Wednesday, 14 April 2010
பொ.கருணாகரமூர்த்தியின் தமிழ்க்குடில்: கலாச்சார கத்தியும் காலாவதியான ரதமும்
தாமரை இதழில் நான் இணையதளங்கள் குறித்து எழுதி வரும் தொடரில் இம்முறை பொ.கருணாகரமூர்த்தியின் தமிழ்க்குடில்.
பொ.கருணகரமூர்த்தி இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். ஜெர்மனியில் வாழ்கிறார். நவீன தமிழ் இலக்கியத்துக்கு புலம்பெயர் எழுத்தாளர்கள் தரும் கொடை வெவ்வேறு கலாச்சார சூழல்களில் வாழ்ந்து பெற்ற ஒரு புது பரிமாணமே ஆகும். இவர்களில் மு.கருணாகரமூர்த்தி முக்கியமானவர். அ.முத்துலிங்கத்தை போன்று பழந்தமிழ் ஆர்வமும், எள்ளல் நடையும் கொண்டவர். இவரது குறுநாவல்கள் தொகுப்பான “ஒரு அகதி உருவாகும் நேரம்” பரவலான கவனிப்பை பெற்றது. ”கிழக்கு நோக்கி சில மேகங்கள்”, ”அவளுக்கென்று ஒரு குடில்”, ”கூடு கலைதல்” ஆகிய சிறுகதைத் தொகுப்புகளுடன், ”பெர்லின் இரவுகள்” என்ற கட்டுரை நூலையும் வெளியிட்டுள்ளார். கருணாவின் இணையப்பக்கம்: தமிழ்க்குடில்
வலைப்பூ முகவரி: http://karunah.blogspot.com
கருணாகரமூர்த்தியின் இந்த வலைப்பூவில் கட்டுரைகள், கவிதை மற்றும் புனைவுகள் சேர்த்து 23 படைப்புகள் உள்ளன. ஆயிரக்கணக்கில் பக்கங்கள் தொடர்ச்சியாக எழுதப்படும் வலைப்பூக்களின் உலகில் இது குறைவுதான். ஆனால் கருணாவின் எழுத்து செறிவும் தீவிரமும் கொண்டது என்றதால் இந்த வலைப்பக்கத்துக்கு இணையத்தில் ஒரு தனியிடம் உள்ளது.
உரையும் புனைவும்
இந்த வலைப்பக்கத்தில் கிடைக்கும் கருணாகரமூர்த்தியின் “என் இனமே என் சனமே” மல்லிகை ஆண்டுமலரில் வெளியான கட்டுரை. விடுப்பின் போது ஜெர்மனியில் இருந்து இலங்கைக்கு செல்லும் கருணாகரமூர்த்தி தனது சனம் சாதிப் பிடிமானத்தை இன்னும் கைவிட்டு விட இல்லை என்பதை கசப்புடன் உணர்கிறார். பல வருடங்களுக்கு முன் கல்லூரிப் பருவத்தில் சரவணன் என்ற வெள்ளாள நண்பன் க.மூ வீட்டுக்கு வருகிறான். அங்கு தரப்படும் ’தாழ்த்தப்பட்ட’ டீயை தொட மறுக்கிறான். பின்னர் இம்முறை அவனை சந்திக்கும் போது அவன் உயர்ந்த அரசாங்க பதவியில் இருப்பது தெரிய வருகிறது. க.மூ வீட்டுக்கு இரண்டாம் முறையாக வந்து அன்னியோன்யமாக கதைப்பவன் இப்போதும் தேநீரை சுவைக்காமலே செல்கிறான். தமிழ் ஈழ சமூகத்தில் உள்ள சாதிப்படி நிலையை விமர்சனம் தான் இதன் முக்கிய நோக்கம்; ஆனால் வெளி நாட்டில் வளர்ந்த குழந்தைகள் அம்மிக்கு ஏன் வயர் இல்லை என்று கேட்பதில் இருந்து ஆசிரியர் சிறுவயதில் கடலாடி களைப்பில் கொத்துபொரோட்டா உண்டது வரை தகவல்கள் பொருத்தமின்றி அங்கதன் வால் போல் ஒன்றுக்கு மேல் ஒன்றாய் அமர்ந்துள்ளன. தகவல்களை புனைவு ஜாடிகளில் ரசவாதம் செய்வது ஒரு சாமர்த்தியம் என்றால், அவற்றை தர்க்கத்தால் பின்னுவது மற்றொரு திறமை. இரண்டாவது வகையான கட்டுரை எழுத்துக்கு தேவையான மன ஒருங்கமைவு
பொ.கருணாகரமூர்த்தியிடம் இல்லை.
கருணாவின் கலவை மொழி
பொ.கருணாகரமூர்த்தியின் நடை இருபக்கமும் ஒலிபெருக்கி கட்டிக் கொண்டது; சித்தரிப்பு அல்லது தகவலுடன் எள்ளலும் விமர்சனமும் பின்னணியில் ஒலித்தபடி இருக்கும். உதாரணமாய் ”அக்கரையில் ஒரு கிராமம்” ஒரு பேருந்துக் காட்சி. கூட்டம் பிதுங்கும் பேருந்தில் அரசியல்வாதி ஒருவர் அமர்ந்திருப்பவரை எழுப்பி அமர்கிறார்:
“நம்மவூரில் பிக்குமார் செய்வதைப்போல வண்டியின் முன்வாசலால் ஏறிய ஆளுங்கட்சியின் ஏதோவொரு வட்டச்செயலர் ஒருவர் முன்சீட்டில் உட்கார்ந்திருந்தவரை சுட்டுவிரலை மடித்துக்காட்டி எழுப்பிவிட்டுத்தான் அமர்ந்து கொண்டார்”.
அது போல் “பால்வீதி” கதியில் இருந்து இந்த வரியை பாருங்கள்:
“குறுக்குமறுக்காக போர்விமானங்கள் கோடிழுத்துச்சென்றது போல் அடிவானத்தில் பல கோலங்கள் உண்டாயின.” இவ்வரி ஒரு போர் சூழலுக்கானது அல்ல; வானத்தை பற்றி விவரித்து போகையில் ஒரு அரசியல் எதார்த்தத்தை நினைவுபடுத்துகிறார். ஒரு எளிய வர்ணனையோடு சமூக-அரசியல் விமர்சனப் புள்ளி வைத்தே முடிக்கிறார். சற்றே புதுமைப்பித்தனை நினைவுபடுத்தும் நடை. பு.பியின் காலகட்டத்து செவ்வியல் பிரயோகங்களும் (ஒரு மானைப்போலத் திமிறி விடுவித்துக்கொண்டு தள்ளிப்போய் நின்றாள்; அனைவரும் அலர் அகவைப்பருவத்து மாணவிகள்), அறிவியல்-தமிழும் (ஓட்டமின்னியல்; தெறிவினை), இலங்கை வழக்கும் கலந்த வினோத நடை கருணாகரமூர்த்தி உடையது. முதலில் அவரை படிக்கும் போது இவரை தமிழ் உரை வரலாற்றில் எந்த புள்ளியில் நட்டு வைக்க என்ற குழப்பம் ஏற்படும். இந்த மொழியின் தனித்துவ அம்சத்தையும், அபார பாய்ச்சலையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
”அக்கரையில் ...” கட்டுரையில் ஒரு கிராமத்து சித்திரம் சற்றே கற்பனாவாத சாயலுடன் வருகிறது. ஆண்டான்-அடிமை வாழ்வுமுறையும், பெண்ணடிமையும் இயல்பான பண்பாட்டுக் கூறுகளாக உள்ள ஒரு கிராமம். அங்கு வரும் மேற்கத்திய சிந்தனை மற்றும் கலாச்சார மரபில் தோய்ந்த மனிதன் ஒருவன் அடையும் சன்னமான அதிர்ச்சிகளும், சங்கடங்களுமே கட்டுரையின் மையம். இந்த சற்றே பழைய சமாச்சாரங்கள் இடையே மிகவும் கூருணர்வுடன் க.மூ உருவாக்கி உள்ள பெண்களின் சித்திரங்கள் சிறப்பானவை.
புலம்பெயர் நெருக்கடியும் கலாச்சார முரண்களும்
கருணாகரமூர்த்தியின் சிறுகதைகளின் எரிபொருள் நாடகீயம் தான். அவரது சிறந்த கதைகள் மாறுபட்ட கலாச்சார மனங்கள் மோதுவதில் பிறப்பவை. நாடகத்தில் போலவே, சம்பவங்களும் வசனங்களும் க.மூவின் கதைகூறலில் ஆதாரமானவை. தமிழ்க்குடில் தளத்தில் உள்ள ”வண்ணத்துப்பூச்சியுடன் வாழமுற்படல்” சிறுகதை இத்தகைய ஒரு முரணியக்கத்தை வளர்த்தெடுக்கும் கதை. சித்தார்த்தன் எனும் ஒரு ஈழத்தமிழ் இளைஞன் தாய்லாந்து சிவப்புவிளக்குப் பகுதியில் ஒரு விலைமாதை சந்திக்கிறான். அவளிடம் திருப்தி அடையாமல் சராபுரி என்ற கிராமப்பகுதிக்கு செல்கிறான். அங்கு இளம்பெண்களை அப்பாக்களே பாலியல் தொழிலுக்கு உட்படுத்தி சம்பாதிக்கிறார்கள். தாய்லாந்துக்காரர்களுக்கு பாலியல் தொழில் பாலான குற்ற உணர்வு நீங்கி அதை உய்வுக்கான வழியாக தேர்ந்திடும் வண்ணம் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. சராபுரியில் அவன் கனீத்தா என்ற பெண்ணை துய்க்கிறான். கனீத்தாவின் லட்சியம் விபச்சாரம் மூலம் சம்பாதித்து சூப்பர் மார்க்கெட் ஒன்று வாங்குவது. அவளிடம் காதல் ஏற்பட்டு சித்தார்த்தன் அவளை ஜெர்மனிக்கு அழைத்து வந்து கூட வாழ்கிறான். மெல்ல மெல்ல இருவருக்குமான வேறுபாடுகள் உறுத்தத் தொடங்குகின்றன. கனீத்தா அவனை விட்டு பிரிந்து சென்று பழைய தொழிலை தொடர்கிறாள். சித்தார்த்தன் அவளை மீண்டும் தாய்லாந்தில், கதை ஆரம்பத்தில் வந்த, அதே சிவப்பு விளக்கு பகுதியில் சந்திக்கிறான். அவள் அதே சூப்பர் மார்க்கெட் கனவுடன் இருக்கிறாள். இதே கதையில் ஜெர்மனியில் வாழும் கடுமையான ஒழுக்கவாத மனநிலை உள்ள ஈழத்தமிழ் சமூகம் குறித்தும் குறிப்புகள் உள்ளன. ஜெர்மனியில் உள்ள தாய்லாந்துக்காரர்கள் மற்றும் ஈழத்தமிழர் இருசாராருமே புலம்பெயர்ந்த அன்னியர், வெவ்வேறு நெருக்கடிகள் கொண்டவர்கள் என்பதை நாமிங்கு கவனிக்க வேண்டும். இருவருமே ஒருவகையில் வண்ணத்துப் பூச்சிகள் தாம். இதை இருசாராரும் புரிந்து கொள்ளாத தனிமையும் அவலமுமே இக்கதையின் உபபிரதி.
கருணாவின் சிறந்த கதைகளில் ஒன்று “பகையே ஆயினும்” குமாரசெல்வாவின் “சுருட்டுவாளை” நினைவுபடுத்துவது. ”வண்ணத்துப் பூச்சியுடன் ... ” கதையில் போல இக்கதையிலும் இருகலாச்சாரங்களை சேர்ந்த மனிதர்கள் மோதிக் கொள்கிறார்கள். முடிவு தான் வேறு. கதைசொல்லி அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்கிறான். அவனது பக்கத்து வீட்டுக்கு ஹசன் எனும் ஒரு துருக்கிக்காரன் வந்து சேர்கிறான். சதா தொல்லை கொடுக்கிறான். டிரில்லரால் ஓட்டை போட்டு தொடர்ச்சியாக நாராசமான சத்தம் எழுப்புகிறான். உயிருள்ள ஆட்டை வீட்டுக்குள் கொண்டு வந்து அறுத்து தலை, கால், நகங்களை குப்பைத் தொட்டியில் வெளியே வைக்கிறான். தன் வீட்டில் வேண்டாத அலமாரியை அடுத்த வீட்டு வாசலில் கொண்டு வைக்கிறான். இதனால துருக்கிக்காரனுக்கும் கதைசொல்லிக்கும் பகை ஏற்படுகிறது. துருக்கி கறி வெட்டும் கத்தியை தூக்கி வந்து மிரட்டுகிறான். தமிழன் சூலம் தூக்குகிறான். பிறகு வரும் நாட்களில் இருவரும் பேசிக் கொள்வதோ முகமன் கூறுவதோ கூட இல்லை. சதா முறைப்பு. ஆனால் ஹசனின் ஜெர்மனி விசா நீட்டிப்பு மனு நிராகரிக்கப்பட ஒரு நாள் அவன் கிளம்ப வேண்டியதாகிறது. நெகிழ்ந்த மனதுடன் தமிழனிடம் விடைபெற வருகிறான். இருவரும் கட்டிக் கொள்கிறார்கள். பரிசுப் பொருட்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். துருக்கி தந்த பரிசுகளில் விசேசமான ஒரு பொருளும் உள்ளது: இறைச்சிக் கத்தி. இது ஒரு சமாதனாகக் குறிப்பு மட்டும் அல்ல; இருவரும் ஒரு பொதுகலாச்சார நீரோட்டத்தில் சந்தித்துக் கொண்ட கிளை ஓடைகள் மட்டுமே என்பதையும் இந்த கத்தி குறியீடு சொல்கிறது. ஹசனின் சண்டித்தனங்கள் அவன் இயல்பு அல்ல. அகதியாக அவன் சந்தித்த மன நெருக்கடியின் வெளிப்பாடு. அந்த கத்தி இருவரும் சதா கையில் ஏந்திக் கொண்டிருப்பது அல்லது ஏந்த அவசியம் உள்ள ஒன்று.
கருணாவின் அறிவியல்புனைவு: ஜெ.மோவின் வழியில்
சுஜாதா, ஜெயமோகன் வரிசையில் கருணாகரமூர்த்தியும் அறிவியல்புனைகதை முயன்றிருக்கிறார். சுஜாதா அறிவியல் பிரக்ஞை கொண்டவர் ஆயினும் அவர் லூசு பேராசிரியர், விளையாட்டுத்தனமான காதலன், அழகான விடலை பெண், வினோத வஸ்துக்கள் என்று ஆழம்மும் தீவிரமும் அற்ற ஜனரஞ்சக கதைகளையே அறிவியல் புனைவுகள் என்ற பெயரில் முன்வைத்தார். ஜெயமோகனின் அறிவியல் புனைவுகளில் இரண்டு கோளாறுகள் இருந்தன. முதலில் அவற்றில் அறிவியல் இல்லை. காரணம் அவருக்கு (அவரே சொல்லி உள்ளது போல்) அறிவியல் பிரக்ஞை இல்லை. அதனால் என்ன? அரசியல் ஈடுபாடு இல்லை என்று விட்டு அவர் கம்யூனிஸ எதிர்ப்பு நாவல் எழுத முயலவில்லையா! அதுபோல் தனது வழக்கமான ஆன்மீக சரக்குகளை ரசவாதம், யோகா, சூழலியல் சீர்கேடு என்ற பெயர்களில் அவிழ்த்து விட்டு ’இந்திய’ அறிவியல் புனைவுகதைகள் என்று பெயரிட்டார். ராமகோபாலனும் அவரது தொண்டர்களையும் தவிர பிறர் அக்கதைகளை நிராகரித்து விட்டனர். அடுத்த கோளாறு ஜெ.மோவின் கதைசொல்லல் முறை அரதப்பழசானது. முதல் தலைமுறை ஆங்கில அறிவியல் புனைகதையாளர்களால் எழுதப்பட்ட படைப்புகளில் போன்று ஜெ.மோ தனது கதையின் பேசுபொருளை இரு புத்திஜீவிகளுக்கு இடையிலான கேள்வி-பதில் வடிவில் வளர்த்தெடுக்கிறார். இது கோனார் நோட்ஸ்களை தாறுமாறாய் கிழித்து ஒட்ட வைத்தது போல் இருக்கும். ஆனால் இன்றைய நவீன அறிவியல் புனைகதை மிக சிக்கலான கருத்தியல்களை கூட காட்சிபூர்வமாய் முன்வைத்து படிமமாக்கி விடுகிறது. வசனங்களை அது பதவுரை வழங்க பயன்படுத்துவது இல்லை. இத்தனை விளக்கமாய ஜெ.மோ குறித்து பேசக் காரணம் கருணாகரமூர்த்தி அதே தவறுகளை தனது அ.பு கதைகளில் செய்கிறார் என்பதே.
தமிழ்க்குடில் இணையபக்கத்தில் உள்ள “பால்வீதி” கதை ஒரு நல்ல உதாரணம். பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் நடப்பதான ஒரு எதிர்கால கதை. வெற்று கிரகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் நடந்து கொண்டே உரையாடுகிறார்கள். என்ன பேசுகிறார்கள்?
• காதல் காமமா அல்லது உணர்வு மட்டுமா?
• இதைப் பற்றி பெண்ணியவாதிகள் என்ன சொல்கிறார்கள்.
• ஞானத்தின் பிறப்பிடம் மனமா ஆத்மாவா?
• மனமென்றால் உடல் மாயை. ஆத்மா என்றால் நம் வாழ்வில் ஏன் அழுக்கு படிந்து பாவிகள் ஆகிறோம்.
• பிறகு, அத்வைதம் தான் இந்த உலகம் மிக ஆச்சரியமான தத்துவம். ஏன்? பிரம்மத்தில் இருந்து வேறுபட்ட பொருட்கள் தோன்றியுள்ளதை சொல்லுகிறது. அது மட்டுமல்ல நூண்காட்டி இல்லாமலே மூலகங்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையை அத்வைதம் கண்டுபிடித்து விட்டதாம்.
இப்படியெல்லாம் கலாச்சார தாழ்வுமனப்பான்மையில் தத்துவ விசாரம் செய்ய இன்றே நமக்கு நேரமில்லை. காலம் அப்படி பறக்கிறது. ஆனால் க.மூ கதையில் எதிர்காலத்தில் இருவர் இப்படி உளறிக் கொட்டுவதோடு புளிசாதம் வேறு பொட்டலம் பிரித்து உண்ணுகிறார்கள். அறிவியல் புனைகதையில் முதலில் சமகாலத்தன்மை வேண்டும். அடுத்து அறிவியல் அவதானிப்புகள் கொண்டு உருவான அலாதியான கற்பனை வேண்டும். கருணா செய்வது எல்லாம் ஜெ.மோ வழியில் பிற்போக்கு ரதம் விடுவது தான்.
கடைசியாக இலவச-விரும்பிகளுக்கு ஒரு சேதி: கருணாகரமூர்த்தியின் “பெர்லின் இரவுகள்” என்ற பேசப்பட்ட நூல் இலவசமாக இணையத்தில் இங்கே கிடைக்கிறது: http://www.noolaham.org/. இலக்கிய நலம்-விரும்பிகள் உயிர்மை பதிப்பகத்தில் இருந்தும் வாங்கலாம்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment