Tuesday 11 March 2014

ஊட்டி பயணமும் சில நினைவுகளும்




விநாயக முருகனின் ராஜீவ் காந்தி சாலைக்கு மலைச்சொல் விருது வழங்கும் நிகழ்ச்சியை ஊட்டியில் நட்த்தினார்கள். பேச என்னையும் அழைத்தார்கள். பெண்கள் கல்லூரியில் பேச அழைத்தால் எப்படி கண்ணை மூடி ஒப்புக் கொள்வோமோ அது போன்றே உடனடியாய் சரி என்றேன்.
வி.முவும் கூட வருவதாக சொன்னது மற்றொரு காரணம். வி.முவின் குடும்பத்துடன் கோயம்பத்தூர் வரை ரயிலில் போய் அங்கிருந்து ஊட்டி போனோம். வி.மு மிக மிக மென்மையான மனிதராக இருக்கிறார். அவரிடம் ஒரு ஜெண்டில்மேன்தனம் (நல்லவிதமாகத்தான்) உள்ளது. வயதாகி வெண்தாடி நீண்ட்தும் சுந்தர ராமசாமி போல் ஆகி விடுவார் என நினைக்கிறேன். அப்படி ஒரு கண்ணியம். எழுத்தில் உள்ள பகடி, அடாவடித்தனம் எல்லாம் நேரில் இல்லை. ஏதோ ரெட்டைப்பிறவியோ என்று கூட நினைத்தேன்.
வி.முவின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகள் பயங்கர சுட்டி. சினிமாவில் வருவது போன்று ஒரு perfect குழந்தை. அப்பா அம்மாவை கூட வாங்க போங்க போட்டு பேசும் குழந்தைகளை மிக மிக அரிதாகத் தான் பார்க்க முடிகிறது. இக்குழந்தை அவ்வளவு மரியாதையாக பேசுகிறாள். ஒரு நொடி கூட அவள் சுணங்கி அழுத்தை நான் பார்க்கவில்லை. எப்போதும் சிரிப்பு மகிழ்ச்சி மத்தாப்பு வாணவேடிக்கைதான். அம்மா சொன்னால் உடனடியாய் கேட்கிறாள். அப்பாவை மட்டும் லேசாய் கலாய்க்கிறாள். இன்னும் கூட ஏதோ சினிமா திரையில் இருந்து இறங்கி வந்த கேரக்டரோ என்று சந்தேகம் இருந்து கொண்டிருக்கிறது. அநியாயத்துக்கு கியூட்.

ஊட்டியில் முதல் நாள் எழுத்தாளர் சுமதி ஸ்ரீயும் தன் குடும்பத்துடன் சுற்றுலாவுக்காக வந்திருந்தார். நாங்கள் சேர்ந்து மதிய உணவருந்தினோம். அவரது கணவர் பென்னியை அதற்கு முன் எங்கோ சந்தித்து பேசியது போல் ஒரு அழுத்தமான நினைவு. ஆனால் எங்கே எனத் தெரியவில்லை. பென்னியும் இதே தான் என்னிடமும் சொன்னார். ஆனால் அவர் இலக்கிய கூட்டங்களுக்கு வருபவர் அல்ல. நான் வேலை பார்த்த கல்லூரிகளில் எங்காவது வந்துள்ளாரா எனக் கேட்டேன். இல்லை. ஒருவேளை எனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டோ என சந்தேகம் தோன்றியது. 


உணவுக்குப் பின் ஏரியில் படகு சவாரிக்கு சென்றோம். படகு வயதான குடிகாரனைப் போல் ஆடியது. குடிகார்ர்களின் அதீத தன்னம்பிக்கையுடன் படகோட்டி “தைரியமா ஏறுங்க, நான் புடிச்சிக்கிறேன்” என்றார். ஆனால் ஒரு கையில் போன் பேசியபடி இன்னொரு கையால் படகைப் பிடித்து நிறுத்தி ஆட்களை அவர் உள்ளே ஏற்றும் ஸ்டைலைப் பார்த்த்தும் நான் கரையிலே உட்கார்கிறேன் என்று உறுதியாக சொல்லி விட்டேன். 


கரையில் Common snipe எனும் ஒரு பறவை திண்டில் அமர்ந்து நீரில் தெரியும் பூச்சி அல்லது சிறு மீன்களை கொத்தி குதப்பி விழுங்கிக் கொண்டிருந்த்து. அதைக் கண்டு அதை விட பெரிய அதே இனத்து பறவை ஒன்று வந்து துரத்தி விட்டு இடத்தை பறித்து நாலைந்து முறை நீரை கொத்தியது. பிறகு சாலையில் யாரோ குதிரையில் செல்ல வேடிக்கை பார்க்க பறந்து போனது. சின்ன பறவை பழைய இட்த்தில அம்ர்ந்து கடமையே கருத்தாய் நீரை சொதக்கென கொத்த ஆரம்பிக்க பெரிய பறவை வந்து மீண்டும் துரத்தியது. இம்முறை அது எங்கே போனாலும் துரத்தி துரத்தி விரட்டியது. ஒரு கட்டத்தில் அது எங்கோ மறைந்து போனது. ரொம்ப நேரம் கழித்து பெரிய பறவை போன பின் தான் குட்டி பறவை திரும்பி வந்து சாப்பாட்டை விட்ட இட்த்தில் தொடர்ந்த்து. நான் ரயிலில் வரும் போது படித்து வந்த Alchemy of Desire நாவலில் ஒரு அத்தியாயம் முழுக்க அலுவலகத்தில் நடக்கும் அதிகாரப்போட்டி, குதிகால் வெட்டு, பரஸ்பர அவதூறு பற்றித் தான். நான் உட்கார விட்டாலும் அடுத்தவன் உட்காரக் கூடாது என்கிற மனப்பான்மை அனைத்து மனித உயிர்களுக்குமான பொது உளவியல் போல. வேலை, குடும்பம், சாலை, இலக்கியம் எங்கும் “வளர்ந்து வரும்” ஆட்கள் அதிகாரப் போட்டியில் ஓடி ஓடியே களைத்துப் போகிறார்கள். எனக்கு இது பார்த்த போது இயற்கை மீதிருந்த கொஞ்ச நஞ்ச ரொமாண்டிஸிசமும் கசந்து போனது. இனிமேல் பறவைகளை சிலாகிப்பவர்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்கணும் என நினைத்தேன்.
மாலை கெஸ்ட் ஹவுஸுக்கு திரும்பினோம். அமைதியான இடம். தொந்தரவுகள், குறுக்கீடுகள் இல்லாமல் எழுத ஏற்ற இடம் என வி.முவிடம் கூறினேன். தனக்கு தன் வீட்டு அறையில் இருந்தால் தான் எழுத்து வரும் என்றார். அதிலும் ஓரளவு உண்மை உள்ளது. நான் எழுதும் போது பொதுவாக யாராவது காதுக்கு பக்கமாய் வந்து செவிடர்களிடம் பேசுவது போல் ஒலியெழுப்பிக் கொண்டே இருப்பார்கள். அமைதியாக உட்கார்ந்து எழுதியே எனக்கு கிட்டத்தட்ட நினைவில்லை. ஜெயமோகன் இரைச்சலான ரயில்நிலையத்தில் உட்கார்ந்து கூட சிறுகதை எழுதி இருப்பதாக ஒருமுறை கூறியது நினைவு வந்தது. என் பழக்கம் யாரிடமாவது பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் சம்மந்தமில்லாமல் எழுதிக் கொண்டிருப்பது. பழகி விட்டது. இப்போதெல்லாம் இரைச்சல் இருந்தால் தான் கூர்மையான சிந்திக்க வருகிறது.
இரவு. ஜெயலலிதா தன் அமைச்சர்களிடம் பேசும் போது ஒரு கற்பனை ரிமோட் எடுத்து மியூட் செய்தால் ஒரு அமைதி ஏற்படுமே அது போன்ற நிச்சலனம். குருவி சத்தமோ, இலைகளின் சலசலப்போ கூட கேட்கவில்லை. ரெண்டு கம்பளி போர்த்தி படுத்து Alchemy of Desireஇல் ஒரு பயங்கர நகைச்சுவையான அத்தியாயம் படித்தேன். இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தின ஒரு வேனில் இரு சீக்கியர்கள் பஞ்சாபில் இருந்து தில்லிக்கு போகிறார்கள். தனியாய் அந்த அறையில் இரவில் படிக்க படிக்க வெடித்து நான் சிரிக்கிறது கேட்க எனக்கே பயமாக இருந்த்து.
அடுத்த நாள் காலை விழித்ததும் தான் நான் எவ்வளவு நிம்மதியாய் தூங்கி இருக்கிறேன் என உணர்ந்தேன். உடல் மிதக்கும் பனிக்கட்டி போல் இருந்த்து. வி.மு வழக்கம் போல் காலையிலே சுறுசுறுப்பாய் எழுந்து தோட்டத்தில் நடந்து விட்டு மூக்கிலும் காதிலும் பனிப்புகை வழிய ஜேப்பில் கைகளை திணித்தபடி வந்தார். நான் ரொம்ப பொறுமையாக பல்தேய்த்து ரொம்ப ரொம்ப பொறுமையாக குளித்தேன். ஆனாலும் நிறைய நேரம் இருந்த்து. சென்னையில் நீங்கள் விடிகாலையில் எழுந்து கண்ணை திருமியதும் அலுவலகம் போகும் பத்து மணி ஆகி விடும். அப்படியே கொதிக்கும் சாலையில் குதிக்க வேண்டியது தான். இங்கே நேரம் குழந்தை போல் தவழ்ந்தது.
வி.மு.வின் மாமனார் அ.பிச்சை காந்திகிராம் பல்கலையில் தமிழ் பேராசிரியர். நிறைய வாசிப்பவர். வாசிப்பது என்றால் அநாயசமாய் படித்த புத்தகத்தை வெற்றிலை போல் மடித்து மெல்ல மென்று கொண்டே பேசுபவர். அவரிடம் பேசுவது சுவையாக இருந்த்து. சி.சு செல்லப்பா, க.நா.சுவில் இருந்து நா.காமராஜன், மீரா போன்ற பல ஜாம்பவான்களை சந்தித்திருக்கிறார். நா.காமராஜன் அவருக்கு வகுப்பெடுத்திருக்கிறார். ஊட்டியில் உள்ள பறவைகளை விட நானும் அவரும் தான் அதிகம் பேசினோம்.
நிகழ்ச்சி பதினொன்றரைக்கு ஆரம்பித்த்து. அழகான அரங்கம். ஸ்வட்டருடன் ஊட்டிவாழ் கவிஞர்கள், வாசகர்கள் மற்றும் குடும்பத்தார் வந்திருந்தனர். பொதுவாக இவர்களிடம் ஒரு களங்கமின்மையும் குழந்தைத்தனமும் இருந்ததை ரசித்தேன். சென்னையில் ஏதாவது இலக்கியக் கூட்டத்தில் போய் அமர்ந்தால் அருகில் இருப்பவரின் பத்து விரல்களில் இருந்தும் சரக் சரக் என பத்து கத்திகள் வெளிப்படும். காதுகளில் இருந்து குட்டி பீரங்கிகளும் குறிபார்க்கும். பொதுவாக சென்னையில் வரலாறு காணாத உஷ்ணம் எழுவது சிறுபத்திரிகை கூட்டங்களில் தான் என்பார்கள். ஆனால் இங்கு வெளியில் மட்டுமல்ல மனதளவிலும் ஒரு குளுமை இருந்த்து. சென்னையில் யாரை சந்தித்தாலும் ”உன்னை போட்டுத் தள்றேண்டா” என்கிற கணக்கில் பேசுவார்கள். இங்குள்ள இலக்கிய வாசகர்களும், எழுத்தாளர்களும் கண்களில் இமைகளுக்கு பதில் மயிலிறகு வைத்திருந்தார்கள்.
ஒரே ஒரு ஆள் தவிர. நான் பேச்சில் ஜெயமோகனைக் குறிப்பிட்டிருந்தேன். அவர் போகும் போது என்னைப் பார்த்து “ஜெயமோகனைப் பற்றி நிறைய பேசினீங்க” என்று ஒரு நக்கலும் பூடகமும் கலந்து புன்னகைத்தார். “யாமார்க்கும் குடியல்லோம்” என மனதில் நினைத்துக் கொண்டேன். 15 வருடங்களுக்கு முன் அவரை ஜெ.மோவின் ஊட்டி சந்திப்பில் பார்த்த்தாக சொன்னார். ஆனால் இப்போது இட்துசாரியாம். அது தானே பார்த்தேன், நம் சிறுபத்திரிகை ஆள் என புரிந்து கொண்டேன். நம் ஆட்கள் அண்டார்டிகா போனாலும் புகைந்து கொண்டே இருப்பார்கள். பக்கத்தில் இருப்பவரின் பாக்கெட்டிலும் ஒரு தீக்குச்சியை உரசிப் போட்டு விட்டு “அப்புறம் சொல்லுங்க தோழர்” என்பார்கள், நடிகர் சந்திரசேகரைப் போன்ற பார்வையுடன்.
நிகழ்ச்சியை மிக அழகாக நடத்தினார்கள். சென்னை கூட்டங்களில் வரவேற்புரை பேசுபவர்கள் முக்கால் மணிநேரம் பேசி விட்டுத் தான் வரவேற்கவே துவங்குவார்கள். சிலர் “எனக்கு பேசத் தெரியாதுங்க” என்று ஆரம்பித்தால் நீங்கள் உஷாராக நாற்காலியில் இருந்து எழுந்து விட வேண்டும். ரெண்டு மணிநேரம் பேசுவார்கள். இங்கே எல்லோரும் கணக்காக பேசினார்கள். கூட்டத்தினரும் அமைதியாக கேட்டார்கள். நானும் வி.முவும் தான் சென்னை கலாச்சாரத்தை காப்பாற்றும் பொருட்டு கொஞ்சம் “விரிவாக” பேசினோம். நான் எண்பதுகளில் இருந்து இன்று வரை எண்ணிக்கை அளவில் நாவல் எழுதும் பாணி மாறி வந்துள்ளதை, இன்று நாம் சிறுகதையை விட நாவல் எழுதுவது எளிது என நம்பும் விசித்திரத்தை, நாவலை விரிவாக எழுதுவதற்கான சரியான முறை எதுவாக இருக்க முடியும் என்பது பற்றி பேசினேன். எஸ்.வி.ஆரின் பேச்சு முக்கியமாக இருந்தது.
மலைச்சொல் அமைப்பினர் நிகழ்ச்சியை நடத்திய விதம் ரொம்ப வண்ணமயமாக உற்சாகமாக இருந்த்து. பொதுவாக கல்லூரி மாணவர்கள் தாம் புதிதுபுதிதாய் திட்டமிட்டு துறுதுறுப்பாய் இவ்வாறு நடத்துவார்கள். நம்முடைய வழக்கமான வறட்சியான கூட்டங்கள் பார்த்து பார்த்து இது எனக்கு செம கிக்காக தோன்றியது. பொதுவாக சென்னையில் கூட்டங்களில் இலக்கியவாதிகள் தாம் ரொம்ப அலுப்பாக இருப்பதாய் பாவனை காட்டுவதும், அது தான் அறிவுஜீவித்தனம் என நம்புவதும் நினைவு வந்த்து. நம்முடைய கூட்டங்களிலும் இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வயோதிகர்களைப் போல் ஸ்லோமோஷனில் இமை தூக்கி களைத்த குரலில் பேசுபவர்கள். உண்மையான இளைஞர்களை இது போன்ற சிற்றூர்களில் தான் பார்க்க முடிகிறது.
என்.ஜி.ஓ ஒன்று நட்த்தும் ரமேஷ் எனும் நண்பருடன் மதிய உணவருந்தினேன். அவருக்கு தாய்மொழி கன்னடம். தமிழிலும் பேசுகிறார். இரண்டு மொழிகளுக்குள் மாட்டின தனது அடையாளக் குழப்பத்தை கூறினார். பாலியல் தொழிலாளிகள் ஒரு குறுநாவல் எழுதி வருவதாக சொன்னார்.
பிறகு மலைச்சொல் நிறுவனர் பால ந்ந்தகுமார் மற்றும் வி.முவிடன் மேட்டுப்பாளையம் நோக்கி கார் பயணம். அந்த ரெண்டு நாட்களில் நான் மிக மிக மகிழ்ச்சியாக இருந்த்து அந்த மதியப் பொழுதில் தான். நந்தகுமாருக்கு அப்படி ஒரு பேச்சு லாவகம். ஊட்டி எழுத்தாளர்கள், சாரு நிவேதிதா, பாரதியாரின் மனைவி, தான் பார்த்த சினிமா என என்னென்னமோ பேசிக் கொண்டே போனார். அவர் அ.தி.முக முன்னாள் மாவட்ட செயலாளர். புலனாய்வு துறையினர் எப்படி செய்தி சேகரித்து இரவு 8:15க்கு ஜெயாவிடம் புலெட்டின் வாசிப்பார்கள் என்பதைப் பற்றி விவரித்த்து, கலைஞர், ஸ்டாலின் பற்றி பேசியது எல்லாம் வெகுசுவாரஸ்யம்.
நந்தகுமாருக்கு தி.மு.கவின் ஜனநாயகத் தன்மை மீது அபிமானம் இருந்த்து. பொதுவாக கட்சிக்கார்ர்கள் இணையத்தில் உள்ள கட்சி விசுவாசிகளை விட கண்ணியமாக முதிர்ச்சியாக இருக்கிறார்கள். இந்த எண்ணம் எனக்கு அன்றைய மாலை செல்ல செல்ல வலுப்பட்டது. அவர் ஒரு வார்த்தை கூட எதிர்க்கட்சியை பற்றி மோசமாக பேசவில்லை. மேட்டுப்பாளையம் சென்றதும் நசீர் எனும் ஒரு அதிமுக மாணவர் அணி தலைவரின் அலுவலக அறைக்கு கூட்டி சென்றார். அங்கும் மனிதர்கள் கண்ணியமாகவே இருந்தார்கள்.
நசீர் பெரிய ஆகிருதி கொண்ட உணர்ச்சிகரமான இறுக்கமான மனிதர். மென்மையானவர். அவரது நண்பரான நந்தகுமார் நேர்மாறானவர். ரெண்டு பேரும் பேசக் கேட்க லாரல் ஹார்டி நினைவு வந்தார்கள். இருவரும் பரஸ்பரம் “என்ன... மாவட்டம்!” என்று தான் அழைத்துக் கொள்வார்கள். சிரித்துக் கொண்டே இருந்தேன். நசீர் வடை வாங்கி வர சொல்லி இருந்தார். நாங்கள் வந்ததும் இன்னும் கொஞ்சம் வடை வாங்கி வரச் சொன்னார். வி.மு வேண்டாம் என்றார். நான் அவரை இந்த கடை வடை நன்றாக இருக்கிறது என வற்புறுத்தி ரெண்டாவது வடை சாப்பிட வைத்தேன். தன் வாழ்க்கையில் இவ்வளவு வடை சாப்பிட்ட்தில்லை என்று அவர் இரவுணவு வரை வருத்தப்பட்டார். வி.மு அவரது எட்டு வயது மகளை விட பாதி தான் சாப்பிடுகிறார்.
நக்கீரனில் ஜெயலலிதாவை அவமானப்படுத்தி எதுவோ வந்திருப்பதாய் பேசிக் கொண்டிருந்தார்கள். நசீர் தன் அடிபொடியிடம் “பத்திரிகை கிடைச்சுதா?” என்றார். “கடையில ஒண்ணு கூட இல்ல, காலியாயிருச்சு” என்றார் அவர். உடனே நசீரும் நந்தகுமாரும் சேர்ந்து “சே கிடைச்சிருந்தா கொளுத்தி இருக்கலாமே” என விசனப்பட்டனர். பகடி செய்கிறார்களா அல்லது நிஜமாக சொல்கிறார்களா என சொல்ல முடியாத தொனியில். நசீரின் ரிங் டோன் ஜெயல்லிதாவின் பேச்சின் முதல் வரிகள். ஒவ்வொரு முறை அவருக்கு போன் வரும் போது ஜெயல்லிதாவின் வெண்கல பாத்திரத்தில் தட்டியது போன்ற குரல் வரும். “ஓ வந்தாச்சா தூக்கி போட்டிரு” என்கிற மாதிரி சாதாரண சமாச்சாரம் தான், ஆனால் முன்னெச்சிரிக்கை மணி போல ஜெயாவின் குரலோடே வரும். அவர் ரொம்ப சீரியஸான அம்மா பக்தர். நாங்கள் கிளம்பும் போது தண்ணீர் பாட்டில் வாங்க நந்தகுமார் ஆள் அனுப்பினார். நசீர் அம்மா வாட்டர் வாங்குங்க என்று பரிந்துரைத்தார். அவ்வாறே செய்யப்பட்ட்து. பக்கத்தில் இருந்தவர் இப்போதெல்லாம் அக்குவாபினா போன்ற பாட்டில் நீரில் நிறைய ரசாயனம் கலக்கப்படுவதாய் புதிய தகவல் சொன்னார். அம்மா வாட்டர் தான் நல்லது எனும் சொல்லுவாரோ என பயந்த போது “கிணத்துத் தண்ணி தாங்க நல்லது” என்றார். நிம்மதி அடைந்தேன்.
நானும் வி.முவும் இலக்கியவாதிகள் என நந்தகுமார் கூறிய போது “அந்த ஞாநிய தெரியுமாங்க?” என நசீர் கொதிப்போடு கேட்டார். என்ன பிரச்சனை என விசாரித்தேன். ஒரு டி.வி விவாதத்தின் போது ஞாநி டாஸ்மாக்கை “அம்மா ஒயின்ஸ்” என திரும்ப திரும்ப சொல்லியதாகவும், தமிழ்நாட்டில் அனைத்து இளைஞர்களும் வேலை பார்க்க முடியாதளவுக்கு போதைக்கு அடிமையானதாய் திரித்து கூறியதாகவும் வருத்தப்பட்டார். அன்று டி.வியில் இதைக் கேட்ட கோபத்தில் ஞாநியை திட்ட அவரது போன் நம்பரை அரக்க பரக்க தேடி கிடைக்காமல் ஏமாந்த்தாய் கூறினார். எனக்கு ஞாநியை நினைத்தால் பாவமாய் இருந்த்து. கலைஞரை காக்கா பிடிப்பதற்காக ஞாநி அம்மாவை திட்டுவதாய் அவர் கூறினார். நான் ஞாநி ஒரு நடுநிலையாளர் என்றும், இதை விட கடுமையாக எப்படி கலைஞரை அவர் தாக்கி இருக்கிறார் என்றும் கூறினேன். நசீர் கண்ணியமாக “மதுக்கடைகளை மூடணும்னு சொல்றதை நானும் ஏத்துக்கிறேங்க. அது சரி தானுங்க. ஆனால் அம்மா ஒயின்ஸுன்னு சொல்றதுக்கு ரொம்ப ஓவருங்க” என்றார். அதாவது ஞாநி மிகையாக விமர்சித்து விட்டார் என்பது தான் அவரது வருத்தம். மற்றபடி எதிர்விமர்சனத்தை அவர் ஏற்றுக் கொள்கிறார். பேஸ்புக்கில் உள்ள கழக அனுதாபிகளிடம் விவாதித்தால் எப்படியெல்லாம் கண்ணியமின்றி பேசுவார்கள் கொந்தளிப்பார்கள் என நினைத்துப் பார்த்தேன். அரசியல் அனுதாபிகளை விட அரசியல்வாதிகள் முதிர்ச்சியாக நிதானமாக இருக்கிறார்கள்.
நந்தகுமாருக்கு போன் வந்த்து. அன்றைய நிகழ்ச்சிக்கான பேனரை யாருக்கோ கொடுத்து விடுமாறு கூறினார். அதை அந்த நண்பர் தன் வீட்டுக்கூரையில் போட்டால் மழைநீர் கசியாமல் இருக்கும் என சாதாரணமாய் சொன்னார். பின்னர் இது போல் பகத் பாஸிலின் “ஒரு இந்தியன் பிரணய கதா” படத்தில் வருகிற சம்பவத்தை சொன்னார். பாஸில் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி. அவருக்கு தேர்தல் சீட் கிடைப்பதாக ஒரு புரளி கிளம்புகிறது. வீட்டிலும் வெளியிலும் எங்கு பார்த்தாலும் பயங்கர மரியாதை. பாஸில் தன்னை வாழ்த்தி தானே நூற்றுக்கணக்கான பேனர்கள் அடித்து வைக்கிறார். ஆனால் அடுத்த நாள் பெயர் தெரியாத யாருக்கோ சீட் கொடுத்து விடுகிறார்கள். இது முடிந்து ஒரு நாள் பாஸில் காலை எழுந்து வரும் போது அவரது அம்மா அவரது வீணாகிப் போன வாழ்த்து பேனர் ஒன்றை நாய்க்கூண்டின் மீது போர்த்தி வைத்திருக்கிறார். பாஸில் அதிர்ச்சியாகிப் பார்க்க அம்மா “ஒரே ஒரு பேனர் எடுத்திக்கிறேண்டா, எப்படியும் வீணாகத் தானே போகுது” என்கிறார். இக்காட்சியை அவர் விவரித்த்து கேட்க அவ்வளவு தமாஷாக இருந்த்து.
ரயில் ஏறியதும் தான் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது வருடங்கள் ஆகின்றன என தோன்றியது. கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் இவ்வளவு சிரித்து உற்சாகமாக இருந்திருக்கிறேன். அதன் பிறகான என் வாழ்க்கையில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது என நினைத்தேன். வயிற்றில் அமிலம் கட்டிய ஆட்களை கடவுள் என்னைச் சுற்றி படைத்து வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலை சென்னை வந்த பின்னரும் இதோ இப்போது வரை அந்த சந்தோஷத்தின் தடம் என் உதடுகளில் இருந்து நீங்கவில்லை. ரொம்ப நாள் தங்காது. ஏதாவது ஒரு சென்னை இலக்கியவாதியை பார்க்காமலே போய் விடுவேன்?
Share This

2 comments :

  1. படித்தேன் ரசித்தேன். சுவாரசியமாய் இருந்தது.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.ரசிக்கும்படியான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates