Wednesday, 21 April 2010
இன்று கற்றவை
என் சிறிய வாழ்வில் நான் மிகவும் வெறுக்கும் தினங்களில் ஒன்றாக இன்றைய நாளும் இருக்கும். ஜெயமோகனின் அவதூறுக்கு எழுதிய பதில் கட்டுரையை சாருவின் இணையதளம் மற்றும் உயிரோசை வழியாக ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டிருப்பார்கள்; படித்திருப்பார்கள். அவர்களில் ஒரு சிலர் பரிகாச பின்னூட்டங்கள் வழியாக என்னை சீண்டினார்கள். கடந்த ஒருவாரமாக கடுமையான அலுவலக பணி. காலை எட்டு மணிக்கு சென்று பத்து மணிக்கு தான் வீடு திரும்பினேன். அங்கு துறைத்தலைவரும், உபதலைவரும் தந்த அவமானங்களும், காயங்களும் ஏராளம். என்ன செய்தாலும் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தேன். பிறகு ஜெயமோகன் நான் சற்றும் எதிர்பாராமல் தனிப்ட்ட என் குறையை சுட்டிக் காட்டி தாக்கினார். அவர் என்னை கண்டிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எழுத்தில் கீழ்மைப்படுத்துவார் என்று நினைக்கவில்லை. ஏனென்றால் பதின்பருவத்தில் இருந்தே அவர் அளவுக்கு நான் நேசித்த, மரியாதை செலுத்தின, ஆராதித்த ஒரு ஆளுமை வேறில்லை.
ஜெயமோகனின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவதை ஆரம்பத்தில் தவிர்த்து விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவர் என்னைப் பற்றின பல தனிப்பட்ட தகவல்களை திரித்து எழுதினதால் பதில் எழுதுவது தவிர்க்க முடியாமல் போனது. அன்றாட வாழ்வில் நம்மைப் பற்றி சிறுதகவல் மாற்றி கூறப்பட்டாலும் உடனே திருத்தவே முயல்வோம். நீங்கள் பத்து மணிக்கு தாமதமாக அலுவலகம் சென்றிருக்கலாம். ஆனால் மேலாளரோ பிறரோ பதினொரு மணி என்றால் பொறுப்பீர்களா? உடனே திருத்த மாட்டீர்கள்? என்னதான் தாமதம் என்றாலும் அந்த அரைமணி நேரத்தை விட்டுத்தர நாம் சம்மதிப்பதில்லை. அது போலத் தான், என்ன தான் நான் நொண்டி என்றாலும் ஜெயமோகன் எனக்கு ரெண்டு காலும் விளங்காது என்றால் நான் ஏற்றுக் கொள்ள முடியாது அல்லவா. முழு நொண்டிக்கு அரை நொண்டி பரவாயில்லையே! என் அம்மாவை வேறு தவறாக பேசுகிறார். அவர் வாசித்தால் மனம் எப்படி புண்பட்டிருக்கும். காரணம் ஜெ.மோ மீது அவருக்கும் அபார மரியாதை உண்டு. நான் அவருக்கு அறிமுகப்படுத்திய ஒரே தமிழ் எழுத்தாளர் அவர் தான். இதை ஏன் சொல்லுகிறேன் என்றால் இங்கு பின்னூட்டம் இட்ட சிலர் நான் ஜெ.மோ சாருவுக்கு இடையே புகுந்து மகுடி வாசிப்பதாக சித்தரித்தனர். கொத்துபடாமல் விலகிப் போ என்றனர். அல்லது சில்லறை புகழுக்கு ஆசைப்பட்டு ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றியதாக் சிலர் சொன்னார்கள். ஜெயமோகனின் கருத்தில் உள்ள மனித உரிமை மீறலை அவர்கள் கவனியாதது ஏன்? எனக்கு புரியவில்லை.
என் உற்ற நண்பர்கள் நடத்தும் அமைப்பு சார்ந்தும் ஒரு சிறு கருத்து வேறுபாடு நேற்று ஏற்பட்டது. எனது மன நெருக்கடி காரணமாக அது என் நண்பர்களின் கருத்துக்கள் பெரும் அவமானமாக பட்டன. அவர்களிடமும் கோபித்துக் கொண்டேன். சிறுக சிறுக பதற்றத்தில் மூழ்கி நான் முழுக்கவே நிதானத்தை இழந்தேன். எந்த வேலையும் செய்யாமல் எனக்கு பின்னோட்டம் இடுபவர்களுக்கு பைத்தியம் சுவரில் கிறுக்குவது போல் பதிலிட்டு அக்கப்போர் செய்து கொண்டிருந்தேன். இப்போது இரவில் காலம் அசைவுகள் அடங்கி ஓயும் வேளையில் முடிந்து போன நாளின் அத்தனை அபத்தங்களும் விளங்குகின்றன.
நண்பர்களே! நீங்கள் என்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒரு தனிநபர் உரிமைதான். என் மீது குரூரத்தை காட்டுவதோ புறக்கணிப்பதோ கேலிசெய்வதோ கூடத் தான். ஏராளமானோர் மேற்சொன்ன கட்டுரையை படித்து விட்டு மௌனமாக சென்றதும் கூட அவர்கள் உரிமைதான். உங்களிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்து ஏமாந்ததனாலே நான் நிதானம் இழந்தேன், எரிச்சலடைந்தேன், கீழ்த்தரமான மொழியில் பதிலளித்தேன். நான் பலவீனமாக இருந்தேன். ஜெயமோகனால் இரண்டாவது காலும் ஊனமாக்கப்பட்ட ஒரு மனிதனின் ஒரு நாள் பலவீனத்தை, அதன் விளைவான அசட்டுத்தனங்களை மன்னித்து விடுங்கள். குறிப்பாக கிரி மற்றும் மதிக்கு!
Share This
Labels:
தனிப்பட்ட பகிர்வுகள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
You are down, not out.
ReplyDeleteCheer up! Life is not as bad as you think.
Jeyamohan cannot steal your creativity by any form of words -- be they of the highest rank or cheapest form.
Hope you regain your strength and write a lot of quality stuff.
பின் பக்கம் ஒட்டிய
ReplyDeleteமணற்துகள்களைத்
தட்டிவிட்டுப்
போய்க்கொண்டேயிருங்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteநிச்சயமாக கிரி! தொடர்ந்து என்னுடன் உரையாடுங்கள், என்னை வாசியுங்கள். நம் உறவு தொடரட்டும்.
ReplyDeleteதவறு செய்தால் தான் மனிதன்...அதனினும் மன்னிப்பு உங்களை சற்று உயரத்தில் நிறுத்திவிட்டது...
ReplyDeleteநண்பரே...ஜெயமோகன் அவ்வாறு சொல்லியிருந்தால் அவர் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
ReplyDeleteஒன்றும் குறைந்து விட போறதில்லை. நல்லா எழுதுற ஆசாமிகள்லாம் இப்படி சண்டை பிடிச்சிக்கிட்டு திரிந்தா நாங்கெல்லாம் என்னத்த படிக்க.வேற ஏதாவது மொழி கத்துக்கிட வேண்டியதுதான். இந்த சம்பவத்தை இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நீங்க சிந்தித்தால் உங்களுக்கு சிரிப்புதான் வரும்.வாழ்க வளமுடன்.
//நல்லா எழுதுற ஆசாமிகள்லாம் இப்படி சண்டை பிடிச்சிக்கிட்டு திரிந்தா நாங்கெல்லாம் என்னத்த படிக்க//
ReplyDeleteஇதுவே ஏன் கருத்தும்
ம.பு. வின் அறிவுரை மிகச் சரியான ஒன்று.
விமர்சனத்தை சரியான விதத்தில் எதிர்கொள்ளாத நபருடன் விவாதத்தை தொடர்வது வீண் வேலை.
மிகுந்த மனவேதனையுடன் எழுதப்பட்ட உங்கள் எழுத்துக்கள் மன வருத்தத்தை தருகின்றன.
Cheer up!
நான் மிக விரும்பும் எழுத்தாளரான தங்கள் எழுத்துக்கள் தொடரட்டும்.
அபிலாஷ்!
ReplyDeleteஉங்கள் படைப்புகள் மட்டுமே உங்களைப் பற்றிப் பேச வைக்க வேண்டும் என்பதில் எனக்கு மிகுந்த ஆசை உண்டு. வன்மம் , குரோதம் , விளம்பரம் எல்லாவற்றையும் உங்கள் எழுத்தை வென்றுவிட விடாதீர்கள்.இன்றும் புதுமைப் பித்தனை ரசிக்கிறோமென்றால் அது அவரது படைப்புகளைத்தான், அவர் வாழ்ந்த காலம் மட்டுமே அவரை வித்தியாசப்படுத்துமே அன்றி அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்ல. ஒரு சாதாரண ரசிகனை கணேஷ் வசந்த் கிறங்கடித்தது போல் சுஜாதாவினுடைய வாழ்க்கைக் குறிப்புகள் கட்டிப் போடாது. நவீன தமிழ் இலக்கியச் சூழலை புதிதாக எதிர்கொள்ளும் ஒருவனுக்கு அயற்சியே மிஞ்சும். அதற்கு காரணம் ஜெயமோகனும் சாருவும் தான். இன்னும் இருபது வருடத்துக்கு பெஸ்ட் செல்லர் சுஜாதாவாகத்தான் இருப்பார் என்பதில் அவரது வாசகனாகிய நான் பெருமை கொள்வேன். அதே நேரத்தில் அவரைப் போல் ஒரு ஆளுமை வராததற்கு ஆரம்ப கட்ட இலக்கிய வாசகனாக வருத்தமும் கொள்வேன். இவர்களுடைய சண்டையில் உங்கள் ஆளுமையை பிறழ விடாதீர்கள்.
புதிதாக நவீன இலக்கியம் வாசிக்க வருபவனுக்கு இவர்கள் எதற்காக அடித்துக்கொள்கிறார்கள் என்ற கேள்வி மட்டுமே எஞ்சி நிற்கிறது. எனக்கும்!
நன்றி
ரெட்டைவால்ஸ்@ விக்னேஷ்வரன்
Happy to see that you could get over this... Your have lot to write and learn... Your writing needs a lot to improve.. Keep writing original pieces not personal criticisms of personalities...
ReplyDeleteவணக்கம் அபிலாஷ்
ReplyDelete/சிறுக சிறுக பதற்றத்தில் மூழ்கி நான் முழுக்கவே நிதானத்தை இழந்தேன். //
ஜெமோவின் நிறைய பதிவுகளைப் படித்தபோது எனக்கும் இப்படி நேர்ந்திருக்கிறாது. காற்றில் தன் ஆயிரம் கரங்களை நீட்டி விஷத்தைப் பரப்பும் ஒரு நவீன போபாலாக அவர் மாறி வருகிறார் என்றே பல சமயங்களில் நானும் நினைப்பேன்