
அஜீத் மாம்பள்ளியின் ” லாட்ஜ்” மறைந்த மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான பி.பத்மராஜனின் ”கோர்ட் விதிக்கு சேஷம்” (நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு) என்ற கதையை தழுவி எடுக்கப்பட்டது. இது ஒரு மலையாளப் குறும்படம். இப்படத்தின் கதை ஒரு குறும்படத்துக்கு சிக்கலானது. ஆனால் அஜீத் மாம்பள்ளி மிக சாமர்த்தியமாகவும், திறமையாகவும் கதைசொல்லலை கையாண்டுள்ளார். உதாரணமாக இக்கதை ஆரம்பத்தில் ஒரு ஆசாரியான காதலனை நமக்கு அறிமுகப்படுத்தி அவனை சுற்றியே மையம் கொள்கிறது. எளிய மனம் கொண்ட பத்தாம்பசலி அவன். ஒரு கொலைக் குற்றத்தில் வீணாக மாட்டி சிறைக்கு செல்கிறான். இந்த அநீதியை தான் கதை பேசப் போகிறது என்று நீங்கள் நினைத்தால் கதாநாயகி அறிமுகமாகி கதை ஓட்டத்தை தன் பக்கம் திருப்பிக் கொள்கிறாள். அவள் பாலியல் ஒழுக்கங்களுக்கு கட்டுப்படாதவள். “உலகின் மாபெரும் உணர்ச்சி பசி எனப்படுகிறது. அது உண்மையல்ல. உலகில் இரு உணர்வுகள் உள்ளன. ஒன்று சுகம். மற்றொன்று துக்கம்.” என்கிறாள். ஏறத்தாழ பத்மராஜனின் பெண் பாத்திரங்கள் இப்படி பாலியல் ஒழுக்கங்களை மீறி எழ எத்தனிப்பவர்களே. அவர்கள் ஆண்மையின் அதிகார தழலுக்குள் விழுந்து விடாமல் இருப்பதில் மிக கவனமானவர்கள். இப்பெண்ணும் அப்படியே. அவள் சுகத்தையும் துக்கத்தையும் தன் போக்கில் வரித்துக் கொள்ள விரும்புகிறாள். தன் முதல் காதலனோடு புணர்ந்து கிடக்கும் வேளையில் இருவருக்கும் முரண்பாடு எழுகிறது. அவள் அவனை துறந்து விட்டு அடுத்த ஆணை நாடி அவனையும் அடைகிறாள் இந்த இரண்டாம் புணர்வுக்கு பின்னர் தான் அவள் கொலை செய்யப்படுகிறாள். பழி தவறாக இரண்டாம் காதலன் மீது விழுகிறது. நிஜக்கொலைகாரன் யார் என்ற கேள்வியில் இருந்து மூன்றாவது முக்கிய பாத்திரமும் அறிமுகப்படுத்தப் பட்டு சாவகாசமாய் விளக்கப்படுகிறார். இப்படி கதையின் போக்கு கிட்டிப்புள்ளாக தெறிக்கும் போது குறும்பட பார்வையாளர்களின் கவனம் எளிதில் கலைந்து விடும். ஆனால் இயக்குனர் இறுதிவரை சுவாரஸ்யத்தை தக்கவைக்கிறார். பார்வையாளனின் ஆர்வத்தை தக்க வைப்பது இந்த திகில் கதையின் முடிவல்ல, அதன் மனவியல் நுட்பங்களும், நாடகீயமுமே

கதையின் மூன்றாவது கட்டத்தில் அறிமுகமாகும் முதல் காதலன் தான் கொலைகாரன் என்பது பாதியிலேயே தெரிந்து விடுகிறது. மேம்போக்காக இது திரைக்கதையின் பலவீனம் என்று தோன்றினாலும் துப்பறிவது அல்ல படத்தின் நோக்கம் என்று சீக்கிரமே விளங்கி விடுகிறது. கொலை செய்யப்படும் பெண் தன் மதிப்பீட்டு பகிஷ்காரத்தால் சமூகத்தின் விளிம்பில் நிற்கிறாள் என்றால், அவளது முதல் காதலன் வாழ்வின் சூழ்நிலைகளால் அவ்வாறு ஒடுக்கப்பட்ட ஒரு வாழ்வை வாழ நிர்பந்திக்கப்பட்டவன். அவன் ஒரு அனாதை. கல்லூரியில் ஒரு பெண் அவனை ஏமாற்றி சென்று விடுகிறாள். இப்படியாக உறவுகளின் ஆதரவின்றி தொடர்ந்து தனிமைப்படும் அவனுக்கு மேற்சொன்ன பெண்ணுடன் அமையும் காதல் அட்சய பாத்திரத்தில் காணக்கிடைத்த ஒற்றை பருக்கை போலாகிறது. அவன் அவ்வுறவை வாழ்வின் ஆதாரமாக பற்றிக் கொள்கிறான். அளப்பரிய விருப்பத்துடன் நேசிக்கிறான். அவள் அவனை ஏமாற்றும் போது ஒதெல்லோ பாணியில் அதே அளவு வன்மத்துடன் அவளை கொல்ல முடிவு செய்கிறான். படத்தின் மிக முக்கியமான கட்டம் அவன் ஏன் கொல்கிறான் என்பதல்ல கொல்வதற்கான பிரயத்தனமும் அதில் அவன் காட்டும் மிதமிஞ்சிய ஈடுபாடுமே.

அவர்கள் முன்னர் ரகசியமாய் சந்தித்து புணர்ந்த லாட்ஜ் அறையிலே அவள் இரண்டாம் காதலனுடன் புணர இம்முறையும் வருவாள் என்று அவன் மிகச்சரியாக ஊகிக்கிறான். ஒரு வேட்டை மிருகம் போல் அவளுக்காக காத்திருக்கிறான். காதலனுடன் அவள் புணர்ந்து முடிக்கும் வரை பக்கத்து அறையிலேயே காத்திருக்கிறான். முடித்து விட்டு இரண்டாம் காதலன் போன பின் நுழைந்து அவளை தாக்குகிறான். பிறகு உளியால் அவளது வயிற்றில் ஆவேசமாக குத்தியபடி சொல்கிறான். “மூன்றாவது ஒரு உணர்ச்சியும் உள்ளது; அது மரணம் என்பதை இப்போது தெரிந்து கொள்”. இங்கு நாம் இரண்டு விசயங்களை கவனிக்க வேண்டும்.
சமூகத்தின் ஒழுக்க மதிப்பீடுகளின் படி இவ்விருவரும் குற்றவாளின் தாம் என்றாலும் அஜீத்தின் படம் மேலும் விரிவான ஒரு தளத்தில் இவர்களை அணுகுகிறது. இருவரும் தங்களது ஆழ்மனதில் உறைந்துள்ள ஆதி உணர்வுகளை ஒட்டி நடப்பவர்கள். குற்றம் பற்றின முக்கியமானதொரு அவதானிப்பு இருவரின் இந்த செயல்பாடுகளிலும் உள்ளது. மதிப்பீடுகள் பிறழ்வதாலோ இயல்பான குற்றமனப்பான்மையை ஒருவர் கொண்டிருப்பதாலோ குற்றங்கள் நடப்பதில்லை. நமது ஒவ்வொருவர் காலடியின் வெகுஅருகிலேயே அந்த வனவிலங்கின் சுவடும் தொடர்ந்து பதிகிறது. குற்றதருணங்கள் நம்மை ஒன்றில் தன்னிச்சையாக நழுவிச் சென்று விடுகின்றன அல்லது தழுவிக் கொள்கின்றன.
அடுத்து காதலின் உச்சமான புணர்ச்சியும், வன்மத்தின் உச்சமான கொலையும் ஒரே அறையில் அதே பாத்திரங்களால் நடத்தப்படுவது முக்கியமானது. பூமத்திய ரேகையைப் போன்று ஒரு கற்பனைக் கோடு தான் இரண்டையும் பிரிக்கிறது. ஆண்மனதுக்கு இரண்டும் வேட்டையே.
”லாட்ஜ்” படத்தின் ஒளிப்பதிவு மற்றும் படக்கோர்வை நேர்த்தியாக உள்ளது. வண்ணங்களை இயக்குனர் பயன்படுத்தி உள்ள விதமும் பாராட்டத்தக்கது. நடிகர்களின் நடிப்பு, உடல் மொழி ஆகியவற்றில் தெரியும் பிரக்ஞை மற்றும் பிரயத்தனம் அஜீத் கவனிக்க வேண்டிய குறை. இன்ஸ்பெக்டர் விசாரணையும் போது லட்டி சுழற்றுவது, கொலைக்கு முன் வில்லன் பாத்திரம் தண்ணி அடித்து தன்னை உருவேற்றுவது, கத்தியின் கூர்மையை ஸ்லோமோஷனில் சோதிப்பது, சிகரெட்டை மிதித்து அணைப்பது போன்ற தேய்ந்த சினிமா பிரயோகங்களை அவர் தவிர்க்க வேண்டும். வசனங்களை மேலும் இயல்பானதாய், எளிதானதாய், சுருக்கமாய் எழுதவும் அவர் பழக வேண்டும். காதல் காட்சிகளில் பின்னணி இசை மிக நெகிழ்வானதாக தனக்கானதொரு மொழியுடன் உள்ளது. செறிவான இசை ஆளுமைக்காகவே இப்படத்தை தனியாக பார்க்கலாம்.
சமகால தமிழ் இயக்குனர்களின் பாணியில் இருந்து அஜீத் மாம்பள்ளி விலகி நிற்பது எளிதாகவே புலப்படும் ஒன்று. இதற்கு காரணம் மலையாள சினிமாவின் பொற்கால இயக்குனர்களின் மரபை இவர் பின்தொடர்ந்து வருவதே. பொற்கால மலையாள சினிமா அத்தனை காட்சிபூர்வமானது அல்ல. எளிமையான பாணியில் ஒரு சிக்கலான கதையை நாடகீயம் குன்றாமல் பேசுவதே அம்மரபு. அஜீத் மாம்பள்ளி அதனையே இப்படத்திலும் பின்பற்றி இருக்கிறார். இன்றைய சமகால மலையாள இயக்குனர்களின் படங்கள் கடுமையான வீழ்ச்சியை சந்திப்பது இந்த மரபை ஒரே அடியாக துண்டித்து விட்டு மரக்கிளைகளில் இருந்தபடி தொப்பிகளை கீழே வீசினதனாலே. அஜீத்தின் தொப்பி அவர் தலையில் பத்திரமாகவே உள்ளது. சமகால மலையாள சினிமா சூழலை நினைவில் கொள்கையில் இது மிக ஆறுதலான சேதி.
பிற விபரங்கள்
இசை: ஜோ பேபி
ஒளிக்கோவை: பிரஜீஷ்
ஒளிப்பதிவு: நெயில் ஒ குன்ஹா
கலை: சந்தீப் மன்னாடியார்
எழுத்து மற்றும் இயக்கம்: அஜீத் மாம்பள்ளி
தயாரிப்பு: ஆண்டுரூஸ் ஆண்டனி மற்றும் ஜேகப்.சி
//காதலனுடன் அவள் புணர்ந்து முடிக்கும் வரை பக்கத்து அறையிலேயே காதலிக்கிறான்//
ReplyDeleteகாத்திருக்கிறான்?
நன்றி ராஜசூரியன், திருத்தி விட்டேன்.
ReplyDelete//நமது ஒவ்வொருவர் காலடியின் வெகுஅருகிலேயே அந்த வனவிலங்கின் சுவடும் தொடர்ந்து பதிகிறது. //
ReplyDeleteஇதுதான் நிஜமான உண்மை