Sunday 3 March 2013

கால்கள் - ஒரு பயணம் - சர்வோத்தமன் விமர்சனம்

 
 கால்கள் நாவல் , கல்லூரி முதலாமாண்டு படிக்கும் மது அவளது நண்பர்களை போல அவளும் தனதேயான தனி அடையாளங்கள் கொண்ட பெண்ணாக மாறும் சித்திரத்தை அளிக்கிறது.போலியோவால் பாதிக்கப்பட்ட மது ஆட்வோவில்  கல்லூரிக்கு செல்கிறாள்.பின்னர் ஒரு நாள் வாழ்விலே முதல்முறையாக பேருந்தில் நண்பன் கார்த்திக்குடன் செல்கிறாள்.பயணத்தின் ஊடாக தான் இதுவரை பேருந்தில் பயணம் செய்யாததால் எதையும் இழந்துவிடவில்லை என்பதை உணர்கிறாள்.ஆட்டோவில் பயணம் செய்வதால் அதிக செலவாவதால் அதன் பின் கல்லூரிக்கு பெரும்பாலும் பேருந்திலேயே பயணம் செய்கிறாள்.கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படிக்கிறாள்.கல்லூரியில் பேராசிரியர் மதுசூதனன் நன்கு பரிச்சயம் உள்ளவராக இருக்கிறார்.சமயங்களில் அவரது வீட்டிற்கும் செல்கிறாள்.கல்லூரியை தவிர்த்தால் அவளது உலகம் அவளது வீடும் வீடு இருக்கும் சாலையும் அருகிலிருக்கும் குளமும்.மது காலிப்பர் இல்லாமல் நடப்பதால் அடிக்கடி வீட்டில் வேறு வேறு காரணங்களால் கீழே விழுந்துவிடுகிறாள்.அவள் மறுபடியும் கால் பலம் பெற்று நடக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் அவளுடைய தந்தை பிரேமேந்திரன் வைத்தியர் ஒருவரின் துணையோடு பெரும் முயற்சி செய்தபடி இருக்கிறார்.வைத்தியரின் வைத்திய முறைகள் காரணமாக அவளுக்கு அதிகம் பசி எடுக்கிறது.நிறைய உண்கிறாள்.மேலும் பருமனாகிறாள்.மதுசூதனனின் மகன் பாலு கால் பந்தாட்டக்காரன்.வாத நோய் தாக்கப்பட்டு அவனால் நடக்க முடியாமல் போகிறது.ஒரு கட்டத்தில் அவன் உடல் நிலை மேலும் மோசம் அடைவதால் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான்.அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கிறார்கள்.கார்த்திக்கின் தந்தை திடீரென்று காணாமல் போய்விடுவதால் கார்த்திக்கின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகிறது.ஆனால் கார்த்திக் எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளாமல் தன் தந்தை திரும்பவந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் , ஒரு கனவிலிருந்து வெளியே வந்தது போல வாழ்க்கை மாறிவிடும் என்று நினைக்கிறான்.கார்த்திக் பாலுவின் இந்த நிலைக்கு காரணம் செய்வினை என்று நம்புகிறான்.கார்த்திக் தான் எடுத்துக்கொள்ள காத்திருக்கும் பொறுப்புகளை ஏற்க தயாராக இல்லை.சாகசம் போல அவனது நண்பனின் கல்லூரி தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு சிக்கலில் வேறு மாட்டிக்கொள்கிறான்.கார்த்திக் பருவகால கவிதைகள் எழுதுகிறான்.மழை விடுதலையை பறைசாற்றும் தேவதூதன் என்கிறான்.கார்த்திக் செய்ய விரும்புவது புரட்சி அல்லது காதல்.அவன் எங்குமே யதார்த்த்தை எதிர்கொள்ள தயாராக இல்லை.