Wednesday 23 May 2012

வழக்கு எண் 18/9 – காதலின் இரு முகங்கள்



தமிழில் காதல் ஒரு தெய்வீக காரியமாக பூஜிக்கப்பட்ட காலம் ஒன்றிருந்தது. அநேகமான படங்களில் காதலர்கள் இறந்து காதலை வாழ வைப்பார்கள். 90களுக்கு பிறகு இந்நிலைமை மெல்ல மாறியது. பொருளாதார ஸ்திரத்தன்மை பெற்ற ஒரு தலைமுறை காதலை ஆண்-பெண் சமத்துவம் கோரும் ஒரு பரஸ்தர அன்பு பாராட்டலாக காணத் துவங்கியது. இது நகர்ப்புற சினிமாவுக்கே பொருந்தும் என்றாலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் தான். ரெண்டாயிரத்துக்கு பிறகு சினிமா காதல் காமத்தின் திறந்தவெளியாகியது. காதல் என்பது எளிதில் அடையக்கூடிய ஒரு உச்சபட்ச பொழுதுபோக்கு எனக் கருதும் பி.பி.ஓ தலைமுறையின் காதல் இது. பாய்ஸ் இக்காலகட்டத்தின் ஒரு முக்கியப்படம். செக்ஸுக்காக அலையும் ஆண் மனம், நண்பர்கள் ஒரே பெண்ணை டாவடிக்க முயல்வது, அதே காமம் காதலை தோற்கடித்து பின் காதலை இணைய வைக்கவும் உதவுவது என தெள்ளத்தெளிவாக ஒரு விடலை மனதின் சினிமா இது. நாயகிகள் நளினமாக வளைய வளைய வந்து ஏக்க நடனம் ஆடாமல் ஆடை பறக்க குத்துப்பாட்டுக்கு ஆடினார்கள். சில்க் இந்த காலகட்டத்தில் தோன்றியிருந்தால் காணாமல் போயிருப்பார். ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் விளிம்புநிலைக் காதலை நிறையப் பார்த்தோம். ரௌடிகள், உதவாக்கரைகள், மனநலம் பிறழ்ந்தவர்களை நாயகிகள் பொதுவாக விழுந்து விழுந்து காதலித்தார்கள் என்றாலும் செல்வராகவன் இவ்வகை விழுமியங்களைக் கடந்த காதலை முகம் கோணும்படி சொல்லி தியாகியான காதலிகளைபிரபலமாக்கினார். இவரது காதலிகள் விளிம்புநிலைக் காதலனை கடைத்தேற்றும் தேவதைகள். இன்னொரு பக்கம் காமத்தின் வன்மம் பிரதானப்படுத்தப்பட்டு பெண்களை கண்டிக்கும், விமர்சிக்கும், அவமானப்படுத்தும் வசனங்களும் பாடல்களும் தோன்றி இளைஞர்களிடையே பெரும் கரகோஷத்தை பெற்றன. சமத்துவம் கோரும் பொருளாதார தன்னிறைவு பெற்ற பெண்களை தொண்ணூறுகளில் ஹீரோக்கள் கன்னத்தில் அறைந்தும் நிர்வாணமாய் பார்த்தும் கேலி பண்ணி பாடியும் வழிக்கு கொண்டு வருவார்கள். இன்று பெண்கள் இதெற்கெல்லாம் மசியக்கூடிய நிலையில் இல்லை என்பதால் அவர்களை சினிமாவில் வசைபாடுவது நமக்கெல்லாம் சுவாரஸ்யமாக உள்ளது. வசைமூலமாக அன்பு காட்டுவது கீழ்த்தட்டு மக்களிடையே ஒரு எதார்த்தம் என்பதும் மறுப்பதற்கில்லை. பெண்களுக்கு எதிரான வசைகள் இன்று சினிமாவில் எதார்த்தத்திற்கும் பெண் சமத்துவம் மீதான எரிச்சலுக்கும் இடையே இருக்கிறது. இப்படி நாம் ஒரு சுற்று வந்து பார்த்தால் பாலாஜி சக்திவேல் ஊழல்வாதிகளின் சாக்குப்பைகளுக்குள் வெள்ளந்தியாய் சிரிக்கும் காந்தியைப் போல் மானுடநேய காதலை சித்தரிக்கிறார். வாழ்வின் அத்தனை கீழ்மைகளையும் கடந்து செல்ல வாழ்வை உன்னதமாக்க காதல் உதவும் என வலுக்கட்டாயமாக நம்புகிறவர் பாலாஜி சக்திவேல். காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 ஆகிய படங்களைப் பார்க்கும் போது நமக்கு ரஷ்ய எதார்த்தவாத பொற்காலத்தின் பல நாவல்கள் தவிர்க்க முடியாமல் நினைவு வருகின்றன.

வழக்கு எண் மேற்தட்டு மற்றும் கீழ்த்தட்டினரின் காதலை சித்தரிக்கிறது. மேற்தட்டு காதல் ஜோடி ஒரு தினேஷ் எனும் ஒரு பள்ளி மாணவனும் ஆர்த்தி எனும் ஒரு மாணவியும். ஒருவரை ஒருவர் பயன்படுத்தவும் காமத்தை அறியவுமே காதலை எதிர்நோக்குகிறார்கள். தினேஷ் ஆர்த்தியை வீழ்த்த செய்யும் முயற்சிகளை பாலாஜி சக்திவேல் நுட்பமாக காட்டியுள்ளார். அவனது சதா சிரித்த முகம், இனிய பேச்சு, பண்பான நடத்தை, மற்றும் மென்மையான அணுகுமுறைக்கு ஆர்த்தி மயங்குகிறாள். நம்புகிறாள். ஆனால் இவற்றுக்கு பின்னால் அவளை நிர்வாணமாய் தன் கைப்பேசியின் படம்பிடிக்கும் நோக்கம் அவனுக்கு உள்ளது. அவ்வாறு படம் பிடித்த பின் சரியான நேரத்தில் உண்மை தெரிய வருகையில் ஆர்த்தி அவனது கைப்பேசியின் மெமரி கார்டை கழற்றி எடுத்து விட்டு உறவையும் துண்டிக்கிறாள். இதனால் கோபமுறும் தினேஷ் ஆர்த்தி மீது திராவகம் ஊற்ற முயல்கிறான். தவறுதலாக அது ஆர்த்தியின் வீட்டு வேலைக்காரியான ஜோதி மீது பட்டு அப்பெண்ணின் ஒருபாதி முகம் சிதைந்து போகிறது. இதற்கிடையே இந்த ஜோதியை காதலிக்கும் தள்ளுவண்டி உணவகத்தில் வேலைபார்க்கும் வேலு என்பவன் திராவக வீச்சு வழக்கில் போலிசால் மாட்ட வைக்கப்படுகிறான். அவன் தனது ஜோதியின் முக அறுவைசிகிச்சைக்கு பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பொய்க் குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை செல்கிறான். இதை அறிந்த ஜோதி வேலுவை ஏமாற்றிய போலீஸ் அதிகாரி மீது திராவகம் ஊற்றி பழி வாங்குகிறாள். இறுதியில் வேலு முகம் சிதைந்த ஆர்த்தியை ஏற்றுக் கொண்டு காதலுக்கு உடல் அல்ல மனமே முக்கியம் என நிரூபிக்கிறான்.

இது ஒரு எளிய கதை தான். பாலாஜி சக்திவேல் எப்போதுமே தன் படத்துக்கு எளிய கதைகளைத் தான் எடுத்துக் கொள்வார். அவரது படத்தின் வலு அவர் நுட்பமான ஏராள தகவல்களுடன் கதையை சித்தரிக்கும் விதமும், எதார்த்தத்துக்கு தரும் முக்கியத்துவமும். உதாரணமாக இப்படத்தில் வரும் கூத்துக்கலைஞனாக வரும் சின்னச்சாமி பாத்திரத்தை அமைக்க அவர் காட்டியுள்ள சிரத்தை அபாரமானது. காதல் படத்தில் வரும் மஞ்சள் நீராட்டு விழா பாடல் போல இதில் சின்னச்சாமியின் ஒரு கூத்து நிகழ்வு ஆவணப்பட பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. சின்னச்சாமியின் பாத்திரம் அலாதியானது. கூத்து நடிகனாக வருடத்தில் சில மாதங்களே வேலை இருக்கும் என்பதால நகரத்த்துக்கு வேலைக்கு வருகிறேன். வேலுவின் தள்ளுவண்டிக் கடையில் கூடமாட வேலை. அவனிடம் ஒரு சுவாரஸ்யமான விசயம் அவனுக்கு எந்த இடமும் மேடை, எந்த வேலையும் ஒரு பாத்திரம் என்பது. எதிலும் அவன் மேலதிகமாக ஒட்டிக் கொள்வதில்லை. ஒரு சினிமா படப்பிடிப்பில் நாயகன் சொல்லத் திணறும் வசனத்தை சின்னச்சாமி எளிதாக திரும்பத் திரும்ப சொல்கிறான். இது நாயகனுக்கு தொந்தரவாக அங்கிருந்து விரட்டப்படுகிறான். அதே வேளை சொன்ன வேலையை செய்யாததனால் முதலாளியிடம் இருந்து உதையும் வாங்குகிறான். இதற்காகவெல்லாம் சின்னச்சாமி விசனப்படுவதில்லை. “கடைசி வரை அந்த ஹீரோ வசனத்தை பேசவே இல்லை தெரியுமா என்று சொல்லி வேலுவிடம் சிரிக்கிறான். பிறகு அவன் கூத்துக் காட்சி ஒன்றை நடைபாதையில் நின்று முக்காட்டை போர்த்தி பெண்ணாக பாவித்து நடித்துக் காட்டும் அபாரமான காட்சி ஒன்று வருகிறது. வேலு அவனை சினிமாவில் சேர முயற்சிக்க சொல்கிறான். பார்க்கலாம் என்கிற அசட்டையுடனே என்று தான் அதனையும் செய்கிறான். இந்த முயற்சி தெரிய வர கடைமுதலாளி அவனை கண்டிக்கிறார். சின்னச்சாமி உடனே வேலையை உதறி விட்டு கிளம்பி விடுகிறான். சின்னச்சாமியின் பாத்திரம் நாம் தமிழ்சினிமாவில் பார்த்திராத புதுமையான ஒன்று. சின்னச்சாமியின் நிஜப்பெயரும் அது தான். பறவை முனியம்மா போல் அவரும் ஒரு அசல் நாட்டார் கலைஞன். பறவை முனியம்மா போல் அவரும் படப்பிடிப்பின் போது ஹோட்டலில் தங்க மறுத்து அலுவலகத்திலேயே தங்கியுள்ளார். பாலாஜி சக்திவேல் அவரது ஆளுமையை நேரடியாக அவதானித்து பாத்திரமாக்கியுள்ளார் எனத் தோன்றுகிறது. சந்தியா, பரத் என பல நல்ல நடிகர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநரின் மற்றொரு முக்கிய கண்டுபிடிப்பு சின்னச்சாமி.

ஜோதியின் அம்மாவாக வருபவர் சதா கரித்துக் கொட்டுபவராக வருகிறார். அப்பாவில்லாத பெண் குழந்தையை பாதுகாப்பதற்கான ஒரு தாயின் பரிதவிப்பு தான் அப்படி வன்மமாக வெளிப்படுகிறது என போகிற போக்கில் படத்தில் வசனம் ஒன்று வருகிறது. தினேஷின் அம்மாவின் பாத்திரம் கூட கொஞ்சம் கிளீஷேவாக இருந்தாலும் நியாயமாகவே உள்ளது. தினேஷிடம் உள்ள சமூகவிரோதப் பண்புகளுக்கு அப்பா குடும்பத்தை விட்டு வெளியேறியது மற்றும் அம்மா உயர்தட்டு பாலியல் தொழிலாளியாக இருப்பது தான் காரணமென வருகிறது. பெற்றோர் மீதான குழந்தைகளின் கோபம் சமூகம் மீது பிற்பாடு திரும்புகிறது என்பது ஆய்வுகளில் நிரூபணமான ஒன்று தான். தினேஷின் காதலை பாலாஜி இன்றைய காதலுக்கான உதாரணமாக முன்வைக்கிறார். ஆனால் காதல் என்பது இன்பம் நுகரும் விளையாட்டு என நம்புவது தவறானதா? சுருக்கமாக இன்றைய காதல் தவறானதா? தினேஷ் தனது காதலியின் நிர்வாணக் காட்சிகளை படம் பிடித்து MMS வழி நண்பர்களுடன் பகிர்கிறான். இது விகாரமான மனப்போக்கா?

இல்லை. அனைத்து உறவுகளிலும் சமூக விழுமியங்களிலும் கொள்கைகளிலும் நம்பிக்கை இழந்த ஒரு சமூகம் காதலை இப்படி மட்டுமே பார்க்க முடியும். பெண் ஒரு நுகர்வுப் பொருளன்றி வேறெப்படியும் இருக்க முடியாது. ஆர்த்திக்கு அறிவுரை சொல்லும் ஒரு தோழி இப்படி கூறுகிறாள், “நல்ல பணக்காரப் பையனாகத் தெரிகிறான். ஒத்துக்கோ. வேணாம்னா அப்புறமா கழற்றி விட்டிரலாம். ஒரு திறந்த பாலியல் சமூகமாக நகர்மய இந்தியா மெல்ல மெல்ல மாறி வருகிறது. இணையமும் நுண்பேசியும் நமது உறவாடல்களை மிகுந்த சுதந்திரமானதாக மாற்றியுள்ளன. ஏராளமான ஆண் பெண்களை சந்திக்க வாய்ப்புள்ள ஒரு காலத்தில் தவற விட்ட ஒரு காதல் உறவுக்காக ஒருவர் தற்கொலை செய்கிறார் என்றான் அவர் காலத்தில் உறைந்து போய் விட்டார் என்று மட்டுமே பொருள். மற்றொரு பக்கம் இன்றைய காதலர்கள் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் உள்ளார்கள். சின்னச் சின்ன ஏமாற்றங்கள் அவர்களை குற்றங்களை நோக்கி நகர்த்துகின்றன. இந்த மனப்போக்கின் விசித்திரத்தை பாலாஜி சக்திவேல் உக்கிரமாக காட்டியுள்ளார். சொல்லப் போனால் தினேஷ்-ஆர்த்தி எனும் இந்த எதிர்மறை காதல் ஜோடி தான் நம்மை படத்தில் வேலு-ஜோதியை விட அதிகம் ஈர்க்கிறார்கள். வேலு-ஜோதி சற்று மிகையான லட்சிய பாத்திரங்களாக தெரிகிறார்கள். தினேஷ்-ஆர்த்தி நம் காலத்தின் பிரதிநிதிகளாக எதார்த்தமாக தெரிகிறார்கள். நம் காலத்து காதல் சற்று கசப்பும் வெறுப்பும் கலக்காவிட்டால் போலியாக ராமாயணக் கதை போல தோன்ற ஆரம்பிக்கிறது. ரொம்பவே சீரழிந்து விட்டோம் என்பதால் ஒருவரை ஒருவர் வெறுக்கும் காதலரின் சீரழிவு தான் நமக்கு நிஜமாக படுகிறது.

அடுத்து, அந்தரங்கத்தை கைப்பேசியில் படம் பிடிப்பது இன்று மிகப்பரவலாகி வரும் ஒரு தொற்றுவியாதி. இது தொன்றுதொட்டே இருந்திருக்கிறது. கம்பராயாணத்தில் கடத்தப்பட்ட சீதையின் அடையாளம் கேட்கும் அனுமனிடத்து ராமன் அவளது கொங்கைகளின் வாளிப்பை விவரிக்கும் இடம் ஒன்று வருகிறது. அக்காலத்தில் அண்ணா இதைக் கொண்டு கம்பராமாயணம் ஆபாசமானது என்று கம்பரசத்தில்கண்டித்தார். கம்பராமாயணத்தை கொளுத்த வேண்டும் என்றார். சங்க இலக்கியத்தில் காதலி தன் அந்தரங்கத்தை தோழியிடம் விவரிக்க தயங்குவதில்லை. நம் காலத்திலும் காதலி/காதலனுடனான அந்தரங்க அனுபவத்தை நண்பர்கள் இடையே விவரிப்பது ஒன்றும் புதிதல்ல. இன்று கைப்பேசி வழி படம் பிடிக்கும் வசதி லகுவாக கிடைப்பதால் நாம் நேரடியாக பதிவு செய்து நண்பர்களிடத்து பகிர தலைப்படுகிறோம். ஆனால் நாம் என்ன அறிவதில்லை என்றால் நவீன தகவல் தொழில்நுட்பம் எண்ணற்ற பிரதிகளை சதா உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பது. கைப்பேசியில் இருந்து இணையம் வரை எதையும் அந்தரங்கமாக வைத்திருப்பதோ பாதுகாப்பதோ சாத்தியமற்றது. மீட்கவே முடியாதபடி நம் அந்தரங்கம் அங்கு தொலைகிறது. அதே வேளை இணையத்தில் எந்த உண்மைக்கும், வெளிப்படுத்தலுக்கும் நீடித்த ஆயுளோ மதிப்போ இல்லை. கோடானுகோடி காதலர்களின் ரகசிய காணொளிகள் இன்று இணையத்தில் உலவுகின்றன. இதன் தீமையை மறுக்காத அதே வேளையில் இதனால் யாரும் இதற்காக மனம் புண்பட்டு தற்கொலை செய்யப் போவதில்லை என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும். இணையத்தில் தோன்றும் ஒரு தனிப்பட்ட முகம் விரைவில் அநாமதேயமாகி விடுகிறது. நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒரு அந்தரங்க காணொளி எந்த கணம் போர்னோவாக மாறுகிறது என்பது தான்.

ஒரு அந்தரங்க காணொளி ஆரம்பத்தில் ஒரு சமூகமாக்கல் காரணத்துக்காக, தற்பெருமைக்காக, தனிநபர் கிளுகிளுப்பாக உருவாக்கப்பட்டாலும் மிக விரைவில் அது எண்ணற்ற இணைய பயனர்களுக்கான நுகர்வுப்பொருளாகிறது. அந்தரங்க காணொளிக்கும் போர்னோவுக்கும் இடையிலான கோடு மிக மிக லேசானது. அனுராக் காஷ்யப்பின் “தேவ் டி படத்தில் ஒரு பதின்வயது பள்ளி மாணவியாக வரும் கல்கி கோஷ்லாவுக்கும் இப்படத்தில் வருவது போல நேருகிறது. அவளது அந்தரங்க காணொளி பெரும் சர்ச்சையாக பள்ளியை விட்டு நீங்குகிறாள். அப்போது ஒரு நாள் அவளது அப்பா வீட்டில் உணவுமேஜையில் வைத்து சகஜமாக சொல்கிறார்: “நான் பார்த்தேன். அவள் தான் செய்வது என்னவென்று தெரிந்தே தான் செய்திருக்கிறாள். அப்போது கல்கி தன் அப்பாவை நோக்கி ஆவேசமாக கத்துகிறாள்: “நீ எப்படி அந்த வீடியோவை பார்க்கலாம் அப்பா? அதைப் பார்த்து ரசித்தாயா என்ன? இந்த கேள்வியின் உக்கிரம் தாளாமல் அப்பா தற்கொலை பண்ணுகிறார். உண்மையில் அந்த அப்பா மீது தவறுண்டா என்ன? ஒரு இணையப்பயனராக நுழையும் அவரால் தன் மகள் தனக்கே ஒரு நுகர்வுப்பொருளாக் மாறுவதை தவிர்த்திருக்க முடியுமா? தன் மகள் குறித்து ஆராயும் நோக்கம் எப்போது போர்னோ விழையாக மாறியிருக்கக் கூடும்? இவையெல்லாம் எளிதில் விடைகாணக் கூடிய கேள்விகள் அல்ல. இணையம் முன் அமரும் நாம் ஒவ்வொருவரும் மற்றொரு ஆள். தகவல் தொழில்நுட்பம் நம் ஒவ்வொருவரையும் மற்றொரு பாத்திரமாக மாற்றுகிறது. அதில் நுழையும் நமது குணமும் செயல்பாடுகளும் விழுமியங்களும் முற்றிலும் வேறு. மனித உறவுகளை இன்றைய தகவல் தொழிநுட்பம் பெரும் சவாலுக்குட்படுத்துகிறது. தமிழில் இந்த சமகாலச் சிக்கலை முதன்முறை பதிவு செய்திருக்கிறது வழக்கு எண் 18/9.

இந்த படத்தின் மற்றொரு முகம் சமூகச்சீரழிவுகள் குறித்த விமர்சனம். விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் நிலமிழந்து கடனாளியாகி அதனை தீர்க்க தானும் கூலித்தொழியாளியாகி குழந்தைகளையும் அந்நிய மாநிலங்களுக்கு வேலை செய்ய அனுப்பும் ஒரு மாபெரும் அவலம் இப்படத்தில் வருகிறது. மேலும் போலிசார் வழக்கை நேர்த்தியாக விசாரித்து ஆதாரங்களை தயார் செய்து பின்பு பேரம் பேசி முழுக்க வழக்கை மாற்றி அமைத்து குற்றவாளிகளை தப்ப வைத்து போலிக் குற்றவாளிகளை உருவாக்கும் விதமும் அதிர்ச்சிகரமான வகையில் பதிவாகி உள்ளது. இதற்காக அவர் செய்துள்ள கள ஆய்வு பயன் தருகிறது.

இதுவரை பாலாஜி சக்திவேலின் படங்களில் கதைகூறல் நேர்கோட்டிலேயே அமைந்தன. “வழக்கு எண் 18/9.இல் அவர் மாறுபட்டு non-linear பாணியில், கொஞ்சம் “ஆயுத எழுத்தை நினைவுபடுத்தினாலும், மிக சாமர்த்தியமாக புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார். திரைக்கதையை கடற்கரையில் ஆர்த்தி ஓடும் காட்சியின் படமாக்கல் மீண்டும் மணிரத்னத்தை நினைவுபடுத்துகிறது. மேலும் அடிக்கடி நினைவுவரும் படம் வசந்தபாலனின் “அங்காடித்தெரு.

Read More

Friday 18 May 2012

சைனாமேன்: இலங்கை கிரிக்கெட் பற்றின முதல் நாவல்



நம்மூரில் எழுத்தாளனாய் இருப்பதன் வறட்டுத்தன்மை (மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து) வயது மூக்க மூக்க தான் அங்கீகாரம் உருவாகும் என்பது. ஒரு பத்துவருடம் எழுதினால் தான் மூளையில் எழுத்துக்கலைக்கான நரம்பணுக்கள் முழுக்க உருவாகும் என்று ஒரு ஆய்வு கூட சொல்லுகிறது. எப்படியும் ஓய்வுபெற்றவர்கள் நடைபழகுவது பொழுதுபோக்கவா உடற்பயிற்சிக்கா என்பது போன்ற சிறுகுழப்பம் பல உள்ளூர் எழுத்தாளர்களுக்குள் தமது எழுத்துவாழ்க்கை பற்றிய சுயஐயமாக உள்ளது. ஆனால் ஆங்கில ஆசிய எழுத்தாளர்கள் ஒரே நூலில் உலகப்புகழ் அடைவதை, தம்மை இளமையாக ஆர்ப்பாட்டமாக காட்டிக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருப்பது நமக்கு வெகு அருகிலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு இலக்கிய உலகம் உள்ளதை காட்டுகிறது. இந்த முரண்பாட்டுக்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு புத்தக அறிமுகக் கூட்டம். ஆங்கிலத்தில் மெல்லிய குட்டை டாப்ஸ் அணிந்த இளம்பெண்கள் ஷஷிதரூர்களை சூழ்ந்து மூச்சு முட்ட வைக்க அவர்களின் காதலிகள் பொறாமையில் பெருமூச்சு விடுவார்கள். மனைவிகள் வழிபாட்டாளர்களை மூக்காலே வழிமறிப்பார்கள். தமிழில் என்றால் சொல்லத் தேவையில்லை.


ஒரே புத்தகம் மூலம் உலக கவனம் பெற்ற பல ஆசிய ஆங்கில புனைவெழுத்தாளர்களை அறிவோம். அவர்கள் ஒரே விருது வாங்கினால் போதும். அது சாதனையாக அறியப்படும். தமிழில் எழுத்தாளர்கள் ஒரே ஒரு விருது மட்டும் வாங்கினால் காறித் துப்புவார்கள். இப்படியெல்லாம் நிலைமை இருப்பதால் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக இந்த ஆசிய (இந்திய-பாகிஸ்தானிய-இலங்கை) பிரபல எழுத்தாளர்களைப் பார்த்தால் அண்ணாமலை படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாமோ என்றொரு ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சமீபமாக இந்த பட்டியலில் பாகிஸ்தானின் ஹனீப் முகமது (A Case of Exploding Mangoes) மற்றும் இலங்கையின் ஷேஹன் கருணதிலகாவும் (Chinaman) பெரும் கவனிப்புக்குள்ளானவர்கள். இருவரும் பத்திரிகையாளர்கள். இருவரும் தமது நாற்பதுகளில் முதல் நாவல் வெளிவரும் வரை அதிகம் பிரபலப்படாதவர்கள். இருவரிடமும் நீங்கள் சீனியரா ஜூனியரா என்று நாம் கேட்க முடியாது. இருவரும் அதற்கு பதிலாக “நான் கடந்த முப்பது வருடங்களாக எழுதி வருகிறேன் தமிழ் எழுத்தாள பேட்டிகளில் அடிக்கடி வருகிற வாசகத்தை எடுத்து அவ்வளவு சுலபமாக பிரயோகிக்க முடியாது.


ஷேஹன் கருணதிலகா ஹனீப் முகமதை விட கொஞ்சம் மேலானவர் தான். ஹனீப்பின் நாவல் துப்பறியும் திகில் வகையை சேர்ந்தது. இது காமன்வெல்த் புத்தக பரிசையும் ஷக்தி பட் பரிசையும் வென்றது. மேன்புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிய ஆங்கில பத்திரிகைகளில் கொண்டாடப்பட்டது. கதை இப்படி போகிறது. பாகிஸ்தானிய ராணுவ ஜெனரல்-பிரதமர் ஜியா உல்ஹக் (நிஜமாகவே பாகிஸ்தானை 77-88 வரை ஆண்டவர்) விமானத்தில் கடத்தப்பட்டு அது வெடிக்க இறக்கிறார். அதற்கு காரணமென சந்தேகிக்கப்பட்டு கைதாகிறார் ஒரு விமானப்படை ஜூனியர் அதிகாரியான அலி ஷிகிரி அவர் தான் கொலை செய்தாரா, வேறு என்னென்ன சாத்தியங்கள் என விவரிக்கிறது A Case of Exploding Mangoes.

ஹனீப் தளுக்கான கூர்மையான ஆங்கிலத்தில் எழுதுகிறார். வரிக்கு வரி ஆர்ப்பாட்டமான அங்கதம். குறிப்பாக ராணுவப் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றும் ஜெனரல் தனக்கு போட்டியான சில ராணுவ அதிகாரிகளை வழிக்கு கொண்டு வர தனது மத ஈடுபாட்டை பயன்படுத்தும் இடம் ஒரு நல்ல உதாரணம். இஸ்லாம் தொடர்பான சில எளிய தகவல் குளறுபடிகளை குறிப்பிட்டு பாகிஸ்தானில் எப்படி மதம் சீரழிகிறது என்று தனது முதல் ஆட்சியாளர்கள் கூட்டத்தின் விவாதத்தை அரசியலில் இருந்து திசைதிருப்புகிறார் ஜியா. ராணுவ அதிகாரிகள் உணர்ச்சிவசப்பட்டு இஸ்லாத்தை மேனிலைப்படுத்தப் போகும் ஜியாவை ஆதரிக்கிறார்கள். மற்றொரு காட்சியில் குவைத் இளவரசர் பாக் பிரதமரை சந்திக்க வருகிறார். இளவரசர் ஸ்திரி லோலர் என்பதால் தனது பாலியல் ஆரோக்கியத்துக்காக கூடவே ஒரு தனிப்பட்ட மருத்துவரை வைத்திருக்கிறார். அவரிடம் மிக ரகசியமாக தனக்குள்ள ஆசனவாய் புண்ணைப் பார்க்குமாறு பாக் பிரதமர் ஜியா பணிக்கிறார். அவ்வாறு தனது ஆசனவாய் சோதிக்கப்படும் போது ஜியா ஜன்னல் வழியாக பறக்கும் தேசியக் கொடியை ஆராய்கிறார். அதிலுள்ள பிறை தவறாக அமைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அதை திருத்துவதற்கான உத்தரவை எவ்வாறு பிறப்பிக்க வேண்டும் என்பதை மனதுக்குள் சொற்களை கோர்க்கிறார். இப்படியான காந்தாரிமிளகாய் போய் உச்சியில் பிடிக்கும்படியான பகடிகள் மேலும் பல இந்நாவலில் உள்ளன. ஆனால் A Case of Exploding Mangoes பகடியை தவிர்த்து ஆழமற்ற ஒரு கோட்டோவியக் கதை போல எளிய சத்தங்களை கிளப்பி முடிந்து போகிறது. ஒரு சர்வாதிகாரியின் உளவியலை மார்க்வெஸ் பாணியில் அலசவோ பாகிஸ்தானிய சமூகத்தின் பண்புகளை, சிக்கல்களை வரலாற்று பூர்வமாய் விளக்கவோ அது முற்படவில்லை. 


கருணதிலகாவின் நாவல் Chinaman: the Legend of Pradeep Mathew இந்த விசயங்களை ஓரளவுக்கு செய்ய முயன்றிருக்கிறது. ஒரு விரிவான தளத்தில் செயல்படுகிறது. இந்த நாவலுக்கு மற்றொரு முக்கியத்துவம் உள்ளது. உலகில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட மிகச்சில நாவல்களின் ஒன்று இது. அதிலும் இலங்கை கிரிக்கெட்டை பற்றி எழுதப்பட்ட ஒரே நாவல் இது. 2008இல் கிரேட்டியன் பரிசையும், 2012 தெற்காசிய இலக்கிய விருதையும் இந்நாவல் வென்றது. விருது கிடைத்திருக்கிறது என்று ஊர் ஊராக விழா நடத்தும் துர்கதியும் அவருக்கு நேரவில்லை. முதல் விருது கிடைத்ததுமே அவருக்கு பதிலாக அவரைப் பற்றி உலகம் முழுக்க பிறர் பேசினார்கள். கருணதிலகா தன் பாட்டுக்கு விஸ்டன், கார்டியன், எகனாமிக் டைம்ஸ், தி கிரிக்கெட்டர் போன்ற பல பத்திரிகைகளில் பத்திகள் எழுதிக் கொண்டு இண்டிபெண்டண்டு ஸ்கொயர், பவர்கட் சர்க்கஸ் போன்ற ராக் குழுக்களில் பேஸ் இசைவாசித்தும், பாடல்கள் இயற்றியும், சிங்கப்பூரில் வசித்து நீண்டதாக கூந்தல் வளர்த்து கூடவே இரண்டாம் நாவல் எழுதியும் வருகிறார்.

கருணதிலகா எழுதுவது இங்கிலாந்து ராணியின் ஆங்கிலத்தில் சற்று துரும்பு கலந்து அதை அமெரிக்கனிசம் (fuck your…, what ye want, arsehole) கொண்டு புதுப்பித்தது போன்ற ஒரு மொழியில். இலங்கை ஆங்கிலத்துக்கான ஒரு தனித்தன்மை அதற்கு உள்ளது. நிறைய சிங்கள, தமிழ்ச் சொற்களை, கலாச்சார பிரயோகங்களை வெளிநாட்டுக்காரர்களுக்காக மொழிபெயர்க்கும் பதற்றமின்றி அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். எளிய உதாரணமாக “how is your podiyan. மேலும் குறிப்பிட வேண்டியது கருணதிலகாவின் வறட்டுத்தனமான, யார்-எக்கேடும்-கெட்டாலென்ன வகை நகைச்சுவை. இது இந்திய ஆங்கில புனைவு மொழியில் இருந்து பெருமளவில் வேறுபடுகிறது. கருணதிலகா சக-இலங்கைகாரர்களின் பாசாங்கையும் முட்டாள்தனத்தையும் சகட்டுமேனிக்கு நக்கலடிக்கிறார் தான். ஆனால் அவர் அதை இந்திய ஆங்கில எழுத்தாளர்களைப் போல ஒரு எலைட்டிஸ்ட் மனநிலையில், “கலைஞனின் தார்மீக கோபத்துடன் செய்வதில்லை. அமெரிக்க ஜாக் கெரவக் முதல் ஜப்பானிய ஹருகி முராகாமி வரை நீண்டுள்ள ஹிப்பி/பீட் விட்டேந்தி மனோபாவம் கருணதிலகாயின் தொனியையும் அக்கறையையும் பிரதானமாய் தீர்மானிக்கிறது. அவரது புனைவு களத்தில் கிரிக்கெட் தவிர கால்பந்து, குத்துச்சண்டை, இசைத்தொகுப்புகள் மற்றும் குடியைப் பற்றி சிலாகிக்கும் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கை அடிப்படையில் கசப்பானது, அர்த்தமற்றது, தற்காலிக மதிப்பு மட்டுமே கொண்டது; வாழ்வை குடித்தும், கலை விளையாட்டை ரசித்தும் தான் தாங்கிக் கொள்ள முடியும் என்பது இவர்களின் தீர்மானம். இதனாலேயே நம் காலத்தின் மாபெரும் வரலாற்று நிகழ்வான ஈழப் போர் குறைந்த பட்சமாக ஒரு தொல்லையாக கூடியபட்சமாக ஒரு அநியாயமாக மட்டுமே  (எப்போது இந்த நாசமான போர் முடியும்?) கருணதிலகாவால் காணப்படுகிறது 

நாவலின் பிரதான பாத்திரமும் கதைசொல்லியுமான கருணதிலகா குடிக்காகவும் கிரிக்கெட்டுக்காகவும் சாவது தவறில்லை என்று கருதுகிறார். அவரது மகனான கார்பீல்டு காதலுக்காகவும் பெண்களை துய்ப்பதற்காகவும் தனது திறமைகளை வீணடிப்பதோ அப்பாவிடம் இருந்து ஏழு லட்சத்தை திருடுவதோ நியாயம் என்று நினைக்கிறான். நாவல் முழுக்க இத்தகைய மனிதர்களின் மனநிலை தான் பிரதிபலிக்கப்படுகிறது. புலிகள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை குண்டு வெடித்து கொன்றாலும் இலங்கை ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தாலும் அக்கறை காட்டாது தன் போக்கில் அன்றாட காரியங்களில் மூழ்கியிருக்கும் ஒரு அபத்த சமூகம். மனிதர்களில் ஒரு பெரும் பகுதியினர் போரின் போது அசட்டுத் துணிச்சலுடன் அன்றாட அக்கறைகளுடன் தான் இருப்பார்கள் என்று ஷோபா சக்தியின் கூட தனது சமீப சிறுகதையான “கப்டனில் சொல்கிறார். இலங்கை வாழ்வியல் எதார்த்தத்தின் மற்றுமொரு பரிமாணம் என இதை எடுத்துக் கொள்ளலாம்..

கருணசேனா ஒரு கிரிக்கெட் எழுத்தாளர். ஆரம்பத்தில் தனது கட்டுரைகளுக்காக விருதுகள் பெற்று பெரும் அங்கீகாரம் அடைந்து பின்னர் தனது விட்டேந்தி குணம் காரணமாக “நம்பிக்கையூட்டும் எழுத்தாளர் என்ற கீழ்ப்படியிலே போதுமென்று அமர்ந்து விட்டவர். அவர் தொலைக்காட்சிக்காக பத்து சிறந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களைப் பற்றி ஆவணப்படங்கள் எடுக்கிறார். இதில் அவரது பிரதான நோக்கம் பிரதீப் சிவநாதன் மேத்யூ எனும் ஈழத்தமிழனான ஒரு சுழல் பந்துவீச்சு மேதையின் கதையை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவது. பிரதீப் கிட்டத்தட்ட கருணசேனாவை போன்றவர். உலகின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளராக அறியப்பட வேண்டியவர். ஆனால் அவர் தேசிய அணிக்காக ஏழே ஆட்டங்கள் மட்டுமே தான் ஆட முடிகிறது. அவற்றில் அவர் 47 விக்கெட்டுகள் எடுக்கிறார். நியுசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்டு ஆட்டத்தில் அவர் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். ஆனால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்படுகிறது. இப்படி ஒவ்வொரு சாதனை செய்யும் போது அவரை துரதிர்ஷ்டம் பின் தொடர்கிறது. மூத்த வீரர்களுடன் பூசல், தமிழ் அடையாளம், சோம்பல், ஒழுக்கமின்மை, காமம் மற்றும் இன்ன பிற ஆளுமைக்கோளாறுகள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் பிரதீப் மேத்யூவை திறமையிருந்தும் சாதிக்க முடியாத துயர நாயகர்களின் வரிசையில் முன்னிலையில் நிறுத்துகின்றன. கிரிக்கெட்டில் இருந்து முழுக்க வெளியேற்றப்படுகிறார் அவர். ஆனால் சுவாரஸ்யமாக பிரதீப் தனது தோல்விகள் பற்றி விசனிக்கவில்லை. திறமை என்பதை சுயநிர்ணயத்துக்கான அளவுகோலாக மட்டுமே அவர் பார்க்கிறார். சாதனைகள் செய்து பிறரது அங்கீகாரம் பெற்று வரலாற்றில் இடம் பிடிப்பது போன்ற லௌகீக வேலைகள் ஒரு கலைஞனுக்கு உகந்ததல்ல என சிந்திக்கும் ஒரு வகை தனிமனித வாதி பிரதீப். மேலும் ஒரு அமைப்பு-விரோத, கலக்கக்கார, எதிர்க்கலாச்சாரவாதியாகவும் கருணதிலகா அவரை சித்தரிக்கிறார்.

பத்து வருடங்கள் கடந்த நிலையில் பிரதீப் மேத்யூவை அவரது கூட ஆடியவர்கள், வாரியக்காரர்கள், பயிற்சியாளர்கள் எவருக்கும் இப்போது நினைவில்லை. அல்லது அவரை நினைவு கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். அவரை ஒரு துர்கனவாக மறந்து விட அனைவரும் விரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பிரதமரின் தம்பியுமானவரிடம் இருந்து ஒரு பெரும் தொகையை பிரதீப் மிரட்டிப் பிடுங்கி விடுகிறார். இதனால் அவர் பின்னர் ஒருபோதும் இலங்கையில் கிரிக்கெட் ஆடமுடியாதபடி ஆகிறது. கிரிக்கெட் விபரங்கள் கணினியின் எண்வயமாகும் போது அவரது சாதனை விபரங்கள் திட்டமிட்டு ஆவணகங்களில் இருந்து அழிக்கப்படுகின்றன. பிரதீப் நியூசிலாந்து சென்று தனது இரண்டாவது காதலியை மணந்து இரு குழந்தைகள் பெற்று நாதன் எனும் புதுப்பெயருடன் ஒரு பள்ளி ஆசியராக வாழ்கிறார். இலங்கையில் வாழும் அவரது சகோதரி குடும்பத்தினர் அவர் இறந்து விட்டதாக பொய் செய்தியை பரப்பி கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல்களில் இருந்து தொல்லைகளில் இருந்து விடுபட முயல்கிறார். இப்படி பிரதீப் மேத்யூ எனும் ஒரு அதிதிறமையாளர், துலங்காத மேதை ஒரு தேசத்தின் நினைவில் இருந்து முற்றிலும் மறைந்து போகிறார்.

கருணசேனா விடாப்பிடியாக இந்த மறக்கப்பட்ட ஆளுமையை மீட்டுருவாக்க முயல்கிறார். தொடர்ந்து விசாரிக்கிறார், ஆராய்கிறார், ஏகப்பட்ட தொடர் இடையூறுகளை கடக்கிறார். மிகக் கொஞ்சமாக தான் பிரதீப்பின் பனி படர்ந்த சித்திரம் துலங்குகிறது என்றாலும் விசாரணையின் விளைவாக அவர் இலங்கைக் கிரிக்கெட்டின் சூதாட்டம் குறித்து, அதை நிர்வகிக்கும் பல நிழலான மனிதர்கள், கிரிக்கெட் அமைப்பின் ஊழல்வாதிகள், கிரிக்கெட் மைதானத்தை பராமரிக்கும் ஒரு குள்ளமான மனிதர், அவர் ரகசியமாக பதிவு செய்த 30 வருடங்கள் அம்மைதானத்தில் கிரிக்கெட்டர்கள் உரையாடிய செய்திகளின் ஆயிரக்கணக்கான ஒலிநாடாக்கள், பிரதீப்பின் பயிற்சியாளர்கள் என் தம்மை போலியாக பிரஸ்தாபிக்கும் விநோதமான ஆறுவிரல் மனிதர்கள், குகநாதன் எனும் ஒரு விடுதலைப்புலி அமைப்பாளர் ஒரு புதிய உலகத்தையே கண்டடைகிறார். இதைக் கொண்டு பிரதீப் மாத்யூ பற்றின ஒரு புத்தகம் எழுத அவர் முனைகிறார்.

இதற்கிடையே கருணசேனாவுக்கு கல்லீரல் நோய் வந்து ஒரு பெக் அடித்தால் கூட மறுநொடி மரணம் என்கிற நிலை வர அவரது மனநிலை சீரழிகிறது. அவரது மனப்பிராந்தியும், கனவுகளும், கற்பனைகளும் பிரதீப் பற்றி அவர் எழுதி வரும் அபுனைவு மெல்ல மெல்ல ஒரு புனைவாக மாறுகிறது. தான் யோசிப்பதில் எத்தனை சதம் உண்மை என்பது அவருக்கே தெரியாமல் போகிறது. பிரதீப்பை சந்தித்தபின் தனது புத்தகத்தை நிறைவுபடுத்த உத்தேசித்து அதற்கும் முன் கருணசேனா இறந்து போக அவரது மகனும் அடுத்த தலைமுறை சுயசீரழிவுவாதியுமான கார்பீல்டு பிரதீப்பை தேடிக் கண்டடைவதுடன் நாவல் முடிகிறது. அவன் இந்நூலை பிரசுக்க முயலும் போது சட்டப்பிரச்சனைகள் வரும் என அஞ்சி மேதை கிரிக்கெட்டரின் பெயரை பிரதீப் சிவநாதன் மேத்யூ என பொய்யாக (?) மாற்றி விடுகிறான். இதனால் “நூற்றாண்டு கால தனிமை போல இந்நாவல் இதனால் முடிவில் இருந்து மீண்டும் துவங்கும் மாய கவித்துவத்தை பெறாமல் சற்று வலிந்து உருவாக்கப்பட்டதாக போனாலும் ஆசிரியரின் சுட்டித்தனத்துக்காக நம்மிடம் இருந்து ஒரு சிறுபுன்னகையை நிச்சயம் வருவிக்கிறது.

இந்நாவலின் கதைக்களன் நிச்சயம் கிளர்ச்சியானது. உலகம் என்றும் சாதனையாளர்களை விட சாதிக்க தகுதியிருந்தும் சாதிக்காதவர்களை தான் அதிகம் கொண்டாடுகிறது, நேசிக்கிறது, அவர்களைப் பற்றி எதிர்மறையாக ஒரு சொல் கூட யாரும் சொல்லுவதே இல்லை. காதலியால் நிராகரிக்கப்பட்டு, மாமாவால் சொத்து பறிக்கப்பட்டு, பெற்றோரை சிறுவயதில் இழந்து, அண்ணனை காசநோய்க்கு இழந்து முழு அநாதையாக்கப்பட்டு இறுதியில் தானும் 26வது வயதில் காசநோயால் சாகும் முன் ஜான் கீட்ஸ் சில அமர கவிதைகளை எழுதினார். அவர் இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஷேக்ஸ்பியரை விஞ்சியிருப்பார் என்று நம்புகிறவர்கள் உண்டு. கீட்ஸை போலவே சில்வியா பிளாத்தும் இளம்வயதில் தற்கொலை பண்ணிக் கொண்டு அமரத்துவமும் உலகப்புகழும் எய்தினார். தமிழில் பாரதி, ஆத்மாநாம், மற்றும் இன்னும் பலர். தன்னம்பிக்கையற்றவர்களும் கற்பனை மிகுந்தவர்களும் சிலாகிக்கிற ஒரு மித்து மட்டுமே இது. கருணசேனா பிரதீப்பை வீழ்ச்சியுற்ற நாயகனாக மாற்றி இந்த மித்துக்கு ஒரு நாடகீயத்தை அளிக்கிறார்.

இந்த மிகையும் நாடகீயமும் இன்றி ஒரு துன்பியல் நாயகனின் வீழ்ச்சியை சொல்லலாம். நவீனத்துவ எழுத்தில் ஹெமிங்வே குறிப்பாக இத்தகைய மித்தை ஆடம்பரம் களைந்து வெற்றிகரமாக கலையாக்கியிருக்கிறார். ஆடம்பரங்கள் அற்ற நிலையில் இந்த மித்து தனிமனிதனின் கீழ்மைகளின், தோல்வியின் கசப்புகளை, சிக்கலான மனநிலைகளை பேசும். தமிழில் எஸ்.ராவின் “உறுபசி நல்ல உதாரணம்.

ஆனால் ஒரு விதத்தில் கருணதிலகாயின் தோல்வியுற்ற மேதையின் மித்து இந்நாவலில் நம்பகமாகிறது. அதற்கு அவர் புனைவையும் எதார்தத்தையும் பின்னி பின்நவீனத்துவ “சிதைவுற்ற பிரக்ஞை நடையில் நாவலை எழுதியிருப்பது உதவுகிறது. அதாவது பிரதீப் மேத்யூ நம்ப சாத்தியமற்ற ஒரு அதிநாயகனாக உங்களுக்கு தெரியலாம். அவர் 14 வகை சுழல் பந்துகளை வீசத் தெரிந்தவர் என்று சொல்லும் போது அது புருடா என்று நீங்கள் புகார் செய்ய முடியாது. பின்நவீனத்துவ அஸ்திரத்தின் முன் அப்புகார் காலியாகி விடும். மேலும் சற்று மிகையான பொய் தான் உண்மை என நம்பும் ஒரு சமூகத்தில் தான் நாவலின் நாயகன் வாழ்கிறார். அவரது பரிச்சயக்காரர்கள் குடித்து முழுபோதையேறினால் மட்டும் தான் வெளிப்படையாக பொய் சொல்வது தெரியும். மற்றபடி அவர் சந்தித்து உரையாடுபவர்கள் சாதாரணமாகவே தம்மைத் தாமே புனைகதை பாத்திரமாக மாற்றிக் கொள்பவர்கள். அன்றாட வாழ்வில் நாம் இது போல் தம்மைப் பற்றி நேரலையாக கதையாடல்களை உற்பத்தி செய்யும் ஏராளமானவர்கள் பார்க்கிறோம் என்பதால் ஒருவிதத்தில் இதை ஒரு சமூகக் கூறின் வெளிப்பாடாகவும் கூட பார்க்கலாம்.

ஆனால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய ஆளுமையின் கதை நாவலுக்கான ஆபார சாத்தியங்கள் கொண்டது. அவர்களின் பின் ஒரு சொல்லப்படாத கதை இருக்கும்  நடனம், இசை போன்ற கலை வடிவங்களை போலன்றி கிரிக்கெட் கோடானுகோடி வெகுமக்களின் கலைவடிவம் சம்மந்தப்பட்ட கலைவடிவம். பிரதீப் மேத்யூவை போன்று கிரிக்கெட்டோடு தொடர்புள்ள ஒரு கதாபாத்திரம் ஒரு சமூகத்தின் வரலாற்றை, கலாச்சாரத்தை, சிக்கல்களை பேச ஏற்றது. சைனாமேனின் முக்கியத்துவம் அதன் அதிமனித மித்தில் அல்ல, ஒரு அறியப்படாத சமூகத்தின் கதையை அதன் வழி கூற முடியும் என்பதே. உதாரணமாக சிறுவயதில் முத்தையா முரளிதரனின் அப்பாவின் பேக்கரி இனவெறியர்கள் தீக்கிரையானது. முரளிதரன் விடுதலைப்புலியாகவில்லை. மாறாக அவர் ஒரு சிங்கள் ஆதரளாளர். சிங்கள சமூகத்தின் “தமிழ் பிரதிநிதி. இதுவும் ஒரு எதார்த்தம் தான். சைனாமேனில் பிரதீப் மேத்யூவின் அப்பாவும் பேக்கரி வைத்திருக்கிறார். அதையும் எரியூட்ட வருகிறார்கள். அவர் கடையின் பெயரை சிங்களப்பெயராக்கி தப்பித்துக் கொள்கிறார். பிரதீப் கிரிக்கெட் ஆடுவதற்காக தனது “சிவநாதன் எனும் தமிழ்ப்பெயரை கூடியமட்டும் மறைத்து வாழ்கிறான். “ஒரு தமிழன் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க சிங்களவனை விட பத்து மடங்கு மேலானவனாக இருக்க வேண்டும். நான் அப்படி ஆக வேண்டும். அதுவே லட்சியம் என்கிறான்.

நாவலின் முக்கிய சுவாரஸ்யம் நூற்றுக்கணக்கான பக்கங்கள் வழி மெல்ல மெல்ல உருவாகும் பிரதீப் மேத்யூவின் சிதைவுற்ற முரண்பட்ட சித்திரம். பிரதீப் பள்ளி வயதில் இருந்தே திறமையாளனாக கண்டடையப்பட்டு கிரிக்கெட்டில் பயிற்சியாளரால் ஈடுபடுத்தப்படுகிறான். அவனுக்கு வலிமையான நீண்ட விரல்கள். நன்றாக சுழலும் ரப்பர் மணிக்கட்டு. எந்த சர்வதேச வீச்சாளரையும் போல செய்து வீசும் ஆபார திறமை. இடது மற்றும் வலது கைகளால் சமமாக வீசக் கூடியவன். பிரதானமாக இடதுகை கால்சுழல்பந்து பயில்கிறான். இடதுகை கால்சுழல் பந்தாளர்களுக்கு சைனாமேன் என்று பெயர். ஆஸ்திரேலியாவின் ஹோக் ஒரு சமீப உதாரணம். தென்னாப்பிரிக்காவின் போல் ஆடம்ஸ் கொஞ்சம் முந்தைய உதாரணம். பொதுவாக சைனாமேன்கள் ஒரு அரிய வகை. பிரதீப் வேகமாக நேர்திசையில் வரும் பிளிப்பர், ஷூட்டர் எனும் ஒருவகை ஆர்ம் பந்து, கால் பக்கம் இருந்து ஆப் பக்கம் சுழந்து பின் இரண்டாவதாக துள்ளி எழுந்து உள்ளே வரும் ஒரு டபுள் பவுன்சர் பந்து என ஏகப்பட்ட பந்துகளை வீசப் பயில்கிறான். நாவலின் ஓரிடத்தில் பிரதீப்புக்கு நாற்பதுக்கு மேற்பட்ட பந்துகளை வீச வரும் எனும் ஒரு மிகையான தகவல் கூட வருகிறது. பிரதீப் மேத்யூ இலங்கையின் முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், இந்தியாவின் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் ஆகியோரின் கலவை.

கொஞ்சம் யோசித்து பார்ப்போம். உலகின் மாபெரும் சுழலர்களான வார்ன், முரளி, கும்பிளே, சக்லைன், ஸ்வான், அஜ்மல், ஹர்பஜன் ஆகியோர் அதிகபட்சம் மூன்று வகை பந்துகளுக்கு மேல் வீசாதவர்கள். அவர்களின் வலிமை வெரைட்டி அல்ல. அவர்களை மட்டையாளர்கள் பயந்ததற்கு பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன. குறிப்பாக கட்டுப்பாட்டையும் கற்பனையையும் சொல்லலாம். ஆனால் சக்லைனும் அஜ்மலும் அடிக்கடி தாம் தீஸ்ரா எனும் ஒரு மூன்றாவது வகை வேறுபட்ட பந்தை பயின்றுள்ளதாக உதார் விடுவதை பார்த்திருக்கிறோம். வார்னுக்கும் இந்த நோய் இருந்தது. மீடியா பரபரப்பு தான் இந்த எண்ணற்ற வேறுபட்ட பந்துகளின் பிரஸ்தாபங்களின் உத்தேசம். ஒரு கட்டத்தில் எந்த வேடத்தில் வந்தாலும் கமலை எளிதாய் கண்டுபிடிக்க தமிழர்கள் பழகி விட்ட மாதிரி கிரிக்கெட்டில் இந்த பாவனைகள் சீக்கிரம் வெளுத்து விடும். பிறகு 40 சொச்சம் வேறுபட்ட பந்துகளை பிரதீப் ஏன் வீச வேண்டும்? அப்படி வீசுபவன் மேதை என்றால் லிம்கா சாதனைக்காக குத்தூசி தின்பவர்கள், டெலிபோன் டைரக்டரியை மனனம் செய்பவர்கள் கூட மேதைகள் தானே. உண்மையில் இப்படி செய்வது ஒரு உளவியல் சிக்கலை காட்டுவது. ஆசியர்களுக்கு இந்த நேராக-நடந்தால்-பார்க்க-மாட்டார்கள்-தலைகீழாக-நடக்கிறேன் அணுகுமுறை பரவலாகவே உள்ளது. சமீபமாக நான் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு மாணவன் ஒரு காலை மடித்து நொண்டி நடனம் ஆடினான். சகிக்க முடியாதபடி சொதப்பலாக இருந்தது. எதிர்பார்த்தது போல் பெரும் கரகோஷம். நிறுவன தலைவர் நெகிழ்ந்து போய் அவனுக்கு காசோலை அளித்து பாராட்டினார். மேலும் சொல்வதானால் இந்த கட்டுரையை கைகால் விளங்காத நான் வாயால் பேனா பிடித்து எழுதினேன் என்று சொன்னால் இதில் ஒருவரி கூட வாசிக்காமல் எனக்கும் விருது கொடுத்து கொண்டாடுவார்கள். இது ஒரு கலாச்சார வியாதி. பிரதீப் மேத்யூவின் பாத்திரம் மூலம் கருணசேனா இந்த நோய்மையை நுட்பமாக சித்திரிக்கிறார். அவரே ஓரிடத்தில் நேரடியாக சொல்வது நம்மவர்களுக்கும் பொருந்தும்: “இலங்கைக்காரர்களுக்கு சொந்தமாக ஒன்றும் செய்ய தெரியாது... பிரச்சனை சொந்தமாக ஒன்றும் செய்தால் இந்த நெரிசலில் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற பயமே.

Chinaman நாவலின் மிக முக்கியமான பகுதி கிரிக்கெட் சூதாட்டம் பற்றியது. நாம் இதுவரை அறிந்திராத மாறுபட்ட ஒரு சித்திரத்தை கருணதிலகா அளிக்கிறார். கிரிக்கெட் சூதாட்டம் ஒரு தீமையாக அல்ல, ஒரு பொழுதுபோக்காக, மக்களின் சாகச விருப்பமாக, விதியுடனான நெருப்பு விளையாட்டாக, ஒரு சம்பாத்திய மார்க்கமாக, சலிப்பான ஆட்டங்களை சுவாரஸ்யமாக்கும் முயற்சியாக பல விதங்களில் சூதாட்ட விவாதத்தை விரிவாக்குகிறார்..

பொதுவாக பத்திரிகையாளர்கள் அதிகார வர்க்கம் மற்றும் பிரபல கலைஞர்கள் குறித்து தாம் நெருக்கமாக அணுகி அறிந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் எதிர்பாராத படி சொல்லி நம்மை வியப்படைய வைக்க விரும்புவார்கள். கிரிக்கெட் எழுத்தாளர்களிடமும் தாம் சந்தித்த வீரர்களின் விநோத பண்புகளை, சுபாவங்களை சொல்லும் இந்த விருப்பம் அலாதியாக உண்டு. கருணதிலகாயும் விதிவிலக்கல்ல. கிரிக்கெட்டர்கள் பற்றின நிறைய அறியப்படாதகதைகள் நாவல் முழுதும் விரவியுள்ளன. அவை நாவலை சுவாரஸ்யமாக்குகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை தான். உதாரணமாக ஒரு ஸ்லெட்ஜிங் கதை. ஆஸ்திரேலியர்கள் பொதுவாக வசைச்சொற்களை எதிரணியினரிடம் அதிகம் பிரயோகிப்பவர்கள் என்று நம்பப்படுகிறது. ஒருமுறை வேகவீச்சாளர் மெக்ராத் சிம்பாப்வேயின் கடைநிலை மட்டையாளராக எட்டோ பிராண்டசை ஸ்லெட்ஜ் செய்ய முயன்று மூக்குடைகிறார். எவ்வளவு முயன்று பிராண்டஸை வெளியேற்ற முடியாமல் கசப்படைந்து எரிச்சலாகிய மெக்ராத் “ ஒய் எட்டோ நீ ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்“ என்று வினவுகிறார். அதற்கு பிராண்டசின் பதில்: “ஏனென்றால் ஒவ்வொரு தடவையும் உன் மனைவியை நான் புணர்ந்ததும் அவள் எனக்கு ஒரு பிஸ்கட் தருவாள்.

பிரதீப்பின் புதிரான வாழ்வை, அவரது தோல்வியின் காரணத்தை, தற்போதைய நிலையை அறிவதற்கான தேடல் ஒரு துப்பறியும் கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் நாவலுக்கு அளித்து அதன் அலைவுறும் கதையாடலுக்கு ஒரு ஒருங்கிணைவை அளிக்கிறது. ஆனால் உணர்ச்சிகரமான நிலையில் மையப்பாத்திரம் நம்மை பாதிப்பதில்லை. சு.ராவின் ஜெ.ஜெயை போல், எஸ்.ராவின் சம்பத்தை போல் பாத்திரத்தின் பரிச்சயக்காரர்களின் நினைவில் இருந்து சிறுக சிறுக முழுமையற்று உருப்பெறும் பிரதீப் நமக்கு கவித்துவ எழுச்சியோ இரக்கம் மற்றும் வாழ்வின் புதிர்மை பற்றின வியப்பையோ ஏற்படுத்துவதில்லை. இதை ஒரு பலவீனமாக குறிப்பிடலாம்.

தல்ஸ்தாயின் “போரும் வாழ்வில் வரும் நூற்றுக்கணக்கானோர் ஒருசேர உணவருந்தும் விரிவான இரவுணவு விவரணைகள், கெரவக்கின் “On the Road இல் வரும் கார் பயணங்கள் மற்றும் தொடர்ந்த மதுவருந்தலும் போதை மருந்து பயன்படுத்தலும், ஹருகி முராகாமியின் நாவல்களில் வரும் செவ்விசை முதல் பாப் வரையிலான இசை விவாதங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒரு புலன் நுகர்வு உவப்பை தருவன. நாவலின் முக்கிய வசீகரம் சொற்கள் வழி புசிக்கவும் கேட்கவும் தீண்டவும் எண்ணற்ற வாய்ப்புகளை, அளப்பரிய இன்பத்தை அது தருகிறது என்பது. காமம், வேட்டை, காளைச்சண்டை நாவல்களையும் இப்பிரிவில் சேர்க்கலாம். இளையராஜாவின் சிறந்த பாடல்களை குறிப்பிட்டு மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை கூட உங்கள் நினைவுகளை தீண்டி பெரும் இசையின்பத்தை அளிக்க முடியும். அதனாலேயே அக்கட்டுரையை நாம் சிலாகிப்போம். கிரிக்கெட் எழுத்தின் மையமும் இதுதான். கிரிக்கெட்டை பார்ப்பதை போன்றே அது குறித்து பெரும் வேட்கையுடன் வாசிப்பவர்கள், கேட்பவர்கள், பேசுபவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் ஆட்டம் நிகழும் போது அதைப் பார்ப்பதை தவிர்த்து அதே வேளையில் தெருவில் நண்பர்களுடன் அதே ஆட்டத்தை தமக்குள் ஆடிப் பார்க்கும் கல்லி கிரிக்கெட்டர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்கள் ஒரு ஆட்டத்தை பார்க்காமலே ஆடுவதன் வழி தமது உடலைக் கொண்டு நிகழ்த்தி ரசிக்கிறார்கள். Chinaman நாவலில் இத்தகைய சுவாரசியமான தருணங்கள் பல உள்ளன. இந்நாவலின் கதையை, அதன் அனுபவத்தை, பிரச்சனைகளை மறந்து ஒரு கிரிக்கெட் ரசிகன் இதிலுள்ள சில நூறு பக்கங்களின் கிரிக்கெட் பற்றின சிலாகிப்புகளை, அரட்டைகளை, வருத்தங்களை, ஏக்கங்களை ஆவேசமாக வாசித்துக் கொண்டே போகலாம். Chinaman அப்படி ஒரு தனித்துவ கிரிக்கெட் அனுபவமாக மாறுகிறது. கருணதிலகாவின் முக்கிய வெற்றி இது.
Read More

Tuesday 15 May 2012

ஒரு குப்பைத் தொட்டிக்குள்





ஒரு காலையை
சகஎழுத்தாளனை தூஷித்துக் கொண்டு
துவங்குகிறேன்
என் நாய்க் குட்டி
தன் பீப்பீ பொம்மையை
தொடர்ந்து கடித்து கதற வைக்கிறது

பகல் முழுக்க
வேலை செய்து கொண்டே
இருக்கிறேன்
நாய்க் குட்டி நன்றாக
தூங்கிப் போகிறது
பலமுறை
சிறுசிறு சத்தங்கள் அசைவுகள் வாசனைகளுக்கு
உடனடி விழித்து
சுற்றிப் பார்க்கிறது
கதவருகே ஓடிக் குலைக்கிறது
பதிலில்லாவிட்டால்
தனக்கு எட்டாத
ஒவ்வொரு ஜன்னல் பக்கமாய்
நின்று வினவுகிறது
பின் ஏதும் நடக்காதது போல்
தூங்கப் போகிறது
சிறுபெருமூச்சுடன்

மாலை வந்ததும்
எதற்கு வேலை செய்கிறோம்
என்று குழம்பி
எரிச்சலடைந்து
எழுகிறேன்
நாய்க்குட்டி சிறு கொட்டாவி விட்டு
அடுத்து என்னை கவனித்தபடி
பெரிய கொட்டாவியை விடுகிறது
ஓடுகிறது
வாலாட்டி உணவு கேட்கிறது
மூத்திரம் போக இடம் பார்க்கிறது

மொட்டைமாடிக்கு போகிறோம்
சுற்றிலுள்ள அடுக்குமாடி மொட்டைமாடிகளில்
சுற்றுச் சுவரில் பிடித்தபடி நின்று
ரயிலில் இருந்து பார்ப்பது போல்
வேடிக்கைப் பார்க்கும் பலரில்
யாரோ ஒருவர்
கீழே குதிக்கப் போகிறார்
என சட்டென்று நினைத்துப் பார்க்கிறேன்
மொட்டைமாடியில் நடைபயிற்சி
தியானம்
யோகா
தண்டால் எடுப்பது
புத்தகம் படிப்பது
தொலைதூரத்தில் யாருடனாவது சைகையில் பேசிப் பார்ப்பது
எங்கோ மங்கலாய் புலப்படும் ஒருவர்
நேரில் காண எப்படியிருப்பார்
என கற்பனை பண்ணுவது
என எல்லாமே
அதற்கான முன் தயாரிப்பு தான்
என்று நினைக்கிறேன்

நாய்க்குட்டி ஒரு தவளையை
துரத்திக் கொண்டு ஓடுகிறது
தவளை இடுக்குகளில் ஒட்டிக் கொண்டு
சற்று நேரம் ஆசுவசிக்க
நாய்க்குட்டி அதனை சுரண்டி
வீழ்த்துகிறது
இறுதியில் என் கால்களுக்குப் பின்னால்
ஒளிகிறது
நாய்க்குட்டி பரவசமாகி
மாடியை சுற்றி சிலமுறை
ஓடி வருகிறது

வெப்பக்காற்று வீசுகிறது
தூசுப்படலம் ஒரு சல்லாத்துணி போல் எழ
சருகுகள் சுழல்கின்றன
சலிப்பாகி
கால்களைத் தூக்கி
தவளையை விடுவிக்கிறேன்
நாய்க்குட்டி அதனை
முகர்கிறது
நக்கி சுவைக்கிறது
சில நொடிகள் வியந்து விட்டு
வாயில்
மிருதுவாய்
கவ்விக் கொள்கிறது

நான் அதன் பின்னே செல்கிறேன்
என்னிடம் தருகிறது
உருவழிந்த ரப்பர் பொம்மை போல்
தானற்று தெரிகிறது
கீழே வைத்து பார்க்கிறேன்
நிமிண்டுகிறேன்
சின்ன குச்சியால் தட்டுகிறேன்
ஒரு காகிதத்தில்
சுற்றி குப்பைத்தொட்டியில் இடுகிறேன்
திரும்பப் போகையில்
சலசலப்பு கேட்கிறது
மீண்டும் போய்ப் பார்க்கிறேன்
குப்பைத் தொட்டிக்குள்
பல பொருட்கள் அசைகின்றன.
Read More

இந்தியாவில் தத்தெடுப்பு: சாதியமும் சந்தைமனநிலையும்




முறைகேடுகளின் கதை

உலகிலேயே அதிகபட்சம் குழந்தைகளை வெளிநாடுகளில் இருந்து தத்தெடுக்கும் நாடு அமெரிக்கா. அவர்கள் குழந்தைகளுக்காக அதிகம் நாடுவது சீனாவை. அதற்கடுத்து அதிகபட்சமான குழந்தைகள் சுரங்கமாக விளங்கும் மூன்றாம் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1980களில் ஒரு குழந்தை வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் வழியில் இறந்து போக இந்தியா ஒரு குழந்தைகள் ஏற்றுமதி சந்தையாக மாறி வருவது பற்றின ஒரு பெரும் சர்ச்சை எழுந்தது. வழக்கம் போல் இந்திய நீதி அமைப்பு மட்டும் தார்மீக உணர்வுடன் இந்த போக்கை கண்டித்தது. ஒரு லட்சத்துக்கு ஒரு குழந்தை என பேரம் நடப்பதாக ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி குற்றம் சாட்டினார். விளைவாக 1984இல் அரசாங்கம் தனது மேற்பார்வையின் கீழ் ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பை நிறுவியது. இது தான் Central Adoption Resource Agency (CARC). இந்திய குழந்தைகளின் தத்தெடுப்பில் உள்ள முறைகேடுகளை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் CARCக்கு முக்கிய பங்குள்ளது. அதே வேளை இது அரசாங்க கோப்புகளின் நகர்வில் உள்ள சிடுக்குகள் மற்றும் மந்தவேகம் காரணமாக உள்ளூரில் தத்தெடுக்க முயல்வோரை அதைரியப்படுத்தி சோர்வூட்டுவதாகவும் உள்ளது. இந்தியாவில் தத்தெடுப்பதன் பின்னுள்ள பிரச்சனைகள் கலாச்சாரம், ஜாதி, படிநிலை, பொருளாதாரம் மற்றும் ஊழல் சம்மந்தப்பட்டவை.

இந்தியாவில் உள்ள தத்தெடுக்கும் தகுதியில் உள்ள குழந்தைகளை பிறப்பில் அனாதையானவர்கள், மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் என பிரிக்கலாம். பிறப்பில் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஒரு சிறு பகுதியினர் மட்டுமே. அநேகமாக கைவிடப்பட்டவர்களே அதிகம் தத்தெடுப்புக்கு உள்ளாகிறார்கள். அதாவது தாய்மார்கள் ஏழ்மை மற்றும் சமூக அவமானம் காரணமாக குழந்தைகளை அநாதை இல்லங்கள் உள்ளிட்ட தத்தெடுப்பு முகமைகள் நடத்தும் நிறுவனங்களில் விட்டுச் செல்கிறார்கள். பிறந்த இளம் மதலைகள் மட்டுமல்ல ஒரு வயது கடந்த குழந்தைகளை கூட வறிய குடும்பச் சூழல் காரணமாய் விட்டு விடக் கூடும். இவர்களுக்கு தம் சூழல் மேம்பட்டதும் குழந்தையை மீட்கும் உத்தேசம் இருக்கக் கூடும். ஆனால் முகவர்கள் காலி பத்திரங்களில் கையெழுத்து வாங்கி ஒரேயடியாக குழந்தையின் உரிமையை விட்டுக் கொடுக்கும் படி செய்கின்றனர். மேலும் தாய்மார்கள் சென்று சில மாதங்கள் கடந்ததும் குழந்தையின் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு குழந்தை பற்றின் விபரங்களை தெரிவித்து தாய்-சேய் உறவை புதுப்பிக்க இந்நிறுவனங்கள் முயல்வதில்லை. விட்டுப் போகும் அம்மாக்களின் சொந்தபந்தங்களின் பராமரிப்பில் குழந்தையை விடவும் முயல்வதில்லை. பல முகவர்கள் ஏழ்மை மிகுந்த பகுதிகளில் மையங்கள் நடத்தி குழந்தைகளை விட்டுக் கொடுக்கும் குடும்பங்களுக்கு ஊக்குவிப்பு தொகை அளிக்கிறார்கள். 99இல் ஆந்திராவின் லம்பாடி பழங்குடியினரிடம் இப்படி ஒரு பேரம் ஏற்பாடானது. ஆண் என்றால் பெற்றோர்களுக்கு, பெண் குழந்தை என்றால் ரூபாய் 2000க்கு முகவர்களிடம் கொடுத்து விட வேண்டும். இவ்வாறு தான் இந்தியாவின் ஒரு பாதி அநாதைக்குழந்தைகள் உருவாக்கப்படுகின்றன.

ஒரு பெற்றோரிடம் தில்லியில் உள்ள முகவம் ஒன்று மிக பலவீனமான குழந்தை ஒன்றை காட்டியது. எதிர்பார்ப்புக்கு மாறாக பெற்றோர்கள் அக்குழந்தையை தேர்ந்தனர். இது முகவர்களை மிகவும் எரிச்சலடைய வைத்ததாக பெற்றோர்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே இருமுறை நிராகரிக்கப்பட்ட குழந்தை அது. மூன்றாம் முறை நிராகரிக்கப்பட்டிருந்தால் சுலபமாக வெளிநாடு அனுப்பியிருப்பார்கள். மேலும் முகவர்கள் பொதுவாக கீழ்மத்திய வர்க்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் தத்து தர மறுக்கிறார்கள். படித்த பணக்கார பெற்றோர்களால் தான் ஒழுங்காக குழந்தைகளை வளர்க்க முடியும் என்றொரு அசட்டு நம்பிக்கை அவர்களிடம் உள்ளது. குழந்தை வளர்ப்புக்கு அவசியம் பணமும் கல்வியையும் விட அன்பும் அரவணைப்பும் மிக்க ஒரு குடும்பமே. பல குழந்தைகள் நீண்ட காலமாக அநாதை இல்லங்களிலேயே தங்கி விடுவதற்கு முகவர்கள் உருவாக்கும் இப்படியான இடர்களே முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. மேலும். அடுத்து அரசு தொட்டில் குழந்தைகள், ஆஸ்பத்திரியிலும் தெருவிலும் துறக்கப்பட்ட குழந்தைகள், அலைந்து திரியும் குழந்தைகள் என மற்றொரு பகுதி குழந்தைகள் அரசின் கட்டுப்பாட்டில் வந்ததும் முகமைகளுக்கு அனுப்பப்பட்டு தத்துக்குள்ளாகின்றன. ஆனால் தெருவில் இருந்து ஒரு புது வீட்டை நோக்கிய ஒரு குழந்தையின் பயணம் அவ்வளவு பத்திரமாக விரைவாக எளிதாக நிகழ்வதில்லை.
முதலில் சில மாதங்களே வயதான நிலையில் தத்து நிறுவனங்களுக்கு வரும் குழந்தைகள் போதுமான சத்துணவும் மருத்துவ கவனமும் இன்றி பலவீனமாகி விடுகின்றன. இவ்விசயத்தில் அநாதை நிறுவனங்கள் புளூகிராஸை ஒத்துள்ளன. தத்தெடுப்பவர்கள் அரோக்கியமற்ற குழந்தைகளை நிராகரித்து விடுகிறார்கள். தத்தெடுத்து சென்ற பின் சிலர் குழந்தைகளின் நலக்குறைபாடுகளை அறிந்து திரும்ப கொண்டு வந்து விடுகின்றனர். எப்படியும் அநேகம் தத்தெடுக்கும் குழந்தைகள் முதல் சில மாதங்கள் ஏனும் மிக கவனமாக கவனிக்கப்பட்டாலே தேறுகின்றனர். குழந்தைகள் ஏன் இவ்வாறு பலவீனமாக உள்ளன? தாயின் கவனிப்பை பெறாத மதலைகளுக்கு வெறும் புட்டிப்பாலும் மருந்தும் மட்டும் போதாது. அவற்றை தொட்டு அரவணைத்து அன்பு காட்டும் போது தான் அவற்றுக்கு பதற்றம் தணிந்து பசி பிறக்கிறது. வெறுமனே ஊட்டப்படும் போது குழந்தைகளுக்கு பசியும் இருப்பதில்லை; பற்றாக்குறை காரணமாக அரோக்கிய கேடும் ஏற்படுகிறது. இவ்வாறு தனி அக்கறை காட்டுவதற்கு போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் பெரும்பாலான அநாதை இல்லங்களில் இருப்பதில்லை. மேலும் இந்நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எளிதாக நோய்த்தொற்றுவதும் ஒரு முக்கிய சிக்கல். ஆனால் தத்தெடுக்கும் பெற்றோர்கள் பல சமயங்களில் அரோக்கியமற்ற குழந்தைகளின் மீது மிகுந்த பாசம் கொண்டு பெரும் பிரயத்தனமும் பொருட்செலவும் செய்து அக்குழந்தைகளை காப்பாற்றுகின்றனர். இதற்கான உதாரணங்கள் நமது நட்பு வட்டங்களிலேயே நாம் காண முடியும். வினிதா பார்கவா தனது Adoption in India நூலில் தான் நேரடியாக சந்தித்த சில பெற்றோர்களை குறிப்பிடுகிறார். ஒரு தாய் சொல்கிறார்: “என் குழந்தை பிழைப்பதற்கு டாக்டர் ஒரு வாரம் தான் கெடு விதித்தார். நான் அதன் அருகிலேயே கண்கொட்டாமல் பழியாய் கிடந்தேன் எப்படியோ உயிரைக் கொடுத்து காப்பாற்றி விட்டோம். மற்றொரு தத்தெடுத்த பெற்றோருக்கு தம் குழந்தைக்கு ரத்தப்புற்று நோயுள்ள விபரம் கொஞ்ச நாளில் தெரிய வருகிறது. குழந்தையை அநாதை நிறுவனத்துக்கு திருப்பும் படி அறிவுரைக்கிறார் மருத்துவர் (மருத்துவர்கள் பரிந்துரையின் படி இந்தியாவில் ஒரு குழந்தை கூட தத்தெடுக்கப்படுவதில்லை என்கிறார் வினிதா பார்கவா. பல ஜோடிகள் லட்சக்கணக்கான பணமும் 10-15 வருடங்களும் செலவழித்து கருத்தரிப்பு முயற்சி செய்து துவண்டு போகும் போதும் மருத்துவர்கள் இவர்களை தத்தெடுப்பை பற்றி சிந்திக்க விடுவதே இல்லை). ஆனால் இக்குழந்தையின் வளர்ப்பு அம்மா விடாப்பிடியாக போராடி வருகிறார். அக்குழந்தைக்கு இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ரத்தமாற்று சிகிச்சை செய்ய வேண்டும். ரத்தப்புற்று நோய்க்கு தீர்வான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்வதில் ஒரு பிரச்சனை உள்ளது. ரத்த உறவினரின் மஜ்ஜையை தான் பயன்படுத்த முடியும். ஆனால் அக்குழந்தையின் பெற்றோர் பற்றின எந்த தகவலும் கிடையாது.. இது நமது தத்து நிலைப்பாட்டினோடு ஆழமாக பிணைந்த ஒரு சிக்கல் - உயிரியல் பெற்றோர்கள் பற்றி தகவல்களை தத்து நிறுவனங்கள் ஆவணப்படுத்துவதில்லை. இருந்தாலும் படுரகசியமாக வைக்கப்படுகிறது. ஒரு தத்துக்குழந்தைக்கு வரக்கூடிய மரபியல் நோய்களாகிய மாரடைப்பு, நீரிழிவு, மனநோய் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு இந்த ஆவணப்படுத்தாமை மிகப் பெரும் ஆபத்துகளை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. உதாரணமாக உயிரியல் பெற்றோர்களில் இருவருக்கும் ரத்தசர்க்கரை இருந்ததென்றால் ஒரு குழந்தை இளமையில் இருந்தே முன்னெச்சரிக்கையுடன் வாழ்ந்து தன்னை பாதுகாக்க முடியும். அந்த வாய்ப்பு இங்கு மறுக்கப்படுகிறது. இது போன்ற மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்திய தத்தெடுக்கும் பெற்றோர்களின் மரபான நம்பிக்கைகளும் நமது சாதியமும் இறுக்கமான சமூக படிநிலையும் ஒரு முக்கிய காரணம்.

சாதியமும் படிநிலையும்

இந்திய தத்தெடுப்பு பெற்றோர்களை மரபானவர்கள், நவீனமானவர்கள் என பிரிக்கலாம். பொதுவாக சம்பிரதாய திருமணங்கள் செய்து கொண்டவர்கள் குழந்தைப்பேறு இல்லாத போதும் மிக தயங்கி காலம் தாழ்த்தி தான் தத்தெடுக்க முன்வருகிறார்கள்.. பல ஜோடிகளுக்கும் கணவன் வீட்டார், குறிப்பாக மாமியார்கள், இதற்கு தடையாக இருக்கிறார்கள் வினிதா பார்கவாவின் ஆய்வின் போது சந்தித்த ஐம்பது தத்தெடுத்த ஜோடிகளில் ஒரு பெண் தனது தத்துக்குழந்தையை தன் வீட்டில் கூடவே வசிக்கும் மாமனார் ஒரு வருடம் வர தீண்டவே மறுத்து விட்டார் என குறிப்பிடுகிறார். பல மரபான ஜோடிகள் மாமியார் மரணத்துக்கு அல்லது ஊரை விட்ட போன பின் தான் தத்தெடுப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். அதற்குள் குழந்தையில்லாமல் பத்து வருடங்களை வீணடித்து விடுகிறார்கள். இந்த மரபான பெற்றோர்களில் கணிசமானவர்கள் ஒரு குழந்தைக்கு மேல் தத்தெடுப்பதில்லை. ஏற்கனவே குழந்தை இருந்தும் தத்தெடுப்பவர்கள் இவ்வகையினரில் அநேகமாக இல்லவே எனலாம். மாறாக காதல் திருமணம் செய்பவர்கள் தத்தெடுப்பதற்கு எளிதில் முன்வருகிறார்கள். இவர்கள் தமது உறவினர்களின் சம்மதத்துக்காக காத்திருப்பதும் இல்லை. இவர்கள் தாம் இரண்டு குழந்தைகளை தத்தெடுக்கவும் குறிப்பாக பெண் குழந்தைகளை தத்தெடுக்கவும் ஆர்வம் காட்டுகிறார்கள். பலர் சின்ன வயதிலேயே இவ்வாறு தத்தெடுக்கும் முடிவை சமூக பொறுப்புணர்வு மற்றும் கருணை காரணமாக எடுத்தவர்கள். சம்பிரதாய திருமண ஜோடிகள் “வாரிசுக்காக ஆண் குழந்தைகளை தான் விரும்புகிறார்கள்.

இந்த முதல்கட்ட தடையை கடந்ததும் அடுத்து நம் இந்திய பெற்றோர்கள் குழந்தை முடிந்தளவுக்கு தோற்றத்தில் தம்மை ஒத்து இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். பொதுவான விதிப்படி தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு குழந்தைகளைப் பொறுத்த மட்டில் விருப்பத்தேர்வே கூடாது. முகவர் காட்டும் குழந்தையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் நடைமுறையில் பல பெற்றோர்கள் குழந்தைகள் பார்க்க தம்மை ஒத்திருக்க வேண்டும் என வற்புறுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை பார்க்க முயல்கிறார்கள். இதன் பின்னால் இந்தியர்களின் சாதிய மனநிலை தெளிவாக வேலை செய்கிறது. கறுப்பான சப்பை மூக்குள்ள அசிங்கமான குழந்தைகளை விட சிவப்பான லட்சணமான குழந்தைகளை நாடும் பெற்றோரின் அக்கறைகள் முழுக்க அழகியல்பூர்வமானவை அல்ல. மேலும் இந்தியர்கள் ஒருவரின் இயல்பான பண்பும் ஆளுமையும் திறமையும் மரபியல்ரீதியாக கடந்து வருகின்றவை என ஆழமாக நம்புகிறவர்கள். தத்தெடுப்பவர்கள் தமது குழந்தைகள் குற்றப்பிண்ணனி கொண்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின், விளிம்புநிலை மக்களின் குழந்தைகளாக இருக்கக் கூடாது என உள்ளார்ந்து விரும்புகிறார்கள். வளர்ப்பு ஒருவரின் ஆளுமையை தீர்மானிக்காது, திருடனின் குழந்தை திருடனாகவே ஆகும் என்பதும் ஒரு வழமையான இந்திய முன்னெண்ணம் தான்.. வினிதா தில்லியில் பார்த்த தத்தெடுத்த தமிழ் பிராமண குடும்பங்கள் குழந்தையை ஒரு தூரத்து சொந்தக்காரர்களிடம் இருந்து பெற்றதாகவே பிறரிடம் சொல்லி வைத்திருக்கிறார்கள். உத்தர்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பனியா குடும்பமும் இதே போல் தமது தத்து புத்திரனை பனியாவாக்கி விட்டது. அநேகமானவர்கள் குழந்தை பிறந்த நேரத்தை வைத்து சோதிடம் பார்த்த பின் தான் முடிவெடுக்கிறார்கள். இந்த சாதியம் மற்றும் பிற்போக்கு மனநிலை காரணமாக தான் எராளமான குழந்தைகள் ஒரேயடியாய் தத்துநிறுவனங்களிலேயே பத்துவருடங்கள் வரை தங்கிப் போகிறார்கள். இந்த காரணங்களினாலேயே பொதுவாக குழந்தைகளின் உண்மைப் பெற்றோரின் பெயர் பின்னணி விபரங்களை முகமைகள் மறைத்து விடுகின்றன. அத்தோடு தத்தெடுத்த பெற்றோர் தமது குழந்தைகள் திரும்ப உயிரியல் பெற்றோரை நாடிச் சென்று விடுமோ என்று அஞ்சுவதும் ஒரு காரணம். பிறந்து சில மாதங்களான குழந்தைகளை தத்தெடுக்க பெற்றோர்கள் விரும்புவதன் ஒரு காரணம் அவர்களும் தம் உயிரியல் குடும்ப நினைவுகள் இருக்காது என்பது. சற்று வளர்ந்த குழந்தை என்றால் முழுக்க தனது கடந்தகால நினைவுள் அற்றதாக இருப்பதே உசிதம் என கருதுகிறார்கள். பொதுவாக இந்தியாவில் தத்தெடுப்பது குழந்தைகள் ஒரு புது குடும்பத்தை கண்டடைவதற்காக அல்ல, மாறாக பெற்றோர்கள் ஒரு குழந்தையை அடைவதற்காக தான் என கருதப்படுகிறது. தத்தெடுப்பதில் ஒரு சந்தைமனநிலை நிலவுவதும் இதனால் தான்.

குழந்தை ஏற்றுமதியும் சட்டமும்

அடுத்து முகவர்களின் பணத்தாசை. முன்னர் அநேகம் குழந்தைகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. முகவர்களுக்கு நன்கொடை என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணமும் இலவச வெளிநாட்டு பயணங்களும் சாத்தியமாகின. பின்னர் அரசாங்கம் கட்டாயமாக 50 சதவீதம் தத்துகளை உள்நாட்டிலேயே வழங்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்த பின் இந்தியாவுக்குள் தத்தெடுக்கப்படுவது பல மடங்கு அதிகமாகியது. 1988இல் 398 குழந்தைகள் இந்தியாவுக்குள் தத்தெடுக்கப்பட்டதென்றால் இந்த எண்ணிக்கை 2003இல் 1949 ஆக வளர்ந்தது. முன்னர் தத்துக்குழந்தைகளில் நான்கில் ஒரு பகுதியினர் தான் உள்நாட்டில் தத்தளிக்கப்பட்டனர். ஆனால் தற்போது வெளிநாடுகளில் தத்து அளிக்கப்படுவதை விட உள்நாட்டில் இரட்டிப்பாக குழந்தைகள் பெற்றோர்களை கண்டடைகின்றனர். ஆனால் ஆய்வாளர்கள் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க முடியும் என நம்புகிறார்கள். 70% வரை உள்நாட்டிலேயே தத்தளிக்க முடியும். ஆனால் வற்புறுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை. ஏனெனில் இந்தியாவில் கைவிடப்பட்ட குழந்தைகளின் பராமரிப்பு இந்த தனியார் முகவர் நிறுவனங்களில் கையில் தான் பெருமளவு உள்ளது. இந்நிறுவனங்களின் பொருளாதார ஆதாரம் வெளிநாட்டு தத்தளிப்பை நம்பியுள்ளது. ஆக ஓரளவுக்கு மேல் விதிமுறைகளை இறுக்கவும் அரசாங்கம் விரும்பவில்லை.

மேலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்தில் தத்தெடுப்பதிலும் பல சட்ட சிக்கல்கள் உள்ளன. தமிழர் ஒருவர் வங்காளத்தில் சென்று தத்தெடுக்க வேண்டும் என்றால் அங்குள்ள நீதிமன்றத்தில் விண்ணப்பித்து காகித வேலை முடியும் வரை அங்கேயே தங்கி இருக்க வேண்டும். விளைவாக மகாரஷ்டிராவில் தத்தெடுக்க ஆளில்லாமல் எண்ணற்ற குழந்தைகளும், ஆந்திரா மற்றும் தில்லியில் குழந்தைக்காக விண்ணப்பித்து நீண்ட வருடங்கள் காத்திருக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான துண்டுபட்ட மாகாணங்களை மிரட்டியும் படையெடுத்தும் ஒட்டி உருவாக்கப்பட்ட இந்தியா உண்மையில் ஒரு ஒருமித்த தேசம் தானா என நாம் ஐயப்படும் பல்வேறு சந்தர்பங்களில் இதுவும் உண்டு.

2001 முதல் 2004 வரையிலான கணக்கெடுப்பு படி 7630 குழந்தைகள் உள்ளூரிலும் 4409 குழந்தைகள் வெளிநாடுகளிலும் தத்தளிக்கப்பட்டுள்ளார்கள். நமது கலாச்சார சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டால் இந்த விகிதம் 10,000:2039 என்று மாறக் கூடும்.

குழந்தைக்காக தத்தெடுக்க விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு பட்டியலில் வருடக்கணக்கில் இருக்கிறார்கள். குறிப்பாக ஆரோக்கியமான ஆண் குழந்தைகளை நாடுபவர்கள். தாமதத்திற்கு முதல் காரணம் பெற்றோர் விபரங்கள் இல்லாத ஒரு குழந்தையை கூட பராமரிப்பு மையத்தில் சில மாதங்கள் காத்திருந்த பின்னரே தத்தெடுக்க முடியும் என்ற விதி. அரசு இயந்திரம் தனது வழக்கமான மந்தகதியில் செயல்பட்டு குழந்தையின் உயிரியல் பெற்றோர் வரமாட்டார்கள் என ஒரு முடிவுக்கு வரவே கொஞ்ச காலம் பிடிக்கும். மூன்று முறை ஒரு குழந்தையை இந்திய தத்துப்பெற்றோர் நிராகரித்தால் வெளிநாட்டுக்கு அனுப்பலாம் என்ற விதி இருப்பதால் முகவர்கள் முடிந்தவரை குழந்தை நாடுபவரின் மனம் மாற்ற முயல்வார்கள். தில்லியில் உள்ள முகவர் நிறுவனம் ஒன்றும் நாடி வரும் பெற்றோர்களிடம் வழமையாக் இரு எதிர்மறைக் கதைகள் சொல்லும் என்கிறார் வினிதா பார்கவா. ஒன்று ஒரு பெற்றோரின் தத்துக்குழந்தை பதினாறு வயதானதும் தனது வளர்ப்பு குடும்பம் பிடிக்காமல் உயிரியல் பெற்றோரைத் தேடித்தருவதான உறுதியளித்த காதலனுடன் வெளியேறிய கதை. ஒரு ஜோடி தாம் தத்தெடுத்த குழந்தை குடும்பத்துடன் சரி வர பழக மறுத்து பிரச்சனை ஏற்படுத்தியதால் சில மாதங்களில் தத்து நிறுவனத்துக்கே திருப்பி அளித்து விட்ட நிகழ்வு. இந்த கதைகளை கேட்ட பல ஜோடிகள் தமக்கும் இது போன்ற எதிர்விளைவுகள் நேருமோ என மனம் மாறி திரும்பி விட்டனர்.

இவ்வளவு அதையரிப்படுத்தல்களுக்கு பிறகும் சில பெற்றோர்கள் குழந்தைகளை, அரோக்கியமற்று அழகற்று இருந்தாலும், பார்த்த மட்டும் பிடித்துப் போய் தத்தெடுத்து விடுவதுண்டு. குழந்தை வளர்ப்பு என்பது மனித இயல்பின் ஒரு வலுவான அம்சம். குழந்தைப்பாசம் வம்ச விருத்தியுடன் நேரடியாக தொடர்பானது அல்ல. ஒரு குழந்தை நம் மரபணு பிரதி மட்டும் அல்ல. குழந்தைகள் நமது சிறுமையை கடந்து மனவிரிவடைய, வாழ்வின் மீது பிடிப்பு வர, தனிமையை மறக்க, அர்த்தம் பெற உதவுகின்றன.. குழந்தைகள் நாம் இதுவரை புரிந்து கொண்டதிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக புத்தொளி கொண்டதாக இவ்வுலகை நமக்கு காட்டித் தருகின்றன. இதற்கான ஓராயிரம் சான்றுகளை தத்தெடுக்கும் பெற்றோர்களின் வாழ்வு நமக்கு அளிக்கின்றன.

தத்து வரலாறும் மூன்றாம் உலக சந்தையும்

தத்தெடுத்தலின் வரலாறு மிகப்பழமையானது. எகிப்து, கிரேக்கம், ரோம், பெபிலோனியா என பல நாடுகளில் தத்தெடுக்கும் வழமை இருந்ததற்கு ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் தாம் உண்மைக்குழந்தைகள் அல்ல என்ற உண்மையை வெளியே சொல்ல தடை இருந்தது. 4000 வருடங்களுக்கு முன் இவ்விதியை மீறினவர்களின் நாவுகள் வெட்டப்பட்டன. உயிரியல் பெற்றோரை தேடிச் சென்ற குழந்தைகள் குருடாக்கப்பட்டனர். சீனாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இரு வேறு காரணங்களுக்காக தத்தெடுக்கப்பட்டன. ஆண் வாரிசுக்காக; வாரிசுள்ள பட்சத்தில் பெண் எதிர்கால மருமகளாக ஆவதற்காக. இந்த தத்துப்பெண்கள் விசுவாசமான, குடும்பப் பிணைப்புள்ள மருமகள் ஆவது மட்டுமல்ல மணமகள் தட்சணையும் லாபமாகுமே என சீனர்கள் கணக்குப்போட்டனர். இந்தியாவில் தத்தெடுப்பு நிறுவனப்படுத்தப்படுவதற்கு முன் குடும்பத்துக்குள், சொந்தத்துக்குள் தத்தெடுக்கும் வழமை நீண்ட காலமாக இருந்தது. கண்ணதாசனின் “வனவாசத்தில்“ அவர் வளர்ந்து சினிமாவில் முதல் பாடல் எழுதிய நிலையிலும் ஊதாரித்தனமாக வாழ்கிறார் என்று கருதியும் பொதுவான வறுமை காரணமாகவும் அவரது பெற்றோர்கள் ஒரு குழந்தையற்ற பணக்கார குடும்பத்தில் அவரை தத்துக் கொடுத்தது பற்றின செய்தி வருகிறது. தத்துக் கொடுத்த பின் அவர் தனது தாய் தந்தையருடன் எந்த உறவும் பேணக் கூடாது என்ற கண்டிப்பான நடைமுறை அப்பொது இருந்திருக்கிறது. இந்த பிரிவை பற்றின ஒரு உருக்கமான விவரணையை கண்ணதாசன் எழுதியுள்ளார். நாட்டுக்கோட்டை செட்டிமார் சமூகத்தில் அக்காலத்தில் இவ்வாறு வளர்ந்த மகன்களை தத்துக் கொடுக்கும் வழமை இருந்திருக்கிறது எனவும் கூறுகிறார். அப்போது தத்தளிப்பது ஒரு சமூக செயல்பாடாக அல்லாமல் பரிச்சயமானோர் இடையேயான காதும் காதும் வைத்தபடியான ஒரு ஏற்பாடாக இருந்திருக்கிறது. குடும்பமும் நீடித்த சொந்தங்களும் தத்தெடுப்பின் முறைமைகளை தீர்மானித்தனர். பின்னர் நவீன காலத்தில் இந்த தத்து நிலைப்பாட்டில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்கிறது. அது அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

அமெரிக்காவில் 1920கள் வரை தத்தெடுப்பது அங்கீகரிக்கப்பட்ட செயலாக இருக்கவில்லை. முதல் உலகப் போரும் அதைத் தொடர்ந்து வந்த பரவலான இன்பிளுவன்சா சளிக்காய்ச்சலும் லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கின. குழந்தைப்பிறப்பு குறைந்தது. அப்போது தான் முதன்முறையாக தரகர்கள் மூலம் குழந்தைகளை ‘தத்தெடுக்க மக்கள் முயன்றனர். இது ஒரு கள்ளச்சந்தையாக உருவெடுக்க அரசாங்கம் தலையிட்டு தத்தெடுப்பை சட்டரீயாக ஆக்கி ஒழுங்குப்படுத்தியது. இரண்டாம் உலகப் போரின் போது பேரளவிலான உயிரிழப்பையும் கடும் பொருளாதார சரிவையும் சந்தித்த ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான், சீனாவில் இருந்து அனாதைக் குழந்தைகள் வெளிநாடுகளுக்கு குழந்தையற்ற குடும்பங்களை நோக்கி ஏற்றுமதி செய்யப்பட்டன. வியட்நாம் மற்றும் கொரிய போர்கள் இந்நாடுகளையும் உலகுக்கு தத்துச் சந்தைகளாக மாற்றின. வறிய நாடுகளில் இருந்து குழந்தைகளை நாடுவது வளர்ந்து நாடுகளின் பிரஜைகளுக்கு ஒரு புண்ணிய செயலாகவும் இருந்து வருகிறது. உதாரணமாக 1991இல் ரொமானியாவில் இருந்து 5000 குழந்தைகள் வெளிநாடுகளில் தத்தெடுக்கப்ப்பட்டன. இவர்களில் அநேகமான குழந்தைகள் ஏழைக்குடும்பங்களில் இருந்து வாங்கப்பட்டன.

இன்றும் இந்திய முகவர்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பவதே அவர்களின் நலனுக்கு உகந்தது என தார்மீகமாக நம்புகிறார்கள். வளர்ந்த நாடுகளின் வசதிகளும் முன்னேறிய சூழலும் போக அங்கு அவர்கள் பெற்றோர்களின் சொத்துக்கு வாரிசாவதிலும் இந்தியாவில் போல் சட்டச்சிக்கல்கள் இருப்பதில்லை என அவர்கள் சொல்லுகிறார்கள். இங்குள்ள HAMA சட்டப்படி திருமணத்தில் போலவே தத்தெடுப்பிலும் மத விதிமுறைகள் குறுக்கிடுகின்றன. இதன் படி இந்துக்களின் தத்துப்பிள்ளைக்கு மட்டுமே சொத்துரிமை உண்டு. கிறித்துவர்கள் மற்றும் இஸ்லாமியர் தமது தத்துக்குழந்தைக்கு காப்பாளராக மட்டுமே இருக்க முடியும். சொத்துரிமை கிடையாது. ஒரு இஸ்லாமியர் ஒரு இந்துக் குழந்தையை, அல்லது ஒரு இந்து ஒரு கிறுத்துவக் குழந்தையை தத்தெடுக்க முடியுமா? முடியாது. சமீபத்தில் ஷெயிக் தாவுத் என்பவர் நான்கு வயதான கிரிதரன் என்ற குழந்தையை தத்தெடுத்த போது அதை மதுரை உயர்நீதிமன்றம் செல்லுபடியாகாது என அறிவித்தது. இந்த சிக்கல்களுக்கு காரணம் நமக்கு அனைத்து மதத்தினருக்குமான ஒரு பொது தத்தளிப்பு சட்டம் இல்லை என்பது. அப்படி ஒரு சட்டம் வந்தால் பரவலான மதமாற்றம் நிகழும் என அஞ்சுகிறார்கள். விளைவாக கணிசமான குழந்தைகள் வெளிநாடுகளில் ஒரு ‘தொண்டு மனப்பான்மையுடன் முகவர்களால் அளிக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து குழந்தைகள் தத்தெடுக்கப்படுவது கடந்த நாற்பது வருடங்களில் உலகம் முழுக்க பெருமளவு அதிகரித்துள்ளது. ஒரு புறம் ஆணுறை பயன்பாடு, கருக்கலைப்பு, திருமணமற்ற வாழ்வுக்கான அங்கீகாரம் மற்றும் பொருளாதார தன்னிறைவு போன்ற நவீன வாழ்வின் சுதந்திரங்களும், இன்னொரு புறம் பொருளாதார நெருக்கடிகளும் உடல் மன அழுத்தங்களும் மக்களிடையே குழந்தைப்பேறை குறைத்து மலட்டுத்தன்மையை அதிகரித்தது வளர்ந்த நாடுகளில் உள்ளூரில் தத்தெடுப்பதற்கான குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்தது. விளைவாக மூன்றாம் உலக நாடுகள் குழந்தைச் சந்தையாக்கின.

இன்னொரு விளைவாக மக்களுக்கு தமது சொந்தத்துக்குள் தத்தெடுப்பது விருப்பமற்றதாக மாறியது. தனிமனிதவாதமும், சொந்தத்தில் தத்தெடுத்தால் குழந்தைமீது முழு உரிமை இருக்காது என்ற நியாயமான அச்சமும் இதற்கு காரணங்கள். தத்தெடுப்பு நிறுவனமயமாக்கப்பட்டது மற்றொரு காரணம். இது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு மாநில அளவிலான தத்தெடுப்பு புள்ளிவிபரங்கள் சான்றளிக்கின்றன. தத்தெடுப்பு முகவர் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படும் மேற்கு மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் தத்தெடுக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்த வலைதொடர்பு வலுவாக இல்லாத பீகார், இமாச்சல பிரதேசம், மற்றும் மத்திய பிரதேசத்தை விட பல மடங்கு அதிகம். வடகிழக்கு மாநிலங்களில் தத்தெடுப்பு நிகழ்ந்ததாக எந்த கணக்கும் இல்லை.

சொல்லவா வேண்டாமா?

பிறந்த உடனே தத்தெடுப்பது சட்டவிரோதம் என்பதால் மூன்றில் இருந்து ஆறு மாதங்களுக்குள் எடுக்க முனைகிறார்கள். அப்போது குழந்தைகளுக்கு முந்தின வாழ்க்கை நினைவுகள் இருக்காது என்பது புரிதல். ஆனால் பிராடின்ஸ்கி போன்ற சமீபத்திய ஆய்வாளர்கள் மாறுபடுகிறார்கள். தாமதமாக எடுக்கப்பட்ட குழந்தைகள் தீவிரமான இழப்புணர்வை உடனடியாக உணர்ந்து வெளிப்படையாக உயிரியல் பெற்றோருக்காக ஏங்குகிறார்கள். மிக இளமையில் எடுக்கப்பட்டவர்கள் நுட்பமான வகையில் துவக்கப்பள்ளி செல்லும் வயதில் ஏங்கத் துவங்குகிறார்கள். குழந்தைகளுக்கு இது ஒரு தவிர்க்க முடியாத துக்கம்; பெற்றோருக்கு அவிழ்க்க முடியாத சிடுக்கு. உயிரியல் பெற்றோர் நமக்கு உடலளவில் ஒப்பீட்டுக்கான ஒரு மாதிரி. முன்னோர்களிடம் இருந்து ஒரு தொடர்புச்சங்கிலி. நிறத்தில் இருந்து உடலமைப்பு மற்றும் சில சுபாவங்கள் வரை ஒரு பௌதீக ஆதாரமாக இருக்கிறார்கள். உடல் பருமனாக இருப்பதற்கு, இருபதுகளில் வழுக்கை விழுவதற்கு, உயரம் வராததற்கு, சின்ன சின்ன உபாதைகளுக்கு மற்றொருவரை காரணம் காட்ட முடியாது. பல பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு வரும் படிப்பு மற்றும் ஒழுக்கம் சம்மந்தப்பட்ட இயல்பான பிரச்சனைகளுக்கு மரபணு தான் காரணமோ என நம்பத் துவங்குகிறார்கள். உதாரணமாக குழந்தை திருடுகிறதென்றால் அது ஒரு வாழ்வை பயிலும் முறை என அறியாமல் உயிரியல் பெற்றோர்களின் திருட்டுபுத்தி இக்குழந்தைக்கு வந்து விட்டதோ என்று சஞ்சலமுறுகிறார்கள். வாத்தியார் குழந்தை மட்டுமல்ல தத்துப்பிள்ளையும் மக்காக இருக்கலாம் என அவர்கள் சிந்திப்பதில்லை. தத்தெடுப்பு முகவர்களும் அறிவுரையாளர்களும் குழந்தைகளிடம் உண்மையை விரைவில் வெளிப்படுத்தவே வலியுறுத்துவார்கள். ஆனால் சமூகம் இதுசார்ந்த நுண்ணுணர்வு அற்றது என்பதால் பெற்றோர்களுக்கு ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. முதலில் சில பள்ளிக்கூடங்கள் தத்து சான்றிதழை பிறப்பு சான்றிதழுக்கு பதிலாக வாங்க மறுக்கிறார்கள். அப்படியே வாங்கினாலும் தத்து பற்றின புரிந்துணர்வுடன் செயல்பட மாட்டார்கள் என அஞ்சி பல பெற்றோர்கள் ஒரு போலி பிறப்பு சான்றிதழை அளித்து குழந்தைகளை ‘இயல்பானவர்களக்கி‘ சேர்த்து விடுகிறார்கள்.

குழந்தைகளிடம் ஆரம்பத்தில் இருந்தே உண்மையை சொன்னாலும் பிரச்சனை சொல்லாவிட்டாலும் பிரச்சனை. வினிதா பார்கவா அப்படி சொல்லிவிட்ட ஒரு அம்மாவின் கதையை சொல்கிறார். ஷ்ரேயா என்ற பத்துவயது குழந்தையின் வகுப்பில் ஒரு குழந்தையின் அம்மா இறந்து விட “கவலைப்படாதே என் அம்மாவும் இறந்து விட்டார்கள் என்று ஆறுதல் படுத்துகிறது. ஷ்ரேயா அநியாயமாக பொய் சொல்லுகிறாள் என்ற சேதி வகுப்பு முழுவதும் பரவி பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் செல்கிறது. புகார்கள் குவிய ஆசிரியர் அழைத்து “அம்மா இறந்துட்டாங்கன்னு எல்லாம் சொல்லக் கூடாது“ என்று கண்டிக்கிறார். முதல் ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உயிரியல் குடும்பத்துக்கும் தத்துக்குடும்பத்துக்கும் வேறுபாடு தெரியாது. ஆக அவர்கள் தத்தெடுப்பு விபரங்களையும் ஒரு கதையாக எடுத்துக் கொள்கிறார். மனு என்ற ஒரு குழந்தை ஒவ்வொரு இரவும் அம்மாவிடம் தான் தத்தெடுக்கப்பட்ட கதையை சொல்லக் கேட்டு தான் தூங்கும். அம்மாவும் குழந்தை புரிந்து கொண்டு விட்டது என நிம்மதியடைகிறாள். ஆனால் எட்டு வயதிற்கு அக்குழந்தை திடீரென வந்து “என் நிஜ அம்மா நீ இல்லையா?“ என கண்ணீருடன் கேட்கிறது. அம்மா வாயடைத்து போகிறாள். குழந்தைகள், குறிப்பாய் பெண் குழந்தைகள், அவ்வயதில் இருந்து தான் உடலளவில் தான் வேறுபட்டவள் என்று பௌதிகமாக தன்னை வரையறுக்க துவங்குகின்றன. எட்டு வயதுக்கு மேல் தத்தை பற்றி சொன்னால் சில குழந்தைகள் தாம் அதுவரை ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்கிறார்கள். பெற்றோர்களுக்கும் அவர்களுக்குமான ஒரு சமநிலை குலைந்து போய் விடுகிறது. தத்து நிலையை தனது அம்மாவை மிரட்டுவதற்கான உபாயமாக பயன்படுத்தும் குழந்தைகள் உண்டு. தியாவுக்கு அம்மாவிடம் கோபம் வந்தால் “ஆண்டி என்று கூப்பிட்டு வெறுப்பேற்றுவாள். தீபாவிடம் அவளது அம்மா “நீ அதிர்ஷ்டசாலி, உனக்கு ரெண்டு அம்மா என்று சாமர்த்தியமாக புரிய வைக்கிறார். ஆனால் அதில் ஒரு அம்மா தன்னை ஏன் துறந்தார் என்ற வருத்தம் அவளுக்கு தீருவதே இல்லை. சில பெற்றோர்கள் தத்தெடுப்பை பற்றி பேசுவதை முழுக்க தவிர்க்கிறார்கள். சொந்தபந்தங்கள் தன் குழந்தையிடம் உண்மையை சொல்லி காயப்படுத்தக் கூடும் என்று அவர்களிடம் இருந்து அடைகாக்கிற பெற்றோர்கள் உண்டு. இக்குழந்தைகள் மாமா அத்தை தாத்தா பாட்டிகளின் பிரியத்தை அறியாமல் தனியாக வளர்கிறார்கள். ரசியா என்கிற குழந்தையை மிக வெளிப்படையாக தான் அவள் அம்மா வளர்த்தாள். சத்தமாக தன்னை தத்துக்குழந்தை என அறிவித்து, தத்து பற்றின விளக்கப்படங்களில் நடித்து வந்த அக்குழந்தை ஒரு மாதிரி தத்துக்குழந்தையாகவே சமூகத்தின் முன் இருந்தது. ஆனால் 11 வயதில் ஒருநாள் திடீரென அம்மாவிடம் வந்து தன் தத்து நிலை பற்றி வருத்தப்பட்டது. “நான் ஒரு குழந்தையை தத்தெடுத்தால் உன்னைப் போல அதனிடம் உண்மையை சொல்லி காயப்படுத்த மாட்டேன். எனக்கும் மற்றவர்களைப் போல இயல்பான குடும்பம் வேண்டும்“ என்று அழுதாள். சொல்லலாமா கூடாதா என்ற சிக்கல் நீடித்தாலும் என்ன ஆனாலும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் தாம் வலுவான ஆளுமையுடன் இருக்கிறார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Read More

Monday 7 May 2012

டாஸ்மாக் மதுபானக்கடை: தமிழ் சினிமா பாடல்களின் தேக்கமும் புதுப்பாய்ச்சலும்




கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமா பாடல்களில் உள்ள குறிப்பிடத்தக்க விசயம் அதில் குறிப்பிடத்தக்கதாய் எதுவுமோ இல்லை என்பது. வைரமுத்து, மு.மேத்தா, நா.காமராசன் ஆகியோருக்கு பிறகு ஆளுமை கொண்ட பாடலாசிரியர்கள் இங்கு உருவாகவில்லை. தமிழ் தேசிய-கம்யூனிச கொள்கைப் பிடிப்பு, சங்க இலக்கிய ஈர்ப்பு மற்றும் கலீல் கிப்ரான், இக்பால் போன்ற கற்பனாவாத கவிஞர் மரபுடனான தொடர்ச்சி வானம்பாடிகளுக்கு ஒரு முக்கிய அனுகூலமாக இருந்தது. அவர்களுக்கு ஒவ்வொரு பாடலிலும் தமது பின்புலம் சார்ந்து சொல்ல ஏதாவது இருந்தது. ஒரு காதல் பாடல் எழுதினால் காதல் குறித்த நம்பிக்கைகள், கொள்கைகள் மற்றும் லட்சியங்களை முழங்கினார்கள். இயற்கை, சமூகம் அனைத்திற்கும் இதுவே. கொண்டாட, வழிபட, புரட்சி செய்ய சதா தலைப்பட்ட இவர்கள் 90கள் வரை தமிழ் திரையிசைக்கு ஒரு திசையை அளித்தார்கள், வண்ணத்தையும் தனி வாசனையையும் கொடுத்தார்கள்.

அடுத்து வந்தவர்கள் இவர்களின் திசையில் கொஞ்ச தூரம் சென்றார்கள். பின்னர் வெகுஜன கவிதைகளில் ஒரு வீழ்ச்சி வந்தது. வானம்பாடிகளுக்கு பிறகு அங்கு ஒரு இயக்கமே நிகழவில்லை. தலித் மற்றும் நாட்டார் மரபு சார்ந்து அது உருவாக வேண்டிய வாய்ப்பும் களமும் வெகுஜன பத்திரிகைகளில் அமையவில்லை. அதனால் ஏற்பட்ட வெற்றிடம் சினிமா பாடல் உலகிலும் பரவியது. தொண்ணூறுகளின் இறுதியில் தோன்றிய பாடலாசிரியர்களில் சிலர் அப்போது வளர்ந்து விட்ட நவீன கவிதை பரிச்சயம் கொண்டவர்கள், ஆனால் சற்றே வானம்பாடி கடப்பாடும் கொண்டவர்கள். தாமரை மட்டுமே இவர்களில் மிக தனித்துவமானவராக உயர்ந்து வந்தார். சுவாரஸ்யமாக இந்த பாடலாசிரியர்களுக்கு இவர்களுக்கு பின்னால் ஒரு அறிவுப்புலமோ லட்சிய செறிவோ இல்லை. தாமரை இவர்களில் தப்பி வந்தவர்.

இந்த வறண்ட காலகட்டத்தின் பிரதிநிதி நா.முத்துக்குமார். இவரது “பறவையே எங்கு இருக்கிறாய்? பாடலை “எங்கே எனது கவிதை? அல்லது “என்மேல் விழுந்த மழைத்துளியே“ போன்ற வானம்பாடி கிளாசிக்குகளுடன் ஒப்பிடும் போது ஒன்று தெரிகிறது. நா.முத்துக்குமாருக்கு காதல் உட்பட்டு எதன் மீதும் ஒரு வலுவான நம்பிக்கை பிடிப்பு இல்லை, அவரால் ஒரு பூ, பறவை அல்லது பெண் பற்றி மெல்லிய சிலாகிப்புடன் பேச முடியும் அவ்வளவு தான். அவரிடம் கிளையில் இருந்து பிரிந்த இலைகள் பற்றின ஒரு படிமம் மீண்டும் மீண்டும் வரும். இந்த நவீனத்துவ ஏக்கத்தை கூட அவரால் ஒரு உச்சத்துக்கு போக முடியாது. இவருக்கு பின் வந்தவர்கள் எழுதிய பாடல்களில் அநேகமாய் எதுவும் நம் மனதில் தங்கவில்லை. பெரும்பாலான பாடல்கள் மெட்டுக்காகவும் தாளத்துக்காகவும் தான் கொண்டாடப்பட்டன. நாட்டார் மரபில் இருந்து தோன்றிய சில பாடல்கள் மட்டும் விதிவிலக்கு. திரையிசைப்பாடல்களின் இந்த வறட்டுத்தன்மைக்கு காரணம் லட்சியப் பிடிப்பின்மையும் எந்த ஒரு இலக்கியப் பள்ளியை சாராமல் இருப்பது தான். பலசமயங்களில் வரிகள் அனர்த்தமாக இருக்கின்றன.
இந்த பாடல் வரியை பாருங்கள்:
“பிகரு ஷுகரு மாதிரி பசங்க உடம்ப உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசி தான் உடைஞ்ச மனச தேத்திடும்

நீரிழிவுக்கு எங்கு தடுப்பூசி கண்டுபிடித்திருக்கிறார்கள்? அப்படி தடுப்பூசி இருந்தாலும் அதன் நோக்கம் உடலை தேற்றுவது அல்ல. இப்படி குறைந்தபட்ச தர்க்கம் கூட இல்லாமல் நீங்கள் கற்பனையே பண்ண முடியாதபடி “கடலுக்கும் இப்போ கண்ணீர் முட்டும் என்று எழுதுவது (கடல் மௌனிக்கலாம், முணுமுணுக்கலாம், ஆர்ப்பரிக்கலாம், ஆனால் எப்படி அழும்?) ஒருவித அஜீரணத்தை கேட்பவருக்கு ஏற்படுத்துகிறது.
“உன் பெயரே தெரியாது பாடலில் காதலன் பெயர் என்னவாக இருக்கும் என பட்டியல் வருகிறது: ஓ சில்லென்ற பேரும் அதுதான்,
நதி என்று நீயும் நினைத்தால் அது இல்லையே

எந்த ஊரில் ஆண்களுக்கு நதி என்று பெயர் இருக்கிறது?

“முன் அந்தி சாரல் நீ எடுத்துக் கொள்ளுங்கள். எவ்வளவு கற்பனையற்ற கவிஞர் நா.முத்துக்குமார் என்பதற்கு அப்பாடல் போதும். அது மட்டுமல்ல, அவரிடம் ஒரு பிரச்சனை முன்பு பல முறை புழங்கி உள்ள உவமை மற்றும் உருவகங்களை பயன்படுத்துகிறார் என்பது மட்டுமல்ல ஒரு விகாரமான வகையில் அவற்றை திரும்ப எழுதக்கூடியவர் என்பதும் தான். உதாரணம் “தினம் தினம் அந்தரத்தின் மேலே என்னைத் தங்க வைத்தாய் காதல் சொல்லாமல். பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கூர்மையான ஈட்டி மீது பிருஷ்டத்தை அமர வைத்து கொல்லும் ஒரு வதை முறை இருந்தது. இவ்வரி கேட்டதும் நினைவு வருவது காதல் அவஸ்தை அல்ல அந்தரத்தில் தொங்குபவர் விழுந்து விடுவாரோ என்கிற அச்சம் தான்.

இப்படி சினிமா பாடலாசிரியர்கள் காலிக் குடங்களாக இருப்பதற்கு சமகால தீவிர கவிஞர்களின் நிலையுடன் ஒரு தொடர்புள்ளது. தமிழ் நவீனத்துவ கவிஞர்களில் இருவகை. முதலில் பிரமிள், நகுலன், ஆதமாநாம் போன்று தனித்த ஆளுமையும் பிரம்மாண்ட திறமையும் கொண்டவர்கள். தம்மளவில் இவர்களுக்கு ஒரு தத்துவ பின்புலமும் இருந்தது. இரண்டாது இந்த பின்புலம் இல்லாத பிற நவீனத்துவ கவிஞர்கள். இவர்கள் எளிய சித்தரிப்புகள், தனிப்பட்ட சஞ்சலங்களை மட்டும் எழுதினார்கள். இவர்கள் இன்று எளிதில் காலாவதி ஆகி விட்டார்கள். இவர்களின் தொடர்ச்சியை இன்றும் தமிழ்க்கவிதையில் காண முடியும். எந்த ஒரு அறிவு, பண்பாடு அல்லது தத்துவத் தளம் சார்ந்த பின்புலமும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையில் எளிய தருணங்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ எழுதுவார்கள். எந்த ஒரு விரிவான வாசிப்பும் அக்கறையும் அற்றவர்களாக இருப்பார்கள். இந்த கவிஞர்கள் எழுதுவதற்காக எழுதுகிறார்கள், சொல்வதற்கு அல்ல. இந்த பொருளில், இவர்களுக்கும் இன்றைய சினிமா பாடலாசிரியர்களுக்கும் ஒரு மாமா-மச்சான் உறவு இருப்பது முழுக்க தற்செயல் அல்ல.

இரண்டாயிரத்துக்கு பிறகு இந்த தனியாவர்த்தன கச்சேரிக்காரர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றியது தலித், பெண்ணிய கவிஞர்களும் புனைவெழுத்தாளர்களும் தான். அவர்கள் ஒரு புது மொழியை மட்டுமல்ல சொல்லப்படாத புது வாழ்வு அனுபவங்களையும், நிலவியல் சித்தரிப்புகளையும், மறைக்கப்பட்ட வரலாற்றையும் தமிழுக்கு கொண்டு வந்தார்கள். பெருங்கவனம் பெற்றார்கள். முக்கியமாக அவர்கள் தாம் அவசியமாக சொல்ல வேண்டியதை தம்மால் மட்டும் சொல்ல கூடியதை சொல்ல எழுத வந்தார்கள்; நவீனத்துவாதிகளை போலன்றி அவர்களுக்கு வானம்பாடிகளை போல சொல்ல ஏராளம் இருந்தது, அதன் மீது பெரும் கடப்பாடும் நம்பிக்கையும் இருந்தது. ஒரு ஊமைக்கு திடீரென்று வாய் வந்தது போன்றது அது. துரதிஷ்டவசமாக சினிமா பாடல்களில் வானம்பாடி காலகட்டத்தில் நிகழ்ந்தது போல் இந்த பாய்ச்சல் உடனடியாக நிகழவில்லை. ஒரு பத்து வருடம் தாமதித்து  “மதுபானக்கடை படம் மூலம் இந்த மாற்றம் நிகழ்கிறது.

இதுவரை நாம் கேட்டிராத சொற்பிரயோகங்கள், படிமங்கள், பல நாட்டார் கதைப்பாடல் குறிப்புகள் இப்பாடல்களில் வருகின்றன. ஒரு துள்ளல் இசை கொண்டகண்ணதாசன் காரக்குடி வகையிலான மதுபானக் கூட பாடல். ஆனால் அதை விட மிக உக்கிரமான வரிகள் கொண்ட பாடல் நம் சமூகத்தின் மறைக்கப்பட்ட மாற்று வரலாற்றை பேசும் பாடல் இது.
“கள்ளுக் குளம் வெட்டி ராமன் குளிச்சதும்
ஆதிக் குடியில தான்.

நமக்குத் தெரிந்த ராமர் சத்திரியர், ஆனால் அவர் சிக்கன், மட்டன், பன்றிக் கறி புசிப்பவராக எங்காவது படித்திருக்கிறோமா? அவர் மட்டுமில்லை வைணவமாக்கப்பட்ட எந்த சத்திரியக் கடவுளும் விநோதமாக காட்டில் வாழ்ந்தாலும் பழம் காய் பொறுக்கி உண்பவர்களாக (கம்பராமாயணத்தில் சீதை விருந்தினர்க்கு படைக்கக் கூடிய உணவு பற்றின ஒரு பாடல் ஒரு சைவ சமையல் குறிப்பே தருகிறது) மீசையற்றவர்களாகவே நம் மரபான நினைவில் இருக்கிறார்கள். இது இப்படி இருக்க விதிமுறைகளை மீறாத கொள்கைவாதியாக சுயகட்டுப்பாடு கொண்டவராக ராமாயணம் காட்டும் ராமன் இப்பாடல் சொல்வது போல தண்ணி அடித்தாரா? கணியர் சமூகத்தினரின் மித்துகளில் ராமன் ஒரு குளம் தோண்டி அதை கள்ளால் நிறைத்தது மட்டுமின்றி அதில் குளிக்கவும் செய்திருக்கிறார். குமரிமாவட்ட வழக்கில் மதுவில் குளிப்பது என்றால் மொடக்குடி குடிப்பது இதன் உருவக வெளிப்பாடு தான் “கள்ளுக்குளம் வெட்டி ராமன் குளித்தது ஆதிகுடியில தான் என்பது. இப்பாடலில் ராமன் ஆதிகுடியை சேந்தவன் என்பதும் முக்கியமானது. தெய்வங்கள் குடித்தனரா என்பதை விட ஒரு சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகள் தான் தெய்வங்களை உருவாக்கின என்பது முக்கியம். அதனால் நமக்கு ஒரு சமத்துவத்துக்கு பால் குடிக்கும் ராமனுடன் கள்ளடிக்கும் ராமனும் வேண்டும். கவிதைகளிலும் தெய்வங்களின் வரலாற்றை அவர்களை நிராகரிப்பதற்கு அல்ல ஒரு தலித் வெளிக்குள் சுவீகரிப்பதற்கு பயன்படுத்துபவர் என்.டி ராஜ்குமார். சினிமா பாடலிலும் அதையே செய்கிறார். மேலும் சங்ககாலக் குடிப் பண்பாட்டையும் நினைவுபடுத்துகிறார். இதுவரை வைரமுத்து போன்ற மேற்தட்டு தமிழ்ப்பற்றாளர்கள் காட்டின சங்க காலம் இதற்கு முற்றிலும் மாறுபட்டது. மேலும் கள்ளு இறக்குவது தடை செய்யப்பட்டதன் பின்னுள்ள அதிகார வர்க்க நோக்கங்களை குறிப்பிடுகிறார். விளிம்புநிலை மக்கள் டாஸ்மாக் மதுபானம் மூலம் சுரண்படுவதை விமர்சிக்கிறார்.
“அப்பனும் மவனும் கோயிலில் சாமியும் சேர்ந்து குடிச்சோமடா
ஒழுக்கங்கெட்டவன்னு நம்மாளச் சொன்னது மேட்டுக் குடிகளடா என்ற வரி இன்றைய மத்தியவர்க்க கலாச்சார வன்முறையை பேசுகிறது. இப்படி வேறெந்த பாடலும் இதற்கு முன் “குடியரசியல் பேசினதில்லை. இதுவரை வந்த “தண்ணீர்த் தொட்டி பாடல்களெல்லாம் எல்லாம் குடியை தனிப்பட்ட சீரழிவாக பார்க்கும் பார்ப்பனிய மனநிலை வெளிப்பாடு மட்டுமே. மேலும் இந்த பாடலை அட்டகாசமாக என்.டி ராஜ்குமாரே பாடியிருக்கிறார். பொதுவாக துள்ளல் பாடல்களில் சின்ன சின்ன வார்த்தைகளைப் போடுவார்கள். ஆனால் என்.டி நீண்ட சொற்களை உடைத்து பயன்படுத்துகிறார். இது அவரது கவிதைகளில் நாம் உணரும் திம் திம் எனும் தாளக்கட்டை நினைவுபடுத்துகிறது.

“சமரசம் உலாவும் இடமே எனும் ஒரு பாதி ரீமேக் பாடல் வருகிறது.
“குடியின்றி அமையாது உலகடா
அதில் நீந்தும் குதிரை நாமடா
பாயும் குதிரை, பறக்கும் குதிரை பார்த்திருக்கிறோம். “நீந்தும் குதிரை? இது ஒரு புது சர்ரியலிஸ கற்பனை. யோசிக்க யோசிக்க நம் கற்பனையை மிகுதியாக தூண்டி கிளர்ச்சி தரும் சொல்லாடல் இது. மதுவின் கட்டுக்குள் நின்றபடி பெரும் பாய்ச்சல்கள் செய்யும் ஒரு மனத்தை சொல்வதாக கொள்ளலாம். இப்பாடலில் மற்றொன்று சொல்கிறார். போதையில் என்னென்னமோ மறக்கிறோம், நம் சாதி நிலையைத் தவிர என. மிக கூர்மையான அவதானிப்பு இது. சேர்ந்து குடிக்கும் போது குடும்பம், பிரச்சனைகளை மறந்து ஆனால் மிகுந்த சாதி பிரக்ஞையுடன் இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். இந்திய மனம் மிக விசித்திரமானது.

இக்குதிரை மீண்டும் “பொல்லாத குதிரை ஏறி மோகம் தீர்க்கும் காதல்காரி எனும் பாடலில் வருகிறது. இப்பாடலில் “மனமிரண்டும் பாம்பாகி பிணைந்தேறும் வாசம் வீசுதே எனும் வரி குமரி மாவட்டத்து மக்களிடையே பாம்பின் புணர்ச்சி வாசம் காற்றில் வரும் என்ற நம்பிக்கையில் இருந்து உருவானது. காதலில் கூட இது போன்ற பல நம்பிக்கைகள் உலவுகின்றன. தமிழிலுள்ள எண்ணற்ற தமிழ்ச்செல்வன்களில் ஒருவரான என் நண்பரான ஒருவர் தனது ஒரு கவிதையில் புணரும் பெண்ணின் அல்குல் வாசனையை சொல்லுகையில் ஒருவகை பழத்தை குறிப்பிட்டு அதன் வாசனையை ஒத்தது என்பார்.

பொல்லாத குதிரை பாடலில் சில அற்புதமான உவமைகள் வருகின்றன. நவீன கவிஞர்கள் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.
சின்ன வெயிலாக
தோள் மீது சாய்கின்றாய் (கல்யாண்ஜி)

அதிரும் உடலுக்குள் புதிராக வருகின்றாய்
சிதறும் வண்ணத்தில் பூனை போல் அலைகின்றாய் (குட்டிரேவதி)

மூளைக்குள்ளே நீ பேயாக திரிகின்றாய்(இது என்.டியே தான்)

கோடிக்கால் பூதமடா பாடலில் தொழிலாளிகள் “முகமே இல்லாத மெழுகுபொம்மை என்கிறார். யோசிக்க யோசிக்க பல அர்த்தங்கள் கிளர்த்தும் உவமை இது. இன்று எளிய பாட்டாளி முதல் பி.பி.ஓ ஊழியன் வரை எளிதில் உருக்கி மற்றொன்றாய் மாற்றி விடக் கூடிய மெழுகுபொம்மை தான். இன்றைய assembly line உற்பத்தியில் தொழிலாளி முதலில் தன் தனிமனித அடையாளத்தை தான் இழக்கிறான்.

மஞ்சள் நிற போதையிலே பாடலில் ஒரு குடி விளக்கம் வருகிறது. அது சுவாரஸ்யமானது:
குடித்து குடலழுகி ரெண்டு நாளில்
செத்துப் போவாய் என்று சொன்ன மருத்துவன்
நேற்றே இறந்து போனான்
சாவுக்கு பயமில்லை, சாத்திரங்கள் ஏதுமில்லை
இன்றிருப்போர் நாளையில்லை என்றே குடிக்கிறோம்

இவ்வரிகள் இப்பாடலுக்கு ஒரு முழுமை அளிக்கிறது. அத்தோடு இவ்வரிகள் நம் கறுப்புவெள்ளை சினிமாவின் ஒரு மாபெரும் பாடலாசிரியனையும் சட்டென நினைவுக்கு கொண்டு வருகின்றன. அவன் மட்டுமே எளிய நிகழ்வுக்கு உன்னத தத்துவங்கள் சொன்னவன்.

மற்றும் சில அழகான வரிகள்:
“காகங்களே என்னைச் சுற்றி ஆர்ப்பரித்துப் பாடுது
மனிதனின் எச்சில் மட்டும் குற்றங்களை சொல்லுது

என்.டி ராஜ்குமார் தலித் நுண்ணுணர்வையும் வரலாற்றையும் மட்டுமல்ல தான் இதுவரை செரித்துள்ள நவீன கவிஞர்கள் உருவாக்கிய உன்னத தருணங்களையும் தனதான மொழியில் இப்பாடல்களில் கொண்டு வருகிறார். மேற்சொன்ன “சிதறும் வண்ணங்களில் அலையும் பூனை போன்றொரு படிமத்தை தமிழ் சினிமா பாடல் வரலாற்றில் யாரும் இதுவரை எழுதியதில்லை. தமிழ் சினிமா பாடல் உலகம் நவீன காலகட்டத்தில் எடுத்து வைக்கும் முதல் அடி என மதுபானக்கடைபாடல்களை சொல்லலாம். வைரமுத்துவுக்கு பிறகு மிகுந்த கற்பனை செறிவும், தனித்துவமும் ஆளுமையும் கொண்டு வந்துள்ள அடுத்த கவிஞன் என்.டி ராஜ்குமார் தான். அவர் தொடர்ந்து இயங்குவார் என எதிர்பார்க்கலாம். அவரைக் கொண்டு வந்த இயக்குநர் கமலக்கண்ணனுக்கு வாழ்த்துக்களும் பாரட்டுக்களும்.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates