கூடு இணைய இதழுக்காக இளைய இயக்குனர்களின் குறும்படங்களை அறிமுகப்படுத்தி விமர்சித்து வருகிறேன். இம்முறை மூன்று படங்கள்.
காத்து ... காத்து
சிவசங்கர் இயக்கி உள்ள காத்து ... காத்து ஒரு அரசியல், பொருளாதார விமர்சனப் படம். ஒரு எளிய கதை: ஒரு சிறுவன் தனக்கு கிடைக்கும் காசை முதலீடு செய்கிறான். எப்படி? சத்தியமாக நீங்கள் நம்ப மாட்டீர்கள். அவன் ஒரு முட்டை வாங்கி அதன் மீது அடை இருக்கிறான். பாரம் தாங்காமல் முட்டை உடைய திரும்பவும் அதை முயன்று ஏமாற்றம் அடைகிறான். படத்தின் ஆரம்பத்தில் சக்கரவர்த்தி எனும் பொருளாதார நிபுணரின் கருத்து காட்டப்படுகிறது: இந்தியாவின் ஐந்து ஆண்டு திட்டம் வறுமையை ஒழிக்க தவறி விட்டது. தமிழ் சினிமா வெளி பெரும் அரசியல் வறட்சியை கொண்டுள்ள சூழலில் இது கருத்தளவில் ஒரு சுவாரஸ்யமான முயற்சி. ஆனால் காட்சிபூர்வமாய் சிவசங்கர் தன் திறன்களை மெருகேற்ற வேண்டும்.
ஒரு உச்சபட்ச காட்சிக்கான தயாரிப்பு காட்சிகளை எதிர்பார்ப்பு உருவாக்கும் படி வளர்த்து எடுப்பது குறும்படங்களுக்கு தேவையான முக்கியமான நுட்பம். சுருக்கமாகவும் சுவாரஸ்யமாகவும் மைய காட்சிக்கு பார்வையாளனை அழைத்து செல்ல தெரிய வேண்டும். ஆனால் ’காத்து காத்து’ படத்தின் வளர்த்தெடுப்பு காட்சிகள் தொய்வாக உள்ளன. இறுதியில் சிறுவனின் நிராசை தோன்ற வேண்டிய காட்சியில் அவன் சிரிக்கிறான். இக்காட்சியை சாமர்த்தியாக படத்தொகுப்பில் மாற்றியமைத்திருக்கலாம். அல்லது திரும்ப நடிக்க வைத்திருக்கலாம். படத்தின் முக்கிய சறுக்கல் இது. அடுத்து இப்படம் நமக்கு மற்றொரு முக்கிய ஐயத்தை எழுப்புகிறது: “ஒரு சிறுவன் இவ்வளவு யோசிப்பானா?”. இத்தனையும் செய்ய முடிந்த இயக்குனர் ஐந்தாண்டு திட்ட விமர்சனத்தையும் அவன் வாயால் சொல்ல விட்டிருக்கலாம்!
இடைநாழி
இடைநாழிக்கு கோவிலின் கருவறையையும் அர்த்தமண்டபத்தையும் இணைக்கும் இடம் என்றொரு பரவலான பொருள் உள்ளது. சிவசங்கர் இயக்கி உள்ள இக்குறும்படத்தின் தலைப்புக்கு தற்காலிகம் என்று ஆங்கிலத்தில் விளக்கம் தந்துள்ளார். படத்தின் ஆரம்பத்தில் ஒரு புத்திஜீவி தோன்றுகிறார். ஜிப்பா, சில வாரத்தாடி, குழப்பமான பார்வை, பாரித்த நடை, சிகரெட், பேனா, எழுதும் அட்டை. மலை ஏறுகிறார். ஏறி ... ஏறி இறங்குகிறார். அழகான குளத்தங்கரை. வளைந்து நெடுகின தென்னைகள். அவற்றை சுற்றி ... சுற்றி சாய்ந்து நின்று, பின் கீழே அமர்ந்து எழுதுகிறார். எழுதி ... எழுதி கிழித்து கப்பல் செய்கிறார். பிறகு கப்பலை குளத்து நீரில் தோய்க்கிறார். பிறகு தீக்குச்சியை கிழிக்க, ஈரக்கப்பல் (?) பற்றிக் கொள்கிறது. தலை சுற்றுகிறதா? திரும்ப மலைக்கு வாருங்கள்.
நமது குறைந்த பட்ச இலக்கிய பரிச்சயம் கொண்டு இந்த பூடக படத்தை அறுத்துப் பார்க்கலாம். தமாஷில் விருப்பமுள்ளவர்கள் மேலும் தொடரலாம்.
எழுத்தாளர் – சிருஷ்டிகர்த்தா
மலை – சிருஷ்டியின் உச்சநிலை
குளம் – நீர்மை – சிருஷ்டித் திறன் – இங்கே தான் படைப்பு சாத்தியமாகிறது.
ஆனால் பாருங்கள் இத்தனை எழுதியும் என்ன பயன். எல்லா தோற்றங்களும் பூஜ்யத்தில் தானே முடிய வேண்டும். ஆக புத்திஜீவி கொளுத்தி நீரில் கரைக்கிறார். படத்தில் ஷேக்.ஏ.பீரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது. பீர் முகம்மது நடிக்கவும் படக்காட்சிகளை கோர்க்கவும் செய்துள்ளார். இரண்டாவதில் அவருக்கு மேலும் சுதந்திரம் அளித்திருக்கலாம். தக்கலை கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பினரான சிவசங்கர் நிச்சயம் நம்பிக்கை ஊட்டுகிறார்.
விழி
இப்படத்தை இயக்கி உள்ளவர் ஷேக்.ஏ.பீர்.
புத்திஜீவிகளுக்கு அடுத்தபடி நம் குறும்படவாதிகளின் மனவெளியை ஆக்கிரமித்துள்ளவர்கள் குருடர்கள். விழியின்மை என்று கருத்துருவை ஒரு மாற்றுப் பார்வையாக முன்வைத்து புதிய அவதானிப்புகளை நிகழ்த்துவதற்கான சாத்தியங்களே இதற்கு காரணம். இத்தகைய முயற்சிகளில் ஊனம் குறித்த மிகை மதிப்பீடுகளை நாம் கராறாக புறக்கணிக்க வேண்டும். ஏன் எனில் மிகை சித்தரிப்புகள் ஊனர்களை சமூக மைய ஒழுக்கில் இருந்து மேலும் மேலும் விலக்குகின்றன.
ஒரு குருடன் சாலையில் குச்சியை தட்டியபடி நடந்து வருகிறான். சில சிறுவர்கள் சக்கரங்களை குச்சியால் ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கல்லில் தடுக்கி விழ வேண்டும். அதற்கு அவர்கள் விளையாடுவது இழுவையாக பல நொடிகள் பல கோணங்களில் காட்டப்பட்டு பிறகு நம் பற்கள் நெரிபடும் சமயத்தில் ஒருவழியாய் ஒரு சிறுவன் ’விழுகிறேன் பார்’ என்று கல்லின் முன் குட்டிக்கரணம் அடிக்கிறான். அடுத்து ஒரு ஆசாமி இதே போல் அவராகவே கல்லில் முட்டிக் கொண்டு காயத்தை சோதிக்கிறார். ஆனால் இருசாராருமே கல்லை நகர்த்தி ஓரமாக போடவில்லை. பிறகு கல்லை foreground செய்து குருடனை காட்டுகிறார்கள். அவர் நடக்கிறார் ... கிறார். பிறகு என்ன நடந்தது என்பதை குமுதம் ஆனந்தவிகடன் குறுங்கதை வாசகர்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
கல்லை தூக்கி போடுகிறார். அப்போது ஒரு வண்டி சேற்றை வேறு அடித்து போகிறது. அதை அலம்பி விட்டு குருடர் எந்த புகாரும் இன்றி தன் பயணத்தை தொடர்கிறார். நிஜவாழ்வில் உங்கள் மீது சேற்றை அடித்தால், அதுவும் ஒரு சமூகசேவை செய்யும் சுபயோக தருணத்தில் அடித்தால், அடிவயிற்றில் இருந்து “ஓ...” “தே...” போன்ற பிரயோகங்கள் கிளம்பும். ஆனால் குருடர் அப்படி செய்தால் மைய-நீரோட்ட பார்வையாளனுக்கு உச்சுக்கொட்ட தோன்றாதே! இப்படியான தியாகி பாத்திரங்கள் பழைய சினிமாக்களில் விளிம்பு நிலை வேலையாட்களுக்கும், பிறகு தொண்ணூறுகள் வரை படித்த/குடும்ப பெண்களுக்கும் வழங்கப்பட்டது. பிறகு சாதி-பிரகடன படங்கள் உருவான போது தாழ்த்தப்பட்ட சாதியினர் தியாகமூர்த்திகள் ஆனார்கள்.
சுருக்கமாக இப்படம் உருவாக்கும் சித்திரம் போலியானது. ஊனர்களுக்கு உங்களைப் போல் அன்றாட வாழ்க்கையின் தேவைகளும் நெருக்கடிகளும் அவசியத்திற்கு உள்ளன. கல்லைத் தூக்கிப் போடுவது அல்ல அவர்கள் வேலை. சமூகம் குருடனை விட குருடு என்று சொல்வதற்கு இப்படி பாலா பாணியில் பாசிஸ கதைகூறலை மேற்கொள்ள தேவை இல்லை. குறும்படங்கள் மாற்றுசினிமாவுக்கான சிறந்த தளம். அங்கு இத்தகைய பிற்போக்கு முயற்சிகளுக்கு இடமில்லை.
No comments :
Post a Comment