மதுசூதனன் தனது மகன் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மிகவும் அச்சத்திற்குள்ளாகிறார்.அவர் கம்பீரமாக நடப்பது கூட கோமாளித்தனமாக இருக்கிறது.தன் மகன் குணமாவது பொருட்டு தன் வீட்டருகில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துகிறார்.ஜோசியர்களை சந்திக்கிறார்.ஒரு பிரச்சனையான சூழலில் தர்க்க ரீதியாக சிந்தித்து செயல்படுவதில் உள்ள இயலாமையை மதுவிடம் விளக்குகிறார். நாவலின் இரண்டாம் பகுதியில் வரும் கண்ணன் இந்த நாவலின் மிக புத்துணர்ச்சி மிக்க கதாபாத்திரம்.பன்னீர் மனம் , பளிச் சிரிப்பு , திடீரென்று காணாமல் போவது , திடீரென்று அவதரிப்பது என மிக சிறப்பான கதாபாத்திரம்.மதுவின் தந்தை பிரேமேந்திரனின் இரு சக்கர வாகனத்தை நான்கு சக்கர வாகனமாக மாற்றும் பொறுப்பை ஏற்கிறான் மெக்கானிக் கண்ணன்.பல நாள் கழித்து எல்லோரும் அந்த வண்டியை பற்றியே மறந்துவிடும் நிலையில் கண்ணன் திடீரென்று வண்டியுடன் அவதரிக்கிறான்.கார்த்திக் , பேராசிரியர் மதுசூதனன்,கண்ணன் , மது இவர்களே இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள்.இவர்களை தவிர்த்து இந்த நாவலின் மிக அற்புதமான கதாபாத்திரம் மதுவின் தந்தை பிரேமேந்திரன்.கார்த்திக் உண்மையை எப்போதும் அறிய விரும்புவதில்லை.மதுசூதனன் கையறு நிலையில் செய்வதறியாமல் தவிக்கிறார்.நாவலில் மது மிக எளிதாக ஆரோக்கியமாக உரையாடும் இடங்களெல்லாம் கண்ணனுடன் உரையாடும் இடங்கள் தான்.அவள் தடுமாறும் போது அவள் சொல்ல விரும்புவதை அவன் சொல்கிறான்.இந்த நான்கு கதாபாத்திரங்களையும் இரண்டு பகுதிகளாக பிரித்தால் கார்த்திக் ,மதுசூதனன் ஒருபுறமும், மதுவும் கண்ணனும் மறுபுறம் வருகிறார்கள்.மது இந்த நான்கு கதாபாத்திரங்கள் ஊடாக பயணம் செய்கிறாள்.ஒரு கையறு நிலையில் நாம் மேலும் நிதானமாக கவனமாக நம்மால் செய்ய முடிந்த செயல்களை செய்வது மிகவும் முக்கியம் என்று மது மதுசூதனனிடம் சொல்கிறாள்.அது அவள் குறிப்பாக அவரிடம் தான் சொல்கிறாள் என்றில்லை.இந்த வாழ்க்கை அபத்தமானது தான்.பல கேள்விகளுக்கு நமக்கு விடையில்லை தான்.பலருக்கும் போலியோ தடுப்பு மருந்து தரப்படவில்லை என்றாலும் அவர்கள் போலியோவால் பாதிக்கப்படுவதில்லை.ஆனால் மது பாதிக்கப்படுகிறாள்.இதற்கான மருத்துவ விளக்கத்தை மருத்துவர் ஆபிரகாம் அளிக்கிறார்.அது ஒரு தற்செயல் விளைவே என்கிறது மருத்துவம்.தற்செயலை கடவுளாகவும் கொள்ளலாம் , அபத்தமாகவும் கொள்ளலாம்.நடைமுறையில் ஏற்படும் ஒரு பிரச்சனைக்கு அபத்தத்தையோ, கடவுளையோ அல்லது நமக்கு அப்பாற்பட்ட ஒரு விளக்கத்தை அளித்து தப்பித்து கொள்வது ஒரு எளிய உக்தி.கார்த்திக்கும் மதுசூதனனும் அதை தேர்கிறார்கள்.பிரேமேந்திரன் தனது மகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்க மறந்துவிட்டதால் குற்றவுணர்வு கொள்கிறார்.