Thursday 9 June 2011

லில்லிபுட் தேசத்தில் கிரிக்கெட்



ஐ.பி.எல்லை கட்டுப்படுத்த வேண்டும், அதற்கான விதிமுறைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உருவாக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே இயன் சேப்பல் கூறி வந்தார். ஐ.பி.எல்லை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? அது ஒரு நல்ல பொழுதுபோக்காக, விளம்பர நிறுவனங்களின் வேட்டைக்களனாக, உள்ளூர் வீரர்கள் மற்றும் ஓய்வு பெறப் போகும் வீரர்களின் எதிர்காலத்தை பத்திரப்படுத்தும் மார்க்கமாக பல பரிமாணங்கள் கொண்டுள்ளது. ஏன் ஐ.பி.எல் வேண்டும் என்று ஒரு எளிய இந்திய கிரிக்கெட் ஆதரவாளர் கூட மூச்சுவிடாமல் பேச முடியும். ஆனாலும் நமது கண்ணாடியை கழற்றி விட்டு பார்த்தால் அது உலகக் கிரிக்கெட்டின் சத்தை உறிஞ்சி சக்கையாக்குவது புரியும். ஐ.பி.எல் வெற்றி பெறுவதற்கு காரணம் அதன் தரமான சர்வதேச ஆட்டக்காரர்கள். ஷொன் மார்ஷ், பொலார்ட் போன்ற பல வெளிநாட்டு உள்ளூர் கிரிக்கெட்டர்களும் ஐ.பி.எல்லினால் புகழடைந்த அதே வேளையில் அதன் தரத்தையும் தான் வெகுவாக உயர்த்தினர். வார்னர் போன்ற சிலர் தேசிய அணிக்காக அறிமுகமானாலும் அவர்களின் திறன்கள் ஐ.பி.எல்லை வளர்க்கவே பெரிதும் பயன்பட்டுள்ளன. ஷேன் வார்னின் தலைமைப் பண்புகளை ஆஸ்திரேலியாவை விட இந்தியாவால் சிறப்பாக பயன்படுத்த முடிந்தது. உலக கிரிக்கெட்டர்களை ஒருமித்து இந்தியாவுக்குள் குவித்து ஒரு உள்ளூர் ஆட்டத்த் தொடரை ஆட வைக்க முடிந்தது. இவர்களை பயன்படுத்தும் தார்மீக உரிமை இந்தியாவுக்கு உண்டா என்பதே சேப்பல் போன்றவர்கள் எழுப்பும் கேள்வி. ஏனெனில் எப்படி இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஒரு விஞ்ஞானியோ பொறியியலாளனோ முழுக்க சுயம்பு அல்லவோ அதைப் போன்று மேற்கிலிருந்து இங்கு வந்து ஆடும் வீரர்கள் தாமாகவே உருவானவர்கள் அல்ல. அவர்களை உருவாக்க அவர்களின் தேசம் உள்கட்டமைப்பு, பயிற்சி, காலம் போன்று ஏகப்பட்ட செலவுகளை செய்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட்டரும் அந்நாட்டு வாரியத்தின் முதலீடு. மேலும் ஒரு வீரர் ஆடி உருவாகும் போது மற்றொருவருக்கான இடம் அதே வேளையில் மறுக்கப்படுகிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக ஐ.பி.எல்லுக்காக சமீபமாக தேசிய அணிக்கு ஆட மறுத்த லசித் மலிங்காவை எடுத்துக் கொள்ளலாம்.
மலிங்காவை ஒரு கிராமத்தில் நடக்கும் தெருக் கிரிக்கெட் போட்டியில் ஒரு பயிற்சியாளர் கவனிக்கிறார். ஒரு மெலிதான குள்ளமான சிறுவன். அவனுக்கு விநோதமான வீச்சு பாணி. பொறி பறக்கும் வேகம். அவனை அணுகி ஊக்குவித்து பெற்றோர்களிடம் பேசி உள்ளூர் போட்டிகளில் ஆட வைக்கிறார். உடலை தேற்றி வலுப்பெற ஆலோசனைகள் அளிக்கிறார். லசித் மலிங்கா பின்னர் ஒரு பெரும் ஆற்றலாம மாறியதன் பின்னால் இலங்கை பயிற்சியாளர்களின் அக்கறை, உழைப்பு, உள்ளூர் உட்கட்டமைப்பு, தேர்வாளர்களின் ஈடுபாடு என்று தொடங்கி மைதானங்களில் ஆடுதளத்தை அமைக்க வேலை பார்க்கும் கூலியாட்களின் வியர்வை வரை ஏகப்ப்ட்ட அர்ப்பணிப்பும் உழைப்பும் உள்ளது. அவர் இடத்தில் வேறொருவருக்கு வாய்ப்பும் ஊக்குவிப்பும் வழங்கப்பட்டிருக்கலாம். ஆனால் மலிங்கா ஒரு நொடியில் சுயநலம் கருதி இந்த இளமைக்கால ஆதரவின் நினைவுகளை புறங்கையால் ஒதுக்கி விடுகிறார். இலங்கை கிரிக்கெட் இன்றி மலிங்கா என்றொருவர் உருவாகி இருக்க முடியாது. அதை அவர் மறந்து விடுகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கலந்து கொள்ள மறுத்து ஐ.பி.எல்லில் மிக அதிகமான விக்கெட்டுகள் வீழ்த்துகிறார். விளைவாக பலவீனமான அவரது தேசிய அணி இங்கிலாந்தில் முதல் டெஸ்டை இழக்கிறது. மலிங்கா ஒரு இலங்கை கிரிக்கெட் முதலீடு என்றால் அவரை முழுமையாக அபேஸ் செய்வது இந்தியாவின் திறமைத் திருட்டு. தமக்காக ஒரு போரை தாராளமாக நடத்தித் தந்த இந்தியாவை இலங்கை இந்த சிறு கிரிக்கெட் விசயத்தில் கண்டிக்காமல் சுமூகமாக போகலாம். ஆனால் சேப்பல் உள்ளிட்ட மேற்கத்திய விமர்சகர்கள் இந்த திறமைத் திருட்டை வேறொன்றாக பார்க்க தயாராக இல்லை. ஆஸ்திரேலியா, மே.இ தீவுகள், தெ.ஆ போன்ற நாடுகளின் உள்ளூர் கட்டமைப்பின் மூலம் விளைந்த திறமைகளை இந்தியா பயன்படுத்துகிற பட்சத்தில் ஐ.பி.எல் லாபத்தில் ஒரு பகுதியை அந்நாடுகளுக்கும் உள்ளூர் கிரிக்கெட்டை வளர்க்க வழங்கலாமே என்று கேட்கிறார்கள். இந்தியா கிரிக்கெட்டின் அதிகார மையம் என்பதால் அதற்கு மூக்கணாங்கயிறு கட்ட முடியாது. ஆனால் திருடப்படும் முதலீடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பிற நாட்டு வாரியங்கள் இப்போது ஆரம்பித்து உள்ளன. இது கிரிக்கெட்டில் நிகழ்ந்து வரும் ஒரு மௌனமான புகைச்சலை சுட்டுகிறது.
இந்த வருட ஐ.பி.எல்லினால் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் நியுசிலாந்து பாதிக்கப்பட இல்லை. இங்கிலாந்து வீரர்கள் எப்போதுமே ஐ.பி.எல்லை விட தம்மூர் கவுண்டி ஆடுவதில் பெருமையும், அர்ப்பணிப்பு உணர்வும் காட்டுபவர்கள். உலகக்கோப்பை முடிந்ததும் சர்வதேச தொடர்கள் ஆட ஆரம்பித்த இலங்கை, மே.இ தீவுகள் ஆகிய அணிகள் தாம் முழுமையாக பாதிக்கப்பட்டன. இவ்வணியின் மூத்த வீரர்கள் ஐ.பி.எல் ஆடியதால் தேசிய அணிக்கு ஆட மறுத்தனர், சொந்த வாரியங்களுடன் முரண்பட்டனர், அல்லது ஜெயவர்த்தனே, சங்கக்காரா போன்றவர்கள் ஐ.பி.எல் முடித்து களைத்துப் போய் சர்வதேச ஆட்டங்களுக்கு சுரத்தில்லாமல் திரும்பி கால்பாவாத ஆவிகளைப் போல் உலாவினர்.
இந்த துரோகங்களுக்கு எதிர்வினையாக முதலில் மே.இ தீவுகள் தேர்வாளர்கள் சில கராறான முடிவுகள் எடுத்துள்ளனர்.
மே.இ தீவுகள் அணியின் கடந்த பத்தாண்டு கீழ்த்தர ஆட்டத்துக்கு அவ்வணியின் மூத்த வீரர்களின் சுயநல நடத்தை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. சில வருடங்களுக்கு முன் மே.இ தீவுகளின் கிரிக்கெட்டர்கள் சங்கம் அமைத்து வாரியத்துக்கு எதிராக சம்பள உயர்வுக்காக போராடினர். முதலில் அக்காரணத்துக்காக வாரிய நிர்வாகிகள் மூத்தவீரர்களை கொத்தாக நீக்கினர். பிறகு தொடர்ந்த தடுமாற்றங்களுக்கு பிறகு கெயிலின் தலைமையின் கீழ் அணி சற்று நிலைப்பட்டது. ஆனால் கெயிலும் முரண்பட தேர்வாளர்கள் அவரை தலைமையில் இருந்து நீக்கி அனுபவமும் திற்மையும் குறைந்த சேமி என்பவரை அணித் தலைவராக்கியது. இலங்கைக்கு பயணித்த முதிராத மே.இ அணி அங்கு நன்றாக ஆடியது. உலகக்கோப்பையில் கூட அவர்கள் எதிர்பார்த்ததை விட சற்று மேலாகவே ஆடினர். அடுத்து பயணம் வந்த பாக் அணியை சமீபமாக ஒரு டெஸ்டில் தோற்கடித்தனர். இந்த வெற்றிகளில் எங்கும் பங்கேற்காமல் அவ்வேளையில் கெயில், பிராவோ போன்ற நட்சத்திரங்கள் இந்தியாவின் உள்ளூர் T20 தொடர் ஒன்றில் கோடிக்கணக்கான சம்பளத்துக்காக ஆடிக் கொண்டிருந்தனர். போதாததற்கு கெயில் வானொலி பேட்டி ஒன்றில் தனது நாட்டு தேர்வாளர்களை அவமானித்து பேசினார். கெயில் பின்னர் ஐ.பி.எல்லில் அதிக பட்சமாக 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்தார். தனது வாழ்வின் மிகச்சிறந்த ஆட்டநிலையில் இருந்ததால் அவர் இந்திய சுற்றுப்பயணத்திற்கான அணியில் சேர்க்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்சொன்ன வெற்றிகள் அளித்த நம்பிக்கை ஊக்கத்தால் தேர்வாளர்கள் கெயில், சந்தர் பால், பிராவொ, பிடல் எட்வர்ட்ஸ் போன்ற நட்சத்திர வீரர்களை இந்தியாவுக்கு எதிரான அணியில் சேர்க்கவில்லை. வெளியில் இருந்து பார்க்க இந்த கரார் நடவடிக்கைகள் அவசர அதிகார சீற்றங்களாக தெரிந்தாலும் அணி ஒற்றுமை, பொறுப்பு, அர்ப்பணிப்புணர்வு போன்ற விழுமியங்களை தக்கவைக்க, ன்னெடுக்க மே.இ தேர்வாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் தீரம் பாராட்டத்தக்கது.

ஐ.பி.எல்லில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் தொடர்ந்து மூத்த வீரர்களின் சுயநலம் மற்றும் பெட்டிங் ஊழலால் இழப்புகளை சந்தித்து வரும் மற்றொரு அணி பாகிஸ்தான். பாகிஸ்தான் என்றுமே ஒரு வலுவான தலைவரின் கீழ் தான் சிறப்பாக ஆடியுள்ளது. இம்ரான், வாசிம் அக்ரம், இன்சமாம் என ஒவ்வொருவரும் ஒரு திடமான மரபை உருவாக்கி சென்றார்கள். அவர்கள் தங்களுக்குக் கீழ் விசுவாசமான சில அணி வீரர்களை பாதுகாத்தார்கள். இந்த உட்குழு என்றுமே பாகிஸ்தானின் நியூக்ளியஸாக இருந்துள்ளது. உதாரணமாக அக்ரமின் கீழ் சக்லைன், அன்வர், ரசாக், மோயின், இன்ஸியின் கீழ் அக்தர், யூனிஸ், யூசுப் போன்றோர். இந்த உட்குழுவுக்கு உள்ள பாதுகாப்பு வட்டம் சமீபமாக உடைந்துள்ளது. கடந்து இரண்டு வருடங்களாக பாக் வாரிய தலைவராக உள்ள இஜாஸ் பட் மாதம் ஒரு தலைவர் என்று மாற்றி வந்ததால் பாக் அணிக்கு தலைமைக்கு புதிதாக ஆளே இல்லை என்ற நிலைமை வந்தது. வனவாசம் போயிருந்த அப்ரிடி திரும்ப அழைக்கப்ப்பட்டு அணித்தலைவராக மாற்றப்பட்டார். பின்னர் அவர் பயிற்சியாளருடன் முரண்பட்டதால் விலக்கப்பட்டு சற்று முன்னர் அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த முப்பத்தாறு வயதான உல் ஹக் தலைவராக்கப்பட்டுள்ளார். இத்தனை அதிரடி மாற்றங்களால் இஜாஸ் பட் ஒரு நிதானமற்ற நிர்வாகி என்று விமர்சனத்துக்கு உள்ளானாலும் அவர் இதுவரையிலான பாகிஸ்தானின் ஹிமேன் தலைமை மரபை, மூத்தவீரர்களின் ஆதிக்கத்தை மாற்றி அமைக்க முயன்று வருவதை நாம் கவனிக்க வேண்டும்.
உலகம் முழுவதும் கிரிக்கெட்டர்கள் பெரும் சஞ்சலத்தை எதிர்கொள்ளும் ஒரு திருப்பம் இது. திராவிட், சச்சின், பாண்டிங், லாரா போல் இருபது வருடங்கள் மூஞ்சுறு மேல் வலம் வந்து சாதிக்க இன்றைய வீரர்கள் முயல மாட்டார்கள். காவிய நாயகர்களின் நிழலும் கூட இறந்த காலத்திற்கு திரும்பி விட்டது. ஐ.பி.எல்லின் அதிர்வுகள் தம் வேர்களை பறித்து விடாமல் இருக்க பல வாரியங்களும் சுதாரிக்க தொடங்கி உள்ளன. இவ்வாரியங்கள் வெள்ளி நாணயங்களுக்கு விலை போகாத இளைய வீரர்களின் அணி ஒன்றை கட்டியெழுப்ப பார்க்கின்றன. இதனால் அடுத்த பத்து வருடங்களில் கிரிக்கெட்டின் முகம் வெகுவாக மாறப் போகிறது.
 ஆனால் இந்தியாவில் திருடனும் போலிசும் ஒருவரே என்பதால் இதே தண்டனைகளை தோனி, சச்சின், சஹீர், காம்பிர் போன்ற சீனியர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க முடியாது. அவர்களுக்கு தொடர்ந்து அதிகாரபூர்வ பாதுகாப்பு கிடைக்கும் என்றாலும் மேற்கிந்திய பயணத்தில் காலியான இருக்கைகள் இளைஞர்களுக்கு உருவாக்கி உள்ள வாய்ப்புகள் மற்றொரு தரப்பை சொல்கின்றன. உலகம் முழுவதும் பல்வேறு அளவிலான T20 ஆட்டத்தொடர்கள் நடத்தப்பட உள்ள பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு மேஜையை போல் நிறைந்துள்ளது. உயர்ந்த அந்தஸ்தில் உள்ள வீரர்கள் இனி சர்வதேச ஆட்டங்களை அவற்றின் முக்கியத்துவம் பொறுத்து, தம் விருப்பம் மற்றும் வசதி பொறுத்து தேர்வு செய்து ஆடலாம்; உதாரணமாக வங்கதேச, மே.இ தீவுகள் பயணத்திற்கு செல்ல மாட்டார்கள், ஆனால் ஆஸ்திரேலியா, தெ.ஆ, இங்கிலாந்து செல்வார்கள். சர்வதேச ஆட்டங்கள் இனி உள்ளூர் ஆட்டங்களுக்கு அடுத்தபடியான பயிற்சி ஆட்டங்களின் அந்தஸ்தை பெறலாம். உச்சபட்சமாக ஐ.பி.எல், ஆஸ்திரேலிய பிக்பேஷ் போன்ற உள்ளூர் T20 ஆட்டத்தொடர்களுக்கு ஐ.சி.சி சர்வதேச அந்தஸ்து வழங்கலாம். கலிவர் அறிய நேர்ந்தது போல் குள்ளர்களின் நாட்டில் உயரமாக இருப்பதும் ஒரு ஊனம் தான். சர்வதேச கிரிக்கெட் தன்  பெரிய ஆகிருதியை வைத்து என்ன செய்வது என்று முழிக்கிறது.
Share This

4 comments :

  1. சூப்பர்... ஐ.பி.எல் இன் பாதிப்பு தொடர்பாக என் மனதில் உதித்தவற்றின் நேரடிப் பிரதிபலிப்பு இது.

    அருமை

    ReplyDelete
  2. இன்று தான் வாறனுங்க ரசனைக்குரிய பதிவு...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates