ஈபுக் ரீடர் என்பது புத்தகங்களை மின்திரையில் படிப்பதற்கான ஒரு கருவி. கிட்டத்தட்ட ஒரு புத்தக அளவுக்கு திரை இருக்கும். நீங்கள் சாய்த்து திருப்புவதற்கு ஏற்றவாறு திரையும் தகவமைத்துக் கொள்ளும். PDF, Word போன்ற வழமையான கோப்பு வடிவங்களையும் திறந்து கொள்ளலாம் என்றாலும் ஈபுக் ரீடரின் தயாரிப்பு நிறுவனங்களே விற்கும் மின்புத்தகங்கள் தனித்துவமான கோப்பு வடிவை கொண்டவை. உதாரணமாக அமேசான் எனும் புத்தக விற்பனை நிறுவனம் வெளியிட்டுள்ள கிண்டில் எனும் மின்வாசிப்பு கருவிக்காக அறுபதினாயிரத்துக்கு மேற்பட்ட மின்புத்தகங்களை அந்நிறுவனம் பிரசுரித்துள்ளது. ஆனால் இப்புத்தகங்களை பிற நிறுவன மின்வாசிப்பு கருவிகளில் படிக்க முடியாது. அதற்கு கிண்டிலுக்கான மென்பொருளொன்றை பதிவிறக்கி இணைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தொழில்நுட்பம் தகவல் மற்றும் காட்சி ஊடகங்களை அணுகுவதையும் பயன்பாட்டையும் மிகவும் எளிதாக்கி வரும் நேரத்தில், புத்தகவாசிப்பு மற்றும் வாங்கலை அது மேலும் சிரமமானதாகவும், சிக்கலானதாகவும் மாற்றி வருகிறது. நீங்கள் விரும்புகிற பாடல் அல்லது படத்தை நினைத்த நேரத்தில் சில நொடிகளில் இருந்து நிமிடங்களுக்குள் பதிவிறக்கி அல்லது streaming வடிவில் கேட்டு பார்த்திட முடியும். மரபான முறையில் திரையரங்குக்கு செல்வதில் அல்லது டி.வி.டி வாங்கி பயன்படுத்துவதில் இருந்து இலவசமாய் பதிவிறக்குவது அதை பிறருடன் பகிர்வது வரை தொழில்நுட்பம் வேறு கலாச்சார வடிவங்களை நுகர்வதை எளிதாக்கியது போல் புத்தகங்களுக்கு நிகழவில்லை. தொழில்நுட்பம் புத்தகபதிப்பை மட்டுமே லகுவாக்கியது. ஆனால் விலைகளில் ஒன்றும் மாற்றமில்லை. முக்கியமான புத்தகங்களை வாங்க நீங்கள் இன்றும் ஆயிரங்களில் செலவழிக்க வேண்டும். அடுத்து, கணினிப் பயன்பாடு மனிதனுக்கு பொருளாதார மற்றும் கலாச்சார தளங்களில் ஓராயிரம் கதவுகளை திறந்து வைத்து அவனை விடுதலைப்படுத்தி உள்ள நிலையில் வாசிப்புக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கும் முரண்பாடு நிலவுகிறது. புத்தொளி யுகத்தில் கேக்ஸ்டனின் பதிப்பு எந்திர கண்டுபிடிப்பால் ராட்சத வளர்ச்சி அடைந்து மக்களின் அறிவு மற்றும் கலாச்சார வெளியை ஆக்கிரமித்த புத்தகங்கள் நவீன யுகத்தில் வாசலில் மேலும் பரிணமிக்காமல் துவண்டு நின்று விட்டன.
நவீன காலத்துக்கு ஏற்றபடி புத்தகங்களை பரிணமிக்க வைக்கும் முயற்சியாகத் தான் அமேசான் நிறுவனம் கிண்டிலை 2007-இல் அறிமுகப்படுத்தியது. அமேசான் நிறுவனம் தான் இதுவரை மில்லியன் கணக்கில் கிண்டில்களை விற்றுள்ளதாக கூறியுள்ளது. குறிப்பாக, கடந்த கிறித்துமஸின் போது அமேசானில் இருந்து அதிகம் வாங்கப்பட்ட பரிசுப்பொருள் கிண்டில் தானாம். ஆனால் சரியான எண்ணிக்கையை சொல்ல அமேசான மறுத்து விட்டது. அடுத்து, தற்போது கெட்டி அட்டை புத்தகங்களை விட மின்புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆவதாக மற்றொரு பரபரப்பை அமேசான் உருவாக்கி உள்ளது. அதாவது 100 பதிப்பு புத்தகங்களுக்கு 180 மின்புத்தகங்கள் விற்பனை ஆகிறதாம். கடந்த ஆறுமாதங்களில் மட்டும் கிண்டில் விற்பனை மும்மடங்கு ஆகியுள்ளதாம். இணைய விமர்சகர்களுக்கு இந்த தகவல்களிடத்து சற்று அவநம்பிக்கை இருந்தாலும் புத்தக உலகில் கிண்டிலின் இடத்தை மறுப்பதற்கு இல்லை. அமேசானோடு போட்டியிட்டு சந்தையை பிடிக்க Sony, eGriver, Slex ereader, nook, iPapyrus 6, Pocketbook, Cool-er, Cybook என்று ஏராளமான நிறுவனங்கள் மின்வாசிப்பு கருவிகளை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் கிண்டில், சோனி, நூக் ஆகியவை முன்னிலையில் உள்ளன. Infi Beam என்ற இந்திய நிறுவனம் Pi என்றொரு மின்புத்தக கருவியை வெளியிட்டுள்ளது. இருப்பதிலே விலை மலினம் Pi தான் – 9999. இக்கருவியில் இந்திய மொழி நூல்கள் படிக்க முடியும். ஆனால் கிண்டிலில் உள்ளது போல் பதிவிறக்க, தட்டச்சு செய்ய வசதி இல்லை.
கிண்டில் போன்ற அயல்நாட்டு வாசிப்பு கருவிகள் இந்தியாவில் இன்னும் பிரபலமாக இல்லை. இதற்கு விலை ஒரு பிரதான காரணம். ஆப்பிள் நிறுவனம் ஐபேட்டை அறிமுகப்படுத்தியதும் கிண்டில்.விலையை அமேசான் 189 டாலராக குறைத்தது. உடனே நூக் விலையை Barnes and Noble 199 டாலராக குறைத்தது. ஐபேடில் மின்புத்தகம் வாசிக்கும் வசதி அமேசான மின்புத்தகங்களின் சமீப விற்பனை உயர்வுக்கு மறைமுகமாக உதவியது. இது அமெரிக்கர்களுக்கு தான் அதிகம் பயன்பட்டது. இந்தியாவில் கிண்டில் வாங்க 189 டாலரோடு கிட்டத்தட்ட 5000 ரூபாய் நாம் உபரியாக வரி செலுத்த வேண்டும். மின்புத்தக கருவிகளில் உள்ள முக்கியமான வசதி சில நொடிகளில் Wifi மூலம் நீங்கள் புதிய நூல்களை (பணம் செலுத்தி) தரவிறக்கி படிக்கலாம் என்பது. அதோடு பதிப்பு நூல்களில் இருந்து சற்று விலை குறைவாகவும் மின் நூல்கள் இருக்கும். ஆனால் மின்புத்தக கருவியில் இருந்து நேரடியாக தரவிறக்குவதற்கான Wifi தொடர்புநிலை இந்தியாவில் சீராக இல்லை என்று பயனர்கள் கருதுகிறார்கள். இத்தனை செலவு செய்து சிரமப்படுவதற்கு புத்தகமாகவே வாங்கி விடலாம் அல்லவா?
மின்புத்தகங்களைப் பற்றி உலகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும் போது இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், எந்த சலனமும் இல்லை. இத்தனைக்கும் உலகம் எங்கும் இருந்து இணையம் வழி தமிழில் வாசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக லட்சக்கணக்கான பக்கங்கள் இலவசமாக எழுதப்பட்டு பதிவேற்றப்படுகின்றன. இணையப்பதிவர்கள் மரபான பத்திரிகைகளுக்குள் நுழைகிறார்கள். இலக்கிய கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். கடந்த ஆண்டு பிரசுரிக்கப்பட்ட முக்கியமான புத்தகங்களில் பல இணையத்தில் வாசிக்க எழுதப்பட்டவை. தமிழ் இணையத்தால் புதிய வாசகர்கள் அறிமுகமாகி புத்தக விற்பனை அதிகமாகி உள்ளது. ஆனால் பதிப்பாளர்களுக்கு தங்கள் நூல்களின் மின்பிரதிகளை வெளியிடுவதில் பெரும் தயக்கம் உள்ளது. இதற்கு கிண்டில் போன்ற மின்வாசிப்பு கருவிகள் இங்கு சந்தையில் கிடைக்காததும், அதனை ஒட்டிய மின்புத்தக தரவிறக்க வியாபாரம் இல்லாமையும் ஒரு காரணம். Piracy எனப்படும் புத்தக திருட்டு பிரசுரம் மீதான அச்சம் அதைவிட முக்கியமான காரணம். இங்கு நாம் பைரஸி எனப்படும் திருட்டை குறித்து மேலும் சிந்திக்க வேண்டும். ஆழமாக ஆராய்கையில் இங்கு நம் பதிப்பாளர்கள் ஒரு சிறந்த வணிக மாடலை கோட்டை விடுகிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
ஐம்பது பைசா மிட்டாய் மற்றும் முப்பது ரூபாய் டி.வி.டியில் இருந்து ஆயிரக்கணக்கான விலை உள்ள கைக்கடிகாரம் வரை சந்தையில் இன்று மலிந்து கிடக்கும் போலிப் பொருட்களுக்கும் திருட்டு பதிப்பு நூல்களுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு. திருட்டு பதிப்பால் பதிப்பாளர்களுக்கு நட்டம் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இத்தகைய புத்தகங்களின் நுகர்வோர் அசல் நூல்களை எப்படியும் வாங்கப் போவதில்லை என்பது மற்றொரு தரப்பு. இந்தியாவின் ஒரே கலாச்சார ஊடகமாக நிகழும் சினிமாவுக்கு இதை நிச்சயம் பொருத்த முடியாது. திருட்டு டி.வி.டிகள் சினிமா தொழிலை நிச்சயம் அழிக்கின்றன. ஆனால் வில் டியூரண்டின் The Story of Philosophy ஐ நடைபாதை கடையில் ஐம்பது ரூபாய்க்கு வாங்கும் வாசகன் ஐநூறு செலவழித்து அதை வாங்கும் வாய்ப்பு குறைவே. வசதியற்றவர்களுக்கு புத்தகங்களை ஜனநாயகப்படுத்தும் ஒரு வாய்ப்பாக இந்த திருட்டு சந்தை புத்தகங்களை காணலாம். கோடீஸ்வரர்களான பல சர்வதேச எழுத்தாளர்களுக்கும் இந்த திருட்டுப் பதிப்பால் பெரும் பாதிப்பில்லை எனலாம். பாடல் மற்றும் படங்கள் இணையத்தில் திருட்டு விற்பனையாவதில்லை; அவை திருட்டு பிரதியெடுக்கப்பட்டு இலவசமாக பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. திருட்டு புத்தகங்களுக்கு சொல்லப்பட்ட தர்க்கம் ஓரளவுக்கு இந்த பாடல்/பட பிரதியெடுப்பு மற்றும் இலவச பகிர்தலுக்கும் பொருந்தும். இருட்டில் துழாவி எடுப்போர் பகலில் அப்பொருளை வாங்கப் போவதில்லை. மேலும் இணையத்தில் அனைத்தும் இலவசம் என்ற மதிப்பீடு நிலவுவதால் காப்புரிமை மீறல் கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. உங்கள் கணிணியில் நீங்கள் தட்டச்சும் சிறு சொல் அல்லது தகவல் கூட இன்று பாதுகாப்பாக இருப்பதில்லை. உலகின் ஏதாவது ஒரு மூலையில் இருந்து ஒருவர் அதை உங்களுக்கு தெரியாமல் கவர்ந்து கொண்டிருப்பார். ஆரம்பத்தில் ஐரோப்பிய இசை நிறுவனங்கள் காப்புரிமை விசயத்தில் மிகக் கராறாக இருந்து பார்த்தன. மீறி டி.வி.டியிலிருந்து பாடல் கோப்புகளை பிரதியெடுத்து இணையத்தில் பகிர்பவர்கள் மீது வழக்கு தொடுத்தது. ஆனால் இந்நடவடிக்கை பலநூறு ஓட்டைகள் கொண்ட பிரம்மாண்ட தண்ணீர்த் தொட்டி ஒன்றை அடைக்க முயல்வது போல. விரைவிலேயே இது வீண் என்றுணர்ந்த சில நிறுவனங்கள் இணையத்தில் பாடல்களை சட்டபூர்வமாக பதிவிறக்கும் வசதியை கொண்டு வந்தன. Itunes நிறுவனம் கோடிக்கணக்கான பாடல்களை அறிமுக வருடத்திலேயே விற்றது. டி.வி.டிகளாக விற்பதை விட இது சுலபமும் லாபகரமுமானது என்ற பல நிறுவனங்கள் புரிந்து கொண்டன. இங்கு ஆய்வாளர்கள் இரண்டு முடிவுகளுக்கு வருகிறார்கள். இன்றைய நுகர்வோனுக்கு பொருள் எளிதில் உடனே கிடைக்கும் படியாக அமைய வேண்டும். விலையும் நியாயமாக இருக்க வேண்டும். எந்த குற்றவுணர்வும் இன்றி நியாயமான விலையில் வாங்கவே நுகர்வோன் விரும்புகிறான். உலகம் தொடர்ந்து அபௌதிகமாக விர்ச்சுவலாக மாறி வரும் சூழலில் சந்தை இணையத்துக்குள் வரவேண்டிய, விற்பனைப் பொருள் இணைய வடிவம் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. விலை அநியாயமானது என்று நுகர்வோருக்கு எண்ணம் ஏற்படுகையில் அது பைரஸிக்கு வழி வகுக்கிறது. Torrents, Limewire போன்ற கோப்பு-பகிரும் மென்பொருள் மற்றும் இணையதளங்கள் வழியாக மக்கள் ஒரு பொருளை பிரதியெடுத்து பகிர்வதற்கு அநியாய விலை தூண்டும் தார்மீகக் கோபமும் ஒரு முக்கிய காரணம். டியூக் பல்கலைக்கழகம் செய்துள்ள ஒரு ஆய்வில் ஒரு பாடலின் விலையை 0.63 டாலராக குறைத்தால் திருட்டு பிரதியெடுப்பு 50% குறையும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
விலையை அடுத்து நுகர்வோனை எரிச்சல் படுத்துவது மரபான வாங்குதல் முறையில் உள்ள கால தாமதம். உதாரணமாக, சாரு நிவேதிதா, எஸ்.ரா அல்லது ஜெயமோகனின் நூல் வெளியிடப்பட மறுநொடியில் அதனை வாங்கிப் பார்க்க வேண்டும் என்று ஐஸ்லாந்து அல்லது லிபேரியாவில் வசிக்கும் ஒரு தமிழ் வாசகன் விரும்பினால் தமிழ் சூழலில் அது சாத்தியப்படுமா? காலச்சுவடு சில மின்நூல்களை வெளியிட்டுள்ளது. அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களின் சில நூல்களும் மின்வடிவில் கிடைக்கின்றன. சங்கப்பலகை இணையதளத்தில் இவற்றை வாங்கலாம். ஆனால் தமிழில் இதுவரையிலான பட்டியல் மிகவும் குறுகியது. மற்றபடி பெரும்பாலான முக்கிய நூல்களுக்கு இணையதளத்தில் ஆர்டர் கொடுத்து ஒரு வாரமோ ரெண்டு வாரமோ அதற்கு மேலோ காத்திருக்க வேண்டும். ஒரு ஆய்வாளனுக்கு அவசரமாக அ.கா பெருமாளின் நாட்டாரியல் புத்தகமோ ஷாஜியின் இசை நூலோ உடனடியாக தேவைப்படுகிறதென்றால் முடியுமா? மேற்கில் இது அத்தனையும் சாத்தியம். காத்திருக்கும் அவகாசம் இன்மை இன்றைய தலைமுறையின் ஒரு ஆதாரப் பண்பாகவே மாறி விட்ட நிலையில் மரபான பதிப்பு நூல்கள் ஒரு அர்த்தத்தில் காலாவதி ஆகி விட்டன.
சில பதிப்பகங்கள் பௌதிக நூல்களின் விற்பனையை ஊக்குவிக்க அவற்றின் மின்பிரதிகளை வெளியிடுவதை தாமதப்படுத்துகின்றன. இந்த உத்தி வாசகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது; எரிச்சலை தூண்டுகிறது. பயணத்தின் போது ஒரு புதுநூலை மின்வாசிப்பு கருவியில் படிக்க விரும்பும் வாசகரை இந்த கட்டாய தாமதம் திருட்டு மின்புத்தகத்தை நோக்கி செலுத்துகிறது. எம்மி விருது பெற்ற எழுத்தாளரும், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் பத்தியாளருமான ரேண்டி கோஹன் என்பவர் ஸ்டீபன் கிங்கின் சமீபத்திய நாவலான் “Under the Dome” இன் கெட்டி அட்டை நூலை வாங்கிய பின்னர் அவசியம் கருதி அதன் திருட்டு மின்பிரதியை தரவிறக்கி பயணத்தின் போது தான் படித்த்தாக கூறுகிறார். ஜெ.கெ ரௌலிங் தனது ஹாரி போட்டர் நாவல்களை மின்புத்தகங்களாக வெளியிடுவதில்லை என்று முடிவு செய்தார். இது புத்தக விற்பனையை அதிகப்படுத்தும் என்று அவர் நம்பினார். ஆனால் அவரது நாவல்கள் வெளியான சில நாட்களிலே வாசகர்கள் மெனக்கட்டு ஸ்கேன் செய்தும், தட்டச்சு செய்தும் மின்புத்தகங்களை இணையத்தில் உலவ விட்டார்கள். தங்களுக்கு பிரியமான எழுத்தாளருக்கு எதிராக வாசகர்கள் இப்படி செயல்பட்டதற்கு மூன்று காரணங்கள் சொல்லலாம். ஒன்று பழி வாங்க. அடுத்து, மின்வாசிப்பு கருவிகளில் எடுத்துச் சென்று படிக்கும் சுயவசதிக்காக. அடுத்து நண்பர்களுடன் பகிர்தல் மூலம் தங்கள் வலை தொடர்பை விரிவாக்க. மின்பதிப்பை வெளியிட்டிருந்தால் திருட்டுத்தனமாக இணையத்தில் பெருகிய கோடிக்கணக்கான பிரதிகளுக்கு பதில் அசலான மின்நூல்களை வாசகர்கள் வாங்கி படித்திருப்பார்கள். திருட்டுப்பதிப்புகளின் எண்ணிக்கையில் பாதியாவது மின்பதிப்பாக அவர் விற்றிருக்கலாம்.
இது ஒரு சுவாரஸ்யமான விவாதம். சாரு நிவேதிதா சமீபமாக ஒரு கட்டுரையில் தன் புத்தகங்களின் விற்பனை குறைந்ததற்கு வலைப்பக்கத்தில் அவர் எழுத்துக்கள் இலவசமாக கிடைப்பதே காரணம் என்று நொந்து கொண்டார். ஆனால் 66 மொழிகளில் நூறு மில்லியன் புத்தகங்களுக்கு மேல் விற்றுள்ள ”ரசவாதி” புகழ் போல் கொயில்ஹோ தன் புத்தங்களின் திருட்டுப் பிரதிகளை தானே ஒருங்கிணைத்து வெளியிட்டார். இதை அவர் மிகவும் சாமர்த்தியமாக செய்தார். Torrents போன்ற கோப்பு பகிர்வு தளங்களுக்கு சென்று தன் புத்தகங்களின் திருட்டு மின்பிரதிகளை திரட்டினார். Pirate Coelho என்று ஒரு வலைப்பூ ஆரம்பித்து இந்நூல்களின் தொடுப்புகளை வெளியிட்டார். பிறகு தனது சொந்த இணையதளத்தில் ”இப்படி ஒரு திருட்டுப்பிரதி வலைப்பூவை தான் காணக் கிடைத்து அதிர்ச்சி அடைந்ததாக” அப்பாவித்தனமாக அறிவித்தார். இதன் மூலமாக எண்ணற்றோர் Pirate Coelhoவுக்கு சென்றனர். ஆனால் இந்நிகழ்வால் கொயுல்ஹோவின் பதிப்பு நூல்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இலவசப் பிரதிகள் மக்களை மேலும் புத்தகங்கள் வாங்கத் தூண்டுவதாக கொயில்ஹோ கருதுகிறார். Baen எனும் பதிப்பகம் தனது பல எழுத்தாளர்களின் ஆரம்ப நாவல்களில் சிலவற்றை முழுமையாக இணையதளத்தில் (http://www.baen.com/library/) இலவசமாக வெளியிடுகிறது. இப்புத்தகங்களை தரவுறக்கி படிக்கும் வாசகர்கள் கவரப்பட்டு பதிப்பு நூல்களையும் வாங்கி விடுவதால், விற்பனை அதிகமாகி உள்ளதாய் இணையதளத்தின் நூலகர் எரிக் பிளிண்ட் கூறுகிறார். மேலும் வரலாற்றில் என்றுமே இலவச புத்தக வினியோகம் விற்பனையை தொலைநோக்கில் எதிர்மறையாய் பாதித்ததில்லை என்று கூறுகிறார். இது உண்மையில் ஒரு வளமான வாசக தளத்தை உருவாக்க பயன்படும் சிறந்த உத்தி என்கிறார் எரிக்.
தமிழ்ச்சூழலில் அதிகம் திருட்டுப்பிரதியாக்கப்பட்ட எழுத்தாளர் சுஜாதா தான். அழியாச்சுடர்கள் இணையதளத்தில் (http://azhiyasudargal.blogspot.com) தமிழ் தீவிர இலக்கியர்களின் சில முக்கிய படைப்புகள் இலவச வாசிப்புக்கு கிடைக்கின்றன. இணையத்தில் எஸ்.ரா, ஜெ.மோ, சாரு போன்ற எழுத்தாளர்கள் இதுவரை பெற்றுள்ள கவனம் மற்றும் உருவாக்கி உள்ள வாசகத் தளத்தை கருத்திற் கொள்கையில் பரவலான மின்நூல் வெளியீடு நேர்மறையான பலன்களைத் தான் தரும் என்று கணிக்க முடிகிறது. எதிர்காலத்தில் மின்வாசிப்புக் கருவிகள் தமிழில் ஒருவேளை பரவலாகாத பட்சத்திலும் வேறுபல வாசல்கள் திறந்த படி தான் இருக்கும். ஸாம்ஸங்கின் சமீப ஸ்மார்ட்ச் போன்கள் மின்வாசிப்பு கருவி இணைக்கப்பட்டே வருகின்றன. எதிர்காலத்தில் மைக்ரோமேக்ஸ் நுண்பேசி போன்று குறைந்த விலைகளில் இத்தகைய ஸ்மார்ட் போன்கள் பெரிய திரை மற்றும் மின்வாசிப்பு கருவியுடன் வரலாம். இந்த சாத்தியங்கள் எட்டும் தூரத்தில் உள்ள பட்சத்தில் தமிழில் நூல் பிரசுரத்தை வலுப்படுத்த மேலும் அதிக மக்களிடம் கொண்டு செல்ல மின்நூல்கள் பயன்படக் கூடும். ரெண்டாம் பதிப்பு வராத எத்தனையோ முக்கிய நூல்கள் தமிழில் உள்ளன. இவற்றின் இற்றுப்போன பழைய பிரதிகளை தேடி காலம் வீணடிக்காமல் இருக்கவும், எதிர்காலத்துக்கு பாதுகாத்து வைக்கவும் வாசகர்கள் இவற்றுக்கு மின்பிரதிகள் உருவாக்குவது தான் ஒரே வழி. அரிய புத்தகங்களின் பௌதிக பிரதிகளை நாம் பிறருக்கு தர தயங்குவது சகஜம். ஆனால் மின்புத்தகங்களை யாருக்கும் தயக்கமின்றி வழங்கலாம். வாசிப்புச் சூழலை இது மேலும் ஆரோக்கியமாக மாற்றலாம். காப்புரிமை பற்றி கவலைப்படாமல் அற்புதமான நூல்களைக் கொடுத்து தொடர்ந்து மையநீரோட்டத்தால் புறக்கணிக்கப்பட்ட/படுகிற எழுத்தாளர்கள் பலர். இவர்கள் போல் கொயில்ஹோ வழியில் ரகசியமாக pirate வ்லைப்பக்கங்கள் அமைத்துப் பார்க்கலாம். தங்கள் மீது தொடர்ச்சியான கவனத்தை ஏற்படுத்தலாம். சேமிப்புப் பழக்கத்திற்காக புத்தகம் பொறுக்கும் எல்லைக்கு வெளியில் உள்ளோரையும் மையத்துக்கு இழுக்க பைரஸி பயன்படலாம். திருட்டு மின்பிரதி நிபுணரும் அமெரிக்க மென்பொருளாளருமான The Real Caterpillar என்பவரின் சுவாரஸ்யமான பேட்டி Themillions.com என்ற இணையதளத்தில் உள்ளது. இணைப்பு: http://www.themillions.com/2010/01/confessions-of-a-book-pirate.html. யாரேனும் மொழியாக்கி இதனை வெளியிடலாம்
பின்குறிப்பு: உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட போ.கருணாகரமூர்த்தியின் “பெர்லின் இரவுகள்” புத்தகத்தின் மின்பிரதி http://www.noolaham.org/ வலைதளத்தில் இலவசமாக கிடைக்கிறது..இப்புத்தகத்தை தரவிறக்கப் போகிறவர்கள் எத்தனை பேர் உயிர்மையில் இருந்து வாங்கப் போகிறார்கள்?
2010 ஜூலை 18-அன்று துவங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டு ஆட்டத்துடன் முத்தையா முரளிதரன் விடைபெறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் இப்படியான ஒரு தனிநபர் திறமையை தனது நிலைப்புக்காக நம்பி இருந்ததில்லை. இந்திய அணிக்கு டெண்டுல்கர், கும்பிளே, ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங், வார்னே, மேற்கிந்திய தீவுகளுக்கு லாரா, ஆம்புரோஸ், வால்ஷ் போன்ற அதிமனிதர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று ஆடியுள்ள போதிலும் முத்தையா முரளிதரன் அளவுக்கு யாரும் அனாயசமாகவும் எண்ணிக்கையிலும் ஆட்டங்களை வென்று தந்ததில்லை. தனிப்பட்ட ஒழுங்கீன பிரச்சனைகள், ஆடுகள சச்சரவுகள், அணிபிளவு அரசியல், நிர்வாக எதிர்ப்பு போன்று எந்த களங்கமமும் அற்ற ஆட்டவரலாற்றை பொறுத்த வரையில் முரளிதரனுடன் ஒப்பிடத்தக்க நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. ஆஸ்திரேலியாவின் ஆண்டுரூ சைமண்ட்ஸை ஹர்பஜன் இனஅவதூறு செய்த போது அவரை காப்பாற்ற விசாரணைக் குழுவின் தலைமை நீதிபதி முன்பு சச்சின் பொய் சொன்னார் என்றொரு முக்கிய குற்றச்சாட்டு இன்றும் சொல்லப்படுகிறது. அஸருதீன், திராவிட் ஆகியோரின் தலைமையின் கீழ் மத்திய மட்டை வரிசையில் ஆட விருப்பமில்லாத நிலையில், அணி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ள பட்ட போதெல்லாம் சச்சின் மிகுந்த தயக்கத்துடன் தனது ஆளுமைக்கு மாறுபட்ட முறையில் ஆடியுள்ளார். அணி நிர்வாகத்துடன் இப்படியான முரண்பாடுகள் ஏற்படும் போது சச்சின் தனது நத்தைக் கூட்டுக்குள் முடங்கி விடுவார். ஆனால் முரளிதரனிடம் இத்தகைய தன்னலக் கீற்றுகளை காண முடியாது. முரளியை அவரது அணியின் சகவீரர்களுடன் ஒப்பிடுவது மேலும் நியாயமானதாகவும் அதிக வெளிச்சம் தருவதாகவும் இருக்கும்.
நாற்பது வயதில் ஜெயசூரியாவின் ஆட்டத்திறன் பழுதடைந்த கனரக வாகனம் போல் இடையறாது கசிந்து கொண்டிருந்தது. அணியின் தலைவர், மூத்த வீரர்கள், நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் அவரது சுயேச்சையான ஓய்வை ஆவலாதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தொடர்ச்சியாக ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்து வரும் நிலையிலும் ஜெயசூரியா விடைபெற மறுத்தார். அவரை போற்றி, கொண்டாடிய மக்கள் தூற்றி வெறுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தேர்வாளர்கள் அவரை அணியில் இருந்து விலக்க, ஜெயசூரியா ராஜபக்சேவை சந்தித்து பரிந்துரை வாங்க முயன்றார். பின்னர் தோல்வியின் விளிம்பில் அனைத்தையும் பணயம் வைத்து இழந்த நிலையில் ஜெயசூரியா இந்தியாவில் ஐ.பி.எல் ஆடியபடியே இலங்கையில் தேர்தலில் நின்று வென்றார். இந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அடுத்து வந்த 2010 T20 உலகக் கோப்பைக்கான அணியில் இடத்தை உறுதி செய்தார். தொடர்ச்சியாக குறைவான ஓட்டங்களே எடுத்தாலும் T20 வழமைக்கு மாறாக அனைத்து ஆட்டங்களிலும் இடம் பெற்றார். இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்ததற்கு ஒரு எம்.பியை எல்லா ஆட்டங்களிலும் ஆட வைப்பதற்கான கட்டாயமும் ஒரு காரணமாக அமைந்தது. இலங்கை ஒருநாள் ஆட்டவரலாற்றை புத்துருவாக்கியவர் என்றாலும் அவரது இறுதிப் பக்கங்கள் கசப்பினாலும் வெறுப்பினாலும் எழுதப்பட்டிருந்தது. இலங்கையினர் எவ்வளவு கசப்படைந்து உள்ளனர் என்றால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஜெயசூரியாவை தூக்கி விட்டனர். நடந்து வரும் டெஸ்டோடு விடைபெறும் முரளியை சேர்த்துள்ளனர். ஜெயசூரியாவைப் போல் வேறெந்த கிரிக்கெட் நாயகனும் தனது வாரியத்திடம் இப்படியொரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியது இல்லை.
மஹிளா ஜெயவர்த்தனேவின் ஆட்டவாழ்வு கிளம்பி புகைவிட இலங்கை வாரியமும் தேர்வாளர்களும் நிறைய உந்தி தள்ள வேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் அணிக்குள் கொண்டு வரப்பட்ட மஹிளா தொடர்ச்சியாக ஏமாற்றமளித்தார். அபரிதமான திறமை கொண்ட ஊதாரியான மட்டையாளராக விமர்சகர்கள் அவரை சித்தரித்தனர். துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார். தனது ஆட்டவாழ்வின் பிற்பாதியில் தான், குறிப்பாக அணித்தலைவராக செயல்பட்ட போது, ஜெயவர்த்தனே விழித்துக் கொண்டு சிறப்பாக மட்டையாட ஆரம்பித்தார். மற்றொரு முன்னணி வீரரான மார்வன் அட்டப்பட்டுவின் ஆட்ட்வாழ்வின் கடைசி கட்டம் கறை படிந்ததாக இருந்தது. 2007 உலகக் கோப்பைக்காக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் இந்த முன்னாள் தலைவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்பட இல்லை. இதை தனக்கு நேர்ந்த அவமதிப்பாக கருதி அட்டப்பட்டு ஓய்வு பெற்று விலகிக் கொண்டார். இந்தியாவில் கங்குலியின் கீழ் கும்பிளே இப்படியான கடுமையான உதாசீனத்துக்கு ஆளானார். ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை; மேற்கிந்திய பயணத்தில் உடைந்த மோவாயுடன் பந்து வீசி தன் அணியுணர்வை, மனவலிமையை கங்குலிக்கு நிரூபித்தார். இலங்கை அணிக்கு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு வகைகளில் பங்காற்றிய பெரும் திறமைசாலிகள் இருந்துள்ளனர். ஆனால் பதினெட்டு வருடங்களாக தன்னலமற்று, தீவிர அணியுணர்வுடன் யாரும் இப்படி நிலைத்ததில்லை; இலங்கை அணியில் மட்டுமல்ல, உலகமெங்கும், தொடர்ச்சியாக (இரண்டு இன்னிங்சிலுமாய்) சுமார் நூறு ஓவர்களை ஒவ்வொரு ஆட்டத்திலும் வீசும் சுமையை, தனிப்பட்ட வெற்றிகளைக் கொண்டு அணியின் பலவீனத்தை மறைக்கும் பொறுப்பை ஏற்றதும், நெடுங்காலம் தன்னலமற்று உழைத்து விட்டு அணி ஸ்திரத்தன்மை அடைந்த நிலையில் தனது வலிமை குன்றியதும், சுயமாக விலக முடிவு செய்ததும் முரளிதரன் ஒருவர் மட்டும் தான். இத்தகைய நீட்சியும், தன்னலமற்ற் ஈடுபாடும் சச்சினிடம் காணப்பட்டாலும் அவர் முரளி அளவுக்கு ஆட்டங்களை தனது அணிக்கு வென்று அளித்ததில்லை. டெஸ்டில் கிட்டத்தட்ட எண்ணூறு விக்கெட்டுகள், அனைத்து அணிகளுக்கு எதிராக ஒருமுறையாவது பத்து விக்கெட்டுகள் போன்று வியப்பிலாழ்த்தும் சாதனை விபரங்கள் மட்டுமல்ல, முரளியின் ஆளுமையே மிக தனித்துவமாகனதாகவும், யாராலும் ஈயடிக்க முடியாததாகவுமே இருந்து வருகிறது. விக்கெட் எண்ணிக்கையை விட தனது அணியின் கால்தசைகள் வலுவடையும் வரை அதை தோளில் தூக்கி நின்று வெகுதூரம் அழைத்து சென்றவர் என்பதே அவரது ஆக முக்கியமான தகுதியாக எதிர்காலம் கருதும்.
முரளி ஓய்வு பெறும் இவ்வேளையில் பொதுவாக இரண்டு எதிர்மறை விமர்சனங்கள் தோண்டியெடுத்து மினுக்கப்படுகின்றன. ஒன்று, அவரது பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பானது என்பது; அடுத்து வார்னேயுடன் ஒப்பீடு. முரளியின் முழங்கை பிறவியில் இருந்தே சற்று வளைந்தது என்பதால் அவர் பந்து வீசும் போது எறிவதான் தோற்றம் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் இதை ஒருவித பார்வை மயக்கம் என்கிறார்கள். அதாவது நமது மனிதக்கண்களால் பார்க்கப்பட்டு தெரிவது பொருளொன்றின் ரெட்டை பரிமாணத் தோற்றம் மட்டுமே. மூளை இதற்கு மசாலா சேர்த்து முப்பரிமாணம் ஆக்குகிறது. நாம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல. முரளி நான்கு முறை அறிவியல் சோதனைகள் மூலம் தந்து வீச்சு முறைமையின் தூய்மையை நிறுவி விட்டார். கையை கட்டுப்படுத்தும் பிரேஸ் எனும் உலோகக் கருவியை அணிந்து பந்து வீசிக் காண்பித்தார். பிரேஸ் முழங்கையை வளைக்க விடாது. இவ்வாறு வளைக்காமலே படக்கருவி முன்னிலையில் முரளி தனது வழக்கமான பந்துகளை அதே திருப்பத்துடன் வீசி காண்பித்தார். ஆனால் கண்களை மட்டுமே நம்பும் முன்னாள் வீரர்களும், விமர்சாகர்களும் தொடர்ந்து முரளியை சந்தேகிக்கின்றனர். பிராட்மேன், ஸ்டீவ் வாஹ் ஆகியோரைத் தவிர்த்து ஆஸ்திரேலிய மண்ணின் பிரதமர், நடுவர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட்டு அந்த மண்ணின் வாயுள்ள ஒவ்வொரு உயிரும் பெரும் துவேசத்துடன் அவரை ”பந்தை எறிபவன்” என்று கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் குற்றம் சாட்ட முயன்று வருகிறார்கள். இத்தனைக்கும் உலகின் பந்து வீச்சாளர்களில் தொண்ணூறு சதவீதத்தினர் ஒரு குறிப்பிட்ட கோணத்துக்குள் பந்தை எறிபவர்கள் தாம் என்று ஒரு விஞ்ஞான ஆய்வு நிரூபித்தது. இந்த எறிபந்தாளர்களில் ஆஸி அணியின் பிரட் லீயும் அடக்கம். மேலும் முரளிதரனின் பந்து வீச்சு முறையை ஆய்ந்து பத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இவை அவரது வீசும் பாங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டது தான் என்று சான்று பகர்ந்தன. இந்த ஆய்வு முடிவுகளால் தூண்டப்பட்டு ஐ.சி.சி 15 டிகிரி கோணத்துக்குள் முழங்கையை வளைக்கலாம் என்று புதுச் சட்டம் கொண்டு வந்தது; இதனால் முரளியின் வீச்சு பாங்கு விதிமுறைக்கு உடபட்டது தான் என்று அறிவித்தது. ஆனாலும் பல ஆஸிகளும், பிற வெள்ளையர்களும் இந்த புது விதிமுறையை நிராகரித்து, முரளியை எறிபந்தாளர் என்று அடையாளப்படுத்துவதில் விடாப்பிடியாக உள்ளனர். ஷேன் வார்ன் முரளிதரனை பற்றி ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு எழுதிய பத்திரிகையில் அவரது வீச்சுமுறை ”கிட்டத்தட்ட தூய்மையானது” என்று சோற்றுக்குள் மூடி மறைத்தே பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் பத்தியாளர் பீட்டர் ரோபோக் ”In a freakish league of his own” என்ற் கட்டுரையில் இயற்கைக்கு மாறான வினோத பந்து வீச்சாளர்களின் வரிசையில் முரளிதரனை சேர்க்கிறார்; வார்னை எளிய பந்துவீச்சை மார்க்கத்தை ஒரு கலையாக மாற்றி சாதனையாளர் எனும் பீட்டர் ரீபோக் முரளி மையநீரோட்டத்தை சேர்ந்த மரபான பந்து வீச்சாளர் அல்ல என்கிறார். ஊனக்கை இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு மரபுக்குள் இடமில்லை என்பது ரீபோக்கின் அணுகுமுறை. இதே தர்க்கத்தை நல்லவேளை நாம் பீத்தோவனுக்கும், மில்டனுக்கும், பயன்படுத்துவது இல்லை. இவர் அடுத்து முரளிதரன் வார்னை போன்று ஆவேசமாக, துடிக்குத்தன வெறுப்பேற்றல்களின்றி ஒருவித மென்மையான பொறுமையுடன், பவ்யத்துடன் ஆடியதை குறையாக சொல்கிறார். தனிப்பட்ட திறமை வெளிப்பாடுகளால் குறுகிய நேரத்தில் அவரால் ஆட்டத்தின் போக்கை திருப்ப முடிந்ததில்லை என்று வேறு தகவல்பிழையான ஒரு அவதானிப்பை செய்கிறார். 132 ஆட்டங்களில் முரளி 66 தடவை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் ஒரு ஆட்டத்தில் வீழ்த்தி உள்ளார். இதன் பொருள் தான் ஆடிய பாதிக்கு மேலான ஆட்டங்களில் முரளி எதிரணி விக்கெட்டுகளில் பாதிக்கு மேல் கொய்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது. மேலும் சுருக்கமாக, இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் முரளி வெற்றிக்கான கருவியாக இருக்கிறார். இதை விட ஆபத்தான ஒரு பந்து வீச்சாளர் இருக்க முடியுமா? முரளியையும் வார்னையும் ஒப்பிடுவது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தமிழக மக்களுக்கு ஏற்படும் குழப்பததை போன்றது. முரளியிடம் ஆவேச அணுகுமுறை இல்லையென்பது அசோகமித்திரன் எழுத்தில் வன்முறை இல்லை என்று சு. ரா சொன்னது போன்றது. ஆரம்பத்தில் சந்தேகித்தாலும், அறிவியல் ஆதாரம் கிடைத்த பின்னர் மேற்கிந்திய தீவு முன்னாள் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் முரளியின் பந்துவீச்சு ஐயத்துக்கு அப்பாலானது என்று ஆதரவளித்தார். இங்கிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆங்குஸ் பிரேசரும் இந்த ஆதரவு முகாமை சேர்ந்தவரே. பிராட்மேனே பாராட்டிய பின்னரும் கூட தொடர்ந்து முரளியின் மென்னியை நெறிப்பதற்கு ஆஸ்திரேலிய விரல்களே அதிகம் நெளிவதற்கு அவர் வார்னின் சாதனையை விஞ்சி விட்ட பொறாமையும், எரிச்சலும் முக்கிய காரணங்கள். ஆஸ்திரேலியர்கள் ”மோசமான தோல்வியாளர்கள்” என்ற அடைமொழி உலகப் பிரபலமானது; தொடர்ந்து அவர்களாலேயே இலவசமாக நிரூபிக்கப்பட்டு வருவது.
அடுத்த நூறு வருடங்களுக்கு முரளியின் சாதனை வரலாற்றின் புள்ளியல் விபரங்களும், விக்கெட்டுகளின் சிகரமும் அவரது வீச்சுமுறைமை பற்றிய சர்ச்சையுடன் நினைவில் வெம்மை தணியாமல் இருக்கும். அவரது விக்கெட் சாதனை யாராலும் முறியடிக்கப் படாமல் போனாலும் அதனை இந்த சர்ச்சை ஒன்றே அர்த்தமற்றதாக்கி விடும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறுவது நிஜமாகுமா? ஊடகப் பார்வையில் முரளியின் விக்கெட்டுகள் வெறும் எண்களாக உதிரலாம். ஆனாலும் கிட்டத்தட்ட கடந்த இருபதாண்டு காலத்தின் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அவரது தாக்கம் நிச்சயமாய் என்றும் பொருட்படுத்தத் தக்க ஒரே நிஜமாக இருக்கும். கிரிக்கெட் நிர்தாட்சண்யமாக எண்களை அருங்காட்சியகத்திலும், வரலாற்றுத் தாக்கத்தை தனது இதயத்திலும் பொறித்து வைத்திருக்கிறது. முழங்கை வளைந்ததா நேரானதா என்ற சர்ச்சை காலத்தின் ராட்சத பற்களுக்குள் மாட்டிய ஜவ்வாக மட்டுமே நிலைக்கும்.
விஜய மகேந்திரனின் நூல் விமர்சனக் கூட்டம் நேற்று மேற்கு கே.கே நகரில் உள்ள டிஸ்கவரி புக் பேலஸ் எனும் புத்தகக் கடையில் நடந்தது. தேர்ந்தவர்களுக்கே உரிய விமர்சன வட்டம் மற்றும் நூற்றுக்கணக்கானோர் கூடி இலக்கியப் பேச்சாளர்களை பாப்பையாவாகத் தூண்டும் பெருங் கூட்டத்துக்கும் மத்தியில் ஒரு புள்ளியில் இருந்தது இந்நிகழ்ச்சி. அதாவது பாப்பையாவுக்கும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் நடுவில். சுமார் இருபத்தைந்தில் இருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் பார்வையாளர்கள். இதை சரியாக கணிப்பது மிகவும் சிரமம். குறுக்கும் நெறுக்குமான எறும்பு சாரிகள் போல் கூட்டம் தொடர்ச்சியாக கலைந்து கூடிக் கொண்டிருந்தது. முதலில் கூத்துப்பட்டறையை சேர்ந்த தம்பிச்சோழன் சி.மோகன் மற்றும் ரமேஷ் பிரேதனின் கவிதைகளை நிகழ்த்திக் காட்டினார். பிறகு யவனிகா ஸ்ரீராம், ஐயப்ப மாதவன், தாரா கணேசன், பாக்கியம் சங்கர் ஆகியோருடன் நானும் பேசினேன். நான் முதன்முதலாக பேசிய இலக்கியக் கூட்டம். மிகவும் பதற்றமாக கையைப் பிசைந்தபடி குறிப்புகளை மனதில் மேல் கீழாக அடுக்கி குழப்பிக் கொண்டிருந்தேன். முதலில் பேசின யவனிகாவின் பேச்சு அவ்வளவு பிரமாதம். “நவீன உலகின் ஒவ்வொரு பொருளும் பாலியல் வடிவம் கொண்டிருக்கின்றன” என்றார். எழுத்தாளன் பேசும் போது இப்படியான கூர்மையான அவதானிப்புகள் தாம் முக்கியம். யவனிகாவின் சிறப்பான பேச்சுக்கு பிறகு என் பதற்றம் அதிகரித்தது. அவருடன் ஒப்பிட்டால் நான் சொல்லி விடப் போகிறேன் என்ற பயம். நல்ல வேளை என்னை கடைசியாக பேச அழைத்தார்கள். தாரா கணேசன் பேசும் போதே மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன். சுருக்கமாக எளிமையாக பேசுவது என்று தீர்மானித்தேன். என்னை அழைத்ததும் மைக்கை தவிர்த்தேன். அந்த கூட்டத்தை ஒரு வகுப்பறையாக நினைத்து பேச ஆரம்பித்தேன். பேச்சு சிலருக்கு பிடித்திருந்ததாக சொன்னார்கள். யவனிகா கைகொடுத்து பாராட்டினார். அங்கீகரிக்க தயக்கமற்ற மனிதர். அவரிடம் ஒரு சொல் கூட அதுவரை நான் பேசி இருந்ததில்லை. களைத்துப் போன நிலையிலும் அவர் மட்டும் கடைசி வரை மேடையில் இருந்தார்.
மூன்று வருடங்களுக்கு பிறகு நண்பர் செல்வப்புவியரசை சந்தித்தேன். அதைப் போன்றே இணைய நண்பரான மாமல்லன் கார்த்தி, லக்கி லுக், அதிஷா, கேபிள் சங்கர் ஆகியோரின் சந்திப்பும். அதிஷாவின் எழுத்து போலே பார்த்ததும் அவரை எனக்கு பிடித்து போனது. மென்மையான குரல், மென்மையான சிரிப்பு, மென்மையான நக்கல் ... இப்படியே.
கூட்டம் முடிந்து தொடர்ந்து மழை பெய்தது. வெளியே கடை ஷட்டரில் சாய்ந்து காத்திருந்து அரட்டை அலசல் புலம்பல் என கழித்து பிறகு நனைந்த படியே புறப்பட்டு செல்வா மற்றும் மகேந்திரனுடன் இரவுணவு அருந்தினேன். சிரமமாக இருந்தாலும் அன்று மழை பெய்தது பிடித்திருந்தது. மழை மனிதர்களுக்குள் ஒரு அன்னியோன்யத்தை கொண்டு வந்து விடுகிறது. நகரத்தின் அழைப்புகளில் இருந்து சற்று நேரம் காப்பாற்றுகிறது.
விஜய் மகேந்திரனை எனக்கு அதற்கு முன் நேரில் பரிச்சயம் இல்லை. போனில் சில வார்த்தைகள் பேசி இருப்போம். என்னுடைய இது போன்ற ஒரு கூட்டப்பதிவை படித்து விட்டு அழைத்து பேசினார். அதற்கு பின்னர் சந்திக்க முயன்று நடக்கவில்லை. அடுத்து அவர் பேசினது கூட்டத்துக்கு அழைக்கத்தான். ஒருநாள் பரிச்சயத்தில் விஜய்யை இப்படி புரிகிறேன். கூர்மையானவர். மனிதர்களை நன்றாக கவனிக்கிறார். நட்பை பேணத் தெரிந்தவர். முக்கியமாக அவரிடம் நட்பு பாராட்டுவது சிக்கலற்றதாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். இந்த ஊகம் சரியாகவோ தவறாகவோ போகட்டும். அதுதானே சுவாரஸ்யம்.
சில நண்பர்களிடம் பேசியதில் நான் உயிர்மையில் இன்னும் பணி புரிவதாக நினைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இல்லை. கடுமையான முதுகுவலி காரணமாக உயிர்மையில் ஒரு மாதம் மட்டுமே என்னால் பணி செய்ய முடிந்தது. (இதை முன்னரே பிளாகில் அறிவித்திருக்க வேண்டும்). கல்லூரிப் பணி வேறு இருப்பதால் சமாளிக்க முடியவில்லை. மனுஷ்யபுத்திரன் நல்ல வேளை புரிந்து கொண்டார். ஜெயமோகன் எழுதியது போல் நான் காய்நகர்த்தி உயிர்மை ஆசிரியக் குழுவில் சேரவில்லை. அப்படி ஒரு உயர்வான அரசியல் நோக்கம் இருந்திருந்தால் ஒரு மாதத்தில் விட்டிருக்க மாட்டேன். வேறு சிலர் அப்போது நம்பியது போல் நான் ஊதியத்துக்காகவும் மனுஷ்யபுத்திரனை ஆதரித்து அக்கட்டுரைகளை எழுதவில்லை. இதுவரை நான் அவரிடம் எந்த பணத்தையும் எதிர்பார்க்கவோ பெற்றுக் கொண்டதோ இல்லை. அதை விட மேலான உதவிகளை எனக்கு செய்துள்ளார். அவரது ஊக்குவிப்பு இன்றி நான் உரை எழுதி இருக்க மாட்டேன். எழுத்துலகில் எனது சின்னஞ்சிறு இருப்புக்கு அவர் முக்கிய காரணம். இதை எல்லாம் சொல்வதற்கு இச்சந்தர்பத்தை பயன்படுத்துகிறேன். நான் என்றும் உயிர்மையில் தான் இருக்கிறேன். ஆனால் ஊழியனாக இல்லை.
இக்கூட்டத்தில் நான் பார்வையாளனாக கலந்து கொள்ளவில்லை என்பதால் மேலதிகமாக விமர்சிப்பது நியாயமாக இருக்காது. பார்வையாளர் யாராவது அதற்குரிய சுதந்திரத்துடன் கூட்டம் பற்றி எழுத வேண்டும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்தபடி நானதை செய்ய முடியாது.
ஜூன் ஆரம்பத்தில் அயாபேவில் உள்ள குயவர் நண்பர் முராயாமா-சானிடம் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
“மேகி”, அவர் சொல்கிறார், “மின்மினிகள் வந்து விட்டன!”
“சரி”, நான் சொல்கிறேன், “நாங்கள் உடனே வந்து விடுகிறோம்!”
மலை கிராமங்கள் வழி நெளிந்து செல்லும் நாட்டுப்புற நெடுஞ்சாலை வழி இரண்டரை மணிநேர பயணத்தில் அயாபேவை அடையலாம். நானும் ஜானும் இரவு தங்குவதற்கான பையொன்றை கட்டி விட்டு பலகலைக்கழக வகுப்புகள் முடிந்த உடன் கிளம்புகிறோம். முராயாமா-சான், அவரது மனைவி அயாகோ மற்றும் பத்து வயது மகள் தொமோக்கோ தமது பழைய பண்ணை வீட்டில் எங்களை அன்பாக வரவேற்கிறார்கள். நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள் என்றாலும், அவரது இறுதிப்பெயரால் தான் அழைப்போம். அவரது மனைவியும் அப்படித்தான்.
டோபூ, மீன் மற்றும் தோட்டத்து காய்கனிகளாலான ஒரு எளிய சாப்பாட்டை அயாக்கோ தயார் செய்கிறார். இருளத் தொடங்கியதும், நங்கள் வலைகள் மற்றும் கண்ணாடி ஜாடிகளை எடுத்துக் கொண்டு வெளியே செல்கிறோம். ட்சுயுவுக்கு [1] அவ்விரவு குறிப்பிடும்படியாக தெளிவாக இருக்கிறது.
நட்சத்திரங்கள், நெல்வயல்களில்
நட்சத்திர பிரதிபலிப்புகள்
ஓ! மின்மினிகள்
மின்மினிகள் நெல்வயல்களின் வரப்பிலுள்ள புற்களின் மீதும், ஈரநிலத்தில் செழிக்கும் ஹொட்டாரு புக்குரோக்கள், அதாவது பெல்பூக்கள், மீதும் அமர்கின்றன. தொமோக்கோ ஒரு பெல்பூவை எனக்காக பறிக்கிறாள்; ஹொட்டாரு என்றால் மின்மினி என்றும் புக்குரோ என்றால் கோணிப் பை என்றும் விளக்குகிறாள். எங்களது பட்டாம்பூச்சி வலைகளால் காற்றில் மொண்டு வலைநிறைய பட்டாம்பூச்சிகளை பிடிக்கிறோம். ஹொட்டாரு புக்குரோ பூக்களை திறந்து அவற்றின் மென்மையான இதழ் கூண்டுக்குள் மின்மினிகளை நுழைப்பதன் மூலமாய் கவனமாக இடம் மாற்றுகிறோம். விரைவிலேயே பூக்கள் மினிமினிகளின் தழலொளியை பெறுகின்றன. ஒருமணி நேர முடிவில், வீட்டுக்கு செல்ல எங்களுக்கு வழிகாட்டும் அளவுக்கு கைநிறைய லாந்தர்கள் சேர்ந்து விட்டன. மிச்ச மின்மினிகள் ஜாடிகளில் உள்ளன. எங்களிடம் எவ்வளவு உள்ளன? ஐம்பது? நூறு? எரிந்து எரிந்து அணையும் அவற்றின் வெளிச்சங்களைக் கொண்டு அவற்றை எண்ணுவது சாத்தியமல்ல.
பண்ணை வீட்டில் நாங்கள் செருப்புகளை கழற்றி விட்டு பிரதான அறையில் கூடுகிறோம், டாட்டாமியில் [2] ஓய்வாக அமர்கிறோம். முராயாமா-சான் வெளியே தன் சூட்டடுப்புக்கு சென்று, சமீபமாய் சுட்ட சில சாக்கே கோப்பைகளை தேர்ந்தெடுக்கிறார். எங்கள் ஒவ்வொருவருக்கும் சுத்தமான சாக்கே கோப்பை ஒன்றை அளித்து, அதில் சாக்கே நிறைக்கிறார்.
“கான்பாய்!” அவர் நலம் பாராட்டுகிறார்.
அந்த மென்மையான கோப்பைகளை உதடுகளுக்கு எழுப்பியபடி நாங்கள் எதிரொலிக்கிறோம் “கான்பாய்!”
எங்கள் விருந்தோம்புநர் வீட்டின் மிச்சமுள்ள புசுமா [3] கதவுகளை மூடுகிறார் பிறகு கண்ணாடி ஜாடிகளின் மூடிகளைத் திறந்து, மின்மினிகளை அறைக்குள் திறந்து விடுகிறார். நானும் தொமோக்கோவும் ஹொட்டாரு புக்கோருவின் இதழ்களை உரித்து, எங்கள் சிறைக்கைதிகளை தங்கள் பட்டு கூண்டுகளில் இருந்து வெளிவர தூண்டுகிறோம். அவை விரைந்து பாய்கின்றன, விட்டு விட்டு மின்னுகின்றன, எங்கள் கைகள் மற்றும் முட்டிகளில், மாடக்குழியில் உள்ள ஜப்பானிய சுருள்சுவடிகளில் அமர்ந்திட தங்கள் பச்சை விளக்குகளை பளிச்சிடுகின்றன.
மின்மினிகள் நிரம்பிய அறையில்
டாட்டாமியில் கிடக்கிறேன்
மாலை குளிர்மை
அந்த இருண்ட அறையில், நாங்கள் சாக்கே குடித்து, மெதுவாக பேசுகிறோம், மென்மையான விசயங்களைப் பற்றி, நட்பின் முக்கியத்துவம், வாழ்வின் இயற்கையான அபரிதத்தன்மை பற்றி பேசுகிறோம். இரவு ஆழமுற, சாக்கே பூட்டிகள் காலியாக நாங்கள் மணிக்கணக்காக டாட்டாமியில் முணுமுணுத்தபடி கிடக்கிறோம். கூரையில் நட்சத்திரங்கள் மின்னி மின்னி அணைகின்றன. தூங்கும் நேரம் வந்த உடன், முராயாமா-சான் ஷோஜியை [4] திறந்து, இரவுக்குள் மின்மினிகளை விடுவிக்கிறார். காலையில் அவை தொலைவாக பரவலாக, மந்தாரமான வானில் இருளின் புள்ளிகளாக, சிதறியிருக்கும்.
அடிக்குறிப்பு:
1. ஜூனில் இருந்து ஜூலை பாதி வரை நிகழும் ஜப்பானிய மழைக்காலம். பிளம் பழங்கள் கனியும் பருவம் என்பதால் ட்ஸுயுவுக்கு நேரடியான பொருள் “பிளம் மழை” என்பது
2. மரபான ஜப்பானிய பாய்
3. சித்திர வேலைப்பாடுகள் கொண்ட நழுவுக்கதவு
4. மெல்லிய கண்ணாடி காகிதத்தாலான அறை பகுப்புத் திரை
தொண்ணூறுகள் வரையிலான மலையாள சினிமாவின் பொற்கால படைப்பாளிகளில் தீமையை நுட்பமாக ஆராயும் கதைகளை சொன்னவர் பி.பத்மராஜன். அக்காலத்து மேற்கத்திய இலக்கியம் மற்றும் உலக சினிமா மலையாள பொற்கால படங்களை தீவிரமாய் பாதித்துள்ளது ஒரு சுவாரஸ்யமான விசயம். தஸ்தாவஸ்கியின் இடியட் நாவலை உல்டாவாக்கி எம்.டி வாசுதேவன் நாயர் ”நகக்ஷதங்கள்” திரைக்கதையை எழுதினார். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய குறிப்பு வரும் ஒரே இந்திய படம் பி.பத்மராஜனின் ”மூநாம்பக்கம்” தான். அதில் கடலில் மூழ்கிப் போன காதலனை எண்ணி மறுகும் பெண்ணை தேற்ற மார்க்வெஸின் The Story of a Ship-wrecked Sailor நாவலை நினைவுறுத்துகிறார் ஒரு தாத்தா. பத்மராஜனின் ”அபரன்” (மற்றவன்) காப்காவின் ”உருமாற்றம்” நாவலின் தீவிரமான பாதிப்பால் உருவான படம். ஜெயராம், ஷோபனா, மது ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படத்தின் நாயகனான விஸ்வநாதன் காப்காவின் கிரகர் சாம்சாவைப் போன்று சிறுக சிறுக தன் சமூக அடையாளத்தை, ஆதார இருப்பை, இழக்கிறான். அல்லது காலம் அதை அவனிடம் இருந்து பறித்து விடுகிறது.
விஸ்வநாதன் ஒரு மத்தியதர நாயர் இளைஞன். எண்பதுகளின் திரைப்பட நாயகர்களைப் போல் அவனது பிரதான பிரச்சனை வேலை இல்லாதது. வேலை கிடைக்காமை விஸ்வநாதனின் தனிப்பட்ட பிரச்சனையாகவே படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிரதானப்படுத்தப் படுகிறது. வேலை இல்லாமையால் குடும்பம் பாதிக்கப்படுவதற்கு மாறாக குடும்பம் தரும் நெருக்கடியால் அவனது தனிப்பட்ட இருப்பு பாதிக்கப்படுகிறது. குடும்பத்தின் மீது பாசப்பிணைப்பு கொண்டவனாக அவன் காட்டப்பட்டாலும் வேலை விஸ்வநாதனின் தனிப்பட்ட அவசியமாகவே உள்ளது. இந்த தனிநபர் அழுத்தம் கவனிக்கப்பட வேண்டியது. பத்மராஜனின் திரைப்பரப்பு எப்போதும் அழுத்தமான குடும்பப் பிணைப்புகள் கொண்ட ஆனால் தனிநபரான நாயகனால் ஆக்கிரமிக்கப்படுவது. நாயகன் தனிமையில் சிந்திப்பது, எழுதுவது போன்ற காட்சிகள் இவரது படங்களில் பிரதானமாக இருக்கும். மேற்கத்திய கலாச்சாரத்தின் தனிநபர் படிமத்தை கேரள மரபார்ந்த மனதில் நிறுவும் நோக்கத்தில் பத்மராஜன் அடர்த்தியான குடும்பக் காட்சிகளை தனது படங்களில் பயன்படுத்துவதாக சொல்லலாம்ம்
விஸ்வநாதன் நாகரிக தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட ஒரு உத்தம மத்திய வர்க்க இளைஞன். மென்மையான குரலில் ஆங்கிலம் கலந்து பேசுபவன். கூச்சமான உடல் மொழியாளன். வன்முறையையும் அவமானங்களையும் அதிக எதிர்ப்பின்றி ஏற்பான். விஸ்வநாதனின் இரட்டைப்பிறவி போன்று தோற்ற ஒருமை கொண்ட ஒரு ரவுடி கொச்சினில் இருக்கிறான். அவன் பெயர் உத்தமன். வேலை தேடி கொச்சினுக்கு வரும் விஸ்வநாதன் அடையாளக் குழப்பம் காரணமாக உத்தமன் செய்த தவறுகளுக்காக கடுமையான தண்டனைகளை அனுபவிக்கிறான். அவனது தங்கையின் திருமணம் ரத்தாகிறது. பொதுமக்களிடம் அடிவாங்கி, காவலர்களால் கைது செய்யப்படுகிறான். அவனது காதலி உத்தமனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறாள். சவப்பெட்டியில் கடைசி ஆணியாக உத்தமனால் அவனது வேலை பறிபோகிறது. நிர்கதியான விஸ்வநாதன் ஒரு முடிவெடுக்கிறான். தன் அடையாளத்தை அநியாயமாக கவர்ந்து விட்ட உத்தமனின் அடையாளத்தை தான் வரித்துக் கொள்வதே அது.
ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் இது ஆரம்பிக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அவன் உத்தமனின் ஆளுமையை ஒவ்வொரு பொத்தானாக விரும்பி அணிந்து கொள்ள தொடங்குகிறான். ஜார்ஜ் எனும் தனது இன்ஸ்பெக்டர் நண்பனின் துணையுடன் உத்தமன் பற்றிய பின்னணின் தகவல்களை சேகரிக்கிறான். படத்தின் இறுதி வரை உத்தமன் காண்பிக்கப்படுவதே இல்லை. பொதுமக்களும், போலீசும் அவனைக் குறித்து அவதானிப்பதைக் கொண்டு ஒரு மனச்சித்திரமே நமக்குள் உருவாகிறது. படத்தில் பாதிவரை உத்தமன் ஒரு கொலைகாரனாக, கற்பழிப்பாளனாக, பாலியல் தரகனாக விஸ்வநாதனின் மத்தியதர வாழ்க்கை பிம்பத்துக்கு எதிர்நிலை பாத்திரமாக இருக்கிறான். உத்தமன் ஒரு கிறித்துமஸ் இரவில் தன் அம்மாவில் ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் ஏசுவின் சிலைக்கு கீழ் கைவிடப்பட்டவன், சீர்திருத்தப்பள்ளியில் தனியனாக வளர்ந்து, தப்பித்து பின்னர் பலமுறை சிறைக்கு சென்று வந்தவன், தலைமறைவு வாழ்க்கை வாழ்பவன், சிவப்பு, கறுப்பு போன்ற அடர்த்தியான நிறங்கள் கொண்ட சட்டைகளை அணிய விரும்புபவன் போன்ற பல தகவல்கள் விஸ்வநாதனுக்கும், பார்வையாளனுக்கும் அவன் மீது வசீகரம் கொள்ள வைக்கின்றன. விஸ்வநாதனுடன் சேர்ந்து பார்வையாளனும் உத்தமனை தேட ஆரம்பிக்கிறான். அவன் யார் என்பதே படத்தின் பிற்பகுதியை ஆக்கிரமிக்கும் கேள்வி.
உத்தமனை கடைசி வரை இயக்குனர் காட்டாததற்கு காரணம் அவன் விஸ்வநாதனின், அல்லது நன்மையின் பக்கம் நிற்பதாய் நம்பும் ஒவ்வொருவனின், மறுபிரதிதான் என்று குறிப்புணர்த்துவதாக இருக்கலாம். உத்தமன் சார்ந்த அனுபவங்கள் காரணமாக நாயகன் தனது ஆளுமையின் ஒரு மறைக்கப்பட்ட இருண்ட பகுதியை கண்டடைகிறான். விஸ்வநாதனும் உத்தமனும் ஒருவர் தான். சமூகத்தின் இருவேறு தட்டுகளில் வெவ்வேறு சூழல்களில் தோன்றி வளர்ந்ததால் நாணயஸ்தனாகவும் ரௌடியாகவும் வெளிப்படுகிறார்கள். ஆனால் இந்திய சினிமாவின் வழக்கொழிந்த ரெட்டைப்பிறவி சூத்திரத்துக்குள் பத்மராஜன் சிக்கி விடாமல் இருப்பதற்கு காரணம் அவர் இந்த முரண்நிலை பாத்திரங்களை ஒன்றின் மேல் ஒன்றாக பின்னி வளர விடுவதே. கிட்டத்தட்ட பதியம் வைப்பது போல். களங்கமின்மையும், பாவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் தாம் என்கிறார் பத்மராஜன்.சுண்டி விட்டால் தலை பூவாகும், பூ தலையாகும். படத்தில் விஸ்வநாதனுக்கு இதுவே நடக்கிறது. “உத்தமன்” என்ற திருடனின் பெயரில் உள்ள நகைமுரணும் இந்த உண்மையின் நிலையின்மையை சுட்டத்தான். தீமை தனிமனிதனுக்குள் உள்ளதா அல்லது வெளியே சமூகத்தில் இருந்து ஊற்றெடுக்கிறதா என்பது உளவியலில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் வினா. சீர்திருத்தப்பள்ளியில் உத்தமனின் வார்டனாக இருந்தவர் “அவன் ரத்தத்திலேயே குற்றம் இருந்தது” என்று ஒரு காட்சியில் சொல்கிறார். இது உண்மையா என்பது படம் எழுப்பும் ஆதார கேள்விகளில் ஒன்று. விஸ்வநாதனின் நண்பன் ஜார்ஜ் அனாதை ஆஸ்ரத்தில் உத்தமனை வளர்த்த கன்னியாஸ்திரியிடம் விசாரிக்கிறான். “நாங்கள் அவனை திருத்த எவ்வளவோ முயன்றோம். ஆனால் கர்த்தர் அவனுக்கு பாவிகளின் பாதையை தந்துள்ளார். அவனை எங்களால் மீட்க முடியவில்லை” என்கிறார் அவர். இந்த வசனம் படத்திற்கு ஒரு புதுநிறம் அளிக்கிறது. கர்த்தருக்கு முன்னர் பாவிகளும் நாணயஸ்தர்களும் சமம் என்று பொருள் கொள்ள முடிந்தாலும், இக்காட்சி சுயேச்சை எண்ணம் (freewill) குறித்து எழுப்பும் எண்ணங்கள் முக்கியமானவை. இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியம் மற்றும் சிந்தனையில் சுயேச்சை எண்ணம் பிரதான் பாதிப்பை செலுத்தியது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். விஸ்வநாதனுக்கு தன் அடையாளத்தை தக்க வைக்கவோ, தண்டனைகளில் இருந்து தப்பிக்கவோ மாற்றுவழிகளோ, தேர்வு உரிமையோ இருந்ததா என்று நாம் இந்த கோணத்தில் இருந்து சிந்திக்க முடியும்.
உத்தமனைப் போல ஆடையணிந்து விஸ்வநாதன் அவனது வாடிக்கையான இடங்களில் திரிகிறான். நடித்து ஏமாற்றுகிறான். ஒரு கட்டத்தில் உத்தமனுக்கு சேரவேண்டிய ஒன்றரை லட்சத்தை திருடிக் கொண்டு சென்று விடுகிறான். இக்கட்டத்தில் விஸ்வநாதனின் உடல்மொழியில் பெரும் மாற்றம் நிகழ்கிறது. கூச்சமும் தயக்கமும் விடைபெற வன்மமும் குற்றவிருப்பமும் வெளிப்படுகிறது. எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு அவனுடன் ஒட்டிக் கொள்கிறது. பணம் கிடைத்த உடன் அவன் குடும்பத்தை, சூழலை மறந்து விடுகிறான். காதலியிடம் சென்று “இத்தனை பணத்தை நான் வாழ்நாளில் சம்பாதிப்பதை கனவு காணவே முடியாது. வா ரெண்டு பேரும் ஓடிப் போய் விடுவோம்” வற்புறுத்துகிறான். அவள் பணத்தை அவனது தங்கையின் திருமணத்துக்காக குடும்பத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்துகிறாள். கொஞ்ச நேரத்தில் குடும்பத்தையே மறந்து விட்டேனே என்று அவன் தன்னையே கடிந்து கொள்கிறான். இந்த கட்டத்தில் விஸ்வநாதன் தனது மத்தியவர்க்க கௌரவம் மற்றும் குடும்ப மதிப்பீடுகள் மீதுள்ள பிடிப்பை சிறுக சிறுக இழந்து வருவதை கவனிக்க முடிகிறது. வாழ்நாள் பூரா உழைத்தாலும் அவன் ஒரு மத்தியவர்க்க பொந்து எலி தான். ஆரம்பத்தில் விஸ்வநாதன் உத்தமனை கடுமையாக வெறுத்தாலும், உத்தமனின் குற்ற வாழ்விலுள்ள சாகசமும், கட்டற்ற சுதந்திரமும் அவனுக்குள் அசூயை ஏற்படுத்தி இருக்க வேண்டும்; தனது குமாஸ்தா வாழ்வை, குடும்பச் சிறையை துச்சமாக நினைக்கத் தூண்டியிருக்க வேண்டும். விஸ்வநாதனுக்குள் நிகழும் மாற்றத்தை நுணுக்கமாக காட்டும் மற்றொரு காட்சி கிளைமாக்சில் வருகிறது. ஒன்றரை லட்சத்துடன் கிராமத்துக்கு செல்லும் விஸ்வநாதனை உத்தமனும் அவனது அடியாட்களும் துரத்துகின்றனர். அவர்களுடன் விஸ்வநாதன் என்றுமில்லாத மூர்க்கத்துடன், வீரத்துடன் மோதுகிறான். இது உத்தமனை ஆச்சரியப்படுத்தி இருக்க வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் ஒரு மோதல் நிகழும் போது விஸ்வநாதன் திருப்பி அடிக்கும் திராணியற்று, தன் கல்வி சான்றிதழ்களை காப்பாற்றும் முனைப்பிலேயே இருப்பான். ஆனால் இந்த மோதலின் போது சான்றிதழ்கள் கொண்ட தனது பையை அவன் கவனமின்றி தொலைத்து விடுகிறான். பணத்துடன் தப்பித்து விடுகிறான். சந்தர்பவசமாக தனது அடியாட்களாலே உத்தமன் கொல்லப்பட, அவனது பிணம் விஸ்வநாதனின் சான்றிதழ்களுடன் கைப்பற்றப்பட்டு விடுகிறது. விஸ்வநாதன் இறந்து விட்டதாக நம்பும் குடும்பத்தார் ஈமச் சடங்குகள் செய்து எரித்து விடுகின்றனர். இச்சூழலில் வீட்டுக்கு வரும் விஸ்வநாதன் தனது ”உருமாற்றம்” முழுமையடைந்து விட்டதை உணர்கிறான். அப்பாவை ரகசியமாக சந்தித்து உண்மையை விளக்குகிறான். அவர் “உன் சான்றிதழ்களை என்ன செய்ய?” என்று கேட்க, “அவற்றினால் இனி என்ன பயன். நான் தான் உத்தமன் ஆகி விட்டேனே” என்று சொல்கிறான். சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் இனி மத்தியவர்க்க வாழ்வின் அத்தாட்சி பத்திரங்களான சான்றிதழ்கள் அவனுக்கு வெறும் தாள்கள் மட்டுமே.
கடைசிக் காட்சியில் விஸ்வநாதன் தனது ரெட்டைப்பிறவியின் சிதை முன் நின்று ஒரு “இருத்தலிய” சிரிப்பு சிரிக்கிறான். ”அபரன்” சுழன்றடிக்கும் காலத்தின் முன் தனிமனிதனின் தேர்வுரிமை எத்தனை வலுவானது என்ற கேள்வியை சற்று பரிகாசத்துடன் கேட்கிறது. மற்றொரு தளத்தில் குற்றம் மரபணுக்குள்ளோ, தனிநபருக்குள்ளோ உறைந்த ஒன்றல்ல என்ற அவதானிப்பையும் இப்படம் கொண்டுள்ளது. கிறித்துமஸ் இரவில் அடைக்கலமாய் கைவிரித்த ஏசுவின் சிலைக்கு கீழ் ரெண்டுநாள் குழந்தையாய் உத்தமன் கைவிடப்படும் சித்திரம் படத்தில் ஒரு படிமமாகவே உள்ளது. காலத்தின் அகண்ட கூரைக்கு கீழ் வாழ்நாள் குற்றவாளியான உத்தமன் “உத்தமனே” தான்.
இக்கூட்டம் நேற்று (ஜூலை 9) மாலை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது.இந்த கூட்டத்தின் ஆகக் கூர்மையான கருத்துக்கள் இறுதியாக ஏற்புரை வழங்கிய இ.பாவிடம் இருந்து வந்ததால் அதனை முதலில் சொல்லி விடலாம். இ.பாவின் குறும்பேச்சு ஒரு குத்துச் சண்டை ஹைலைட்ஸை ஒத்திருந்தது. அத்தனை பஞ்ச் வசனங்கள். ஏறத்தாழ இரவு ஒன்பதரைக்கு களைத்து கடுப்பாகி இருந்த பார்வையாளர்களுக்கு அத்தனையும் ரசிக்கும் படியாக இருந்தன.
”எனக்கும் 80 வயதாகிறது. பாலசந்தருக்கும் 80 வயதாகிறது. ஆனால் ஊடங்கள் அவரைத் தான் பாராட்டுகின்றன இது தவறு என்று கூறவில்லை. தமிழகத்தில் எழுத்தாளனுக்கு கலாச்சார மதிப்பு அவ்வளவு தான் என்று கூற வந்தேன். பாலசந்தர் பாராட்டப்பட வேண்டியவர் தான். அவரது படைப்புகள் அவ்வளவு தரமானவை அல்ல என்றாலும்.”
”நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ஒருவர் மட்டுமே கலைஞர் என்று சொல்லக் கூடாது. எல்லாரும் கலைஞர்கள் தாம். (கூட்டம் இச்சொல்லின் இரட்டைப் பொருளைப் பற்றிக் கொள்ள சிரிப்பலை பரவுகிறது). எழுத்தாளனும் கலைஞனே.”
”தமிழகத்தில் பொதுவெளி அறிவுஜீவி என்று யாரும் இல்லை. அப்படி ஒரு இடமே இங்கு இல்லை. தமிழகத்தில் ஒரு அருந்ததி ராய் உருவாகி வருவார் என்று நாம் கற்பனை பண்ண முடியுமா?”
”தமிழக எழுத்தாளர்கள் Authors Guild of India மாதிரி ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டும். ஆனால் AGI மாதிரி கண்டவர்களை எல்லாம் எழுத்தாளன் என்று சேர்க்கக் கூடாது. எழுத்தாளன் பத்திரிகையாளன் ஆகலாம். ஆனால் பத்திரிகையாளன் எழுத்தாளன் ஆக முடியாது. இது போன்ற ஒரு அமைப்பை நடத்துவதற்கு தகுதியானவர் மேடையில் வீற்றிருக்கும் ரவிக்குமார் தான். (”அவர் இப்பவே தலைவராக திட்டம் போடுகிறார்” என்று மனுஷ்யபுத்திரன் குறுக்கிடுகிறார் )
ஆ.ராமசாமி, மனுஷ்யபுத்திரன் போன்ற இளைஞர்கள் தாம் இந்த அமைப்பு பணிகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் (அ.ரா இளைஞர் என்ற விசயத்தை பிடித்துக் கொண்ட ம.பு நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் வரை அ.ராமசாமியை ஓட்டிக் கொண்டே இருந்தார். அ.ரா உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகத்துடன் பேச்சை திருப்பிக் கொண்டே இருந்தார்)
நானும் நண்பர் பிரகதீசும் ஒரு கணக்குப் போட்டு பார்த்ததில் இ.பாவின் வயதுக்கு ம.புவும், அ.ராவும் இளைஞர்கள் என்பது சரியாகவே பட்டது. நானும் நண்பரும் இதே விகிதப்படி குழந்தைகள். கூட்டத்தில் இருந்த ஒரு கைக்குழந்தை இந்த கணக்கு உள்ளெல்லாம் வரவே வராது.
இமையம் இ.பாவின் 53 சிறுகதைகள் நுட்பமாக வாசித்து ஒரு ஆய்வுக் கட்டுரை படித்தார். “அக்கட்டுரையில் தேர்வு வைத்தால் நான் தோற்று விடுவேன்” என்றார் இ.பா.
இ.பா ஒருமுறை தமிழ் விரிவுரையாளருக்கான ஒரு நேர்முகத்தேர்வை நடத்தினார். வந்த ஒருவர் தான் நவீன இலக்கியத்தில் நிபுணன் என்கிறார். இ.பா “சரி சந்தோஷம், புதுமைப்பித்தன் பற்றி சொல்லுங்களேன்” என்கிறார். அவர் “புதுமைப்பித்தன் எல்லாம் எனக்கு தெரியாதுங்க” என்கிறார். “என்னங்க நவீன இலக்கியம் கரைத்து குடித்ததாய் சொல்கிறீர்கள். புதுமைப்பித்தன் தெரியாதா? வேறென்னதான் தெரியும்?” அதற்கு அவர் “நான் ஆழ்ந்து தோய்ந்து ஆய்வு செய்துள்ளது தென்பாண்டி சிங்கம் என்ற நவீன இலக்கியத்தில் தான். அதிலிருந்து என்ன வேண்டுமென்றாலும் கேளுங்கள், சொல்கிறேன்”
மேலும் ஒரு தமிழாசிரிய பகடி. இ.பாவின் கதை ஆனந்த விகடனில் வெளிவருகிறது. தனது தமிழ் பேராசிரிய நண்பரிடம் காட்டுகிறார். அவர் நச்சினார்க்கினியாருக்கு பிறகு யாரையும் வாசிப்பதில் உவப்பில்லாதவர்.“என்னய்யா நீங்களுமா கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க”
“ஏன் நானெல்லாம் எழுதக் கூடாதா?” என்கிறார் இ.பா.
“என்ன எழுதுகிறீர் ... தூய தமிழா இது ... ஆங்கில வார்த்தைகளை அங்கங்கே கலந்து . ச்சீ” என்று முகம் சுளிக்கிறார்.”
இனி பிற பேச்சாளர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
இ.பா பிறந்த நாள் கூட்டத்தில் துவக்க உரை மனுஷ்யபுத்திரனுடையது. அவர் பேசியதை கேட்கவில்லை. தாமதமாக சென்றேன். அடுத்த உரை சி.டி இந்திராவினுடையது. சென்னை பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் பேராசிரியரான அவரைப் பார்த்தால் மாணவர்கள் பொதுவாக தலைதெறிக்க ஓடுவார்கள். ஆனால் அனறு மாறாக பார்வையாளர்கள் அவரது அரைமணி உரைக்கு பிறகு திராணியற்று களைத்துப் போய் துவண்டு கிடந்தார்கள். என் பக்கத்தில் ஒரு தாத்தா காலி தண்ணீர்ப் பாட்டிலை விடாமல் உறிஞ்ச முயன்று கொண்டிருந்தார். விடாமல் பேசிக் கொண்டிருந்த ஒரு அழகான பெண்ணும் பக்கத்து வாலிபனும் தான் விதிவிலக்கு. சி.டி. இந்திராவின் பேச்சில் சரிபாதி தன்னை பற்றியே தான். பலவருடங்களுக்கு முன்னர் அவரது கருத்தரங்க கட்டுரையை கிண்டலடித்த ஒரு வெள்ளையரை நினைவு வைத்து திட்டித் தீர்த்தார். அதே போல் பல வருடங்களுக்கு முன் தனிப்பட்ட வகையில் உதவினவர்களை நன்றியுடன் நினைகூர்ந்தார். தனது அப்பாவை பற்றிக் கூட குறிப்பிட்டார். இந்த சுய-யாகத்துக்கு நடுவில் இ.பா.வின் இரு கதைகளை மொழிபெயர்க்கும் பணிக்காக தமிழில் வாசிக்க ஆரம்பித்ததை குறிப்பிட்டார். இ.பாவின் பல எளிய வரிகளை பரங்கித் தமிழில் படித்து நவீன விமர்சன சொல்லாடல்களை யானைக்கு கோமணம் கட்டுவது போல் அவற்றில் திணித்தார். மிக செயற்கையான ஒரு விமர்சனம் அது. உதாரணமாக ஒரு வரி: “அவன் டாய்லட் அறைக்குள் இருந்த போது தன் வீடு எத்தனை பெரியது என்று தோன்றியது”. நல்ல வரிதான். ஆனால் இதை படித்து விட்டு திரும்பத் திரும்ப wit and humor என்று கூவினார் சி.டி இந்திரா. இதைவிட wittyயான எத்தனையோ வரிகள் தமிழில் உள்ளன இ.பாவிடம் கூட கிடைக்கும். சி.டி.இவுக்கு தனிப்பட்ட எந்த அவதானிப்புகளும் இல்லை என்பது வெளிப்படை. துரியோதனன் வைக்கோற் போரால் அறையை நிறைத்துக் காட்டியது போல் அவரது கழைக்கூத்து இருசாராருக்கும் அவஸ்தையாகவே இருந்தது. மேடையில் ம.பு நெளிவது பார்த்தது “இதோ முடித்து விடுகிறேன்” என்று விட்டு மேலும் பதினைந்து நிமிடம் தமாஷை தொடர்ந்தார். இந்திரா முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். இ.பாவின் கதைப் பகுதிகளை படிக்கும் போதும் மட்டும் குழறியபடி தமிழ் பயன்படுத்தினார். இங்கு நமக்கு ஒரு ஐயம் எழுகிறது. தமிழில் சரளமாக பேசத் தெரியாதவர் தமிழ் சிறுகதைகளை மட்டும் எப்படி ஆங்கிலத்துக்கு மொழியாக்கினார்? அகராதிக்குள் பொந்து தோண்டியா?
இமையம் இ.பாவின் 53 சிறுகதைகளை அலசி படித்த கட்டுரை அருமையானது. அதை அவர் பிரசுரிக்க வேண்டும். இ.பாவின் கதைகளின் மையம் தர்க்கம் தான் என்றார். கடவுளிடம் சரணடைவது, கண்ணீர் விடுவது ஆகிய உணர்ச்சிகர சமரசங்களை அவரது கதைகளில் காண முடியாது. பக்கத்துக்கு பக்கம் புரட்டி தேடிப் பார்த்து இதை உறுதி செய்ததாக இமையம் கூறினார். இ.பா தி.மு.கவை விமர்சிப்பதை வாசகனாக ஏற்றுக் கொள்வதாகவும், தி.மு.க கட்சிக்காரனாக மறுப்பதாகவும் சொன்னார். மனம் பிறழ்ந்தவர்கள், வாழ்க்கையால் கைவிடப்பட்டவர்கள் போன்ற விளிம்பு நிலையாளர்கள் தாம் இ.பாவின் நாயகர்கள். இருந்தாலும் மேலும் கவனித்தால் இவர்களை புறந்தள்ளி இ.பாவின் குரல் வலுத்து ஒலிப்பதை அவரது கதைகளில் கேட்க முடியும். இது புனைகதைக்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது முக்கியமான கேள்வி என்று இமையம் முடித்தார். இமையத்துக்கு அப்படி ஒரு கணீர் குரல். உங்களை எளிதில் தூங்க விடாத குரல்.
எஸ்.ராமகிருஷ்ணன் இ.பாவிடம் தனக்குப் பிடித்த பத்து குணாதசியங்களை சொல்லப் போவதாக ஆரம்பித்தார்; பட்டியலை முடிக்கும் தறுவாயில் அவரது பேச்சு சூடு பிடித்தது. இதுவரை நான் கேட்டுள்ள இலக்கிய உரைகளில் ஆகச்சிறந்ததாக அது இருந்தது. எஸ்.ராவின் முக்கிய கருத்துக்களை கீழே தருகிறேன்.
இன்று இந்தியாவில் எழுத்தாளன் சந்திக்கும் பெரும் சவால் வரலாற்றை எப்படி எதிர்கொள்வது என்பது தான். போர்ஹே சொன்னது போல் வரலாறு தொடர்ந்து ஒவ்வொரு தலைமுறையாலும் புனையப்பட்டு முன்னெடுக்கப் படுகிறது. நீங்கள் வரலாற்றை ஒரு பார்வையில் புனைந்து காட்டினால் ஆயிரம் பேர் புறப்பட்டு வந்து அதை தவறு என்று கண்டிப்பார்கள். இவர்கள் சுயநலத்துக்காகவும், அதிகாரத்துக்காகவும் வரலாற்றை திரிப்பவர்கள். ஆனால் எழுத்தாளன் வரலாற்றில் மறைக்கப்பட்ட குரல்களை உற்றுக் கேட்கிறான். இன்றைய எழுத்தாளனின் தேவையும் கடமையும் வரலாற்றை புனைவு மூலம் மறுகட்டமைப்பு செய்து புதிய குரல்களை வெளியே கேட்க செய்வது தான்.
பிரிவை எண்ணி அழுவதும் அதை கொண்டாடுவதும் தமிழினதத்தின் ஆதார குணம் என்று கூறலாம். சங்க இலக்கியப் பாடல்களில் பிரிவு திரும்பத் திரும்ப பேசப்படுகிறது. பிரிவு பற்றி எழுதாத தமிழ் எழுத்தாளனே இல்லை எனலாம்.
தமிழ் நவீன இலக்கியவாதிகள் “குடும்பம்” எனும் கட்டமைப்புக்கு உள்ளே தங்களது புனைவுகளை மீண்டும் மீண்டும் உருவாக்கியவர்கள். தமிழர்கள் உலகம் பூரா வாழ்ந்துள்ளார்கள். ஆனால் தமிழ எல்லையை விட்டு தமிழ்இலக்கிய அனுபவப் பரப்பு வளர இல்லை. இ.பாவின் எழுத்துக்கள் இந்த எல்லையை தாண்டி பேசுகின்றன.
தமிழகத்தில் எழுத்தாளனுக்கும், புத்தகங்களுக்கும் இருக்கும் உதாசீன நிலை (திராவிட கழகங்களால்?) திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கம்பராமாயணப் பிரதி தீயிலிட்டு கொளுத்தப்படுவதை நம் சமூகம் மௌனமாக வேடிக்கை பார்த்தது. அது சரியா தவறா என்ற விவாதத்துக்குள் நான் செல்ல வில்லை. அப்படி அனுமதிக்கும், இலக்கியவாதியை புறக்கணிக்கும் சமூகத்தை நாம் ஆராய வேண்டும் என்றே கூற வருகிறேன்.
பொதுவாக அனைத்து பேச்சாளர்களும் தமிழ் சமூகம் தீவிர எழுத்தாளர்களை உதாசீனப்படுத்துவதை கண்டித்தும், கண்ணீர் விட்டும், கவலை தெரிவித்தும் பேசினர். ஞானக்கூத்தன் கேரளாவில் எம்.டி வாசுதேவன் கொண்டாடப்படுவதையும், எழுத்தாளர்கள் தேரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்படுவதையும் சொல்லி தமிழக அவல நிலையுடன் ஒப்பிட்டார். இறுதியாக பேசின ரவிக்குமார் கிட்டத்தட்ட இந்த அவல நிலையை ஆதரித்தார். தமிழக எழுத்தாளர்கள் பொதுப் பிரச்சனைகளில் ஈடுபாடு காட்டாததனாலே மக்கள் அவர்களை உதாசீனிக்கிறார்கள் என்று சொதப்பலான் ஒரு தர்க்கத்தை தெரிவித்தார். அதே தர்க்கப்படி பார்த்தால் தமிழர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள நமீதாவும், அனுஷ்காவும், விஜய்யும், அஜித்குமாரும் செய்துள்ள சமூக சேவைகள் அல்லது ஈடுபட்டுள்ள பொதுப்பிரச்சனைகள் என்ன? என்ன சேவை செய்ததற்காக குஷ்புவுக்கு கோவில் கட்டி இப்போது கழகக் கண்மணியாக வேறு ஆக்கியுள்ளார்கள். பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்ததா? ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாள் முழுக்க ஒரு எளிய ராகவிசுவாசியாகவே வாழ்ந்தார். வீடு கட்டினார். சொத்து சேர்த்தார். எந்த போராட்டங்களிலும் கலந்து கொள்ளவில்லை. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கவும் இல்லை. ஜேம்ஸ் ஜாய்ஸ்? வைக்கம் பஷீர்? எம்.டி வாசுதேவன் நாயர்? தால்ஸ்தாயும், மார்க்வெஸும் ரவிக்குமார் குறிப்பிடும் public intellectual பிம்பத்துக்கு அருகில் நின்றாலும் அவர்கள் நிச்சயம் கட்சி பீரங்கிகள் அல்ல. உலகம் முழுக்க எழுத்தாளன் கொண்டாடப் படுவது சமூக சேவைக்காகவோ அரசியல் செயல்பட்டுக்காகவோ மட்டும் அல்ல. அடுத்து, செம்மொழி மாநாட்டுக்கு ஏன் பல தீவிர இலக்கியவாதிகள் அழைக்கப்பட வில்லை என்பதற்கு ரவிக்குமார் மேலும் வேடிக்கையான ஒரு பதிலை அளித்தார். அழைப்பு வராதவர்களுக்கு பழந்தமிழ் இலக்கிய பரிச்சயம் இல்லையாம். அடுத்த முறை மாநாடு நடத்தும் முன்னர் கலைஞர் தீவிர இலக்கியவாதிகளுக்கு செம்மொழி டெஸ்டு வைக்கலாம்! ரவிக்குமாரிடம் நான் கேட்க விரும்பிய கேள்வி: “சங்கச்சித்திரங்களும், கொற்றவையும் எழுதி மரபிலக்கியத்தில் ஊறித் திளைத்த ஒரு எழுத்தாளர் இருக்கிறாரே. உங்கள் செம்மொழி தேர்வில் அவர் எத்தனை மதிப்பெண்ணில் தோற்றார்?”
ரவிக்குமார் பேசிக் கொண்டே சென்ற போது எனக்கு சற்றே கண் மயங்கியது. செம்மொழி செம் ம் ம் என்று அதிர்ந்த போது விழித்தால் சாட்சாத் கலைஞரே முன் நின்று உரையாற்றுவது போல் ஒரு தோற்றம். இதற்கே இப்படி என்றால், செம்மொழி அணியில் தீவிர இலக்கியவாதிகள் ஒவ்வொருவராக சரணடைந்தால் என்னவாகும் என்று நினைத்த போது காலடியில் பூமி விலகியது. தானியங்கி பீரங்கிகள் மட்டுமே நிறைந்து நின்று மாறி மாறி சுடும் போர்க்களம் ஒன்று கற்பனையில் விரிந்தது.