மதுவின் அண்னையும்.அதுதான் அவர்களின் உறவையை தீர்மானிக்கிறது.போலியோ தடுப்பு மருந்து தரப்படாதது கூட பெரிய விஷயம் இல்லை.ஆனால் அதன் பின் போலியோ எதனால் வருகிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்காமல் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்.கடைசிவரை தன்னுடைய மகளின் கால்கள் Are not dead but deaf என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை.மது மதுசூதனனிடம் சொல்லும் வாக்கியம் ஒரு வகையில் அவள் தன் தந்தைக்கு சொல்வது.தன் போலியோவிற்கான காரணம் கடவுள் என விளக்கம் தருகிறார் ஆபிரகாம்.செய்வினையாக கூட இருக்கலாம் என்கிறான் கார்த்திக்.உங்கள் பெற்றோரே காரணம் என்கிறான் கண்ணன்.அதுதான் யதார்த்த பதில்.அதை ஏற்பதன் மூலமாக நாம் செயல் புரிபவர்களாக மாற முடியும்..ஒருவர் கையறு நிலையில், வீழ்ச்சியில் தோல்வியில் அவமானத்தில் மரணத்தின் படுக்கையில் இருக்கும் நிலையில் அவரை சுற்றி இருப்பவர்கள் பாசாங்கு இல்லாமல் பாவனை இல்லாமல் அவர் மீது அக்கறை கொள்வதை பற்றி யதாரத்த தளத்தில் நின்று கால்கள் நாவல் தீவிரமாக பேசுகிறது.The only Hope in a Hopeless state is to act rationally.


நாவலின் மற்றொரு தளம் மது கண்ணன் கொண்டுவந்து தரும் நான்கு கால் வண்டியை கற்றுக்கொண்டு பயிற்சி உரிமம் பெற்று பின்னர் ஒட்டுநர் உரிமம் பெறும் சித்திரம்.அந்த உரிமம் அவளுக்கு ஒரு அடையாளம்.அவளுக்கான அடையாளம்.நிலப்பிரபுத்துவம் முடிந்து தொழில்மய உலகில் தனிமனிதர்கள் உருவானார்கள்.அப்போது அவர்களுக்கான விழுமியங்களும் உருவானது.அப்படி இந்த தொழில்மய உலகின் பெண்ணாக மாறுகிறாள் மது.அதன் முதல் அடையாளம் ஒட்டுநர் உரிமம்.அவள் யாரையும் சார்ந்திருக்க தேவையில்லை.அவள் வாழ்க்கையை அவள் வாழப்போகிறாள்.அவளது கால்கள் அதை நோக்கி பயணிக்க போகிறது.இது நாவல் பேசும் மற்றொரு தளம்.கண்ணன் ஒரு முறை மதுவை சந்திக்க வருகையில் மது புட்டு சாப்பிட்டுகொண்டிருக்கிறாள்.If Music be the food of love then play on என்கிறான்.மது புட்டை வாயில் வைத்தவாறு ஆச்சரியத்தோடு பார்க்கிறாள்.யாரை லவ் பண்ணுறீங்க என்று கேட்கிறாள்.யாரையும் இல்லை.நீ உணவு அருந்திக்கொண்டிருப்பதை பார்த்த போது தோன்றியது என்கிறான்.இப்படி உங்களுக்கு ஏதாவது தோனிக்கிட்டே இருக்குமா என்று அவள் கேட்பதற்கு ஆம் தனக்கு ஒரு சம்பவமோ சொல்லோ தோன்றுவதில்லை.மாறாக ஒரு படித்த வாக்கியமே தோன்றுகிறது என்கிறான்.எனக்கு கண்ணனின் கதாபாத்திரத்தை வாசிக்கும் போது ஆர்.பி.ராஜநாயஹம் தான் நினைவுக்கு வருகிறார்.ஒரு விஷயத்தை அவரை பேச சொன்னால் அநேகமாக அதனோடு தொடர்புடைய எல்லா நாவல், திரைப்பட வாக்கியங்களை சொல்லி விடுவார் என்று தோன்றுகிறது!நாவலில் பல இடங்களில் தமாஷ் , பிரேக்கிட்டாள் போன்ற வார்த்தைகள் வருகிறது.சாதாரணமாக இப்படிப்பட்ட வார்த்தைகளை நாவலில் பயண்படுத்தபடுவதை நான் பாரத்ததில்லை.அபிலாஷ் அப்படி செய்ய வேண்டும் என்று தான் செய்திருக்கிறார் என்று தெரிகிறது.வைத்தியர் மதுவின் திருமணத்திற்காக ஒருவனை பற்றி பிரேமேந்திரனிடம் விளக்குகிறார்.பின்னர் வைத்தியரிடம் மது அவனை பற்றி விசாரிக்கிறாள்.மாப்பிள்ளை எப்படி இருப்பார் வைத்தியரே என்று கேட்கிறாள்.அதற்கு வைத்தியர் நீ நடிகர் ஜெயராம பாத்திருக்கியா அவரை மாதிரியே இருப்பார் என்கிறார்.அப்படியென்றால் வேண்டாம் வைத்தியரே என்கிறாள்.எதற்கு என்று வைத்தியர் தீவிர தொனியில் கேட்க எனக்கு ஜெயராமை பிடிக்காது என்கிறாள்.இப்படி நாவலில் உரையாடல் இடங்கள் பெரும்பாலும் சுவாரசியமாக இருக்கிறது.மது அடிக்கடி விபத்துக்குள்ளாகி வீட்டில் முடங்கி கிடப்பதால் நாவல் அந்த சாலையை பற்றியும் அந்த சாலை வழியாக குளத்திற்கும் கோயிலுக்கு செல்பவர்களை பற்றியுமான சித்திரத்தை அளித்தபடியே இருக்கிறது.ஒரு தொடர் நிகழ்வு போல இது மறுபடி மறுபடி நாவலில் நிகழ்கிறது.ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கை நிகழ்வுகளை பேசும் போது மலம் கழிப்பதும் , சிறுநீர் கழிப்பதும் முக்கிய நிகழ்வுகள் தான்.போலியோவால் பாதிக்கப்பட்ட மது கழிப்பறையில் தினமும் கொள்ளும் பெரும் அவஸ்தை நாவலில் முக்கியமாக ஆவணப்படுத்தப்படுகிறது.டால்ஸ்டாய் நாவலில் வரும் கதாபாத்திரம் போல மது இயல்பான வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை தான் என்னும் முதிர்ச்சியை எல்லாம் அடைவதில்லை.ஏனேனில் கண்ணன் சொல்வது போல அவள் டால்ஸ்டாயின் கதாபாத்திரம் அல்ல.அவள் அடைய விரும்புவது தன்னை சுற்றிய நண்பர்கள் போல அவளும் யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க விரும்புகிறாள்.தனக்கான அடையாளம்.இந்த நாவலில் பக்கங்களுக்கு பின் அவளது நண்பர்களின் எல்லா பிரச்சனைகளும் அவளுக்கும் இருக்கும்.அதை அவள் சற்று தர்க்க ரீதியாக சந்திக்கலாம்.சந்திக்காமலும் போகலாம்.ஆனால் சந்திக்க போவது அவள் தான்.அவளுக்குகாக வேறொருவர் இல்லை.அந்த Transistion தான் நாவலின் முக்கிய நிகழ்வாக நான் கருதுகிறேன்.நீல நிற சுடிதார் அனிந்த பெண் வாகன இரைச்சல்களுக்கு மத்தியில் இரு சக்கர வாகனத்தில் அமரந்திருக்கிறாள்.இந்த இரைச்சல்களுக்கு மத்தியில் அவளும் அவளது வாகனத்தை செலுத்துவாள்.வேறு யாரும் அவளுக்காக செலுத்தவேண்டியதில்லை.  
Share This

1 comment :

  1. சர்வோத்தமனின் சில கமெண்டுகளை படித்திருக்கின்றேன். உங்கள் கருத்தோடு தன் கருத்தை மோதுவதற்கு பெரிது பெரிதாக கமெண்ட் எழுதும் சிலரைப் போல் இல்லாமல் சற்று கவனித்து படித்து கமெண்ட் செய்திருந்தார்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates