Monday 9 September 2013

நமக்கு வேறு போக்கிடம் ஏது?



உயிர்மையின் 11ஆம் ஆண்டை நிறைவு செய்கிற இம்மாத இதழை பார்க்கையில் கடந்த சில ஆண்டுகளில் பங்களித்த எழுத்தாளர்கள் கணிசமாய் மாறி உள்ளது தான் பளிச்சென்று கண்ணில் படுகிறது. மனுஷ்யபுத்திரன் அதன் அத்தனை சாதக பாதகங்களையும் அறிந்து தான் நிறைய புதியவர்களை அனுமதிக்கிறார். சட்டென்று ஒரு புதிய வெளிச்சம் பாய்ந்தது போல் இருக்கிறது. 


ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே இது குறித்து மனுஷ்யபுத்திரன் பேசிக் கொண்டிருந்தார். பத்திரிகை மாற்றமில்லாமல் ஒரே மாதிரியான கட்டுரைகளை தாங்கி வருகிறது என அடிக்கடி கவலை தெரிவிப்பார். ஆனால் திட்டமிட்டு உடனடி மாற்றங்களை செயல்படுத்துவது அவர் பாணி அல்ல. காலத்தின் காற்றடிக்கும் திசையை கவனித்துக் கொண்டே இருப்பார். அதன் போக்கில் தன்னையும் பத்திரிகையையும் நிகழ அனுமதிப்பார். நான் சில வாரங்கள் மட்டுமே உயிர்மையில் வேலை பார்த்தேன். அப்போது என்னுடைய பாணியில் அவரிடம் சில திட்டங்களை கூறி விவாதிப்பேன். அப்போது அவர் திரும்ப திரும்ப சொல்வது “திட்டங்கள் இட்டு நடைமுறைப்படுத்தும் பாணி தோல்வி அடைவதை பல முறை பார்த்திருக்கிறேன். மாற்றம் அதன் போக்கில் நடக்கும்” என்பது.
இம்மாத உயிர்மையை பார்க்கையில் பல புதியவர்களின் வருகையும் எழுத்தின் வீச்சும் இந்த மாற்றம் நம் கண் முன்னே நாமறியாமலே நிகழ்ந்திருப்பதை பார்க்கிறேன். ஒரு காலத்தில் காலாதிதன், சாகித்யன் போன்ற பெயர்கள் இருந்த இடத்தில் இப்போது டான் அசோக் போன்ற ஆட்கள் எல்லாம் எழுதுவது சுவாரஸ்யமான மாற்றம். இந்த டான் அசோக் தெளிவாக நேரடியாக அழகான நக்கலுடன் எழுதுகிறார். என்னையும் தற்போது எழுதி வரும் பலரையும் போல் அவரும் இணையத்தில் எழுதி பழகி பத்திரிகைக்கு வருகிறவர் தான். இவர்களால் நம் உரைநடையில் ஒரு கணிசமான மாற்றம் சமீப காலத்தில் நடந்திருக்கிறது. தொண்ணூறுகளில் தோன்றி தமிழை பாடாய் படுத்தின செயப்பாட்டு வினை வியாதி வெகுவாக மட்டுப்பட்டிருக்கிறது. “அப்படி செய்யப்படுவதாய் நினைக்கப்படுவதாய் சொல்லப்படுகிறது” என்று கொல்லுகிறவர்கள் வாய்க்கால் வரப்புகளில் ஏர் சாய்த்து ஓய்வெடுக்க போய் விட்டார்கள். நேரடியான சரளமான கொஞ்சம் கொச்சையான நடை ஒன்று தோன்றிக் கொண்டிருக்கிறது. இவர்கள் எதையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லி விவாதிக்க தூண்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் எழுதிப் பழகியதன் விளைவு இது.
உயிர்மையை பற்றி நினைவை கிளறுகிறவர்கள் ஏதாவது ஒரு ரெண்டு மூன்று வருட காலத்தை குறிப்பிட்டு அப்போதெல்லாம் மிக நன்றாக இருக்கும் என கூறுவார்கள். ஆரம்பித்த புதிதில் ஒரு பெரும் கும்பலாக சிறந்த எழுத்தாளர்கள் உயிர்மையில் எழுதினார்கள். உயிரோசையில் எழுத கூட சுகுமாரன், தமிழவன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்கள் முனைந்தது மனுஷ்யபுத்திரனிடம் இருந்த அணுக்கமும் நம்பிக்கையும் காரணமாக தான். அதன் பிறகு நிறைய புதிய எழுத்தாளர்களை உயிர்மை வெளிக்கொணர்ந்ததையும் அறிவோம். இவர்களில் யார் எழுதின கட்டம் நன்றாக இருந்தது என சொல்ல தெரியவில்லை. ஆனால் புதிய சிறந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது குறித்த சில கேள்விகள் தோன்றுகின்றன.
ஹிந்து போன்ற மூன்று ரூபாய் ஆங்கில இதழ்களில் சிலவேளை தீவிர சமூக இலக்கிய இதழ்களில் வருவதை விட அருமையான பலதரப்பட்ட துறை சார்ந்த ஆட்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் படிக்க கிடைக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் கலவரம் நடந்த போது அங்கு வங்கதேசத்தில் இருந்து அதிக இஸ்லாமிய குடியேற்றம் நடந்ததால் சிக்கல் ஏற்படவில்லை, கடந்த இருபது வருடங்களில் இஸ்லாமிய மக்கள் தொகை குறையவே செய்துள்ளது என ஒரு புள்ளியியல் நிபுணர் அருமையான பதிவொன்று ஹிந்து நடுப்பக்கத்தில் எழுதினார். அவர் எழுத்தாளர் அல்ல; வேறு வேலை செய்பவர். ஆய்வாளர். ஒருவேளை இந்த பக்கமே முன்பு ஒதுங்காதவராக இருக்கலாம். ஆனால் பலரும் ஒரு பிரச்சனையை வழமையான கோணங்களில் அணுக ஒருவர் எங்கிருந்தோ வந்து புதிய கோணம் ஒன்றை அளிக்கிறார் – இது போன்ற ஒன்று தமிழ் இதழியலில் நடக்காது. இங்கே எழுதுபவர்கள் தான் தொடர்ந்து எழுத வேண்டும். எழுத வேண்டிய திறனும் நுணுக்கமும் புத்தி கூர்மையான ஆட்களும் தமிழில் இன்னும் நிறைய பேர் வெளியே இருக்கிறார்கள். அதாவது அவர்கள் இங்குள்ள பொருளாதார பிரச்சனைகள், மக்களை சென்றடைவதில் உள்ள தடைகள், மற்றும் எழுத்துசார் சோம்பலாலும் தன்னம்பிக்கை இன்மையாலும் தமிழில் எழுத முனைவதில்லை. இது நமக்கு ஒரு பெரும் நஷ்டம்.
நான் உயிரோசை இணையத்துக்காக ஒரே ஒரு மாதம் வேலை பார்த்த போது பத்திரிகையில் ஆட்களை எழுத வைப்பது எவ்வளவு சிரமம் என உணர்ந்தேன். எனக்கு பிடித்த பிளாகர்களை எழுத கேட்பேன். அவர்களுக்கு தீவிர இதழில் எழுதும் தயக்கம். அது பெரிய சாதிக்காரங்க நடக்கிற தெரு, அங்க நாங்க வர மாட்டோம் என்பது போல் தயங்குவார்கள். என்னுடைய வாசக நண்பர்களை எழுத கேட்பேன். என் நண்பர்களையும் தொந்தரவு பண்ணினேன். அப்படித் தான் கார்த்திக் முத்துவல்லி என்பவர் புகைப்பட கலை பற்றி ஒரு நல்ல தொடர் எழுதினார். ஆனால் நான் உயிர்மையில் வேலை செய்வதை உடல் நலமின்மை காரணமாய் நிறுத்த நேர்ந்ததும் அவரும் எழுதுவதை நிறுத்தினார். கார்த்திக் எழுதின கட்டுரைகள் தமிழில் தீவிர இதழ் ஒன்றில் புகைப்பட கலை பற்றி எழுதப்பட்ட சிறந்த அறிமுகக் கட்டுரைகள் என நினைக்கிறேன். முதல் கட்டுரைகளாகவும் இருக்கலாம். தொடர்ந்திருந்தால் ஒரு நல்ல புத்தகமாகவும் வந்திருக்கும். இன்னொரு நண்பரான விஜயராகவனும் அப்போது உயிரோசையில் எழுதினார். அதுவும் சினிமா பற்றின முக்கியமான கட்டுரை. அவரும் அதற்கு பின் அதிகம் எழுதவில்லை. இந்த சிரமங்களை பார்த்த பின் தான் மனுஷ்யபுத்திரன் போன்ற தீவிர இதழ் ஆசிரியர்கள் இத்தனைக் காலமாய் பண்ணி வந்த வேலையின் மகத்துவம் புரிந்தது.
வழக்கமாய் எழுதுகிறவர்களை வைத்து கவிதை, கதை, இடதுசாரி அரசியல் கட்டுரைகள், மூத்த படைப்பாளிகளை போற்றி வரும் சில விமர்சனங்கள் என இதழ் நடத்துவது எளிது. நிபுணர்களை, புதிய சிந்தனையாளர்களை எழுத்துக்குள் கொண்டு வந்து பிரசுரிப்பது மிக மிக சிரமம். ஆனால் அது தான் மிக முக்கிய பணி. தமிழில் நாம் உரைநடை எழுத்தை வளமாக்க அதைத் தான் செய்ய வேண்டும். மனுஷ்யபுத்திரன் அப்படித் தான் தியோடர் பாஸ்கரன், பாரதிமணி போன்றோரை ரோட்டில் போகிற போக்கில் கையை பிடித்து இழுத்து வாசலில் உட்கார வைத்த கதையாக தன் இதழில் எழுத வைத்தார். மனுஷ் மட்டுமல்ல இன்னும் பலர் அப்பணியை தமிழில் செய்திருக்கிறார்கள். ஜெயமோகன் தனது சொல்புதிதில் நிறைய புதியவர்களை அறிமுகப்படுத்தினார். அதாவது சும்மா அதே கவிஞர், கதையாளர் என்று இல்லாமல் வெவ்வேறு துறை சார்ந்து. எழுதாதவர்களை எழுத வைப்பது தான் முக்கியமான அவசியமான பத்திரிகை பணி.
Open Magazine, Tehelka போன்ற இதழ்களில் ஒரு மாதத்துக்கான கட்டுரைகள் எழுத்தாளர்களுடன் கூடி உட்கார்ந்து விவாதித்து எழுத வைக்கிறார்கள். கள ஆய்வு செய்கிறார்கள். அதற்காக பணம் கொடுக்கிறார்கள். அதனால் தான் அருமையான ஆழமான கூர்மையான அரசியல் பத்திகள் ஆங்கிலத்தில் எழுதப்படுகின்றன. தமிழ் பத்திரிகையில் இப்போது தான் மெல்ல மெல்ல இந்த பாணியை அந்திமழை போன்ற பத்திரிகைகள் பண்ண ஆரம்பித்துள்ளன. பிற பத்திரிகைகளுக்கு பொருளாதார நெருக்கடிகள் உள்ளன. இந்திய டுடே மொழிபெயர்த்து போட வேண்டிய ஒரு கட்டாயத்தில் சிக்கி தவிக்கிறது. தமிழ் ஆழி கூட இந்த மொழியாக்க கட்டுரை அபத்தத்தில் கொஞ்சம் மாட்டி உள்ளதை அதன் ஆசிரியரிடம் ஒருமுறை நேரடியாகவே விளக்கினேன். மோடி பற்றி ஒரு குஜராத்தி பத்தியாளர் எழுதுகிற வழக்கமான கட்டுரை அல்ல நமக்கு தேவை, அசலாக தமிழில் எழுதப்படுகிற பதிவுகள் தாம் – ஆங்கிலத்தனமான தமிழை நாம் வாசகர்கள் படிக்க விரும்ப மாட்டார்கள். ஜுனூன் தமிழே பல வாசகர்களை மீண்டும் விகடனை நோக்கி விரட்டி விடும். ஆனால் தமிழில் அப்படி நல்ல அரசியல் பத்தி எழுதுபவர்களும் குறைவு தான். ஆனால் நாம் எங்கிருந்தாவது ஆரம்பிக்க வேண்டும். மெட்ராஸ் கபே பற்றி ஏதோ மந்தீப் சிங் எழுதியதை மொழியாக்கி ஏன் தமிழில் தர வேண்டும்? அதைப் பேசத் தான் நாம் இருக்கிறோமே!
தமிழ் தீவிர இதழ்களில் ஏன் புதியவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டேன் என்கிறார்கள் என்றும், ஏன் நல்ல கட்டுரைகள், கதைகள் பிரசுரமாவதில்லை என்றும் இன்றும் புகார் கூறுபவர்களுக்கு இதுவே என் பதில். தமிழில் எழுதுபவர்களின் வட்டம், தீவிரமாக புத்திசாலித்தனமாக திறமையாக படைப்பூக்கத்துடன் எழுதுபவர்களின் வட்டம் மிக மிக சிறியது. அதை விரிவுபடுத்த வேண்டும்.
பொதுவாக நல்ல எழுத்து பிரசுரமாக வேண்டிய இடம் தவறான ஆட்களால் சுரண்டலுக்கு உள்ளாகிறது. இதை மீட்பதற்கும் மேற்சொன்னது தான் சிறந்த வழி. நாம் தான் புதிய நல்ல எழுத்தாளனை நோக்கி செல்ல வேண்டி இருக்கிறது. கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு பின்னூட்டம் மூலம் ஒரு புதிய எழுத்தாளனாகும் அறிவுத்திறன் கொண்ட ஒருவரை கண்டுகொண்டேன். ஜெ.பி. ராஜேந்திரன். இங்கிலாந்தில் உளவியலாளராக இருக்கிறார். தமிழில் உள்ள தீவிர இலக்கிய சூழலை உற்று கவனிக்கிறவர். அவர் இந்தியாவில் ஏன் எதிர்க்கலாசார எழுத்து அவசியமில்லை என்று எழுதிய நீண்ட பின்னூட்டம் ஆழமான கூர்மையான சுயமான புதிதான ஒன்றாக இருந்தது. ஆனால் அவரைப் போன்ற பலரும் தமிழகத்தில் எழுத்துத் துறைக்குள் வர மாட்டார்கள். இங்கு பணமில்லாமல் பிரசுர, வெகுமக்க: கவன வாய்ப்பில்லாமல் ஓரமாய் ஓடையில் நின்று துணி வெளுக்கும் பணியை செய்ய துணிய மாட்டார்கள். அது அவர்கள் தவறும் அல்ல. உலகில் வேறெங்கும் எழுத்தாளன் ஓசியில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே வேலை செய்ய துணிவதில்லை. இப்படியான மோசமான சூழல் இருப்பதால் பல நல்ல மாணிக்கங்களை எப்படி தவற விடுகிறோம் என குறிப்பிடவே இதை கூறினேன். தமிழ் எழுத்தாளன் ஒரு பெல்ட் வெடிகுண்டு தீவிரவாதி. அவன் தன்னையே சிதறடிக்க துணியலாம். ஆனால் பிற திறமையாளர்கள் அப்படி செய்ய துணிய அவசியமில்லை. நான் இங்கு சிறுபத்திரிகை பற்றி பேசவில்லை. நடுநிலை இதழ்களில் மேலும் பல நல்ல எழுத்தாளர்களை கண்டுபிடிப்பது பற்றி பேசுகிறேன்.
நாம் முதலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பு என்பதை கொள்கையாகவே கொண்டு செயல்பட வேண்டும். ஓப்பன், தெஹல்காவில் போல் பத்தி எழுதுபவர்களுக்கு நல்ல வருமானமும் அமைக்க வேண்டும். ஆனால் இங்கு நடப்பதென்ன? விகடன் போன்ற இதழ்களில் ஆசிரியர்கள் சர்வாதிகாரிகள் போல் தம் அதிகாரத்துக்கு இணங்குகிறவர்களை மட்டும் எழுத வைக்கிறார்கள். பெரும்பாலான பக்கங்களை நடிகை பேட்டி, புகைப்படங்கள், ஏன் குறட்டை விடுகிறோம் போன்ற அறிவுஜீவி மருத்துவ கட்டுரைகள் மற்றும் துணுக்குகள் மூலம் நிரப்புகிறார்கள். “சின்ன வயசில் நான் சைக்கிள் தள்ளிக் கொண்டு இளையராஜாவின் பாட்டு ஒன்றை முணுமுணுத்தபடி போன போது நாய் வள்வள் என்று குரைத்தது, ” என்பது மாதிரியான சுய அனுபவ பத்திகளை பிரசுரிக்கிறார்கள். இவர்களுக்கு எந்த எழுத்தாளனின் பங்களிப்பும் இல்லாமல் தம்மால் துணுக்கு, குஜால் படங்கள் கொண்டே பத்திரிகை நடத்த முடியும் என்ற இறுமாப்பு உள்ளது. ஒரு காலத்தில் பல நல்ல வெகுஜன புனைகதையாளர்களை வளர்த்து விட்ட மரபு கொண்ட இது போன்ற பத்திரிகைகள் இன்று வெறும் காப்பி பேஸ்ட் வேலை பணியை செய்வதே லட்சியம் எனும் நிலையில் இருக்கின்றன.
மத்திய அரசு நிதியில் நடக்கும் தமிழாராய்ச்சி நிறுவனம் போய் பாருங்கள். அங்கு ஆயிரக்கணக்கான சம்பளம் வாங்கி சோம்பி உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் கடந்த பல வருடங்களில் செய்த மகத்தான பணி சிலப்பதிகாரம் போன்ற நூல்களுக்கு மறுபதிப்பு கொண்டு வந்தது தான். யுஜிஸி லட்சக்கணக்கான பணத்தை நிதியாக ஆய்வுக்கு வழங்குகிறது. ஒரு எழுத்தாளனுக்கு இந்த நிதியை யுஜிஸி கொடுக்காது. நிரந்தர பணியில் இருக்கும் பேராசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஒரு சமூகத்தின் ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் என்பவர்கள் நிரந்த அரசுப்பணியில் உள்ள பேராசிரியர்கள் மட்டுமே என யுஜிஸி எப்படி முடிவு செய்கிறது என தெரியவில்லை. ஆனால் இதை பயன்படுத்தும் பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கும் ஆய்வுத் தலைப்பு “சங்க காலத்தில் அறிவியல்” போன்று இருக்கும்.
இப்படித் தான் எழுத்தாளனுக்கும், பண்பாட்டு வளர்ச்சிக்கும் போக வேண்டிய பணம் சாக்கடைக்குள் பாய்கிறது. இந்த சூழலில் நம்மால் சில ஆயிரம் பேருக்கு நடத்தப்படும் காலச்சுவடு, அமிர்தா, உயிர்மை போன்ற தீவிர பத்திரிகைகளை ஆதரிப்பதை மட்டும் தான் பண்ண முடியும். வேறு என்ன போக்கிடம் நமக்கு?
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates