Tuesday 13 July 2010

அபரன்: தீமையின் இரட்டை முகங்கள்




தொண்ணூறுகள் வரையிலான மலையாள சினிமாவின் பொற்கால படைப்பாளிகளில் தீமையை நுட்பமாக ஆராயும் கதைகளை சொன்னவர் பி.பத்மராஜன். அக்காலத்து மேற்கத்திய இலக்கியம் மற்றும் உலக சினிமா மலையாள பொற்கால படங்களை தீவிரமாய் பாதித்துள்ளது ஒரு சுவாரஸ்யமான விசயம். தஸ்தாவஸ்கியின் இடியட் நாவலை உல்டாவாக்கி எம்.டி வாசுதேவன் நாயர் ”நகக்‌ஷதங்கள்” திரைக்கதையை எழுதினார். காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் பற்றிய குறிப்பு வரும் ஒரே இந்திய படம் பி.பத்மராஜனின் ”மூநாம்பக்கம்” தான்.
அதில் கடலில் மூழ்கிப் போன காதலனை எண்ணி மறுகும் பெண்ணை தேற்ற மார்க்வெஸின் The Story of a Ship-wrecked Sailor நாவலை நினைவுறுத்துகிறார் ஒரு தாத்தா. பத்மராஜனின் ”அபரன்” (மற்றவன்) காப்காவின் ”உருமாற்றம்” நாவலின் தீவிரமான பாதிப்பால் உருவான படம். ஜெயராம், ஷோபனா, மது ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்த இப்படத்தின் நாயகனான விஸ்வநாதன் காப்காவின் கிரகர் சாம்சாவைப் போன்று சிறுக சிறுக தன் சமூக அடையாளத்தை, ஆதார இருப்பை, இழக்கிறான். அல்லது காலம் அதை அவனிடம் இருந்து பறித்து விடுகிறது.

விஸ்வநாதன் ஒரு மத்தியதர நாயர் இளைஞன். எண்பதுகளின் திரைப்பட நாயகர்களைப் போல் அவனது பிரதான பிரச்சனை வேலை இல்லாதது. வேலை கிடைக்காமை விஸ்வநாதனின் தனிப்பட்ட பிரச்சனையாகவே படத்தில் ஆரம்பத்தில் இருந்தே பிரதானப்படுத்தப் படுகிறது. வேலை இல்லாமையால் குடும்பம் பாதிக்கப்படுவதற்கு மாறாக குடும்பம் தரும் நெருக்கடியால் அவனது தனிப்பட்ட இருப்பு பாதிக்கப்படுகிறது. குடும்பத்தின் மீது பாசப்பிணைப்பு கொண்டவனாக அவன் காட்டப்பட்டாலும் வேலை விஸ்வநாதனின் தனிப்பட்ட அவசியமாகவே உள்ளது. இந்த தனிநபர் அழுத்தம் கவனிக்கப்பட வேண்டியது. பத்மராஜனின் திரைப்பரப்பு எப்போதும் அழுத்தமான குடும்பப் பிணைப்புகள் கொண்ட ஆனால் தனிநபரான நாயகனால் ஆக்கிரமிக்கப்படுவது. நாயகன் தனிமையில் சிந்திப்பது, எழுதுவது போன்ற காட்சிகள் இவரது படங்களில் பிரதானமாக இருக்கும். மேற்கத்திய கலாச்சாரத்தின் தனிநபர் படிமத்தை கேரள மரபார்ந்த மனதில் நிறுவும் நோக்கத்தில் பத்மராஜன் அடர்த்தியான குடும்பக் காட்சிகளை தனது படங்களில் பயன்படுத்துவதாக சொல்லலாம்ம்

விஸ்வநாதன் நாகரிக தோற்றமும் செயல்பாடுகளும் கொண்ட ஒரு உத்தம மத்திய வர்க்க இளைஞன். மென்மையான குரலில் ஆங்கிலம் கலந்து பேசுபவன். கூச்சமான உடல் மொழியாளன். வன்முறையையும் அவமானங்களையும் அதிக எதிர்ப்பின்றி ஏற்பான். விஸ்வநாதனின் இரட்டைப்பிறவி போன்று தோற்ற ஒருமை கொண்ட ஒரு ரவுடி கொச்சினில் இருக்கிறான். அவன் பெயர் உத்தமன். வேலை தேடி கொச்சினுக்கு வரும் விஸ்வநாதன் அடையாளக் குழப்பம் காரணமாக உத்தமன் செய்த தவறுகளுக்காக கடுமையான தண்டனைகளை அனுபவிக்கிறான். அவனது தங்கையின் திருமணம் ரத்தாகிறது. பொதுமக்களிடம் அடிவாங்கி, காவலர்களால் கைது செய்யப்படுகிறான். அவனது காதலி உத்தமனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகிறாள். சவப்பெட்டியில் கடைசி ஆணியாக உத்தமனால் அவனது வேலை பறிபோகிறது. நிர்கதியான விஸ்வநாதன் ஒரு முடிவெடுக்கிறான். தன் அடையாளத்தை அநியாயமாக கவர்ந்து விட்ட உத்தமனின் அடையாளத்தை தான் வரித்துக் கொள்வதே அது.

ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகத் தான் இது ஆரம்பிக்கிறது. ஆனால் மெல்ல மெல்ல அவன் உத்தமனின் ஆளுமையை ஒவ்வொரு பொத்தானாக விரும்பி அணிந்து கொள்ள தொடங்குகிறான். ஜார்ஜ் எனும் தனது இன்ஸ்பெக்டர் நண்பனின் துணையுடன் உத்தமன் பற்றிய பின்னணின் தகவல்களை சேகரிக்கிறான். படத்தின் இறுதி வரை உத்தமன் காண்பிக்கப்படுவதே இல்லை. பொதுமக்களும், போலீசும் அவனைக் குறித்து அவதானிப்பதைக் கொண்டு ஒரு மனச்சித்திரமே நமக்குள் உருவாகிறது. படத்தில் பாதிவரை உத்தமன் ஒரு கொலைகாரனாக, கற்பழிப்பாளனாக, பாலியல் தரகனாக விஸ்வநாதனின் மத்தியதர வாழ்க்கை பிம்பத்துக்கு எதிர்நிலை பாத்திரமாக இருக்கிறான். உத்தமன் ஒரு கிறித்துமஸ் இரவில் தன் அம்மாவில் ஒரு அனாதை ஆஸ்ரமத்தில் ஏசுவின் சிலைக்கு கீழ் கைவிடப்பட்டவன், சீர்திருத்தப்பள்ளியில் தனியனாக வளர்ந்து, தப்பித்து பின்னர் பலமுறை சிறைக்கு சென்று வந்தவன், தலைமறைவு வாழ்க்கை வாழ்பவன், சிவப்பு, கறுப்பு போன்ற அடர்த்தியான நிறங்கள் கொண்ட சட்டைகளை அணிய விரும்புபவன் போன்ற பல தகவல்கள் விஸ்வநாதனுக்கும், பார்வையாளனுக்கும் அவன் மீது வசீகரம் கொள்ள வைக்கின்றன. விஸ்வநாதனுடன் சேர்ந்து பார்வையாளனும் உத்தமனை தேட ஆரம்பிக்கிறான். அவன் யார் என்பதே படத்தின் பிற்பகுதியை ஆக்கிரமிக்கும் கேள்வி.

உத்தமனை கடைசி வரை இயக்குனர் காட்டாததற்கு காரணம் அவன் விஸ்வநாதனின், அல்லது நன்மையின் பக்கம் நிற்பதாய் நம்பும் ஒவ்வொருவனின், மறுபிரதிதான் என்று குறிப்புணர்த்துவதாக இருக்கலாம். உத்தமன் சார்ந்த அனுபவங்கள் காரணமாக நாயகன் தனது ஆளுமையின் ஒரு மறைக்கப்பட்ட இருண்ட பகுதியை கண்டடைகிறான். விஸ்வநாதனும் உத்தமனும் ஒருவர் தான். சமூகத்தின் இருவேறு தட்டுகளில் வெவ்வேறு சூழல்களில் தோன்றி வளர்ந்ததால் நாணயஸ்தனாகவும் ரௌடியாகவும் வெளிப்படுகிறார்கள். ஆனால் இந்திய சினிமாவின் வழக்கொழிந்த ரெட்டைப்பிறவி சூத்திரத்துக்குள் பத்மராஜன் சிக்கி விடாமல் இருப்பதற்கு காரணம் அவர் இந்த முரண்நிலை பாத்திரங்களை ஒன்றின் மேல் ஒன்றாக பின்னி வளர விடுவதே. கிட்டத்தட்ட பதியம் வைப்பது போல். களங்கமின்மையும், பாவமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் தாம் என்கிறார் பத்மராஜன்.சுண்டி விட்டால் தலை பூவாகும், பூ தலையாகும். படத்தில் விஸ்வநாதனுக்கு இதுவே நடக்கிறது. “உத்தமன்” என்ற திருடனின் பெயரில் உள்ள நகைமுரணும் இந்த உண்மையின் நிலையின்மையை சுட்டத்தான்.
தீமை தனிமனிதனுக்குள் உள்ளதா அல்லது வெளியே சமூகத்தில் இருந்து ஊற்றெடுக்கிறதா என்பது உளவியலில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் வினா. சீர்திருத்தப்பள்ளியில் உத்தமனின் வார்டனாக இருந்தவர் “அவன் ரத்தத்திலேயே குற்றம் இருந்தது” என்று ஒரு காட்சியில் சொல்கிறார். இது உண்மையா என்பது படம் எழுப்பும் ஆதார கேள்விகளில் ஒன்று. விஸ்வநாதனின் நண்பன் ஜார்ஜ் அனாதை ஆஸ்ரத்தில் உத்தமனை வளர்த்த கன்னியாஸ்திரியிடம் விசாரிக்கிறான். “நாங்கள் அவனை திருத்த எவ்வளவோ முயன்றோம். ஆனால் கர்த்தர் அவனுக்கு பாவிகளின் பாதையை தந்துள்ளார். அவனை எங்களால் மீட்க முடியவில்லை” என்கிறார் அவர். இந்த வசனம் படத்திற்கு ஒரு புதுநிறம் அளிக்கிறது. கர்த்தருக்கு முன்னர் பாவிகளும் நாணயஸ்தர்களும் சமம் என்று பொருள் கொள்ள முடிந்தாலும், இக்காட்சி சுயேச்சை எண்ணம் (freewill) குறித்து எழுப்பும் எண்ணங்கள் முக்கியமானவை. இருபதாம் நூற்றாண்டு படைப்பிலக்கியம் மற்றும் சிந்தனையில் சுயேச்சை எண்ணம் பிரதான் பாதிப்பை செலுத்தியது என்பதையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். விஸ்வநாதனுக்கு தன் அடையாளத்தை தக்க வைக்கவோ, தண்டனைகளில் இருந்து தப்பிக்கவோ மாற்றுவழிகளோ, தேர்வு உரிமையோ இருந்ததா என்று நாம் இந்த கோணத்தில் இருந்து சிந்திக்க முடியும்.

உத்தமனைப் போல ஆடையணிந்து விஸ்வநாதன் அவனது வாடிக்கையான இடங்களில் திரிகிறான். நடித்து ஏமாற்றுகிறான். ஒரு கட்டத்தில் உத்தமனுக்கு சேரவேண்டிய ஒன்றரை லட்சத்தை திருடிக் கொண்டு சென்று விடுகிறான். இக்கட்டத்தில் விஸ்வநாதனின் உடல்மொழியில் பெரும் மாற்றம் நிகழ்கிறது. கூச்சமும் தயக்கமும் விடைபெற வன்மமும் குற்றவிருப்பமும் வெளிப்படுகிறது. எப்போதும் ஒரு எச்சரிக்கை உணர்வு அவனுடன் ஒட்டிக் கொள்கிறது. பணம் கிடைத்த உடன் அவன் குடும்பத்தை, சூழலை மறந்து விடுகிறான். காதலியிடம் சென்று “இத்தனை பணத்தை நான் வாழ்நாளில் சம்பாதிப்பதை கனவு காணவே முடியாது. வா ரெண்டு பேரும் ஓடிப் போய் விடுவோம்” வற்புறுத்துகிறான். அவள் பணத்தை அவனது தங்கையின் திருமணத்துக்காக குடும்பத்திடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்துகிறாள். கொஞ்ச நேரத்தில் குடும்பத்தையே மறந்து விட்டேனே என்று அவன் தன்னையே கடிந்து கொள்கிறான். இந்த கட்டத்தில் விஸ்வநாதன் தனது மத்தியவர்க்க கௌரவம் மற்றும் குடும்ப மதிப்பீடுகள் மீதுள்ள பிடிப்பை சிறுக சிறுக இழந்து வருவதை கவனிக்க முடிகிறது. வாழ்நாள் பூரா உழைத்தாலும் அவன் ஒரு மத்தியவர்க்க பொந்து எலி தான். ஆரம்பத்தில் விஸ்வநாதன் உத்தமனை கடுமையாக வெறுத்தாலும், உத்தமனின் குற்ற வாழ்விலுள்ள சாகசமும், கட்டற்ற சுதந்திரமும் அவனுக்குள் அசூயை ஏற்படுத்தி இருக்க வேண்டும்; தனது குமாஸ்தா வாழ்வை, குடும்பச் சிறையை துச்சமாக நினைக்கத் தூண்டியிருக்க வேண்டும். விஸ்வநாதனுக்குள் நிகழும் மாற்றத்தை நுணுக்கமாக காட்டும் மற்றொரு காட்சி கிளைமாக்சில் வருகிறது. ஒன்றரை லட்சத்துடன் கிராமத்துக்கு செல்லும் விஸ்வநாதனை உத்தமனும் அவனது அடியாட்களும் துரத்துகின்றனர். அவர்களுடன் விஸ்வநாதன் என்றுமில்லாத மூர்க்கத்துடன், வீரத்துடன் மோதுகிறான். இது உத்தமனை ஆச்சரியப்படுத்தி இருக்க வேண்டும். படத்தின் ஆரம்பத்தில் ஒரு மோதல் நிகழும் போது விஸ்வநாதன் திருப்பி அடிக்கும் திராணியற்று, தன் கல்வி சான்றிதழ்களை காப்பாற்றும் முனைப்பிலேயே இருப்பான். ஆனால் இந்த மோதலின் போது சான்றிதழ்கள் கொண்ட தனது பையை அவன் கவனமின்றி தொலைத்து விடுகிறான். பணத்துடன் தப்பித்து விடுகிறான். சந்தர்பவசமாக தனது அடியாட்களாலே உத்தமன் கொல்லப்பட, அவனது பிணம் விஸ்வநாதனின் சான்றிதழ்களுடன் கைப்பற்றப்பட்டு விடுகிறது. விஸ்வநாதன் இறந்து விட்டதாக நம்பும் குடும்பத்தார் ஈமச் சடங்குகள் செய்து எரித்து விடுகின்றனர். இச்சூழலில் வீட்டுக்கு வரும் விஸ்வநாதன் தனது ”உருமாற்றம்” முழுமையடைந்து விட்டதை உணர்கிறான். அப்பாவை ரகசியமாக சந்தித்து உண்மையை விளக்குகிறான். அவர் “உன் சான்றிதழ்களை என்ன செய்ய?” என்று கேட்க, “அவற்றினால் இனி என்ன பயன். நான் தான் உத்தமன் ஆகி விட்டேனே” என்று சொல்கிறான். சமூகத்தின் விளிம்புக்கு தள்ளப்பட்டு விட்ட நிலையில் இனி மத்தியவர்க்க வாழ்வின் அத்தாட்சி பத்திரங்களான சான்றிதழ்கள் அவனுக்கு வெறும் தாள்கள் மட்டுமே.

கடைசிக் காட்சியில் விஸ்வநாதன் தனது ரெட்டைப்பிறவியின் சிதை முன் நின்று ஒரு “இருத்தலிய” சிரிப்பு சிரிக்கிறான். ”அபரன்” சுழன்றடிக்கும் காலத்தின் முன் தனிமனிதனின் தேர்வுரிமை எத்தனை வலுவானது என்ற கேள்வியை சற்று பரிகாசத்துடன் கேட்கிறது. மற்றொரு தளத்தில் குற்றம் மரபணுக்குள்ளோ, தனிநபருக்குள்ளோ உறைந்த ஒன்றல்ல என்ற அவதானிப்பையும் இப்படம் கொண்டுள்ளது. கிறித்துமஸ் இரவில் அடைக்கலமாய் கைவிரித்த ஏசுவின் சிலைக்கு கீழ் ரெண்டுநாள் குழந்தையாய் உத்தமன் கைவிடப்படும் சித்திரம் படத்தில் ஒரு படிமமாகவே உள்ளது. காலத்தின் அகண்ட கூரைக்கு கீழ் வாழ்நாள் குற்றவாளியான உத்தமன் “உத்தமனே” தான்.
Share This

3 comments :

  1. மிக அருமையான விமர்சனம் திரு. அபிலாஷ் அவர்களே
    நான் பத்மராஜன் அவர்களின் நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் ,மூணாம் பக்கம் ,சீசன் , இன்னளே
    மற்றும் சில திரைப்படங்கள் கண்டு வியந்திருக்கிறேன் . ஆனால் உங்கள் விமர்சனப் பார்வை மிக அருமை.

    ReplyDelete
  2. இந்த படத்தை பார்த்திருக்கிறேன். ஜெயராமின் முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு நடித்திருப்பார்.
    மிகவும் சாதாரணமான கதை என்றே நினைத்திருந்தேன். பிரமாதமான அலசல்.!

    ReplyDelete
  3. உல்டா என்கிற பிரயோகம் தேவையற்றது என்று நினைக்கிறேன்.வாசிப்பு ஒரு அனுபவம் என்றும் கொள்ளலாம்.பாசித்தை நோக்கி சென்றதை எப்படி பொருள் கொள்வது என்கிற குழப்பத்தில் Freewill முக்கியமானதாக கொள்ளப்பட்டது என்று நினைக்கிறேன்.நல்ல கட்டுரை.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates