Thursday 20 February 2014

ராஜீவை கொன்றது சரியா என கேட்கலாமா?




புலிகள் ராஜீவை கொன்றார்கள் என்பது உண்மை. அதை நாம் மறுக்க வேண்டியதில்லை. மறுப்பது என்பதே அது ஒரு குற்றம் என்கிற எண்ணத்தில் இருந்து வருகிறது. இது அவசியமற்ற ஒன்று. ஏன் எனக் கூறுகிறேன்.


புலிகளின் கண்ணோட்டத்தில் இருந்து ராஜீவ் படுகொலையை ஒரு பெருங்குற்றமாக நான் கருதவில்லை (அவர்கள் அதற்காக பிற்பாடு வருந்தினாலும் கூட). புலிகள் வன்முறையை பின்பற்றிய ஒரு போராட்ட அமைப்பு. அவர்களின் தர்க்கப்படி கொலை ஒரு குற்றமல்ல. அதே தர்க்கப்படி ராஜீவ் கொலையும் கூட குற்றமல்ல தான். அப்படி நினைக்காத பட்சத்தில் நாம் முழுக்க புலிகளின் வரலாற்று பங்கை மறுக்க வேண்டி இருக்கும். ஆக இங்கு நாம் புலிகள் கொல்லவில்லை என வாதிடும் போது அது ஒரு குற்றம் எனும் அச்சமும் குற்றவுணர்வும் பின்னே உள்ளது. 

வன்முறை குற்றமென்றால் அவ்வழியை போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்த சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற விடுதலைப் போராட்ட தியாகிகளை நாம் ஏற்க முடியாமல் போகும். எல்லோருக்கும் ஒரே தர்க்கம் பொருந்தாது. ஒருவர் கண்ணோட்ட்த்தில் போராட்ட வழிமுறையாக இருப்பது இன்னொருவருக்கு குற்றமாகும். நாம் ராஜீவ் கொலையை புலிகளின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கலாம். அதில் அவர்களுக்கு ஒரு நியாயம் இருந்த்து என யோசிக்கலாம். கொல்லுவதே கூடாது என்றால் நாம் மனிதர்களை கொல்ல என்றே கோடிக்க்ணக்கான ஆட்களையும் ஆயுதங்களையும் ராணுவம் எனும் பெயரில் நிறுவி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவது?

ஆக நாம் எக்கொலையையும் நியாயப்படுத்த முடியாது. தேவையும் இல்லை. விடுதலைப்புலிகளோ, அல் கொய்தாவோ, மாவோயிஸ்டுகளை, ராணுவமோ, போலீசோ – இவர்கள் நிகழ்த்தும் கொலைகளின் தர்க்கத்தின் அவர்களின் தரப்பில் இருந்து புரிந்து கொள்ள முயல்வோம். அதை மட்டுமே நம்மால் செய்ய முடியும். இல்லாவிட்டால் கண்மூடித்தனமாக நாம் செய்யும் குற்றங்களை மறந்து விட்டு அடுத்த தரப்பினரை மட்டும் கொலைகார்ராய் பார்ப்போம். அவர்கள் நம்மை கொலைகார்ராய் பார்ப்பார்கள்.
Value ethics எனும் ஒரு ஆய்வு முறையை அரிஸ்டாட்டில் உருவாக்கினார். ஒருவர் கொலை செய்தால் அதை மூன்று வழிகளில் பார்க்கலாம்.

1.. கொல்லுவது குற்றம். ஆகவே கொன்றவர்களை தண்டிக்க வேண்டும். இந்த தர்க்கத்தை பயன்படுத்தி ராணுவம், காவல்துறையை கூட நாம் குற்றவாளி ஆக்க முடியும். எதிரியை தேசபாதுபாப்புக்காக கொன்றால் கூட குற்றம் தாம்.

2. கொல்வது சட்டத்துக்கு புறம்பானது. அதனால் மட்டுமே அது குற்றம். இங்கு யாரை, எதற்கு கொல்வது என வரையறுக்கலாம். தேசபாதுகாப்புக்காக ராணுவமும், சுயபாதுகாப்புக்காக காவல் துறையும் கொல்லலாம் என விதி வகுக்கலாம். இது சார்பு நிலை உள்ள தர்க்கம்.

3. கொலை செய்வது ஒருவரைப் பற்றி நமக்கு கூறுவது என்ன? அவரது கோணம், உளவியல், நிலைப்பாடு என்ன? இப்படி ஆய்வது அரிஸ்டாட்டிலின் பாணி. புலிகள் கொன்றார்கள் என்றால் அதற்கான தேவை, நெருக்கடி, உளவியல் என்ன என யோசிக்கலாம் என்பார் அரிஸ்டாட்டில். இது ஒரு பரந்துபட்ட அணுகுமுறை.

குற்றத்தின் உளவியலை மட்டும் பார்த்தால் குற்றங்கள் பெருகாதா என நீங்கள் கேட்கலாம். தண்டனையால் குற்றங்கள் குறைவதில்லை. அப்படி நடந்ததாய் வரலாறு இல்லை. தூக்குதண்டனை பற்றிய தன் நூலில் ஆல்பர்ட் காம்யு இது குறித்து விரிவாக பேசுகிறார். குற்றத்தை வரையறுத்து தண்டிப்பது நம் பழிவாங்கும் மனதை திருப்திப்படுத்தியும் மக்களை அச்சுறுத்தி ஒடுக்கவும் தான்.

இன்றைய நிலையில் யார் குற்றவாளி என ஒரு வரையறையை உருவாக்குவது குழப்பத்தை அதிகரிக்கும், குறுகின மனப்பான்மையை, முன் எண்ணங்களை உருவாக்கும் நாம் யார் பக்கம் என நாம் யோசிக்கலாம். நம் பக்கத்து நியாயத்தை, அது குற்றமாகவே இருந்தாலும், அதை ஆதரிக்கலாம். அது நம் இருப்பை காப்பாற்ற அரசியல் செய்ய உதவும். அரசியல் இன்றி இனி நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாது. மறைமுகமாக அதைத் தான் எல்லோரும் பண்ணுகிறார்கள். நம் எதிரிகளும் கூட. 

அதனால் தான் ராஜீவ் கொலை வழக்கில் நால்வரையும் விடுவிக்கலாமா என்கிற சர்ச்சை மேலும் மேலும் குழப்பமாகிறது. நமக்கு அவர்கள் அப்பாவிகளாகவும், வடக்கில் இருப்பவர்களுக்கு கொலையாளிகளாகவும் படுகிறார்கள். நான் கல்லூரியில் படிக்கையில் விடுதியில் சில வடகிழக்கு மாணவர்கள் படித்தார்கள். அவர்களில் சிலருக்கு இந்தியா மீது கடும் கோபம் இருந்த்து. இந்தியாவை ஒரு எதிரி நாடாக பார்த்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் இந்தியாவின் ஒரு பகுதி தான். அவர்களை பேதைகள் அல்லது துரோகிகள் என நாம் கூற முடியாது. அவர்களின் தர்க்கத்தை, உளவியலை புரிந்து கொள்ள முயலலாம்.

மற்றபடி புலிகள் ராஜீவை கொன்றது சரியா, இந்நால்வரும் குற்றவாளிகளா என்கிற விவாதத்திற்கு முடிவே இல்லை. பேஸ்புக்கில் சர்ச்சிக்கவும், டிவி டி..ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்தவும் மட்டுமே உதவும். இதை அரிஸ்டாட்டில் அன்றே புரிந்திருந்தார். நமக்கு ஒரு மாற்று பார்வையும் தந்தார். அவர் சொல்வது இது தான்: ஒரு பறவை பறக்கிறது. அது எப்படி இங்கு பறக்கலாம் என கேட்காமல், எப்படி பறக்கிறது, பறக்கும் பொது அதன் மனமும் உடலும் எப்படி செயல்படுகிறது, இதில் இருந்து நாம் என்ன அறியலாம் எனக் கேளுங்கள். அதுவே பயன்படும்!
Share This

6 comments :

  1. செய்த குற்றதிர்க்க்கு உள்ள தண்டனையை விடக் கூடுதல் தண்டனையை, வலியை க் குற்றம் சட்டப் பட்ட ஏழு பேரும் அனுபவித்து விட்டதால் விடுதலை செய்வோம் என்பது மிகச் சரியான தீர்வு.

    காங்கிரசின்+ சு சாமியின் வாதம், இந்த வலி தண்டனை போதாது , கூடுதல் வலி வேண்டும் என்பது . அதனால் திருமுருகன் காந்தி சொல்கிறார் , சுப்ரமணிய சாமி, சந்திர சாமியும் தொடர்பு கொண்டவர்களாக/ கூடுதல் குற்றவாளிகளாக இருக்கலாம், எனவே அவர்களுக்கும் இதே வலியைத் தர வேண்டும் .

    சு சாமி, ச சாமி தொடர்புகள் குறித்து ஏன் வாஜ்பாய் + vaiko, மன்மோகன் அரசுகள் விசாரணை செய்ய வில்லை, என்பதே நம் கேள்வி

    ReplyDelete
  2. //வன்முறை குற்றமென்றால் அவ்வழியை போராட்டத்துக்கு தேர்ந்தெடுத்த சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் போன்ற விடுதலைப் போராட்ட தியாகிகளை நாம் ஏற்க முடியாமல் போகும். //
    பிதற்றலுக்கு ஒரு அளவு இல்லையா? சுபாஷ் சந்திரபோஸ் கூட்டத்தை வேடிக்கை பார்க்க வந்த அப்பாவி மக்களைச் சேர்த்துக் கொன்றாரா? பகத்சிங் மாட்டிக்கொண்டபின் (LTTTE முதலில் சில காலம் செய்ததுபோல)த் தாம் செய்ததை எப்போதாவது செய்யவில்லை என்று மறுத்தாரா? கருணைமனு அனுப்பி உயிர்வாழ அனுதாபப் பிச்சை கேட்டாரா?
    உங்களை மாதிரி எனக்கு அரிஸ்டாட்டிலோ ப்ளேட்டோவோ சாக்ரடீஸோ தெரியாது. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பின்வாசல் வழியாக ஊருக்குள் நுழைந்து குண்டுவைக்கிற தொடைநடுங்கிக் கும்பலுக்கும் வித்யாசம் தெரியும்.
    பகத்சிங் வன்முறையைக் கையாண்டதால் வன்முறையைக் கையாண்ட எல்லாரும் பகத்சிங் ஆகி விடமுடியாது. இந்த வித்யாசங்களை எனது தர்க்க அறிவால் புரிந்துகொள்ளவும் மற்றவருக்கு விளக்கவும் முடியும். ஆனால் மர்மமாக இருப்பது ஒரே ஒரு விஷயம்தான். கருணைப்பிச்சை கேட்டுக் காத்திருக்கும் இந்த சுத்தவீரர்கள் அப்பாவிகளா போராளிகளா என்பது தெரியவில்லை. அவ்வப்போதைய தேவைக்கேற்ப இவர்கள் நிரபராதிகள் என்று கழிவிரக்கக் கண்ணீர்வடிப்பவர்கள் ஒருபுறம். போராளிகள் என்று பூரிப்பவர்கள் மறுபுறம். அரிஸ்டாட்டிலோ சாக்ரடீஸோ இதுவிஷயமாக ஏதாவது சொல்லியிருந்தால் முதலில் தெளிவுபடுத்தவும்.

    ReplyDelete
  3. //கொல்லுவதே கூடாது என்றால் நாம் மனிதர்களை கொல்ல என்றே கோடிக்க்ணக்கான ஆட்களையும் ஆயுதங்களையும் ராணுவம் எனும் பெயரில் நிறுவி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்துவது?//
    கவலை வேண்டாம் அபிலாஷ்.
    ஐபிகேஎஃப் அத்துமீறினால் தப்பு. இலங்கையில் சிறுபான்மையினரைப் புலிகள் படுகொலை செய்தது நியாயம்.
    ராஜீவைக் கொன்றது சரி, அந்தக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுப்பது மட்டும் தவறு என்று புலிகள் தரப்பு கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்துடன் தன்னை நியாயப்படுத்த முடியும்போது இந்தியா ராணுவம் வைத்திருப்பதை மட்டும் நியாயப்படுத்த முடியாது என்று நீங்கள் நினைப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.
    ஒரு சந்தேகம்: தமிழ் ஈழம் அமைத்தால் அந்த நாட்டுக்கு ராணுவமே இருந்திருக்காதா? போலீஸ் இருந்திருக்காதா? பிரபாகரன் அதற்கு அதிபராகி இருந்தால் அவரைப் பிடிக்க்காத இனக்குழுக்கள் அவரைக் கொலை செய்ய அவரே வலிய வந்து ஐடியா கொடுத்து உதவியிருப்பாரோ? அடாடா! இது தெரிஞ்சிருந்தா புலிகளுக்குத் தனி ஈழம் கொடுத்து அப்புறம் மிகச் சுலபமா பிரபாகரனை அழித்திருக்கலாமே? அதைவிட்டு இந்த முட்டாள் ராஜபட்சே இப்படி ராணுவத்தையெல்லாம் அனுப்பித் தேவை இல்லாம ரிஸ்க் எடுத்திருக்க வேண்டாமே?

    ReplyDelete
  4. பூர்ணம்,
    நான் கூறுவது ரெண்டு தரப்பினரையும் நியாயப்படுத்தவோ குற்றம் சாட்டவோ முடியாது என்பது. கொலையில் நல்ல கொலையோ கிடையாது. கொலைகள் பொதுவாய் நடந்து கொண்டே இருக்கின்றன. நாம் சிலவற்றை காணாமல் தவிர்க்கிறோம். சிலவற்றை குற்றம், தீவிரவாதம் என்கிறோம். இப்படி பிரித்து பார்ப்பது அபத்தம். அதற்கு ஒரு நடைமுறை தேவை இருக்கிறது என்பது வேறு விசயம். சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளைக்காரர்களை ஒருவேளை ராணுவம் கொண்டு கொன்றிருந்தால் அது மட்டும் கொலை இல்லையா? பொதுமக்களை கொன்றால் மட்டும் தான் கொலையா? இவை தான் நான் கேட்க விரும்பும் கேள்விகள். நாம் கொலை சரியா தப்பா என்கிற அபத்த கேள்வியை கடந்து செல்ல வேண்டும் என நினைக்கிறேன். உலகில் அந்த நோக்கோடு கொலைகள் நடப்பதில்லை. கொலை செய்பவர்கள் ராணுவமோ நக்ஸல்களோ தீவிரவாதிகளோ அறத்தை பற்றி யோசிப்பதில்லை. அறத்துக்கு எழுத்தில் தவிர வேறு எங்கும் மதிப்பில்லை. நாம் வன்முறையின் உளவியல் பற்றி, பண்பாடு பற்றி யோசிக்கலாம். வேறெதிலும் பயன் இல்லை

    ReplyDelete
    Replies
    1. //சுபாஷ் சந்திரபோஸ் வெள்ளைக்காரர்களை ஒருவேளை ராணுவம் கொண்டு கொன்றிருந்தால் அது மட்டும் கொலை இல்லையா?//
      கண்டிப்பாகக் கொலை இல்லை. அது போர். (விடுதலைப்போர்.)
      //பொதுமக்களை கொன்றால் மட்டும் தான் கொலையா?// நிச்சயமாக.
      உலக நாடுகள் எல்லாவற்றிலும் தனிப்பட்ட கொலைக்கும் ராணுவம், போலீஸ் செய்வதற்கும் தீவிரவாத/ கலகக்காரக்குழுக்கள் செய்வதற்கும் வேறுபாடு மிகத் தெளிவாக அழுத்தமாக உண்டு. அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசின் ராணுவங்களுக்குள் நடப்பது போர். சொந்த அரசாங்கத்தை எதிர்த்து மோதுவது உள்நாட்டுக் கலகம். அந்நிய அரசுக்கு எதிராக மக்கள் திரண்டெழுவது விடுதலைப்போர். தனிப்பட்ட வஞ்சத்தைத் தீர்த்துக்கொள்ளச் செய்வது கொலை. (ராஜீவ்கொலை போல்) கோரமான பழிவாங்கல் நடந்தால் வன்கொலை. எல்லாவற்றுக்கும் தனித்தனி வார்த்தைகள் நான் அறிந்தவரை எல்லா மொழிகளிலும் இருக்கும்போது உங்களுக்கு என்ன குழப்பம் என்று புரியவில்லை.
      //கொலையில் நல்ல கொலையோ கிடையாது. கொலைகள் பொதுவாய் நடந்து கொண்டே இருக்கின்றன. நாம் சிலவற்றை காணாமல் தவிர்க்கிறோம். சிலவற்றை குற்றம், தீவிரவாதம் என்கிறோம். இப்படி பிரித்து பார்ப்பது அபத்தம்.//
      கொலையில் சட்டரீதியாக மேன்ஸ்லாட்டர், திட்டமிட்ட கொலை, வன்கொலை போன்று பல நிலைகள் இருக்கிறது. தற்காப்புக்குச் செய்கிற கொலைக்கும் கோபத்தில் தன்னையறியாமல் செய்கிற கொலைக்கும் மாதக்கணக்கில் ஆற அமரத் திட்டமிட்டு இன்னொரு நாட்டின் முன்னாள் ஆட்சியாளரைக் கொல்கிற வன்கொலைக்கும் வித்யாசம் டீக்கடையில் தினத்தந்தி படிக்கிறவர்களுக்குக்கூட நன்கு தெரியும். பிரித்துப் பார்ப்பது அபத்தம் என்றால் எல்லா நாடுகளிலும் பல சட்ட நடைமுறைகள் அபத்தமாகிவிடும். இதை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுப்பது விசித்திரம்.
      //கொலை செய்பவர்கள் ராணுவமோ நக்ஸல்களோ தீவிரவாதிகளோ அறத்தை பற்றி யோசிப்பதில்லை.//
      எனில் மரணதண்டனை வழங்கும்போது அரசாங்கம் மட்டும் யோசிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?
      //அறத்துக்கு எழுத்தில் தவிர வேறு எங்கும் மதிப்பில்லை. //
      உண்மை. குறிப்பாக அரசியலில் அறத்துக்கு மதிப்பில்லை என்பதை ஒப்புக்கொண்டால் மரணதண்டனை தவறாகத் தோன்றாது என்பதே என் வாதம்.
      //வன்முறையின் உளவியல் பற்றி, பண்பாடு பற்றி யோசிக்கலாம்.// தாராளமாக யோசிக்கலாம். பதிவு எழுதிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் பின்னூட்டம் போடுகிறவர்கள் யோசிக்கலாம். எழுதிக்கொண்டிருக்கலாம். ஆனால் அரசாங்கம் இதையெல்லாம் ஆராய்ந்துகொண்டிருந்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். அறத்துக்கு எவ்வாறு மதிப்பில்லையோ அரசியல், நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு போன்ற விஷயங்களில் உளவியல் பண்பாட்டு ஆராய்ச்சிகளுக்கும் மதிப்பு கிடையாது.
      நான் குறிப்பாக மறுக்க விரும்பியது சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங்குடன் இந்தப்பின்வாசல் தொடைநடுங்கிகளை ஒப்பிடுவதன் அபத்தம் பற்றித்தான். இலக்கியவாதியான உங்களுக்குப் புரிகிறமாதிரி ஒரு உதாரணம் சொல்கிறேன். சுந்தர ராமசாமியும் ராஜேஷ்குமாரும் ஒன்று என்றால் உங்களுக்குக் கோபம் வருமா, வராதா? சாருநிவேதிதாவும் போர்ன் எழுதுகிறார். அதுவும் சரோஜாதேவி எழுத்தும் ஒன்று என்றால் ஒப்புக் கொள்வீர்களா?
      நேரம் ஒதுக்கியதற்கு நன்றி அபிலாஷ்.

      Delete
    2. உங்கள் பழைய பதிவுகளை அவ்வப்போது கொஞ்சங்கொஞ்சமாக வாசித்துவந்து கொண்டிருந்தேன். புதிய வடிவமைப்பில் காலவாரியான தேடுதல் மட்டுமே உள்ளது. அது வசதியாக இல்லை. முன்பு உங்கள் பழைய ப்லாகில் இருந்தது போல் லேபல்/ கேட்டகரிவாரியாக வகைப்படுத்தினால் தேடி வாசிக்க வசதியாக இருக்கும். தேவையான மாறுதல் செய்வீர்கள் என நினைக்கிறேன். நன்றி.

      Delete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates