Thursday 26 May 2011

வேற்றுகிரக வாசிகள் - புக்காவஸ்கி



நீங்கள் நம்ப மாட்டீர்கள்
மிகக் குறைந்த சச்சரவு அல்லது
துயரத்துடன்
வாழ்ந்து செல்லும்
நபர்கள் உள்ளார்கள்.
நன்றாக ஆடை அணிவார்கள், உண்பார்கள்
தூங்குவார்கள்.
தாம்பத்திய
வாழ்வில்
திருப்தியாக இருப்பார்கள்.

அவர்களுக்கு
துக்கத்தின் தருணங்கள் நேரும்
ஆனால் ஒட்டுமொத்தமாக
அவர்கள் தொந்தவரவற்றவர்கள்
பெரும்பாலான நேரங்களில்
சுகமாகத் தான் உணர்கிறார்கள்.
அவர்கள் சாகும் போது
அது எளிய
சாவாகத் தான் உள்ளது, அதிகமும் தங்கள்
தூக்கத்தில் தான்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள்
இதை
ஆனால் அத்தகைய நபர்கள் நிச்சயம்
இருக்கிறார்கள்.

நான் அவர்களில்
ஒருவனல்ல
அய்யோ இல்லை, நான்
அவர்களில் ஒருவனல்ல.
அவர்களில் ஒருவனாய் இருப்பதன்
பக்கத்தில் கூட
நான்
இல்லை.

ஆனால் அவர்கள்
அங்கிருக்கிறார்கள்

நான்
இங்கும்.
Read More

Wednesday 25 May 2011

கனிமொழியும் நவீன சட்டாம்பிள்ளைகளும்



கனிமொழியின் ஜெயில் வாசத்தின் போது வரும் எதிர்வினைகளும் நக்கல்களும் வக்கிரமாக உள்ளன. அவர் பாலியல் ரீதியாய் ஒழுக்கங் கெட்டவர் என்பதில் இருந்து அவரது குளியலறை ஜெயிலுக்குள் எங்கிருக்கும் என்று வினவுவதை வரை இவை கனிமொழியை ஒரு விபச்சாரி போல் சித்தரிக்கின்றன. 200 கோடி திருடின கனிமொழி மட்டும் பாலியல் விமர்சனத்துக்கு உள்ளாவது நமக்குள் இருக்கும் பெண்களை ஒழுக்க குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பார்க்கும் விருப்பத்தை காட்டுகிறது. ஒரு பெண் தவறு செய்தால் அவளது பாலியல் ஒழுக்கத்தை விசாரணை செய்து தொடர்ந்து அதே மர்மத்தில் தொடர்ந்து தாக்குவது ஒரு பொதுப்புத்தி. இலக்கியம் படிப்பவர்கள், எழுதுபவர்கள், இணையத்தில் புழங்கும் பண்பட்ட பன்னாட்டு குமாஸ்தாக்கள் அனைவரிடமும் வேறுபாடின்றி நாம் காண்பது தன்னை மேலாக நினைக்கும் ஒரு சட்டாம்பிள்ளையைத் தான். பண்பாடும், வாசிப்பும், அது சார்ந்த உரையாடல்களும் வெறும் பொழுதுபோக்கோ என்ற ஐயத்தை இது ஏற்படுத்துகிறது. முன்பு கற்காலத்தில் இருந்து இரும்புகாலத்திற்கு மனிதன் பரிணமித்தான் என்றால் அது வெறும் இரும்பை பயன்படுத்தினதால் மட்டுமல்ல என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Read More

Tuesday 24 May 2011

மகாஎழுத்தாளர்களின் வரலாறு



தமிழில்
ஆரம்பத்தில்
ஒரே ஒரு மகாகவிஞன் இருந்தான்
அவன்
பெருந்தனிமையில்
ஒரு துர்கனவில்
தனக்குத்தானே பேசி தன்னிடமே முரண்பட்டு
தன்னையே மன்னித்து மறைவாய் தனக்கே குழி பறித்து
கடவுளிடம் தன்னை காப்பாற்ற மன்றாடினான்
மற்றொரு மகாகவிஞன் தோன்றினான்
இருவரும் ஓய்வின்றி பேசினார்கள்
முடிவில் இருவரும் மகாகவிஞர்கள் என்பது புரிய வந்தது
ஆனாலும்
மற்றொரு பேச்சின் ஆரம்பத்தில்
அவர்கள் வெறுங்கவிஞர்களாகவே
தொடங்க வேண்டியிருந்தது
ஒவ்வொரு சொல்லின் முடிவிலும்
ஒரு கனியை முழுங்கி கொட்டையை துப்புவது போல்
மற்றொரு மகாகவிஞன் தோன்றுவது
தவிர்க்க முடியாததானது
அவன் தன்னை மகாகவிஞன் என்று அறிவதும் மறப்பதும் அப்படியே

பின்னர் அவர்கள் வேறுபட்டு
மகாசிறுகதையாளர்களும், மகாநாவலாசிரியர்களும், மகாவாசகர்களும், மகாபத்திரிகை ஆசிரியர்களும் ஆனார்கள்
அவர்கள் தொடர்ந்து கடவுளிடம்
தம் தனிமை குறித்து முறையிட்டார்கள்
கடவுள் விசனத்துடன்
அவர்கள் மகா எழுத்தாளர்களின் உற்பத்தியை நிறுத்தாவிட்டால்
தன்னால் ஏதும் உதவ முடியாது என்று முடித்துக் கொண்டார்
மகா எழுத்தாளர்கள் கடவுள் என்றில் இருந்து
குழப்பவாதியாய் ஆனார் என்று யோசித்தனர்
உற்பத்தி கடவுளில் இருந்து தோன்றவில்லை என்றால்
கடவுள் எதற்கு என்று வாதித்தனர்
அண்டத்தை நோக்கி கேள்விகளை சுழற்றி வீசினர்
சொற்களை ஒவ்வொன்றாய் எதிரொலிக்க வைத்து
முதல் பெரும் குறியீட்டு இரைச்சலை ஏற்படுத்தினர்
அனைவரும் உள்ளர்த்தங்களை மட்டுமே புரிந்து கொண்டபடியால்
ஏன் இரைச்சல் ஏற்படுகிறது
என்று மட்டும் புரியவில்லை

கைவிடப்பட்டதாய் அறிவித்துக் கொண்ட மகாஎழுத்தாளர்கள்
தற்கொலை செய்தனர், அவ்வாறு உத்தேசித்து நீண்ட காலத்துக்குப் பின்
அறிவித்துக் கொண்டனர்
மாபெரும் கலகங்களின் நிழல்களுடன் மட்டும் கவனமாய் இணைந்து கொண்டனர்
அமீபா போல் தோன்றி அசையும்
தொடர்ந்து பிளக்கும் குழுக்களில்
இணையவா அல்லது தோற்றுவிக்கவா என்று சஞ்சலித்து
பின்னர் அவை மறைந்த நிலையில்
பிளந்து விட்ட குழுக்களின் வெற்றிடத்தில் எஞ்சியிருப்பது
உள்ளேயே வெளியேயா என்று உரக்க கேட்டனர்
மேடை முழுதும் நாற்காலிகளால் நிரப்புபவர்களை நெருங்கி
மேடையென்பது உண்மையில்
ஒரு மாபெரும் பிருஷ்டம் அமர்வதற்கான பெரும் இருக்கை
என்று அறிவித்தனர்
சின்னஞ்சிறு நாற்காலிகளால் இடங்களை நிரப்புவது என்பது
அற்ப மனித மனதின் பெருத்த அகங்காரம் என்று நிறுவினர்

மகாஎழுத்தாளர்கள் ஒரு நெட்டை ஆள் ஒரு குட்டை ஆள்
என்று சங்கிலியாய் முடிவற்று கோர்த்து நின்றனர்
தமக்கு மேல் ஒரு கடவுளோ
தமக்குக் கீழ் ஒரு சாத்தானோ
இனிமேல் இருக்க சாத்தியப்படாது என்று
ரகசியமாய்
சோர்வுற்ற தூக்கத்தில் இருக்கும் தம் இதயத்தை
தட்டி தட்டி எழுப்பி சொல்லிக் கொண்டனர்
இந்த நிலைப்பாட்டின் படி
ஆக மகாஎழுத்தாளனும் மகாஎழுத்தாளனும் ஒருவனாகவே இருக்க இயலும்
என்று அவனுக்கு புரிந்தது
இருந்தாலும்
எந்த மகாஎழுத்தாளனும் தன்னை ஆக மகாஎழுத்தாளன்
என்று கோரிக் கொள்ளும் ஜனநாயகத்தன்மையும் இதில் உள்ளது
அவனுக்கு திருப்தி அளித்தது

மகாஎழுத்தாளர்கள்
ஒரு செல்லப்பிராணியை இழந்து தெருவில் திரிபவனைப் போல்
ஆக அமைதியான தருணங்களில்
தங்கள் பெயரை தாமே அழைத்துப் பார்த்து சமாதானம் கொண்டனர்,
தம் பெயருக்கு யாரும் பதிலளிக்காதது
சிறு பதற்றம் உருவாக்கினாலும் கூட.

மகாஎழுத்தாளர்கள் தமக்கு முன்னரும் பின்னரும்
வரலாறு
ஒன்றுமில்லை என்பது அறிந்து
தம் கற்பனையால்
அங்கு
தாராளமாய் நிரப்பி வந்தனர்
தமது சமகாலம் என்பது தம் காலம் என்பதால்
சற்று முன் தம்மால் எழுத நேர்ந்ததை
சற்று காலம் கழித்து பரிசோதித்து
பக்கத்து பிரதிகளுடன் ஒப்பிட்டு
உறுதி செய்து கொண்டனர்
இது தொடர்செயலாக
ஒவ்வொரு பிரதியும் தனக்கு அண்டைய பிரதியுடன் தன்னை எந்திரவாக்கில் ஒப்பிட்டபடியே சென்றது
ஒன்று போல் இருப்பதே உண்மை
அல்லது
உண்மையை அறிய வேறு வழியில்லை
என்பதால்
தாம் இனி
ஒன்று போல் இருத்தல் வேண்டும்
என்று உறுதி எடுத்துக் கொண்டன

மகாஎழுத்தாளர்கள் இதன் முடிவில்
ஒன்றை உணர்ந்தனர்
“நான்காவதாய் ஒரு காலம் ஏன் இல்லை
அல்லது
எங்கு போயிற்று
அதுவும் அல்லாவிடில்
ஏன் அப்படி ஒன்று இருக்க கூடாது?
முடிவில் ஒருமித்து
அந்நான்காவது காலத்தை
தம்மிடம் இருந்து
கடவுள் ஒரு கள்ளச்சீட்டைப் போல் ஒளித்து வைத்திருப்பதாய்
அறிந்தனர்
கடவுள் திரும்ப வரும் வரை
அல்லது
நான்காவது காலம் தரப்படும் வரை
தமது பிரதிகளை அக்காலத்தில் வைப்பது
என்று கூட்டாக முடிவெடுத்தனர்
அப்போது
நான்காவது காலத்தில் தாம் உண்மையில் பிரதிகள் உள்ளனவென்றும்
அவை முக்காலங்களால் கறைபட்டு
கண்ணுக்கு புலப்படுவதில்லை
என்றும்
அழுத்தமாக அமைதி காக்கும்
மகாஎழுத்தாளர்கள் சிலர்
சுட்டிக் காட்டினர்
அப்படித் தான் மகாஎழுத்தாளர்கள்
தாமும் கடவுள் என்பதை அறிந்தனர்

கடவுள் தம்மிடம்
அத்தனை வஞ்சகமும் அநீதியும் காட்டி இருக்கவில்லை
என்று முதல் தலைமுறையினர் மெல்ல அழுதனர்
மகாஎழுத்தாளர்கள்
கடவுளை பழிக்கவோ துதிக்கவோ மறக்கவோ
அதற்கு மேல் முயலவில்லை
அதற்கு அவகாசமும் இருக்கவில்லை
பலருக்கும்
முதல் கடவுளும் ஒரு மகாஎழுத்தாளனோ
என்ற சந்தேகம் ஏற்பட்டது
இது மேலும் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது

ஒருநாள் மகாஎழுத்தாளர்களின் பூமியில் இருந்து
மலைகளும் பள்ளத்தாக்குகளும் மறைந்தன
பார்க்க பார்க்க விரியும் சமதளத்தில்
நின்றபடி மகாஎழுத்தாளர்கள் யோசித்தனர்
தாம் ஏன் ஒரே உயரமாகிப் போனோம் என்று
ஆகாயம் தொலைவில் ஒரு சிறு மேகமாக
மிதந்து கொண்டிருந்தது
தாம் அதாலபாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பதாய்
அவர்களுக்குள் பீதி எழுந்தது
மீண்டும் தனிமையில் இருப்பதாய்
அவர்கள்
தத்தமது மூலைகளில் நின்று தேம்பினர்
அன்று முதல்
நட்சத்திரங்கள் தோன்றின வாக்கில்
கோடையின் சிறுதூறல் போல் உதிர்ந்து மறைவதை
சூரியன் மிக ரகசியமாய் புலனாகாது உதித்து
எல்லாப்பகலிலும் தொடர்ந்து விழுந்து மறைவதை
காற்று தன்னையே உறிஞ்சிக் கொள்வதை
தண்ணீர் தன்னையே தவிப்படக்கி மறைவதை
சொற்களில் இருந்து சொற்களும்
காட்சிகளில் இருந்து நிறங்களும்
பிரதிகளில் இருந்து ஒத்த தன்மையும்
சின்னஞ்சிறு விதிகளில் இருந்து கூட அதன் தப்பித்தல் வழிகளும்
மறைவதை கண்டனர்

மகாஎழுத்தாளர்கள் தம் கண்முன்னே ஒன்று மாறுவதானால்
அது வெறும் நிகழ்வு
மாற்றங்கள் என்பவை
பின்னால் தாம் விளக்கும் போது
மட்டும் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியவை
என்று ஒரு நிலைப்பாட்டை ஸ்தாபித்தனர்
வெவ்வேறு மொழிகளில் இருந்து
அது புது உருவங்களில்
தம்மை நோக்கி திரும்ப வருவதை கண்டு வியந்தனர்
மகாஎழுத்தாளர்கள் தம்மை உலக எழுத்தாளர் என்று கோருவதை நிறுத்தி விட்டு
தாமே உலக எழுத்தாளர் என்று அறிவித்தனர்

ஒருநாள் அவர்களின் கதவு தட்டி சொல்லப்பட்டது
உலகம் இனிமேல் உருண்டை இல்லை
எந்த மூலையிலோ கோடியிலோ துருவத்திலோ
நின்று பார்த்தாலும்
தம்மையே அவர்கள் பார்க்க முடியும்
எதுவுமே இனி துவங்கி முடியாது
எழுந்து வீழாது
ஒளிர்ந்து இருளாது
முளைத்து மடியாது
அவர்களுக்கு இந்த ஏற்பாடு
முன்னெதையும் விட
பிடித்திருந்தது
அவர்கள் பிரம்மாண்ட காட்சி சாலை ஒன்று நிர்மாணித்து
அதற்குள் மாபெரும் கூண்டுகள் அடுக்கி
கடவுளை போன்று தோன்றியவர்களை கொண்டு
நிறைத்தனர்
வரிசை வரிசையாய் முடிவற்ற பகற்பொழுதுகளில்
காட்சிசாலையின் வாசல்களில் நின்றனர்
மகாஎழுத்தாளர்கள் தம் துர்கனவில் இருந்து மீள
அது ஒரு சிறந்த பொழுதுபோக்கு என்று நினைத்தனர்

நான்கு காலங்களையும் கடவுளையும் குறித்து
இடையறாது அதுவரை பேசினவர்கள்
தாம் காலாவதி ஆகிவிட்டோமோ என்ற பதற்றத்தில்
பூமிக்குள் பள்ளங்கள் பறிக்க முயன்று தொடர்ந்து தோற்றனர்
தப்பிக்க முயல்பவர்கள் மட்டுமே
அனைவர் கண்களிலும்
உடனடி வந்து விழும் அந்த விநோத உலகில்
அவர்கள் தப்பிக்காமல் இருப்பதாய் நடிக்க
வெகு சிரமப்பட்டனர்

மகாஎழுத்தாளர்கள் தமக்கிருந்த கணக்கற்ற நேரத்தில்
எவ்வேலை வேடிக்கை எது தீவிரம் என்று புரியாமல்
தவித்தனர்
அதனால்
முக்கியம் முக்கியமற்றவை சரி தவறு அற்பம் மேலானது
என்று வகைப்படுத்துபவர்களை கண்டித்து எச்சரித்தனர்
அனைத்தையும் வேடிக்கையாக கொள்வதே தீவிரம் என்றும்
அனைத்தையும் அற்பமாய் கொள்வதே மேலானது என்றும்
அனைத்துக்கும் மேலாய் தாம் இருப்பதாய்
ஒவ்வொருவரும் நம்புவதே ஆரோக்கியம் என்று
புரிய வைத்தனர்

மகாஎழுத்தாளர்கள்
மீத இருப்பதாய் பட்ட
தமது முடிவுறாத நேரங்களில்
ஒருவரை ஒருவரை சந்தித்து
பெயர்களை நினைவூட்டிக் கொண்டனர்
இது ஒரு மற்றொரு முடிவுறாத காரியமாக இருந்தது
ஆக
உலகம் எவ்வளவு பெரிது என்று
தமக்குள் மீள மீள வியந்து கொண்டனர்
அவர்கள் தினமும் நெடுவழி பயணித்தனர்
பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்தவர்களையும்
சற்றுமுன் கைகுலுக்கியவர்களையும்
பார்த்துக் கொள்ளும் போது
தம்மை மறந்து விட வேண்டாம்
என்று கெஞ்சி கேட்டுக் கொண்டனர்
தம்மை நினைவு கொண்டுள்ள
ஒவ்வொரு மகாஎழுத்தாளனின், மகாவாசகனின், மகாசிந்தனையாளனின், மகாபுரவலனின், மகாசோம்பேறியின், மகாஅரட்டையாளனின் பட்டியலை
தம் கையுடனே கொண்டு சென்றனர்
புத்தகங்களுக்கு அட்டையாக்கினர்
சிலர் பின்குறிப்பாக்கினர், சிலர் தனிபுத்தகமே பிரசுரித்தனர்
இந்த பட்டியல்கள் கைமாறின,
ஒன்றையொன்று விழுங்கி ஒன்றுடன் ஒன்று இணைந்து
நீண்டு சென்றன
பட்டியல்கள் உலகம் மொத்தததையும் இணைப்பதால்
இவையே சிறந்த வலைதொடர்பு செயல் என்று
அவர்கள் அறிவித்தனர்

மகாஎழுத்தாளர்களின் பட்டியல்கள்
படிக்கப்பட்ட உடன்
மகாபுத்தகங்கள் மறைந்து விடுவதால்
பட்டியல்களின் ஆவண முக்கியத்துவம்
அதிகம் ஆனது
பட்டியல்களை தக்க வைக்க
மகாஎழுத்தாளர்கள்
தமது வீடுகளின் ஜன்னல்களை சதா திறந்து வைத்தும்
வீதியில் எப்போதும் கைகளை குலுக்கும் பாவனையில் நீட்டி பயணித்தும்
விரோதிகளையும் அலுப்படைந்தவர்களையும் ஒவ்வாதவர்களையும் தப்பிக்க நினைப்பவர்களையும்
ஒரு சேர அரவணைக்க முயன்றும்
தம்மை நினைவூட்டிக் கொண்டிருந்தனர்
மகாபுத்தகங்கள் ஏற்கனவே எழுதப்பட்டதாலும்
எப்போதும் எழுதப்படக் கூடியவை என்பதாலும்
யாரிடம் இருந்து எங்கும் கடன்பெற்றுக் கொள்ளக் கூடியவை என்பதாலும்
அவர்களுக்கு மகாபுத்தகங்களை எழுதும் நேரம்
அதற்கு மேல் வாய்க்கவில்லை
தமது பொழுதுகள் இப்படி பிஸியாக ஆகும் என்று
அவர்கள் ஒருபோதும் கற்பனை செய்திருக்கவில்லை
அப்போது தான் அவர்களுக்கு
ஆக மகாபட்டியல் செய்யும்
எண்ணம் உதித்தது

ஆக மகாபட்டியல் ஒன்றே
சமகாலத்தின் தேவை என்று
தொடர்பயணங்களில் சோர்வுற்று
பஞ்சாய் உலர்ந்திருந்த ஒவ்வொரு மகாஎழுத்தாளனும் நம்பினான்
அல்லது ஆமோதித்தான்
ஆக மகாபட்டியல் சுருக்கமாக இருக்க வேண்டும்
மாற்றங்களோ பருவங்களோ பிரிவுக் கோடுகளோ அற்ற உலகத்தில்
ஒரு தெளிவை தீர்க்கத்தன்மையை ஏற்படுத்துவதாக
அது இருக்க வேண்டும்
என்பதும் அனைவரது ஒருமித்த கருத்தாயிருந்தது
மிகச்சுருக்கமான ஆக மகாபட்டியலில்
முதல் சில இடங்களில் வருபவர்களுக்கு
பட்டயங்களும் பளபளப்பான கிரீடங்களும் சிறு பொம்மை நாற்காலிகளும் வழங்கப்படும்
அவர்களின் பெயர்கள் முடிவற்று உச்சரிக்கப்படும்
வாழ்த்துக்களும் மறுப்புகளும் ஆதரவுகளும் கண்டனங்களும்
ஒரே தரப்பால் சொல்லப்பட்டு அதே தரப்பால் கவனிக்கப்படும்

ஆனால்
எதிர்பாராதபடி
மிகச்சுருக்கமான ஆக மகாபட்டியலின்
கணக்கிலடங்கா பிரதிகள்
சின்னசின்ன ஆனால் முக்கிய மாற்றங்களுடன்
ரகசியமாய் தோன்றி கைமாறின
பட்டியல் பிரதிகள் தொடர்ந்து திருத்தப்பட்டதால்
யாரும் புரியாதபடி ஆயிற்று
இறுதியில் மகாஎழுத்தாளர்கள்
தம்மில் யார் யாரென்பதை
காலம் நிச்சயமாய் ஒருநாள் சொல்லும் என்று
இரண்டாவது மாபெரும் இரைச்சலை உருவாக்கினர்

பல நாட்களுக்கு பிறகான
ஒரு காலை சவரத்தின் போது
மகாஎழுத்தாளர்களின் வரலாற்றை
இவ்விடத்தில் நிறுத்தி
திரும்பி ஓட விட்டு பார்க்க எத்தனித்த கடவுள்
தமது சிறிய எளிய கரங்கள்
இந்த மாபெரும் உயிர்களை எப்படி
உருவாக்கியது
என்று எதேச்சையாய் வியந்து பின்
தொடர்ந்தார்.
Read More

Friday 20 May 2011

நட்சத்திர பார்வையாளன் - - லூயிஸ் மக்நீஸ்



நாற்பது வருடங்களுக்கு முன்பு (வேறு யாருக்கும் இல்லையென்றாலும், எனக்கு இந்த எண் சற்று ஈர்ப்புடையது) அது ஒரு அற்புதமான நட்சத்திர இரவு
மேற்கே செல்லும் ரயில் காலியாக இருந்தது; இடைவழிகள் இல்லை
ஆக ஒரு பக்கத்தில் இருந்து மற்றொன்றிற்காய் விரைந்து ஓடி ஏறத்தாழ தாங்கவொண்ணா விதம் பிரகாசமான
வழக்காறற்ற காட்சியை காண முடிகிறது
விண்ணில் துளைக்கப்பட்ட ஓட்டைகள் என்னை தமது
லத்தீன் பெயர்களால் ஒரு பாதியும்
எத்தனை தொலைவில் இருந்தாலும் தமது ஒளியை அவை நெடுங்காலம் முன்பே (ஒரு சிலவற்றுக்காவது)
துறந்து விட்டிருப்பதாய் பாடபுத்தகங்களில் படித்திருப்பதால் மறுபாதியும் அவை கிளர்ச்சியுற வைத்தன
இதை இப்போது நினைக்கையில் குறித்திடுகிறேன்
அப்போது, நாற்பது வருடங்களுக்கு முன், ஒரு சிலவற்றையாவது
துறந்த ஒளி நான் பார்க்கும்படி
நேரத்துக்கு வரப்போவதில்லை, அவ்வாறு இங்கே
ஒருவழியாய் வரும் போது பக்கத்திற்கு பக்கம்
ஒரு அர்த்தஜாம ரயிலில் ஓடி அதை ரசித்து, வீணாய் பூஜ்யங்களை கூட்டி சேர்ப்பதற்கு
யாரும் உயிரோடில்லை என்பதை அறியும்
Read More

பால்மண்டலக் காதல் - அட்ரியன் ஹென்றி



அஸ்தமனத்தில் காலடிகளை வெதுவெதுப்பாக்கு
படுக்கைக்கு நாம் போகுமுன்
ஓரியனின் ஒளியில் உன் புத்தகம் படி
சிரியஸ் தலையருகே காவல் நிற்க
பிறகு எம்பி, கோள்களை அணைத்திடு
நாம் வேடிக்கை பார்ப்போம் அவை ஒவ்வொன்றாய் அணைவதை
என்னை முத்தமிடு; சொல் ஐ லவ் யூ
கடைசி அஸ்தமன சூரியனின் வெளிச்சத்தில்
நாம் எழுவோம் நாளை விடிகாலை
ஒரு புது பிரபஞ்சம் தொடங்கி ஆகிற்று

நட்சத்திர பார்வையாளன்
-         லூயிஸ் மக்நீஸ்
-         தமிழில் ஆர்.அபிலாஷ்

நாற்பது வருடங்களுக்கு முன்பு (வேறு யாருக்கும் இல்லையென்றாலும், எனக்கு இந்த எண் சற்று ஈர்ப்புடையது) அது ஒரு அற்புதமான நட்சத்திர இரவு
மேற்கே செல்லும் ரயில் காலியாக இருந்தது; இடைவழிகள் இல்லை
ஆக ஒரு பக்கத்தில் இருந்து மற்றொன்றிற்காய் விரைந்து ஓடி ஏறத்தாழ தாங்கவொண்ணா விதம் பிரகாசமான
வழக்காறற்ற காட்சியை காண முடிகிறது
விண்ணில் துளைக்கப்பட்ட ஓட்டைகள் என்னை தமது
லத்தீன் பெயர்களால் ஒரு பாதியும்
எத்தனை தொலைவில் இருந்தாலும் தமது ஒளியை அவை நெடுங்காலம் முன்பே (ஒரு சிலவற்றுக்காவது)
துறந்து விட்டிருப்பதாய் பாடபுத்தகங்களில் படித்திருப்பதால் மறுபாதியும் அவை கிளர்ச்சியுற வைத்தன
இதை இப்போது நினைக்கையில் குறித்திடுகிறேன்
அப்போது, நாற்பது வருடங்களுக்கு முன், ஒரு சிலவற்றையாவது
துறந்த ஒளி நான் பார்க்கும்படி
நேரத்துக்கு வரப்போவதில்லை, அவ்வாறு இங்கே
ஒருவழியாய் வரும் போது பக்கத்திற்கு பக்கம்
ஒரு அர்த்தஜாம ரயிலில் ஓடி அதை ரசித்து, வீணாய் பூஜ்யங்களை கூட்டி சேர்ப்பதற்கு
யாரும் உயிரோடில்லை என்பதை அறியும்
Read More

Wednesday 18 May 2011

மேற்கிந்திய தீவு பயணம்: காயங்களில் இருந்து ஓய்வுக்கு



நேரடி ஒளிபரப்பு துவங்காத ஒரு காலத்தில் அனைத்து அணிகளுக்கும் ஒரு கொடுங்கனவாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுப்பயணங்கள் மெல்ல மெல்ல சிரமமான தொடர்களாக மாறி பின்னர் இப்போது ஒரு எளிய சுற்றுலாவாக முடிந்து விட்டது. சமீப தொடரில் பாகிஸ்தான் அங்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் ஆட சர்வதேச பரிச்சயம் குறைந்த ஒரு அணியை அனுப்பியது. மே.இ தீவுகளும் தமது மூத்த வீரர்களை விலக்கியது. இரண்டு முதிரா அணிகள் மோதியதில் யாருக்கும் சுவாரஸ்யம் இல்லாமல் ஒரு அணி வென்றது. அடுத்து இதிலிருந்து கற்றுக் கொண்ட பாவனையில் இந்திய தேர்வாளர்களும் மே.இ தீவுகளுக்கு ஒருநாள் தொடர் ஆட இளைய வீரர்களின் அணி ஒன்றை அனுப்புகிறது. அவ்வணியில் உலகின் சிறந்த அணித்தலைவரும், உலகின் தலைசிறந்த மட்டையாளரும் இல்லை. பாக் செய்தது பரீட்சார்த்த தேர்வு என்ற நியாயம் இருந்தது; ஏனென்றால் அவர்களின் அணி உலகக் கோப்பையில் சொதப்பியது. ஆனால் உலக சாம்பியன்களின் தேர்வு ஒருவித உதாசீனம் மற்றும் அக்கறையின்மையில் இருந்து வருவது. மேலும் இந்த இந்திய அணியின் தேர்வுக்கு ஒரு சின்ன வரலாற்று முக்கியத்துவமும் உண்டு.
முதன்முதலாக ஐ.பி.எல்லில் ஆடிக் களைத்ததற்காக வீரர்களுக்கு சர்வதேச தொடரில் இருந்து ஓய்வு வழங்கப்படுகிறது. இலங்கையின் மூத்த வீரர்கள் ஒரு ஆஸி சுற்றுத் தொடருக்கு பின் உலகக்கோப்பைக்குப் பின் ஐ.பி.எல்லுக்கு பின் சளைக்காமல் இங்கிலாந்து பயணத்துக்கும் செல்கிறார்கள். ஆஸ்திரேலிய காப்டன் சர்வதேச கிரிக்கெட்டுக்காக ஐ.பி.எல்லை ஆரம்பத்தில் இருந்தே தவிர்த்து வருகிறார். இங்கிலாந்து வீரர்களும் ஐ.பி.எல் தவிர்த்து தங்களது கவுண்டி ஆட்டங்களில் தீவிரமாய் ஆடி இந்திய தொடருக்காக தயாராகி வருகிறார்கள். ஆனால் முரண்பாடாக இந்தியாவின் மூத்த வீரர்களும் தலைவரும் சர்வதேச தொடர் ஒன்றை தியாகம் செய்து மிகுந்த ஈடுபாட்டோடு உள்ளூர் ஆட்டத்தொடர் ஒன்றை ஆடி வருகிறார்கள். இங்கு சில காரணங்களை அணுகலாம்.
மே.இ தீவுகள் ஒருநாள் தொடருக்கு அவர்கள் செல்லாததன் காரணம் அவ்வணியின் சமகால தரக்குறைவை உத்தேசித்து இருக்கலாம். ஆனால் கடந்து பத்து வருடங்களில் இந்தியாவுக்கு எதிராக மே.இ தீவுகள் வலுவாகவே ஆடி சில முக்கிய ஐ.சி.சி தொடர்களில் இருந்து கூட நம்மை வெளியேற்றி உள்ளது. 2011 உலகக் கோப்பையில் கூட இதே கால் நடுங்கும் மே.இ தீ அணி நம்மை தோல்வியை நோக்கி தன் குச்சிக் கைகளால் நெருக்கியது. கடந்த மே.இ.தீ பயணத்தின் போது நாம் டெஸ்டு தொடரை வென்ற போது கூட அதற்கு கடுமையாக போராட வேண்டி இருந்தது. அதற்கு பின் ஒருநாள் தொடரை இழந்தோம்.
மேலும் இந்த அணித் தேர்வு சர்வதேச கிரிக்கெட்டின் சரிந்து வரும் சந்தை மதிப்பு மற்றும் அந்தஸ்தை சுட்டுகிறது. உதாரணமாய், மே.இ.தீவுகளில் ஒரு சதம் கூட அடித்திராத தோனிக்கு ஐ.பி.எல் கோப்பை வெல்வதை விடவும் அங்கு ஆடுவது அல்லவா சவாலாக இருந்திருக்க வேண்டும். அதே போல் சஹீர் கானுக்கும் அங்கு தன்னை நிரூபிக்கும் கனவு இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர் ஐ.பி.எல்லில் காயும் தகரக்கூரை மேல் பாயும் பூனை போல் ஆடிக் கொண்டிருக்கிறார்.
எழுபதுகளில் கவாஸ்கருக்கு முந்திய இந்திய அணி ஒன்று மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றிருந்த போது ஒரு ஆட்டத்தில் ஆடுவதற்கு 11 வீரர்கள் தேறவில்லை. காரணம் பெரும்பாலானோர் மே.இ.தீ வேகவீச்சாளர்களால் காயப்படுத்தப்பட்டு ஒதுங்கி இருந்தனர். பின்னர் அடுத்த பயணத்தில் கவாஸ்கர் அங்கு அறிமுகமாகி சுலபமாக ஆடி சதங்கள் அடித்து பெரும் அங்கீகாரம் பெற்றார். ஒரு இந்தியரால் அதிவேகப்பந்தை ஆட முடியும் என்று அவர் மே.இ தீவுகளில் அப்போது நிரூபித்தது பெரும் சாதனையாக கருதப்பட்டது. எண்பதுகளின் அச்சுறுத்தும் வேகவீச்சாளர் நால்வரும் ஓய்வு பெற்ற பின்னரும் தொண்ணூறுகளில் அவர்களுக்கு அடுத்தபடியாக ஆம்புறோஸ், வால்ஷ், பிஷப் போன்ற திறமையான சற்று குறைவாக அச்சுறுத்தக் கூடிய வேகவீச்சாளர்கள் இருந்தனர். கவாஸ்கருக்கு அடுத்து அங்கு நிலைத்து ஓட்டங்கள் எடுக்க முடிந்தது சச்சின் மற்றும் திராவிடால் தான். மிச்ச ஒன்பது பேருக்கும் மே.இ தீவுகள் தொண்ணூறுகளிலும் ஒரு புதிர் நிலமாகத் தான் தொடர்ந்து இருந்தது. வால்ஷ்-ஆம்புறோஸ் இரட்டையர் ஓய்வு பெற்ற பின் கங்குலி தலைமையின் கீழ் அங்கு சென்ற இந்திய அணி ஹூப்பரின் புத்துயிர்ப்பினால் வலுவுற்ற மேற்கிந்திய மட்டையாட்டத்தை சமாளிக்க முடியாது திணறியதால், அந்த தொடரையும் கைப்பற்ற முடியவில்லை. இதற்கு பின்னர் தான் மே.இ தீவுகள் இறுதியாக மாபெரும் வீழ்ச்சிக்காக விளிம்பை நோக்கி சென்றது. அரசியல், உள்கட்டமைப்பின் தோல்வி, வேறு ஆட்டவகைகளுடனான போட்டி என பல்வேறு காரணங்களால் மே.இ தீவுகள் ஈடுபாட்டையும் கவனத்தையும் இழந்து சிதறிக் கொண்டிருந்தது. இளம் வீரர்கள் ஊழல், ஆட்டநிலை சீர்குலைவு போன்ற காரணங்களால் மந்தையில் இருந்து பள்ளங்களுக்கு சென்றனர். சந்தர்பால் போன்ற அனுபவஸ்தர்கள் வாரியத்துக்கு எதிராக ஆட்டக்காரர்களின் சங்கம் அமைத்து பிளவுபட்டனர். இந்த கட்டத்தில் இந்தியாவின் ஆட்டத்தரமோ திராவிடின் கீழ் ஒரு உச்சத்தை அடைந்திருந்தது. மிகச்சிறந்த வேகவீச்சாளர்கள் கூர்மையாக தொடர்ந்து ஆடிய, அணியில் இடத்துக்காக போட்டியிட்ட பொற்காலம் அது. இதனுடன் மரபான வலுவான மட்டையாட்டமும் சேர்ந்து இந்தியாவுக்கு தனது முதல் மே.இ தீவுகள் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுத் தந்தது. அப்போது இந்த வெற்றி ஒரு பெரும் வரலாற்று கணமாக கொண்டாடப்பட்டது. ஆடுவதற்கு 11 பேரை திரட்ட முடியாது அச்சுறுத்தலான காலத்தில் இருந்து முதல் தொடர் வெற்றி வரையிலான இந்தியாவின் இப்பயணம் மூன்று பத்தாண்டுகளை எடுத்துக் கொண்டது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வேறெந்த தேசங்களுக்கான பயணங்களை விடவும் இந்தியாவின் கிரிக்கெட் ஆட்டவரலாற்றை மே.இ தீ பயணங்களே துல்லியமாக சித்தரிப்பன. அந்த மூன்று பத்தாண்டு காலத்தில் மே.இ தீ செங்குத்தாக வீழ்ந்தது என்றால் இந்தியா அது விழுந்த இடத்தில் இருந்து உதித்து மேலெழுந்தது. ஆனால் வரலாறு இங்கு முடிகிறது.
தோனி தலைமை ஏற்க வேண்டியிருந்த இந்த மே.இ.தீ பயணம் ஒரு இந்திய A அணி தொடர் போல் ஆடப்பட இருக்கிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கும் அடையவோ இழக்கவோ குறிப்பிடத்தக்கதாய் ஏதுமில்லை. ஒன்றாம் வகுப்பு பரீட்சை எழுதச் செல்லும் குழந்தையின் எதிர்பார்ப்புடன் இந்திய அணி அங்கு செல்கிறது. வரலாற்றை தவிர்த்து செய்தி மதிப்பு கூட குறைந்து விட்ட பயணமாக இம்முறை இது இருக்கிறது. பயிற்சியாளராக புதிதாக பதவியேற்று அதற்கு முன்னிருந்தே இந்திய ஆர்வலர்களின் வயிற்றில் புளியை கரைத்துக் கொண்டிருந்த டங்கன் பிள்ட்சர் கூட இங்கிலாந்து மற்றும்  ஆஸி பயணங்களை மட்டுமே சவால்களாக காண்கிறார். உண்மையிலேயே மே.இ அணி பூமியை பிளந்து கீழே போய் விட்டதா? எல்லா டெஸ்டுகளும் இரண்டு மூன்று நாட்களில் முடியப்போகின்றனவா? இல்லை. கெய்ல், சந்தர்போல், பிராவோ, சர்வான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் திரும்பினால் டிவெயின் பிராவோ போன்ற புதிய மட்டையாளர்களின் பங்களிப்புடன் அவர்களால் இந்திய பந்து வீச்சாளர்களை தங்கள் பங்குக்கு அவர்களாலும் ஓடவிட முடியும். ஆனால் நடந்து வரும் பாக் பயண முடிவுகள் இந்திய தேர்வாளர்களின் முடிவை பாதித்துள்ளது அப்பட்டம்.
மொத்த அணியுமே காயமுற்றதில் ஆரம்பித்து தோல்வியை தவிர்ப்பதில் தொடர்ந்து வெற்றியில் முடிந்த பின் தற்போது இந்தியாவின் 2011 மே.இ தீ பயணம் ஒரு ஓய்வுப்பயணமாக வேறு திசை எடுத்துள்ளது. இனிமேல் இந்தியாவில் டாஸை சுண்டிப் போட்டால் அதன் ஒரு பக்கம் எப்போதும் கோடிகளில் பணம் புரட்டுவதை காட்டுவதாக மட்டுமே இருக்கும் என்பதற்கு இப்பயணம் ஒரு அறிகுறியாக இருக்கலாம்.
Read More

Tuesday 17 May 2011

சின்ன தலைவலியில் இயங்கும் உலகம்



இன்று முழுக்க
ஒரு சின்ன தலைவலியுடன்
வேலைகள் செய்வதற்கு பழகுகிறேன்

எரிச்சலானவை சுவாரஸ்யமாவதும்
வழக்கமான தருணங்களில்
கோபமே வராததையும்
கவனிக்கிறேன்

சின்ன தலைவலியுடன் இருக்கும் போது
வழக்கத்துக்கு மேலாக
எதுவுமே நிகழ்வதில்லை
ஆனாலும் எனது
செயல்களுக்கு
சிறப்பாக ஒரு தகுதி கிடைத்தும் விடுகிறது

ஒவ்வொன்றையும்
கூர்மையாக கவனித்து
கச்சிதமாக துரிதமாக தயக்கமின்றி
செய்தவதற்காக
அப்போது நீங்கள் யாருமே
பாராட்டும் பாத்திரத்தில்
இருக்க வேண்டியதில்லை
எனக்காக சதா புன்னகைத்து கொள்கிறேன்

சின்ன தலைவலிக்கு
மருந்து உண்பது
ஒத்திசைவற்ற ஒரு பொய்யை
சொல்வது போன்றது
சின்ன தலைவலி
தரும் தன்னம்பிக்கையை
மருந்து ஒருபோதும் தராது

தொடர்ந்து வழங்கப்படும் தண்டனைகளை
எதிர்ப்பது
சின்ன தலைவலியின் போது
லாவகமாகிறது
தண்டனைகள் மயக்க ஊசியை போன்றவை என்றால்
சின்ன தலைவலி
நம்மை உறங்க விடுவதே இல்லை
தண்டிப்பவரின் மனதுக்கு
மிக அருகாமையில் இருப்பதால்
விழிப்பாக இருப்பது கூட
அவசியமற்றதாகிறது

போதையை விடவும்
கூர்மையை விடவும்
வாதசாமர்த்தியத்தை விடவும்
அன்பற்ற இறுக்கத்தை விடவும்
சின்ன தலைவலி
பாதுகாப்பானது
அதிகாரமிக்கவரின் குற்றங்களை போல்
பரிசுத்தமானது

சின்ன தலைவலியுடன்
தூங்க முயல்வதை விட
அல்லது விழித்து வேலை செய்வதை விட
பாசாங்கு
வேறேதும் இருக்க முடியாது
அப்போது நமக்கு
நண்பர்களோ
பகைவர்களோ இல்லை
அனைவரையும்
மௌனம் காக்க வைப்பது
மெல்ல பதற்றம் கொள்ள வைப்பது
முள்ளை விடுவிப்பது போல் அன்பை விடுவிப்பது
கத்தி முனைவில் நிறுத்தி வைப்பது
இயல்பான ஒன்றாகிறது

வலியும் இன்பமும் துய்ப்பதற்கான
காரியங்கள்
என்று நம்புகிறோம்
ஒன்றை மறப்பதும்
மற்றதை நீட்டிப்பதும்
இவ்வளவு மெத்தனமாய் நகரும் வாழ்வுக்கு
செய்யும் அநீதி

ஒரு சின்ன தலைவலி
மிகப் பெரிய வலியாகவோ
மிக சிறந்த இன்பமாகவோ
ஆகும் போது தான்
‘நாம் மிக கவனமாக வேண்டும்
அப்போது
அவர்களுக்கு
அது வந்து விட்டதென்று அர்த்தம்
பின்
சின்ன தலைவலியுடன்
இயங்கும் உலகை
அசூயையுடனும் அச்சத்துடனும் கவனிக்க ஆரம்பிக்கிறீர்கள்
Read More

Sunday 15 May 2011

மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போது




மிக அதிகமாக அன்பு செய்யப்படும் போதும்
மிக அதிகமாக வெறுக்கப்படும் போதும்
நாம் இருக்கிறோம்
உறக்கத்தில் மரிப்பதை போல

மிகச் சிறந்த அன்பு
குருதி சொரியும் வாளைப் போலவும்
மிகக் கொடூரமான வெறுப்பு
ஆக சௌந்தர்யமான பூக்களின் ஒரு மழையை போலவும்
இருப்பதும்
ஒரு இயல்பு என்பதை
இயல்பாகவே அப்போது நாம்
உணர்வதில்லை

குளிர்கால குளிரை போல்
அழுத்தமான தெளிவான
அடையாளங்களுடன் வரும்
அன்பையும் வெறுப்பையும்
நாம் செயற்கை என்று
உதாசீனிக்கிறோம்
இரண்டுக்கும் நியாய அநியாயங்களும்
விதிகளும்
அளிக்கிறோம்
இருட்டில் வெளிச்சத்தை காண்கிற ஒரு பூனையை போல்
இரண்டும்
இயல்பாய் இருப்பது குறித்து அச்சம் கொள்கின்றன

கசப்பை அல்லது இனிப்பை
மட்டுமே
அருந்தி வாழ்பவர்கள்
ஏதாவதொன்றின் இன்மையை அல்ல
பேரொளியின் திகைப்பை தான்
அஞ்சுகிறார்கள்
கடவுளும் சாத்தானும் எங்கிருந்தோ
ஒரு புள்ளியில் இருந்து வெடித்து தோன்றாதவரை
கடவுளும் சாத்தானும்
அவர்களுக்கு ஏற்பே

கசப்பை அல்லது இனிப்பை
மட்டுமே
அருந்தி வாழ்பவர்களுக்கு
கசப்பதோ இனிப்பதோ
இல்லை

அவர்களை யாரும்
நேசிக்கவோ வெறுக்கவோ
முடிவதில்லை

வாலை வாய் முழுங்கிய பின்
வால் எங்கிருந்து தொடங்குகிறது
என்று அவர்களுக்கு புரிவதில்லை

அவர்களால் யாரையும்
நேசிக்கவோ வெறுக்கவோ
முடிவதில்லை

மிகுந்தோ மிகாமலோ
Read More

Saturday 14 May 2011

முகுந்தின் குழந்தைகள் குழந்தைகள் அல்ல




குழந்தைமையை, அதன் பரிசுத்த நிலையை அல்லது லயிப்பை பேசும் கவிதைகள் அல்ல முகுந்த் நாகராஜன் எழுதுவது. அவரது கவிதைகள் வாழ்வின் மற்றொரு முக்கியமான கலாச்சார சடங்கை காட்டுகின்றன. அன்றாட உறவாடல்களில் இருந்து சமூகம் கடவுள் பிரபஞ்சத்திடம் வரை நாம் மேற்கொள்ளும் விளையாட்டுத்தனம், ஏமாற்றுகள், தந்திரங்கள், இவற்றின் குழந்தைமை. நாம் ஒவ்வொரு நாளும் நம் உமிழ்நீரில் இருந்து ஓராயிரம் எளிய பொறிகளை உருவாக்குகிறோம். ஒவ்வொருவராய் அதில் விழ காத்திருக்கிறோம்; அந்த இருப்பின் போதும் நாமும் ஓராயிரம் பொறிகளில் மாட்டிக் கொள்கிறோம். உதாரணமாய் நாம் அன்பு என்று பேச ஆரம்பிக்கும் போதே ஒரு பொறியை உருவாக்கி எதிர்தரப்பு அதில் மாட்டுவதை உள்-உவகையுடன் எதிர்பார்க்கிறோம். அல்லது வெறுப்பு என்று மற்றொரு சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறோம்... இதில் தீமை இல்லை, நன்மையும் இல்லை. இந்த பொறி வைத்தல் சடங்குகளின் பொருள் வாழ்வை நாம் உள்ளார்ந்து கொண்டாடுகிறோம், நமது இயல்பான வேட்டைமிருக மனநிலையை உயிருடன் வைத்திருக்கிறோம் என்பது மட்டுமே. இதனாலே முகுந்தை நாம் குழந்தைமை பற்றின கற்பனாவாத கவிதை மரபுடன் (வெர்ட்ஸ்வொர்த்தில் இருந்து பாரதி வரை) தொடர்பு படுத்தாமல் இருப்பது நலம். சுருக்கமாக முகுந்தின் சிறந்த கவிதைகளில் குழந்தைகள் குழந்தைகள் அல்ல. அவர்கள் விளையாட்டை நாடும் மனித மனத்தின் குறியீடுகள்.
இந்த விளையாட்டுத்தன்மை பதற்றத்தை, பரஸ்பர சந்தேக நிலையை கடக்க பயன்படும். இங்கு ஒரு சின்ன அபத்தம் நிகழ்வதும் தவிர்க்க முடியாது.
கோயில் யானை கவிதையில் கோயில் வாயிலில் நின்று வெடிகுண்டு பரிசோதனை செய்கிறார் ஒரு காவலர். இந்த அச்சுறுத்தலான நிலைமையை ஒரு குழந்தை விளையாட்டாக மாற்றி கொண்டு அவனிடம் சென்று தலையை தாழ்த்தி காமிக்கிறது. அவனும் சிரித்துக் கொண்டே சோதனை கருவியாய் அவள் தலையை தொட்டு உள்ளே அனுப்புகிறான். அவனை ஒரு கோயில் யானையுடன் ஒப்பிடுகிறார் முகுந்த். மேற்சொன்ன நவீனத்துவ அபத்தம் இருந்தாலும் முகுந்த் ஸ்ரீஸ்ரீயோ ஜக்கியோ அல்லாவிட்டாலும், இது ஒரு வாழக் கற்றுக் கொடுக்கும்கவிதைதான்.
மற்றொரு கவிதையில் பொம்மைகளை வெறுக்கும் (அதாவது விளையாட்டு பண்பு இல்லாத) ஒரு பெண் தன் தோழிக்கு பரிசளிக்க பாண்டிபஜார் இடுப்புயர கரடி பொம்மை ஒன்று வாங்கி தூக்க முடியாமல் இடுப்பில் வைத்து நடக்கிறாள். கரடி தன் விளையாட்டை ஆரம்பிக்கிறது. அவள் மீது சாய்கிறது. பின்னர் குளிர அவளை கட்டிப் பிடிக்கவும் செய்கிறது. அப்பெண் கரடியை செல்லமாய் அதட்டுகிறாள். இக்கவிதை அப்பெண்ணின் சன்னமான தனிமையை அதில் இருந்து ஒரு குழந்தைமையான தருணத்தில் அவள் மீள்வதை சொல்கிறது. தனிமையுடனான விளையாட்டு அதனளவிலான சோகமும் கொண்டது. மற்றொரு பெண் (இணைப்புகள்) எப்போதும் துணி மடித்துக் கொண்டே மெல்லிய குரலில் பேசுபவள். அவளை அழைக்கும் போது தொலைபேசி இணைப்பு உபயோகத்தில் உள்ளதென்று அறிவிக்கும் பதிவு குரலின் சொந்தக்காரியின் குரலும் அவளுடையது போன்றே உள்ளது. இருவரும் யாரிடமும் பேசாமல் யாருடனே பேசியபடி உள்ளார்கள்.
“பாபு இறந்து விட்டாரில் ஒரு ரயில் பயணத்தில் குடும்பத் தலைவனுக்கு மரண சேதி அலைபேசியில் வருகிறது. அவர் தனது பயணத்திட்டத்தை மாற்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல முடிவாகிறது. அவசரமாக ஒவ்வொரு உறவினர், நண்பர், தெரிந்தவராக அழைத்து செய்தி சொல்லி மரண வீட்டுக்கு செல்வதற்கான தயாரிப்புகளை செய்கிறார். மறுமுனையில் உள்ளவர்களுக்கு தமதான நெருக்கடிகள் உள்ளன. ஒருவர் சாவியை தன் முதலாளியிடம் கொடுத்து வருவதாய் சொல்கிறார் மற்றொருவர் தன் நைட் டுயூட்டியில் இருந்து விடுப்பெடுத்து தான் வேறு சிலரை அழைத்து உடனடியாய் ஆஸ்பத்திரிக்கு போய் துக்கம் அனுசரிக்கும் வேலையை செய்ய வேண்டும். வேணியின் குடும்பம் மொட்டைமாடியில் தூங்குவதால் அவர்களுக்கு காலையில் தான் சேதி சொல்ல முடியும். இந்த அலைபேசி உரையாடல் நடுவே ரயில் நபர் தன் கூட வந்தவரிடம் சொல்கிறார் “எவ்வளவோ அட்வைஸ் பண்ணினேன் கேட்டாரா. இந்த வசனம் அவர் இந்த உரையாடல்களுக்குள் இல்லை என்பதை சொல்லுகிறது. மேலும் யாருமே நேரடியாய் சந்திப்பதும் இல்லை. அதற்கு இந்த நடைமுறை அவசரங்களும் பரபரப்பும் சடங்குகளும் தோதான சொற்களும் பயன்படுகின்றன. கெ அலைவரிசை தொகுப்பில் முகுந்த் முகுந்த்துத்தனமல்லாத சொல்முறையை சில இடங்களில் பயன்படுத்துகிறார், நவீனத்துவ தமிழ்க் கவிதையை தூசு தட்டி தன் வரிகளில் ஆதுரமாய் பார்க்கிறார், பிரமிளை போன்று எழுதி வேறு பார்க்கிறார். இந்த எழுத்தாள குழந்தைத்தனத்தின் மத்தியில், மேற்சொன்ன கவிதையில் முகுந்த் துருத்தாத உருவக வரி ஒன்றையும் எழுதியுள்ளார் அது திறப்பு வரி. அதைப் பற்றி உள்ளே நுழையலாம்.
“பார்க் ஸ்டேசன் வந்ததும்
எப்போதும் போல்
கூட்டத்தை தவிர்க்க
ரயில் நிற்கும் முன் இறங்கி ஓடாமல்
கூட்டத்துக்கு நடுவில் மெதுவாகப் போனேன்

கூட்டத்துக்கு நடுவே மெதுவாக போவது மரணம் தான். தொடர்ந்து இங்கிருந்து மேல்நோக்கி வாசித்தால், மிக அமைதியாக ரயிலில் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்து மனிதனின் பாசாங்கை, உள்ளார்ந்த அச்சத்தை, அபத்தத்தை கவனிப்பதும் முகுந்த அல்லதான். பொதுவாக கவிஞர்கள் கடைசி வரியில் தான் யோசிப்பார்கள். அதனால் நாம் கடைசி வரி வந்ததும் அந்த “அழுத்தத்துக்காக தயாராகி விடுவோம். ஆனாலும் முகுந்த் இங்கு உருவகத்தை அழுத்தாமலே கொண்டு வருகிறார். அதனால், முதல் வாசிப்பில் ரயிலில் இருந்து இறங்கி நடப்பது நம் முகுந்த் தான் என்று அநேகமாய் நம்பி விடுவோம். ஆனாலும் நமக்கு கவிஞர்களின் சுபாவம் தெரியுமாகையால் கடைசி வரியில் எப்படியும் ஒருமுறை மீள்பார்வை ஓட்டாமல் போவதில்லையே.

சுயமாய் வாழ்வை சமாளிக்கும் வகை தந்திர விளையாட்டில் இருந்து வேறுபட்ட ஒன்றாய் உள்ளது திருமணம். இது கச்சிதமான விதிகளை நுணுக்கமாக அனைவரும் பங்கேற்று ஆடும் விளையாட்டு. கிரஹப்பிரவேசம் கவிதையில் அதன் அலங்காரங்களை களைந்து புதுவீட்டுக்குள் புகும் ஜோடி ஒரு தொலைந்து போன ஒரு பற்பசைக்காக சண்டையிடுகிறார்கள். பின்னர் அவன் “ஏதோ ஒன்று அறுந்து தொங்கும் ஒரு புது வீட்டை, அதாவது தனது திருமண வாழ்வை, சிறுக சிறுக போலி சமாதானங்களால் கட்டி எழுப்புகிறான். அந்த வீட்டில் கிரப்பிரவேசித்து அவன் ஆடப் போவது தான் நிஜமான திருமணம். அந்த உறவு எப்போதும் ஒரு சிறுகுறையுடனே இருக்கும். அதனாலே வார்த்தைகளாலே ஒருவருக்கொருவர் பொறி வைக்க வேண்டி உள்ளது. “ஏப்ரல் ஒன்றில் முட்டாள்கள் தினமன்று தம் காதலை தெரிவிக்கும் காதலனும் காதலியும் அநேகமாய் இந்த ஏமாற்று விதிகளை தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் காதலும் குழந்தைகளும் இந்த ஏமாற்றுக்கு கசப்புக்கு பதில் இங்கு ஒரு சுட்டித்தனத்தை கொண்டு வருவதை மறுப்பதற்கில்லை. முகுந்தை தொடர்ந்து பிறரிடம் இருந்து வேறுபடுத்துவது இது தான்.
“மத்திகரே வீட்டில் பழைய வீட்டின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு புதுவீட்டுக்கு செல்வதன் தவிப்பை சொகிறார். இந்த வகையான மேலும் சில கவிதைகள் இத்தொகுப்பில் உண்டு. அந்த மத்திக்கரே வீடு தினமும் பழசாகிக் கொண்டிருக்கும் நம் வாழ்வுதான். அதன் நினைவுகளும், நம்பிக்கைகளும், விருப்பங்களும் தாம். ஒரு குழந்தை பொம்மையை கட்டிப் பிடித்து தூங்குவது போல் நாம் முடிந்து போன நினைவிழைகளை தொடர்ந்து மனதின் பின்னணியில் மீட்டிக் கொண்டே இருக்கிறோம். பழைய புத்தகங்களை விடாமல் வைத்திருப்பது, பள்ளிக்காலத்தில் எங்கோ கேட்ட இசையை மீண்டும் கேட்டு கேட்டு ஒரு புண்ணை போல் மனதை பிதுக்குவது, தொடர்பே அற்றுப் போன உறவுகளை திரும்ப சந்திக்க அஞ்சுவது, நினைவில் அடுக்குகளில் ஒரு பெண்ணின் முகத்துக்கு நாளும் அதிகமாய் அழகு சேர்த்து சிந்திப்பது, இப்படி எவ்வளவோ. நினைவுகள் மேல் நமக்குள்ள fetish சுவாரஸ்யமானது. மத்திக்கரே வீட்டின் சொந்தக்காரர் வீட்டில் இருந்து வெளியேறின பின் பாஸ்போர்ட், ஆயுள்காப்பீட்டு பத்திரங்களில் இருந்து ஒரு சிதிலி விளக்கை எடுப்பது, ஒழுகும் குழாயை மூடுவது வரையிலான அவசிய-முக்கியமற்ற காரணங்களுக்காக அடிக்கடி அப்பழைய வீட்டுக்கு மீண்டும் மீண்டும் சென்று வருகிறார். வீட்டை விட்டு வருவதை “வீட்டை ஏமாற்றுவது என்று அழைக்கிறார். இவரைப் போலவே நாமும் கடந்த காலத்தின் அசட்டுத்தனமான தகவல்களை நம்பிக்கைகள் எண்ணங்களை பிம்பங்களை நம்மை அறியாமலே ஒரு டில்டோவை போல் வாயில் நுழைத்து சுவைத்தபடி இருக்கிறோம்; தூங்கும் போது, வாசிக்கும் போது, வேலை செய்யும் போது, புணரும் போது கூட அடிமனம் இதை செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் இக்கவிதையில் இந்த சடங்கு வெறும் fetishஆக இல்லாமல் இருப்பது அதை (முன்பு குறிப்பிட்டது போல்) சுட்டியான விளையாட்டாக முகுந்த் மாற்றுவதனால் தான். குறிப்பாக, முடிவுறாமல் தொடரும் வாழ்வின் தருணங்களை அவசரம் காரணமாய் ஜேப்பில் மடித்து வைத்து புதிதாய் தொடரும் மனித அவஸ்தையை சொல்லும் அம்மா பை, எடைச்சீட்டு போன்ற கவிதைகளை சொல்ல வேண்டும். அம்மா பையில் தன் பழைய பொருட்களை புதிய பையொன்றில் போட்டு தன் திருமணத்தின் போது அருகில் வைத்துக் கொள்கிறான் ஒருவன். எடைச்சீட்டில்ரயில் வந்து விட்ட அவசரத்தில் ஒரு சிறுமிக்கு எடை எந்திரத்தில் இருந்து சீட்டு வெளிவரும் முன் கிளம்ப நேர்கிறது. “தொண்டையில் சிக்கிக் கொண்ட காசுடன் வண்ணமயமாய் விழித்தபடி அது அவளை வழியனுப்புகிறது. நினைவுகளை விட்டு வந்தாலும் தூக்கி சுமந்தாலும், தன்னிலையானது என்றாலும் வரலாற்றுபூர்வமானது என்றாலும் நாம் அவற்றுக்குள் தாம் இருக்கிறோம்; நினைவுகளுக்குள் ஒரு குடுவை தங்கமீன் போல் இருக்கிறோம். முகுந்தின் இக்கவிதைகள் மற்ற கவிதைகளில் இருந்து மேலும் உயரமாக குதிகால் உயர்த்தி தம்மை நிறுத்தி கொள்கின்றன.
தற்கொலை, சக்கரநாற்காலி ஆகிய சொற்கள் தோன்றும் தற்கொலை பற்றியல்லாத ஒரு மனுஷ்யபுத்திரன் கவிதை உண்டு. அதுபற்றி முகுந்தின் அபிப்பிராயம் என்ன? “கவிதை பிடித்திருக்கிறது. அதனால் அப்பக்கத்தில் நட்சத்திர குறியிட்டு வைக்கிறார். முகுந்தின் நிஜமான அபிப்பிராயம் இனிமேல் தான் வெளிப்படுகிறது. அவர் அருகில் உள்ள மேலும் இரண்டு கவிதைகளுக்கு நட்சத்திர குறிகளை வரைகிறார். ஒரு ஓவிய மனநிலை ஏற்படுவதால் அவர் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வரைந்து ஸ்டேப்ளர் மேல் (உயிர்மை பத்திரிகையின் நடுப்பக்கத்தில் படிக்கிறார் என்பது தெளிவாகிறது) பிறைநிலா வரைந்து, கீழே மலைத்தொடர் வரைந்து, மரக் கூட்டங்கள் வரைந்து, நதியை ஓடவிட்டு ஒருவழியாய் வனம் உருவாகிறது. இரவில் வந்து திரும்ப அப்பக்கத்தை பார்த்தால் அங்கு வனத்தில் குட்டி யானைகளின் சித்திரமும் இருக்கிறது. யார் வரைந்தது? முகுந்தின் ஆழ்மனம். அல்லது கவித்துவம். ஏன் யானைக் குட்டிகள்?.அவை அம்மா சின்னவயதில் கற்றுக் கொடுத்தவை. மற்றொரு கவிதையில் ஒரு நடிகையின் புகைப்படத்தில் மூக்குக்கு மச்சம் வரையும் சிறுமியை அம்மா கண்டிக்கிறாள். இன்னுமொரு கவிதையில் (எளிமையான நேரம்) கடிகாரத்தில் நேரம் பார்க்கும் பயிற்சியில் சோர்ந்து தூங்கும் ஒரு சிறுமி வருகிறாள். இந்த இரண்டு கவிதைகளுடன் சேர்த்து படிக்கையில் நட்சத்திர குறியிட்டகவிதை வாசிப்பின் படைப்பாக்கத்தை பற்றினது என்பது விளங்கும். ஒரு கவிதை பக்கத்தின் மேல் ஓவியம் கிறுக்குவது குறுக்கீடு தானே? வாசிப்பும் பிரதியை சிதைத்து சிதைத்து புரியும் குறுக்கீடு தான். வாசகனிடம் பேசும் போது அல்லது விமர்சனம் வாசிக்கும் “என் மூக்கின் மேல் ஏன் மச்சம் வரைகிறாய் என்று கேட்காத எழுத்தாளன் யார்? கடிகாரத்தை கடிகாரமாய் பார்க்காமல் முட்களின் இடத்தில் சற்றுமுன் தின்ற குட்டி இட்லிகளை வைத்து கற்பிக்கிறது ஒரு குழந்தை (எளிமையான நேரம்). குட்டி இட்லி கவிதைகள் செய்து விண்டு தின்னும் விளையாட்டு வாசிப்பு தான் முகுந்தின் பரிந்துரை.

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய கற்பனாவாதிகளின் (இன்றும் சிலரின்) செல்ல நம்பிக்கை ஒன்று இழந்து விட்ட குழந்தைமையின் பரிசுத்தம் பற்றினது. வளர்ந்த பின் ஈடன் தோட்டத்தில் இருந்து நாம் வெளியேற்றப்படுகிறோம். திரும்ப எப்படி ஆதாம் ஏவாளாவது? அதற்கு கற்பனாவாதிகள் சொல்லும் பதில் வாழ்வில் எளிமையை பின்பற்றுங்கள், சிறுநுட்பங்களை ரசியுங்கள், கிராமியத்தை, இயற்கையை வழிபடுங்கள் போன்றவை. முகுந்த் இழந்த எதையும் மீட்பது பற்றி கவலைப்படுவதில்லை. நாம் வளர்ந்த பின்னரும் குழந்தையாக இருப்பதை சொல்லுகிறார். தொடர்ந்து எதிர்தரப்புடனோ சுயத்துடனோ விளையாடிக் கொண்டிருப்பதே முகுந்தின் குழந்தைமை. கோயில் கருவறை மேல் எழுதியிருக்கும் வெண்பாவை சின்ன டயரியில் காப்பியடிக்கும் பக்தையிடம் போலவோ அவளிடம் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் சொல்லி, 108 முறை அந்த வெண்பாவை பாடினால் குறைகள் விலகும் என்று அறிவுறுத்தும் ஐயரிடம் போலவோ (மகாமந்திரம்) அசட்டுத்தனமாக கூட இந்த குழந்தைமை வெளிப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அது தன் வீட்டையும், மனைவியையும் ஏமாற்ற பிரயத்தனப்படும் மனிதனிடம் போல் தீமையாகவும் தோன்றுகிறது. முகுந்த் நாகராஜனின் குழந்தைகள் அப்பழுக்கற்ற குறும்பும் குரூரமும் சுமந்து அப்படியே தான் எப்போதும் இருக்கின்றன. அவை வளரவும் இல்லை, எதையும் இழக்கவும் இல்லை.
Read More

Thursday 5 May 2011

கிரிக்கெட்டில் ஆசிய மேலாதிக்கம்: விழுமியங்கள் காலாவதியான கதை




இங்கிலாந்து கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோலோச்சியது. அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கூட லார்ட்ஸ் பெவிலியனில் அனுமதிக்கப்படாத அவமதிப்புகள் நடந்ததுண்டு. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா தன் ஆட்டத்தரம் மற்றும் அணி விழுமியங்கள் கொண்டு பத்து வருடகாலம் மேலாதிக்கம் செலுத்தியது. இந்த ஒரு நூற்றாண்டு வெள்ளை ஆதிக்கம் ரெண்டாயிரத்துக்கு பிறகு குறிப்பிட்ட வகையில் மாறியது. ஆசிய ஆதிக்கம் துவங்கியது. இது கிரிக்கெட் அல்லாத காரணத்துக்காக நடந்தது என்பதே சுவாரஸ்யம். கிரிக்கெட் ஐரோப்பியர்களின் போராட்ட உணர்வு, ஒற்றுமை, விடாமுயற்சி, நாணயம், அணி விசுவாசம் போன்ற விழுமியங்களின் உருவகமாக இருந்தது. கிரிக்கெட்டில் தனிநபர் அல்ல அணியே முக்கியம் என்ற இன்னும் மதிப்பிழக்காத ஒரு தேய்வழக்கு உண்டு. ஆசியா ஆதிக்கம் செலுத்த துவங்கியவுடன் ஆதார விழுமியங்கள் ஒரே நாளில் புராதனமாகின. பணமும், செல்வாக்கும், இன துவேசமும் உலக கிரிக்கெட்டின் இயல்புகளாகின.
ஜக்மோகன் தால்மியா எனும் வங்காளி (இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து பெரும்பணம் கொள்ளையடித்ததாய் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானதும் பாக் கிரிக்கெட் வாரியத்திடம் தன் செல்வாக்கை காட்ட ஷோயப் அக்தருக்கு வழங்கப்பட்ட சர்வதேச தடையை உடனடியாய் நீக்கி அவரை ஆட அனுமதித்தார். பின்னர் வங்க தேசம் எனும் முதிரா அணிக்கு டெஸ்ட் ஆட்டங்களில் ஆடும் அந்தஸ்தை பெற்றுத் தந்தார். உள்ளூரில் வலுவான உள்கட்டமைப்புகள் இல்லாத அவ்வணியால் அதற்கு பின்னான இருபது வருடங்களில் ஒரு பொருட்படுத்தத்தக்க டெஸ்ட் வெற்றியை கூட பெற முடியவில்லை. டால்மியா தான் உலக கிரிக்கெட் மென்பொருளில் நுழைந்த முதல் இந்திய வைரஸ்.

ஆஸ்திரேலியா போனால் பணம், செல்வாக்கு, இன துவேசம் ஆகிய மூன்று இந்திய குணாம்சங்களின் திமிர்த்தனம் காரணமாய் இந்தியர்கள் தர்ம அடி வாங்குவார்கள். ஆனால் உலக கிரிக்கெட் தளத்தில் ஒரு ஹர்பஜன் சிங் தப்பிக்க முடிந்தது. சச்சினால் பொய் சொல்ல முடிந்தது. சச்சின் பந்தை சுரண்டியதாக குற்றம் சாட்டிய ஒரு ரெப்ரியான மைக் டென்னிஸ் கடும் கண்டனத்துக்குள்ளானார். அவர் பணியாற்றிய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பந்தை எறிவதாய் சந்தேகிக்கப்பட்ட ஒரு வீச்சாளரை இலங்கை அணியால் இரண்டு பத்தாண்டுகள் காப்பாற்ற முடிந்தது. இதே சந்தேகத்துக்கு உள்ளான பாதுகாப்பற்ற எத்தனையோ வேறு நாட்டு பந்து வீச்சாளர்கள் இதற்குள் தொடர்ந்து சோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வீச்சு பாணி தட்டி நிமிர்க்கப்பட்டு கிரிக்கெட்டை விட்டு வேறு தொழில் பார்க்க போயினர். இந்தியாவில் உள்ளூர் ஆட்டங்களில் கூட லாஹிரி போன்ற சுழலர்கள் சந்தேகத்துக்குரிய வீச்சு பாணி காரணமாய் ஆட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டனர். முன்னர் தென்னாப்பிரிக்கா இனதுவேச நடவடிக்கைகள் காரணமாய் கிரிக்கெட்டில் இருந்து பல வருடங்களில் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்சமயம் தீவிரவாதமும், பெட்டிங் ஊழலும் நிழலுலகத்தின் இடையூறும் புரையோடிய பாகிஸ்தான் ஐ.சி.சியிடம் இருந்து எந்த ஒரு தீவிரமான காத்திரமான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் பத்திரமாக இருக்கிறது. அந்நாட்டில் வைத்து ஒரு அந்நிய அணி வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எதேச்சையாய் தப்பித்தது. மற்றொரு அணி தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்டது. இரண்டு குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையையும் இன்னும் உலக கிரிக்கெட் அமைப்பாளர்களால் எடுக்க முடியவில்லை.
ஆசியாவுக்கு அதிகாரமும் முக்கியத்துவமும் எப்படி கிடைத்தது? ஐரோப்பாவில் கிரிக்கெட் நவீனப்படாமல் தேக்க நிலையை அடைந்தது. அங்கு சிறுவயதில் இருந்தே பல வித ஆட்டங்களை மக்களை ஆட ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு இருப்பதாலும், கால்பந்தும் டென்னிஸும் அங்கு அதிக செல்வாக்கு பெற்றிருந்ததாலும் ஆசியா அளவுக்கு கிரிக்கெட்டால் அங்கு மேலாதிக்கம் செலுத்த முடியவில்லை. கிரிக்கெட்டுக்கு என்றுமே ஒரு முத்திரை, வரலாற்று முக்கியத்துவமே அங்கு இருந்துள்ளது. உதாரணமாய் ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இந்தியா பாகிஸ்தான் அல்ல. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஆஷஸின் போது நாம் பார்க்கும் பகைமை கிரிக்கெட் வரலாறு ஒன்றின் தொடர்ச்சி மட்டுமே. இங்கிலாந்து அரச குடும்பத்தை போன்று கிரிக்கெட் அங்கு ஒரு பாதி மரித்த வரலாற்று எச்சமாக இருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஆசிய நாடுகளின் பொருளாதார நிலைமை மேம்பட்டு மெல்ல நவீனத்துவத்துக்குள் காலடி வைக்கும் கட்டத்தில் அவற்றுக்கென்று விளையாட்டு கட்டமைப்புகள் இருக்கவில்லை. கிரிக்கெட் ஒரு விளையாட்டு மார்க்கமாக அல்லாமல் தேசிய உணர்வுகளை அடையாளப்படுத்தவும் ஒரு பொழுதுபோக்கு வணிகமாகவும் மாறியது. இங்கே கிரிக்கெட் பார்வையாளர்கள் பெருகினார்கள். உள்கட்டமைப்பு மற்றும் திறன்களின் அடிப்படையில் அல்ல, பார்வையாள மக்கள் தொகையை கொண்டு தான் நாம் ஐரோப்பியர்களை கிரிக்கெட் சந்தையில் முறியடித்தோம். இந்த அடிப்படையில் தான் வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. ஆசிய பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பரவி சவலையாகி வந்த கிரிக்கெட்டை ஆதரித்தனர். ஐ.சி.சியின் இன்றைய நிலைப்பாட்டுக்கு தேவையான பெரும்பகுதி பணம் ஆசிய வாரியங்களின் கஜானாவில் இருந்து தான் போகிறது. ஆசியாவுக்கு தலைவணங்கி சில வேளைகளில் கூழை கும்பிடு போடவும் தங்களது மரபான விழுமியங்களை கைவிடவும் கூட உலக கிரிக்கெட் தயாரானது. குறிப்பாக இந்தியா ஐ.சி.சியின் பெரியண்ணா என்ற விமர்சனமும் கூடவே வலுவாக எழுந்தது. இந்திய அரசியலில் போலவே இதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
நவீன கிரிக்கெட்டை எப்படி திறமையாக சந்தைப்படுத்தி விற்று பணம் பண்ணுவது என்பதை ஐ.பி.எல் உலகுக்கு கற்றுக் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில் கிரிக்கெட்டில் இருந்து அதன் அடிப்படை விழுமியங்களை விலக்கி வேரற்றதாக, அடையாளமற்றதாகவும் மாற்ற முடியும் என்றும் கூடத்தான ஐ.பி.எல் நிரூபித்தது. இந்தியாவில் இன்று மதமும் அரசியலும் தேசியமும் அடைந்துள்ள நிலையை கிரிக்கெட் உலகளவில் அடைந்துள்ளது. நமது அரசியல்வாதிகளிடம் மக்களும் சாமியார்களிடம் பக்தர்களும் வாடிக்கையாளர்களாகவும் நுகர்வோராகவும்  இருக்கும் நிலையில் எப்படி அரசியலில் அரசியல் இல்லை, மதத்தில் மதம் இல்லையோ, அது போல் இன்று கிரிக்கெட்டில் கிரிக்கெட்டும் இல்லை. சமகால காட்பாதரை போல் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருப்பதாய் இந்தியா இன்று உலகுக்கு சொல்லி அதை செய்தும் காட்டுகிறது. இரு உதாரணங்கள் சொல்லலாம்.

ஒருநாள் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த வேளையில் ஒவ்வொரு வீரரும் தன்னை டெஸ்ட் ஆட்டத்தில் நிரூபிக்கவே விரும்புவதாய் சொல்லப்பட்டது. அதன் மூலம் டெஸ்ட் ஆட்டத்தின் சமகால முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பல இளம் வீரர்கள் ஒருநாள் ஆட்டங்களில் தம்மை நிறுவி அதன் மூலம் டெஸ்ட் அணியில் நுழைய கனவு கண்டனர். அப்படி செய்வது சாதனையாகவும் சிலருக்கு வெறுங்கனவாகவும் இருந்தது. மிகச்சிறந்த திறமையாளர்கள் மட்டும் சச்சின், கங்குலி போல நேரடியாக இளமையிலேயே டெஸ்ட் வாய்ப்பை பெற்றனர். இங்கிலாந்தின் காலிங் வுட், தெ.ஆவின் ஜாண்டி ரோட்ஸ் போன்றோர் தொடர்ந்து போராடி தம் முப்பதுகளில் மட்டுமே டெஸ்ட் அணியில் ஸ்திரப்பட்ட கதைகள் செவ்வியல் அம்சம் கொண்டவை. அதே வேளையில் மைக்கேல் பெவன் போன்ற தலைசிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் கடைசி வரை டெஸ்ட் அணியில் நிலைக்க முடியாமல் போன துன்பியலும் கிரிக்கெட்டின் வாய்மொழி கதைகளில் மறக்க முடியாதது. ஆனால் இந்த காலகட்டம் ஐ.பி.எல்லோடு காலாவதியானது.

இன்று இளம் வீரர்கள். தேசிய அணியில் ஆட முடியாவிட்டாலும் பரவாயில்லை squadஇல் ஒரு இடம் மட்டும் போதும் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு சுற்றுப்பயணத்தின் போது எந்த ஆட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வெறுமனே ஒட்டிக் கொண்டு செல்லும் ஒரு வீரர் சர்வதேச வீரர் என்ற அந்தஸ்தை பெறுகிறார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல் பேரத்தின் போது அதிக சந்தை மதிப்பை பெற்று அதிக விலைக்கு வாங்கப்படுகிறார். ஐ.பி.எல்லில் நுழைந்த பின்னரும் ஒரு வீரர் நன்றாக ஆடி தன்னை நிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆட்டத்தில் கூட ஆடாமல் வெறுமனே ரிஸர்வாக மைதான எல்லைக்கோட்டுக்கு வெளியே நகத்தை கடுத்துக் கொண்டு ஒரு முழுபருவமும் அமர்ந்திருந்தாலும் ஒரு ஐ.பி.எல் வீரர் அரைகோடியாவது சம்பாதித்து விடலாம். பல இளம் வீரர்கள் கிளப் ஆட்டங்களில் கவனிக்கப்பட்டும், 18 வயதுக்கு கீழானவர்களுக்கான ஆட்டத்தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலமும் ஐ.பி.எல்லில் தேர்வாவதால், ஐ.பி.எல் ஆடியே தேசிய அணியிலும் நுழைய முடியும் என்பதாலும் ரஞ்சி தொடர் ஆடுவது இந்திய கிரிக்கெட் வீரருக்கு இனிமேல் தேசிய வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு அல்ல. உதாரணமாக சமீப ரஞ்சி தொடரில் ஏகப்பட்ட ஓட்டங்கள் குவித்த சர்வதேச அனுபவம் கொண்ட வாசிம் ஜாபரை ஐ.பி.எல் பேரத்தில் யாரும் வாங்கவில்லை. ஆனால் யாரென்றே தெரியாத ஆஸி தேசிய அணியில் கூட இரண்டு ஆட்டங்களுக்கு மேல் இடம் பெறாத டானியல் கிறிஸ்டியன் என்பவரை கோடி கொடுத்து வாங்கினார்கள். இதன் காரணம் செல்வாக்கை, சிபாரிசை முன்னிறுத்தும் இந்தியத்துவ தேர்வு பாணி. ஐ.பி.எல்லில் ஒரு வீரரின் தரம் அவரது ஆட்ட வரலாறால் அல்ல, பயிற்சியாளர் அல்லது ஒரு மூத்த வீரரின் சிபாரிசால் தான் முடிவாகிறது. அநேக அணிகளில் பயிற்சியாளர்களும் நட்சத்திர வீரர்களும் ஆஸ்திரேலியர்கள் என்பதால் டானியல் கிறிஸ்டியன் போன்றவர்கள் எளிதில் பின்வாசல் வழியாக கௌரவமாக நுழைகிறார்கள். நிரந்தரமாக மூடப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் முன்வாசலுக்கு வெளியே எப்போதும் ஒரு நீண்ட வாய்ப்பு நாடுவோர் வரிசை நிற்கிறது. ஐ.பி.எல் பின்வாசல் வழி உள்ளே நுழையும் இன்றைய கிரிக்கெட் வீரருக்கு தேசிய அணி வாய்ப்பு என்பது வெறும் மற்றொரு வாய்ப்பு மட்டுமே, முன்பு போல் ஜென்மாந்தர கனவு அல்ல. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது இன்றொரு இந்திய பிரச்சனை மட்டுமல்ல, சர்வதேச அளவில் பல நாட்டு வாரியங்களும் முழி பிதுங்குகின்றன.
ஐ.பி.எல்லினால் சர்வதேச கிரிக்கெட்டில் இரு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முதல் வருடத்தில் ஐ.பி.எல் நடக்கும் இருமாத காலத்தில் பல அந்நிய அணி வீரர்களை ஐ.பி.எல் அணிகள் இழந்தன. இது ஐ.பி.எல் அணிகளின் தரத்தை பெருமளவு பாதித்தன. உதாரணமாய் முதல் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இங்கிலாந்து ஆஸி வீரர்களை இழந்து தாக்குப்பிடிக்க திணறியது. ஆனால் தற்சமயம் ஐ.பி.எல் ஆட்ட வேளையில் சர்வதேச வாரியங்கள் தமது வீரர்களை ஐ.பி.எல்லுக்கு இழந்து தவிக்கின்றன. கெய்ல் உள்ளிட்ட மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் ஐ.பி.எல்லுக்காக சொந்த நாட்டு அணியை பகிஷ்கரிக்க துணிந்தனர். மே.இ வாரியத்துடன் நடந்த இழுபறியின் விளைவாய் கெய்ல் தற்போது நடந்து வரும் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விட்டார். கெய்ல் தான் காயமுற்றுருப்பதாய் சொல்லித் தான் விலகினார். ஆனால் அவர் எந்த சிரமமும் இன்றி ஐ.பி.எல் ஆடி வருகிறார். மே.இ வாரியம் இதனை சமீபமாய் கண்டித்தது. கெய்ல் பொருட்படுத்தவே இல்லை. அநேகமாய் இதே பாணியில் ஒரு காட்சி இலங்கையிலும் அரங்கேறியது. மலிங்கா காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்டு ஆட்ட பயணம் மேற்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டு இங்கே சௌகரியமாக மும்பை இந்தியன்ஸுக்காக சர்வ அலட்சியமாக யார்க்கர்கள் எறிந்து வெற்றிகளை வாங்கித் தந்து கொண்டிருந்தார். அதெப்படி காயமடைந்த ஒருவர் நன்றாக ஒருபுறம் ஆடிக் கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை நாட்டுக்கு திரும்பி தன் (இல்லாத ) காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்தியது. மலிங்காவும் ஏதோ ஈ மொய்க்கிறது என்று அலட்சியமாக இருந்தார். பின்னர் ரொம்பத்தான் மொய்க்கிறதே என்று டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு அறிவித்தார். டெஸ்டு ஆட்டத்தின் மீது குவிக்கப்பட்ட அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் இந்திய கிரிக்கெட் இப்படி ஒரு வேடிக்கை சமாச்சாரமாக்கியது.

தனிப்பட்ட சிரமங்களை மறந்து சுயலாபங்களை தியாகம் செய்து அடைய இன்று ஒன்றுமே கிரிக்கெட்டில் இல்லை. எல்லா திறன்களைப் போலவும் கிரிக்கெட் ஆடுவதும் ஒரு திறன். அது ஒரு விற்பனை சரக்கு. ஒரு டெஸ்டு போட்டியில் சராசரியாக மலிங்கா நாற்பது ஓவர்கள் வீச வேண்டி வரும். சில லட்சங்கள் கிடைக்கும். அதே நாற்பது ஓவர்களை அவர் எட்டு ஐ.பி.எல் போட்டிகளில் தனித்தனியாக வீசலாம். கோடிக்கணக்கில் சன்மானம் வரும். இதனால் அவர் அதிக வருவாய் மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது தவறில்லை எனலாம். இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் ஆடினாலே விரைவிலே உடல் தகுதி இழந்து விடும் அளவுக்கு பலவீனரான அவர் அதையே இரண்டு ஐ.பி.எல் பருவங்களாக ஆடி தன் எதிர்காலத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இதனால் மோசமான உடல்தகுதி கொண்ட திறமையாளர்களுக்கு தங்கள் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு ஐ.பி.எல் என்று ஒரு தரப்பு நியாயம் உள்ளது. ஆனால் மலிங்கா, கெய்ல் போன்றோரை வளர்த்தெடுத்த நாடுகளுக்கும் அவற்றின் வாரியங்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா இச்செயல்? சமகாலத்தில் மதிப்பிழந்த எத்தனையோ விழுமியங்களில் ஒன்று தான் விசுவாசம் என்பது இதற்கான ஒரே பதில். இன்று விசுவாசம் ஒரு நிலப்பிரபுத்துவ மதிப்பீடு என்று எளிதில் நாம் அடையாளப்படுத்தி நிராகரிக்க முடியும். அணி உணர்வுக்காக அதிகம் போற்றப்பட்ட இலங்கை அணியினர் தமது தலைவர் தில்ஷானுடன் உள்ளிட்டு வரப்போகும் இங்கிலாந்து தொடரில் தாமதமாய் பங்கேற்கப் போகின்றனர். காரணம் ஐ.பி.எல். உலக கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு நாட்டின் உள்ளூர் ஆட்டத்தொடருக்காக ஒரு சர்வதேச தொடர் அலட்சியப்படுத்தப்படுவது இது முதல்முறையே. இது ஒரு துவக்கம் மட்டுமே என்று பலரும் கருதுகின்றனர். ஐ.பி.எல் வேளையில் பிற சர்வதேச ஆட்டங்களை நடத்தாமல் இருப்பது ஒரு தீர்வு என்று பல வீரர்களும் வேண்டுகிறார்கள். அனைத்தும் தலைகீழாகி விட்டதற்கு இந்த வேண்டுகோள் ஒரு இறுதி உதாரணம்.
முதல் தடை செய்யப்பட்ட கனியை புசிக்கும் முன், முதல் சொல் எழுதப்படுவதற்கு கடவுளும் நாமும் வேறுவேறாக இல்லை. அந்நியமான பிறகு மதம் தேவைப் பட்டது. கிரிக்கெட்டிற்கு ஐ.பி.எல் தேவைப்பட்டது.
Read More

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates