Friday 18 May 2012

சைனாமேன்: இலங்கை கிரிக்கெட் பற்றின முதல் நாவல்



நம்மூரில் எழுத்தாளனாய் இருப்பதன் வறட்டுத்தன்மை (மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து) வயது மூக்க மூக்க தான் அங்கீகாரம் உருவாகும் என்பது. ஒரு பத்துவருடம் எழுதினால் தான் மூளையில் எழுத்துக்கலைக்கான நரம்பணுக்கள் முழுக்க உருவாகும் என்று ஒரு ஆய்வு கூட சொல்லுகிறது. எப்படியும் ஓய்வுபெற்றவர்கள் நடைபழகுவது பொழுதுபோக்கவா உடற்பயிற்சிக்கா என்பது போன்ற சிறுகுழப்பம் பல உள்ளூர் எழுத்தாளர்களுக்குள் தமது எழுத்துவாழ்க்கை பற்றிய சுயஐயமாக உள்ளது. ஆனால் ஆங்கில ஆசிய எழுத்தாளர்கள் ஒரே நூலில் உலகப்புகழ் அடைவதை, தம்மை இளமையாக ஆர்ப்பாட்டமாக காட்டிக் கொள்வதை வாடிக்கையாக கொண்டிருப்பது நமக்கு வெகு அருகிலேயே முற்றிலும் மாறுபட்ட ஒரு இலக்கிய உலகம் உள்ளதை காட்டுகிறது. இந்த முரண்பாட்டுக்கு ஒரு சின்ன உதாரணம். ஒரு புத்தக அறிமுகக் கூட்டம். ஆங்கிலத்தில் மெல்லிய குட்டை டாப்ஸ் அணிந்த இளம்பெண்கள் ஷஷிதரூர்களை சூழ்ந்து மூச்சு முட்ட வைக்க அவர்களின் காதலிகள் பொறாமையில் பெருமூச்சு விடுவார்கள். மனைவிகள் வழிபாட்டாளர்களை மூக்காலே வழிமறிப்பார்கள். தமிழில் என்றால் சொல்லத் தேவையில்லை.


ஒரே புத்தகம் மூலம் உலக கவனம் பெற்ற பல ஆசிய ஆங்கில புனைவெழுத்தாளர்களை அறிவோம். அவர்கள் ஒரே விருது வாங்கினால் போதும். அது சாதனையாக அறியப்படும். தமிழில் எழுத்தாளர்கள் ஒரே ஒரு விருது மட்டும் வாங்கினால் காறித் துப்புவார்கள். இப்படியெல்லாம் நிலைமை இருப்பதால் கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக இந்த ஆசிய (இந்திய-பாகிஸ்தானிய-இலங்கை) பிரபல எழுத்தாளர்களைப் பார்த்தால் அண்ணாமலை படத்தின் கதையை கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாமோ என்றொரு ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. சமீபமாக இந்த பட்டியலில் பாகிஸ்தானின் ஹனீப் முகமது (A Case of Exploding Mangoes) மற்றும் இலங்கையின் ஷேஹன் கருணதிலகாவும் (Chinaman) பெரும் கவனிப்புக்குள்ளானவர்கள். இருவரும் பத்திரிகையாளர்கள். இருவரும் தமது நாற்பதுகளில் முதல் நாவல் வெளிவரும் வரை அதிகம் பிரபலப்படாதவர்கள். இருவரிடமும் நீங்கள் சீனியரா ஜூனியரா என்று நாம் கேட்க முடியாது. இருவரும் அதற்கு பதிலாக “நான் கடந்த முப்பது வருடங்களாக எழுதி வருகிறேன் தமிழ் எழுத்தாள பேட்டிகளில் அடிக்கடி வருகிற வாசகத்தை எடுத்து அவ்வளவு சுலபமாக பிரயோகிக்க முடியாது.


ஷேஹன் கருணதிலகா ஹனீப் முகமதை விட கொஞ்சம் மேலானவர் தான். ஹனீப்பின் நாவல் துப்பறியும் திகில் வகையை சேர்ந்தது. இது காமன்வெல்த் புத்தக பரிசையும் ஷக்தி பட் பரிசையும் வென்றது. மேன்புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிய ஆங்கில பத்திரிகைகளில் கொண்டாடப்பட்டது. கதை இப்படி போகிறது. பாகிஸ்தானிய ராணுவ ஜெனரல்-பிரதமர் ஜியா உல்ஹக் (நிஜமாகவே பாகிஸ்தானை 77-88 வரை ஆண்டவர்) விமானத்தில் கடத்தப்பட்டு அது வெடிக்க இறக்கிறார். அதற்கு காரணமென சந்தேகிக்கப்பட்டு கைதாகிறார் ஒரு விமானப்படை ஜூனியர் அதிகாரியான அலி ஷிகிரி அவர் தான் கொலை செய்தாரா, வேறு என்னென்ன சாத்தியங்கள் என விவரிக்கிறது A Case of Exploding Mangoes.

ஹனீப் தளுக்கான கூர்மையான ஆங்கிலத்தில் எழுதுகிறார். வரிக்கு வரி ஆர்ப்பாட்டமான அங்கதம். குறிப்பாக ராணுவப் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்றும் ஜெனரல் தனக்கு போட்டியான சில ராணுவ அதிகாரிகளை வழிக்கு கொண்டு வர தனது மத ஈடுபாட்டை பயன்படுத்தும் இடம் ஒரு நல்ல உதாரணம். இஸ்லாம் தொடர்பான சில எளிய தகவல் குளறுபடிகளை குறிப்பிட்டு பாகிஸ்தானில் எப்படி மதம் சீரழிகிறது என்று தனது முதல் ஆட்சியாளர்கள் கூட்டத்தின் விவாதத்தை அரசியலில் இருந்து திசைதிருப்புகிறார் ஜியா. ராணுவ அதிகாரிகள் உணர்ச்சிவசப்பட்டு இஸ்லாத்தை மேனிலைப்படுத்தப் போகும் ஜியாவை ஆதரிக்கிறார்கள். மற்றொரு காட்சியில் குவைத் இளவரசர் பாக் பிரதமரை சந்திக்க வருகிறார். இளவரசர் ஸ்திரி லோலர் என்பதால் தனது பாலியல் ஆரோக்கியத்துக்காக கூடவே ஒரு தனிப்பட்ட மருத்துவரை வைத்திருக்கிறார். அவரிடம் மிக ரகசியமாக தனக்குள்ள ஆசனவாய் புண்ணைப் பார்க்குமாறு பாக் பிரதமர் ஜியா பணிக்கிறார். அவ்வாறு தனது ஆசனவாய் சோதிக்கப்படும் போது ஜியா ஜன்னல் வழியாக பறக்கும் தேசியக் கொடியை ஆராய்கிறார். அதிலுள்ள பிறை தவறாக அமைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்து அதை திருத்துவதற்கான உத்தரவை எவ்வாறு பிறப்பிக்க வேண்டும் என்பதை மனதுக்குள் சொற்களை கோர்க்கிறார். இப்படியான காந்தாரிமிளகாய் போய் உச்சியில் பிடிக்கும்படியான பகடிகள் மேலும் பல இந்நாவலில் உள்ளன. ஆனால் A Case of Exploding Mangoes பகடியை தவிர்த்து ஆழமற்ற ஒரு கோட்டோவியக் கதை போல எளிய சத்தங்களை கிளப்பி முடிந்து போகிறது. ஒரு சர்வாதிகாரியின் உளவியலை மார்க்வெஸ் பாணியில் அலசவோ பாகிஸ்தானிய சமூகத்தின் பண்புகளை, சிக்கல்களை வரலாற்று பூர்வமாய் விளக்கவோ அது முற்படவில்லை. 


கருணதிலகாவின் நாவல் Chinaman: the Legend of Pradeep Mathew இந்த விசயங்களை ஓரளவுக்கு செய்ய முயன்றிருக்கிறது. ஒரு விரிவான தளத்தில் செயல்படுகிறது. இந்த நாவலுக்கு மற்றொரு முக்கியத்துவம் உள்ளது. உலகில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எழுதப்பட்ட மிகச்சில நாவல்களின் ஒன்று இது. அதிலும் இலங்கை கிரிக்கெட்டை பற்றி எழுதப்பட்ட ஒரே நாவல் இது. 2008இல் கிரேட்டியன் பரிசையும், 2012 தெற்காசிய இலக்கிய விருதையும் இந்நாவல் வென்றது. விருது கிடைத்திருக்கிறது என்று ஊர் ஊராக விழா நடத்தும் துர்கதியும் அவருக்கு நேரவில்லை. முதல் விருது கிடைத்ததுமே அவருக்கு பதிலாக அவரைப் பற்றி உலகம் முழுக்க பிறர் பேசினார்கள். கருணதிலகா தன் பாட்டுக்கு விஸ்டன், கார்டியன், எகனாமிக் டைம்ஸ், தி கிரிக்கெட்டர் போன்ற பல பத்திரிகைகளில் பத்திகள் எழுதிக் கொண்டு இண்டிபெண்டண்டு ஸ்கொயர், பவர்கட் சர்க்கஸ் போன்ற ராக் குழுக்களில் பேஸ் இசைவாசித்தும், பாடல்கள் இயற்றியும், சிங்கப்பூரில் வசித்து நீண்டதாக கூந்தல் வளர்த்து கூடவே இரண்டாம் நாவல் எழுதியும் வருகிறார்.

கருணதிலகா எழுதுவது இங்கிலாந்து ராணியின் ஆங்கிலத்தில் சற்று துரும்பு கலந்து அதை அமெரிக்கனிசம் (fuck your…, what ye want, arsehole) கொண்டு புதுப்பித்தது போன்ற ஒரு மொழியில். இலங்கை ஆங்கிலத்துக்கான ஒரு தனித்தன்மை அதற்கு உள்ளது. நிறைய சிங்கள, தமிழ்ச் சொற்களை, கலாச்சார பிரயோகங்களை வெளிநாட்டுக்காரர்களுக்காக மொழிபெயர்க்கும் பதற்றமின்றி அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். எளிய உதாரணமாக “how is your podiyan. மேலும் குறிப்பிட வேண்டியது கருணதிலகாவின் வறட்டுத்தனமான, யார்-எக்கேடும்-கெட்டாலென்ன வகை நகைச்சுவை. இது இந்திய ஆங்கில புனைவு மொழியில் இருந்து பெருமளவில் வேறுபடுகிறது. கருணதிலகா சக-இலங்கைகாரர்களின் பாசாங்கையும் முட்டாள்தனத்தையும் சகட்டுமேனிக்கு நக்கலடிக்கிறார் தான். ஆனால் அவர் அதை இந்திய ஆங்கில எழுத்தாளர்களைப் போல ஒரு எலைட்டிஸ்ட் மனநிலையில், “கலைஞனின் தார்மீக கோபத்துடன் செய்வதில்லை. அமெரிக்க ஜாக் கெரவக் முதல் ஜப்பானிய ஹருகி முராகாமி வரை நீண்டுள்ள ஹிப்பி/பீட் விட்டேந்தி மனோபாவம் கருணதிலகாயின் தொனியையும் அக்கறையையும் பிரதானமாய் தீர்மானிக்கிறது. அவரது புனைவு களத்தில் கிரிக்கெட் தவிர கால்பந்து, குத்துச்சண்டை, இசைத்தொகுப்புகள் மற்றும் குடியைப் பற்றி சிலாகிக்கும் மனிதர்கள் வருகிறார்கள். வாழ்க்கை அடிப்படையில் கசப்பானது, அர்த்தமற்றது, தற்காலிக மதிப்பு மட்டுமே கொண்டது; வாழ்வை குடித்தும், கலை விளையாட்டை ரசித்தும் தான் தாங்கிக் கொள்ள முடியும் என்பது இவர்களின் தீர்மானம். இதனாலேயே நம் காலத்தின் மாபெரும் வரலாற்று நிகழ்வான ஈழப் போர் குறைந்த பட்சமாக ஒரு தொல்லையாக கூடியபட்சமாக ஒரு அநியாயமாக மட்டுமே  (எப்போது இந்த நாசமான போர் முடியும்?) கருணதிலகாவால் காணப்படுகிறது 

நாவலின் பிரதான பாத்திரமும் கதைசொல்லியுமான கருணதிலகா குடிக்காகவும் கிரிக்கெட்டுக்காகவும் சாவது தவறில்லை என்று கருதுகிறார். அவரது மகனான கார்பீல்டு காதலுக்காகவும் பெண்களை துய்ப்பதற்காகவும் தனது திறமைகளை வீணடிப்பதோ அப்பாவிடம் இருந்து ஏழு லட்சத்தை திருடுவதோ நியாயம் என்று நினைக்கிறான். நாவல் முழுக்க இத்தகைய மனிதர்களின் மனநிலை தான் பிரதிபலிக்கப்படுகிறது. புலிகள் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை குண்டு வெடித்து கொன்றாலும் இலங்கை ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தாலும் அக்கறை காட்டாது தன் போக்கில் அன்றாட காரியங்களில் மூழ்கியிருக்கும் ஒரு அபத்த சமூகம். மனிதர்களில் ஒரு பெரும் பகுதியினர் போரின் போது அசட்டுத் துணிச்சலுடன் அன்றாட அக்கறைகளுடன் தான் இருப்பார்கள் என்று ஷோபா சக்தியின் கூட தனது சமீப சிறுகதையான “கப்டனில் சொல்கிறார். இலங்கை வாழ்வியல் எதார்த்தத்தின் மற்றுமொரு பரிமாணம் என இதை எடுத்துக் கொள்ளலாம்..

கருணசேனா ஒரு கிரிக்கெட் எழுத்தாளர். ஆரம்பத்தில் தனது கட்டுரைகளுக்காக விருதுகள் பெற்று பெரும் அங்கீகாரம் அடைந்து பின்னர் தனது விட்டேந்தி குணம் காரணமாக “நம்பிக்கையூட்டும் எழுத்தாளர் என்ற கீழ்ப்படியிலே போதுமென்று அமர்ந்து விட்டவர். அவர் தொலைக்காட்சிக்காக பத்து சிறந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களைப் பற்றி ஆவணப்படங்கள் எடுக்கிறார். இதில் அவரது பிரதான நோக்கம் பிரதீப் சிவநாதன் மேத்யூ எனும் ஈழத்தமிழனான ஒரு சுழல் பந்துவீச்சு மேதையின் கதையை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டுவது. பிரதீப் கிட்டத்தட்ட கருணசேனாவை போன்றவர். உலகின் மிகச்சிறந்த சுழல் பந்துவீச்சாளராக அறியப்பட வேண்டியவர். ஆனால் அவர் தேசிய அணிக்காக ஏழே ஆட்டங்கள் மட்டுமே தான் ஆட முடிகிறது. அவற்றில் அவர் 47 விக்கெட்டுகள் எடுக்கிறார். நியுசிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்டு ஆட்டத்தில் அவர் ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். ஆனால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்படுகிறது. இப்படி ஒவ்வொரு சாதனை செய்யும் போது அவரை துரதிர்ஷ்டம் பின் தொடர்கிறது. மூத்த வீரர்களுடன் பூசல், தமிழ் அடையாளம், சோம்பல், ஒழுக்கமின்மை, காமம் மற்றும் இன்ன பிற ஆளுமைக்கோளாறுகள் மற்றும் கிரிக்கெட் சூதாட்டம் பிரதீப் மேத்யூவை திறமையிருந்தும் சாதிக்க முடியாத துயர நாயகர்களின் வரிசையில் முன்னிலையில் நிறுத்துகின்றன. கிரிக்கெட்டில் இருந்து முழுக்க வெளியேற்றப்படுகிறார் அவர். ஆனால் சுவாரஸ்யமாக பிரதீப் தனது தோல்விகள் பற்றி விசனிக்கவில்லை. திறமை என்பதை சுயநிர்ணயத்துக்கான அளவுகோலாக மட்டுமே அவர் பார்க்கிறார். சாதனைகள் செய்து பிறரது அங்கீகாரம் பெற்று வரலாற்றில் இடம் பிடிப்பது போன்ற லௌகீக வேலைகள் ஒரு கலைஞனுக்கு உகந்ததல்ல என சிந்திக்கும் ஒரு வகை தனிமனித வாதி பிரதீப். மேலும் ஒரு அமைப்பு-விரோத, கலக்கக்கார, எதிர்க்கலாச்சாரவாதியாகவும் கருணதிலகா அவரை சித்தரிக்கிறார்.

பத்து வருடங்கள் கடந்த நிலையில் பிரதீப் மேத்யூவை அவரது கூட ஆடியவர்கள், வாரியக்காரர்கள், பயிற்சியாளர்கள் எவருக்கும் இப்போது நினைவில்லை. அல்லது அவரை நினைவு கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். அவரை ஒரு துர்கனவாக மறந்து விட அனைவரும் விரும்புகிறார்கள். இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், பிரதமரின் தம்பியுமானவரிடம் இருந்து ஒரு பெரும் தொகையை பிரதீப் மிரட்டிப் பிடுங்கி விடுகிறார். இதனால் அவர் பின்னர் ஒருபோதும் இலங்கையில் கிரிக்கெட் ஆடமுடியாதபடி ஆகிறது. கிரிக்கெட் விபரங்கள் கணினியின் எண்வயமாகும் போது அவரது சாதனை விபரங்கள் திட்டமிட்டு ஆவணகங்களில் இருந்து அழிக்கப்படுகின்றன. பிரதீப் நியூசிலாந்து சென்று தனது இரண்டாவது காதலியை மணந்து இரு குழந்தைகள் பெற்று நாதன் எனும் புதுப்பெயருடன் ஒரு பள்ளி ஆசியராக வாழ்கிறார். இலங்கையில் வாழும் அவரது சகோதரி குடும்பத்தினர் அவர் இறந்து விட்டதாக பொய் செய்தியை பரப்பி கிரிக்கெட் வாரியத்தின் மிரட்டல்களில் இருந்து தொல்லைகளில் இருந்து விடுபட முயல்கிறார். இப்படி பிரதீப் மேத்யூ எனும் ஒரு அதிதிறமையாளர், துலங்காத மேதை ஒரு தேசத்தின் நினைவில் இருந்து முற்றிலும் மறைந்து போகிறார்.

கருணசேனா விடாப்பிடியாக இந்த மறக்கப்பட்ட ஆளுமையை மீட்டுருவாக்க முயல்கிறார். தொடர்ந்து விசாரிக்கிறார், ஆராய்கிறார், ஏகப்பட்ட தொடர் இடையூறுகளை கடக்கிறார். மிகக் கொஞ்சமாக தான் பிரதீப்பின் பனி படர்ந்த சித்திரம் துலங்குகிறது என்றாலும் விசாரணையின் விளைவாக அவர் இலங்கைக் கிரிக்கெட்டின் சூதாட்டம் குறித்து, அதை நிர்வகிக்கும் பல நிழலான மனிதர்கள், கிரிக்கெட் அமைப்பின் ஊழல்வாதிகள், கிரிக்கெட் மைதானத்தை பராமரிக்கும் ஒரு குள்ளமான மனிதர், அவர் ரகசியமாக பதிவு செய்த 30 வருடங்கள் அம்மைதானத்தில் கிரிக்கெட்டர்கள் உரையாடிய செய்திகளின் ஆயிரக்கணக்கான ஒலிநாடாக்கள், பிரதீப்பின் பயிற்சியாளர்கள் என் தம்மை போலியாக பிரஸ்தாபிக்கும் விநோதமான ஆறுவிரல் மனிதர்கள், குகநாதன் எனும் ஒரு விடுதலைப்புலி அமைப்பாளர் ஒரு புதிய உலகத்தையே கண்டடைகிறார். இதைக் கொண்டு பிரதீப் மாத்யூ பற்றின ஒரு புத்தகம் எழுத அவர் முனைகிறார்.

இதற்கிடையே கருணசேனாவுக்கு கல்லீரல் நோய் வந்து ஒரு பெக் அடித்தால் கூட மறுநொடி மரணம் என்கிற நிலை வர அவரது மனநிலை சீரழிகிறது. அவரது மனப்பிராந்தியும், கனவுகளும், கற்பனைகளும் பிரதீப் பற்றி அவர் எழுதி வரும் அபுனைவு மெல்ல மெல்ல ஒரு புனைவாக மாறுகிறது. தான் யோசிப்பதில் எத்தனை சதம் உண்மை என்பது அவருக்கே தெரியாமல் போகிறது. பிரதீப்பை சந்தித்தபின் தனது புத்தகத்தை நிறைவுபடுத்த உத்தேசித்து அதற்கும் முன் கருணசேனா இறந்து போக அவரது மகனும் அடுத்த தலைமுறை சுயசீரழிவுவாதியுமான கார்பீல்டு பிரதீப்பை தேடிக் கண்டடைவதுடன் நாவல் முடிகிறது. அவன் இந்நூலை பிரசுக்க முயலும் போது சட்டப்பிரச்சனைகள் வரும் என அஞ்சி மேதை கிரிக்கெட்டரின் பெயரை பிரதீப் சிவநாதன் மேத்யூ என பொய்யாக (?) மாற்றி விடுகிறான். இதனால் “நூற்றாண்டு கால தனிமை போல இந்நாவல் இதனால் முடிவில் இருந்து மீண்டும் துவங்கும் மாய கவித்துவத்தை பெறாமல் சற்று வலிந்து உருவாக்கப்பட்டதாக போனாலும் ஆசிரியரின் சுட்டித்தனத்துக்காக நம்மிடம் இருந்து ஒரு சிறுபுன்னகையை நிச்சயம் வருவிக்கிறது.

இந்நாவலின் கதைக்களன் நிச்சயம் கிளர்ச்சியானது. உலகம் என்றும் சாதனையாளர்களை விட சாதிக்க தகுதியிருந்தும் சாதிக்காதவர்களை தான் அதிகம் கொண்டாடுகிறது, நேசிக்கிறது, அவர்களைப் பற்றி எதிர்மறையாக ஒரு சொல் கூட யாரும் சொல்லுவதே இல்லை. காதலியால் நிராகரிக்கப்பட்டு, மாமாவால் சொத்து பறிக்கப்பட்டு, பெற்றோரை சிறுவயதில் இழந்து, அண்ணனை காசநோய்க்கு இழந்து முழு அநாதையாக்கப்பட்டு இறுதியில் தானும் 26வது வயதில் காசநோயால் சாகும் முன் ஜான் கீட்ஸ் சில அமர கவிதைகளை எழுதினார். அவர் இன்னும் முப்பது ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஷேக்ஸ்பியரை விஞ்சியிருப்பார் என்று நம்புகிறவர்கள் உண்டு. கீட்ஸை போலவே சில்வியா பிளாத்தும் இளம்வயதில் தற்கொலை பண்ணிக் கொண்டு அமரத்துவமும் உலகப்புகழும் எய்தினார். தமிழில் பாரதி, ஆத்மாநாம், மற்றும் இன்னும் பலர். தன்னம்பிக்கையற்றவர்களும் கற்பனை மிகுந்தவர்களும் சிலாகிக்கிற ஒரு மித்து மட்டுமே இது. கருணசேனா பிரதீப்பை வீழ்ச்சியுற்ற நாயகனாக மாற்றி இந்த மித்துக்கு ஒரு நாடகீயத்தை அளிக்கிறார்.

இந்த மிகையும் நாடகீயமும் இன்றி ஒரு துன்பியல் நாயகனின் வீழ்ச்சியை சொல்லலாம். நவீனத்துவ எழுத்தில் ஹெமிங்வே குறிப்பாக இத்தகைய மித்தை ஆடம்பரம் களைந்து வெற்றிகரமாக கலையாக்கியிருக்கிறார். ஆடம்பரங்கள் அற்ற நிலையில் இந்த மித்து தனிமனிதனின் கீழ்மைகளின், தோல்வியின் கசப்புகளை, சிக்கலான மனநிலைகளை பேசும். தமிழில் எஸ்.ராவின் “உறுபசி நல்ல உதாரணம்.

ஆனால் ஒரு விதத்தில் கருணதிலகாயின் தோல்வியுற்ற மேதையின் மித்து இந்நாவலில் நம்பகமாகிறது. அதற்கு அவர் புனைவையும் எதார்தத்தையும் பின்னி பின்நவீனத்துவ “சிதைவுற்ற பிரக்ஞை நடையில் நாவலை எழுதியிருப்பது உதவுகிறது. அதாவது பிரதீப் மேத்யூ நம்ப சாத்தியமற்ற ஒரு அதிநாயகனாக உங்களுக்கு தெரியலாம். அவர் 14 வகை சுழல் பந்துகளை வீசத் தெரிந்தவர் என்று சொல்லும் போது அது புருடா என்று நீங்கள் புகார் செய்ய முடியாது. பின்நவீனத்துவ அஸ்திரத்தின் முன் அப்புகார் காலியாகி விடும். மேலும் சற்று மிகையான பொய் தான் உண்மை என நம்பும் ஒரு சமூகத்தில் தான் நாவலின் நாயகன் வாழ்கிறார். அவரது பரிச்சயக்காரர்கள் குடித்து முழுபோதையேறினால் மட்டும் தான் வெளிப்படையாக பொய் சொல்வது தெரியும். மற்றபடி அவர் சந்தித்து உரையாடுபவர்கள் சாதாரணமாகவே தம்மைத் தாமே புனைகதை பாத்திரமாக மாற்றிக் கொள்பவர்கள். அன்றாட வாழ்வில் நாம் இது போல் தம்மைப் பற்றி நேரலையாக கதையாடல்களை உற்பத்தி செய்யும் ஏராளமானவர்கள் பார்க்கிறோம் என்பதால் ஒருவிதத்தில் இதை ஒரு சமூகக் கூறின் வெளிப்பாடாகவும் கூட பார்க்கலாம்.

ஆனால் கவனிக்கப்படாத ஒரு முக்கிய ஆளுமையின் கதை நாவலுக்கான ஆபார சாத்தியங்கள் கொண்டது. அவர்களின் பின் ஒரு சொல்லப்படாத கதை இருக்கும்  நடனம், இசை போன்ற கலை வடிவங்களை போலன்றி கிரிக்கெட் கோடானுகோடி வெகுமக்களின் கலைவடிவம் சம்மந்தப்பட்ட கலைவடிவம். பிரதீப் மேத்யூவை போன்று கிரிக்கெட்டோடு தொடர்புள்ள ஒரு கதாபாத்திரம் ஒரு சமூகத்தின் வரலாற்றை, கலாச்சாரத்தை, சிக்கல்களை பேச ஏற்றது. சைனாமேனின் முக்கியத்துவம் அதன் அதிமனித மித்தில் அல்ல, ஒரு அறியப்படாத சமூகத்தின் கதையை அதன் வழி கூற முடியும் என்பதே. உதாரணமாக சிறுவயதில் முத்தையா முரளிதரனின் அப்பாவின் பேக்கரி இனவெறியர்கள் தீக்கிரையானது. முரளிதரன் விடுதலைப்புலியாகவில்லை. மாறாக அவர் ஒரு சிங்கள் ஆதரளாளர். சிங்கள சமூகத்தின் “தமிழ் பிரதிநிதி. இதுவும் ஒரு எதார்த்தம் தான். சைனாமேனில் பிரதீப் மேத்யூவின் அப்பாவும் பேக்கரி வைத்திருக்கிறார். அதையும் எரியூட்ட வருகிறார்கள். அவர் கடையின் பெயரை சிங்களப்பெயராக்கி தப்பித்துக் கொள்கிறார். பிரதீப் கிரிக்கெட் ஆடுவதற்காக தனது “சிவநாதன் எனும் தமிழ்ப்பெயரை கூடியமட்டும் மறைத்து வாழ்கிறான். “ஒரு தமிழன் கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க சிங்களவனை விட பத்து மடங்கு மேலானவனாக இருக்க வேண்டும். நான் அப்படி ஆக வேண்டும். அதுவே லட்சியம் என்கிறான்.

நாவலின் முக்கிய சுவாரஸ்யம் நூற்றுக்கணக்கான பக்கங்கள் வழி மெல்ல மெல்ல உருவாகும் பிரதீப் மேத்யூவின் சிதைவுற்ற முரண்பட்ட சித்திரம். பிரதீப் பள்ளி வயதில் இருந்தே திறமையாளனாக கண்டடையப்பட்டு கிரிக்கெட்டில் பயிற்சியாளரால் ஈடுபடுத்தப்படுகிறான். அவனுக்கு வலிமையான நீண்ட விரல்கள். நன்றாக சுழலும் ரப்பர் மணிக்கட்டு. எந்த சர்வதேச வீச்சாளரையும் போல செய்து வீசும் ஆபார திறமை. இடது மற்றும் வலது கைகளால் சமமாக வீசக் கூடியவன். பிரதானமாக இடதுகை கால்சுழல்பந்து பயில்கிறான். இடதுகை கால்சுழல் பந்தாளர்களுக்கு சைனாமேன் என்று பெயர். ஆஸ்திரேலியாவின் ஹோக் ஒரு சமீப உதாரணம். தென்னாப்பிரிக்காவின் போல் ஆடம்ஸ் கொஞ்சம் முந்தைய உதாரணம். பொதுவாக சைனாமேன்கள் ஒரு அரிய வகை. பிரதீப் வேகமாக நேர்திசையில் வரும் பிளிப்பர், ஷூட்டர் எனும் ஒருவகை ஆர்ம் பந்து, கால் பக்கம் இருந்து ஆப் பக்கம் சுழந்து பின் இரண்டாவதாக துள்ளி எழுந்து உள்ளே வரும் ஒரு டபுள் பவுன்சர் பந்து என ஏகப்பட்ட பந்துகளை வீசப் பயில்கிறான். நாவலின் ஓரிடத்தில் பிரதீப்புக்கு நாற்பதுக்கு மேற்பட்ட பந்துகளை வீச வரும் எனும் ஒரு மிகையான தகவல் கூட வருகிறது. பிரதீப் மேத்யூ இலங்கையின் முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், இந்தியாவின் லக்‌ஷ்மண் சிவராம கிருஷ்ணன் ஆகியோரின் கலவை.

கொஞ்சம் யோசித்து பார்ப்போம். உலகின் மாபெரும் சுழலர்களான வார்ன், முரளி, கும்பிளே, சக்லைன், ஸ்வான், அஜ்மல், ஹர்பஜன் ஆகியோர் அதிகபட்சம் மூன்று வகை பந்துகளுக்கு மேல் வீசாதவர்கள். அவர்களின் வலிமை வெரைட்டி அல்ல. அவர்களை மட்டையாளர்கள் பயந்ததற்கு பல்வேறுபட்ட காரணங்கள் உள்ளன. குறிப்பாக கட்டுப்பாட்டையும் கற்பனையையும் சொல்லலாம். ஆனால் சக்லைனும் அஜ்மலும் அடிக்கடி தாம் தீஸ்ரா எனும் ஒரு மூன்றாவது வகை வேறுபட்ட பந்தை பயின்றுள்ளதாக உதார் விடுவதை பார்த்திருக்கிறோம். வார்னுக்கும் இந்த நோய் இருந்தது. மீடியா பரபரப்பு தான் இந்த எண்ணற்ற வேறுபட்ட பந்துகளின் பிரஸ்தாபங்களின் உத்தேசம். ஒரு கட்டத்தில் எந்த வேடத்தில் வந்தாலும் கமலை எளிதாய் கண்டுபிடிக்க தமிழர்கள் பழகி விட்ட மாதிரி கிரிக்கெட்டில் இந்த பாவனைகள் சீக்கிரம் வெளுத்து விடும். பிறகு 40 சொச்சம் வேறுபட்ட பந்துகளை பிரதீப் ஏன் வீச வேண்டும்? அப்படி வீசுபவன் மேதை என்றால் லிம்கா சாதனைக்காக குத்தூசி தின்பவர்கள், டெலிபோன் டைரக்டரியை மனனம் செய்பவர்கள் கூட மேதைகள் தானே. உண்மையில் இப்படி செய்வது ஒரு உளவியல் சிக்கலை காட்டுவது. ஆசியர்களுக்கு இந்த நேராக-நடந்தால்-பார்க்க-மாட்டார்கள்-தலைகீழாக-நடக்கிறேன் அணுகுமுறை பரவலாகவே உள்ளது. சமீபமாக நான் பார்த்த ஒரு நிகழ்ச்சியில் ஒரு மாணவன் ஒரு காலை மடித்து நொண்டி நடனம் ஆடினான். சகிக்க முடியாதபடி சொதப்பலாக இருந்தது. எதிர்பார்த்தது போல் பெரும் கரகோஷம். நிறுவன தலைவர் நெகிழ்ந்து போய் அவனுக்கு காசோலை அளித்து பாராட்டினார். மேலும் சொல்வதானால் இந்த கட்டுரையை கைகால் விளங்காத நான் வாயால் பேனா பிடித்து எழுதினேன் என்று சொன்னால் இதில் ஒருவரி கூட வாசிக்காமல் எனக்கும் விருது கொடுத்து கொண்டாடுவார்கள். இது ஒரு கலாச்சார வியாதி. பிரதீப் மேத்யூவின் பாத்திரம் மூலம் கருணசேனா இந்த நோய்மையை நுட்பமாக சித்திரிக்கிறார். அவரே ஓரிடத்தில் நேரடியாக சொல்வது நம்மவர்களுக்கும் பொருந்தும்: “இலங்கைக்காரர்களுக்கு சொந்தமாக ஒன்றும் செய்ய தெரியாது... பிரச்சனை சொந்தமாக ஒன்றும் செய்தால் இந்த நெரிசலில் நம்மை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற பயமே.

Chinaman நாவலின் மிக முக்கியமான பகுதி கிரிக்கெட் சூதாட்டம் பற்றியது. நாம் இதுவரை அறிந்திராத மாறுபட்ட ஒரு சித்திரத்தை கருணதிலகா அளிக்கிறார். கிரிக்கெட் சூதாட்டம் ஒரு தீமையாக அல்ல, ஒரு பொழுதுபோக்காக, மக்களின் சாகச விருப்பமாக, விதியுடனான நெருப்பு விளையாட்டாக, ஒரு சம்பாத்திய மார்க்கமாக, சலிப்பான ஆட்டங்களை சுவாரஸ்யமாக்கும் முயற்சியாக பல விதங்களில் சூதாட்ட விவாதத்தை விரிவாக்குகிறார்..

பொதுவாக பத்திரிகையாளர்கள் அதிகார வர்க்கம் மற்றும் பிரபல கலைஞர்கள் குறித்து தாம் நெருக்கமாக அணுகி அறிந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் எதிர்பாராத படி சொல்லி நம்மை வியப்படைய வைக்க விரும்புவார்கள். கிரிக்கெட் எழுத்தாளர்களிடமும் தாம் சந்தித்த வீரர்களின் விநோத பண்புகளை, சுபாவங்களை சொல்லும் இந்த விருப்பம் அலாதியாக உண்டு. கருணதிலகாயும் விதிவிலக்கல்ல. கிரிக்கெட்டர்கள் பற்றின நிறைய அறியப்படாதகதைகள் நாவல் முழுதும் விரவியுள்ளன. அவை நாவலை சுவாரஸ்யமாக்குகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை தான். உதாரணமாக ஒரு ஸ்லெட்ஜிங் கதை. ஆஸ்திரேலியர்கள் பொதுவாக வசைச்சொற்களை எதிரணியினரிடம் அதிகம் பிரயோகிப்பவர்கள் என்று நம்பப்படுகிறது. ஒருமுறை வேகவீச்சாளர் மெக்ராத் சிம்பாப்வேயின் கடைநிலை மட்டையாளராக எட்டோ பிராண்டசை ஸ்லெட்ஜ் செய்ய முயன்று மூக்குடைகிறார். எவ்வளவு முயன்று பிராண்டஸை வெளியேற்ற முடியாமல் கசப்படைந்து எரிச்சலாகிய மெக்ராத் “ ஒய் எட்டோ நீ ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்“ என்று வினவுகிறார். அதற்கு பிராண்டசின் பதில்: “ஏனென்றால் ஒவ்வொரு தடவையும் உன் மனைவியை நான் புணர்ந்ததும் அவள் எனக்கு ஒரு பிஸ்கட் தருவாள்.

பிரதீப்பின் புதிரான வாழ்வை, அவரது தோல்வியின் காரணத்தை, தற்போதைய நிலையை அறிவதற்கான தேடல் ஒரு துப்பறியும் கதையின் வேகத்தையும் விறுவிறுப்பையும் நாவலுக்கு அளித்து அதன் அலைவுறும் கதையாடலுக்கு ஒரு ஒருங்கிணைவை அளிக்கிறது. ஆனால் உணர்ச்சிகரமான நிலையில் மையப்பாத்திரம் நம்மை பாதிப்பதில்லை. சு.ராவின் ஜெ.ஜெயை போல், எஸ்.ராவின் சம்பத்தை போல் பாத்திரத்தின் பரிச்சயக்காரர்களின் நினைவில் இருந்து சிறுக சிறுக முழுமையற்று உருப்பெறும் பிரதீப் நமக்கு கவித்துவ எழுச்சியோ இரக்கம் மற்றும் வாழ்வின் புதிர்மை பற்றின வியப்பையோ ஏற்படுத்துவதில்லை. இதை ஒரு பலவீனமாக குறிப்பிடலாம்.

தல்ஸ்தாயின் “போரும் வாழ்வில் வரும் நூற்றுக்கணக்கானோர் ஒருசேர உணவருந்தும் விரிவான இரவுணவு விவரணைகள், கெரவக்கின் “On the Road இல் வரும் கார் பயணங்கள் மற்றும் தொடர்ந்த மதுவருந்தலும் போதை மருந்து பயன்படுத்தலும், ஹருகி முராகாமியின் நாவல்களில் வரும் செவ்விசை முதல் பாப் வரையிலான இசை விவாதங்கள் உள்ளிட்ட தகவல்கள் ஒரு புலன் நுகர்வு உவப்பை தருவன. நாவலின் முக்கிய வசீகரம் சொற்கள் வழி புசிக்கவும் கேட்கவும் தீண்டவும் எண்ணற்ற வாய்ப்புகளை, அளப்பரிய இன்பத்தை அது தருகிறது என்பது. காமம், வேட்டை, காளைச்சண்டை நாவல்களையும் இப்பிரிவில் சேர்க்கலாம். இளையராஜாவின் சிறந்த பாடல்களை குறிப்பிட்டு மேலோட்டமாக எழுதப்பட்ட ஒரு கட்டுரை கூட உங்கள் நினைவுகளை தீண்டி பெரும் இசையின்பத்தை அளிக்க முடியும். அதனாலேயே அக்கட்டுரையை நாம் சிலாகிப்போம். கிரிக்கெட் எழுத்தின் மையமும் இதுதான். கிரிக்கெட்டை பார்ப்பதை போன்றே அது குறித்து பெரும் வேட்கையுடன் வாசிப்பவர்கள், கேட்பவர்கள், பேசுபவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் ஆட்டம் நிகழும் போது அதைப் பார்ப்பதை தவிர்த்து அதே வேளையில் தெருவில் நண்பர்களுடன் அதே ஆட்டத்தை தமக்குள் ஆடிப் பார்க்கும் கல்லி கிரிக்கெட்டர்களை அன்றாடம் பார்க்கிறோம். அவர்கள் ஒரு ஆட்டத்தை பார்க்காமலே ஆடுவதன் வழி தமது உடலைக் கொண்டு நிகழ்த்தி ரசிக்கிறார்கள். Chinaman நாவலில் இத்தகைய சுவாரசியமான தருணங்கள் பல உள்ளன. இந்நாவலின் கதையை, அதன் அனுபவத்தை, பிரச்சனைகளை மறந்து ஒரு கிரிக்கெட் ரசிகன் இதிலுள்ள சில நூறு பக்கங்களின் கிரிக்கெட் பற்றின சிலாகிப்புகளை, அரட்டைகளை, வருத்தங்களை, ஏக்கங்களை ஆவேசமாக வாசித்துக் கொண்டே போகலாம். Chinaman அப்படி ஒரு தனித்துவ கிரிக்கெட் அனுபவமாக மாறுகிறது. கருணதிலகாவின் முக்கிய வெற்றி இது.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates