Monday 19 July 2010

முத்தையா முரளிதரன்: எண்களைக் கடந்த வரலாற்று நிஜம்




2010 ஜூலை 18-அன்று துவங்கும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டு ஆட்டத்துடன் முத்தையா முரளிதரன் விடைபெறுகிறார். கடந்த பத்து ஆண்டுகளில் எந்த ஒரு கிரிக்கெட் அணியும் இப்படியான ஒரு தனிநபர் திறமையை தனது நிலைப்புக்காக நம்பி இருந்ததில்லை. இந்திய அணிக்கு டெண்டுல்கர், கும்பிளே, ஆஸ்திரேலியாவுக்கு பாண்டிங், வார்னே, மேற்கிந்திய தீவுகளுக்கு லாரா, ஆம்புரோஸ், வால்ஷ் போன்ற அதிமனிதர்கள் தொடர்ச்சியாக முன்னணியில் நின்று ஆடியுள்ள போதிலும் முத்தையா முரளிதரன் அளவுக்கு யாரும் அனாயசமாகவும் எண்ணிக்கையிலும் ஆட்டங்களை வென்று தந்ததில்லை.
தனிப்பட்ட ஒழுங்கீன பிரச்சனைகள், ஆடுகள சச்சரவுகள், அணிபிளவு அரசியல், நிர்வாக எதிர்ப்பு போன்று எந்த களங்கமமும் அற்ற ஆட்டவரலாற்றை பொறுத்த வரையில் முரளிதரனுடன் ஒப்பிடத்தக்க நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே. ஆஸ்திரேலியாவின் ஆண்டுரூ சைமண்ட்ஸை ஹர்பஜன் இனஅவதூறு செய்த போது அவரை காப்பாற்ற விசாரணைக் குழுவின் தலைமை நீதிபதி முன்பு சச்சின் பொய் சொன்னார் என்றொரு முக்கிய குற்றச்சாட்டு இன்றும் சொல்லப்படுகிறது. அஸருதீன், திராவிட் ஆகியோரின் தலைமையின் கீழ் மத்திய மட்டை வரிசையில் ஆட விருப்பமில்லாத நிலையில், அணி நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ள பட்ட போதெல்லாம் சச்சின் மிகுந்த தயக்கத்துடன் தனது ஆளுமைக்கு மாறுபட்ட முறையில் ஆடியுள்ளார். அணி நிர்வாகத்துடன் இப்படியான முரண்பாடுகள் ஏற்படும் போது சச்சின் தனது நத்தைக் கூட்டுக்குள் முடங்கி விடுவார். ஆனால் முரளிதரனிடம் இத்தகைய தன்னலக் கீற்றுகளை காண முடியாது. முரளியை அவரது அணியின் சகவீரர்களுடன் ஒப்பிடுவது மேலும் நியாயமானதாகவும் அதிக வெளிச்சம் தருவதாகவும் இருக்கும்.


நாற்பது வயதில் ஜெயசூரியாவின் ஆட்டத்திறன் பழுதடைந்த கனரக வாகனம் போல் இடையறாது கசிந்து கொண்டிருந்தது. அணியின் தலைவர், மூத்த வீரர்கள், நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் அவரது சுயேச்சையான ஓய்வை ஆவலாதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க, தொடர்ச்சியாக ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்து வரும் நிலையிலும் ஜெயசூரியா விடைபெற மறுத்தார். அவரை போற்றி, கொண்டாடிய மக்கள் தூற்றி வெறுக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தேர்வாளர்கள் அவரை அணியில் இருந்து விலக்க, ஜெயசூரியா ராஜபக்சேவை சந்தித்து பரிந்துரை வாங்க முயன்றார். பின்னர் தோல்வியின் விளிம்பில் அனைத்தையும் பணயம் வைத்து இழந்த நிலையில் ஜெயசூரியா இந்தியாவில் ஐ.பி.எல் ஆடியபடியே இலங்கையில் தேர்தலில் நின்று வென்றார். இந்த அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அடுத்து வந்த 2010 T20 உலகக் கோப்பைக்கான அணியில் இடத்தை உறுதி செய்தார். தொடர்ச்சியாக குறைவான ஓட்டங்களே எடுத்தாலும் T20 வழமைக்கு மாறாக அனைத்து ஆட்டங்களிலும் இடம் பெற்றார். இத்தொடரை வெல்லும் வாய்ப்பை இலங்கை இழந்ததற்கு ஒரு எம்.பியை எல்லா ஆட்டங்களிலும் ஆட வைப்பதற்கான கட்டாயமும் ஒரு காரணமாக அமைந்தது. இலங்கை ஒருநாள் ஆட்டவரலாற்றை புத்துருவாக்கியவர் என்றாலும் அவரது இறுதிப் பக்கங்கள் கசப்பினாலும் வெறுப்பினாலும் எழுதப்பட்டிருந்தது. இலங்கையினர் எவ்வளவு கசப்படைந்து உள்ளனர் என்றால் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஜெயசூரியாவை தூக்கி விட்டனர். நடந்து வரும் டெஸ்டோடு விடைபெறும் முரளியை சேர்த்துள்ளனர். ஜெயசூரியாவைப் போல் வேறெந்த கிரிக்கெட் நாயகனும் தனது வாரியத்திடம் இப்படியொரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியது இல்லை.

மஹிளா ஜெயவர்த்தனேவின் ஆட்டவாழ்வு கிளம்பி புகைவிட இலங்கை வாரியமும் தேர்வாளர்களும் நிறைய உந்தி தள்ள வேண்டியிருந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் அணிக்குள் கொண்டு வரப்பட்ட மஹிளா தொடர்ச்சியாக ஏமாற்றமளித்தார். அபரிதமான திறமை கொண்ட ஊதாரியான மட்டையாளராக விமர்சகர்கள் அவரை சித்தரித்தனர். துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர் அவமானப்படுத்தப்பட்டார். தனது ஆட்டவாழ்வின் பிற்பாதியில் தான், குறிப்பாக அணித்தலைவராக செயல்பட்ட போது, ஜெயவர்த்தனே விழித்துக் கொண்டு சிறப்பாக மட்டையாட ஆரம்பித்தார். மற்றொரு முன்னணி வீரரான மார்வன் அட்டப்பட்டுவின் ஆட்ட்வாழ்வின் கடைசி கட்டம் கறை படிந்ததாக இருந்தது. 2007 உலகக் கோப்பைக்காக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டும் இந்த முன்னாள் தலைவருக்கு ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்பட இல்லை. இதை தனக்கு நேர்ந்த அவமதிப்பாக கருதி அட்டப்பட்டு ஓய்வு பெற்று விலகிக் கொண்டார். இந்தியாவில் கங்குலியின் கீழ் கும்பிளே இப்படியான கடுமையான உதாசீனத்துக்கு ஆளானார். ஆனால் அவர் ஓய்வு பெறவில்லை; மேற்கிந்திய பயணத்தில் உடைந்த மோவாயுடன் பந்து வீசி தன் அணியுணர்வை, மனவலிமையை கங்குலிக்கு நிரூபித்தார். இலங்கை அணிக்கு பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு வகைகளில் பங்காற்றிய பெரும் திறமைசாலிகள் இருந்துள்ளனர். ஆனால் பதினெட்டு வருடங்களாக தன்னலமற்று, தீவிர அணியுணர்வுடன் யாரும் இப்படி நிலைத்ததில்லை; இலங்கை அணியில் மட்டுமல்ல, உலகமெங்கும், தொடர்ச்சியாக (இரண்டு இன்னிங்சிலுமாய்) சுமார் நூறு ஓவர்களை ஒவ்வொரு ஆட்டத்திலும் வீசும் சுமையை, தனிப்பட்ட வெற்றிகளைக் கொண்டு அணியின் பலவீனத்தை மறைக்கும் பொறுப்பை ஏற்றதும், நெடுங்காலம் தன்னலமற்று உழைத்து விட்டு அணி ஸ்திரத்தன்மை அடைந்த நிலையில் தனது வலிமை குன்றியதும், சுயமாக விலக முடிவு செய்ததும் முரளிதரன் ஒருவர் மட்டும் தான். இத்தகைய நீட்சியும், தன்னலமற்ற் ஈடுபாடும் சச்சினிடம் காணப்பட்டாலும் அவர் முரளி அளவுக்கு ஆட்டங்களை தனது அணிக்கு வென்று அளித்ததில்லை. டெஸ்டில் கிட்டத்தட்ட எண்ணூறு விக்கெட்டுகள், அனைத்து அணிகளுக்கு எதிராக ஒருமுறையாவது பத்து விக்கெட்டுகள் போன்று வியப்பிலாழ்த்தும் சாதனை விபரங்கள் மட்டுமல்ல, முரளியின் ஆளுமையே மிக தனித்துவமாகனதாகவும், யாராலும் ஈயடிக்க முடியாததாகவுமே இருந்து வருகிறது. விக்கெட் எண்ணிக்கையை விட தனது அணியின் கால்தசைகள் வலுவடையும் வரை அதை தோளில் தூக்கி நின்று வெகுதூரம் அழைத்து சென்றவர் என்பதே அவரது ஆக முக்கியமான தகுதியாக எதிர்காலம் கருதும்.

முரளி ஓய்வு பெறும் இவ்வேளையில் பொதுவாக இரண்டு எதிர்மறை விமர்சனங்கள் தோண்டியெடுத்து மினுக்கப்படுகின்றன. ஒன்று, அவரது பந்துவீச்சு விதிகளுக்கு புறம்பானது என்பது; அடுத்து வார்னேயுடன் ஒப்பீடு. முரளியின் முழங்கை பிறவியில் இருந்தே சற்று வளைந்தது என்பதால் அவர் பந்து வீசும் போது எறிவதான் தோற்றம் ஏற்படுகிறது. விஞ்ஞானிகள் இதை ஒருவித பார்வை மயக்கம் என்கிறார்கள். அதாவது நமது மனிதக்கண்களால் பார்க்கப்பட்டு தெரிவது பொருளொன்றின் ரெட்டை பரிமாணத் தோற்றம் மட்டுமே. மூளை இதற்கு மசாலா சேர்த்து முப்பரிமாணம் ஆக்குகிறது. நாம் பார்ப்பதெல்லாம் நிஜமல்ல. முரளி நான்கு முறை அறிவியல் சோதனைகள் மூலம் தந்து வீச்சு முறைமையின் தூய்மையை நிறுவி விட்டார். கையை கட்டுப்படுத்தும் பிரேஸ் எனும் உலோகக் கருவியை அணிந்து பந்து வீசிக் காண்பித்தார். பிரேஸ் முழங்கையை வளைக்க விடாது. இவ்வாறு வளைக்காமலே படக்கருவி முன்னிலையில் முரளி தனது வழக்கமான பந்துகளை அதே திருப்பத்துடன் வீசி காண்பித்தார். ஆனால் கண்களை மட்டுமே நம்பும் முன்னாள் வீரர்களும், விமர்சாகர்களும் தொடர்ந்து முரளியை சந்தேகிக்கின்றனர். பிராட்மேன், ஸ்டீவ் வாஹ் ஆகியோரைத் தவிர்த்து ஆஸ்திரேலிய மண்ணின் பிரதமர், நடுவர்கள், வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட்டு அந்த மண்ணின் வாயுள்ள ஒவ்வொரு உயிரும் பெரும் துவேசத்துடன் அவரை ”பந்தை எறிபவன்” என்று கிடைக்கிற அவகாசத்தில் எல்லாம் குற்றம் சாட்ட முயன்று வருகிறார்கள். இத்தனைக்கும் உலகின் பந்து வீச்சாளர்களில் தொண்ணூறு சதவீதத்தினர் ஒரு குறிப்பிட்ட கோணத்துக்குள் பந்தை எறிபவர்கள் தாம் என்று ஒரு விஞ்ஞான ஆய்வு நிரூபித்தது. இந்த எறிபந்தாளர்களில் ஆஸி அணியின் பிரட் லீயும் அடக்கம். மேலும் முரளிதரனின் பந்து வீச்சு முறையை ஆய்ந்து பத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன. இவை அவரது வீசும் பாங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டது தான் என்று சான்று பகர்ந்தன. இந்த ஆய்வு முடிவுகளால் தூண்டப்பட்டு ஐ.சி.சி 15 டிகிரி கோணத்துக்குள் முழங்கையை வளைக்கலாம் என்று புதுச் சட்டம் கொண்டு வந்தது; இதனால் முரளியின் வீச்சு பாங்கு விதிமுறைக்கு உடபட்டது தான் என்று அறிவித்தது. ஆனாலும் பல ஆஸிகளும், பிற வெள்ளையர்களும் இந்த புது விதிமுறையை நிராகரித்து, முரளியை எறிபந்தாளர் என்று அடையாளப்படுத்துவதில் விடாப்பிடியாக உள்ளனர். ஷேன் வார்ன் முரளிதரனை பற்றி ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு எழுதிய பத்திரிகையில் அவரது வீச்சுமுறை ”கிட்டத்தட்ட தூய்மையானது” என்று சோற்றுக்குள் மூடி மறைத்தே பாராட்டி உள்ளார். ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் பத்தியாளர் பீட்டர் ரோபோக் ”In a freakish league of his own” என்ற் கட்டுரையில் இயற்கைக்கு மாறான வினோத பந்து வீச்சாளர்களின் வரிசையில் முரளிதரனை சேர்க்கிறார்; வார்னை எளிய பந்துவீச்சை மார்க்கத்தை ஒரு கலையாக மாற்றி சாதனையாளர் எனும் பீட்டர் ரீபோக் முரளி மையநீரோட்டத்தை சேர்ந்த மரபான பந்து வீச்சாளர் அல்ல என்கிறார். ஊனக்கை இருப்பதால் மட்டுமே ஒருவருக்கு மரபுக்குள் இடமில்லை என்பது ரீபோக்கின் அணுகுமுறை. இதே தர்க்கத்தை நல்லவேளை நாம் பீத்தோவனுக்கும், மில்டனுக்கும், பயன்படுத்துவது இல்லை. இவர் அடுத்து முரளிதரன் வார்னை போன்று ஆவேசமாக, துடிக்குத்தன வெறுப்பேற்றல்களின்றி ஒருவித மென்மையான பொறுமையுடன், பவ்யத்துடன் ஆடியதை குறையாக சொல்கிறார். தனிப்பட்ட திறமை வெளிப்பாடுகளால் குறுகிய நேரத்தில் அவரால் ஆட்டத்தின் போக்கை திருப்ப முடிந்ததில்லை என்று வேறு தகவல்பிழையான ஒரு அவதானிப்பை செய்கிறார். 132 ஆட்டங்களில் முரளி 66 தடவை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் ஒரு ஆட்டத்தில் வீழ்த்தி உள்ளார். இதன் பொருள் தான் ஆடிய பாதிக்கு மேலான ஆட்டங்களில் முரளி எதிரணி விக்கெட்டுகளில் பாதிக்கு மேல் கொய்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது. மேலும் சுருக்கமாக, இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் முரளி வெற்றிக்கான கருவியாக இருக்கிறார். இதை விட ஆபத்தான ஒரு பந்து வீச்சாளர் இருக்க முடியுமா? முரளியையும் வார்னையும் ஒப்பிடுவது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தமிழக மக்களுக்கு ஏற்படும் குழப்பததை போன்றது. முரளியிடம் ஆவேச அணுகுமுறை இல்லையென்பது அசோகமித்திரன் எழுத்தில் வன்முறை இல்லை என்று சு. ரா சொன்னது போன்றது. ஆரம்பத்தில் சந்தேகித்தாலும், அறிவியல் ஆதாரம் கிடைத்த பின்னர் மேற்கிந்திய தீவு முன்னாள் பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் முரளியின் பந்துவீச்சு ஐயத்துக்கு அப்பாலானது என்று ஆதரவளித்தார். இங்கிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் ஆங்குஸ் பிரேசரும் இந்த ஆதரவு முகாமை சேர்ந்தவரே. பிராட்மேனே பாராட்டிய பின்னரும் கூட தொடர்ந்து முரளியின் மென்னியை நெறிப்பதற்கு ஆஸ்திரேலிய விரல்களே அதிகம் நெளிவதற்கு அவர் வார்னின் சாதனையை விஞ்சி விட்ட பொறாமையும், எரிச்சலும் முக்கிய காரணங்கள். ஆஸ்திரேலியர்கள் ”மோசமான தோல்வியாளர்கள்” என்ற அடைமொழி உலகப் பிரபலமானது; தொடர்ந்து அவர்களாலேயே இலவசமாக நிரூபிக்கப்பட்டு வருவது.

அடுத்த நூறு வருடங்களுக்கு முரளியின் சாதனை வரலாற்றின் புள்ளியல் விபரங்களும், விக்கெட்டுகளின் சிகரமும் அவரது வீச்சுமுறைமை பற்றிய சர்ச்சையுடன் நினைவில் வெம்மை தணியாமல் இருக்கும். அவரது விக்கெட் சாதனை யாராலும் முறியடிக்கப் படாமல் போனாலும் அதனை இந்த சர்ச்சை ஒன்றே அர்த்தமற்றதாக்கி விடும் என்று அவரது எதிர்ப்பாளர்கள் கூறுவது நிஜமாகுமா? ஊடகப் பார்வையில் முரளியின் விக்கெட்டுகள் வெறும் எண்களாக உதிரலாம். ஆனாலும் கிட்டத்தட்ட கடந்த இருபதாண்டு காலத்தின் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் அவரது தாக்கம் நிச்சயமாய் என்றும் பொருட்படுத்தத் தக்க ஒரே நிஜமாக இருக்கும். கிரிக்கெட் நிர்தாட்சண்யமாக எண்களை அருங்காட்சியகத்திலும், வரலாற்றுத் தாக்கத்தை தனது இதயத்திலும் பொறித்து வைத்திருக்கிறது. முழங்கை வளைந்ததா நேரானதா என்ற சர்ச்சை காலத்தின் ராட்சத பற்களுக்குள் மாட்டிய ஜவ்வாக மட்டுமே நிலைக்கும்.
Share This

4 comments :

  1. உங்களது தமிழ் மிகவும் அருமை , மிகவும் நேசிக்கிறேன்

    ReplyDelete
  2. அபிலாஷ் நான் கிரிக்கெட்டே பார்ப்பதில்லை. ஆனாலும் இந்த கட்டுரையை, முரளியின் ஆளுமையை மிகவும் ரசிக்கிறேன். உங்கள் நடை நன்றாக இருக்கிறது. :)
    அன்புடன்
    சந்தோஷ்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates