Sunday 9 February 2014

வேலை எனும் மூச்சுத்திணறல்


சமகாலத்தை விளக்கும் கச்சிதமான சொல் வேகம் என அறிவோம். வேகத்தின் இன்னொரு பெயர் தான் நேரமின்மை. இது ஆச்சரியமானது வேகவேகமான காரியங்களை செய்யத் துவங்கும் போது நேரம் எவ்வளவு குறைவாக உள்ளது எனும் பதற்றம் வருகிறது. ஆனால் நேரம் என்பது வெறும் கற்பிதம் தானே! ஒரு வேலையை மெதுவாக செய்து பாருங்கள், நிறைய நேரம் இருப்பதாய் தோன்ற துவங்கும். நேரத்தை மனம் தான் சிருஷ்டிக்கிறது.

வேலை, பயணம், பொழுதுபோக்கு எதிலும் எங்கும் வேகம், அவசரம் என களைப்பும் அலுப்பும் ஏற்படுகிறது. ஆனாலும் இதையெல்லாம் யோசிப்பதற்கு அவகாசம் இல்லாதவர்கள் ஓடிக் கொண்டே இருப்பார்கள். ஓடும் வேகத்தில் அலுப்பும் களைப்பும் தெரியாது. அதனால் தான் அவர்கள் மாலையை வெறுக்கிறார்கள். மாலைகள் பொழுதுபோக்குகளிலும், டி.வி முன்பு கல்லைப் போல் நெடுநேரம் இருப்பதிலும் போதையில் கரைவதிலும் நகர்கின்றன. சுய செயல்பாடு இல்லாத எந்த பொழுதுபோக்கும் அவலத்தின், கசப்பின், அதிருப்தியின் வெளிப்பாடு தான்.
நாம் வாழும் இதே ஊரில் எந்த அவசரமும் இன்றி தன் போக்கில் மிக மிக மெத்தனமாக வாழ்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு காலை எழுந்ததும் அடுத்த என்ன செய்ய என திட்டங்கள் இல்லை. அன்றைய நாளுக்கான திட்டங்கள் இடுவதிலேயே கணிசமான நேரம் கழியும். ஒவ்வொன்றையும் மெதுமெதுவாக செய்வார்கள். சாவகாசமாய் டீ அருந்தி, உணவு உண்டு, பத்திரிகை வாசித்து, இணையம் மேய்ந்து, போனில் கதைத்து, மீண்டும், சாப்பிட்டு, சும்மா வெட்டியாய் உட்கார்ந்து யோசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். நாம் நேரமாகி விடுமோ என்கிற பதற்றத்தில் போக்குவரத்தில் காத்திருக்கையில் சாலை ஓரமாய் இவர்கள் ஒரு தொல்பொருள் போல் கசங்கின ஆடைகளுடன் நீண்ட சோம்பலின் களைப்புடன் கடந்து போவதை பார்க்கலாம். இவர்களை துச்சமாய், கொஞ்சம் பொறாமையாய், பார்க்கிறோம்
சோம்பல் மீதும், நேர வீணடிப்பின் மீது இன்று நமக்கு ஒரு சகிப்பின்மை வந்து விட்டது. சோம்பல் என்றுமே ஒரு ஒழுங்கீனமாக கருதப்பட்டு உள்ளது. இன்று அது கிட்டத்தட்ட குற்றம் போல் ஆகி விட்டது. தகவல் தொடர்பு கருவிகளில் இருந்து நாம் வேலை பார்க்கும் இடங்களில் உள்ள கராறான விதிமுறைகள் மற்றும் நாம் பயன்படுத்தும் சேவை நிறுவனங்களின் செயல்பாட்டு முறைகள் அனைத்தும் நேர வீணடிப்பை முடிந்தளவுக்கு குறைத்து எந்திர சக்கரம் போல் மனிதன் தடங்கல் இல்லாமல் தொடர்ச்சியாக இயங்க வழிவகுக்கின்றன. இன்று நாம் அதிகமாக படைக்கிறோமோ அல்லது லாபம் அடைகிறோமோ என்பதல்ல அவசியம், தொடர்ச்சியாக வேலை பார்த்துக் கொண்டே இருப்பது தான் அதை விட முக்கியம்.
சமீபமாக நான் ஒரு பதிப்புதொழில் சார்ந்த அலுவலகத்தில் ஒரு வடிவமைப்பாளரை பார்த்தேன். வெளிநாட்டில் இருந்து வரும் அறிவியல் பத்திரிகை படங்களை திருத்துவது அவரது வேலை. தனக்கு முதலில் வரும் படங்கள் கணிசமாக பழுதானதாகவே இருக்கும்; முதலில் சரி செய்து விட்ட பின் சரியான படங்கள் மீண்டும் வரும். அவற்றை பழையது போல் மீண்டும் திருத்த வேண்டும் என்றார். அதாவது அவர் ஒரே படத்தை இருமுறை திருத்துகிறார். இது எப்படியென்றால் உங்களது அழுக்கான சட்டையை இஸ்திரி போடுபவரிடம் கொடுக்கிறீர்கள். அவர் தேய்த்த பின் அழுக்காக இருக்கிறதே என்று துவைத்து விட்டு மீண்டும் இஸ்திரிக்கு கொடுக்கிறீர்கள். இது போலத் தான் மேற்சொன்னவரும் நேரத்தை வீணடிக்கிறார். நான் அவரிடம் சொன்னேன்: இந்த படங்கள் பழுதானவை என முன்கூட்டியே பார்த்து சம்மந்தப்பட்டவரிடம் தெரிவித்து சரியான படங்கள் வாங்கின பின் நீங்கள் வேலை செய்யலாமே! இப்படி ஒரே வேலையை ரெண்டு தடவை செய்கிறீர்கள் என உங்கள் மேலதிகாரிக்கு தெரியாதா?”
தெரியும். ஆனால் நல்ல புதுப்படம் வருவது வரை காத்திருப்பதென்றால் நேரம்வீணாகும். பிற துறைகளின் வேலையும் சுணங்கும். எனக்கும் தினமும் செய்வதற்கு வேலை வேண்டுமல்லவா, சம்பளம் தருகிறார்கள் இல்லையா?”. என்னதான் லாபம், பொரடக்‌ஷன் பற்றி வலியுறுத்தினாலும் பல நிறுவனங்களுக்கு அர்த்தமில்லாத தடையற்ற உழைப்பு தான் தேவை. பல ஸ்தாபனங்களில் வெளியே வாசலில் நிற்கும் காவலாளிகளை பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எந்த வேலையும் பண்ணுவதில்லை, எதையும் குறிப்பாக பாதுகாப்பதில்லை; அதற்கான சக்தியும் அவர்களுக்கு இல்லை. பெயரளவுக்கு ஒரு அரசியல் கூட்ட அலங்கார வளைவு போல் அவர்கள் நின்று கொண்டிருப்பார்கள். என் நண்பரின் அலுவலகத்திலும் சில ஊழியர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு குறிப்பாக எந்த வேலையும் தெரியாது.அவர்களை நம்பி எந்த வேலையும் ஒப்படைக்க முடியாதுஎன நண்பரே கூறுவார். சின்ன சின்ன எளிய வேலைகளை பண்ணியபடி அவர்கள் சும்மா எட்டு மணிநேரம்அங்கிருந்தபடி இருப்பார்கள்.
ஆனால் அலுவலகத்துக்கு என்று சில எந்தரத்தனமான வேலைகள் இருக்கும். இவ்வேலைகளை யாரும் பண்ணலாம். வேலை செய்கிறவர்களின் திறன்களை வளர்க்காத, திருப்தி தராத வேலைகள்.. இப்படி லட்சக்கணக்கான பேர் வேலையற்ற வேலைகளில் இருந்து கொண்டிருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒரு அறையில் ஒரு மின்விசிறி இருக்கிறது. அதை நீங்கள் உபயோகிக்காமலே இருக்கலாம். அதற்காக அதை கழற்றி விட மாட்டீர்கள். வருடக்கணக்காய் அந்த மின்விசிறி ஓடாமலே கூட இருக்கலாம். ஆனால் அறை என்றால் மின்விசிறி தேவை என அதை அங்கே வைத்திருப்பீர்கள். இதைப் போன்று தான் கணிசமான பேரின் வேலைகள் இருக்கின்றன. நாம் வேலை செய்கிறோம் என்பதை விட வேலையில் இருக்கிறோம் என்பதே பொருத்தமானது.
இவையெல்லாம் வேலையின் பிரச்சனைகள் அல்ல. காலத்தின் பிரச்சனை. வாழ்க்கை மேலும் மேலும் எந்திரமயமாகிப் போக நம்மையும் அது எந்திரத்தின் ஒரு பகுதி ஆக்குகிறது. நமது திறன்கள், தேவைகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் பற்றி வேலை தருபவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. முன்னனுபவமும், பட்டங்களும், சில சொற்ப தகவல்களும் போதும். நம் அடையாளம் அழிக்கப்பட்டு தொடர்ச்சியான இயக்கமொன்றின் ஒரு பகுதியாக மாற்றப்படுகிறோம். நம் வேலையினால் யாருக்காவது லாபம் உண்டா, சமூகத்துக்கு பயனுண்டா என நமக்கு தெரிய முடியாதபடி இந்த அமைப்பு இயங்குகிறது. இந்த குருட்டுத்தனமான வேலை வழங்கும் அமைப்புக்கும் நம் காலத்தின் இந்த அர்த்தமற்ற அவசரத்துக்கும் ஒரு தொடர்பு உள்ளது.
சமீபமாக ஒரு மின் பதிப்புத் துறையில் நடக்கும் நேர்முகத் தேர்வை கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு மணிநேரத்தில் மட்டும் பத்துக்கு மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகள் வந்தார்கள். அவர்களின் படிப்புக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்பது மட்டுமல்ல அவர்களின் தயாரிப்புக்கு முற்றிலும் கீழான வேலை இது. அவர்களை மனிதவள துறை நபர் உடனே உடனே திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். லட்சக்கணக்கில் செலவழித்து படித்தவர்கள் என்பதால் படித்து முடித்த உடனே ஏதோ ஒரு வேலைக்கு ஓட வேண்டிய வறுமை இருக்காது என ஊகிக்கலாம். ஆனால் படிப்பு முடிந்ததும் உடனே ஏதாவது ஒரு வேலை செல்ல வேண்டும் என்கிற ஒரு அழுத்தம் அவர்கள் மீது இருக்கிறது. வேலை இல்லாமல் இருப்பது அவமானகரமாய் இருக்கிறது. இது வெறும் பொருளாதாரம் சம்மந்தப்பட்ட அழுத்தம் அல்ல.
வேலையில் இல்லாமல் இருக்கையில் உலகம் நம்மை விட்டு அவரசமாய் எங்கோ ஓடிவிடும் என்கிற பயம் ஏற்படுகிறது. நம்மைக் கடந்து ஏதேதோ நடக்கிறது என பதறுகிறோம். அவரசமாய் கூட்டத்தோடு கூட்டமாய் கலக்க ஓடுகிறோம். மேலும் வேலையற்ற இருப்பது ஒரு கீழான நிலை எனவும் நினைக்கிறோம். ஆனால் வேலையற்று இருப்பது எவ்வளவு உன்னதமானது என நாம் புரிந்து கொள்வதில்லை.
மிகப் பெரும் கண்டுபிடிப்புகள், உயர்வான சிந்தனைகள், படைப்புகள் வேலையற்று இருப்பதில் இருந்து தான் தோன்றுகின்றன. வேலையற்று இருப்பது நிலத்தை விதைக்கும் முன் சில காலம் வெறுமனே விட்டு வைப்பதை போன்றது. சும்மா இருக்கும் போது தான் நாம் வாழ்க்கையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். படைப்பூக்கம் கொண்டவர்களுக்கு சும்மா இருப்பது மிக மிக அவசியமானது. எந்திரத்தனமான அவசரமான வேலைகள் ஒன்று நம் மூளையை களைப்படைய வைக்கிறது; இன்னொன்று தொடர்ச்சியான அழுத்தம் காரணமாய் மூளை ஒரு அரைமயக்க நிலைக்கு போகிறது. கணினியில் ஸ்லீப் மோட் என்று ஒன்று உள்ளது. தொடாமல் விட்டால் கணினி சட்டென்று உறங்கப் போய் விடும். ஈடுபாடற்ற வேலை செய்வது, அதற்கான அவசர ஓட்டத்தில் இருப்பது ஆகியவை மூளையை இந்த ஸ்லீப் மோடுக்கு தள்ளி விடுகிறது. உங்களுக்கு எந்த புது சிந்தனைகளும் தோன்றாது, சொற்கள் மறந்து போகும், நினைவு மறதி அதிகமாகும், சரளமாய் பேசவோ, எழுதவோ வராது. எந்திரத்தனான செயல்கள் போக வேறு எதையும் செய்யும் தன்னம்பிக்கை இராது.
இலக்கியம், இசை, ஓவியம் என மாறுபட்ட ஆர்வம் கொண்டவர்கள் வேலைக்கு போன பின் சுத்தமாக தமக்கு இப்படி ஒரு ஈடுபாடு இருந்தையே மறந்து விடுவார்கள். கல்லூரியில் கவிதையெல்லாம் எழுதுவேன் என்று சொல்லும் நிறைய பேரை பார்க்கலாம். பின்னர் வேலைக்கு போன பின் நேரம் கிடைக்கவில்லை என்பார்கள். ஆனால் நமக்கு அரட்டையடிக்க, டி.வி பார்க்க, வெறுமனே உலாத்த, அவசியமின்றி கவலைப்பட நிறைய நேரம் கிடைக்கிறது. தினமும் நாம் வீணாக்கும் நேரத்தை கணக்கிட்டால் வியப்பாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தைக் கொண்டு நம் திறமையை மேம்படுத்தும் காரியங்களை ஏன் செய்ய முடிவதில்லை?
தொடர்ச்சியான அர்த்தமற்ற வேலை நம் மூளையை மந்தமாக்குவதை குறிப்பிட்டேன். அது போக உபயோகமாய் எதையும் செய்வதற்கு முன்னர் உபயோகமற்று வீணடிக்கவும் நேரம் வேண்டும். சும்மா இருக்கையில் மனம் மெல்ல மெல்ல விழித்து தான் அதுவரை கவனித்த விசயங்களை அசை போடுகிறது; அதுவரை நாம் மறந்திருந்த பல்வேறு பிரச்சனைகளை யோசிக்க ஆரம்பிக்கிறது. பிரச்சனைகளில் இருந்து தான் கருத்துக்களும், தீர்வுகளும் தோனுகின்றன. பிரச்சனை இருக்கிறது என்கிற விழிப்புணர்வு இருட்டறையில் விளக்கை இயக்குவது போல. சட்டென்று அந்த அறையில் ஒரு கரும்பூனை அத்தனை நாளாய் இருந்தை கவனிக்கிறோம். மனம் பிரச்சனையில் குவிவது தான் படைப்பூக்கத்தின் முதல் படி. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு ஒருவர் சும்மா இருப்பது போல் படலாம். ஆனால் சும்மா இருப்பது தான் உலகின் ஆக சிரமமான வேலை. எந்திரத்தனமான, திறமைக்கு பொருந்தாத வேலைகள் முதலில் நம்மிடம் இருந்து இந்த சும்மா இருப்பதற்கான நேரத்தை பறித்து விடுகிறது.
அடுத்து தொடர்ந்து பரபரப்பாய் இருப்பது தான் ஆரோக்கியமானது என்கிற தவறான எண்ணத்தை நமக்குள் விதைக்கிறது. இந்த பரபரப்பு தொற்றுவியாதி வந்தவர்கள் சதா போனில் பேசியபடி, கைகளை பிசைத்து, கால்களை ஆட்டி, கண்களை அகட்டி வைத்து எதையாவது பார்த்தபடி இருப்பார்கள். வேலையில்லாத போதும் தேவையற்ற வேலையை எடுத்து வைத்து மும்முரமாய் இருக்க முயல்வார்கள். பிரேக் அறுந்த வாகனம் போன்றவர்கள் இவர்கள். ஓடிக் கொண்டே இருக்க வேண்டும், இல்லாவிட்டால் விபத்தாகி விடும் எனும் அச்சம் உள்ளூர இருக்கும்.
சாப்ட்வேரில் இருக்கும் என் நண்பர் தனது இளம் மேலாளர் பற்றி ஒன்று சொன்னார். மேலாளரின் வேலை சுமார் 4 மணிநேரத்தில் முடிவது தான். ஆனால் அவர் காலை எட்டு மணிக்கு வந்தால் இரவு வாட்ச்மேன் தூங்கும் வரை கணினியையே உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருப்பார். அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருக்கிறது. ஆனாலும் வீட்டுக்கு போய் குழந்தையுடன் நேரம் செலவழிப்பதில் கூட அவருக்கு ஆர்வமில்லை. நண்பர் எழுத்தாளர். அவர் மாலையானதும் ஜரூராக கிளம்பி விடுவார். மாலை நேரத்தை எதையாவது வாசிப்பதில், எழுதுவதில் அல்லது யோசிப்பதில் கழிப்பாரே அன்றி அலுவலகத்தில் அல்ல. மேலாளர் ஒருமுறை நண்பரை பிடித்து வைத்து கேட்டார்: ஏன்யா இப்பிடி ஆறுமணியானா வீட்டுக்கு ஓடிப் போறே? வீட்டுக்கு போய் அப்பிடி என்னதான் பண்ணுவே?”. ஒருவிதத்தில் நியாயமான கேள்வி தான். சரிவில் உருட்டி விடப்பட்ட பாறை மீண்டும் உச்சிக்கு போவது பற்றி எப்படி யோசிக்கும்? மேலாளர் உண்மையில் மாலை வீட்டுக்கு போகும் படி நேர்ந்தால் ரொம்பவே குழம்பி விடுவார். சும்மா இருந்தே பழகாத ஒருவருக்கு நிஜமாகவே அது ஒரு வதையாக இருக்கும். ஓய்வுறும் வரை இது போல் அலுவலகத்தில் அடைந்து கிடந்து அவர் தன்னிடம் இருந்தே தப்பித்துக் கொண்டிருப்பார். பின்னர் பல்லிழந்ததால் கிராமத்தில் நுழைந்துநரவேட்டையாடும் சிங்கம் போல் ஒருநாள் வயதான பின் நிரந்தரமாக வீட்டுக்கு திரும்புவார், எங்கே போய் பதுங்குவது என சதா யோசித்தபடி.
ஒருமுறை கல்கி அலுவலகத்தில் வேலை விசயமாய் போயிருந்த போது ஒரு முதியவர் எதிரே வந்தார். கையில் ஒரு கட்டு புத்தகங்கள். தானே எழுதி பிரசுரித்ததாக சொன்னார். இன்றைய பாணியோ கருத்தாக்கங்களோ புரியாமல் முப்பது வருடங்களுக்கு முன்பான போக்கின்படி எழுதியிருந்தார். விசாரித்த போது சமீபத்தில் ஓய்வுற்றதாகவும், இனிமேல் எழுத்தாளராக போவதாகவும் கூறினார். இப்போது தான் அவருக்கு எழுத நேரம் வாய்த்ததாக சொன்னால் நம்ப மாட்டேன். பயணிக்கவும், உறவினர் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் நமக்கு எப்போதும் நேரமும் ஆற்றலும் இருக்கிறது தான். உண்மையில் அவர் இத்தனை நாள் அலுவலக எந்திரப்பிடியில் இருந்தார். வயோதிக மிருகத்தை சர்க்கஸில் இருந்து வெளியேற்றுவதை போல் இவரை அவர்கள் விடுவித்த பின் பழையபடி உறும முயல்கிறார். ஒரு டி.வி நிறுனவத்தில் இருக்கையில் ஒரு தபால் அட்டை பார்த்தேன். இதே போல் ஒரு முதியவர் எழுதிய தபால் அட்டையை பார்த்தேன். கூட அவர் இருபது வருடங்களுக்கு முன் எழுதிய பாக்கெட் நாவலின் பிரதியை இணைத்திருந்தார். இப்போது வேலையை விட்டு விட்டதாகவும், டி.வி தொடர்களில் வசனம் எழுதும் வாய்ப்பு தரும்படியும் கேட்டிருந்தார். முகநூலில் ஒருவர் ஐம்பது வயதுக்காரர் தான் வங்கி வேலையை விட்டு விட்டு பத்திரிகையில் தொடர்கதை எழுதப்போவதாய் குறிப்பிட்டிருந்தார். டி.வி விவாத நிகழ்ச்சிகளில் இது போல் திடீரென்று வந்து தம் பேச்சு அல்லது வேறு திறன்களை நிரூபிக்க முயலும் நாற்பது வயதுக்காரர்களை அடிக்கடி பார்க்கிறேன். நாற்பத்தைந்து வயது கடந்ததும் நம்மவர்களுக்கு தம் அடையாளத்தை கலாச்சார அளவில் நிரூபிக்க ஆசை வந்து விடுகிறது. உலகம் தம்மை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அது அத்தனை எளிதல்ல. மிருகக்காட்சி சாலை மிருகங்களால் வனத்தில் பிழைக்க முடியாது.
இவர்களின் உண்மையான அடையாளம் என்ன? குமாஸ்தாவா, கலைஞனா? அவர்களுக்கே அது தெளிவில்லை. பிரச்சனை இப்படி மனித அடையாளத்துக்கு எதிரான முதலாளித்துவ கலாச்சாரத்தில் தான் உள்ளது.
யுவன் சந்திரசேகர் தனது கவிதைத் தொகுப்பின் முன்னுரை ஒன்றில் தனது சிறந்த கவிதைகள் சோம்பலாய் நீண்ட காலம் இருந்த பின் தோன்றியவை என குறிப்பிட்டிருந்தார். இது ஒரு முக்கியமான கருத்து.
வேலை ஒன்று நாம் முழுக்க நம்மை உணர்வுரீதியாய் ஈடுபடுத்துவதாய் இருக்க வேண்டும். உதாரணமாய் இசையில் ஆர்வம் என்றால் சி.டி கடையில் வேலை பார்க்காமல் ஒரு இசைக்குழுவிலாவது இயங்க முடிய வேண்டும். எழுத்தாளன் பிழைத்திருத்துபவனாக அல்லாமல் ஆசிரியராக ஆவது குறைந்தது இருக்க வேண்டும். சுதந்திரமாய் இயங்கவும் முடிவெடுக்கவும் குறைந்தபட்ச வாய்ப்பாவது இருக்க வேண்டும். இன்னொரு வேலை நம் மனம் அதிகம் ஈடுபடாமல் எதையோ யோசித்தபடி செய்யும் சுலபமான, அழுத்தங்கள் அற்ற ஒன்று. துணி மடிப்பது, தோட்டம் திருத்துவது, சமையல் செய்வது, வீட்டை சுத்தம் செய்வது போன்று. இரண்டு விதமான வேலைகளும் மனதுக்கு ஆரோக்கியமானவை; மூளையின் சுறுசுறுப்புக்கும் நல்லவை. புதிய கருத்துக்கள் கிடைக்காமல் மனம் துவளும் போது அதிக பளுவில்லாத வேலைகளை செய்வது உதவும். யோசிக்காமல் யோசிக்கிற முறை இது.
மூன்றாவது வகை வேலை உங்களை உணர்வுபூர்வமாய் ஈடுபட அனுமதிக்காது. அது உங்கள் வேலை அல்ல என்பது உங்களுக்கு உணர்த்தப்படும். அவ்வேலையில் உங்களுக்கு பொறுப்பு உண்டு; ஆனால் உங்களுக்கு சொந்தமானது அல்ல. இன்னொருவரின் குழந்தைக்கு முலையூட்டுவது போல இது. முலையூட்ட வேண்டும்; ஆனால் அதை குழந்தையாக கருதக் கூடாது. பொறுப்பின் கணிசமான அழுத்தங்கள், பதற்றங்களையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டும். அதாவது குழந்தை உங்களது அல்ல; ஆனால் அதற்கு ஜுரம் வந்தால் உங்கள் முலையை அரிந்து விடுவதாக அச்சுறுத்துவார்கள். நாம் செய்கிற கணிசமான வேலைகள் இப்படியானவை தாம். இந்த இடைத்தரமான வேலை நமக்குள் ஒரு செயற்கையான பயத்தை, பதற்றத்தை தோற்றுவிக்கிறது. இந்த பயம் நம்மை மெல்ல மெல்ல உள்ளுக்குள் அரித்து சுயம் அழிந்தவர்களாக மாற்றுகிறது. இன்னொருவருக்காக பயந்து, இன்னொருவருக்காக கவலைப்பட்டு, அடிவாங்கி நீங்கள் யாரென்றே ஒரு கட்டத்தில் மறந்து போகிறது.
உங்களை நீங்கள் மீட்டெடுக்க முதலில் இன்னொருவரின் வேலையை செய்வதை நிறுத்த வேண்டும். இதற்கு ஒரு மனப்பயிற்சி வேண்டும். ஏனென்றால் இன்று வேலை என்பதே நமக்கான செயல்பாடாக பார்க்கப்படுவதில்லை. நமக்காக எதையும் செய்ய தெரியாதவர்களாகவே இருக்கிறோம். நமக்கான முதல் வேலை நம் மனதை அதன் போக்குக்கு இயங்க விடுவது. அதன் குரலை உற்று கவனிப்பது. அதன் ஆணைகளை பின்பற்றுவது. சுருக்கமாக சோம்பலாய் இருப்பது. சோம்பலாய் இருப்பது குறித்த பயத்தை விட்டொழிப்பது.
இன்று இந்த வேலைக்கான செயற்கை மனப்பான்மை கலைஞர்களிடம் தோன்றி வருவதைப் பார்க்கிறோம். கடந்த பத்து வருடங்களில் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பின் வெறுமனே அரட்டையடிப்பது, இருக்கிற தகவல்களை தொகுத்தளிப்பது எழுத்தாளனின் வேலையாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. நான்கு வருடங்களுக்கு முன் ஜெயமோகனின் இருபது கட்டுரை நூல்களுக்கு மேல் ஒரே ஆண்டில் வெளியான நிகழ்ச்சியில் பேசிய யுவன் சந்திரசேகர் மிகுதியான கட்டுரை எழுத்து படைப்பூக்கத்துக்கு எதிரானது என்றார். கட்டுரையும் படைப்பூக்கம் கொண்ட வடிவம் தான். இன்று கட்டுரை எழுத்துக்கு பத்திரிகையில் இடம் மிகவும் அதிகரித்து விட்டது. புனைவெழுத்தாளர்களும், கவிஞர்களும் கட்டுரை எழுதும்படி தூண்டப்படுகிறார்கள். அல்லது அவர்களின் இடத்தை பத்திரிகை எழுத்தாளர்கள் பிடித்துக் கொள்கிறார்கள். கடந்த பத்து வருடங்களில் நல்ல கதைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதற்கு இதுவும் ஒரு காரணம். கதை எழுத தேவையான ஒரு மூளைச் சோம்பல் இன்று காலாவதியான ஒன்றாக கருதப்படுகிறது.
புதுப்புது கண்டுபிடிப்புகளை மட்டும் எழுதுவதற்கு எல்லோரும் நீட்சே அல்ல. நிறைய கட்டுரை எழுத ஒரு குறுக்குவழி நிறைய தகவல்களை படித்து செரித்து புதுவடிவில் திரும்ப எழுதுவது. ஒரு அடிப்படையான தர்க்க அறிவைக் கொண்டு இப்படி சேகரிக்கப்பட்ட தகவல்களை சேர்த்து நீங்கள் நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுத முடியும். இவற்றுக்கு டவுன்லோடு கட்டுரைகள் என்று தமிழில் புதுப்பெயரும் கண்டுபிடித்து விட்டார்கள். நிறைய படிப்பது கூட எழுத்துக்கு எதிரான ஒன்று தான்.
அதே போல் தமிழ் அறிவுச்சூழலில் பேச்சும் இன்று அதிகரித்து வருகிறது. நிறைய பேச பேச நீங்கள் விஷயங்களை பொதுப்படுத்த எளிமைப்படுத்த நேர்கிறது. பாலில் தண்ணீர் கலந்து கலந்து ஒரு கட்டத்தில் வெறும் நீர் மட்டுமே எஞ்சுவது போல பேச்சாளர்கள் மெல்ல மெல்ல சிந்தனைகளில் இருந்து கழன்று விடுகிறார்கள்.
நாம் வேலையில் இருந்து மட்டுமல்ல, படிப்பு மற்றும் பேச்சில் இருந்து தப்பிக்கிற வேளை வந்து விட்டது. நவீன மனிதன் ஆவேசமாய் காற்றடிக்கும் ஒரு குன்றின் மீது நிற்கிறான். மிகுதியான காற்றில் அவனுக்கு மூச்சு திணறுகிறது. சும்மா, ஒன்றும் படிக்காமல், தொகுக்காமல், மௌனமாய் இருப்பதை அவன் உடனடியாய் திரும்ப கற்க வேண்டும். அல்லது இந்த மூச்சுத்திணறலில் அவன் செத்து விடுவான்!
நன்றி: அறிந்ததும் அறியாததும், அமிர்தா, ஜனவரி 2014

Share This

4 comments :

  1. //சும்மா இருப்பது தான் உலகின் ஆக சிரமமான வேலை.//
    Lengthy article......

    ReplyDelete
  2. அற்புதமான கட்டுரை
    உங்கள் கட்டிரைகளில் எனக்கிருக்கும் ஒரே குறை அதன் நீளம். மிகவும் யோசித்து பிரச்சனையை உள்வாங்கி இத்தனை தெளிவுடன் எழுதுகிறீர்கள் தான் இருந்தாலும் twitter Fb காலத்தில் மக்களுக்கு (எனக்கும் தான்)பொறுமை இல்லை.

    ReplyDelete
  3. அன்புள்ள நாஞ்சில் மது, நன்றி. என் நீளமான கட்டுரைகள் அச்சு பத்திரிகைகளுக்கு எழுதப்பட்டு பின்னர் என் பிளாகில் பதிவு செய்யப்படுபவை. இக்கட்டுரை அமிர்தாவில் வந்தது. பிளாகுக்கு என எழுதும் பதிவுகளை சின்னதாகவே எழுதுகிறேன் :)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates