Thursday 12 July 2012

நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல: கருணைக்கொலையும் சமூகமும்



கும்பகோணத்தை சேர்ந்த ஜெயா என்பவரின் 12 வயது குழந்தை மதுமிதா ஒரு செரிபிரல் பால்ஸி நோயாளி. அவளால் பேசவோ நடக்கவோ பிறரை அடையாளம் காணவோ முடியாது. மற்றபடி முழுமையான பிரக்ஞை கொண்ட மனித உயிர் தான். அக்குழந்தையை பார்த்துக் கொள்வது சிரமம் என்று அவளது தாய் அவளை கருணைக்கொலை செய்யும் படி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார். அவரது வாதம்
1.  1.  தன் குழந்தையை பராமரிக்கும் ஆற்றல் தனக்கு இல்லை
2.   ஒரு குழந்தைக்கான நடமாடி பேசி தொடர்புறுத்தும் திறன்கள் அவளுக்கு இல்லை
என்பன.

மாவட்ட ஆட்சியர் இதை நிராகரித்து குழந்தையை ஒரு காப்பகத்துக்கு அனுப்ப பணித்திருக்கிறார்.
குழந்தையின் தாய் ஒன்றும் குரூரமானவரோ தாய்மை அக்கறை இல்லாதவரோ அல்ல. அவரை நாம் தனித்து பார்த்து பழிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் இந்த தாயிடம் உள்ளது நம் சமூகத்தில் உள்ள ஒரு மன-ஓட்டம் தான். இது பிரச்சனை என்றால் அப்பிரச்சனை நாம் அனைவரிடமும் உள்ளது.
முதலில் நாம் குழந்தைகளை நமது சொத்தாக, நமக்கு உரிமை உள்ள பொருளாக இருக்கிறோம். பல குழந்தைகள் தொழிலாளர்களாக மாற்றப்படுவது பொருளாதார நிர்பந்தத்தால் மட்டும் அல்ல குழந்தை பற்றி நம் சமூகத்தில் இருக்கிற இந்த புரிதலினாலும் தான். குடும்பத்தோடு தற்கொலை பற்றி கேள்விப்படுகிறோம். மனம் கசப்புற்ற தாய்கள் பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசி தானும் குதிப்பதை பார்க்கிறோம். என் குடியிருப்பில் ஒரு குடும்பம் கடன் தொல்லை காரணமாக தற்கொலை பண்ணிக் கொண்டது. அவர்களுக்கு இரு குழந்தைகள். ஒரு நான்கு வயதான அண்ணன். ஆறுமாத தங்கை. பெற்றோர் விஷம் குடித்த போது பாலில் கலந்து குழந்தைகளுக்கும் ஊட்டினர். அண்ணன் இறந்தான். ஆனால் ஏதோ இரக்கத்தாலோ தவறாக கணக்கிட்டதாலோ குறைவாக விஷம் கொடுத்ததால் ஆறுமாத குழந்தை மட்டும் ஆஸ்பத்திரி சிகிச்சையில் பிழைத்துக் கொண்டது. தேவதை போல் இருக்கும் இக்குழந்தைகளுக்கு போய் விஷம் கொடுக்க எப்படி மனம் வந்தது என்று இரங்கலுக்கு வந்தவர்களும் அண்டை வீட்டாரும் திரும்ப திரும்ப மனம் ஆறாமல் கேட்டுக் கொண்டனர். பெற்றோரின் நோக்கம் குழந்தைகள் தம் மரணத்துக்கு பிறகு அனாதைகளாகக் கூடாது என்பதாக இருந்திருக்கும். அனாதையாய் இருப்பதை விட உயிருடன் இருப்பது முக்கியம் என்று நீங்கள் சொல்லக் கூடும். மற்றொரு கேள்வியும் உள்ளது: குழந்தைகளின் உயிர் யாருக்கு சொந்தம்? அவர்களுக்காக முடிவு செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டா? குழந்தைகள் மீது நமக்கு உள்ளது உரிமையா அல்லது பொறுப்பா? எல்லாவற்றிலும் அடிப்படையான கேள்வி – குழந்தைகள் நம் குடும்பத்தின் உறுப்பா அல்லது அவர்கள் தனிமனிதர்களா?

நம் நாட்டில் குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது நமக்கு தெரியும். அவர்கள் பள்ளியில் ஆசிரியர்களால் துன்புறுத்தப்படுவதை “இன்னும் நல்லா அடிச்சா தான் படிப்பு ஏறும்” என்று பெற்றோர்கள் ஆதரிக்கிறார்கள். அப்பாவின் குடிபோதையில் அதிகம் வன்முறைக்கு ஆளாவது குழந்தைகள் தாம். குழந்தைகள் மீதான் பாலியல் வன்முறை, குழந்தை தொழிலாளர் பிரச்சனை, குழந்தை பாலியல் தொழில் இவையெல்லாம் இங்கு அதிகம். அதைத் தடுப்பதற்கான அமைப்புகளும் சட்டங்களும் இங்கு அநேகமாக இல்லை.

ஈவ்லின் லூ என்பவரின் Runaway: Diary of a Street Kid என்றொரு தெருவாழ்வு பற்றின முக்கியமான புத்தகம் உண்டு. வாசிப்பதற்கு மிக மிக வலியேற்படுத்தும் நூல் அது. ஒரு பதின்வயது சீன கன்னடிய பெண் ஒரு நாள் கல்வி சார்ந்த நெருக்கடி தாளாமல் வீட்டை விட்டு ஓடிப் போகிறாள். அவள் போதைப் பழக்கம் மற்றும் விபச்சாரம் மூலம் தன்னை சிறுக சிறுக அழிக்கிறாள். ஆனால் ஒவ்வொரு முறை அவள் மரணத்தின் விளிம்புக்கு செல்லும் போதும் கன்னடிய குழந்தை ஆதரவு அமைப்புகள் வந்து அவளை காப்பாற்றுகின்றன. இந்த அமைப்புகள் அவ்வளவு அக்கறையுடன் அவளை தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அவள் தெருவில் விபச்சாரத்துக்காக நிற்கும் போது போலீசை அல்ல இந்த அமைப்பின் உறுப்பினர்கள் தன்னை வந்து அழைத்துப் போகக் கூடாதே என்றே அஞ்சுகிறாள். ஒரு குழந்தை என்னதான் தன்னை சீரழிக்க முயன்றாலும் அவளை காப்பாற்றி பாதுகாக்க அரசு அமைப்புகள் அங்கு அவ்வளவு முனைப்பாக உள்ளது பார்க்க வியப்பாக உள்ளது. ஏனென்றால் கன்னடியர்கள் குழந்தைகளை தனிமனிதர்களாக சமூக உறுப்பினர்களாக பார்க்கிறார்கள். குழந்தை மீது பெற்றோர் மட்டுமல்ல அரசும் சமபொறுப்பு எடுத்துக் கொள்கிறது. இந்த நிலை இன்று பல ஐரோப்பிய நாடுகளில் உள்ளது.

ஆனால் குழந்தையை விட குடும்பமும் அதன் வளர்ச்சியும் தான் முக்கியம் என்று ஒரு சமூகம் நினைக்கும் போது ஊனமுற்ற குழந்தைகளை பராமரிப்பது ஒரு சுமை என்ற நிலைப்பாட்டை எடுக்கிறது. மதுமிதா என்கிற இந்த குழந்தையை போன்றவர் தான் ஸ்டீபன் ஹாக்கிங்கும். அவர் நன்றாக ஓடத் தெரிந்தவர்கள் பேசத்தெரிந்தவர்களை விட பிரம்மாண்டமான சாதனைகளை செய்திருக்கிறார்; மனித சமூகத்துக்கு அவரது பங்களிப்பும் அளப்பரியது. ஆனால் இதே ஹாங்கிங்ஸால் இதை இந்தியாவில் நிச்சயம் செய்திருக்க முடியாது. ஏனென்றால் ஊனமுற்றவர்கள் எளிதில் செயல்படுவதற்கான உள்கட்டமைப்புகளும் அடிப்படை வசதிகளும் நம்மூரில் இல்லை. இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஊனமுற்றவர்கள் அங்குள்ள வசதிகளை பார்த்து இங்கே திரும்பி வருவதற்கே அஞ்சுகிறார்கள். ஒரு ஊனமுற்ற நபர் அங்கு படிக்க செல்கிறார் என்றால் விடுதி அறை உள்ளிட்டு பல இடங்களில் அவர் சக்கர நாற்காலியில் சுலபமாக இயங்கும் வண்ணம் உடனடி மாற்றங்கள் செய்து தருகிறார்கள். இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் எங்குமே அடிப்படை ரேம்ப் வசதி கூட இல்லை. நாம் ஏன் இவ்வளவு அக்கறையின்றி இருக்கிறோம் என்பதற்கு மதுமிதாவின் கருணைக்கொலை நிலைக்கும் சம்மந்தமுள்ளது.

ஊனமுற்றவர்கள் சமூகத்துக்கு தேவையில்லாதவர்கள் என்கிற ஒரு தவறான எண்ணம் நம் சமூக மனதில் உள்ளது. ஏனென்றால் நாம் இன்றும் ஒரு முன்-நவீன நிலவுடைமை சமூக மனநிலையில் தான் இருந்து வருகிறோம். உடல் தான் மனிதனின் அடிப்படை மூலதானம் என்று நம்புகிறோம். அதனால் உடல் குறைபாடு உள்ளவரை நாம் அரை-மனிதராகவே நினைக்கிறோம். நாம் பொதுவாக படிநிலை பிரக்ஞை மிகுந்தவர்கள் என்பதால் அரை-மனிதர்களுக்கு எதற்கு சம-உரிமை என்று எண்ணுகிறோம். இது இங்குள்ள எதார்த்தம். இருக்கிற மக்களுக்கே வசதிகள் இல்லாத போது ஊனமுற்றவர்களுக்கு சிறப்பு வசதிகள் எப்படி பண்ணுவது என்று அரசாங்கம் கேட்கிறது. இக்கேள்வி ஊனமுற்றவர்கள் சமூக பயனற்றவர்கள் என்ற எண்ணத்தில் இருந்து பிறப்பது தான். அதாவது இந்தியாவில் உள்ள 21 மில்லியன் ஊனமுற்றவர்களும் சமூகத்துக்கு வெறும் பாரமா? அவர்கள் படித்து வேலை பார்த்து சமூகத்துக்கு பங்களிக்க முடியாதா? அப்படி செய்தால் அது இந்த சமூக வளர்ச்சிக்கு உதவாதா? யோசியுங்கள், நாம் 21 மில்லியன் மூளைகளை முடக்கி வைத்திருக்கிறோம். அவர்கள் சமூகத்தில் வெளியே வந்து சுதந்திரமாக இயங்குவதை அதைரியப்படுத்துகிறோம்; மறைமுகமாய் அவர்களை முடக்குகிறோம். மதுமிதா போன்ற பேசாத நடக்காத பல குழந்தைகளில் இருந்து ஒரு ஸ்டீபன் ஹாக்கிங் தோன்றலாம், தோன்றாமலும் போகலாம் – ஆனால் அதற்கான சிறுவாய்ப்பை நாம் மறுக்கிறோம் என்பது அநியாயமில்லையா? இது மதுமிதாவின் அம்மாவின் தவறு அல்ல. இது கலாச்சார மற்றும் சிந்தனை அளவில் நவீனமாக மறுக்கும் இந்த மொத்த சமூகத்தின் தவறு. மதுமிதாவின் பெற்றோர் அவளை எத்தனையோ பள்ளிகளில் சேர்க்க விண்ணப்பித்து நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். இது சட்டரீதியாக குற்றம் என்பதால் பல பள்ளிகளில் ஊனமுற்ற குழந்தைகளுக்கு தேவையான வசதிகள் எங்களுக்கு இல்லை என்று கைநழுவிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பள்ளியிலும் ஊனமுற்றவர்கள் படிப்பதற்கான வசதிகள் கண்டிப்பாய் செய்ய வேண்டும் என்று அரசு வற்புறுத்த வேண்டும். ஆனால் அரசிடம் செயல்படுவது நம் சமூகத்தின் மனசாட்சி தானே.

ஊனமுற்றவரின் நிஜமான பிரச்சனை ஊனமோ வலியோ அல்ல. கட்டமைப்பு இன்மையும் சமூக ஆதரவின்மையும் தான். ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர் முதலில் நம் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக போராட வேண்டும். அங்கு தான் முதல் தடையை அவர்கள் சந்திக்கிறார்கள். ஊனமுற்ற குழந்தைகள், அது மூளை வளர்ச்சிக்கு குறைவோ ஊனமோ, மற்ற குழந்தைகளுடன் படிப்பதால் ஊனம் தொற்றிக் கொண்டு விடாது என்று பிற குழந்தைகளின் பெற்றோர்கள் நம்ப ஆரம்பிக்க வேண்டும். கடவுளையும் சடங்குகளையும் நம்புவதல்ல, நன்கு படித்தவர்கள் ஊனம் தொற்றிக் கொள்ளும் என்று நம்புவதே முதன்மையான மூடநம்பிக்கை. மற்றொன்று ஊனமுற்ற குழந்தைகளுக்கு தனிகவனம் தேவை என்று நிறுவனங்கள் நம்புவது. இது ஒரு தவறான புரிதல். ஊனமுற்ற குழந்தைகளால் மற்றவர்களை போல தனி அக்கறை இன்றி தங்களாக சமாளிக்க முடியும். சின்ன சின்ன சிரமங்கள் இருந்தாலும் அவர்கள் சமாளிப்பார்கள்; வீட்டில் இருட்டில் முடங்குவதற்கு அது மேல். பொதுவாக பிற குழந்தைகள் தங்களுடன் ஊனமுற்றவர்கள் படிப்பதை ஒரு பிரச்சனையாகவே கருதுவதில்லை; அவர்கள் உதவுவதற்கும் நட்பார்ந்த முறையில் ஆதரிப்பதற்கும் தயங்குவதில்லை. இதை என் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சொல்கிறேன். கோணல் எப்போதும் வளர்ந்தவர்களின் பார்வையிலேயே இருக்கிறது. நீங்கள் யாராவது எல்.கே.ஜி வகுப்பில் தோல்வியுற்றிருக்கிறீர்களா? நான் தோற்றிருக்கிறேன்.

நான் படித்த முதல் பள்ளியில் ஊனத்திற்காக தனி நன்கொடை வாங்கிக் கொண்டே என்னை சேர்த்தார்கள். என் பெற்றோர்களிடம் நான் அமர்வதற்கு தனியாக மேஜை நாற்காலி செய்து வகுப்பில் போட சொன்னார்கள். உண்மையில் எனக்கு பிறருடன் அதே மேஜையில் அமர்வதற்கு எந்த பிரச்சனையும் இல்லை; ஆனால் பள்ளி நிர்வாகம் அதை நம்ப தயாராக இல்லை. ஒரு குழந்தை வகுப்பில் தனியாக அமர வைக்கப்படுவதன் உளவியல் பாதிப்பு தீவிரமானது. இப்படி தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வருடம் முடித்த பின் என்னை வேண்டுமென்றே தோல்வி அடைய வைத்து டி.ஸி கொடுத்து அனுப்பினார்கள். மேற்சொன்ன ஊனமுற்ற குழந்தைகளுக்கான வசதி இல்லை என்ற எண்ணம் தான் காரணம். அதை நேரடியாக சொல்லாமல் இப்படி மறைமுகமாக நாகரிகமற்ற முறையில் வெளிப்படுத்தினார்கள். இதனால் நான் இன்னொரு பள்ளியில் சேர்ந்து இரண்டு முறை எல்.கே.ஜியில் படிக்க நேர்ந்தது. (இதனால் தான் நான் என் பிற்கால மனைவியை சந்திக்க நேர்ந்தது, உயிரோசை துவங்கின போது எழுத நேர்ந்தது என்பது எல்லாம் வேறு விசயம்).

ஆக ஊனமுற்ற குழந்தைகள் சமூக இயக்கத்துக்கு புறம்பானவர்கள் என்று மதுமிதாவின் அம்மா நம்புவது ஒரு தவறான சமூகப் போக்கின் தூண்டலால் தான். நாம் இன்னொரு கோணத்திலும் இந்த கருணைக் கொலையை யோசித்துப் பார்க்க வேண்டும். எங்காவது ஒரு இந்தியப் பெண் வேலைக்கு போகாத, உடல்நலன் இல்லாத, தினமும் தன்னை போட்டு அடிக்கிற கணவனை கருணைக்கொலை செய்ய வேண்டும் என்று கோருவாளா? நம் ஊரில் எந்த சமூகப் பொறுப்பும் இல்லாத, சம்பாதிக்காத, அடுத்தவர்களுக்கு தொல்லை மட்டும் தருகிற எத்தனையோ பேர் உண்டு. ஆனால் அவர்களுக்கு நம் சமூக, குடும்ப அமைப்பில் ஒரு பாத்திரம் உண்டு என்பதால் அவர்களை விட்டு வைத்திருக்கிறோம். நாம் கருணைக்கொலை செய்ய விரும்புபவது வயோதிகர்களையும் ஊனமுற்றவர்களையும் தான். சமூக பயன் கருதி அல்ல சமூக பாத்திரம் கருதி. ஏனென்றால் இந்தியாவில் ஒருவரது பயன்மதிப்பு குடும்ப அமைப்பின் அடிப்படையிலேயே முடிவாகிறது. என் அண்டையில் ஒரு குடிகார கணவர், அவருக்கு ஈரல் பழுத்து விட்டது. படுத்த படுக்கை. அவரது மனைவி தினமும் வேலைக்கு போய் சாப்பாடு போடுவது மட்டுமில்லாமல் தினமும் குவாட்டர் பாட்டிலும் வாங்கித் தருவார். அப்போதும் கணவன் தினமும் கெட்டவார்த்தையால் திட்டுவான், அடிப்பான், அவரை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டான். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒருமுறை நடந்த சண்டையில் அவளது நிறைமாத வயிற்றில் அவன் மிதித்தலில் குழந்தை இறந்து பிறந்தது; அதோடு அவளது கர்ப்பப் பையை வேறு எடுக்க நேர்ந்தது. இப்படி அவர்களுக்கு குழந்தையே இல்லாமல் ஆனது. இப்படியான கணவனை சுயமாக சம்பாதித்து தினமும் டாஸ்மாக் போய் சாராயம் வாங்கிக் கொடுத்து போஷித்தது மட்டுமில்லாமல் அவன் இறந்த போது அவர் பல மாதங்கள் துக்கம் வேறு அனுஷ்டித்தார். அதை பெரும் இழப்பாக பேசினார். இவரைப் போல் கோடிக்கணக்கான இந்தியப் பெண்கள் கணவர்களை, செரிபிரல் பால்ஸி குழந்தையை விட பெரும் பாரமான வன்மமான கணவர்களை, விழுந்து விழுந்து பராமரிக்கிறார்கள். ஏன்? ஒரே காரணம் தான்: பெண்ணின் மதிப்பு இங்கு தாம்பத்யம் சார்ந்தது. அவள் தனது மொத்த அடையாளமும் ஒரு கணவன் கொடூரமானவனாக உதவாக்கரையாக இருந்தாலும் சுமங்கலியாக இருப்பதில் உள்ளதால் இத்தகையானவர்களை கருணைக்கொலை செய்வதை பற்றி யோசிப்பதில்லை.

ஆனால் இங்கு ஒரு குழந்தைக்கு அதே மதிப்பு இல்லை. குழந்தை என்பது நமது ஊழ்வினை காரணமாய் கைவரும் ஒரு உயிரியல் வஸ்து. நல்லதாக இருந்தால் வைத்துக் கொள்ளலாம், கெட்டதாக இருந்தால் தொலைக்கலாம். ஒரு ஊனமுற்ற குழந்தையுடன் தமது முன் ஜென்ம பாவங்களும் தொலைவதாக இவர்கள் நம்புகிறார்கள். ஜெயாவின் இந்த முடிவு அவராக எடுத்ததாக இருக்காது; அவரது உறவினர்களும் அண்டைவீட்டாரும் நண்பர்கள் கூறியிருப்பார்கள்: “உனக்குத் தான் இளமை இருக்கிறதே. இந்த குழந்தையை பார்த்துக் கொள்வதால் எந்த பயனும் இல்லை. நாளை நமக்கு சம்பாதித்தும் போடாது, வாரிசும் தராது. பேசாமல் அமைதியாக கொன்று விட்டு இன்னொன்று பெற்றுக் கொள்”.

ஒரு குழந்தை என்பது தனி ஆளுமை. அதற்கென்று தனி பிரக்ஞையும் உணர்வுகளும் எண்ணங்களும் உண்டு என்று நாம் யோசிப்பதில்லை. குழந்தை என்பது நம் உடைமை என்கிற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். எல்லாருக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு என்பது மட்டுமல்ல நீங்கள் பராமரித்தாலும் கைவிட்டாலும் ஊனமுற்ற அல்லது அநாதையான ஒரு குழந்தைக்கு ஆதரவளிக்க ஏதாவது ஒரு கரம் இங்கு நீளும். இந்த உலகம் அவ்வளவு கொடுமையானது அல்ல. தற்கொலை பண்ணிக் கொள்ளுகிற பெற்றோர்களுக்கும் கைவிட்டு விடுகிற தாய்மார்களுக்கும் பின்னரும் இக்குழந்தைகள் நன்றாக வாழத் தான் போகிறார்கள். கருணையின் ஊற்று இந்த மண்ணில் ஏதோ ஒரு மூலையில் திறந்து தான் இருக்கிறது. இல்லை என்று நம்பி நாம் ஒரு உயிரை அழித்து விடக் கூடாது.
கலீல் கிப்ரான் சொன்னது போல்
“நம் குழந்தைகள் நம் குழந்தைகள் அல்ல
அவர்கள் நம்மில் இருந்து புறப்பட்டவர்கள் அல்ல
நம் வழி புறப்பட்டவர்கள்
ஒரு வில்லில் இருந்து பாய்ந்த அம்பு அவர்கள்
நாம் வில் மட்டுமே”. (தீர்க்கதரிசி)
Share This

11 comments :

  1. அருமையான ஆக்கம் தலைவா!

    ReplyDelete
  2. நன்றி மைந்தன் சிவா

    ReplyDelete
  3. இந்த மாத காலச்சுவடு இதழில் அசோகமித்திரன் மருத்துவமனைகள் தான் ஜனநாயக யுகத்தில் வதை முகாம்கள் என்ற எழுதியிருக்கிறார்.அதுபோலத்தான் பள்ளிக்கூடங்களும்.பள்ளிக்கூடங்களில்குழந்தைகளை துன்புறுத்துவதால் பிற்காலத்தில் ஏற்படும் ஆளுமை சிக்கல்களை பற்றி யாரும் அக்கறைபடுவதில்லை.மிக அழகான பால்ய காலத்தை பள்ளிக்கூடங்கள் நம் குழந்தைகளிடமிருந்து பறித்துவிடுகின்றன.சிறப்பான கட்டுரை.

    ReplyDelete
  4. சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள் .

    ReplyDelete
  5. நன்றி சர்வோத்தமன்

    ReplyDelete
  6. நன்றி முருகேசன் பொன்னுசாமி

    ReplyDelete
  7. உடல் ஊனமுற்றவர்களின் நிலை பற்றிய அருமையான கட்டுரைக்கு மிக நன்றி.

    நீங்கள் சொன்னபடி, ஒரு மனிதனின் மதிப்பை அவன் உடல் சக்தியை மட்டுமே முக்கியமாக அளவிடும் சமூக நோக்கு உடல் ஊனமுற்றவர்களை தங்களை விட குறைவான பொருளாதார முதலீட்டுக் கருவியைக் கொண்டவர்களாக கருதுவது ஒரு முக்கியக் காரணம். இதன் விளைவு தான், "நல்ல உடல் சக்தி கொண்டவர்களுக்கே இங்கே வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை, இதில் இந்த உடல் ஊனமுற்றவர்க்கு என்னத்தைச் செய்வது" என்ற எண்ணமும், எதுவும் செய்யாமல் இருப்பதை நியாயப்படுத்தும் போக்கும்.

    இன்னொரு முக்கிய காரணம், உடல் ஊனம் என்பது 'அவனது முன் வினைப் பயன்' என்று கருதுவதை மதம் சார்ந்த வகையில் அங்கீகரிக்கக் கூடிய வாய்ப்பும் இருப்பதும் தான். இந்த மனநிலையை போக்குவதற்கு அடிப்படையில் மக்களுக்கு ஊனம் பற்றிய கல்வியை அளிக்க வேண்டும். அதைத் தான் உங்களது அருமையான கட்டுரை செய்கிறது.

    மேலை நாடுகளில் ஊனமுற்றோர்களுக்கான வசதிகளை அரசாங்கமும், சமூகமும் செய்வது பற்றிக் குறிப்பிட்டு இருந்தீர்கள். மேலை நாடுகளிலும், அத்தகைய வசதிகள் உடனடியாக, எளிதாக கிடைக்கவில்லை. "Americans with Disabilities Act", என்ற சட்டத்தை 1990 இல் தான் அமெரிக்க மத்திய சட்டசபை இயற்றியது. அதுவும், தொழிலதிபர்களிடம் இருந்து, வலது சாரிகளிடம் இருந்தும், பெரும் எதிர்ப்பைச் சந்தித்த பிறகு. அவ்வாறு இயற்றிய சட்டத்தின் வீச்சை தொழிலதிபர்கள், வலதுசாரிகள், வழக்குகள் தொடுத்து, நீதிமன்றங்கள் வாயிலாகக் பெருமளவில் குறைத்தனர். அந்தக் குறைபாடுகளைக் களைந்து, நல்லதொரு ADDA என்றவொரு சட்டத்தை, 2008 இல் தான், நிறைவேற்ற முடிந்தது. இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்ததற்கான முக்கியக் காரணம், ஊனமுற்றோர்களின் குறையை, 1960 களில் இயற்றப்பட்ட, கறுப்பர்களுக்கு சம உரிமை தரப்பட வேண்டும் என்று கூறிய, "Civil rights act" உடன் இணைத்துப் போராடியது தான். இன வேற்றுமை காரணமாக, ஒரு மனிதனை தன்னை விட கீழானவனாகக் கருதுவதை அமெரிக்க வெள்ளையர்களை ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான போராட்டம், மக்களின் மனதில் மனிதனின் சம உரிமை குறித்தான ஒரு நோக்கை ஏற்றுக் கொள்ளச் செய்தது. அங்ஙனம், உழப்பட்டமண்ணில் விளைந்த பயிரே ADA. அதுபோல், நம் சமுதாயத்திலும், சாதி ரீதியாக, மத ரீதியாக, உடல் ரீதியாக உள்ள வேறுபாடுகளை பொதுமக்கள் நிராகரிக்கும் மன நிலையை, படித்தவர்களும், சமூக முன்னோடிகளும் கொண்டு வர வேண்டும்.

    அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் உங்களது உள்ளத்தைத் தொடும் கட்டுரைகள் மிகவும் அவசியம். தொடர்ந்து செய்யுங்கள்.

    அன்புடன்,
    கரிகாலன்

    ReplyDelete
  8. நன்றி கரிகாலன். நீங்கள் மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். உற்பத்தி அடிப்படையில் தான் இந்த விழுமியம் உருவாகிறது. ஆனால் இன்று மூளை உழைப்புக்கு உள்ள முக்கியத்துவம் நமக்கு உறைக்கவில்லை. ஏனென்றால் நம் ஆழ்மனம் நிலமானிய அமைப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.

    ReplyDelete
  9. மேலும் மேலைநாடுகளில் சமத்துவம் குறித்துள்ள நம்பிக்கைகள் இங்கு எழுமா என்று சந்தேகம் தான். நாம் இயல்பிலேயே படிநிலைவாதிகள். இதை மாற்ற போராட வேண்டும். ஆனால் போராடுவதை விட அடிமைத்தனத்தை ஏற்கும் மனநிலையே இங்கு அதிகமாக உள்ளது. சமீபமாக அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் சென்று படித்த இந்திய மாணவி ஹிந்து பத்திரிகையில் அந்த அனுபத்தை எழுதும் போது அங்கு வாராவாரம் கூட்டம் போட்டு கல்லூரி நிர்வாகத்தார் பல்வேறு பட்ட மக்கள் எப்படி ஒன்றாக இயங்க வேண்டும் என்று வலியுறுத்தினதாக, அங்குள்ள சம-உரிமை பண்பாடு தனக்கு மிகவும் வியப்பாக ஏற்றுக் கொள்ள சிரமமாக இருந்த்ததாகவும் சொல்கிறார். இரு இருபால் உறவினர் கட்டியணைத்து கொண்டதை பார்த்த போது சிரிப்பை அடக்க அவ்வளவு சிரமமாக இருந்ததாக எழுதுகிறார். அமெரிக்கா போய் ஆங்கிலத்தில் புழங்கினாலும் நம் இந்திய மனம் மிக மிக புராதனமானது!

    ReplyDelete
  10. //ஏனென்றால் நம் ஆழ்மனம் நிலமானிய அமைப்பில் இருந்து இன்னும் மீளவில்லை.//


    நம்புங்கள். நிலமானியம் என்ற வார்த்தையை அங்கங்கே எப்போதோ படித்திருக்கின்றேன். ஆனால் கண்டு கொண்டதில்லை. இன்று இவ்வார்த்தையை படிக்கும் போதும் அது என்ன என தெரியாது(இது கூட தெரியாத மாதிரி நடிக்கிறான் என நினைக்காதீர்கள்.) நடிக்கின்றேன் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். பதிலை மட்டும் சொல்லி விட்டு போங்கள்.

    அதை நான் இதுவரை அறியாத போது என் ஆழ்மனதில் அது எப்படி குடி கொண்டிருக்கும்?

    also u have written like this in the post about mayakam yenna movie..

    //நண்பனின் இணையை மோகிப்பது மனப்பிறழ்வோ அறம்பிழைத்தலோ அல்ல ஆழ்மனதில் விழித்துள்ள ஆதிமனித இச்சை.//

    அவ்விச்சை என் ஆழ்மனதில் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கும்?

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates