சின்ன வயதில் எல்லாருக்கும் ஏதாவது பிராணிகள், பறவைகள் அல்லது ஒரு பூஞ்செடி ஏனும் வளர்த்த அனுபவம் இருக்கும். வளர்ந்து வரும் ஒரு குழந்தைக்கு தனக்கென ஒரு குடும்பத்தை (ஒரு மேக்ரோ சமூகத்தை) கட்டியெடுப்பும் உந்துதல் இயல்பாகவே ஏற்படுகிறது. சிறுவயதில் இதற்காக நாம் ஈடுபடும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்று இப்படி செல்ல உயிர்களை வளர்த்து உருவாக்குவது; குழந்தைப் பருவத்தில் நமக்கு பிராணிகளை வளர்க்கும் மனமுதிர்ச்சி போதாது என்னும். இது வெறுமனவே அன்புக்கான ஒரு வடிகால் மட்டும் அல்ல. செல்ல உயிர்களை வளர்ப்பவர்கள் அனைவரும் பிறழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்ற ஜெயமோகன் போன்றவர்களின் கருத்து சரியானது அல்ல. தன்னந்தனியானவர்களுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் செல்லப்பிராணிகள் குடும்ப உறுப்பினருக்கு பதிலியாக இருப்பதும் உண்மைதான் என்றாலும் இதனை பொதுமைப்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல.
உதாரணமாக் என் நண்பன் ஒரு நாய்ப் பிரியன். சதா அவன் நாயோடு விளையாடி நாயோடி உறவாடிக் கொண்டிருப்பது கண்டால் உடனே அம்மா சொல்வாராம்: ”ஒரு கல்யாணம் பண்ணிக் கொண்டு குழந்தை குட்டி பெற்றுக் கொள் என்றால் கேட்டால் தானே. எப்போ பார்த்தாலும் இந்த சனியனோடு கொஞ்சிக் கொண்டு ...” அப்படி என்றால் நாளை என் நண்பன் ஒரு பாம்போ தேளோ வளர்க்கத் தொடங்கினாள் அவன் அம்மா என்ன பண்ணிக் கொள்ள சொல்வார்?
எனக்கு மிருகங்கள், பூச்சிகள், பறவைகள் போன்ற உயிர்களை விலகி நின்று கண்காணிக்க பிடிக்கும். என் வீட்டுப் பக்கத்தில் உள்ள செல்லப்பிராணிகள் விற்பனை நிலையத்தில் இதற்காகவே ஏதாவது சாக்கு சொல்லிக் கொண்டு புகுந்து கவனிப்பேன். மீன், பூனை, நாய் என்று இதுவரை நான் வளர்த்து வந்ததற்கு இதுவே காரணம். மிருகங்களை படிப்பது ஒருவிதத்தில் பழங்குடி சமூகங்களை ஆய்வு செய்வது போல. மனிதர்கள் தாம் என்றாலும் மார்வின் ஹாரிஸ் தம் பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் நூலில் காட்டுவது போல் பழங்குடிகளின் வாழ்க்கை அதன் வித்தியாசமான தன்மையால் ஒரு மாற்றுப்பரிமாணத்தை நமக்கு அளிக்கிறது. ஒரு புது ஊருக்கு சென்றவுடன் நம் கண்கள் மேலும் கூர்மையாகின்றனவே அது போல. மனிதர்களை புரிந்து கொள்ள மிருகங்களை கவனிப்பது மிகவும் உதவும். உதாரணமாக் குலைத்து துரத்தும் நாய்க்கும் கோபப்படும் மனிதர்களுக்கும் எவ்வளவு ஒற்றுமை.
நாய் வளர்க்க விரும்பினாலும் சில காரணங்களால் சாத்தியப்பட இல்லை. எப்போதும் மூன்றாவது நான்காவது மாடிகளில் தான் குடியிருக்க வீடு கிடைக்கிறது. எனக்கே கீழே இறங்குவது ஒரு சாகசம் என்பதால் நாயை வேறு சங்கிலியில் பிணைத்து இறக்கி நடை பழக்க முடியாது. இதனால் பூனையை தேர்ந்தெடுத்தேன். முதலில் ஒரு நாட்டுப் பூனை. பெண். பெயர் எனக்கு பிடித்த ஜப்பானிய ஆண் ஹைக்கூ கவிஞரது: ஷிக்கி. இப்போது அதற்கு ரெண்டு வயது. கூச்ச சுபாவமும், எளிதில் புண்படும் மனமும் கொண்டது. அருமையாக தனது மீயாவ்களின் தொனி வேறுபாடுகளால் பேசக்கூடியது. அது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.
நான் இயல்பிலேயே நல்ல செல்லப்பிராணி கவனிப்பாளன் இல்லை. பல சமயங்களில் என் வேலைகளில் ஆழ்ந்து விடும் போது சாப்பாடு கொடுக்க, கழிவை அகற்ற மறந்து விடுவேன். அதனால் இரண்டாவது பூனை வாங்க ரொம்ப தயங்கினேன். பிறகு மேற்சொன்ன செல்லப்பிராணிகள் கடையில் பெர்ஷியன் எனப்படும் ஜடைப்பூனைக் குட்டிகள் வைத்திருந்தது பார்த்து சொக்கி விட்டேன். ரொம்ப நேரம் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். கடை உரிமையாளர் யானை விலை சொன்னார். பிறகு என் மனைவி வந்தாள். அவளிடம் “உனக்காக வேண்டும் என்றால் வாங்குகிறேன் ...” என்று பாவ்லா காட்டி கடைசியில் சாம்பல் நிற பூனைக் குட்டி ஒன்றை வாங்கினேன். அதுவும் பெண். கொள்ளை அழகு. மிஷ்டி என்று பெயர் வைத்தோம். பெங்காலியில் இனிப்பு என்று பொருள். இப்பெயர் என் நாக்கில் உருள்வதால் வசதியாக அழைப்பது ஜடாயு என்று.
நாட்டுப்பூனைக்கும் ஜடைப்பூனைக்கும் தான் எத்தனை வித்தியாசங்கள். ஜடாயு மீயாவ் சொல்லுவதே இல்லை. பிரசங்கத்துக்கு முன்பான சாமியார் மௌனம். ரொம்ப பசித்தால், ஆவேசம் வந்தால், அல்லது வலித்தால் மட்டும் கீச்சிடும். அதுவும் வினோத குரலில். நடப்பது சற்று திரிஷாவைப் போல். நிச்சயம் பூனை நடை கிடையாது. ஆறு மாதத்தில் நாட்டுப்பூனையை விட வளர்ந்து விட்டது. சதா கண்ணில் நீர். அதற்கு பிரத்யேக மருந்து விட வேண்டும். வீட்டில் ஒரு நடமாடும் கலைப் பொருள். களைக்காமல் அரை மணி கூட பிளாஸ்டிக் பந்தை கால் பந்தாடும். சின்ன காரை தலை கீழாக ஓட்டும். MP3 பிளேயரை கழுத்தில் சுற்றிக் கொண்டு இழுபட திரியும். தூங்குவதில் இருந்து சாப்பிடுவது வரை பெரிய பூனையோடு போட்டி தான். கீழே மிஷ்டியின் சில புகைப்படங்கள். 2 மாதங்களுக்கு முன் எடுத்தவை.