Wednesday, 14 April 2010
ஸ்ரீசாந்தும் மகாபாரத வீமனும்
வீமன் ஒரு அடர்ந்த கானகம் வழி சென்று கொண்டிருக்கும் போது பாதையில் ஒரு வேர் மறிக்கிறது. பிறகு அது சற்று சலனிக்கிறது. அது ஒரு குரங்கின் வால் என்பதை கவனிக்கிறான். பாண்டவ இளவரசனும் மகாபலசாலியுமான வீமனுக்கு கேவலம் ஒரு வாலை தாண்டி குதிப்பதில் உடன்பாடில்லை. ”ஏ குரங்கே வாலைத் தள்ளிப் போடு” என்று ஆணையிடுகிறான். கண்விழித்துப் பார்க்கும் குரங்கு அவனை பொருட்படுத்த மறுக்கிறது. சினங்கொண்ட வீமன் தன் கதையால் வாலை நிமிண்டி போட பார்க்கிறான். நகர மாட்டேன் என்கிறது. வால் வளர்ந்து கொண்டே போகிறது. உசுப்பேற்றப்பட்ட வீமன் தன் புஜபலத்தை பிரயோகித்து முக்கி முனகி தூக்குகிறான். ஆனால் வால் ஒரு வீழ்ந்த மாபெரும் அடிமரம் போல் அசையாது கிடக்கிறது. அதன் பிரம்மாண்டம் முன் வீமன் திகைக்கிறான். சோர்ந்து தோள் துவண்டு அகந்தை அழிய மண்டியிடுகிறான். அந்த குரங்கு நான் தான் அனுமான் என்று வெளிப்படுத்தி விட்டு ” ரொம்ப வாலாட்டாதே” என்று தம்பியை கண்டித்து அணைக்கிறது. இந்த சுவாரஸ்யமான கதையின் சினிமாத்தனத்தை தவிர்த்து பார்த்தால் அது ஸ்ரீசாந்தின் நிலைமைக்கு நன்கு பொருந்துவதை காணலாம்.
இந்திய கிரிக்கெட்டில் தொண்ணூறுகளின் முற்பகுதி வரை வீரர்களின் தேர்வு வேறுவகையாக இருந்தது. பத்து வருடங்களுக்கு மேல் உள்ளூர் அளவில் ஆடிப் பழுத்த பின்னர் சராசரியாக 24 வயதுக்கு மேல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். கங்குலி தலைவரானதும் நிலைமை மாறியது. 18 வயதுக்கு கீழுள்ளோருக்கான ஆட்டங்களில் சோபித்தவர்கள் நேரடியாக தேசிய அணிக்குள் கொண்டுவரப் பட்டார்கள். யுவ்ராஜ் சிங், பார்த்திவ் படேல், இர்பான் பதான், பியுஷ் சாவ்லா என்று பலர் அடுத்த பத்தாண்டுகளில் 15-16 வயது சிறுவர்கள் பாலக முகங்களுடன் சர்வதேச அரங்கில் கால் பதித்தார்கள். இவர்களுக்கு அடிப்படை திறமை இருந்தாலும் தங்களை தொடர்ந்து தக்க வைப்பது எப்படி என்று தெரிந்திருக்க இல்லை. 19-வது வயதில் தான் ஆடிய முதல் ஆட்டத்திலே ஆட்ட நாயகன் விருதை வென்ற யுவ்ராஜ் அணிக்குள் நாட்டாமையாக நடந்து கொள்ள சீனியர்கள் அவரை சீக்கிரமே வீட்டுக்கு அனுப்பினர். 2004-ஆம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹின் கடைசி டெஸ்டு ஆட்டத்தின் போது இந்திய அணியின் கீப்பராக இருந்த பார்த்திவ் பட்டேலுக்கு 18 வயது. அவர் ஸ்டீவை சீண்டிக் கொண்டே இருந்தார். முந்தைய ஆட்டங்களில் அவர் ஸ்வீப் ஷாட் ஆடி பலமுறை வெளியேறினதை குறிப்பிட்டு “சீக்கிரம் ஒரு ஸ்வீப் அடித்து விட்டு கிளம்புங்க” என்று ஒரு தடவை கேலி செய்தார். அதற்கு ஸ்டீவ் வாஹ் உடனே “தம்பி நான் என் என் முதல் டெஸ்டு ஆடிய நேரத்தில் நீ நேப்பியில் பீ பேண்டுகொண்டிருந்தாய். வாயை மூடு” என்று பதிலடி கொடுத்தார். பார்த்திவ் பிறந்த ஆண்டும் ஸ்டீவ் முதல் போட்டியை ஆடிய ஆண்டும் ஒன்றே: 1985. விரைவில் தன் கீப்பிங் ஆட்டத்திறனை இழந்த பார்த்திவ் இன்று வரை அணியில் மீண்டும் நிரந்தர இடம் பிடிக்கவில்லை. பார்த்திவை விட ஆரவாரமாக ஆட்டவாழ்வை துவங்கின் இர்பானும் பியுஷும் ஒரு கட்டத்தில் தேங்கி விட்டனர். மிக இளமையிலே நடச்த்திரமாகி அதே விரைவில் உதிர்வது அல்லது காகித நட்சத்திரமாக மாறுவது இன்றைய காலகட்டத்தின் சாபம் போலும்.
உள்ளூர் ஆட்டங்கள் ஆடி போதுமான படி முதிராத வீரர்களை இளமையிலேயே அறிமுகப்படுத்துவது அவர்கள் மறைமுகமாய் சீரழிப்பது என்று தேசிய தேர்வாளர்கள் மீது ஒரு நீண்டகால குற்றச்சாட்டு உள்ளது. மாறாக, சராசரியாக இருபத்தெட்டு வயதில் வீரர்களை தேசிய அணிக்கு தேர்வு செய்வது ஆஸ்திரேலிய பாணி. தேர்வாகும் வீரர்கள் நிதானமானவர்களாகவும் தங்கள் இடத்தின் மதிப்பை உணர்ந்தவர்களாகவும் இருப்பர். ரெண்டாயிரத்தின் இறுதி வரை கிரிக்கெட்டை ஆண்டு வந்த ஆஸி அணியின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் இப்படி தாமதமாக தேர்வானவர்களே. கங்குலி, திராவிட் தலைமை கட்டங்கள் முடிந்து இன்று தோனியின் கீழ் ஆடி வரும் முக்கியமான வீரர்களில் ஹர்பஜன், ஸ்ரீசாந்த், யூசுப் பதான், சேவாக், கௌதம் காம்பிர் உள்ளிட்ட பலரும் ஏதாவது ஒரு வகை சர்ச்சையை உருவாக்குபவர்களாக் உள்ளார்கள். இந்தியா இன்று உலக அரங்கில் ஒரு வலுவான அணியாக உள்ளதும், ஆவேசமான கிரிக்கெட் முறையை அரவணைக்க அது விரும்புவதும் இதற்கான வரலாற்றுக் காரணங்கள். இவர்களில் சர்ச்சை நாயகர்கள் ஹர்பஜனும், ஸ்ரீசாந்துமே. ஸ்ரீசாந்தை விட அபாயகரமான சூழல்களில் மாட்டியிருந்தாலும் நாம் ஹர்பஜனை தொடர்ந்து மன்னிக்கவே தலைப்படுகிறோம். அவர் மீடியாவிலும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் ஸ்ரீசாந்த் அளவிற்கு வெறுப்பை உருவாக்க இல்லை. சமீபமாக தொலைக்காட்சியில் முன்னாள் கிரிக்கெட்டர் அருண்லால் சற்று அழுத்தமாகவே குறிப்பிட்டார்: “ஸ்ரீசாந்த் போன்ற ஒருவர் இந்திய அணியில் ஆடுவதை நான் ஒருபோதும் விரும்ப மாட்டேன். அவர் நாட்டின் மரியாதைக்கே இழுக்கு சேர்ப்பவர்”. இதற்கு தூண்டுதலாக அமைந்தது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரீசாந்தின் சேஷ்டைகள். அவர் தொடர்ச்சியாக இரண்டு நோபால்கள் வீசியதாக நடுவர் சைகை செய்தார். உபரியாக அவர் வீசின free-hit பந்துகள் எல்லைக் கோட்டுக்கு பறந்தன. உடனே ஸ்ரீசாந்த் கைதட்டினார். முதலில் மட்டையாளரை நோக்கி, பிறகு நடுவரின் முகத்துக்கு நேராக. விளைவாக ஸ்ரீசாந்துக்கு மூன்று லட்சத்து தொண்ணூறாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட்டின் முதல் நட்சத்திர சர்ச்சையாளன் கங்குலி தான். பிறகு ஹர்பஜன் அந்த இடத்தை பிடித்துக் கொண்டார். ஆனால் இருவரின் சாதனை வரலாறு அவர்களுக்கு அரணாக அமைந்தது. ”சிறப்பாக ஆடிவரும் ஒருவர் செய்யும் அலம்புகள் பொறுத்துக் கொள்ளலாம். ஸ்ரீசாந்த் இன்னும் சிறந்த பந்து வீச்சாளராக பரிணமிக்க இல்லை. ஆனால் அலம்புகள் மட்டும் செய்கிறார்” என்றார் இங்கிலாந்தின் வார்விக்ஷையர் கவுண்டியில் ஸ்ரீசார்ந்தின் பயிற்சியாளராக விளங்கிய ஆலன் டொனால்டு. அவர் ஸ்ரீ பற்றி மேலும் கூறுவது சுவாரஸ்யமானது. கேரள வீச்சாளரின் மற்றொரு பக்கத்தை அது காட்டுகிறது. “ஸ்ரீசாந்த தனிப்பட்ட முறையில் மென்மையானவர், பணிவானவர், நட்பார்ந்தவர். ஆனால் ஆடுகளத்தில் நுழைந்தவுடன் மாறி விடுகிறார். அங்கு ஒருவரை வைது விட்டு ஆட்டம் முடிந்ததும் வந்து மன்னிப்பு கேட்பதே ஸ்ரீசாந்தின் பாணி. இது தவறான அணுகுமுறை. ஒருவர் இரண்டு முகங்களோடு இருக்க முடியாது. அவரது ஆவேச உடல் மொழி அவருக்கு சற்றும் பொருந்தாதது. மேலும் ஸ்ரீசாந்த் எந்த பயிற்சி ஒழுங்கும் இல்லாதவர். மெருகேற்றப்படாத அதிகப்படியான திறமை மட்டுமே அவரை எங்கும் கொண்டு செல்லாது”. ஸ்ரீசாந்தை ஐந்தாம் வகுப்பில் தான் அமர்வேன் என்று வாத்தியார் கையில் தொங்கிக் கொண்டு அடம் பிடிக்கும் மூன்றாம் வகுப்பு சிறுவனுடன் ஒப்ப்டலாம். சார்லி சாப்ளினைப் போன்று அளவுக்கு மீறிய காலணியும் தொப்பியுமாக மாட்டிக் கொண்டு அவர் செய்வன கோமாளித்தனங்கள் என்று அவருக்கே புரிவதில்லை. தனது அசட்டு வேடத்தினுள் அவர் எங்கேயேயோ மாட்டிக் கொண்டு விட்டார்.
ஹர்பஜனின் சர்ச்சைகளுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீசாந்தினுடையவை ஆபத்தற்ற அசட்டுத்தனங்கள் மட்டுமே. அவர் யாரையும் கன்னத்தில் அறையவில்லை; கறுப்பனை நோக்கி குரங்கே என்று அழைக்கவில்லை. அறைந்தது ஐ.பி.எல்லில் என்பதாலும், இனவெறித் தாக்குதல் செய்தபோது காப்பாற்ற கும்பிளே, சச்சின் உள்ளிட்ட அணித்தலைமை இருந்தது என்பதாலும் பஜ்ஜி தப்பித்தார். ஸ்ரீசாந்தின் சர்ச்சைக்குரிய செயல்கள் ஒரு துணை காமெடியனுக்கு உரியவை மட்டுமே. 2006 தென்னாப்பிரிக்க பயணத்தின் போது ஆண்டுரூ நெல் எனும் வேகவீச்சாளரின் பந்தை சிக்சர் அடித்து விட்டு மட்டையை சுழற்றியபடி நடனமாடினார். பின்னர் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடந்த டெஸ்டு ஆட்டத்தில் பீட்டர்ஸனின் முகத்துக்கு நேராக பீமர் எனப்படும் உயர புல்டாஸை வீசினார். பிறகு கால்கோட்டுக்கு இரண்டு அடிகள் தள்ளி வந்து கோலிங்வுட்டுக்கு வேகமான உயரப்பந்து வீசினார். இரண்டையும் அவர் திட்டமிட்டு செய்ததாக இங்கிலாந்து வீரர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. பிறகு முதல் ஐ.பி.எல்லின் போது ஹர்பஜனை கடுப்பேற்றி அறை வாங்கினார். உபரியாக ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் ஒருமுறையாவது முறைப்பது, சைகைகள் காட்டுவது போன்றவையும் செய்து வருகிறார்.
ஸ்ரீசாந்தின் வளர்ச்சிப் பாதை உயரந்தாண்டல் விளையாட்டு பாணியில் அமைந்தது. சின்ன வயதில் இருந்தே யுவ்ராஜை போன்று கிரிக்கெட் திட்டவரைவுகள் மற்றும் அட்டவணைகளுடன் வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டவரல்ல அவர். 96-இல் இந்திய அணி கொச்சி சென்றிருந்த போது சிறுவர்களோடு சிறுவனாக ஓரமாக வரிசையில் காத்து நின்று ஆட்டோகிராப் வாங்கி உள்ளதை ஒரு பேட்டியில் ஸ்ரீசாந்த் குறிப்பிடுகிறார். “அப்போது நான் ரொம்ப குள்ளமாக இருப்பேன். வேகப்பந்து வீசும் கனவெல்லாம் இல்லை. நான் அப்போது பந்து வீசினால் அது ஆடுதளத்தில் பாதி நீளத்தில் கூட வந்து விழாது.”. பிறகு ஸ்ரீசாந்த் சில வருடங்களிலே உயரமாக வலுவாக வளர்ந்து விட்டார். ரஞ்சித் தொடரில் ஆடி ஏழு ஆட்டங்களில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக ஹிமாச்சல் அணிக்கு எதிராக ஸ்ரீ வீழ்த்திய ஹேட்ரிக் விக்கெட்டுகள் ஒரு சாதனையாகும். பிறகு துலீப் தொடர் அணிக்கு தேர்வாகி நன்றாக ஆடி, சேலஞ்சர் தொடரில் வேறு ஆட்டத்தொடர் நாயகன் விருது பெற்றார். யாரும் எதிர்பாராத வேகத்தில், மிக பலவீனமான கேரள அணியில் இருந்து ஸ்ரீசாந்த் இரண்டே வருடங்களில் இந்திய அணிக்குள் நுழைந்தார். ஸ்ரீசாந்தின் இந்த அதிவேக வளர்ச்சிக்கு சூழ்நிலைகள் ஒரு முக்கிய காரணம். ஆனால் தன்னை ஏந்தி வந்த காலத்தின் கரத்தை அவர் கவனிக்க இல்லை. அமித் மிஷ்ரா, ஜோகிந்தர் ஷர்மா, வினய் குமார் போல் அவர் சிறு வாய்ப்புக்காக வருடக்கணக்கில் உள்ளூர் ஆட்டத்தொடர்களில் போராட வேண்டியிருக்க இல்லை. ஸ்ரீசாந்தின் இருபத்தேழு வயது உடலுள் இன்னமும் வரிசையில் ஒடுங்கி நின்று ஆட்டொகிராப் வாங்கின 13 வயது சிறுவன் தான் உள்ளான். பந்து வீச்சிலும், நட்சத்திர வாழ்விலும் அவர் தான் இன்னும் சென்று சேராத இடத்தை அடைந்து விட்டதாக கற்பனையில் வாழ்கிறார். தான் நீவி விடுவது ஒட்டு மீசை என்பதை அவர் உணராதவரை மீடியாவின் கோமாளியாக நீடிப்பது மட்டுமே சாத்தியம்.
Share This
Subscribe to:
Post Comments
(
Atom
)
ஏனோ தெரியவில்லை... ஷ்ரீ சாந்தை கண்டாலே எரிச்சலாகிறது. யாராவ்து அவரது ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து அவர் முன்னால் டான்ஸ் ஆடினால் நான் மிகுந்த சந்தோஷமடைவேன்!
ReplyDeleteஎனக்கும் ஸ்ரீசாந்த், ஹர்பஜன் ஆகியோரைப் பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இந்திய அணியில் உள்ள இரு கேவலமான ஜென்மங்கள்.
ReplyDeleteஆனால் இந்தப் பதிவைப் பார்த்தபின் ஸ்ரீசாந்த் மீது கொஞ்சம் பரிதாபமும் சேர்ந்தே வருகிறது.
நன்றாக பின்னணி,உளவியல் காரணங்களை ஆராய்ந்துள்ளீர்கள்.
நன்றி ரெட்டைவால்ஸ் மற்றும் லோஷன்
ReplyDeleteசிரீசாந்தை வீமனுடன்
ReplyDeleteநீங்கள் ஒப்பிட்டது
தெரிந்தால் அவர்
இதற்கும் ஒரு டான்ஸ்
போடுவார்.