Monday, 26 April 2010
கதை சொல்ல வாழ்கிறேன் (மார்க்வெஸ்): அத்தியாயம் 17
எங்கள் நோக்கம் நேரே வீட்டுக்கு போவதே. ஆனால் நாங்கள் ஒரு வட்டாரப் பிரிவு அளவே தொலைவுள்ள நிலையில், அம்மா சொல்லாமல் கொள்ளாமல் நின்ற பின், ஒரு முனையில் திரும்பி சென்றாள். “இந்த வழியே போனால் தான் நல்லது”, அவள் சொன்னாள். நான் ஏனென்று அறிய விரும்பியதற்கு அவள் பதில் சொன்னாள், “ஏனென்றால் எனக்கு பயமாக இருக்கு”
என்னுடைய குமட்டல் உணர்வுக்கு நான் இவ்வாறே காரணம் கண்டறிந்தேன். அது அச்சம், ஆனால் என்னுடைய வாதைகளை நேர்கொள்ள மட்டுமல்ல, எல்லாவற்றின் மீதான அச்சமுமே. ஆக நாங்கள் இணைத்தெரு ஒன்றில் நடந்து போனோம்; எங்கள் வீட்டை கடப்பதை தவிர்ப்பதே அந்த சுற்றி செல்வதன் ஒரே நோக்கம். “யாரிடமாவது முதலில் பேசும் வரை அதை நோக்கும் தைரியம் எனக்கு கிடைத்த்ருக்காது”, அம்மா பிற்பாடு என்னிடம் சொல்வாள். அவள் செய்தது அதைத்தான் என்னை ஏறத்தாழ இழுத்துக் கொண்டு டாக்டர் அல்பிரீடோ பர்பாசாவின் மருந்து கடைக்குள் முன்னறிவிப்பின்றி நுழைந்தாள்; எங்கள் வீட்டில் இருந்து ஒரு நூறு அடிகள் தொலைவில் குறையாத ஒரு மூலை வீடு.
மருந்துக்கடைக்காரரின் மனைவியான அட்ரியானா பெர்டுகோ கைகளால் இயக்கப்படும் தனது பழங்கால வீட்டுத் தையற்பொறியில் வேலை செய்வதில் ஆழ்ந்து போயிருந்ததால் அம்மா அவளுக்கு முன் நிற்பதை அறியவில்லை; அம்மா ஏறத்தாழ கிசிகிசுப்பது போல அழைத்தாள், “தோழி”. அட்ரியானா தூரப் பார்வையாளர்களுக்கான தடிமனான கண்ணாடிக்கு பின்னால் மங்கலாய் தெரிந்த கண்களை உயர்த்தி பார்த்தாள்; பிறகு கண்ணாடியை கழற்றினாள்; ஒரு நொடி தயங்கினாள்; பிறகு கைகள் அகல விரிய விம்மலுடன் துள்ளி எழுந்தாள். “தோழி”
அம்மா ஏற்கனவே கவுன்டருக்கு பின்னால் நின்றிருந்தாள்; பேச்சு ஏதுமின்றி அவர்கள் அரவணைத்து அழுதனர். மௌனக் கண்ணீருடனான இந்த நீண்ட அணைப்பு என் சொந்த வாழ்வில் சீர்படுத்தப்பட முடியாதபடி நிகழும் ஏதோ ஒன்று என்கிற உறுதிப்பாட்டால் உலுக்கப்பட்டு, நான் கவுன்டருக்கு மறுபுறம் நின்று என்ன செய்வதென்று அறியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
Share This
Labels:
கதை சொல்ல வாழ்கிறேன்
,
மார்க்வெஸ்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment