காலத்துக்கு உதடுகள் உண்டென்றால் அவை சதா புன்னகைத்தபடியே இருக்க வேண்டும். மாற்றங்களின் வீச்சில் அத்தனை வேடிக்கைகள். மனித வரலாற்றில், உங்களது எனது அன்றாட வாழ்வில் இதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. எனினும் ஒரு மாற்றத்துக்கு பூனையிடம் இருந்து ஒரு கதை சொல்கிறேன்.
எங்கள் வீட்டில் இரண்டாவது பூனை வந்த போது ஏற்கனவே ஒரு முதல் பூனை இருந்திருக்கும் என்பதை இதை படித்து முடிக்கும் முன்னரே ஊகித்திருப்பீர்கள். முதல் பூனை நாட்டு வகை. ஐந்தரை அடி உயர மனிதனின் முழங்கை அளவு நீளம். சராசரி உயரம். பூனை 2 நாலே வாரங்கள். பெண்களின் கைக்குட்டையை கசக்கி வைத்தது போன்ற தோற்றம். நாங்கள் பயந்தது போன்றே பூனை 2 வந்ததும் மூத்ததுக்கு பயங்கர கோபம். குட்டியை நாங்கள் பொத்தி பொத்தி காக்க வேண்டி இருந்தது. அறைக்குள் சதா பூட்டி வைத்தோம். ஆனால் பூனை 1 பல்லைக் காட்டி பாம்பு போல் ஓசை எழுப்பி சீறியது. பார்க்கும் போது எல்லாம் பாய்ந்தது. குட்டிப் பூனைக்கோ மூத்த பூனை தன் தாயை நினைவூட்டி இருக்க வேண்டும். ஆசையாக அருகில் சென்று கடியும் பிறாண்டல்களும் பெற்றது.
குட்டிப் பூனை சாப்பாட்டுக் கிண்ணம் அருகே சென்றால் மூத்த பூனை துரத்தியது. கார்ட்போர்டு பெட்டிக்குள் தூங்கினால் விரட்டியது. பிளாஸ்டிக் பந்து விளையாடினால் தட்டிப் பறித்தது. இப்படி நம்மூர் சாதி நிலவரம் தான். அப்போது குட்டிப் பூனையை பார்க்க பாவமாக இருந்தாலும் சீக்கிரமே நிலைமை தலைகீழாகும் என்று தோன்றியது. காரணம் குட்டிப் பூனை persian எனும் பெரிய வகை பூனை. ஜடை நாய் உயரத்துக்கு வளரும். ஒரே மாதத்தில் குட்டிப் பூனை திரும்ப துரத்தி விட்டு பதுங்கிக் கொள்ள ஆரம்பித்தது. பெரிசு சற்று சந்தேகத்துடன் குட்டியின் வளர்ச்சியை கவனித்தது. அசுர வேகத்தில் வளர்ந்து ஆறே மாதத்தில் பெரிசை விட உயரமாக பருமனாக தோற்றம் அளித்தது. பிறகு பொழுது போகாவிட்டால் பூனை 1-ஐ துரத்தி அடிக்கிறது. தூங்க விடாமல அதன் வாலை கடித்து சீண்டுகிறது. பெரிசு திடீரென்று பயங்கர பொறுமைசாலி ஆகி விட்டது. நாளுக்கு நாள் தன் இருப்பின் நெருக்கடியை உணர்ந்து வருகிறது. ரெண்டு வயது நாட்டுப் பூனை ரெண்டு கிலோ என்றால் ஒரு வயது பெர்ஷியன் புனை ஆறு கிலோ கனக்கும். அதாவது இன்னும் ஆறு மாதங்களில் பெரிசை விட சிறிசு மும்மடங்கு பெரிசாகி விடும்.
உங்கள் வாழ்வில் இது போல் பல சம்பவங்கள் பார்த்திருக்கலாம், கேள்விப்பட்டிருக்கலாம், வாசித்திருக்கலாம். எனக்கு எழுதுங்கள்.
Thursday, 1 April 2010
Subscribe to:
Post Comments
(
Atom
)
எல்லா அலுவலகத்திலும்
ReplyDeleteநடக்கும் SENIOR,JUNIOR
பிறாண்டல்கள்தான்
உங்கள் பூனைகளின்
கதை.
உண்மை. என்ன, ஜூனியர்களை அவ்வளவு எளிதில் யாரும் வளர விடுவதில்லை.
ReplyDelete