Tuesday, 6 April 2010

குறும்பட விமர்சனம்: அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில்















அதிர்ஷ்டம் 5 km-இல் மிக நம்பிக்கையூட்டக் கூடிய ஒரு இயக்குனரை நமக்கு அறிமுகப்படுத்துகிறது: ஸ்ரீராம் பத்மநாபன் (D.F.Tech). ஸ்ரீராமுக்கு ஒரு கதையை தொய்வில்லாமல் சொல்லத் தெரிகிறது. நடிக்க வைக்க முடிகிறது. காட்சிபூர்வ நுண்ணுணர்வு உள்ளது. முக்கியமாய் அவருக்கு ஒரு இயக்குனருக்கான அசலான தேடல் உள்ளது. எந்த பாசாங்கும் இல்லாமல் வாழ்க்கை குறித்த தனது கண்ணோட்டத்தை முன்வைக்கிறார்.


படத்தின் தலைப்பு ஒரு திகில் படத்தை எதிர்பார்க்கச் செய்யலாம். மிக இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு இழை படம் முழுக்க ஓடினாலும் இது திகில் படம் அல்ல. வைதீஸ்வரன் எனும் ஒரு சராசரி மனிதன் சைக்கிள் ஓட்டியபடியே தன் வாழ்வை அசை போடுகிறான். வாழ்க்கையை மீள்நோக்க பயணம் எப்போதும் ஒரு சிறந்த படிமமாக பயன்படுவது. அவன் ஒரு கடிதத்தை தபாலில் சேர்க்க சென்று கொண்டிருக்கிறான். அந்த கடிதத்தின் நோக்கம் பிற்பாடு வருகிறது. முதலில் அவனைக் குறித்த அறிமுகம். தொடர்ந்து அதிர்ஷ்டத்தால் அலைகழிப்படுபவன். பெண்கள் விசயத்தில் ராசியே இல்லை. பள்ளியில் பக்கத்து இருக்கை பெண்ணில் இருந்து ஆசிரியை வரை துன்புறுத்துகிறார்கள். இப்போது மனைவியும். படிப்பிலும் ஒரு தற்குறியே. மளிகைக்கடையில் மூவாயிரத்துக்கு பொட்டலம் மடிக்கிற வேலை. சற்று உற்று கவனித்தால் இப்படியான தோல்வியுற்றவன்\உதவாக்கரையின் பாத்திரம் தமிழின் சமீப எதார்த்த சினிமாக்களில் பிரதானமாக கையாளப்பட்டிருப்பதை காணலாம். இந்த பாத்திரத்துக்கு புத்திஜீவித்தனம் பூசினால் கலைப்படம். மதிப்பீடுகளை கழற்றி விட்டால் பின்நவீனத்துவ பாத்திரம். இப்படி தட்டி ஈயம் பூசப்படாமல் ஸ்ரீராமின் வைதீஸ்வரன் நம் வரம்புக்குள்ளே நிற்கிறான்.


வைத்தீஸ்வரன் பள்ளிக்கூடத்தில் வாத்தியாருக்கு கறிக்குழம்பு கொடுத்து 9 வரை தேறுகிறான். ஆனால் பத்தாவது வகுப்புக்கு என்று பார்த்த ஐயர் வாத்தியார் வருகிறார். தோல்வி. பிறகு சிரமப்பட்டு படித்து கல்லூரிக்கு சென்றால் வரலாறு பாடம் தான் கிடைக்கிறது. வைதீஸ்வரனின் மனைவி நடத்தை தவறுகிறாள். அவனை அவள் சுத்தமாக மதிப்பது வேறு இல்லை. இப்படி வாழ்க்கை முழுக்க பல விசயங்கள் அமைந்தும் அமையாமல் தவறுகிறது. வைதீஸ்வரனுக்கு அதிர்ஷ்டம் எப்போதும் சில நொடிகள் முந்திப் போய் விடுகிறது. இதைக் குறிப்பிட அவன் சைக்கிளை இழுத்து இழுத்து மிதிக்க ஒரு பேருந்து முன்னேறிப் போய் விடுகிறது. இங்கு பேருந்து ஒரு உருவகம். சற்று பலவீனமாக இங்கு குறியீட்டுத்தன்மை உருவாக்கப்பட்டிருந்தாலும் பேருந்து முந்தி செல்வது முக்கியமானது. பலவீனமான ஒரு மத்தியவர்க்க மனதுக்கு மதிப்பீடுகள் தாம் அஸ்திவாரம். இதனாலே அவனுக்கு மனைவியின் துரோகத்தை பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. மனைவி பக்கத்து வீட்டுக்காரனுடன் பார்வையில் சல்லாபிக்கும் இடம் உக்கிரமாக உருவாக வேண்டியது. அவர்கள் இருவரையும் வைதீஸ்வரன் மீசை நறுக்கியபடி கண்ணாடியில் கவனிக்கிறான். நேரடியாக அல்ல. இக்காட்சியை வசனம் தவிர்த்து மிக கவித்துவமாக தயாரித்திருக்க முடியும். கண்ணாடி என்பது சினிமா மொழியில் மனதின் குறியீடு தானே. ஆனால் இந்த சாத்தியப்பாட்டை ஸ்ரீராம் இந்த தருணத்தில் உத்தேசித்திருப்பதே அபாரமானது.














அவளை கொல்ல முடிவு செய்கிறான். போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தன் கொலை உத்தேசம் குறித்து கடிதம் எழுதுகிறான். அப்படி எழுதுவார்களா என்ற கேள்வி கூடாது. இது கலை சுதந்திரம் (poetic license). அடுத்து கொலை முயற்சி காட்சி மேலும் நுட்பமாக அமைந்துள்ளது. அவள் வழக்கம் போல் கணவனின் கையாகாத்தனத்தை வைது விட்டு தெனாவட்டாக குளியலறைக்கு நடக்கிறாள். பின்னால் கணவன் பதுங்கியபடி கையில் கத்தியுடன். குளியறை நுழையும் மனைவி சட்டென்று திரும்பி “போய் துண்டு எடுத்து வா” என்று ஆணையிடுகிறாள். உயிரை எடுப்பவனுக்கு ஒரு தனி அதிகாரம் வாய்த்து விடுகிறது. அவன் தன்னை சற்று மேலாகவே நினைத்துக் கொள்கிறான். ஆனால் நம்மாள் தொடர்ந்து அதிகாரத்துக்கு கீழ்ப்படிந்து பழகியவர் ஆயிற்றே! அதிர்ச்சியில் “சரி” என்று கூனிக்குறுகி துண்டு எடுக்க திரும்புகிறான். கத்தி அப்போதும் அவன் கையில் மறைந்து உள்ளது. திரும்ப துண்டு மற்றும் கத்தியுடன் வரும்போது மனைவி மின்சாரம் தாக்கி இறந்து போகிறாள். இப்போது ஒரு பிரச்சனை. கொலை வாக்குமூலக்கடிதம் தபாலில் உள்ளது. இயற்கையான மரணம் ஒரு கொலைப்பழியாக அவன் மீது விழ உள்ளது. அவன் விரைய வேண்டும். 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பெட்டி. அந்த கடிதத்தை கைப்பற்ற வேண்டும். மேற்கொண்டு வரும் காட்சி நம் கற்பனைக்கு விடப்படுகிறது. இந்த திருப்பம் அல்ல, தன் வாழ்க்கையை துரத்தும் ஒருவனது அவலமே இங்கு கவனிக்க வேண்டியது. அதுவும் கையெட்டும் தூரத்தில் 5 k.m தொலைவில் வாழ்வின் ஜீவநாடி இருக்கிறது. நம் கற்பனையை அலாதியாக தூண்டக்கூடிய இடம் இது. ஒரு வலிமிக்க இருத்தலியல் தருணத்தை இது மீட்டி விடுகிறது.


கெ.ஜி வெங்கடேஷுக்கு தலைகலைந்த அசட்டு முகம் கொண்ட நாயகப்பாத்திரம் மிகத் தோதாக உள்ளது. கடைசியில் மிகையாக அதிர்ச்சி அடைவது தவிர நன்றாகவே நடித்துள்ளார். மனைவியின் பாத்திரத்தில் வரும் ஷர்மிளாவுக்கு டி.வி மெகாத்தொடரில் நல்ல எதிர்காலம் உள்ளது. வில்லத்தனத்துக்காக ஷர்மிளா பாத்திரத்தின் அமைப்பு சற்று மிகையாக காட்டப்பட்டுள்ளது. அவர் பக்கமும் ஒரு நியாயம் இருக்கவே செய்யும். இருவரையும் படக்கருவியின் பிரக்ஞையின்றி நடிக்க வைக்க இயக்குனர் மேலும் முயன்றிருக்க வேண்டும். இருவரது உடல்மொழிகளின் முரண் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.


ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. அதுவும் வாக்குமூலக் கடிதத்தை தபால் செய்து விட்டு கணவன் சிந்தனைவயப்பட்டு திரியும் போது மாலை வானம் ஒரு பின்னணி ஆகிறது. இந்த அந்தி இங்கு ரம்மியமான சூழல் அல்ல. வாழ்வின் இருள் துவங்கப்போவதை சொல்லும் படிமம் இது. ஸ்ரீராம் படைப்பூக்கம் உள்ள ஒரு நபர் என்பதை எளிதாக நிறுவி விடுகிறது இந்த காட்சிபூர்வ அவதானிப்பு. வசனத்தில் உள்ள கூர்மையான கசப்பான நகைச்சுவையையும் குறிப்பிட வேண்டும். இந்த நகைமுரணான வரியை பாருங்கள். எட்டாம் வகுப்பில் பலமுறை தோற்று கூட கற்பு வேறு பிழைத்த மனைவி குறித்து வைத்தீஸ்வரன்: “படிப்பில அவள் படி தாண்டா பத்தினிங்க”. பெண்ணியவாதிகள் விரும்பாவிட்டாலும் வைத்தீஸ்வரனின் பார்வையில் இருந்து வெளிப்படும்போது இவ்வசனம் அதற்கான ஆற்றலைப் பெறுகிறது.


படத்தயாரிப்பு: கிங்ஸ்லி ஜோஸ் மற்றும் மேரி கிறிஸ்டினா. கெ ஜொஸ்

ஒளிப்பதிவு: அ.வசந்தகுமார் D.F Tech

இசை: முரளி

தொகுப்பு: ஜி. முரளி D.F Tech

சினிமா ஆர்வலர்கள் கட்டாயமாக தமிழ் ஸ்டுடியோவில் இருந்து வாங்கி பார்த்து விடுங்கள். ஸ்ரீராம் பத்மநாபனின் எண்: 9444810878.
Share This

3 comments :

  1. இந்த இளைஞர்கள் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை வருகிறது. உங்கள் கதை சொல்லும் பாணி அருமை.

    பகிர்தலுக்கு நன்றி அபிலாஷ்.

    நிச்சயம் பார்க்க வேண்டும்.

    ஸ்ரீராம் பத்மநாபனுக்கும் அவர் டீமுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வாழ்க்கையில் எல்லாமே கையெட்டும் தொலைவில்தான் உள்ளன.தருணங்கள் அவற்றைத் தீர்மானிக்கின்றன.உங்கள் விமர்சனம் இக்குறும் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.சபாஷ் அபிலாஷ்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates