Thursday 5 May 2011

கிரிக்கெட்டில் ஆசிய மேலாதிக்கம்: விழுமியங்கள் காலாவதியான கதை




இங்கிலாந்து கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய வகையில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கோலோச்சியது. அக்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்கள் கூட லார்ட்ஸ் பெவிலியனில் அனுமதிக்கப்படாத அவமதிப்புகள் நடந்ததுண்டு. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா தன் ஆட்டத்தரம் மற்றும் அணி விழுமியங்கள் கொண்டு பத்து வருடகாலம் மேலாதிக்கம் செலுத்தியது. இந்த ஒரு நூற்றாண்டு வெள்ளை ஆதிக்கம் ரெண்டாயிரத்துக்கு பிறகு குறிப்பிட்ட வகையில் மாறியது. ஆசிய ஆதிக்கம் துவங்கியது. இது கிரிக்கெட் அல்லாத காரணத்துக்காக நடந்தது என்பதே சுவாரஸ்யம். கிரிக்கெட் ஐரோப்பியர்களின் போராட்ட உணர்வு, ஒற்றுமை, விடாமுயற்சி, நாணயம், அணி விசுவாசம் போன்ற விழுமியங்களின் உருவகமாக இருந்தது. கிரிக்கெட்டில் தனிநபர் அல்ல அணியே முக்கியம் என்ற இன்னும் மதிப்பிழக்காத ஒரு தேய்வழக்கு உண்டு. ஆசியா ஆதிக்கம் செலுத்த துவங்கியவுடன் ஆதார விழுமியங்கள் ஒரே நாளில் புராதனமாகின. பணமும், செல்வாக்கும், இன துவேசமும் உலக கிரிக்கெட்டின் இயல்புகளாகின.
ஜக்மோகன் தால்மியா எனும் வங்காளி (இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இருந்து பெரும்பணம் கொள்ளையடித்ததாய் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரானதும் பாக் கிரிக்கெட் வாரியத்திடம் தன் செல்வாக்கை காட்ட ஷோயப் அக்தருக்கு வழங்கப்பட்ட சர்வதேச தடையை உடனடியாய் நீக்கி அவரை ஆட அனுமதித்தார். பின்னர் வங்க தேசம் எனும் முதிரா அணிக்கு டெஸ்ட் ஆட்டங்களில் ஆடும் அந்தஸ்தை பெற்றுத் தந்தார். உள்ளூரில் வலுவான உள்கட்டமைப்புகள் இல்லாத அவ்வணியால் அதற்கு பின்னான இருபது வருடங்களில் ஒரு பொருட்படுத்தத்தக்க டெஸ்ட் வெற்றியை கூட பெற முடியவில்லை. டால்மியா தான் உலக கிரிக்கெட் மென்பொருளில் நுழைந்த முதல் இந்திய வைரஸ்.

ஆஸ்திரேலியா போனால் பணம், செல்வாக்கு, இன துவேசம் ஆகிய மூன்று இந்திய குணாம்சங்களின் திமிர்த்தனம் காரணமாய் இந்தியர்கள் தர்ம அடி வாங்குவார்கள். ஆனால் உலக கிரிக்கெட் தளத்தில் ஒரு ஹர்பஜன் சிங் தப்பிக்க முடிந்தது. சச்சினால் பொய் சொல்ல முடிந்தது. சச்சின் பந்தை சுரண்டியதாக குற்றம் சாட்டிய ஒரு ரெப்ரியான மைக் டென்னிஸ் கடும் கண்டனத்துக்குள்ளானார். அவர் பணியாற்றிய ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. பந்தை எறிவதாய் சந்தேகிக்கப்பட்ட ஒரு வீச்சாளரை இலங்கை அணியால் இரண்டு பத்தாண்டுகள் காப்பாற்ற முடிந்தது. இதே சந்தேகத்துக்கு உள்ளான பாதுகாப்பற்ற எத்தனையோ வேறு நாட்டு பந்து வீச்சாளர்கள் இதற்குள் தொடர்ந்து சோதனைகளுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வீச்சு பாணி தட்டி நிமிர்க்கப்பட்டு கிரிக்கெட்டை விட்டு வேறு தொழில் பார்க்க போயினர். இந்தியாவில் உள்ளூர் ஆட்டங்களில் கூட லாஹிரி போன்ற சுழலர்கள் சந்தேகத்துக்குரிய வீச்சு பாணி காரணமாய் ஆட்டத்தில் இருந்து தடை செய்யப்பட்டனர். முன்னர் தென்னாப்பிரிக்கா இனதுவேச நடவடிக்கைகள் காரணமாய் கிரிக்கெட்டில் இருந்து பல வருடங்களில் தடை செய்யப்பட்டது. ஆனால் தற்சமயம் தீவிரவாதமும், பெட்டிங் ஊழலும் நிழலுலகத்தின் இடையூறும் புரையோடிய பாகிஸ்தான் ஐ.சி.சியிடம் இருந்து எந்த ஒரு தீவிரமான காத்திரமான விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உள்ளாகாமல் பத்திரமாக இருக்கிறது. அந்நாட்டில் வைத்து ஒரு அந்நிய அணி வெடிகுண்டு தாக்குதலில் இருந்து எதேச்சையாய் தப்பித்தது. மற்றொரு அணி தீவிரவாதிகளால் திட்டமிட்டு தாக்கப்பட்டது. இரண்டு குற்ற நடவடிக்கைகளுக்கும் எதிராக எந்த நடவடிக்கையையும் இன்னும் உலக கிரிக்கெட் அமைப்பாளர்களால் எடுக்க முடியவில்லை.
ஆசியாவுக்கு அதிகாரமும் முக்கியத்துவமும் எப்படி கிடைத்தது? ஐரோப்பாவில் கிரிக்கெட் நவீனப்படாமல் தேக்க நிலையை அடைந்தது. அங்கு சிறுவயதில் இருந்தே பல வித ஆட்டங்களை மக்களை ஆட ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு இருப்பதாலும், கால்பந்தும் டென்னிஸும் அங்கு அதிக செல்வாக்கு பெற்றிருந்ததாலும் ஆசியா அளவுக்கு கிரிக்கெட்டால் அங்கு மேலாதிக்கம் செலுத்த முடியவில்லை. கிரிக்கெட்டுக்கு என்றுமே ஒரு முத்திரை, வரலாற்று முக்கியத்துவமே அங்கு இருந்துள்ளது. உதாரணமாய் ஆஷஸ் தொடர். ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் இந்தியா பாகிஸ்தான் அல்ல. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே ஆஷஸின் போது நாம் பார்க்கும் பகைமை கிரிக்கெட் வரலாறு ஒன்றின் தொடர்ச்சி மட்டுமே. இங்கிலாந்து அரச குடும்பத்தை போன்று கிரிக்கெட் அங்கு ஒரு பாதி மரித்த வரலாற்று எச்சமாக இருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்து ஆசிய நாடுகளின் பொருளாதார நிலைமை மேம்பட்டு மெல்ல நவீனத்துவத்துக்குள் காலடி வைக்கும் கட்டத்தில் அவற்றுக்கென்று விளையாட்டு கட்டமைப்புகள் இருக்கவில்லை. கிரிக்கெட் ஒரு விளையாட்டு மார்க்கமாக அல்லாமல் தேசிய உணர்வுகளை அடையாளப்படுத்தவும் ஒரு பொழுதுபோக்கு வணிகமாகவும் மாறியது. இங்கே கிரிக்கெட் பார்வையாளர்கள் பெருகினார்கள். உள்கட்டமைப்பு மற்றும் திறன்களின் அடிப்படையில் அல்ல, பார்வையாள மக்கள் தொகையை கொண்டு தான் நாம் ஐரோப்பியர்களை கிரிக்கெட் சந்தையில் முறியடித்தோம். இந்த அடிப்படையில் தான் வங்கதேசம் டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது. ஆசிய பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பரவி சவலையாகி வந்த கிரிக்கெட்டை ஆதரித்தனர். ஐ.சி.சியின் இன்றைய நிலைப்பாட்டுக்கு தேவையான பெரும்பகுதி பணம் ஆசிய வாரியங்களின் கஜானாவில் இருந்து தான் போகிறது. ஆசியாவுக்கு தலைவணங்கி சில வேளைகளில் கூழை கும்பிடு போடவும் தங்களது மரபான விழுமியங்களை கைவிடவும் கூட உலக கிரிக்கெட் தயாரானது. குறிப்பாக இந்தியா ஐ.சி.சியின் பெரியண்ணா என்ற விமர்சனமும் கூடவே வலுவாக எழுந்தது. இந்திய அரசியலில் போலவே இதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
நவீன கிரிக்கெட்டை எப்படி திறமையாக சந்தைப்படுத்தி விற்று பணம் பண்ணுவது என்பதை ஐ.பி.எல் உலகுக்கு கற்றுக் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது. அதே வேளையில் கிரிக்கெட்டில் இருந்து அதன் அடிப்படை விழுமியங்களை விலக்கி வேரற்றதாக, அடையாளமற்றதாகவும் மாற்ற முடியும் என்றும் கூடத்தான ஐ.பி.எல் நிரூபித்தது. இந்தியாவில் இன்று மதமும் அரசியலும் தேசியமும் அடைந்துள்ள நிலையை கிரிக்கெட் உலகளவில் அடைந்துள்ளது. நமது அரசியல்வாதிகளிடம் மக்களும் சாமியார்களிடம் பக்தர்களும் வாடிக்கையாளர்களாகவும் நுகர்வோராகவும்  இருக்கும் நிலையில் எப்படி அரசியலில் அரசியல் இல்லை, மதத்தில் மதம் இல்லையோ, அது போல் இன்று கிரிக்கெட்டில் கிரிக்கெட்டும் இல்லை. சமகால காட்பாதரை போல் எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருப்பதாய் இந்தியா இன்று உலகுக்கு சொல்லி அதை செய்தும் காட்டுகிறது. இரு உதாரணங்கள் சொல்லலாம்.

ஒருநாள் கிரிக்கெட் உச்சத்தில் இருந்த வேளையில் ஒவ்வொரு வீரரும் தன்னை டெஸ்ட் ஆட்டத்தில் நிரூபிக்கவே விரும்புவதாய் சொல்லப்பட்டது. அதன் மூலம் டெஸ்ட் ஆட்டத்தின் சமகால முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பல இளம் வீரர்கள் ஒருநாள் ஆட்டங்களில் தம்மை நிறுவி அதன் மூலம் டெஸ்ட் அணியில் நுழைய கனவு கண்டனர். அப்படி செய்வது சாதனையாகவும் சிலருக்கு வெறுங்கனவாகவும் இருந்தது. மிகச்சிறந்த திறமையாளர்கள் மட்டும் சச்சின், கங்குலி போல நேரடியாக இளமையிலேயே டெஸ்ட் வாய்ப்பை பெற்றனர். இங்கிலாந்தின் காலிங் வுட், தெ.ஆவின் ஜாண்டி ரோட்ஸ் போன்றோர் தொடர்ந்து போராடி தம் முப்பதுகளில் மட்டுமே டெஸ்ட் அணியில் ஸ்திரப்பட்ட கதைகள் செவ்வியல் அம்சம் கொண்டவை. அதே வேளையில் மைக்கேல் பெவன் போன்ற தலைசிறந்த ஒருநாள் ஆட்டக்காரர் கடைசி வரை டெஸ்ட் அணியில் நிலைக்க முடியாமல் போன துன்பியலும் கிரிக்கெட்டின் வாய்மொழி கதைகளில் மறக்க முடியாதது. ஆனால் இந்த காலகட்டம் ஐ.பி.எல்லோடு காலாவதியானது.

இன்று இளம் வீரர்கள். தேசிய அணியில் ஆட முடியாவிட்டாலும் பரவாயில்லை squadஇல் ஒரு இடம் மட்டும் போதும் என்று கருதுகிறார்கள். இப்படி ஒரு சுற்றுப்பயணத்தின் போது எந்த ஆட்டத்திலும் கலந்து கொள்ளாமல் வெறுமனே ஒட்டிக் கொண்டு செல்லும் ஒரு வீரர் சர்வதேச வீரர் என்ற அந்தஸ்தை பெறுகிறார். இதன் மூலம் அவர் ஐ.பி.எல் பேரத்தின் போது அதிக சந்தை மதிப்பை பெற்று அதிக விலைக்கு வாங்கப்படுகிறார். ஐ.பி.எல்லில் நுழைந்த பின்னரும் ஒரு வீரர் நன்றாக ஆடி தன்னை நிலைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஒரு ஆட்டத்தில் கூட ஆடாமல் வெறுமனே ரிஸர்வாக மைதான எல்லைக்கோட்டுக்கு வெளியே நகத்தை கடுத்துக் கொண்டு ஒரு முழுபருவமும் அமர்ந்திருந்தாலும் ஒரு ஐ.பி.எல் வீரர் அரைகோடியாவது சம்பாதித்து விடலாம். பல இளம் வீரர்கள் கிளப் ஆட்டங்களில் கவனிக்கப்பட்டும், 18 வயதுக்கு கீழானவர்களுக்கான ஆட்டத்தொடர்களில் சிறப்பாக ஆடியதன் மூலமும் ஐ.பி.எல்லில் தேர்வாவதால், ஐ.பி.எல் ஆடியே தேசிய அணியிலும் நுழைய முடியும் என்பதாலும் ரஞ்சி தொடர் ஆடுவது இந்திய கிரிக்கெட் வீரருக்கு இனிமேல் தேசிய வாய்ப்புக்கான நுழைவுத் தேர்வு அல்ல. உதாரணமாக சமீப ரஞ்சி தொடரில் ஏகப்பட்ட ஓட்டங்கள் குவித்த சர்வதேச அனுபவம் கொண்ட வாசிம் ஜாபரை ஐ.பி.எல் பேரத்தில் யாரும் வாங்கவில்லை. ஆனால் யாரென்றே தெரியாத ஆஸி தேசிய அணியில் கூட இரண்டு ஆட்டங்களுக்கு மேல் இடம் பெறாத டானியல் கிறிஸ்டியன் என்பவரை கோடி கொடுத்து வாங்கினார்கள். இதன் காரணம் செல்வாக்கை, சிபாரிசை முன்னிறுத்தும் இந்தியத்துவ தேர்வு பாணி. ஐ.பி.எல்லில் ஒரு வீரரின் தரம் அவரது ஆட்ட வரலாறால் அல்ல, பயிற்சியாளர் அல்லது ஒரு மூத்த வீரரின் சிபாரிசால் தான் முடிவாகிறது. அநேக அணிகளில் பயிற்சியாளர்களும் நட்சத்திர வீரர்களும் ஆஸ்திரேலியர்கள் என்பதால் டானியல் கிறிஸ்டியன் போன்றவர்கள் எளிதில் பின்வாசல் வழியாக கௌரவமாக நுழைகிறார்கள். நிரந்தரமாக மூடப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் முன்வாசலுக்கு வெளியே எப்போதும் ஒரு நீண்ட வாய்ப்பு நாடுவோர் வரிசை நிற்கிறது. ஐ.பி.எல் பின்வாசல் வழி உள்ளே நுழையும் இன்றைய கிரிக்கெட் வீரருக்கு தேசிய அணி வாய்ப்பு என்பது வெறும் மற்றொரு வாய்ப்பு மட்டுமே, முன்பு போல் ஜென்மாந்தர கனவு அல்ல. நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் இது இன்றொரு இந்திய பிரச்சனை மட்டுமல்ல, சர்வதேச அளவில் பல நாட்டு வாரியங்களும் முழி பிதுங்குகின்றன.
ஐ.பி.எல்லினால் சர்வதேச கிரிக்கெட்டில் இரு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முதல் வருடத்தில் ஐ.பி.எல் நடக்கும் இருமாத காலத்தில் பல அந்நிய அணி வீரர்களை ஐ.பி.எல் அணிகள் இழந்தன. இது ஐ.பி.எல் அணிகளின் தரத்தை பெருமளவு பாதித்தன. உதாரணமாய் முதல் ஐ.பி.எல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இங்கிலாந்து ஆஸி வீரர்களை இழந்து தாக்குப்பிடிக்க திணறியது. ஆனால் தற்சமயம் ஐ.பி.எல் ஆட்ட வேளையில் சர்வதேச வாரியங்கள் தமது வீரர்களை ஐ.பி.எல்லுக்கு இழந்து தவிக்கின்றன. கெய்ல் உள்ளிட்ட மேற்கிந்திய அணியின் மூத்த வீரர்கள் ஐ.பி.எல்லுக்காக சொந்த நாட்டு அணியை பகிஷ்கரிக்க துணிந்தனர். மே.இ வாரியத்துடன் நடந்த இழுபறியின் விளைவாய் கெய்ல் தற்போது நடந்து வரும் பாகிஸ்தானுடனான ஒருநாள் தொடரில் ஆட மறுத்து விட்டார். கெய்ல் தான் காயமுற்றுருப்பதாய் சொல்லித் தான் விலகினார். ஆனால் அவர் எந்த சிரமமும் இன்றி ஐ.பி.எல் ஆடி வருகிறார். மே.இ வாரியம் இதனை சமீபமாய் கண்டித்தது. கெய்ல் பொருட்படுத்தவே இல்லை. அநேகமாய் இதே பாணியில் ஒரு காட்சி இலங்கையிலும் அரங்கேறியது. மலிங்கா காயம் காரணமாக இங்கிலாந்து டெஸ்டு ஆட்ட பயணம் மேற்கொள்ள முடியாது என்று மறுத்து விட்டு இங்கே சௌகரியமாக மும்பை இந்தியன்ஸுக்காக சர்வ அலட்சியமாக யார்க்கர்கள் எறிந்து வெற்றிகளை வாங்கித் தந்து கொண்டிருந்தார். அதெப்படி காயமடைந்த ஒருவர் நன்றாக ஒருபுறம் ஆடிக் கொண்டிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய இலங்கை கிரிக்கெட் வாரியம் அவரை நாட்டுக்கு திரும்பி தன் (இல்லாத ) காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வலியுறுத்தியது. மலிங்காவும் ஏதோ ஈ மொய்க்கிறது என்று அலட்சியமாக இருந்தார். பின்னர் ரொம்பத்தான் மொய்க்கிறதே என்று டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு அறிவித்தார். டெஸ்டு ஆட்டத்தின் மீது குவிக்கப்பட்ட அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் இந்திய கிரிக்கெட் இப்படி ஒரு வேடிக்கை சமாச்சாரமாக்கியது.

தனிப்பட்ட சிரமங்களை மறந்து சுயலாபங்களை தியாகம் செய்து அடைய இன்று ஒன்றுமே கிரிக்கெட்டில் இல்லை. எல்லா திறன்களைப் போலவும் கிரிக்கெட் ஆடுவதும் ஒரு திறன். அது ஒரு விற்பனை சரக்கு. ஒரு டெஸ்டு போட்டியில் சராசரியாக மலிங்கா நாற்பது ஓவர்கள் வீச வேண்டி வரும். சில லட்சங்கள் கிடைக்கும். அதே நாற்பது ஓவர்களை அவர் எட்டு ஐ.பி.எல் போட்டிகளில் தனித்தனியாக வீசலாம். கோடிக்கணக்கில் சன்மானம் வரும். இதனால் அவர் அதிக வருவாய் மார்க்கத்தை தேர்ந்தெடுப்பது தவறில்லை எனலாம். இரண்டு டெஸ்ட் ஆட்டங்கள் ஆடினாலே விரைவிலே உடல் தகுதி இழந்து விடும் அளவுக்கு பலவீனரான அவர் அதையே இரண்டு ஐ.பி.எல் பருவங்களாக ஆடி தன் எதிர்காலத்தை பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இதனால் மோசமான உடல்தகுதி கொண்ட திறமையாளர்களுக்கு தங்கள் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பு ஐ.பி.எல் என்று ஒரு தரப்பு நியாயம் உள்ளது. ஆனால் மலிங்கா, கெய்ல் போன்றோரை வளர்த்தெடுத்த நாடுகளுக்கும் அவற்றின் வாரியங்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகாதா இச்செயல்? சமகாலத்தில் மதிப்பிழந்த எத்தனையோ விழுமியங்களில் ஒன்று தான் விசுவாசம் என்பது இதற்கான ஒரே பதில். இன்று விசுவாசம் ஒரு நிலப்பிரபுத்துவ மதிப்பீடு என்று எளிதில் நாம் அடையாளப்படுத்தி நிராகரிக்க முடியும். அணி உணர்வுக்காக அதிகம் போற்றப்பட்ட இலங்கை அணியினர் தமது தலைவர் தில்ஷானுடன் உள்ளிட்டு வரப்போகும் இங்கிலாந்து தொடரில் தாமதமாய் பங்கேற்கப் போகின்றனர். காரணம் ஐ.பி.எல். உலக கிரிக்கெட் வரலாற்றில் மற்றொரு நாட்டின் உள்ளூர் ஆட்டத்தொடருக்காக ஒரு சர்வதேச தொடர் அலட்சியப்படுத்தப்படுவது இது முதல்முறையே. இது ஒரு துவக்கம் மட்டுமே என்று பலரும் கருதுகின்றனர். ஐ.பி.எல் வேளையில் பிற சர்வதேச ஆட்டங்களை நடத்தாமல் இருப்பது ஒரு தீர்வு என்று பல வீரர்களும் வேண்டுகிறார்கள். அனைத்தும் தலைகீழாகி விட்டதற்கு இந்த வேண்டுகோள் ஒரு இறுதி உதாரணம்.
முதல் தடை செய்யப்பட்ட கனியை புசிக்கும் முன், முதல் சொல் எழுதப்படுவதற்கு கடவுளும் நாமும் வேறுவேறாக இல்லை. அந்நியமான பிறகு மதம் தேவைப் பட்டது. கிரிக்கெட்டிற்கு ஐ.பி.எல் தேவைப்பட்டது.
Share This

4 comments :

  1. \\விழுமியங்கள்\\இந்த வார்த்தையை வாழ்க்கையிலேயே முதல் தடவையா படிக்கிறேன், இதுக்கு என்னப்பா அர்த்தம்? உனக்கு தமிழ நால்லா எழுத வருது, விழுமியங்கள் மாதிரி நடைமுறையில் இல்லாதா வார்த்தைகளைத் தவிர்த்தால் உனக்கு பிரகாசமான எதிகாலம் இருக்கிறது. இத்தனைத் திறமையையும் வச்சுகிட்டு ஏன்ப்பா போயும் போயும் இந்த வீணாப் போன கிரிகெட்டை பத்தி எழுதிகிட்டு இருக்கே? ICC என்பது எந்த அரசாங்கத்தையும் சார்ந்த ஒரு அமைப்பு அல்ல. யாரோ நாலு வெள்ளைக்கார பயலுவ சேர்ந்து அரேபியாவுல குந்திக்கினு ஏதோ பண்ணிக்கினு இருக்கானுவ. இந்த ஆட்டத்தை முக்கியமா யாரு ஆடுரானுவன்னு பார்த்தா எல்லோரும் வெள்ளைக்காரன் கிட்ட அடிமையா இருந்த பயலுவ. இந்த விளையாட்டே, நான் வெள்ளைக் காரனின் அடிமை என்ற உண்மையை தம்பட்டம் அடிப்பதாகும். முன்னேறிய நாடுகள் [சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், முதலான] எதுவும் இந்த விளையாட்டை மதிப்பதே இல்லை, ஆடுவதும் இல்லை. ஒளிபிக்கில் மெடலில் முதலிடத்தில் இருக்கும் சீனாக்காரன் இதை ஆடுகிரானா? இந்தியாவில் நாட்டில் இதை ஏதோ முக்கிய விளையாட்டாகவும், இதில் வென்றால் உலகமே நமது காலடியில் என்பது போலவும் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். பதினோரு சோம்பேறிகள், ஒரு பந்தை, மாங்கு மாங்கு என்று அடித்து விட்டால், உலகம் நமது காலடியில் விழுந்து விடுமா? இது மாதிரி காமெடி வேற எதுவும் இல்லை. ஹா.ஹா..ஹா.. உன் திறமையை வீணடிக்க வேண்டாமென்பது எனது விருப்பம். அப்புறமா உன் இஷ்டம்.

    ReplyDelete
  2. நன்றி ஜெயதேவ். நான் என் விருப்பப்படியே எழுத விரும்புகிறேன்

    ReplyDelete
  3. ரொம்ப அருமையா, இப்ப இருக்கிற நிலைமையை சொல்லியிருக்கீங்க. கடந்த மூன்று வருடங்களில் ஒரே ஒரு போட்டிகூட ஐபில் பார்க்கவில்லை. இம்முறை கிரிக்கெட்டின் தற்கால இருப்பு குறித்து தெரிந்து கொள்ளவும், ஐபிஎல் எனும் வியாபாரத்தை சற்றே பார்க்கவும் ஒன்றிரண்டு போட்டிகள் பார்த்துவருகிறேன்.

    எப்பொழுது கலையானது வியாபாரமாகிறதோ அப்பொழுதே அதன் விழுமியங்கள் சாம்பலாக்கப்படுகின்றன!!

    வருங்காலங்களில் ஐபிஎல்லே வருடம் முழுக்க ஆடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    ReplyDelete
  4. நீங்கள் குறிப்பிடும் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் வாரியம் ஒன்றும் புனிதர்களால் நடத்தப்படுவதில்லை. அங்கு நடைபெறும் ஊழல்களும் நிலவி வரும் சம்பளப் பிரச்சினையும் உலகம் அறிந்ததே! புரஃபஷனல்கள் நாட்டுக்காக மட்டுமே விளையாடவேண்டுமென்பதை எதிர்பார்ப்பதே அபத்தம். எங்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ அங்கே திறமையை விற்று பணமும் பண்ணுவதில் எந்த தவறும் இல்லை. தவிர நாட்டுக்காக விளையாடும் போது காம்ப்ரமைஸ் செய்து விளையாடி இருந்தார்களேயானால், அது தண்டிக்கப்பட வேண்டியது.

    வங்கதேசம் குறிப்பித்தக்க வெற்றிகளை குவிக்காவிடினும், எந்தச் ஒரு பெரிய அணியும் அதனுடன் மோதும்போதும் அதனை குறைத்து மதிப்பிட்டு விளையாடியதில்லை. இலங்கை 96க்கு முன்பு எத்தனை வெற்றிகளைப் பெற்றது? இதே ஐ.சி.சி தான் ஜிம்பாப்வேயின் டெஸ்ட் அங்கீகாரத்தை ரத்து செய்தது!

    இங்கிலீஷ் ப்ரீமியர் லீகினாலும்,ஸ்பானிஷ் லீகினாலும் கால்பந்து அழிந்து விட்டதா என்ன? நாளை 20 20 காலாவதி ஆகி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட் வெளிச்சத்துக்கு வரலாம்.ஃபிக்ஸ் செய்யப்படாமல் கிரிக்கெட் ஆடப்படுவதே முக்கியம். ஃபார்மெட்டுகள் தாற்காலிகமானவை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates