Wednesday 5 March 2014

சாதியும் பொருளாதார போட்டியும் இன்றி வாழ்க்கை சாத்தியமா?





சர்வோத்தமன் இந்த கட்டுரையில் நகர்வாழ் மனிதன் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்கு அவன் அமைப்பின், அதாவது அரச நிர்வாக எந்திரத்தின் பகுதியாக, இருப்பதே காரணம் என்கிறார். மனிதன் அமைப்பை விட்டு வெளியேற வேண்டும். அதற்கான ஒரே வாய்ப்பு கிராமிய பொருளாதாரத்தை நோக்கி மீள்வதே என்கிறார். காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.

 இது எரிக் புரோம் தனது Fear of Freedom நூலில் உருவாக்கும் வாத்த்தை நினைவுபடுத்துகிறது. அவர் மகிழ்ச்சியின்மைக்கு இன்னொரு காரணம் கூறுகிறார். இன்று மனிதனுக்கு மகிழ்ச்சிக்கான பொறுப்பு வந்து விட்ட்து. அதாவது உங்கள் மகிழ்ச்சியை நீங்களே உருவாக்க வேண்டும். Pursuit of Happiness படம் பார்த்திருப்பீர்கள். அது ஒரு தனிமனிதன் தன் ஊக்கம் மூலம் எப்படி மகிழ்ச்சியை “அடைகிறான்” என்று கூறுகிறது. மகிழ்ச்சி நிகழும் ஒன்றல்ல அடைய வேண்டியது என்கிறது. இது ஒரு நவீன மனப்பான்மை என்கிறார் எரிக் புரோம்.

தொழில்மயமாக்கத்துக்கு முன் மனிதன் இவ்வாறு நினைக்கவில்லை. அன்று கிராமங்களில் அவன் ஒரு பெரிய சமூக அமைப்பின் எளிய ஒரு திருகாணி போல் இருந்தான். தனக்கு விதிக்கப்பட்ட வேலைகளை செய்தபடி வாழ்ந்தான். அவன் வாழ்க்கையில் வெற்றியோ தோல்வியோ இல்லை. அதனால் ஜெயிக்க வேண்டும் என்கிற இன்றுள்ள நிர்பந்தம், அது தருகிற அழுத்தம், நெருக்கடி அன்றைய மனிதனுக்கு இல்லை. மயிரை அகற்றுவது ஒருவனது வாழ்க்கைப் பணி, வேறெதுவும் அவன் செய்யக் கூடாதென்றால் அது ஒரு புறம் கொடூரமானது, இன்னொரு புறம் அது அவனை லகுவாக, அழுத்தமின்றியும் வைத்திருக்கிறது. இது ஐரோப்பிய சூழலில் இன்னும் பொருத்தமானது. இந்தியாவில் அந்தளவுக்கு நம் பழைய சமூக அமைப்பு மனிதனை மகிழ்ச்சியாக வைத்திருந்தது எனக் கூற முடியாது. அதற்குக் காரணம் அந்தஸ்து குறித்த கேள்வி.

இந்தியர்களுக்கு அடிப்படையில் அந்தஸ்து சோறு, கூரை, ஆடையை விட முக்கியம். அந்தஸ்துக்காக சொந்த மகளின் காதில் விஷம் ஊற்ற தயங்காத தகப்பன்கள் வாழும் தேசம் இது. நவீன சமூக அமைப்பில் உங்கள் அந்தஸ்தை உங்களது உழைப்பு மூலம் நீங்களே உருவாக்க வேண்டும். இது நம் வாழ்வை மிக நெருக்கடியான போட்டியாக மாற்றினாலும், மகிழ்ச்சி குறைவாக இருந்தாலும், நீங்கள் மேலே வர வாய்ப்பு உள்ளதே ஒரு பெரும் வரம்.

ஆனால் காந்தி கனவு காணும் சமூகத்தில் அது சாத்தியம் அல்ல. உயர் சாதி மக்கள் மன விரிவு பெற்று கருணையோடு பிறரை நடத்த வேண்டும் என காந்தி கேட்டுக் கொண்டாலும் அது நம் பழைய சமூக அமைப்பின் தத்துவத்துக்கு எதிரானது. நம் சாதிய அமைப்பில் அந்தஸ்து உழைப்புக்கு மாறானது, பிறவியால் ஏற்பட்டு அப்படியே நிலைப்பது. இங்கு மனிதன் பொருளாதார போட்டியினால் ஏற்படும் அழுத்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்தஸ்து இன்மையின் கசப்பு அவனை நிச்சயம் அழுத்தும். 

அந்தஸ்து இல்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பதும் சாத்தியம் அல்ல. உதாரணமாய் நான் உங்கள் பீயை தினமும் ஒரு பக்கெட்டில் அள்ளி போகிறவன் என்றால் நான் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்.
சர்வோத்தமன் காந்திய முன்மாதிரியை அம்பேத்கரிய, இட்துசாரி கண்ணோட்டங்களில் விவாதித்து மீள் உருவாக்கலாம் என்கிறார். மனித சமூகத்துக்கு ஏதோ ஒரு அடுக்குமுறை அவசியப்படுகிறது. அது சாதியாலோ அல்லது பொருளாதாரத்தாலோ ஏற்படும் அடுக்குமுறையாக இருக்கலாம். ஆனால் படிநிலை இன்றி சமூகம் இல்லை. சேர்ந்து வாழும் போது நாம் சுயசார்புடன் நமக்கான பொருட்களை நாமே உருவாக்கி வாழலாம். ஆனால் அது மட்டும் போதாது. ஒரு மனிதனுக்கு தன் அடையாளம் எது என்கிற கேள்வி முக்கியம். சாதியை நீக்கி விட்டால், பொருளாதார போட்டியை எடுத்து விட்டால், அவன் அடையாளம் எப்படி உருவாகும், அல்லது தீர்மானமாகும்? பூணூல் இல்லாவிட்டால், சாப்ட்வேர் – இரண்டும் இல்லாமல் நவீன இந்தியனால் மகிழ்ச்சியாக வாழ முடியுமா? 
ஒருவேளை நான் எதிர்மறையாக இதை பார்க்கிறேனாக இருக்கலாம். ஆனால் இந்த கோணத்திலும் நாம் சுயராஜிய கனவை அலசிப் பார்க்க வேண்டும். சர்வோத்தமனின் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. விவாதிப்போம்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates