Tuesday, 6 April 2010
சானியா மிர்சா திருமணமும், இந்திய-பாகிஸ்தான் நல்லுறவும்
இன்று ஆங்கிலோ-இந்தி ஊடகங்களில் மிகை ஒப்பனை மற்றும் செயற்கை உச்சரிப்புடன் சிள்வண்டு போல் சலம்பும் ஒரு தலைமுறை பத்திரிகையாளர்கள் கிளம்பியிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு சரளமாக ஆங்கிலம் பேசவரும், ஆனால் சாமர்த்தியமாக எழுதவோ நுட்பமாக யோசிக்கவோ வராது. எளிய வாழ்வியல் அனுபவங்கள் கூட இவர்களுக்கு இல்லையா என்ற எண்ண வைக்கும் படி இவர்களின் நடவடிக்கைகள் மற்றும் பேச்சு இருக்கும். உதாரணமாக மும்பை தீவிரவாத தாக்குதலின் போது சபீனா சேகல் என்ற டைம் ஆப் இந்தியா பத்திரிகையாளர் காணாமல் போனார். இதிலிருந்து அவர் இறந்து போனதாக செய்தி உறுதியாகும் வரை NDTV தொலைக்காட்சியில் சபீனாவின் கணவரை நேரலையாக பேட்டி கண்டார்கள். மனைவி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்ற கடும் பதற்றத்தில் இருந்த அம்மனிதரிடம் கேட்கப்பட்ட கேள்வி என்ன? ” நீங்கள் இப்போது சரியாக என்ன நினைக்கிறீர்கள். உங்கள் மனைவி பற்றி என்னென்ன எண்ணங்கள் ஏற்படுகின்றன?”. அவர் சொன்னது “என் குழந்தைகளிடம் என்ன சொல்வது என்று யோசிக்கிறேன்”.
இப்போது சானியா மிர்சா பாகிஸ்தானி கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை மணம் முடிக்க போவதாய் அறிவித்துள்ளார். CNN IBN-க்காக சானியாவை பேட்டி கண்ட மற்றொரு மனமுதிர்ச்சியற்ற பெண் ஆர்வமாக கேட்ட கேள்வி இது: “ உங்கள் திருமணம் இந்திய-பாக்கிஸ்தான் ஒருமைப்பாட்டை எப்படி மேம்படுத்தப் போகிறது?”. “எங்கள் திருமணத்துக்கும் இரு தேசங்களுக்கான நல்லுறவுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. நாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கே மணம் புரிகிறோம். உபரியாக இந்தியா-பாக் உறவு மேம்பட்டால் மகிழ்ச்சி தான், என்றார் சானியா. இதன் பிறகும் சானியாவின் துள்ளும் முலைகளின் வீடியோ துணுக்கு ஒன்றை காட்ட அத்தொலைக்காட்சி மறக்க இல்லை. தனிமனித வாழ்வு பற்றி மீடியாவுக்கு கவலையே இல்லை. புனரமைப்பு என்ற பெயரில் கோயில் சிறபங்களில் சுண்ணாம்பு அடித்து மறைக்கும் இந்திய கலாச்சாரத்தின் ஒரு தொழில்நுட்ப நீட்டிப்பாக தான் இன்றைய ஊடக பதிவுகளை பார்க்க முடிகிறது.
ஒரு விளையாட்டு வீரர் தன் நாட்டுக்கு சர்வதேச அளவில் அந்தஸ்து பெற்றுத் தருகிறார் என்பதால் அவரை நம் கலாச்சார, அரசியல் பிரதிநிதியாக காணலாமா? ஒரு சமூகத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்பவர் அதன் பல்வேறுபட்ட அரசியல், கலாச்சார, பொருளாதார கூறுகளை பிரநுத்துவப்படுத்தி அதற்காக தன்னை முன்னிறுத்துபவராக் இருக்க வேண்டும். உதாரணமாக இன்று தலித்துகளுக்கு திருமாவும், ஒரு காலத்தில் வன்னியர்களுக்கு ராமதாசும் எழுச்சி அடையாளங்களாக கூறலாம். ஆனால் ரஜினிகாந்த் அல்லது ஜெயலலிதா தமிழ் சமூகத்தின் முகங்கள் அல்ல. இன்று கேளிக்கை கலாச்சாரம் அதன் உச்சத்தை நோக்கி நகர்ந்து விட்ட, அதை ஊடகங்கள் லாபகரமாக்க விரும்பும் ஒரு கட்டத்தில் எளிய கலைஞர்கள் ஒரு சமூகத்தின் முகங்களாக முன்னிறுத்தப்படும் அவலம் நடக்கிறது. உதாரணமாக கடந்த ஜனவரியில் ஷாருக்க்கான் விசயத்தில் இந்த விதமான அசட்டுத்தனம் நடந்தது. நிலவில் ஆம்ஸ்டுராங் கால்பதித்த இடத்திற்கு சற்று தள்ளிய ஒரு பள்ளத்தாக்குக்கு ஷாருக்கானின் பெயரை The International Lunar Geographic Society சூட்டியது. இதற்கு அவர்கள் சொன்ன காரணம் இந்தியர்கள் மத்தியில் மிகப் பிரபலமான நட்சத்திரம் அவர் என்பதே. இப்படி விண்வெளியில் ஷாருக்குடன் வேறு யாரெல்லாம் பெயரை பகிரிந்துள்ளார்கள் என்பதை கவனித்தால் நமக்கு இதன் அபத்தம் புரியும்: நோபல் பரிசை வென்ற சி.வி ராமன், இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் பிதாமகர்களாக கருதப்படுகிற விக்ரம் சரபாய், ஹோமி பாபா மற்றும் மேக்னா சாஹா போன்றவர்கள். வணிக சினிமாவின் ஒரு மேலோட்டமான நடிகருக்கு இப்படி ஒரு அந்தஸ்தா என்று சர்ச்சை கிளம்பிட ஷாருக்கானுக்கு எதிர்பாராத பக்கத்தில் இருந்து ஆதரவு வந்தது. முன்னாள் ISRO சேர்மேனும் விண்வெளி விஞ்ஞானியுமான கஸ்தூரி ரங்ஜன் ஷாருக்கான் இந்திய இளைய தலைமுறையை பிரதிநுதப்படுத்துபவர்; அவர் பெயரை நிலவில் பொறித்தது தகும் என்று வாதிட்டார். ஒரு விஞ்ஞானியே இப்படி அபத்தமாய் பேச CNN IBN-இன் கான்வெண்ட் கிளி வேறு என்ன பிதற்றும் சொல்லுங்கள்?
ராகுல்காந்தி ஒரு பாகிஸ்தானி பெண்ணை மணமுடித்தால் CNN IBN இப்படியான கேள்விகளை கேட்பதற்கு நியாயம் இருக்கும். காங்கிரஸ் ஆட்சியின் போது அப்படியான திருமணம் வரலாற்றுக் குளத்தில் பாஷோவின் தவளையாக குதித்து அதிர்வுகளை கிளப்பலாம். மேலும் சானியா விசயத்தில் இந்தியா-பாக் இணங்குவதை விட புதுமணத்தம்பதிகளுக்கு விசா உள்ளிட்ட தூதரக சிக்கல்கள் அதிகமாவதே முதலில் நடக்கும். இதை முன்கூட்டியே பரிசீலித்து பார்த்த சானியா பாக்கிஸ்தானில் குடிபுகுவது இல்லை என்று முடிவு செய்திருக்கிறார். தம்பதிகள் துபாயில் வாழப் போகிறார்கள். “துபாய் இங்கிருந்து மூன்று மணி நேரம் தான். ஏதோ சணிடிகர்ஹ் போய் வருவது போலத்தான். இந்தியாவில் இருந்து வெளியே வாழும் உணர்வே ஏற்படாது. ஷோயப்புக்கு பல ஆட்டங்கள் துபாயில் தான் நடை பெற உள்ளன. துபாயில் இருந்து நினைத்த நேரத்தில் ஹைதராபாத் வந்து விடலாமே” என்கிறார் சானியா. இது கூட சப்பைகட்டு தான். முதலில், இப்போதைய சூழலில் பாகிஸ்தான் அணி துபாயில் என்றில்லை எங்குமே அதிகமாக ஆடுவதில்லை. எதிர்காலத்திலும் நிலைமை சீரடைய அதிகம் வாய்ப்பில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் அதல பாதாளத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. வோடாபோன் பக் நாய்க்குட்டி போல் துண்டு, சோப் என்று கவ்வி கொண்டு சானியா பின்னலையவே ஷோயப்புக்கு எதிர்காலத்தில் ஏகத்துக்கு நேரம் இருக்கும். மூன்று மணி நேர தொலைவுதான் என்றாலும் சானியா பாக் மருமகள் ஆகி விட்ட நிலைமையில் ஹைதராபாத்தில் தீவிரவாத தாக்குதல் போன்று அசம்பாவிதங்கள் நடந்தால் அவரது குடும்பத்தினர் உள்ளூர் சக்திகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பார்களா? சானியாவால் அப்படியான ஒரு உஷ்ண சூழலில் மனம் போல் தாய் வீடு திரும்ப முடியுமா? இப்போதே இந்திய தேசியவாதிகள் சானியாவின் புகைப்படங்களை கொளுத்தி அவருக்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பித்துள்ளனர். பால் தாக்ரே யாகத்தீக்குள் தலைவிட்டு “தேசப்பற்று இருந்திருந்தால் ஷோயப்புக்காக சானியாவின் இதயம் துடித்திருக்காது. அவர் இந்தியாவுக்காக ஆடும் தகுதியை இழந்து விட்டார்” என்று கொட்டி இருக்கிறார். பாக்கிஸ்தான் தரப்பில் சானியா தங்கள் நாட்டுக்காக ஆட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இரு நாடுகளின் உறவை இத்திருமணம் மேம்படுத்துமா என்பதல்ல திருப்பிக் கேட்பதே அர்த்தமுள்ள்தாக இருக்கும்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
அற்புதமான பதிவு அபிலாஷ்.ஊடகங்களின் வரம்பு நிர்ணயமற்றும் முதிர்ச்சியற்றும் இருக்கிறது.அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது எப்போதெல்லாம் பேசாதிருக்க வேண்டும் என்பதையும்-என்னவெல்லாம் பேசவேண்டும் என்பதையுமே.உங்கள் மொழி நேர்த்தியாக இருக்கிறது.
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி சுந்தர்ஜி மற்றும் கெ.ஜெ.அசோக்குமார்
ReplyDelete