Tuesday, 31 August 2010

எழுத்தாளன் என்றால்?




இது ஒரு கேள்வி மட்டும்தான். பதில் சொல்கிற உத்தேசத்தில் எழுதவில்லை. சுருக்கமாக:
எழுத்தாளன் என்பதை வேலை, பொறுப்பு, அடையாளம் என்று நினைக்கிறோம். இங்கே ஒரு சிக்கல் வருகிறது. எழுதுவது என்பது ஒரு தகவல் தொடர்பு முறை. பேசுவது, சங்கேதம், சைகை போல. ஆனால் எழுதும் போது கடத்தப்படும் சேதி கட்டாயம் எதிர்தரப்பை போய் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேஜையில் ஒரு மெழுகை கொளுத்தி வைத்து இருட்டிடம் பேசுவது போல் ஒரு எழுத்தாளன் எழுதிக் கொண்டு போகிறான்.
ஐயாயிரம் பேரை உத்தேசித்து தமிழ் எழுத்தாளன் ஒரு புத்தகம் எழுதினால் அதை பத்தாயிரமும் படிக்கலாம், வெறும் ஐந்து பேர் மட்டும் சீந்தலாம். என் அக்கறை இந்த எண் சம்மந்தப்பட்டது அல்ல. எத்தனை பேர் படித்தாலும் அவனது சேதி போய் சேர்ந்ததற்கு எந்த நிச்சயமும் இல்லை. உதாரணமாக வாழ்ந்த காலத்திலே நீட்சேவை இலக்கிய தத்துவ வாசகர் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. கழுதையை கட்டி அழுது பைத்திய விளிம்பில் நிரந்தரமாய் கால் தடுக்கிய பின்னர் அவர் ஒரு யூத எதிரியாக, இனவாத ஆதரவாளராக அவரது சகோதரி எலிசபெத்தால் தவறாக திரித்து காண்பிக்கப்பட்டார். அவரது புத்தகங்கள் ஹிட்லரின் இலக்கிய கண்காட்சியில் இருந்தன. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் அவர் ஒரு கலகவாத பின்நவீனத்துவ சிந்தனையாளராக பூக்கோவால் கொண்டாடப்பட்டார். அதற்குப் பின்னரும் தத்துவ வாத்தியார்கள் தோன்றி இல்லை அவர் ஒரு மரபான சிந்தனையாளர் தான் என்கிறார்கள். நீட்சே என்ன உத்தேசித்தார்? தன்னுடைய அதிமனிதனாக அவர் ஹிட்லரையோ மோடியையோ ஏற்றுக் கொண்டிருப்பாரா? பின்நவீனத்துவத்தை ஏற்றிருப்பாரா? இஸ்லாமிய கலாச்சாரத்தை, குறிப்பாய் அஸாஸின்கள் எனப்படும் அதன் தொழில்முறை கொலைஞர்களை போற்றிய நீட்சே இன்று லஷ்கர் போன்று அமைப்புவாதிகளை எப்படி நேர்கொண்டிருப்பார்? நீட்சே என்ன உத்தேசித்தார் என்பது இன்னமும் குழப்பமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த ஆய்வாள நண்பர் ஒருவர் தமிழின் திணைக் கோட்பாட்டின் படி நீட்சே ஒரு பாலை நிலக் கவிஞர் என்று தனி கோட்பாடு வைத்திருக்கிறார். நீட்சேவின் குரல் வாசகனின் செவிப்பறையை அடைய இன்னும் எத்தனை ஒளிஆண்டுகள் கடந்து வர வேண்டும்?
ஒரு இசைக்கலைஞன், நடிகன், பேச்சாளன், ஆசிரியன், போதகன், கூத்துப்பாடகன் என அனைவரும் ஒரு கேட்பாளர்/பார்வையாளர் துணை கொண்டு தான் இயங்குகிறார்கள். தான் பாடுவதை யாரும் கேட்காமல் போய் விடுவார் என்ற சஞ்சலமே ஒரு பாடகனுக்கு இருக்காது; கூடவே தவறாக கேட்பார்கள் என்ற குழப்பமும். ஆனால் மூட்டமான அடையாளம் கொண்டிருக்கும் எழுதுகிற ஒருவன் தன்னை “எழுத்தாளன் என்றால் நியாயமானதா? எழுத்தாளன் நிச்சயம் எழுதித் தெரிவிப்பவன் அல்ல.
ஆனால் எழுத்தாளன் நிச்சயம் தன்னை தூலப்படுத்துவதற்கு ஒரு வழி உள்ளது. அது ஆகக் கூடிய மட்டும் திசைதவறாமல் சொல்ல வந்ததை மட்டும் சுருக்கமாக சொல்லி விடுவது. ஆனால் சுருக்கிக் கூறுவது நிச்சயம் இலக்கியம் அல்ல என்கிறார் ரொலாண்ட் பார்த். அது பள்ளி கல்லூரி வாத்தியார்கள் செய்யும் அக்கிரமம் என்கிறார் அவர். வடிகட்டப்பட்டு கடும் மௌனத்துடன் வரும் ஒவ்வொரு சொற்றொடரும் எதிர்சாரி மீது கடும் அதிகாரத்தை பிரயோகிக்கிறது. உதாரணமாக மாணவர்கள் சுயமாக யோசிப்பதை, கிளைபிரிந்து விவாதிப்பதை ஒரு லட்சிய ஆசிரியன் அனுமதிக்க மாட்டான். அவனது சிந்தனைப் போக்கில் இருந்து இம்மியும் பிசகாமல் மாணவன் பின் தொடர வேண்டும். அதற்காக அவன் சொல்ல வந்ததை அதனது பிற அர்த்த சாத்தியங்கள், குறியீட்டு தூண்டுதல்களில் இருந்து சுத்திகரிக்கிறான். முன் பின் சிந்திக்க வாய்ப்பற்ற எண்ணங்களாக சுருக்குகிறான். தான் உத்தேசித்தது போய் சேர்ந்து விட்டதா என்று அடிக்கடி மாணவனின் உடல் மொழியை சோதித்து உறுதி செய்கிறான். ஒரு பழுத்த ஆசிரியனின் மூளை இவ்வாறு ஒரு துப்பாக்கி முனையாகவே செயல்படுகிறது. இதையே பார்த் இலக்கிய விரோதம் என்கிறார். நீட்சேவுக்கு தான் பேசுவதன் அர்த்த நிச்சயத்தன்மை குறித்த அவநம்பிக்கை எப்போதும் இருந்திருக்கிறது. அவர் ஒரு மொழி ஆய்வாளரும் கூட. நூற்றாண்டுகளின் உருவக, குறியீடுகள் படிந்து செறிவு கொண்டது மொழி. அதை வைத்து ஒன்றை புதுசாக கூறுவது கிட்டத்தட்ட வெற்றி கொள்ள முடியாத ஒரு சவால். அதனால் நீட்சே தனது அவதானிப்புகளை “இருக்கலாம், தோன்றுகிறது என்றே முன்வைக்கிறார் (அவரது வசைகளின் தீர்க்கத்தன்மை வேறு). ஒவ்வொரு முறை சுருக்கி தெளிவாக கருத்துக்களை சொல்ல முயலும் போதும், ஒரு பொருளில், எழுத்தாளன் உண்மைக்கு விரோதமாக நடக்கிறான், வாசகனுக்கு துரோகம் செய்கிறான். சுருக்கமாக அவன் பொய் சொல்கிறான்.

ஆனால் மாறாக மொழியின் அர்த்தச் சுமையில் இருந்து விடுபட அவன் மறைமுகமாய், பூடகமாய் தான் எழுத முயல வேண்டும். அப்போது வாசகன் மாயமாகி விடுகிறான். இன்று ஒரு தீவிர இலக்கியவாதி தன் எழுத்தை லகுவாக்கினால் வெகுஜன வாசகர்களுக்காக சமரசம் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது ரோலாண்ட் பார்த் ஏற்கனவே விரல் சுட்டியது தான் என்றாலும் இதில் எத்தனை சதவிதம் நியாயம் உள்ளது? எழுத்தாளன் என்ன தான் செய்ய முடியும்? 


இது சற்று தத்துவார்த்தமான கேள்வி. புலன்களால் உணரப்படும் உலகம் நிஜம் அல்ல என்று நூற்றாண்டுகளாய் அனைத்து தத்துவஞானிகளும் யோசித்திருக்கிறார்கள். இப்படியான உலகை ஏற்பதா நிராகரிப்பதா என்பதே ஒவ்வொரு தலைமுறையிலும் தத்துவஞானிகள் இடையே வேறுபாடான நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. அனைவரும் இருட்டில் தடவியபடிதான் பேசி இருக்கிறார்கள். ஆனால் இலக்கிய உலகம் வேறுமாதிரியாக இயங்குகிறது. இலக்கிய விமர்சன வரலாற்றில், எழுத்தாளன் உருவாக்கும் கற்பனை உலகம் ஒருவிதத்தில் நிஜமானது, முக்கியமானது என்று மீளமீள அழுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் தத்துவத்தில் இருந்து இலக்கிய எழுத்துக்கு நகரும் நீட்சேவிடமும் இந்த தன்னம்பிக்கையின் ஆவேசம் கூடுகிறது. அவர் ஆரம்பத்தில் எழுதின The Birth of Tragedy என்ற நூல் ஆய்வாளக் கூட்டத்தினால் நிராகரிக்கப்பட்டது. நீட்சேவின் மொழி தான் அதற்கு காரணம். ஆய்வு அல்லது மேற்கூறிய “ஆசிரிய தட்டை மொழியை தவிர்த்து ஒரு வித ஆவேச, உருவக மொழியை பயன்படுத்தி இருந்தார். நீட்சேவின் மொழியில் இருந்த சத்தியத்தை தரிசித்து விட்டதான மிகைநம்பிக்கை மற்றும் தீப்பற்றிய சொற்கள் தத்துவ ஆய்வாளனுக்கு உரியது அல்ல. இதனால் அவரது வாழ்நாள் முழுக்க கல்வியாளர்களால் தனிமைப்படுத்தப்பட்டார். உலகம் பெரிய பொய் என்று நீட்சே நம்பினார். ஆனால் அந்த மரபான தத்துவார்த்த அவநம்பிக்கை அவரது எழுத்தை தொந்தரவு செய்யவில்லை. மிகுந்த சரளத்துடன் தனது நம்பிக்கைகளை தயக்கமின்றி எழுத்து மூலம் சொன்னார். ஆனால் சுருக்கி பத்தியாக்காமால் நிஜத்தின் அருகில் செல்ல பிரயத்தனப்பட்டார். இதற்கு உருவகம், மணிமொழி, பகடி என மொழியின் அனைத்து நுட்பங்களையும் உத்திகளையும் பயன்படுத்தினார். அதாவது, நீட்சே தத்துவஞானியாக மட்டுமே இருந்தால் இப்படி உண்மையை காட்ட முயன்றிருக்க மாட்டார். அவர் எழுத்தாளராக மாறினார். காரணம் எழுத்தாளனுக்கு இப்படி தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட தன்னம்பிக்கை என்றுமே இருந்துள்ளது. அவன் ஒரேபடியாக சமூகத்தால் நம்பப்பட்டும் அஞ்சப்பட்டும் புறக்கணிப்பட்டும் வருகிறான். எப்படி இருந்தும் அவன் தனது அடையாளம், சொல்ல வந்த சேதி, கைக்கொண்ட மொழி அனைத்தின் மீதும் உறுதியான நம்பிக்கை கொண்டு இயங்குகிறான். அவை உண்மையா? நாம் இன்னும் நெடுங்காலம் தொடர்ந்து தள்ளிப் போட வேண்டிய கேள்வி அது!
Read More

Thursday, 26 August 2010

நவீன ஹைக்கூ



வெஸ் கெர்பல்
Yves Gerbal

போர்
ஆனாலும்
இச்சிறுபறவைகள்


The war
Yet
These little birds

நொபுக்கொ கட்சுரா
Nobuko Katsura

அந்தியில் பாடும் ஒரு சிள்வண்டு
ஊசியிலை மரத்தில் இருந்து விழுகிறது,
அப்போதும் சொட்டியபடி

A cicada, singing at dusk
Falls from a pine tree,
Still dripping

வெள்ளை அணிவது –
அதை தவிர்க்க வேறு வழியே இல்லை
இந்நாட்களில்

Wearing white –
Absolutely no way out of it
These days

ஆலன் கின்ஸ்பெர்க்
Allen Ginsberg

அகண்டு எல்லையற்ற பாழைக் காண
ஜன்னலுக்கு வெளியே பார்
நீல ஆகாயத்துக்குள்

To see Void vast infinite
Look out the window
Into the blue sky

ஜான் பிராண்டி
John Brandi

மழைக்குப் பின்
வெடிகுண்டு பள்ளங்கள்
நட்சத்திரங்களால் நிரம்பி

After the rain
Bomb craters filled
With stars
Read More

Tuesday, 24 August 2010

எம்.பிக்கள் சம்பளமும் வாடகையும்: தேசம் நேரிடும் வேடிக்கை முரண்





எம்.பிக்களுக்கு ஒரு தனியார் நிறுவன இயக்குநரை விட அதிக சம்பளத்தை வழங்க அரசு முன்வந்துள்ளது. ஐம்பதினாயிரம் அறிவிக்கப்பட்டாலும் அரசுடனான ஒரு ஒப்பந்தத்தின் படி உயர்த்தப்படும் படிகளும் சலுகைகளையும் சேர்த்து கணக்கிடுகையில் அவர்களால் மாதம் 1.6 லட்சம் வரை பெற முடியும். அமெரிக்காவில் இத்தகைய ஒரு ஊதிய உயர்வு அடுத்த அரசின் காலத்தில் தான் நிலுவையில் வர முடியும்.
ஆனால் நமது எம்.பிக்கள் தங்கள் பதவிக் கால ஆரம்பத்தில் இருந்து கணக்கிட்டு நிலுவைத் தொகை உள்ளிட்டு இப்போதிலிருந்தே பெறப் போகிறார்கள். இதனால் அரசுக்கு 260 கோடிக்கு மேல் செலவாகப் போகிறது. கார்ப்பரேட் கலாச்சாரத்தில் ஊறியவர்களுக்கு நியாயமாகவும், கம்யூனிஸ்டுகளுக்கு இது பகல்திருட்டாகவும் படுகிறது. அரசுக்கு மக்களின் அதிருப்தியை மேலும் தூண்டுவதற்கு அச்சம். எம்.பிக்களுக்கு 16,000 சம்பளம் வழங்கினால் அவர்களால் தேர்தல் மற்றும் அலுவலக செலவுக்கு ஊழல் செய்யவும் தொழிலதிபர்களிடம் கறுப்புப் பணம் பெறுவதுமே ஒரே வழியாக இருக்கும் என்று இந்த ஊழிய உயர்வு ஆதரவாளர்கள் நம்மை மிரட்டுகிறார்கள். ஆனால் கடந்த தேர்தலில் நின்று வெற்றிபெற்ற பெரும்பாலான எம்.பிக்கள் பெரும் பணக்காரர்கள் என்கிறது ஒரு அறிக்கை. மேலும் பணக்கார அரசியல்வாதிகளுக்கு சாமர்த்தியமாகவும் வெற்றிகரமாகவும் ஊழல் செய்து தப்பிக்க தெரிகிறது. நேர்மை கண்ணியம் போன்ற விழுமியங்களில் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்ட இந்த காலத்தில் ஊதிய உயர்வுக்கான எந்த காரணமும் புறக்கணிக்கப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மத்தியவர்க்கத்தினரில் பலரும் கூட தங்கள் மேலாளர் ஐம்பதினாயிரம் பெறுவது மிகை என்று நம்புகிறார்கள், எரிச்சல் கொள்கிறார்கள். இந்த நிலையில் உழைப்பு, அந்தஸ்து மற்றும் பொறுப்பின் விகிதாச்சார அடிப்படையில் இச்சம்பள உயர்வை கீழ்மத்திய மற்றும் கீழ்தட்டு ஜனங்கள் ஜீரணித்துக் கொள்வது எந்த அளவுக்கு சாத்தியம்? அடுத்து பெட்ரோல் விலையும் அதனுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரப் போகிற நிலையில் இந்த சர்ச்சை எப்படியான விளைவுகளை ஏற்படுத்தும்?
ஒருவிதத்தில் இது ஒரு மேம்போக்கான பிரச்சனை. எம்.பிக்களில் பலரும் ஏற்கனவே ஒரு சுற்று பெருத்தவர்கள் என்பது போக அவர்களுக்கு அளிக்கப்படும் வீட்டு வாடகை சலுகைகளுடன் ஒப்பிடுகையில் 16,000 சம்பளம் ஒரு முரண் வேடிக்கையாகவே இதுவரையில் இருந்துள்ளது புரியும். தில்லியில் ஒரு எம்.பிக்கு இலவசமாக வழங்கப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் மாத வாடகை மதிப்பு மட்டுமே 2.5 லட்சம். பங்களாவென்றால் 75 லட்சம். வேறுபல உலக நாடுகளில் நிலைமை வேறு. உதாரணமாக இங்கிலாந்தில் எம்.பிக்களுக்கு இலவச வீட்டு வாடகை இல்லை. அவர்களின் ஊதியம் அரசு உயர் அதிகாரிகளுடையதை விட குறைவே. ஒருமுறை மக்களின் அதிருப்தியை தவிர்ப்பதற்காக எம்.பிக்கள் தங்களின் ஊதியத்தை நேரடியாக உயர்த்தாமல் சலுகைகளாக மறைமுகமாக உயர்த்தினர். சற்று காலத்தில் இந்த சேதி மீடியாவில் வெளியான போது பெரும் சர்ச்சை எழுந்தது; எம்.பிக்கள் ராஜினாமா செய்ய நேர்ந்தது. சமீபமாக அரசு செலவை குறைக்க மகாராணியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ரத்து செய்ய இங்கிலாந்து அரசு முன்வந்தது. பதினாறு நாடுகளின் ராணியாக (பெயரளவில்) கருதப்படுகிற இரண்டாம் எலிசபெத் இதை மனவிரிவுடன் ஏற்றுக் கொண்டார். இது அந்நாட்டின் ஜனநாயக கலாச்சாரத்தில் ஒரு முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது. நாமும் அதே படகில் தான் இருக்கிறோம். ஆனால் முரணாக ஜெயலலிதாவுக்கு உரிய பாதுகாப்பு போதவில்லை என்ற பிரச்சனை எழுந்த போது தங்கள் அம்மாவை கருணாநிதி கொலை செய்ய திட்டமிடுவதாக சட்டசபையில் அ.தி.மு.கவினர் அமளி செய்தார்கள்.
இந்தியாவுக்கு மொத்தமாக ஒரு ராணி இருந்ததில்லை; அதிகாரத்தை என்றும் இழக்காத குறுநில மன்னர்கள் மட்டுமே. ஒரு பல்லியைப் போல அவர்களின் வாலை மட்டுமே ஜனநாயகம் துண்டித்துள்ளது. எம்.பிக்கள் குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்க அறிவுறுத்தப்பட்டாலும், நாற்பதினாயிரம் தனிப்பட்ட கடனை தவறாது திரும்ப செலுத்தும் பிரதமரைக் கொண்டிருந்தாலும் குறுநில மன்னர்களை திருப்திப்படுத்த முடியாது. மக்களை விட மேலாக இருப்பதும், அவர்களை விட்டு விலகி இருப்பதுமே இவர்களின் அடையாளம். ஊதியம் என்பது இவர்களுக்கு பணம் மட்டுமே அல்ல என்பதால் ஒன்றரை லட்சமும் போதாது தான். இந்தியாவின் பொருளாதாரமும், வாழ்வுத்தரமும் மேலும் மேலும் வளர எம்.பிக்களின்/அரசியல் தலைவர்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் வலுக்கும். ஒரே ஆதாரக் கேள்விக்கு மட்டும் அவர்கள் பதிலளிப்பது அவசியம். அவர்கள் நின்று கேட்பது மேல் தட்டிலா அல்லது மக்கள் பக்கம் இருந்தா? அவர்களின் இந்தியா எந்த இந்தியா?
Read More

Saturday, 21 August 2010

மனுஷ்யபுத்திரன்: மனதிற்குள் சொற்களின் ஜெபமாலை



நேற்று ஒரு நண்பருடன் மனுஷ்யபுத்திரனை பார்ப்பதற்காக உயிர்மை சென்றிருந்தேன். நாள் பூரா நாங்கள் நகரத்தில் அலைந்திருந்தோம். உத்தேசமின்றி என்பதால் களைப்பில்லை. தொடர்ச்சியான தூறல்களால் நாள் பூரா பகல் பொழுது சாய்ந்திருந்தது. அடிக்கடி வழியை வேறு தொலைத்ததால் எதிர்பார்த்ததை விட தாமதமாகிக் கொண்டிருந்தது. அத்தனை தாமதமாக ஆறு மணிக்கு மேல் சென்று அவரை சந்திப்பது தொந்தரவாக இருக்குமோ என்று சஞ்சலப்பட்டேன். போன் செய்து இருப்பை உறுதி செய்ய் வேண்டாம் என்று நண்பர் வற்புறுத்தினார். “நமது இன்றைய நாள் இதுவரை அற்புதமாக இருந்தது. மனுஷ்யபுத்திரனை பார்த்துவிட்டால் நிறைவாகி விடும்” என்றார்.
உயிர்மை அலுவலகம் சேர்ந்ததும் மனுஷ் தன் குழந்தையுடன் வீட்டு முன்னறையில் இருப்பது பார்த்ததும் மேலும் தயங்கினேன். அலுவலக அறையில் அவர் எங்களை சந்தித்தார். கார்டூன் கலைஞர் பாபுஜி நோன்புக் கஞ்சியுடன் வந்து சேர்ந்து கொண்டார். அவரை ஒரு கார்டூன் கலைஞர் என்று நம்பவே சிரமமாக இருந்தது. ஒல்லியான தேகத்தில் உருளைக்கண்களுக்கு மேல் தடித்த கண்ணாடி, ஜுப்பா, கலைந்து ஒட்டின சன்னமான தாடி என்றேல்லாம் அவர் இல்லை. “உங்களைப் பார்க்க ஒரு கார்ப்பரேட் கம்பனி மானேஜர் போலிருக்கிறது” என்ற போது “மிகச்சரியாக சொன்னீர்கள்” என்றார் மனுஷ். பாபுஜி தான் நிஜமாகவே கார்ப்பரேட் மேலாளர் தான் என்றார். பாபுஜி மிகப் பணிவானவராக இருந்தார். இடுப்புக்கு கீழ் வெகுநேரம் நெளிந்து விட்டு நான் எழுந்து ”இதோ வந்து விடுகிறேன்” என்று கிளம்பிய போது “என்னால் உங்கள் உரையாடல் தடைபட வேண்டாம். நான் இதோ போய் விடுகிறேன்” என்றார் பாபுஜி. “இல்லை இல்லை” என்று மேலும் நெளிந்து விட்டு “மூச்சா போக வேண்டும்” என்று விளக்கிய பிறகு தான் ஒத்துக் கொண்டார். எதிரில் பேசுபவரின் ஒவ்வொரு வாக்கிய முடிவையும் திரும்பச் சொல்லும் பழக்கம் பாபுஜிக்கு இருந்தது. அது சுவாரஸ்யமாக இருந்தது. உம் கொட்டுவது போல தலையாட்டுவது போல இதுவும் ஒரு சைகை. பாபுஜியிடம் பேசும் போது நாம் என்ன சொல்ல வந்தோம் என்பதை மறப்பது சாத்தியமே இல்லை.

மனுஷ்  ஒத்திசைவான மனநிலையில் இருக்கும் போது மிக நகைச்சுவையாக பேசக் கூடியவர். அதற்கு உடற் களைப்பு ஒரு தடையாகவே இருப்பதில்லை. ஒரு முறை கடுமையான ஜுரத்தில் படுத்திருந்த போது மூன்று மணிநேரங்களுக்கு மேல் என்னிடம் சிரிக்க சிரிக்க பேசினார். பேச்சினிடையே மிகக் கூர்மையான அவதானிப்புகளும் வருத்தம் தோய்ந்த அறிக்கை சொடுக்கல்களும் வரும். நேற்றைய உரையாடலும் அப்படி நீண்ட சிறப்பான ஒன்றாக இருந்தது. நேரத்தை கணிப்பது அவ்வளவு சிரமமாக இருந்தது. பத்து மணிக்கும் எங்களுக்கு அவரை விட்டு பிரிய தயக்கமாக இருந்தது. எங்கள் சம்பாஷணை மிக இயல்பான முறையில் ஒரு பறவை இறகை உதிர்ப்பது போல் பாதியில் முடிந்தது, பார்வையை துண்டித்து முனைமுறிந்த வார்த்தைகளுடன் கிளம்பினோம்.

மனுஷ் அந்த மூன்றரை மணிநேரங்களில் பேசியவற்றை ஒரு சின்ன தொகுப்பாக வெளியிடலாம்: எழுத்து வாசிப்பு கலாச்சாரம் என்ற மையத்தை ஒட்டி அத்தனை விரிவான பன்முக கருத்துக்கள். எஸ்.ரா ஏன் அபுனைவு எழுதுகிறார், சொம்மொழி மாநாட்டைக் கொண்டு கலைஞர் செய்த ”சாதனை” என்ன, பின்னட்டை குறிப்புகளில் இருந்து இலக்கிய, அரசியல் களங்கள் வரை பயன்படுத்தப்படும் உள்ளீடற்ற சொல்லாடல்கள், விமர்சனங்களும், பத்திரிகை செய்ல்பாடுகளும் கேலிக்கூத்தாக மாறி விட்ட சூழல், இந்திய சூழலில் எழுத்தாளன் என்பவனுக்கு உருவாகும் நீதிபூர்வ பொறுப்புக்கும் சாரு-ஜெமோ பூசல் பற்றி வாசகர் புகார் சொல்வதற்குமான தொடர்பு என்று பேசப்பட்ட விசயங்களின் பட்டியல் சற்று நீண்டது. கவிதை உருவாக்கம் அல்லது மனநிலை பற்றி அவர் சொன்னதை மட்டும் இங்கு பதிவு செய்வது என் உத்தேசம்.

  • ஒரு முக்கியமான கவிதையை எழுத அகத்தூண்டலுடன் அறிவும் தேவை என்று அவர் நினைக்கிறார். உதாரணமாக வன்முறை பற்றி கவிதை எழுத வன்முறையின் வரலாற்று, உளவியல, பண்பாட்டு, சமூகவியல், மித்துகள் சார்ந்த ஒரு சிந்தனை ஓட்டம் எழுத்தாளனுக்குள் தொடர்ந்து இருப்பது நல்லது. மனது இப்படி  தொடர்ந்து தீவிரமாக இயக்கப்படும் போது ஒரு எதிர்பாரா தருணத்தில் கவிதை கைவரும். இந்த “தருணம்” நிகழ என்ன செய்ய வேண்டும்?
  • இதற்கு தொடர்ந்து சொற்களுடன், சொற்றொடர்களுடன் “இருக்க” வேண்டும் என்கிறார் மனுஷ். ஏதாவது ஒரு சொல் சட்டென்று படிமமாகி மேலெழுந்து வரலாம். கவிதை  ஆகலாம். இதை ஒரு அபோத நிலை என்று நான் புரிந்து கொள்கிறேன்.ஆனால் இது தி.மு.க மேடை போல் வார்த்தை சிலம்பாட்டம் அல்ல. ஒவ்வொரு கவிஞனும் அவனுக்கான முறையில் மொழியுடன் இப்படி அணுக்கமாக இருக்க முடியும். அல்லது இது மிக இயல்பாக எதேச்சையாக நடக்கலாம். ஆனால் மனுஷ் ஒரு கவிதையை ஒரு “தொழிலாக” கருத வேண்டும் என்று நம்புகிறார் என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும். பகுதிநேர, ஓய்வுக்கால கவிஞர்கள் மீது மனுஷுக்கு நம்பிக்கை இல்லை. ஒரு உடற்பயிற்சியாளன் உண்பதற்காக ஒவ்வொரு முட்டையை உடைப்பது போல் கவிஞன் வார்த்தைகளின் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
  • எழுதுவது சில சமயம் உரத்து சிந்திப்பதாக இருக்கலாம். ஒரு உரையாடலைப் போல நாம் படித்ததை சிந்தித்தை எழுதிப் பார்க்கும் போது மேலும் தெளிவாக புரிய, யோசிக்காததை கண்டுபிடிக்க முடியும். எண்ணங்களை தீட்டி துலக்கி அடுக்குவதற்கான ஒரு புத்தாற்றலை எழுத்து இயக்கம் தருகிறது. பனிமூட்டமான மனதுக்குள் நெருப்பாய் துலங்குகிறது.
  • “பார்த்து கேட்ட உறுதி செய்யப்பட்ட உண்மையைத்தான் காட்ட வேண்டும் என்று அவசியமில்லை. சொல்லப் போனால் கற்பனை கலக்கப்பட்ட உண்மைதான் மேலும் நிஜமானது” என்று ஒரு ஐரோப்பிய திரைக்கதையாளரின் கருத்தை நண்பர் அன்று காலை உரையாடலின் போது எடுத்தாண்டார். மனுஷ் இதை வேறொரு கோணத்தில் சொன்னார். அதாவது எஸ்.ரா ஒரு குரங்காட்டியை பற்றி எழுதுகிறார் என்றால் அதில் தகவல்களை விட எஸ்.ரா மொழி மூலம் காட்டும் உண்மை தான் முக்கியம். தகவல்களை உருமாற்றத் தெரிந்தவன் மட்டும் தான் எழுத்தாளன்.
  • தீய நண்பர்களைப் போல தான் தொலைக்க விரும்புகிற சில விரும்பாத புத்தகங்கள் என்ன பண்ணியும் தன்னிடம் திரும்பத் திரும்ப வருவதாக மனுஷ் குறிப்பிட்ட போது ஒரு உவமையை  பயன்படுத்தினார்: ”தூக்கிக் கொண்டு போய் விட்டலும் திரும்ப வருகிற நாய்க்குட்டிகள்”. உரையாடலின் போது மிக சாதாரணமாக உதிர்ந்த இந்த உவமை “நீராலானது” தொகுப்பில் ஒரு கவிதையில் பயன்படுத்தப்பட்டு, மிகச் சிறந்த ஒரு நவீன உவமை என்று சுஜாதாவால் முன்னுரையில் பாராட்டப்பட்டது. நமக்கு மிகுந்த மனவெழுச்சியை தந்த ஒரு உவமை அது. அது மிக இயல்பாக அவரது தினசரி சொல்லாடலின் பகுதியாக இருக்கிறது. மொழி ரசவாதத்தின் இந்த பரிமாணம் எனக்கு வியப்பூட்டியது. 

போகும் வழியில் நானும் நண்பரும் ஒரு சின்னக் கடையில் தோசை சாப்பிட்ட்டோம். பிளாஸ்டிக் முக்காலிகளில் சாலையில் அமர்ந்திருந்த போது காலியான என் தட்டில் வானத்து தூறலில் இருந்து சில துளிகள் விழுந்தன. அன்றைய நாள் அப்படியாக என் தட்டில் விழுந்த ஒன்று தான் எனப் பட்டது. நண்பர் என்னை விட ஆறுவயது இளையவர். விடிகாலை குருவியைப் போன்று ஓய்வற்ற ஆளுமை. அன்று முழுக்க அவரது இளமை எனக்குள் உரசி ஒட்டியபடியே இருந்திருக்க வேண்டும். உடல் மற்றும் மனதில் நான் ஒரு புதுமையை உணர்ந்தேன். அவரை விட்டு பிரிந்த பிறகே அன்றைய நாளின் முதல் களைப்பை அறிந்தேன். நேற்றைய நாளை பின்னோட்டும் போது இப்படி சொல்லத் தோன்றுகிறது:
ஒரு நண்பனுடன் உத்தேசமின்றி ஊர் சுற்றுவது தான் அசலான பயணம். அதன் முடிவில், தெய்வத்திடம் உள்ள நம் கடன் அட்டையில் ஒரு நாள் கூடுகிறது.
Read More

Tuesday, 17 August 2010

மிருகயா: மிருகநிலையின் விமோசனம்






குரசேவாவின் "Seven Samurai"யைத் தழுவி லோகிததாஸ் திரைக்கதை எழுதி, .வி. சசி இயக்கி, மம்முட்டி நடித்து உருவான, ‘மிருகயா ஒரு பழமையான தொண்ணூறுகளின் மலையாள கலை-ஜனரஞ்சகப் படம். பொற்கால மலையாளப் படங்களை போல மிருகயாவும் ஒரு கிராமத்தின் பல்வேறு பட்ட மனிதர்களை, அவர்களின் பலவீனங்கள், அசட்டுத்தனங்கள், துயரங்கள் ஆகியவற்றை எதார்த்தமாக கதைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. மனிதக்கொல்லியான புலி ஒன்றின் வேட்டையை சித்தரிக்கும் இந்த சாகசப் படம் முரண்பாடாக லோகிததாஸின் பழமையான பாணியில் மிக மெதுவாக ஒரு காபிக் கடையில் "ஆமைவடை" வக்கீலொருவர் பலகாரம் புசித்துக் கடன் சொல்லும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது. அக்காலத்தைய முக்கியப் படங்களைப் போல மிருகயாவும் மந்தமான ஒளிப்பதிவையும், கைநடுக்க காட்சித்தொகுப்பையும், செவிட்டுத்தனமான பின்னணி இசையையும், நாடகீயமான கதைகூறலையும் கொண்டுள்ளது. இத்தனையும் மீறி ஒரு மேதையின் மொழியாக்கப்பட்ட வரிகளைப் போல் அதன் ஆன்மா புத்தொளியுடன் துலங்கி நிற்கிறது.





"மிருகயாவின்" திரைக்கதை குரசேவா படத்தின் வரைபடத்தின் புள்ளிகளை மிக நெருக்கமாகத் தொட்டே அமைக்கப்பட்டுள்ளது. ‘செவன் சாமுரா’யில் ஒரு கிராமம் சந்திக்கும் பிரச்சினை கொள்ளைக்காரர்கள் என்றால் இங்கு ஒரு நரவேட்டையாடும் புலி. (உண்மையில் அது ஒரு சிறுத்தை. ஒரு காட்சியில் மரத்தில் ஏறி இருக்கிறது. ஆனால் படம் முழுக்கப் புலி என்றே குறிப்பிடப்படுகிறது). புலி ஆண்டுக்கு சில தடவை வந்து கால்நடைகளையும் மனிதர்களையும் தனக்குப் பசியாற்றிக் கொள்கிறது. ஜப்பானியக் கிராமத்தினர் சாமுராயை நாடுவது போல மலையாளிகள் ஒரு வேட்டையாளியை நாடிப் போகிறார்கள். ஆண்-பெண் உறவும் அதன் பௌதீக நிலையின் தூய்மையிலேயே இங்கும் சொல்லப்படுகிறது. குரசேவாவின் கிராமத்தினரைப் போல் இம்மனிதர்களும் வேட்டையாளி தங்கள் பெண்களைக் கவர்ந்து விடுவான் என்று அஞ்சுகிறார்கள். ஜப்பானிய படத்தில் மன்சோ என்பவர் சாமுராய்களுக்குப் பயந்து தனது பருவ வயது மகளான ஷினோவின் நீள்கூந்தலை வலுக்கட்டாயமாகக் கத்தரித்து ஆண்வேடம் அணிவிக்கிறார். ஷினோவின் அச்சில் லோகிததாஸ் பாக்யலஷ்மி என்ற பாத்திரத்தை உருவாக்குகிறார். ஆனால் லோகி ஈ அடிக்காமல் தனது ரத்தம் தோய்த்து இப்பாத்திரத்தை சித்தரிக்கிறார். பாக்யம் ஒரு கொல்லனின் மகள். சிறுவயதில் அவளது அம்மாவைக் கண்முன்னாலே புலி அடித்து இழுத்துப் போகிறது. அவளது ஒரே எதிரி அப்புலிதான். எத்தனை வலிமையான எதிரி? அதனால் பாக்யத்தின் லட்சிய ஆணும் புலியை வீழ்த்தும் வண்ணம் வலிமையும் துணிச்சலும் கொண்டவனாக இருக்க வேண்டும். பாக்யத்திற்கு அன்பு, கருணை போன்ற மென்மதிப்பீடுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவளை கண்ணியமாக காதலிக்கும் தாமஸ்குட்டியை ஒரு கட்டத்தில் இரக்கமின்றி நிராகரிக்கிறாள். அவனது மரணத்துக்கு மறைமுக காரணமாகிறாள். குற்றவுணர்வை புறமொதுக்கி விட்டு புலியைக் கொல்லும் லட்சியத்தை தொடர்கிறாள். புலியைக் கொல்ல அழைத்து வரப்படுகிற வாறுண்ணியை ஆராதிக்கிறாள். பிற பெண்களைப் போலன்றி பாக்யத்தின் ஆளுமையில் காமத்தின் பின் விளைவான அச்சமும் கூச்சமும் இல்லை. அவள் புலியைக் கொல்லும் யாருக்கும் பகிரங்கரமாகத் தன் உடலை அர்ப்பணிக்கத் தயாராக இருக்கிறாள். ஆனால் ஆச்சரியமாகப் பெண்பித்தனான வாறுண்ணிக்கு அவள் மீது காமம் ஏற்படுவது இல்லை. அவன் அவளை ஒரு குழந்தையாகக் கருதுகிறான். படத்தில் லோகி-.வி. யின் மிக முக்கியமான பங்களிப்பு பாக்யம்-வாறுண்ணிக்கு இடையிலான உறவின் சங்கோஜமின்மையும் தூய்மையும். "செவன் சாமுராயில்" சமூக விதிகளை மீறி ஷினோ சாமுராய் ஒருவனை காதலிக்கிறாள். இப்படத்தில் ஹிந்துவாகிய பாக்யம் ஆரம்பத்தில் தாமஸ்குட்டியைக் காதலிக்கிறாள். இந்த தாமஸ்குட்டியின் முன்னோடிகள் நம்பூதிரிகள் என்றொரு குறிப்பு பின்னால் வருகிறது. பிற்பாடு அவள் வாறுண்ணி எனும் மற்றொரு கிறித்துவனைக் காதலிக்கிறாள். தொழில்பூர்வமான சமூக அடையாளங்களுக்குள் மனிதர்கள் ஒத்திசைவாக இயங்க வேண்டும் என்ற ஜப்பானியப் பண்பாட்டு கட்டுப்பாடுகளை மறுக்கும்படியாக ஐம்பதுகளில் குரசேவா இப்படத்தில் காதல் இழையை "புரட்சிகரமாக" புனைந்ததாக விமர்சகர் ரோஜர் எபர்ட் சொல்கிறார். "செவன் சாமுராய்" பதினாறாம் நூற்றாண்டில் ஜப்பானில் மறக்குடிகள் மற்றும் விவசாயிகளுக்குள் நிலவிய சமூக முரண்பாட்டையும் பரஸ்பர அவநம்பிக்கை மற்றும் வெறுப்பையும் சொல்கிறது. .வி. சசியின் படத்திலும் கேரள பண்பாட்டிலுள்ள கிண்டலும் கேலியும் கலந்து மென்மைப்பட்ட கிறித்துவ-இந்து முரண்பாடு வெளிப்பட்டாலும் மிருகயாவின் மையப்பொருள் இதுவல்ல. ஜப்பானியப் பண்பாட்டின் மைய மதிப்பீடுகளான கடமையில் இருந்து பிறழாமை, மெஸோகிசம் எனும் சுயதுன்ப இச்சை ஆகியவற்றை ஒரு பொருளில் ஐ.வி. சசி குரசேவாவிடம் இருந்து கடன் பெற்று வாறுண்ணியின் பாத்திரத்தில் முலாம் பூசுகிறார். உதாரணமாக, ஊர்க்காரர்கள் ஒரு கட்டத்தில் வாறுண்ணியின் சேட்டைகள் தாங்காமல் அவனைக் கல்லடித்து விரட்டுகின்றனர். பட்டினியிட்டு வாட்டுகின்றனர். ஆனால் வாறுண்ணி வலியையும் பசியையும் தாங்கி ஊரிலே தங்கி விடுகிறான். எதற்கு? புலியைக் கொல்வதாய் பாக்யத்திற்கு அவன் அளித்த வாக்கை நிறைவேற்ற. பிறகு அவன் மாட்டு வண்டியோட்டும் தொழிலைச் செய்யும் சாமான்ய மனிதனாக மாறி விட்ட பின்னரும் தனது முந்தைய "பாத்திரமான" புலிவேட்டைக்காரக் கடமையை மறக்காமல் கடைசிக் காட்சியில் உயிரைத் துச்சமெனக் கருதி புலியுடன் பொருதுகிறான். இப்படி இரு படங்களுக்குமான ஒற்றுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் என்றாலும், கடன் வாங்கிக் கட்டிய வீட்டின் அஸ்திவாரம் அசலானது என்பது தான் இங்கு மிக முக்கியமான சேதி. சாகசப் படம், "செவன் சாமுராயின்" தழுவல் ஆகிய மேல் அடுக்குகளைக் கடந்து மிருகயாவில் ஒரு தனித்துவமான அவதானிப்பு உள்ளது. அது தீவிர உணர்வுகளின், தீவிர வாழ்நிலையின் வழிதான் ஆன்ம விமோசனம் அமையும் என்று சொல்கிறது



துயரமும், வன்மமும் மனிதனை மேம்படுத்த அவசியம் என்று நீட்சே நம்பினார். துயரத்தை தள்ளிப் போடும் வலிகொல்லும் மருந்து என்று கிறித்துவத்தைக் கடுமையாகக் கண்டித்து அதை மறுதலித்தார். லோகி இப்படத்தில் இருவிதமான கிறித்துவப் பாதைகளை வனைகிறார். ஒன்று மரபான மந்தை கலாச்சார மக்களுடையது. அவர்கள் மதிப்பீடுகளையும், நியதிகளையும், கட்டுப்பாடுகளையும் மட்டுமே ஆராதிக்கிறார்கள். அவர்களின் தேவன் சடங்கு சம்பிரதாயங்களுக்குள் உறைந்தவர். சாமான்ய மனிதனின் வாழ்வு நோக்கமான உய்விற்கு ஏற்ப உட்கார்ந்து தேய்ந்த நாற்காலியைப் போல மழுங்கிப் போனவர்; அப்பத்தைப் போல மிருதுவானவர். மற்றொரு கிறித்துவப் பாதை நேர்மறை எதிர்மறை முரண் எதிர்வுகளைக் கடந்து தீவிர மன-எழுச்சியின் அவசியத்தை அழுத்துவது. தடுக்கி விழுவதை விட சிகரத்தில் இருந்து விழுவதே ஆன்மாவை உயர்த்தும் என்று நம்பும் "நீட்சேயிய" கிறித்துவம் அது. திருடனின், ஸ்த்ரிலோலனின், கொலைகாரனின், மூர்க்கனின் தேவனாக கிறிஸ்து இங்கு புரியப்படுகிறார். வேட்டைக்காரன் வாறுண்ணியைப் பொதுமக்கள் கல்லடித்து தாக்குவதைப் பாதிரியார் ரெவரெண்டு பங்கோடன் (திலகன்) மேரிமக்திலீனா கதையுடன் ஒப்பிடும் வசனமொன்று படத்தில் உள்ளது. செவன் சாமுராயின் உலகுக்கு லோகி அளித்துள்ள இந்தப் பரிமாணம் சுவாரஸ்யமானது. லோகி இந்த நீட்சேயிய பார்வையை வலுப்படுத்த ஒரு மிருகப்படிமத்தைப் படத்தில் அவர் பயன்படுத்துகிறார்.
படத்தில் வாறுண்ணி தோன்றும் முதல் காட்சியே படத்தின் தேடலை ஒருவிதத்தில் குறிப்புணர்த்துகிறது. ஏரியொன்றைக் கடந்து எப்போதும் புலி கிராமத்துக்கு வரும். அதேபடியாக வாறுண்ணியும் ஏரியை நீந்திக் கடந்து தான் வருகிறான். அவன் அப்புலியின் மற்றொரு பிம்பம். தூய மிருக நிலையில் இருப்பவன். இந்தக் குறிப்பு போதாதென்று லோகி மற்றொரு தந்திரம் செய்கிறார். வாறுண்ணி ஒரு அல்சேஷன் நாய் வைத்திருக்கிறான். அது எங்கும் அவனைத் தொடரும். அதற்கு கெய்சர் என்று ஜெர்மானிய பெயர் வேறு. வேட்டைக்கு முன் சென்று இரையை முகர்ந்து அறிவிக்கும் நாயைப் போன்று கெய்சர் இங்கு வாறுண்ணிக்கு முன்னதாக நீந்தி வருகிறது. ஏரியில் குளித்துக் கொண்டிருக்கும் பெண்கள் முதலில் கெய்சரைத் தான் கண்ணுறுகிறார்கள். "என்னது, நாய் ஒன்று வருகிறதே" என்று கூவுகிறார்கள். லோகியின் சினிமா மொழியில் வாறுண்ணிதான் கெய்சர். கெய்சர் தான் வாறுண்ணி. இருவரும் சேர்ந்து அக்கிராமத்தின் பெண்கள், கால்நடை, பொருள் ஆகியவற்றுடன் சேர்த்து, புலியையும் "வேட்டையாட" வருகிறார்கள். திரைக்கதையில் வாறுண்ணி தன் மிருகநிலையில் இருந்து விடுபட்டு சாமான்யனாகப் பண்படுவதன் உச்சத்தை சொல்லும் காட்சியில் நாயை அவன் சுட்டுக் கொல்வதாக லோகி அமைத்திருப்பார். அதாவது தனது மிருகநிலையின் தீவிரத்தால் மேம்பட்ட ஆன்மநிலையை அடையும் வாறுண்ணி வேறுவழியின்றி "மட்டுப்படுகிறான்"; பண்படுகிறான். சாமான்யனாகிறான். இது கடைசிக் காட்சியில் அவன் புலியைக் கொன்றபின் நிகழ்கிறது. முன்னர் செய்த ஒரு கொலைக்காகக் கைது செய்யப்பட்டு அவனை ஜீப்பில் அழைத்துச் செல்கிறபோது பாக்யம் கண்ணீர் சொரிந்தபடி "ஜெயிலில் இருந்து மீளும் வரை உனக்காகக் காத்திருப்பேன்" என்று அவன் கரம் பற்ற நீட்டுகிறாள். ஆனால் வாறுண்ணியால் அவள் கையை பற்ற முடிவதில்லை. அதற்குள் ஜீப் நகர்ந்து விடுகிறது. இந்தக் காட்சி ஒரு உருவகமாக வாறுண்ணியின் இறுதி மாற்றத்தைச் சுட்டுகிறது. ஒரு அர்த்தத்தில் புலியுடன் சேர்ந்து அவனும் இறந்து போகிறான். பாக்யமுடன் இணைவதற்கான ஒரே புள்ளி அந்தப் புலி அல்லவா.
அதனாலே அவர்கள் உறவின் கதை ஒரு "கை நழுவல்" சித்திரத்துடன் படம் முடிகிறது.



.வி. சசியின் படத்தின் திரைக்கதை மிக பலவீனமானது. கிராமத்தினருக்குப் புலி மீதான அச்சம் வசனம் மற்றும் மக்கள் ஓடுவது போன்ற தட்டையான காட்சிகள் மூலம்தான் நிறுவப்படுகிறது. குறிப்பாக, புலி பார்வையாளனை அச்சுறுத்துவது இல்லை. உங்கள் வீட்டுக்குழந்தை பொம்மைப் புலியுடன் விளையாடுவதை வேடிக்கை பார்க்கும் அதிகபட்ச சுவாரசியம்தான் பார்வையாளனுக்கு இக்காட்சிகள் ஏற்படுத்தும். அடுத்து, புலியை வேட்டையாட வாறுண்ணியாக மம்முட்டி தோன்றியதுமே இறுதியில் புலி கொல்லப்படும் என்று வெகுஜனப் பார்வையாளனுக்குப் புரிந்து போகிறது. புலி கொல்வதற்கும் புலி கொல்லப்படுவதற்கும் இடையில் பட இடங்களில் படம் திசை அறியாமல் திணறி நிற்கிறது. உச்சகட்டத்தை நோக்கி பிற்பகுதி படம் மிக செயற்கையாக நகர்த்திச் செல்லப்பட்டு மிகை உணர்ச்சிகளுடன் முடிகிறது. அதனால், "மிருகயா" திரைக்கதை சிறப்புக்காகப் பார்க்கப்பட வேண்டிய படம் அல்ல. வாறுண்ணி தோன்றும் சில நிமிடங்களிலேயே தமிழ்ப் பார்வையாளனுக்கு பாலாவின் "பிதாமகன்" நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆற்றல்மிக்க கதாபாத்திரப் படம் இது.
"மிருகயாவில்" மையப் பாத்திரங்கள் வாறுண்ணியும் பாக்யமும்தான். வாறுண்ணி-நாய்-புலி மூவருமே ஒரே கோட்டில் இயங்கி ஒரே கதாபாத்திர முக்கியத்துவத்தைப் பெறுகிறார்கள். பாக்யம் புலியின் எதிரி என்ற அர்த்தத்தில் மற்றொரு தூய மிருகநிலை பாத்திரமாகிறாள். வாறுண்ணி புலியைப் போல் எல்லாவற்றையும் தனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறான். ஊராரின் கால்நடைகளைக் கவர்ந்து விற்று கள் குடிக்கிறான். கிராமத்தினரின் மனைவிகளையும் மகள்களையும் மோகிக்கிறான். அவர்களின் காமவிருப்பத்தை ஒரு மிருகத்தைப் போல் உள்ளூணர்ந்து அறிந்து அவர்களை முகர்கிறான். கிராமத்தில் நிலவும் சமூக ஒழுங்கை இப்படி அவன் கலைக்கிறான். ஆனால் பாக்யம் இப்படிப் புறவயமாக மதிப்பீடுகளை நொறுக்குவதில்லை. அவள் பெண்களுக்கே உரித்ததாக அறியப்படும் மதிப்பீடுகளை, மென்மையைத் துறக்கிறாள். இவ்விதம் பிற பெண் பாத்திரங்களில் இருந்து மாறுபடுகிறாள், சமூகத்தில் இருந்து முரண்படுகிறாள். ஆனால் அவள் ஒரு வரம்பிற்குள் நின்று கொள்கிறாள். வாறுண்ணி தான் தனது தீமைகளின் உச்சமாக ஒரு கொலை செய்கிறான். இந்தக் கொலை அவனுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஏற்படுத்துகிறது. பாதிரியாரிடம் சென்று மனக்குமுறலை வெளியிடுகிறான். ரஸ்கொல்நிக்கோ போல் அறத்தின் முன் மண்டியிடுகிறான். குற்றமன்னிப்பு கேட்கிறான். ரெவரெண்டு பனங்கோடன் தனது வாழ்வில் இப்படி ஒரு மனப்பூர்வமான தீவிரமான களங்கமற்ற குற்ற ஒப்புதலைக் கேட்டதில்லை என்கிறார். போலீசிடன் சரணடையச் செல்லும் வாறுண்ணியை அவர் தடுக்கிறார். தனது பாவத்துக்கான விமோசனத்தை அவனுக்குள்ளே தேடிக் கொள்ளச் சொல்கிறார். தாமஸ்குட்டியின் குடும்பத்துக்கு நன்மை செய்வதன் மூலம் வாறுண்ணி தன் விமோசனத்தை நாடுகிறான். சமூக விதிப்படி தன்னை அடையாளப்படுத்தும் ஒரு மனிதன் ஒரு பாவம் செய்தால் அதே விதிப்படி தன்னை நியாயப்படுத்த முயல்வான். பெரும்பாலானவர்கள் அதே சமூக சட்டகத்தை சூட்சுமமாக நெளித்து, மத-ஒழுக்க நீதிவான்களின் புருவத்துக்குக் கீழேயே தப்பித்துச் செல்வார்கள். சமூக ஒழுக்கமும், தண்டனை முறைகளும் இப்படி ஒரு புதிர் விளையாட்டாக இருப்பதாலே இங்கு யாரும் குற்றத்திலிருந்து கற்றுக் கொண்டு மேம்படுவதில்லை. புதிர்பாதையின் வாசல்களைத் திறக்கத் தெரியாதவர்கள் மட்டுமே பாவிகளும் குற்றவாளிகளும் ஆகிறார்கள். இவ்விளையாட்டு தொடர்ந்து நடுத்தர மனிதர்களின் உலகில் நடக்கிறது. வாறுண்ணியைப் போன்று வெகு கீழாகவோ, ரெவரண்டு பனங்கோடனைப் போல வெகு மேலாகவோ இருப்பவர்கள்தாம் சமூகத்தின் இந்தப் புதிர்பாதையில் மாட்டிக் கொள்ளாதவர்கள். மிருகயா இந்தக் கீழ்-மேல் தட்டுகளில் உலவும் "அதிமனிதர்களைப்" பற்றிய படம். மிருக நிலை கதாபாத்திரங்களை உற்று கவனிப்பவர்க்கு மட்டுமே படத்தின் சொர்க்கவாசல் திறந்து கொள்கிறது.

Read More

Monday, 16 August 2010

சூரஜ் ரந்திவ்: போட்டி மனப்பான்மையும் தோல்வி மனப்பான்மையும்



பொழுதுபோக்குக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஆட்டம் தொழிலாக மாறும்போது எத்தகைய தனிமனித ஒழுக்க சீரழிவுகளை கொண்டு வரும் என்பதை சமகாலத்தில் பலமுறை பார்த்துள்ளோம். பொதுவாக தன்னம்பிக்கை இல்லாத ஆட்டவீரர்கள் கடுமையான நெருக்கடி நிலைமைகளில் வக்கிரமாக வன்மத்துடன் நடந்து கொள்வார்கள். சச்சின்,  ரிக்கி பாண்டிங், ஜெயசூரியா, அல்லது சேவாக் போன்ற உச்சப்ட்ச திறமையாளர்களுக்கு இப்படி லட்சக்கணக்கான கண்கள் முன் நெறியற்ற, அறந்தவறிய முறைகளில் நடந்து கொள்ள வேண்டிய அவசியங்கள் ஏற்பட்டதில்லை. எதிரணி வீரரை முழங்கையால் இடிப்பதோ (கம்பிர்), வேண்டுமென்றே ஓட்டத்துக்காக விரையும் மட்டையாளரை தடுத்து ரன் அவுட் செய்வதோ  (அக்தர்) ஒரு சாமான்ய ஆளுமையின் நிலைப்பாடு மட்டுமே ஆகும். சமீபமாக நாம் பார்த்துள்ளதிலேயே படுஅநீதியான ஆட்டம் இன்று ஒரு இளம் வீரரிடம் இருந்து வெளிப்பட்டது. அவர் சூரஜ் ரந்திவ்.


இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா இலக்கை அடைய ஒரு ஓட்டம் தேவைப்பட்டது. களத்தில் மட்டையாடிய சேவாகுக்கு சதமடிக்கவும் ஒரே ஓட்டம் தான் வேண்டும். அந்நேரம் பார்த்து ரந்திவ் ஒரு பெரிய நோபாலை வேண்டுமென்றே வீசினார். சேவாக் அதை லாங் ஆபில் ஆறு அடித்தாலும், முதலில் அப்பந்து நோபால் என்பதால் சேவாகால் தன் சதத்தை நிறைவு செய்ய முடியவில்லை. ரந்திவ் சமீப காலமாக தனது திறமை, போட்டி மனப்பான்மை மற்றும் தன்னம்பிக்கையால் அனைவரையும் கவர்ந்து வருபவர். அவரது திறமைக்கு அவர் அந்த கடைசி பந்திலும் சேவாகை வெளியேற்றவே முயன்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமாகவும், நேர்மறையான நிலைப்பாடாகவும் இருந்திருக்கும். சாத்தியத்தின் விகிதத்தை மறந்தால் ஒரு ஓட்டத்தில் பிந்தங்கிய நிலையிலும் கூட ஒரே ஓவரில் ஒரு வீச்சாளரால் ஆட்டத்தின் போக்கை மாற்றவோ வென்று தரவோ நிச்சயம் முடியும். ஆனால் ரந்திவிடம் வெளிப்பட்டது காழ்ப்பும் தோல்வி மனப்பான்மையும் மட்டுமே. சேவாகை வெளியேற்றுவது என்பதை விட அவருக்கு சதத்தை மறுப்பதே அவரது நோக்கமாக இருந்தது. முத்தையா முரளிதரன் அல்லது வார்ன் போன்ற ஒரு மேதை இப்படி கிரிக்கெட் விழுமியங்களை புறந்தள்ளி தனக்கும் அணிக்கும் அவப்பெயர் பெற்றுத்தந்திருக்க மாட்டார். இன்றைய கிரிக்கெட்டர் ஒரு கனவானாக இருக்க வேண்டாம் என்றாலும் குறைந்த பட்சம் நாணயஸ்தனாக நடக்கவோ அல்லது நடிக்கவோ முயலலாம்.

அரங்கில் இருந்து வெளியேறும் போது சேவாகால் தன் ஏமாற்றத்தை மறைக்க முடிய இல்லை. இருந்தும் தன்னை பேட்டி கண்ட டோனி மோரிசனிடம் “இது எல்லாரும் செய்வது தான். எனக்கு சதம் தரக் கூடாது என்று நினைத்தார்கள். நியாயம் தான்” என்று முழுங்கினார். இதுகூட சர்ச்சைகளை தவிர்க்க விரும்புகின்ற ஒரு முதிர்ச்சியான பதில் தான்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் ...” ரந்திவ் வெட்கி தலைகுனிய வேண்டும்.

இன்னும் ஒரு முக்கிய கேள்வி உள்ளது. வருகிற ஐ.பி.எல்லில்  டெல்லி அணியால் ரந்திவ் ஏலம் எடுக்கப்பட்டால் எப்படி சேவாகை, இந்திய ரசிகர்களை எதிர்கொள்ளப் போகிறார்? இனிமேல் கிரிக்கெட் உலகில் அவருக்கு கிடைக்கப் போகிற மரியாதை தான் என்ன?
Read More

Thursday, 12 August 2010

ரவீந்திர ஜடேஜா: தேர்வின் குளறுபடி மற்றும் தோல்வியின் பலிகடா




இந்திய அணி சொதப்பும் போதெல்லாம் இந்திய மனநிலை அதற்கான காரணத்தை தவறான இடத்தில் தேடும். நமது பழங்குடி உள்ளுணர்வு பலியிட ஒரு உயிரை நாடும். பெரும்பாலும் அது நட்சத்திரமல்லாத ஒரு இளைய வீரராகத் தான் இருக்கும். வங்கதேசத்தில் நாம் மோசமாக ஆடிய போது தினேஷ் கார்த்திக் விமர்சிக்கப்பட்டார்.இலங்கையில் முதல் டெஸ்டை இழந்த போது அனுபவமற்ற இளம் பந்து வீச்சாளர்கள் வறுக்கப்பட்டார்கள். தற்போது விமர்சகர்களின் நூடுல்ஸ் சட்டியில் ஆல்ரவுண்டராக கருதப்படுகிற ரவீந்திர ஜடேஜா.


ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல்லுக்கு முன்னரே நம்பிக்கைக்கு உரிய ஆல்ரவுண்டராக இனம் காணப்பட்டார். ஆனால் உள்ளூர் ஆட்டங்களில் அவரது பந்து வீச்சோ மட்டையாட்டமோ யாரையும் கவரவில்லை. ஐ.பி.எல்லிலும் ஜடேஜா ஒரே ஆட்டத்தை தான் ராஜஸ்தான் அணிக்காக வென்று தந்தார். உச்சி குளிர்ந்த அணித்தலைவர் வார்ன் வழக்கம் போது ஜடேஜாவை மிகையாக புகழ்ந்தார். “Rock Star” என்றார். வார்னின் புகழுரைக்கு பிறகு ஜடேஜா அதிக கவனம் பெற்றார். இந்திய அணிக்குள் கொண்டு வரப்பட்டார். முதல் ஆட்டத்திலேயே அவர் கடுமையாய் உழைக்கக்கூடிய ஒரு எளிய கிரிக்கெட்டர் என்று தெரிந்து போயிற்று. ஆனால் வர்ணணையாளர்கள் தொடர்ந்து அபார திறமையாளி என்று பாடை கட்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ஜடேஜாவின் சரளமின்மை அணியை சங்கடமான சூழ்நிலைகளில் கொண்டு நிறுத்தியது. ஆனால் இது ஜடேஜாவின் தவறு அல்ல. அவர் மீது மிகையான எதிர்பார்ப்பை கரகம் ஏற்றி திணற வைத்த தேர்வாளர்களும் அணி மேலாண்மையும் தான் பொறுப்பாக வேண்டும்.

ஜெடேஜா அதிகம் சுழல வைக்கும் வீச்சாளர் அல்ல. அவரால் கூர்மையாக நேராக வீச முடியும். அவரது ஆர்ம் பந்து பல மட்டையாளர்களை குழப்பி உள்ளது. பல நெருக்கடியான கட்டங்களில் ஜடேஜா துணிச்சலாக வீசி ஓட்ட ஒழுக்கை கட்டுப்படுத்தி உள்ளார்; ஜடேஜாவின் பந்து வீச்சு மற்றும் துடிப்பான களத்தடுப்பால் அணி நிச்சயம் பயன்பட்டுள்ளது. மட்டையாட்டத்தில் அவரால் அதிக பட்சம் பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன கூட்டணிகளை உருவாக்க முடியும். அவர் நிச்சயம் யூசுப் பதானோ உத்தப்பாவோ அல்ல. ஜடேஜா ஒரு சிறந்த மட்டையாட்ட ஆல்ரவுண்டராக தற்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது அவரது தவறு அல்ல.

அணியில் ஜடேஜாவின் இடம் கேள்விக்குள்ளாகும் நிலைமைகள் ஏற்படும். தற்போது அது நிகழ்கிறது. சேவாக், யுவ்ராஜ் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் வந்து நன்றாக பந்து வீசும் நிலைமையில் அவர்களால் ஜெடேஜாவின் பாத்திரத்தில் மேலும் சிறப்பாக இயங்க முடியும். ஜெடேஜா ஒரு மிதவேக பந்து வீச்சாளராக இருந்தால் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியும். அணி மேலாண்மை இனிமேல் ஜெடேஜாவை தக்க வைப்பதற்கு ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும். அவரது பந்து வீச்சு அபாரமான முன்னேற்றத்தை பெற்று அவரால் ஓஜ்ஹாவை நெருக்கித் தள்ள முடிய வேண்டும். அல்லாத பட்சத்தில் ஜெடேஜாவின் இருப்பு தொடர்ந்து ஒரு உறுத்தலாக இருக்கும். ஆனால் யுவ்ராஜை போல் அவரால் எந்த எதிர்மறை பாதிப்பும் இருக்காது என்பதை உறுதியாக சொல்ல முடியும்.

அடுத்து வரும் ஆட்டங்களில் ஆல்ரவுண்டர் இடத்தில் அஷ்வின், சதீஷ், இர்பான் பதான் போன்றோரை முயன்று பார்க்க வேண்டும். உலகக் கோப்பைக்கு பிறகு கொதிப்பாக இதையெல்லாம அலசுவதோ நிதானமாக பரிட்சார்த்த முயற்சிகள் செய்வதோ சுயபகடியாக மட்டுமே இருக்கும்.
Read More

நொபுக்கு கட்சுரா: வாழ்வும் எழுத்தும்




நொபுக்கு 1914-இல் பிறந்தார். Modern Haiku Association of Japan-இன் துணைத்தலைவராக உள்ள நொபுக்கு மறுமெரோ எனும் ஹைக்கூ குழுவை ஸ்தாபித்தார். Soen எனும் இலக்கியப் பத்திரிகையின் தலைமை ஆசிரியராகவும் உள்ளார். இவரது Fresh Green நூல் Modern Haiku Award for Women விருதை வென்றது. நொபுக்குவின் பிற நூல்கள்:

Moonlight (1949)
Woman’s Body (1950)
Read More

நவீன ஜப்பானிய பெண்கள் ஹைக்கூ





Nobuko Katsura


நொபுக்கு கட்சுரா


மற்றொருவன் மனைவி

கொதிநீரில் ஆவியால்

மெல்ல வெந்த தோட்டத்து பச்சை பட்டாணிகள்




Someone else’s wife –

Green garden peas steamed gently

In hot water


முலைகளின்

தொல்லை

ஒரு நீண்ட மழைப்பருவம்


The nuisance

of breasts –

a long rainy season


ஜன்னலுக்கு வெளியே, பனி;

வெந்நீர் குளியல்தொட்டியில் ஒரு பெண்,

தண்ணீர் ரொம்பி வழிகிறது.


 Outside the window, snow;

A woman in hot bath,

Water overflowing


எல்லையிலிருந்து எல்லைக்கு, பக்கத்திலிருந்து பக்கமாய்

பியூஜி மலை பரவும்

கோடை வயலுக்குள்


End to end, side to side –

Mount Fuji spreading into

The summer field


மேகம் மூண்ட வானின் கீழ்

மலைகளுக்குள் தொலைவாய் நடக்கிறேன்

பூக்காலம்


Under the cloudy sky

I walk deep into the mountains –

Blossom season

மேலும் படிக்க:
நொபுக்கு கட்சுரா: வாழ்வும் எழுத்தும்
  
Read More

Wednesday, 11 August 2010

குன்றில் ஒரு புழு




புயல் - வானம் சுருங்கும்
மரங்கள் ஆடிக் களைக்க, குன்று மேல்
புழு விறைக்கும்

முதல் புயல், மழை, இருள் ...
வானம் நோக்கி ஓடும்
நாய்க்குட்டி
Read More

Tuesday, 10 August 2010

இலங்கை கிரிக்கெட்: கர்ஜிக்க கற்றுக் கொண்ட பூனை





நியூசிலாந்தை அடுத்து மிகக்குறைந்த எண்ணிக்கையில் கிரிக்கெட் ஆடும் மக்கள் தொகை கொண்ட நாடு இலங்கை தான். ஒரே வித்தியாசம் இலங்கையில் கிரிக்கெட் பக்தி அதிகம். இருபது வருடங்களுக்கு மேற்பட்ட போர்ச் சூழலில் குறைந்த பட்ச ஆடுகள வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புடன் கிரிக்கெட் பயிலும் இலங்கையினர் கடந்த பத்தாண்டுகளில் சந்தித்து வந்துள்ள சவால்கள் மற்ற எந்த கிரிக்கெட் பாரம்பரியமுள்ள நாட்டினரும் நேரிடாதவை. இதன் காரணமாகவே இலங்கையின் கடந்த பத்து வருட வளர்ச்சி மிக பாராட்டத்தக்கது ஆகிறது.

போர் சூழல் காரணமாக இச்சிறு தீவுக்கு பயணப்பட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து தயங்கி வந்துள்ளன. விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளில் உள்ள ஒரு தலைமுறை தமிழர்களுக்கு தேசிய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. இலங்கை தனது கிரிக்கெட் வரலாற்றில் கண்டடைந்த சில மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களில் தமிழர்கள் குறிப்படத்தகுந்தவர்கள் என்பதையும் இங்கு கருத வேண்டும். தான் பார்த்ததிலேயே அற்புதமான மட்டையாளர் என்று பிராட்மேனால் பாராட்டப்பட்டவர் சதாசிவம். இலங்கை கொடியில் உள்ள அனைத்து சிங்கள சிங்கங்களுக்கும் சேர்த்து கர்ஜித்த தமிழரான முரளிதரன் மற்றொருவர். இந்த நிலையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக கிட்டத்தட்ட ஒரு துண்டுபட்ட கிரிக்கெட் தேசமாகவே இலங்கை ஆடி வந்துள்ளது. இப்படியான ஒரு ஊன நிலையில் தான் ஐ.சி.சி தனது FTP எனப்படும் எதிர்கால பயண நிரலில் இலங்கைக்கு மிகக் குறைவான வாய்ப்புகளை அளித்து பயங்கர அநியாயம் இழைக்கிறது.

இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடும் சந்தர்பங்களை ஐ.சி.சி மிகக் குறைவாகவே வழங்கி வருகிறது. உதாரணமாக கடந்த மூன்று வருடங்களில் இலங்கை ஆசியாவுக்கு வெளியே எந்த நாடுகளுக்கு சென்று டெஸ்டு ஆட வாய்ப்பு அளிக்கப்பட இல்லை.என்று அணித்தலைவர் சங்கக்கரா புகார் செய்துள்ளார். 2010-இல் கூட அவர்களுக்கு இரு டெஸ்டு ஆட்டங்களையே ஐ.சி.சி ஒதுக்கியது. பின்னர் இந்திய வாரியத்துடன் ஒரு தனிப்பட்ட ஒப்பந்தம் மூலமே இந்தியாவின் சமீப டெஸ்டு தொடர் பயணம் சாத்தியப்பட்டது. இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்கு பயணித்து ஒன்பது வருடங்களாகின்றன. இங்கிலாந்துக்கு சென்று ஐந்து வருடங்களாகின்றன. இலங்கை அணித் தலைவர் சங்கக்கரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் உலகின் மிகத்திறமையான மட்டையாட்ட வீரர்களில் இருவர். ஆனால் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் ஹஸ்ஸி மற்றும் தென்னாப்பிரிக்காவின் காலிஸ் ஆகியோரைப் போன்று உலக அளவிலான அங்கீகாரம் அவர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடி ஓட்டமெடுக்கும் வாய்ப்பை ஐ.சி.சி தொடர்ந்து மறுத்து வருவதே. உதாரணமாக தனது பதிமூன்று வருட கால ஆட்டவாழ்வில் ஜெயவர்தனே மொத்தம் நான்கு முறைகளே ஆஸ்திரேலியாவில் டெஸ்டுகள் ஆடியுள்ளார். இதனால் முரளிதரனுக்கு நேர்ந்தது போலவே இந்த சிறந்த மட்டையாள இரட்டையர் ஆசிய ஆடுதளப் புலிகள் மட்டுமே என்று ஓய்வுக்கு பின்னர் ஒரு பரிகாசச் சிரிப்போடு புறக்கணிக்கப்படுவார்கள். இந்தியாவில் சச்சினுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் அவரது பரிணாமம் எப்படி இருந்திருக்கும் என்பது ஒரு சுவையான கற்பனை. இப்படியான ஒரு அநீதி வேறெந்த முக்கிய கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கும் இழைக்கப்பட்டது இல்லை.

சுவாரஸ்யமாக கடந்த பத்தாண்டுகளாக சொந்த நாட்டில் நடந்த டெஸ்டு தொடர்களில் எதையுமே இலங்கை இழக்கவில்லை. சமீபத்தில் இந்த வெற்றி வரலாற்றை ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, மே.இ தீவுகள் போன்ற நீண்ட கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட அணிகளால் கூட சாதிக்க முடியவில்லை. சொல்லப் போனால் சொந்த நாட்டில் மேற்சொன்ன ஆதிசக்திகளின் தோல்வி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்தே வந்துள்ளது. இவ்வணிகளின் முக்கிய வீரர்கள் அந்திமத்தில் மெல்ல தேய்ந்து போய் அல்லது ஓய்வை வரிசையாக அறிவித்து ஐ.சி.எல்லும் பின்னர் ஐ.பி.எல்லிலும் எச்சில் தொட்டு எல்லைகளை அழித்து எழுதினர். தெ.ஆப்பிரிக்கா தவிர வேறெந்த சமகால அணியும் அடுத்த தலைமுறைக்கான உயர்ரக வீரர்களை உருவாக்குவதில் வெற்றி பெறவில்லை. (இந்த காரணங்களினாலே நம்பர் 1 யாரென்ற குழப்பம் தொடர்ந்து நிலவுகிறது) இந்த காலகட்டத்தில் இலங்கைக் கிரிக்கெட் தன் குரல் திறந்து கூரையேறி ஒரு கிழிசலான கூவலுடன் தன்னை அறிவித்துக் கொண்டு மெல்ல மெல்ல முதிர்ச்சி பெற்றது. உலக கிரிக்கெட்டின் அந்தி இருட்டில் இலங்கை தன் விடியலை கண்டறிந்தது. ஆனால் ஐ.சி.சியின் ஒருபக்க சாய்வான அணுகுமுறை மற்றும் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்து வெற்றிகளுக்கும் மைய காரணமாக இருந்த முரளிதரனின் வீச்சுமுறை பற்றி ஆஸ்திரேலியர் திரித்து கட்டிய சர்ச்சைகளும் இலங்கை கிரிக்கெட்டின் இந்த விடியலை ஒரு கறுப்புக் கண்ணாடி வழி உலகை பார்க்க வைத்தது.

96இல் உலகக் கோப்பையை வென்றாலும் இலங்கை ஒற்றை பரிமாண அணியாகவே பல வருடங்கள் இருந்தது. ரெணதுங்கா, டிசில்வா, மகனாமா, திலகரெத்னே போன்ற முதிய எதிர்மறை மட்டையாளர்களின் ஒரு பெரும் படையினால் அணியை கோவில் தேரின் வேகத்திலேயே அழைத்து செல்ல முடிந்தது. அக்காலத்தில் ஜெயசூரியாவின் மட்டையாட்டத்தை பொறுத்தே வெற்றி குறித்து சிந்திக்கவே இலங்கை நிர்வாகம் தலைப்படும். ஆனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு ஜெயவ்ர்தனே, சங்கக்காரா போன்ற இளைஞர்களின் எழுச்சியும் தொடர்ந்த நிலைப்பும் ஒரு நேர்மறை அம்சத்தை அணிக்கு கொண்டு வந்தது; அத்தோடு டெஸ்டு மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் ஓட்டங்களுக்கான பொறுப்பும் ஜெயசூரியாவிடம் இருந்து மத்திய ஆட்டவரிசைக்கு நகர்ந்தது.
பந்து வீச்சு இலங்கைக்கு ஒரு நெடுங்காலப் பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்னர் மெண்டிஸ் அறிமுகமாகும் வரை, மிக சமீபமாக ரந்திவ் தோன்றும் வரை முரளிதரனுக்கு ஜோடி சுழலரை கண்டடைவதில் இலங்கை தேர்வாளர்களுக்கு கடுமையான ஏமாற்றமே கிடைத்து வந்தது. இதே தனிமை நிலையே இடக்கை வீச்சாளர் சமிந்தா வாசுக்கும் நெடுங்காலம் அணியில் இருந்தது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் எதிர்மறை மட்டையாட்ட அணி என்ற தளத்தில் இருந்து வெகுவாக நகர்ந்து, தனது ஆபத்தான பந்து வீச்சுக்காக அதிகமாக அறியப்பட்ட அணியாக இலங்கை மாறியது. இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சில் பலவீனமாகி மட்டையாட்டத்தை சார்ந்து இயங்கியது சுவாரஸ்யமான சேதி. அதே போல் பந்து வீச்சில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை விட மாறுபட்ட தன்மைகள் கொண்ட அணியாக இலங்கை விளங்கியது. முரளிதரன் மற்றும் மலிங்கா தங்களுக்குள்ளாகவே எதிரணியினரை மொத்தமாக கைப்பற்றும் திறமை கொண்டவர்களாக இருந்தனர். பந்துவீச்சில் இப்படியான ஒரு ஆபத்தான இரட்டையர் ஜோடி தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ரெண்டாயிரத்தின் பாதி வரை ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே இருந்தது: மெக்ராத் மற்றும் வார்ன். தொண்ணூறுகளின் முற்பகுதி வரையிலான பாகிஸ்தானின் அக்ரம் வக்கார் ஜோடியுடனும் இலங்கை ரெட்டையர்களை ஒப்பிட முடியும். இவர்களின் சிறப்பு என்னவென்றால் எதிரணி மட்டையாளர்களுக்கு இருநூறு சொச்சம் இலக்கை கூட இவர்களை சார்ந்த அணிகளால் நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் பாதுகாத்து ஆடி வெற்றி பெற முடிந்தது. 2007 உலகக் கோப்பையில் நியூசிலாந்துடனான அரை இறுதி ஆட்டத்தில் முதலில் ஆடிய இலங்கை 180 சொச்சத்தில் நான்கு விக்கெட்டுகள் இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. மிகுந்த தன்னம்பிக்கையுடன் துடிப்பாக நியூசிலாந்தினர் பந்து வீசி களத்தடுத்துக் கொண்டிருந்தனர். ஜெயவர்தனே மிக நிதானமாக ஓட்டமெடுத்து 220 ஓட்டங்களுக்கு அணியை அழைத்து சென்று கொண்டிருந்தார். ஆனால் அத்தொடரில் அபாரமான ஆட்டநிலையில் இருந்த முரளிதரனினை அடுத்த இன்னிங்சில் சந்திக்க நியூசிலாந்து அஞ்சியது. இக்காரணத்தால் இருநூறு சொச்சத்தை துரத்த கூட நியூசிலாந்தினருக்கு நெஞ்சுரம் இருக்கவில்லை. முரளியின் பிம்பம் காரணமாக இறுதி பத்து ஓவர்களின் அவர்கள் பந்து வீச்சு போது கடுமையான பதற்றத்தில் தடுமாறியது. இலங்கை நாற்பது ஓவர்கள் மட்டையாடிய நிலையிலேயே நியூசிலாந்தினர் மனதளவில் தோற்றுப் போயிருந்தனர். இதனால் நூறு ஓட்டங்களுக்கு மேலாக இந்த கட்டத்தில் இலங்கையை எளிதில் சேகரிக்க விட்டனர். 220க்கு சுருட்டப்பட வேண்டிய இலங்கை அணி 289 எடுத்தது. சுருக்கமாக இவ்வாட்டத்தை இலங்கை அணி முரளிதரனின் நிழலுருவைக் காட்டியே உளவியல் ரீதியாக வென்றெடுத்தனர்.

எதிர்காலத்திலும் மேலும் பல ஆட்டங்களில் இந்த பந்து வீச்சு அச்சுறுத்தல் பாணியை இலங்கை தொடர்ந்தது. மெல்ல மெல்ல இலங்கை ஒரு பல்பரிமாண அணியாக பரிணமித்தது. ஜெயசூரியாவுக்கு பிறகு தில்ஷான் அவரை விட ஆபத்தான துவக்க வீரராக ஆடி வருகிறார். பத்து ஓவர்களில் இவரால் அணிக்கான மொத்த ஓட்டங்களில் பாதியை திரட்ட முடியும். முரளிதரனின் ஓய்வுக்கு பிறகு அணியின் பந்துவீச்சு வீரியத்தை ஓரளவுக்கு மலிங்கா தக்க வைத்து வருகிறார். மெண்டிஸும், ரந்திவும் தங்களது திறன்களை தொடர்ந்து மெருகேற்றும் பட்சத்தில் வெற்றிடமாகி விட்ட முரளிதரனின் ராட்சத காலடிகளில் இடதை அவர்களால் சேர்ந்து நிரப்ப முடியும். தனது உடற்தகுதியை தொடர்ந்து தக்க வைக்கும் பட்சத்தில் மலிங்காவால் வலதை நிரப்ப முடியும். பத்தாண்டுகளுக்கு மேலாக தனிமனிதராக முரளி ஆரம்பித்த வெற்றிப் பாதையை இந்த மூவரணியால் எதிர்காலத்தில் தொடர முடியுமானால் இலங்கை அணியால் மேலும் பல உச்சங்களை அடைய முடியும். நடந்து முடிந்துள்ள இந்தியாவுடனான டெஸ்டு தொடர் இலங்கையின் எதிர்காலத்துக்கான ஒரு நல்ல அறிகுறி என்று சொல்லலாம்.

ஐ.பி.எல்லால்  சர்வதேச (அல்லது “ஐரோப்பிய) கிரிக்கெட் கவுன்சில் தனது காலாவதியான மதிப்பீடுகளின் இருப்பையும், இந்திய வாரியத்தின் பணபலத்தால் அது தன் ஆட்சி நாற்காலியையும் காலி செய்யும் காலம் தொடங்கியது. முரளிதரன் சங்கக்காரா- ஜெயவர்தனே கூட்டணியால் துருவேறிய கம்பிகளுக்கு பின் கோழிகளை துரத்தி பிடித்து கர்ஜித்த காலம் இலங்கைக்கு முடிந்தது. 
Read More

Monday, 9 August 2010

பெனிலோப் ஷட்டில் ஹைக்கூ





ஏழு பாதை கற்கள்


உறைந்த ஓடையில்;


புனித கிளீரின் வெள்ளை சாயமடித்த தேன்கூடுகளில் பனி





Seven stepping-stones


In a frozen stream;


Snow on the white-painted beehives of St Cleer






கல் பாவிய முற்றத்தில்


பழுத்த அத்திப் பழங்கள் சன்னமாய்


விழும் பொத் பொத் சத்தம்





Soft thunk-thunk


Of ripe figs


Falling on your paved yard





முழுக்கவே கருமையில் கனவு காண்கிறேன்


ஒவ்வொரு காலையிலும்


நான் அக்கனவுகளை வெள்ளையாக்குவேன்


பல காரணங்களுக்காக





I dream all in black


And every morning


I bleach those dreams white


For many reasons





குளிர்மாலையில்


மலர் நத்தை,


கூட ஆறு வெள்ளை இளஞ்சிவப்பு பிசாசுகள்


எண்ணங்களில் மழையில் தொலைந்து





Flower snail


In the cool evening,


Plus six white rose-ghosts


Lost in thought and rain





அதிகப்படியான புத்தகக்கடைகள் கொண்ட ஒரு நகரம்


அங்கு இருள் வந்தடையும்


பாலினம் அறியப்படாத வயது வந்தவர் போல்  





As a town with too many bookshops,


Where darkness arrives


As an adult, sex unknown.

Read More

Sunday, 8 August 2010

இந்திய - இலங்கை தேர்வாளர்களின் : விதூஷகனும் நாயகனும்



இந்திய மற்றும் இலங்கை தேர்வாளர்களிடையே முக்கிய வித்தியாசம் என்ன?

வேறென்ன தெளிவான திட்டவரைவும் அதை நிறைவேற்றும் துணிவும். இந்திய தேர்வுகளில் எப்போதும் குறுகிய கால தேவையும், குழப்பமும் வெளிப்படையாக தெரியும்; அதோடு ஒவ்வொரு தேர்வுக் குழுவின்  நாற்காலி பருவத்திலும் நம்பிக்கையூட்டும் இளம் வீரர்கள் மாறுபடுவார்கள்.
இலங்கை தேர்வாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வீரர்கள் பற்றின மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதில்லை. 33 சராசரி இருந்தும் உபுல் தரங்கா மீது ஐந்து வருடங்களாக நம்பிக்கை வைத்து அதன் பயனை தற்போது அனுபவிக்கிறார்கள். ஜெயசூரியாவையே தயக்கமின்றி கைகுலுக்கி வீட்டுக்கு அனுப்ப முடிகிற அளவுக்கு தரங்காவின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இதை விட முக்கியமாக அவர்கள் களத்தடுப்பு மற்றும் உடல் தகுதிக்கு தருகிற முக்கியத்துவம் பாராட்டத்தக்கது. இந்த இரு தகுதிகளின் அடிப்படையில் இந்தியாவில் யாராவது அணியில் இருந்து இதுவரை விலக்கப்பட்டுள்ளனரா? இலங்கையில் அது நடக்கிறது. மிகச்சமீபத்திய உதாரணம் கண்டாம்பி.

கண்டாம்பி கடந்த ஆசியக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மிகச்சிறப்பாக மட்டையாடினார். ஆனால் அவரது களத்தடுப்பு மட்டமாக இருந்தது. இது மற்ற வீரர்களின் தீவிரத்தை பாதித்தது. இந்தியாவுக்கு எதிராக மிகச்சிறந்த மட்டையாட்ட ஆட்டவரலாற்றை கண்டாம்பி கொண்டிருந்த போதும் அவரது ரணதுங்க தொப்பை மற்றும் சொதப்பலான களத்தடுப்பை கருதி நடக்கப் போகும் முத்தரப்பு தொடருக்கான அணியில் அவரை தேர்வாளர்கள் சேர்க்கவில்லை. இக்காரணத்தை வெளிப்படையாக அவர்கள் அறிவிக்க விட்டாலும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக சதம் அடித்த ஒருவரை நீக்குவதற்கு வேறெந்த காரணமும் இருக்க முடியாது. இப்படியான தீர்க்கமான முடிவுகள் இந்தியாவில் எதிர்காலத்தில் கூட எடுக்கப்பட மாட்டாது என்பது உறுதி. களத்தடுப்பு நமக்கு ஒரு இறுதியான தகுதி மட்டுமே. உதாரணமாக அஷ்வினின் தேர்வை சொல்லலாம். ஆசியக் கோப்பைத் தொடரில் உடல்தகுதி மற்றும் ஆட்டநிலை காரணமாக யுவ்ராஜ் நீக்கப்பட்டு இந்த தொடரில் மீண்டும் வரவேற்கப்படுகிறார். இடையிலான காலத்தில் அவரால் தனது டெஸ்டு இடத்தை கூட கையகப்படுத்த முடியவில்லை. உடல் தகுதியிலும் பெரிய மாற்றமில்லை. ஒரு தொடரில் நீக்கப்பட்டது தேர்வாளர்களின் மொழியில் தண்டனையென்று பொருள்பட்டாலும் நிஜத்தில் யுவ்ராஜுக்கு ஒப்பான மற்றொருவர் கைவசம் இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக் கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் அவரது மறுதேர்வு.

இந்திய தேர்வாளர்களுக்கு விதூஷக வேடம் பொருந்திப் போகிறது என்பது உண்மைதான் என்றாலும் ஒரே நாடகத்தை எத்தனைக் காலம் தான் மேடை ஏற்றப் போகிறார்கள்?
Read More

Saturday, 7 August 2010

சங்கக்காரா எந்த அணிக்கு தலைவர்?



இன்று காலையில் இந்தியா-இலங்கை டெஸ்டின் ஐந்தாவது நாள் ஆட்டத்தை பார்க்கும் போது இந்த கேள்வியே என்னை குழப்பியது.
அணியின் பலவீன கண்ணியான வலெக்திராவைக் கொண்டு பந்து வீச்சை துவங்கியது, அஜெந்தா மெண்டிஸை ஒரு மணிநேரத்துக்கு பிறகு பொறுமையாக அறிமுகப்படுத்தியது முதல் எதிர்மறையான கள அமைப்பு வரை சங்கக்காராவின் திட்டமுறைகள் படு பேத்தல். மெண்டிஸின் திறன் மீது அணித்தலைவருக்கு உள்ள நிச்சயமின்மை இலங்கைக்கு ஆரோக்கியமில்லை. எதிர்காலத்தில் இலங்கை டெஸ்டு தொடர்களை வெல்ல வேண்டுமானால் மெண்டிஸின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். முரளி கார்த்திக்கிற்கு நடந்தது மெண்டிஸின் வாழ்விலும் நேரக் கூடாது.

மலிங்கா தாமதமாக வந்தது ரிவர்ஸ் ஸிவிங்கை பயன்படுத்துவதற்காக இருக்கலாம். அவரது வேகம் 130களுக்கு உள்ளாகவே இருந்தது. காயம்? ஆனால் சங்கக்காரா நினைத்தது நடக்கவில்லை. எதுவும் திருப்தியளிக்காத பட்சத்திலும் அவர் இந்தியாவை தாக்க தயங்கியபடியே இருந்தார். ஒற்றை இரட்டை ஓட்டங்களை அள்ளி வழங்கினார். நானிதை எழுதும் போது இந்தியாவுக்கு வெற்றி பெற இன்னும் 86 ஓட்டங்களே தேவை. தனது ஐந்தாவது விக்கெட்டாக ரந்திவ் சச்சினை வெளியேற்றி விட்டார்.

ஒருவேளை இந்தியா வெற்றி பெற்றால் பெருமையில் பாதி சங்கக்காராவுக்கே செல்ல வேண்டும்.
Read More

Friday, 6 August 2010

மூன்றாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுமா?



இதற்கு சுருக்கமாக என் ஊகத்தை சொல்லி விடுகிறேன். வெற்றி வாய்ப்பு வால் நுனி அளவு தான். 257 இலக்கை விரட்டி ஐம்பது சொச்சத்துக்கு மூன்று விக்கெட்டுகளை இந்தியா இழந்துள்ளதை கருதி தோல்வியின் திசையை நான் சுட்டவில்லை. காரணங்கள் வேறு.


முதலில், தற்போது களத்திலுள்ள சச்சினையும் சேர்த்து மூத்த வீரர்கள் நல்ல ஆட்டநிலையில் இல்லை. சச்சின் இரண்டாவது டெஸ்டில் அடித்த இரட்டை சதமும் அவருக்கு உரித்தான பாணியில் அமையவில்லை. கடந்த ஐ.பி.எல்லில் நாம் கண்ட சச்சினின் தன்னம்பிக்கை இலங்கையில் இல்லை. காயத்துக்கு பிறகு திரும்புவது காரணமாக இருக்கலாம். இந்த ஆட்டத்துக்கு முன்னரும் சச்சின் காயத்துடனே இருந்தார். முழுக்க குணமாகி விட்டதாக நான் நம்ப இல்லை. அடுத்து வரும் முத்தரப்பு தொடரில் அவர் இல்லாதது இந்த காயத்துக்கான ஓய்வுக்காகவே என்று அனுமானிக்கிறேன். இந்த டெஸ்டில் மட்டையாடும் போது சச்சினின் உடலசைவுகளில் ஒரு இறுக்கம் காணப்படுகிறது. வழமையான ஒழுக்கு அவரது மட்டை வீச்சில் இல்லை. இதற்கு காரணம் காயமாக இருக்கலாம். தோனிக்கும் விரல் காயம் உள்ளது. ஆக முழு உடற்தகுதியில் இல்லாத பாதி சச்சின் மற்றும் தோனியால் நாளைய ஆட்டத்தை வென்று தர முடியுமா? லக்‌ஷ்மண் மற்றும் ரெய்னாவால் எவ்வளவு ஓட்டங்கள் பங்களிக்க முடியும்?

அடுத்து, ரெய்னாவை தவிர அதிரடி வீரர் யாரும் நம் அணியில் இனி இல்லை. இதனால் ரெய்னா அற்புதமாக ஆடி அரை சதமடிக்காத பட்சத்தில் இலங்கையால் ஓட்டங்களை வறள வைத்து இந்தியாவை நெரிக்க முடியும். இலங்கை சுழலர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க சேவாகோ, கம்பீரோ, யுவ்ராஜோ இல்லை என்பது ஒரு எதிர்மறை அம்சமாக நாளை இருக்கும்.

தோல்வி எதிர்பார்ப்பு இருந்தாலும் நாளைய ஆட்டம் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். காரணம் முரளிதரன் இல்லை என்பதும், மலிங்காவால் நீண்ட காலம் வீச முடியாது என்பதும். இலங்கையின் குறைபாடுகள் இவை. இலக்கும் குறுகியது என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருதரப்பினரிடமும் இருக்கும். இந்தியா சமீபத்தில் ஆடிய டெஸ்டுகளில் சிறந்தவற்றில் இவ்வாட்டத்துக்கு நிச்சயம் ஓரிடம் இருக்கும்.

கடைசியாக, இத்தொடரை இந்தியா ஒருவேளை இழந்தாலும் காயங்களால் பலவீனமாக்கப்பட்ட நிலையில் அது கடுமையாக தன் நிலைப்புக்காக போராடியது என்பதை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். சேவாகையும் லக்‌ஷ்மணையும் தவிர அணியின் மூத்த வீரர்களில் அனைவரும் காயத்தினால் விலகிக் கொண்டனர் அல்லது காயத்தை பொறுத்துக் கொண்டு உள்வலியுடன் ஆடினர். இது கிட்டத்தட்ட இந்திய ஏ அணிதான். அதனால் தான் இத்தொடரின் முடிவை பொருட்படுத்த தேவை இல்லை என்று நினைக்கிறேன். முரண்களின் உச்சமாக நாம் வென்று விட்டால் மன உறுதியின் மேன்மைக்கான விழைவின் மிகச் சிறந்த உதாரணமாக அது இருக்கும்.
Read More

Thursday, 5 August 2010

வட-அமெரிக்க ஹைக்கூ






போஸ்டர் ஜுவல்
Foster Jewell

இப்போதும் அங்குள்ளது
 சுருங்கும் குட்டையில்
என் பிரதிபிம்பம்

Still there
in the shrinking puddle
my reflection.

கடைசி மழைத்துளி
குச்சியின் நுனியை நெருங்குகிறது
அதை நெருங்கி ... நெருங்கிக் கொண்டே வருகிறது

Last raindrop
nears end of twig ...
Nearing it ... Nearing it ...

ரேண்டி ஜான்சன்
Randy Johnson

பிறவற்றை விட மெதுவாக
அவ்வப்போது
ஒரு பெரும் பனித்திப்பி விழும்

Slower than the rest
now and then
a big flake falls

இரவுக்குள் உருகும்
 சிவப்பு அக்டோபர் அந்தி
மேப்பிள் இலைகள்

Melting into the night
the red October dusk
the maple leaves

ரோபர்ட் ஜான்சன்
Robert n. Johnson

உயர அமர்ந்திருக்கும் கரும்பருந்து
சிறகுகளை தொங்கப் போடும்
முதல் மழை
The dark hawk
perched there, hangs his wings
first rain 
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates