசிறு மாற்றங்கள். குறிப்பாய் இடது சுவர் மீது ஒரு நவீன ஓவியம் பெரிதாய். சிவப்பு பின்னணி. ஒரு பெரிய கண் மட்டும் கொண்ட பெண் முகம். முகக் கோட்டுக்கு வெளியே செம்பரப்பு அலையாடியது. அவன் பார்க்க உயிர்ப்பின் சலனம்.
ஓவியத்தின் நேர் எதிரே உள்ளறையின் திரை திறந்து இருந்தது. அங்கு மேலும் சன்னமாக வெளிச்சம். எட்டிப் பார்த்தான். சோபாவில் பேராசிரியர் சாய்ந்து கிடந்தார். வெள்ளை சட்டை வெள்ளை பேண்ட். எதிரே டீபாயில் ஒரு கண்ணாடிக் கிண்ணம். அதில் நிறமற்ற கொழ்கொழ திரவத்தில் உலோகக் கண்கள். ஒளியின் ஊடாடல் அடிக்கடி அவனை நோக்கி வெட்டி அடித்தது.
ஒரு விகாரமான சாவை பார்த்தது போன்ற அதிர்ச்சி மற்றும் ஒவ்வாமையில் மகிழ் திரும்பி ஓடினான். பாதி நடை பாதி தாவல். அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் அவனை உத்தேசமற்று திரும்பிப் பார்த்தன. வாசலை நெருங்கிய போது நாயை மிதித்திருப்பான் – பேராசிரியரின் குரல் ஒரு பனிமூட்டம் போல், மழையின் சிறகுகள் போல் பின் எழுந்தது; அவனை அணைத்தது. நடுக்கமுற்ற, சொற்களை அசை அசையாய் உச்சரிக்கும் அதே குரல். அக்குரல் அவனை நிதானமடைய வைத்தது. நரம்புகளின் இறுக்கம் தளர்ந்தது. மிக சகஜமாக கட்டுப்படுத்தி செலுத்தியது. அரூபமாய் அவனை தொடர்ந்து பேசிக் கொண்டு வந்தார். பேச்சு என்பதை விட பித்து மனதின் சொல் ஒழுங்கு. அவனுள் புகுந்து ஒரு வாசனையை கிளர்த்தியது. வேறெப்போதும் புலப்பட்டிராதபடி அது மிகக் கூர்மையாக இருந்தது. அது தன் சொந்த வீடு என்பதாக உணர்ந்தான்.
பேராசிரியர் உடனான இறுதி சந்திப்பாக அது அமைந்தது. அவனுக்கு வேலை கிடைத்தது: பல வருடங்கள் அவன் நிலைத்த வேலை.