Tuesday 18 February 2014

பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்?





ஒரு குடும்ப சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைதளம் மூலம் வெடித்து கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரை தற்கொலைக்கு தூண்டியது என்பதைப் சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைதளங்கள் நம்மை தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாக தான் நம்பின பாகிஸ்தானிய பத்திரிகையாளரை பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்த பிரச்சனை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என ஷஷி தரூர் கூற சுனந்தா அதை பொதுப்படையாக மறுக்கிறார். இந்த சொற்போரில் தோற்று விட சமூக வலைதளம் தரும் போலி கௌரவம் அவரை அனுமதிக்கவில்லை. அவர் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் துணையுடன் பாகிஸ்தானிய பெண்ணையும் தரூரையும் எதிர்கொண்டிருந்தார் என்றால் முதலில் பிரச்சனை கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கும். விவாதிக்கப்பட்டு, சமரசங்கள் பேசப்பட்டு கோபம் மெல்ல மெல்ல வெளிப்பட்டிருக்கும். ஆனால் டிவிட்டர் சூழல் பிரச்சனைகளை சட்டென பெரிதாக்கி அதை உருவாக்கியவரை முழுங்கிக் கொள்கிறது. பிறகு ஒரு அர்த்தத்தில் சண்டைகள் டிவிட்டரின் மூளை சொல்கிறாற் போல் நடக்கின்றன. சம்மந்தமில்லாத பார்வையாளர்களும், ஊடகங்களும் உள்ளே வந்து அடிச்ச கைப்புள்ளக்கே இவ்வளவு காயமுன்னாஎன பேச துவங்கி யாரையும் அப்பிரச்சனையில் இருந்து வெளியேற முடியாதவாறு செய்கிறார்கள். இலங்கையை எரிக்க அனுமார் வாலில் தீயை வைத்துக் கொண்ட கதை தான் இதுவும். ஒரே வித்தியாசம் ஊரை எரித்த பின்னும் நம் வால் தீயை எளிதில் அணைக்க முடியாது.

பேஸ்புக்கில் இருந்து விடைபெறுவதாய் அடிக்கடி ஏதோஇனி தண்ணி அடிக்க மாட்டேன்எனும் கணக்கில் சத்தியம் பண்ணுகிறவர்களைப் பார்க்கிறேன். பேஸ்புக் போதை பற்றி நிறைய படித்திருக்கிறோம். தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேஸ்புக்கில் போய் விழுகிறவர்களை விடுங்கள். ”மூணு நாளா பேஸ்புக் பக்கம் போகல, நிம்மதியா இருக்குஎன பேசுகிற நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் வியக்க வைக்கிறார்கள். உண்மையில் அது அவ்வளவு சித்திரவதை தருகிறதா?
பேஸ்புக்கின் notification எனும் செயல்பாடு இணையத்தின் சுதந்திரத்துக்கு விரோதமானது. இணையம் முழுக்க நம் மனம் போன போக்கில் தேடி படிக்கிற சுதந்திரம் தருகிறது. என்னதான் notification செயல்பாட்டை கட்டுப்படுத்தும் வசதி இருந்தாலும் நாம் எப்படியும் ஒரு சில பேரின் சுவற்றையாவது மீண்டும் மீண்டும் போய் படித்தபடி தான் இருக்கிறோம். பேஸ்புக் ஒருவிதத்தில் டி.வியை போல் நாம் எதை பார்க்க வேண்டும் என்பதையும் தீர்மானிக்கிறது. நம்மாலும் நம் எண்ணங்களை அடுத்தவரை இது போல் கட்டாயப்படுத்தி படிக்க வைக்க முடியும் என்பதால் இந்த குறுக்கீட்டை நாம் பொருட்படுத்துவதில்லை. சில நேரம் இது ஒரு வேதனையாகவும் இருக்கிறது. வெளியே இருக்கும் இரைச்சல் மனதுக்குள்ளும் நிறைகிறது.
பேஸ்புக் சில செயற்கையான தகராறுகளை, சர்ச்சைகளை தோற்றுவிக்கும் தன்மை கொண்டது. அதுவும் நீங்கள் என்ன ஏதென்று யோசிக்க நேரம் தராமல் தகாறுகள் தோன்றி உங்களை உள்ளிழுத்து கருத்து சொல்ல வைத்து அது பாட்டுக்கு அடுத்த தகராறுக்கு நகர்ந்து விடும். பொதுவாக ஒரு தகராறு என்பது நம் நிஜ வாழ்வில் தோன்ற அதற்கான பௌதிக காரணங்களும் அவகாசமும் அவசியம். அதாவது பொருண்மையான இடமும் மெதுவாக நகர்கிற காலமும்.
நம் கணிசமான சண்டைகளுக்கு ஒரு வரலாறு உண்டு. ஒருவரை ரொம்ப காலமாய் பிடிக்காமல் இருக்கும். அவருடன் ரொம்ப காலமாய் ஒரு வெறுப்பு புகைந்தவாறு இருக்கும். ஒருநாள் பற்றிக் கொள்ளும். சண்டை உருவாவதற்கான இடமும் நேரமும் முக்கியம் தான். நள்ளிரவில் படுக்கையறையில் வைத்து எதிரியுடன் சண்டை வராது. அலுவலகத்தில் அல்லது டீக்கடையில் அல்லது சாலையில் எங்கோ வழக்கமான ஓரிடத்தில் உங்களை கொந்தளிக்க வைக்கிற ஒரு சூழலில் அநேகமாய் வெப்பம் மிக்க வேளையில் தான் தகராறுகள் எளிதில் பற்றிக் கொள்ளும். அல்லது நமக்கு பிடிக்காத இடத்தில் பிடிக்காத ஆட்கள் முன்னிலையில் பிரச்சனைகள் வெடிக்க தகராறாக மாற வாய்ப்புகள் அதிகம். இவை இயற்கையானவை. பேஸ்புக் இந்த இயற்கையான காலம் மற்றும் இடத்தை கலைத்து போடுகிறது. படுக்கையறையில் இரவில் மனைவியிடம் இனிமையாக பேசியபடி இருக்கையில் மனம் இளைப்பாறும் நிலையில் இருக்கையில் பேஸ்புக்கில் வரும் முகமற்ற ஒருவர் உங்களை வம்புக்கு இழுக்கலாம். அல்லது நீங்கள் உணர்ச்சிகர விவாதங்களில் கலந்து கொண்டு வசைகளை பரிமாறலாம். சண்டைகள் முடியும் போது நீங்கள் அதற்கு சம்மந்தமற்ற ஒரு இனிய சூழலில் வீட்டில் இருப்பீர்கள். பேஸ்புக் சண்டையை முடிவுக்கு கொண்டு வர நீங்கள் மீண்டும் கணினிக்குள் புக வேண்டும். உங்கள் நிஜவாழ்வும் இன்னொரு வாழ்வும் துண்டுபடுவதை நீங்கள் இத்தகைய பேஸ்புக் சண்டைகளின் போது தான் துல்லியமாக உணர்கிறார்கள். கால, இடக் குழப்பமும் உங்களுக்குள் ஒரு எரிச்சலை, உள்ளார்ந்த ஒரு சமக்குலைவை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் சர்ச்சைகள் முழுக்க முழுக்க உண்மையானவை, ஆனால் அவை நம் வாழ்வின் இயல்பு விதிகளுக்கு முழுக்க எதிரானவை.
அடுத்து, உலகில் உள்ள பிரச்சனைகள், கருத்துக்கள் அத்தனைக்கும் எதிர்வினையாற்ற நாம் விரும்பலாம். ஆனால் நம் மனம் மிக்ஸி ஜாரைப் போன்றது. முக்கால்வாசிக்கு மேல் நிரப்பினால் பாரம் தாங்காமல் நின்று போகும். சொல்லப் போனால் மனம் பெரும்பாலும் காலியாக இருப்பதே அதன் ஆரோக்கியத்துக்கு நல்லது. மூளைக்கும் மனதுக்குமான வேறுபாடு இது.
நாம் நம் மூளையை பொதுவாக மிக மிக குறைவாகவே வேலை வாங்குகிறோம். போக்குவரத்தை கணிப்பது, அலுவலக விதிகளுக்கு ஏற்றபடியான முடிவுகளை எடுப்பது போன்று மிக அடிப்படையான சில பணிகளைத் தான் மூளை மீண்டும் மீண்டும் செய்கிறது. தர்க்க சிந்தனை, செஸ் விளையாட்டு, கணிதம், சிக்கலை விடுவிக்கும் விளையாட்டு, அறிவியல், தத்துவம் படிப்பது போன்று மூளையை நீங்கள் இன்னும் அதிகமாய் செயலாற்ற வைத்தால் அதிக உற்சாகமாய் உணர்வீர்கள். குறிப்பாய் உணர்ச்சிகளை ஈடுபடுத்தாத மூளை விளையாட்டுகள் முடிந்ததும் புணர்ச்சியின் இறுதியில் கிடைக்கும் கிளர்ச்சியான இனிமையான ஒரு களைப்பு ஏற்படும். சிறந்த புணர்ச்சியிலும் ஒருவிதத்தில் மனமற்ற நிலை இருப்பதை அறிவோம். உணர்ச்சிவசப்பட வைக்கும் விவாதங்கள், விளையாட்டுக்கள், சிந்தனைகள், கவலைகள் மனதை அலுப்படையவும் களைப்படையவும் வைக்கின்றன. ஒரு கதையை படிக்கையில் ஒரு பிரச்சனையை உணர்ச்சி நிலையில் இருந்து தான் அணுகி ஆராய்கிறோம். பிரச்சனையை மையத்துக்குள் நம்மை வைத்து கண்ணீர் விடவும், சிரிக்கவும் செய்கிறோம். பேஸ்புக்கில் ஒரு பிரச்சனையை பற்றி படிப்பதற்கும் கதையில் வாசிப்பதற்கும் உள்ள வித்தியாசம் பேஸ்புக்கில் அணு உலைப் பிரச்சனை கூட நம் வீட்டு பிரச்சனையாகி விடுகிறது.
நீங்கள் ஒரு தரப்பை எடுத்து பேச, அந்த தரப்புக்கான நியாயங்களை உருவாக்க, அதற்கு பொறுப்பாக உணர உங்களை பேஸ்புக் தூண்டுகிறது. அலுவலகம் அல்லது டீக்கடையில் ஒரு பொதுப்பிரச்சனை பேசப்படும் போது அங்கு ஓரிருவர் தவிர பிறர் மௌன பங்கேற்பாளர் தாம். நம் தரப்பை தெரிவிக்க ஒரு லைக் போட அங்கு அவகாசமில்லை அல்லது அவசியமில்லை. கருத்து சொல்லும் போது கூட மணிகணக்கில் விவாதிக்க அவகாசம் இருப்பதில்லை. இது ஒருவிதத்தில் நல்லது. பிரச்சனைகளையும், அவற்றில் மக்களின் தரப்புகளையும் தெரிந்து கொள்ளும் அதே வேளையும் சுலபமாய் அவற்றை கடந்து போகவும் உதவுகிறது. ஆனால் பேஸ்புக்கில் வீம்புக்கு ஏதோ ஒரு கருத்து சொல்லப் போய் அதை நிரூபிக்க அல்லது நியாயப்படுத்த சகாக்களை சேர்த்துக் கொண்டு பக்கம் பக்கமாய் எழுதுகிறவர்களை பார்க்கிறோம். இது மனதுக்குள் தேவையற்ற பீதியை, கலவரத்தை உருவாக்குகிறது.
நமது உணர்ச்சிகளுக்கு என்று பிரத்யேக தேவைகள் உள்ளன. உடலின் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒன்று திரட்ட தேவைப்படும் வேளைகளில் உணர்ச்சிவசப்படுவது பயன்படுகிறது. நீங்கள் ஒரு ஆபத்தில் இருந்து தப்பிக்க ஓடும் போது, ஒரு மிக முக்கியமான தேர்வை சந்திக்கும் போது மொத்த கவனத்தை செயல் மீது குவிக்க உணர்ச்சிகள் உதவுகின்றன. இதயம் அதிகமாய் வேலை செய்து கைகால்களுக்கும் மூளைக்கும் அதிக ரத்தம் பாய்கிறது. அது போல் முதன்முதலாய் ஒன்றை செய்யும் போதும் உணர்ச்சிகள் அதிகமாய் தூண்டப்படுகின்றன. உதாரணமாய் ஒரு பதின்வயதுப் பையன் முதன்முதலில் பெண்ணின் நிர்வாணத்தை பார்க்கையில் அல்லது முதன்முறையாய் நமக்கு வேலை நீக்க உத்தரவு நீட்டப்படும் போது. ஆனால் நாம் அதிகம் உணர்ச்சிவசப்பட அவசியம் என நினைக்கிற தாம்பத்ய உறவாடல், குடும்ப சடங்குகள், மத சடங்குகளின் போது சற்று விலகலுடன் தான் இருக்கிறோம்.
குறிப்பாய் தாம்பத்யத்தில் ஒரு நாடகத்தின் காட்சிகள் போல் பல்வேறு உணர்ச்சி நிலைகளை நடிக்க பழகி பழகி நம்மையே அறியாமல் ஈடுபட்டு செயலாற்றுகிறோம். மனைவியிடம் சிங்காரிப்பதில் இருந்து, குழந்தைக்கு இரவில் கதை சொல்வது வரை நமக்கு சடங்குகள் தாம். குழந்தைப் பருவத்தில் வாழ்வை பிரதிபலிக்கும் பல விளையாட்டுகளை கற்கிறோம். அவற்றை மெல்ல மெல்ல சடங்குகளாக்கி வாழ ஆரம்பிக்கிறோம். ”ஒரு குடம் தண்ணியெடுத்து ஒரு பூ பூத்தாச்சுஎன்கிற விளையாட்டு நினைவிருக்கும். சலிக்காமல் ஒவ்வொரு குடமாய் நூறு குடம் வரை எடுக்க பழகுகிறோம். சுவாரஸ்யமான மகிழ்ச்சி அளிக்கும் எந்த செயலும் இது போல் நாம் மீண்டும் மீண்டும் செய்யப் பழகுகிற ஒன்று தான். திரும்ப திரும்ப அலுவலகம் போவது, அதே வண்டியை ஓட்டுவது, அதே வீட்டுக்கு ஒரே நேரத்தில் போவது என இந்த விளையாட்டின் நீட்சி தான் வாழ்க்கை. செயலுக்கும் செயலின்மைக்கும் நடுவே ஒரு கோடு உள்ளதுமகிழ்ச்சியான வாழ்க்கை என்பது அக்கோட்டில் பயணிப்பது. உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் இருப்பது. ஒரு சடங்காக வாழ்க்கையை மாற்றிக் கொள்ளும் போது அது எளிதாகவும் உற்சாகமாகவும் மாறுகிறது. ஈமச்சடங்குகள் நல்ல உதாரணம். ஒரு மரணத்தை ஒரு நாடகமாக மாற்றி அரங்கை தயாரித்து அதற்கான கால அளவை தீர்மானித்து கொஞ்ச கொஞ்சமாக ஒரு பெரும் இழப்பை ஏற்கும் படி மனம் தயாராக இச்சடங்கு உதவுகிறது.
இந்த வகையான சடங்கு சார்ந்த வாழ்வில் உங்களுக்கு பொறுப்பின் பாரமும் இல்லை. எல்லா மகன்களை போல், அப்பாக்களையும் போல், ஊழியர்கள், மனிதர்களையும் போல் நீங்களும் இருக்கிறீர்கள். உங்கள் செயலின் விளைவுக்கு நீங்கள் என்றும் முழுப்பொறுப்பு அல்ல. காலாகாலமாய் பேசப்படுகிற பேச்சை, சிந்திக்கப்படுகிற சிந்தனையை, செய்யப்படுகிற பணிகளை நீங்களும் செய்வதில் ஒரு விடுதலை உள்ளது. படைப்பூக்கம் மிக்க ஆட்கள் மட்டுமே புது பாதைகளை வகுக்கிறார்கள். அவர்களும் தமக்கான சில சடங்குகளை ஏற்படுத்தி படைப்புப் பணியை ஒரு விளையாட்டாய் மாற்றுகிறார்கள்.
பேஸ்புக்கில் இத்தகைய சடங்குகளுக்கு இடமில்லை. நீங்கள் அங்கு நேரடியாக உணர்ச்சிகரமாக ஈடுபடுகிறீர்கள். அதனாலே அங்கு நீங்கள் எளிதில் காயப்படுகிறீர்கள், நெருக்கடிக்கு உள்ளாகிறீர்கள், பதற்றமாகிறீர்கள். சமீபமாய் ஒரு நண்பர் தன் மனைவியின் முன்னாள் காதலைப் பற்றி மனைவியின் புகைப்படம் சகிதம் பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தார். மனைவியின் காதலன் ஒரு முன்னாள் விடுதலைப்புலி என்றும், போரில் இறந்து விட்டதாகவும், தற்போது மனைவி தனக்கு மனப்பூர்வமாய் இணங்கி வாழ்வதாகவும், அவரது பழைய காதலின் ஆழத்தை தான் மதிப்பதாகவும் கூறியிருந்தார். இதை அவர் பலரின் சுவரிலும் பகிர பேஸ்புக் பயனர்கள் அவர் தன் மனைவியின் அந்தரங்கத்தை பொதுவில் வெளிப்படுத்தியதற்காக அவரை கடுமையாக விமர்சித்தனர். அவர் நேரில் கூட நம்மிடம் இவ்வளவு வெளிப்படையாக தன் அந்தரங்கத்தை சொல்லி இருக்க மாட்டார். அதற்கு நாம் அவரிடம் பழகி நெருக்கமாகி ஒரு சரியான வேளையில் தோதான சூழலில் இடத்தில் அவரிடம் உரையாட வேண்டும். அப்போது அவர் தயக்கமின்றி தன் அந்தரங்கத்தை சொல்லி இருப்பார். ஆனால் பேஸ்புக் தன் இயல்பிலேயே நம்மை அந்தரங்கங்களை பொதுவில் கொட்ட தூண்டுகிறது. பொதுவெளிக்கும் அந்தரங்க வெளிக்குமான இடையிலான ஒரு மயக்கத்தை அது தோற்றுவிக்கிறது. இது டி.வி போன்ற ஊடகங்களுக்கும் பொருந்தும். நீயா நானா போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தயக்கமின்றி தன் கணவனை தனக்கு எப்படியெல்லாம் பிடிக்காது என கோடிக்கணக்கான அந்நிய பார்வையாளர்கள் முன் கூறும் மனைவிகளைப் பார்க்கிறோம். பிரிய நினைக்கும் கணவன் மனைவிக்கு இடையே பஞ்சாயத்து பண்ணும் ஒரு மலையாள டி.வி நிகழ்ச்சியில் அதுவரை மறைக்கப்பட்டிருந்த ஒரு கொலை சேதி எதிர்பாராமல் வெளிப்பட்ட தகவலைக் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த மனநிலை விநோதமானது தான். அதேவேளை பேஸ்புக் அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஏன் இப்படி விநோதமாய் அந்தரங்கத்தை அம்பலப்படுத்த முற்படுகிறோம் என யோசிக்க வேண்டும்.
இதை புரிந்து கொள்ள டாஸ்மாக் பார்களில் எதேச்சையாய் பக்கத்தில் வந்து உட்காருபவர்களிடம் உண்மை பேசும் வழக்கத்தை இதனோடு ஒப்பிடலாம். சாராயக் கடைகளில் அரட்டையின் போது அந்நியர்களிடம் நம் மனைவி, காதலி, குடும்பம் பற்றியெல்லாம் வெளிப்படையாக பேசுவோம். கல்லூரியில் படிக்கிற காலத்தில் என்னிடம் ஒருவர் பாரில் வைத்து தன் ஊனமுற்ற பருவ வயது பெண் குழந்தை பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டே இருந்தார். அவளை மணம் புரிய யார் தயாராவார்கள் என திரும்ப திரும்ப கேட்டார். பரிச்சயமற்ற இரு இளைஞர்க்ளிடம் ஒரு ஒழுக்கங்கெட்டதாய் கருதப்படுகிற இடத்தில் ஒரு தகப்பன் ஏன் தன் வயதுக்கு வந்த பெண்ணைப் பற்றி பேசுகிறான்? ஆனால் அவர் தன் பெண்ணின் பெயரையோ புகைப்படத்தையோ வெளிப்படுத்தவில்லை. அவர் இதே போல் எத்தனையோ பேரிடம் இதே பிரச்சனையை சொல்லி புலம்பி இருப்பார். புலம்பி புலம்பி அதை ஒரு சடங்காய் மாற்றி இருப்பார். பெண்ணை ஒரு பாத்திரமாகவும், அந்த பாரை நாடக அரங்காகவும் மாற்றி இருப்பார். ஆனால் பேஸ்புக்கில் ஒரு உண்மையை ஒரு முறை தான் வெளிப்படுத்துவோம். அதை திரும்ப திரும்ப கூறி உணர்ச்சியறச் செய்து விலகல் மனநிலையுடன் பேச அங்கு அவகாசம் தரப்படுவதில்லை. பார் வெளிப்படுத்தலின் போது நீங்கள் பேசிப் பேசி பல பொய்களைக் கலந்து அதை இரு கதையாகவே மாற்றி விடுவீர்கள். ஆனால் பேஸ்புக் உண்மைத்தன்மைக்கு அளிக்கும் மதிப்பு மற்றும் அவசரம் காரணமாக, உலகை உங்கள் படுக்கையறையாக உணர வைக்கும் மாயம் காரணமாக நீங்கள் உண்மையை அப்படியே, கூடுமானவரையில் உங்கள் தரப்பை வலியுறுத்தி சொல்ல தலைப்படுவீர்கள்.
புதுமைப்பித்தனின் பால்வண்ணம் பிள்ளை அலுவலகத்தில் எலியாகவும் வீட்டில் புலியாகவும் மாறுவார். ஆனால் பேஸ்புக் யுகத்தில் இந்த இருவேறு பாத்திரங்களுக்குள் புக அவருக்கு அவகாசமிராது. அவர் எலி ரூபத்திலே நிலைத்தகவல்கள் எழுதுவார். அதற்காக தன்னையே நொந்து கொள்வார். பேஸ்புக்கில் நீங்கள் போலி ஆவேசங்கள் கொள்ளலாம். ஆனால் நிஜவாழ்வில் போல் புனைவுகளை அதிகம் உருவாக்க முடியாது. அதனால் தான் நீங்கள் ஓடுகிற ரயில் மீது ஒற்றைக்காலில் நிற்பவரைப் போன்ற நிலையற்ற உணர்வை எப்போதும் அடைகிறீர்கள்.
சமகாலத்தில் வேலையில் இருந்து விளம்பரங்கள், டி.வி நிகழ்ச்சிகள், கேள்விப்படுகிற செய்திகள் வரை போலியாக உங்களை உணர்ச்சிவசப்பட வைக்கின்றன. இன்னொருவரின் தலையை உங்கள் கழுத்தில் பொருத்தி வாழ்வது போன்றது இது. நம் நவீன கலாச்சாரத்தின் அடிப்படை தொனியே இன்னொருவரின் பிரச்சனையை உங்களுடையதாக உணர்வது, கவலைப்படுவது, மகிழ்ச்சியடைவது தான். நாம் இன்று பெரும் பிரச்சனையாக கருதும் பதற்றம், அழுத்தம் ஆகியவை வேலை அல்லது குடும்பக் கவலைகளில் இருந்து வருவன அல்ல; அவை போலியாக வெளியில் இருந்து உருவாக்கப்பட்டு நம் மீது திணிக்கப்படுகின்றன. நேரடியாக எதிர்கொள்ளும் உணர்ச்சிகள் நம் உடலை டாப் கியரில் வேலை செய்ய வைத்து நம் பேட்டரியை காலியாக்கி விடுகின்றன. சீக்கிரம் வயதாகி பழுதாகிப் போகிறோம். பேஸ்புக்கில் இந்நெருக்கடி இன்னும் தீவிரமாவதற்கு காரணம் நாம் நேரடியாக செயலாற்ற தூண்டப்படுகிறோம் என்பது. யாரோ ஒருவர் உருவாக்குகிற நெருக்கடியில் நாமும் பங்காற்றி அதை வளர்த்து இன்னொருவரிடம் கைமாறுகிறோம். ஒரு பற்றி எரிகிற குடிசை மொத்த சேரியையும் சாம்பலாக்குவது போன்றது இது. பிற ஊடகங்கள் உருவாக்குகிற உணர்ச்சிகர அழுத்தத்தை கூட தாங்கிக் கொள்கிறவர்கள் பேஸ்புக்கில் அதிகமாக அடிவாங்குவதும், அங்கிருந்து தப்பிக்க நினைப்பதும் அது நம்மை செயலாற்ற வைத்து சம்மந்தமில்லாத பிரச்சனையை நம்முடையதாக நம்ப வைப்பதனால் தான். என் நண்பர் ஒருவர். விலங்கு உரிமை ஆர்வலர். அவர் தன் முகநூல் சுவரில் வதைபடும், சாகும் விலங்குகளின் படங்கள், கதைகளை பகிர்ந்தபடியே இருப்பார். என்னுடைய இன்னொரு நண்பர் அதனால் ஆட்கொள்ளப்பட்டு மனம் பேதலித்தவர் போல் அத்தகைய படங்களை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு சென்று தன் கருத்தை பதிவு செய்து தன் பக்கத்தில் பகிர்வார். பத்து நிமிடத்துக்கு ஒரு தரம் அந்த முகநூல் பக்கத்தை திறந்து மனதை வருத்தும் செய்திகளை மீள மீள படிப்பார். அதைக்  குறித்து யாருடனாவது பேஸ்புக்கில் அரட்டை அடிப்பார். விளைவாக அவர் உலக விலங்குகளின் அத்தனைக் கொடுமைகளுக்கும் தானே பொறுப்பு என மறைமுகமாய் நம்பத் துவங்கினார். கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். அவரை அப்பக்கத்தை unfollow செய்ய சொன்னேன். அதுவும் முடியாமல் போக இப்போது கொஞ்ச நாளாய் பேஸ்புக் பக்கமே போவதில்லை அவர். ஒரு டிவி அலைவரிசையை மாற்றுவது போல் பேஸ்புக்கில் ஒரு பிரச்சனையை நம்மால் கடந்து போக முடிவதில்லை. நம் வீட்டுப்பிரச்சனை போல் அதை நம்பி சுவரில் தலையை மோத துவங்குகிறோம். டி.வியில் ஒரு சம்பவம் தொலைவில் நடக்கிறது. பேஸ்புக்கில் அது நம் வாழ்வின் ஒரு பகுதி போல் நடக்கிறது. பொதுவாக நம்பப்படுவது போல் பேஸ்புக்கில் கசப்புக்கும் நெருக்கடிக்கும் காரணம் அங்குள்ள அடிதடியோ சர்ச்சைகளோ அல்ல. அங்கு நம் மூளை உறங்க மனம் முழுவிழிப்பில் ஈடுபவது தான் உண்மையான காரணம்.
பேஸ்புக்கால் நிறைய நேரம் விரயமாவதாக அடிக்கடி புகார் கூறுகிறவர்களை பார்க்கிறேன். இவர்கள் பேஸ்புக் இல்லாவிட்டால் இந்த நேரத்தை எப்படி செலவழிப்பார்கள்? செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்ப ஆராய்ச்சி செய்வார்களா? இல்லை சும்மா உட்கார்ந்து மோட்டுவளை பார்த்து யோசித்து அல்லது வீட்டு வேலைகள் செய்து அல்லது முச்சந்தியில் நின்று வேடிக்கை பார்த்து வீணடிப்பார்கள். அப்போதெல்லாம் நமக்கு நேரம் வீணாவதாக தோன்றுவதில்லை. எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். 24 மணிநேர வெட்டி ஆபீசர். அவர்நான் 18 மணிநேரமும் பேஸ்புக்கில் இருக்கிறேன். ஒரு பைத்தியம் போல் அங்கேயே கிடக்கிறேன்என வருந்தினார். பேஸ்புக் இல்லாவிட்டால் அவர் 18 மணிநேரத்தை ஒன்றும் செய்யாமல் தான் கழிக்க போகிறார்; பிறகென்ன பிரச்சனை? வேறுபாடு?
நம்முடைய அசலான வருத்தம் பேஸ்புக் நம் சும்மா இருக்கும் பொழுதை களவாடி ஆக்கிரமிக்கிறது என்பது தான். பேஸ்புக்கில் படிப்பது, பொதுப்பிரச்சனைகளை விவாதிப்பது, நண்பர்களை உருவாக்குவது எல்லாம் முக்கியம் தான் என்றாலும் சும்மா இருப்பது நம் மன ஆரோக்கியத்துக்கும், படைப்பூக்கத்துக்கும் அதை விட முக்கியமானது. சும்மா இருக்கையில் மனம் காலியாக இருக்கிறது. அப்போது நீங்கள் வீட்டில் ஒரு பொருளை துடைத்தோ, காய்கறி நறுக்கியோ, ஆற்றில் நீராடியபடியோ, வெட்டியாய் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டோ, சாலையில் போகிறவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டோ இருக்கலாம். அப்போது உங்கள் மனம் எதிலும் ஈடுபடாமல் ஓய்வாக ஒரு முக்கிய வேலையை செய்கிறது. உங்கள் பிரக்ஞையின்றி அது சிந்திக்கிறது. வாழ்க்கையை புரிந்து கொள்கிறது. அதற்கேற்றபடி புது கருத்துக்களை உருவாக்குகிறது. கொஞ்ச நேரம் தினமும் சும்மா இருப்பது நம் மனதை புத்துணர்ச்சியோடு படைப்பூக்கத்தோடு இருக்க வைக்கிறது. எப்போதும் எதையாவது செய்து கொண்டும் சொல்லிக் கொண்டும் இருக்கும்படி நம்மை வலியுறுத்துகிற இன்றைய கலாச்சாரம் சும்மா இருக்க வேண்டிய அந்த பொன்னான பொழுதுகளை பறிக்கிறது. இன்று எல்லோரிடம் சொல்ல ஆயிரம் கருத்துக்கள் உள்ளன; ஆனால் புதுமையான புதுக் கருத்து என்று ஒன்று யாரிடமும் இல்லை. கடல் நடுவே தாகத்தோடு தவிப்பது போன்றது இது. பேஸ்புக் தான் இந்த பண்பாட்டின் உச்சநிலை. சும்மா இருப்பது பற்றி குற்றவுணர்வு கொள்ள வைக்கிறது அது. ஒன்றும் கருத்து இல்லாவிட்டால் ஒரு லைக்காவது போட்டு விட்டுப் போ என்கிறது.
கராத்தேவில் காற்றில் குத்துவது எனும் எளிய ஆரம்ப நிலை பயிற்சி உண்டு. கையை முறுக்கிக் கொண்டு குத்தினால் என் கராத்தே ஆசான் கண்டிப்பார். கையை லகுவாக தளர்வாக வைத்திருக்க சொல்வார். குத்துப் படுகிற அந்த இறுதி நொடி வரை முறுக்கேறவே கூடாது. ஒருவரை தள்ளி விடுவது போன்று தான் நல்ல குத்து என்பது இருக்க வேண்டும் என்பார். ஒருவரை அடிக்கும் போது அடி விழுகிற அந்த நொடி வரை அடிப்பதாக நினைக்கக் கூடாது. இல்லாவிட்டால் உங்கள் கை தான் வலிக்கும். செங்கல் உடைக்கும் பயிற்சியும் இதன் நீட்சி தான். செங்கல்லை உடைப்பதாக நினைத்து வெட்டினால் கை தான் உடையும். இதில் வாழ்க்கையின் அடிப்படை பாடம் ஒன்று உள்ளது. உணர்ச்சிவசப்பட வேண்டிய அந்த இறுதி நொடி வரை உணர்ச்சிவசப்படவே கூடாது. உங்கள் குழந்தையை கண்டிப்பதாகட்டும், மனைவியை திட்டுவதாகட்டும், ஒரு கண்டனத்துக்கு பதில் சொல்லுவதாகட்டும் அந்த தருணம் வரை மனம் காலியாக இருக்க வேண்டும். தேநீர் ஊற்றுவதன் முன்பான இறுதி நொடி வரை கோப்பை காலியாக இருக்க வேண்டும். ஆனால் பேஸ்புக்கில் நம் கோப்பை நிறைந்து வழிந்தபடி இருக்கிறது.

நன்றி: உயிர்மை, ஜனவரி 2014
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates