Saturday 7 April 2012

பனித்தவளைகள், ஐஸ்வைனுடன் உருவான சர்க்கரைநோய்

சர்க்கரை நோய் ஒருவருக்கு ஏன் ஏற்படுகிறது என்பதற்கு சிறுவயதில் நிறைய சர்க்கரை சாப்பிட்டது, உடம்பில் அபரிதமாய் சக்கரை இருப்பதில் இருந்து பெற்றோருக்கு இருக்கக் கூடும், கணையம் வேலை செய்யவில்லை என்பது வரை நம்மிடையே அசட்டுத்தனமான, சுவாரஸ்யமான, தகவல்பூர்வமான நம்பிக்கைகள், விளக்கங்கள் உள்ளன. ஒருவருக்கு ரத்தக்கொழுப்பு அதிகம் என்றால் கொழுப்பை உணவில் குறைத்துக் கொண்டால் போதும். ரொம்ப இருமல் என்றால் சிகரெட்டை குறைக்கலாம். ஆனால் நீரிழிவு அத்தனை எளிதல்ல. ரத்தத்தில் சர்க்கரை ஏறி இறங்குவதன் காரணங்கள் புதிரானவை. பல சமயங்களில் மருத்துவர்களும் சில எளிய தர்க்கங்களுக்குள் முடக்கப்பார்த்து தோல்வி கொள்கிறார்கள். மனம் மற்றும் உடலின் அறியப்படாத பல ரகசிய விதிகள் கைகோர்க்கும் போது நீரிழிவு பல விசித்திரமான பாதைகளிலெல்லாம் செல்லும். உதாரணமாக, சிலருக்கு இரவெல்லாம் சர்க்கரை அளவு இயல்பாக இருந்து விட்டு விடிகாலையில் மூன்றுமடங்கு ஏறும். ஹார்மோன் மாற்றங்கள் காரணம். Dawn Phenomenon என்கிறார்கள். இப்படி சிக்கலானதாக நீரிழிவு ஏன் உள்ளது? இந்த கேள்வியை முன்னிட்டு சில விளக்கங்களை பார்க்கலாம். அவை பரிணாமவியல் விடைகள். மேற்சொன்ன “சின்ன வயதில் நிறைய ஸ்வீட் சாப்பிடுவீங்களா? வகையறாக்களை விட மேலும் ஆர்வமூட்டுபவை, நியாயமானவை.

ஒருவருக்கு நீரிழிவு இருப்பதற்கான முக்கியமான வெளிப்படையான ஆரம்ப அறிகுறிகளில் ஒன்று நிறைய நீர் குடிப்பதும் வெளியேற்றுவதும். தீராத தாகம், குடித்து கொஞ்ச நேரத்தில் பழவீச்சமுடன் சிறுநீர். இது ஏன் ஏற்படுகிறது? அலோபதி மருத்துவம் தரும் விளக்கம் நம் சிறுநீரகம் தன்னில் சேர்ந்துள்ள உபரி சர்க்கரையை சிறுநீர் வழி வெளியேற்றுகிறது என்பது. ஆக ஒருவரின் ரத்தத்தில் உபரி சர்க்கரை நிறையும் போது தாகமும் சிறுநீர் விழைவும் மிகுகிறது. மற்றொரு ஆதாரம் சிறுநீரை நாடி வரும் எறும்புகள். பண்டைய சீனாவில் ஒருவரது ரத்த சர்க்கரையை வைத்தியர்கள் எறும்புகள் கொண்டு தான் கண்டுபிடிப்பார்களாம். பரிணாமவியல் இந்த சிறுநீர் அறிகுறிக்கு முற்றிலும் மாறுபட்ட விளக்கம் ஒன்று தருகிறது. அதை சற்று பின்னர் பார்க்கலாம்.

மனிதனின் ஆக முக்கியமான ஆற்றலாக டார்வின் கருதியது சூழலுக்கு ஏற்றபடி தன்னை தகவமைத்துக் கொள்வது. அதனால் தான் தன்னை விட பிரம்மாண்டமான டைனோசர்கள் மற்றும் யானைகளை விட அவன் ஆதிக்கம் மிக்கவனாக மாறி உலகெங்கும் பல்கி பெருகினான். உதாரணம் சொல்வதானால் மிகக் கடுமையான பருவச் சூழல் மற்றும் பௌதிக சவால்கள் இடையே வாழப் பழகியவர்கள் வலிமையான உயரமான தோற்றம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதே வேளை குள்ளமான சிறுத்த தோற்றம் கொண்டவர்களும் அவர்களிடையே வாழ்கிறார்கள். உயரமான வலிமையான உடல் தான் வெற்றிகரமானது என்றால் இயற்கை நாம் அனைவருக்கும் அதை தர வேண்டியது தானே? பரிணாமவியல் இதற்கொரு விடை தருகிறது. திடகாத்திரமான நெடும் தேகத்தை பராமரிப்பது சிரமம், அதனால் ஆபத்துகளும் அதிகம். அதனால் சூழல் தேவை இருந்தால் அன்றி மனிதர்கள் நூற்றாண்டுகளாக அப்படி தோற்றம் கொள்வதில்லை. மற்றபடியானவர்கள், குறிப்பாய் ஆபத்துகள் அதிகம் எதிர்கொள்ளாதவர்கள், சின்ன சிக்கனமான உடலமைப்புடன் வாழ்வது தான் உசிதம். இனத்துக்கும் உடலமைப்புக்கும் அவ்வளவு இணக்கமில்லை. உதாரணமாக தென்னமெரிக்காவில் ஒரு இனக்குழுவினர் மிக உயரமாக திடகாத்திரமாக இருப்பவர்கள். அதே இனக்குழுவில் ஒரு பகுதியினர் குள்ளமாக அதிக அச்சுறுத்தலற்ற தோற்றத்தில் ஒரு சிறுதீவில் வாழ்வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். நூற்றாண்டுகளாக அவர்கள் வேட்டையாடி மிருகங்களின் ஆபத்துகள் அற்ற, அபரித உணவு கொண்ட ஒரு பத்திரமான சிறுதீவில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு நான்கடி தோற்றம் போதுமென தீர்மானித்தது இயற்கை. இது தான் பரிணாமவியலின் அடிப்படை நியதி. நமது உடலின் சிறு இயக்கத்துக்கும், திறனுக்கும், கூட பழுதுக்கும் சேர்த்து, இயற்கை ஒரு காரணம் வைத்திருக்கிறது. உதாரணமாக நாய், பூனையை போல் அன்றி, மனிதர்களுக்கு பெண்குறி எளிதில் எட்ட முடியாதபடி கால்களுக்கு நடுவே இருப்பது ஏன் என்பது பற்றி ஒரு நீண்ட சுவாரஸ்யமான விவாதம் பரிணாமவியலாளர்களுக்கு இடையே நிகழ்ந்திருக்கிறது. சரி இந்த காரணங்கள் முழுக்க சாதகமானவையா? இல்லை என்றால் அது ஏன்?

இங்கு தான் ஒரு நுட்பமான உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அது குறிப்பட்ட சூழலுக்கு ஏற்றபடி அமைந்து உள்ள ஒரு உயிரியல் செயல்பாடு மற்றொரு மாறுபட்ட சூழலுக்கு தகுந்தாற்போல உடனடி மாறுவதில்லை என்பது. உதாரணமாக, போர்க்காலங்களில் குழந்தைப் பேறு பொதுவாக குறைவதை ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள். ஆபத்துக்காலம் என மனம் வழி உடல் ஊகிப்பதே காரணம். ஆக மனதுக்குள் உடலுக்கும் பிரக்ஞை கடந்த ஒரு புலப்படாத பரிபாஷை உள்ளது. அது நம் காதுகளுக்கு கேட்பதே இல்லை. விளைவாக ஒரு ஜோடி குழந்தைக்காக முயல்கிறார்கள் என கொள்வோம். அந்த நெருக்கடி அவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தலாம். இதை ஆபத்து என புரியும் மனம் கர்ப்ப வாய்ப்புகளை உடனடியாக நிறுத்தி வைக்கும். நெருக்கடியை இது மேலும் மேலும் அதிகரித்து பிரச்சனைகள் இன்னும் தீவிரமாக ஆக்கும். இது மனிதனுக்கு ஒரு காலத்தில் சாதகமாக இருந்த ஆனால் தற்கால நவீன சூழலில் பாதகமாக மாறியுள்ள ஒரு பரிணாமவியல் திறன். மற்றொரு உதாரணம் மனிதத் தலை. பிறமிருகங்களை விட உருவ விகிதத்துக்கு சற்றே பெரிய மண்டை ஓட்டையும் குறிப்பாக அதற்குள் அதிகமான மூளையையும் கொண்ட மனிதனுக்கு அம்மாவின் கருப்பையில் இருந்து வெளியேறும் போது அதே வீங்கின மண்டைதான் அதிக தொந்தரவை, வலியை, ஆபத்தை தருகிறது. பறவைகளை பார்த்தோமானால் மானின் கொம்புகளை, மயிலின் தோகையை இந்த இருமைக்கு உதாரணமாக சொல்லலாம்.

பரிணாம மாற்றத்துக்கு பல வருடங்கள் பிடிக்கும் என்று முன்னரும், இல்லை சில பத்து வருடங்களிலே கூட பெரும் பருவ மாற்றங்களுக்கு ஏற்றபடி மனித உடல் பரிணாமிக்க முடியும் என்று தற்காலத்தவர்களும் பரிணாமவியலில் விவாதிக்கிறார்கள். விரைந்தோ மெல்லவோ, எப்படியும் அழிவின் விளிம்பில் செல்லும் இனம் தான் பிரதானமான மாற்றங்களை தனக்கு செய்து கொள்கிறது எனலாம். நீரிழிவு மனிதனுக்கு எப்படி ஏற்பட்டது என்பதற்கு அவர்கள் சொல்லும் காரணங்களிலே இதற்கு ஆதாரமும் தருகிறார்கள்.

முதலில் அவர்கள் கூறும் கருத்து குளிருக்கும் சக்கரை உபாதைக்கும் தொடர்புண்டு என்பது. கடுமையான குளிர்பகுதிக்கு செல்லும் போது இந்த உபாதையற்ற இயல்பான ஒருவருக்கு கூட சர்க்கரை அளவு ரத்தத்தில் மிகுதியாகிறது. ஏற்கனவோ கூறியது போல் பரிணாமவியல் நமது உடலின் பல உபாதைகளை கூட நமது நன்மைக்காகவே ஒரு காலத்தில் ஏற்படுத்தியது. சூழல் மாறி அவை தேவையில்லாமல் ஆன போது உபாதைகளாக மாறின. அல்லது ஒரு நன்மை தரும் மாற்றத்தின் பின்விளைவாக வெகுவாக பிந்தி உபாதைகள் நேர்ந்தன. சரி, கடுங்குளிர் பிரதேசத்தில் மனிதனுக்கு ரத்த சர்க்கரை ஏறுகிறது என்றால் அதனால் ஏதாவது பலன் வேண்டும். அது என்ன? இந்த விளக்கத்துக்கு போகும் முன் ஒரு சுவாரஸ்யமான உண்மைக்கதையை பார்க்கலாம்.

மனிதனால் தாக்குப்பிடிக்க முடியாத கடுங்குளிரில் சுலபமாக வாழும் உயிர்கள் பற்றி படித்திருக்கிறோம். அண்டார்டிக்காவில் வசிக்கும் பெரும் cod மீன் பிரம்மாண்ட ஐஸ் கட்டிகள் மத்தியில் சுணங்காமல் நீந்தும். அதன் ரத்தம் உறைந்து போகாமல் இருக்க ஒரு வகை antifreeze புரதம் அதனிடம் உள்ளது. இந்த காட் மீனை விட கொஞ்சம் விநோதமானது மரத்தவளை உறைகுளிரை எதிர்கொள்ளும் முறை. அது பனிக்கால உறக்கத்துக்கு சென்று விடுகிற முறை மிக சுவாரஸ்யமானது.

கனடாவை சேர்ந்த கென் ஸ்டோரி ஒரு உயிர்வேதியில் விஞ்ஞானி. அவர் காட் மீனுக்கு உள்ளது போல் விலங்குகளின் ரத்தம் உறையாத தன்மையை பற்றி மனைவி ஜேனட்டுடன் ஆய்ந்து கொண்டிருந்தார். அவரிடம் இந்த புதிர் தவளையை பற்றி கூட வேலைபார்ப்பவர் சொல்ல இரவில் சென்று பிடித்து கார் டிரங்கில் இட்டு வீட்டுக்கு கிளம்பியிருக்கிறார். வரும் வழியில் எதிர்பாராத உறைபனி. வீட்டுக்கு வந்து திறந்து பார்த்தால் தவளைகள் சிறுசிறு பனிக் கட்டிகளாக உயிரற்று உருண்டன. எதற்கும் உருகட்டும் கிழித்துப் பார்க்கலாம் என்று ஆய்வகத்தில் கொண்டு போய் வைத்தார். கொஞ்ச நேரத்தில் பனி உருக தவளைகள் சட்டென விழித்து அங்குமிங்குமாக துள்ளி குதித்து ஓடின. இந்த திடீர் புத்தியிர்ப்பை எப்படி விளக்குவதென்றே அவருக்கு புரியவில்லை. பிறகு தான் அவரது முக்கியமான அந்த ஆய்வு துவங்கியது.

மேலும் பல உறைந்த தவளைகளை கொண்டு வந்து திறந்து பார்த்தார். அவற்றின் வயிற்றுக்குக் கீழ் சிறு தோல் பை. அதில் உடலின் நீரெல்லாம் பனிக்கட்டிப் படலமாக படிந்திருந்தது. உள்ளே உறுப்புகள் கிஸ்மிஸ் போல் உலர்ந்து சுருங்கித் தெரிந்தன. பனி-உறக்கத்தின் போது தவளை தன்னை பாதுகாப்பதன் முதல் உபாயம் நீரை வெளியேற்றி இதயம், நுரையீரல் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை உலர்வாக்குவது. ஏனென்றால் நீர் உறைந்தால் சிறுசிறு பனித்துகள்கள் அவற்றில் குவியும். அவற்றின் கூர்மையாக முனைகள் உள்ளுறுப்புகளின் தசைகளை கிழித்து விடக் கூடியவை. மேலும் வெளியே தோலுக்குள் உருவாகும் பனிப்படலம் உறுப்புகள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கின்றன. உடலில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட அகற்றப்படாத நீர் உண்டு. அது ரத்தம். அது உறைந்து போகாமல் எப்படி காப்பாற்றுவது?

இங்கு தான் நீரிழிவு ஒரு உசிதமான உபாயமாக பயன்படுகிறது. தவளையின் கல்லீரல் ஏகப்பட்ட சர்க்கரையை ரத்தத்தில் கலக்கிறது. சாதாரண ரத்தசர்க்கரை அளவை விட நூறுமடங்கு சர்க்கரை அதிகரிக்கிறது. அதாவது மனிதனுக்கு சகஜ சர்க்கரை அளவு 120. அது 12000ஆக உயர்ந்தால் என்னவாகும். 1000மே நம் உடம்பு சில மணிநேரங்கள் தாங்காது. கோமாவுக்கு சென்று விடுவோம். தவளை உறைநிலையில் இருப்பதால் பிரச்சனையில்லை. எதற்கு சர்க்கரை உயர்கிறது?. ரத்தம் உறையாமல் இருக்க சர்க்கரை வேண்டும். சர்க்கரைக்கு அந்த பண்பு உண்டு.

மனிதர்களில் கடுங்குளிர் பிரதேசத்தில் வாழ்பவர்களுக்கும் ரத்தத்தில் சர்க்கரை உயர்வது சகஜமாக நிகழ்கிறது. அவர்கள் எளிதில் சமாளிக்கிறார்கள். எப்படி? இம்மனிதர்களின் உடலில் பழுப்பு கொழுப்பு என்று ஒருவகை கொழுப்பு உள்ளது. இது மிக வீரியமான அதிரடி இன்சுலின் போன்றது. 12000 சர்க்கரையும் நொடியில் வழக்கமான இன்சுலின் இல்லாமல் இந்த பழுப்பு கொழுப்பு எரித்து ஆற்றலாக மாற்றுகிறது. நவீன மனிதன் பழுப்பு கொழுப்பை பயன்படுத்த இக்ளூ போன்ற பனிவீடுகளுக்குள் வாழ வேண்டும். வெளியே வந்தால் இக்கொழுப்பு செயல்படாது.

நாம் தான் காட் மீனோ மரத்தவளையோ இல்லையே, நமக்கு ஏன் ரத்தசர்க்கரை உபாதை?  20,000 வருடங்களுக்கு முன் வந்த பனியுகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகின் சீதோஷண நிலை கடுமையான உறைகுளிராக மாறி அதனால் உலகம் வாழத்தகாத இடமாக மாறியது. உணவும் வெப்பமும் இன்றி பல உயிர்கள் அழிந்தன, இனங்கள் அருகின. உலகம் ஒரு சுழலும் பனிக்கட்டியாகியது. பொதுவாக ஆய்வாளர்கள் பனியுகம் மெல்ல மெல்ல தோன்றி நூற்றாண்டுகளுக்கு நிலைத்தது என்று நம்பினார்கள். அப்போது மனிதன் போன்ற சில இனங்கள் தங்களை மாறும் சூழலுக்கு ஏற்றபடி மாற்றி வலிமையாக பரிணமித்தன. சுமார் 13,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த Younger Dryas என்ற காலகட்டத்தை பற்றி அறிந்ததும் ஆய்வாளர்கள் தம் முடிவை மாற்றி கடுமையான சீதோஷண மாற்றங்கள் சில பத்தாண்டுகளில் ‘உடனடியாக தோன்றி பெரும் சவால்களை உயிர்களுக்கு தோற்றுவிக்கக் கூடும் என்று கூறினர். இது கற்பனை செய்ய முடியாத “உலக அழிவு பிரளயம் போன்றதொரு இயற்கை அபாயம். மனிதர்களும் பிற உயிர்களும் நிச்சயம் குழம்பிப் போயிருப்பார்கள். Younger Dryasஇன் போது உலகின் சராசரி வெப்பநிலை 30 டிகிரியாக இருந்தது. கடல் நூறடிகளுக்கு மேல் வற்றி உறைந்தது. காடுகளும் புல்வெளிகளும் அநேகமாக காணாமல் போயின. ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் பார்க்குமிடமெங்கும் பிரம்மாண்ட மிதக்கும் பனிக்கட்டி ஆறுகள். இக்காலகட்டத்தில் வட ஐரோப்பாவில் வாழ்ந்த மனிதர்கள் பெருமளவில் அழிந்து போனார்கள் என்று டி.என்.ஏ ஆராய்ச்சி மூலம் கண்டறிந்திருக்கிறார்கள். அப்படியும் மனிதகுலம் பிழைத்தது. அது ரத்தசர்க்கரை அளவை எகிற வைத்து, பழுப்பு கொழுப்பு மூலம் அதனை எரித்து தான் முடிந்திருக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பனியுக பஞ்சத்தின் போது அதிக உணவு இல்லாத பட்சத்தில் ரத்த சர்க்கரை ஒரு அளவுடன் தான் இருந்திருக்கும். இந்த பெரும் மானுட நேருக்கடியின் போது நமக்கு உதவிய ஒரு உயிரியல் மாற்றம் ரொம்ப அவசியமானது என்று மரபணுக்கள் தீர்மானித்து அதற்கான நிரலை தமக்குள் பதித்துக் கொண்டுள்ளன. வெப்பமயமாதல் ஒரு முக்கிய உலக பிரச்சனையாக கருதப்படும் இந்த காலத்தில் மேற்சொன்ன மரபணு நிரல் அவசியமற்றது என்று மனித உடலுக்கு தெரியாது. அதற்கு எப்படி சொல்லிக் கொடுப்பது என்று மனிதனுக்கும் தெரியாது.

சரி கடைசியாய் ஒன்றுக்கு வருவோம். ஏன் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறார்கள்? இதன் பின்னால் இரு சுவாரஸ்யமான கதைகள் உள்ளன.

1764இல் சதர்லாந்து எனும் ஒரு மருத்துவர் மகோதரம், மஞ்சள் காமாலை, முட்டிவலி, முதுகுவலி போன்ற உபாதைகளுக்கு பரிகாரமாக நோயாளிகளை குளிர்ந்த நீரில் அமிழ்த்தி வைத்து பரிசோதனை செய்து பார்த்தார்.  அப்போது நோயாளிகள் தாம் குடித்ததை விடவும் அதிகமாக நீருக்குள் மூத்திரம் போவதை கவனித்தார். அப்போதைய மருத்துவ முடிவுகளின் படி இது வெளிப்புற அழுத்தத்தினால் உடலின் நீர் வெளியேற்றப்படுவது என்று புரிந்து கொண்டார். 1909இல் அறிவியல் உலகம் இம்முடிவை மாற்றியது. அதாவது வெளிப்புற அழுத்தம் அல்ல உடலின் உள்ளிருந்து உருவாகும் அழுத்தம் தான் காரணம் என்றது. அது என்ன அழுத்தம்?

கடுங்குளிரின் போது நமது உடலின் தன்னிச்சையான செயல்களாக தோன்றும் நடுக்கம், உதறல், விரல் நுனிகள் ரத்தம் வடிந்து வெளிறுதல் போன்றவை முழுக்க தன்னிச்சையானவை அல்ல. நடுங்கி கைகால்களை உதறும் போது வெப்பம் உற்பத்தியாகி குளிரில் இருந்து சிறிது பாதுகாக்கின்றன. அடுத்து கடுங்குளிரில் முதலில் நமது கைகள் தாம் பாதிப்புள்ளாகின்றன. இதை frost bite (பனிப்புண்) என்கிறார்கள். காரணம் உடல் விளிம்பில் உள்ள ரத்தக்குழாய்களை சுருக்கி கைகளுக்கு போக வேண்டிய ரத்தத்தை உள்ளுறுப்புகளை பாதுகாக்க உள் நோக்கி செலுத்துகின்றன. நாவேயில் உள்ள மீனவர்கள் மற்றும் இனியுட் பழங்குடி வேட்டையாளிகளுக்கு ஒரு பிரத்யேக திறன் உள்ளது. உறைபனியின் போது அவர்களின் ரத்தக்குழாய்கள் சுருங்கி விரிந்து மாற்றி மாற்றி ரத்தத்தை உள்ளூறுப்புகளுக்கும் கைகால்களுக்குமாக திருப்பி விடுகின்றன. இதனால் கடும்பனியினால் கைவிரல்களை இழக்காமல் தப்பிக்கிறார்கள். இயற்கை வழங்கி உள்ள இந்த பிரத்யேக ஆற்றலை லூயிஸ் அலை அல்லது வேட்டையாளி எதிர்வினை என்று அழைக்கிறார்கள். வியட்நாம் போரின் போது அமெரிக்க படையில் இருந்த ஆப்பிரிக்கர்கள் தாம் அதிகமாக பனிப்புண்களால் பாதிப்படைந்தார்கள். ஏனெனில் வெப்பமிக்க கண்டத்தில் இருந்து வந்த அவ்வின மக்கள் கடுங்குளிருக்கு மரபியல் ரீதியாக இனியூட் பழங்குடிகள் போல, அல்லது வெள்ளைகாரர்கள் அளவுக்கு குறைந்தபட்சமாக கூட, தயாராக இல்லை.

உள்ளார்ந்த அழுத்தம் என்பது இப்படி ரத்தக்குழாய்களை சுருக்கும் படி உடலுக்கு வரும் ஒரு கட்டளை. இப்படி அழுத்தம் ஏற்படும் போது இயல்பாக நீர் வெளியேற்றப்படுகிறது. இதனாலே நீருக்குள் இருப்பவர்களுக்கும் கடுங்குளிரில் இருப்பவர்களுக்கு மூத்திர இச்சை அதிகமாகிறது. ரத்தம் உறைந்து விடாமல் இருக்க, உடலின் நீர்கள் பனித்துகள்களாகி ரத்தக்குழாய்களை அறுத்து விடாமல் இருப்பதற்கான ஒரு உயிரியல் ஏற்பாடு இது. பதினெட்டாவது நூற்றாண்டில் ஐஸ் வைன் எனும் ஒரு இனிப்பான மிக விலையுயர்ந்த வைன் கண்டுபிடிக்கப்பட்ட கதை அடுத்தது.

ஒரு ஜெர்மானிய வைன் உற்பத்தியாளரின் தோட்டத்து திராட்சைகள் ஒரு எதிர்பாராத உறைபனியினால் உறைந்து போயின. அவர் அவற்றை பறித்து பிழிந்தால் எட்டில் இரு பகுதிதான் சாறு கிடைத்தது. மிகவும் ஏமாற்றமடைந்த அவர் எதற்கும் பார்ப்போமே என்று அந்த சாறை புளிக்க வைத்து பார்த்தார். அப்போது தயாராகிய வைன் அதுவரை அவர் சுவைத்ததிலேயே கற்பனைக்கப்பாற்பட்ட இனிப்பு கொண்டிருந்தது. பொதுவாக வைனில் உள்ள சர்க்கரை அளவு 0-3 என இருக்கும். ஆனால் ஐஸ் வைனின் அளவோ 18-28. உலகின் மிக பிரபலமான உன்னத வைன் இப்படி ஒரு விபத்தின் மூலம் கண்டறியப்பட்டது பரிணாமவியலுக்கும் பயன்பட்டது. இந்த திராட்சை இவ்வளவு இனிப்பு கொண்டிருப்பதற்கு அது கடுங்குளிரின் போது தன்னுள் இருக்கும் நீரை வெளியேற்றுவது காரணம். ஏனென்றால் உறையும் நீர் பனித்துகள்களாகி திராட்சையின் மென்படலங்களை கிழித்து விடாமல் இருப்பதற்கு.

இப்படி கடுங்குளிருக்கும் உயர்ந்த சர்க்கரை அளவுக்கும் ஒன்றுக்கு போவதற்கும் ஒரு சற்றே சிக்கலான ஒரு தொடர்பு இருக்கிறது. காட் மீன், மரத்தவளை, திராட்சைகள் போல மனிதனும் தன்னை உறைதலில் இருந்து காப்பாற்ற வேண்டி ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன் பயன்படுத்தின உபாயம் இன்று கோடானுகோடி உயிர்களை பலிவாங்கும் நீரிழிவாக வளர்ந்திருக்கிறது என்கிறது பரிணாமவியல்.

கொஞ்சம் நம்ப சிரமமாக இருக்கிறதல்லவா! இந்த மாதிரியான அறிவியல் கோட்பாடுகள் கொஞ்சம் புனைவுத்தன்மை கொண்டவை. மேற்கத்தியர்களிடையே எதார்த்த கதைகளை விட அறிவியல் புனைவுகள் அதிக பிரபலமாக இருப்பதற்கு இதுவும் காரணம்.

Share This

6 comments :

  1. //இந்த மாதிரியான அறிவியல் கோட்பாடுகள் கொஞ்சம் புனைவுத்தன்மை கொண்டவை. மேற்கத்தியர்களிடையே எதார்த்த கதைகளை விட அறிவியல் புனைவுகள் அதிக பிரபலமாக இருப்பதற்கு இதுவும் காரணம்.//பனைவோ, உண்மையோ, பரியாமல் விழிக்கிறேன்.

    எதுவாக இருந்தாலும், படிக்க, படிக்க, வியப்பு மேலிட்டது.

    நீங்கள் ஒரு ஆசிரியரா, ஆய்வாளியா, பற்பல கேள்விகள். மகப்பில் சென்று உங்கைள பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்,
    அதற்கு முன்பு, பின்பதிவில், என் பாராட்டை தெரிவிக்க வேண்டும்.;-)

    அருமை.

    நன்றி.

    ReplyDelete
  2. இவ்வளவு பெரிய உண்மை இருப்பதை தங்களின் எழுத்தின் அறிந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

    ReplyDelete
  3. நன்றி வெற்றிமகள்

    ReplyDelete
  4. நன்றி முருகேசன் பொன்னுசாமி

    ReplyDelete
  5. வியப்பூட்டும் பதிப்பு! நீரிழிவு நோயின் நீண்ட நெடிய வரலாறு மிக சுவாரசியமாகவும் அறிவுடுவதகவும் இருந்தது. நானும் நீரழிவு நோயில் பாதிக்கபட்டவன் என்பதால் இது சற்றே ஆர்வம்முடுகிறது.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates