Saturday 2 April 2011

ஆஸி, தெ.ஆ வெளியேற்றங்கள்: வீழ்ச்சியின் தொலைவும் கசப்பின் சுவையும்



இந்த உலகக் கோப்பையில் மிக மௌனமாக இரு நட்சத்திரங்கள் உதிர்ந்துள்ளன. ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் நுழைய வேண்டிய வாசல் வழி மிகுந்த குழப்பத்துடன் வெளியேறி விட்டன. மிக இனிமையான ஒரு நாளின் முடிவில் வந்த எதிர்பாரா துர்கனவை போல் இத்தோல்வியை எப்படி விளக்க என்றே இரு தோல்வியுற்ற அணித் தலைவர்களுக்கும் புரியவில்லை. இந்த அணிகளின் கசப்பான புன்னகை காண பார்வையாளர்கள், நிபுணர்களின், எதிரணி ஆதரவாளர்கள் அனைவருக்கும் சற்று விசனமாகத் தான் இருந்தது. அவர்கள் இத்தோல்விகளை விளக்க சன்னமான சொற்களை, வருத்தாத வாதங்களை தேடினார்கள்.
இவ்வணிகள் தங்கள் நெடுங்கால மற்றும் சமீப வரலாறுகள் காரணமாய் தோல்வியடையும் போது, ஒரு நெடும் ஆட்டத்தொடரில் இருந்து வெளியேறும் போது அது வெறும் தோல்வியாய் இருப்பதில்லை. அணிகளின் வெற்றி தோல்விகள் மித்துகளால் கட்டி எழுப்பப்படுகின்றன. ஒரே ஆட்டத்தில், அது உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றமாய் அமைந்தாலும் கூட, இவை விழுவதில்லை. பிரம்மாண்ட வரலாறு கொண்ட அணியொன்றின் வீழ்ச்சி நெடுந்தொலைவை கடந்து வரும் எரிகல்லினுடையதை போன்றது. இடைப்பட்ட காலம் ஏகப்பட்ட கற்பனைகளால் நிரப்பப்பட வேண்டியது. ஆஸ்திரேலியாவின் பத்தாண்டு வெற்றிப் பருவத்தில் எழுதப்பட்டதை விட பலமடங்கு அதிக சொற்கள் அவர்களின் மெதுவான தோல்வி ஊர்வலத்தை வர்ணிக்க அலச தீர்ப்பு வழங்க செலவழிக்கப்பட்டு உள்ளன. தென்னாப்பிரிக்கா அநாயசமாய் அடையும் வெற்றிகளை விட அது சுலபமாய் இழக்கும் முக்கிய ஆட்டங்களே நமது கற்பனையை அதிகம் தூண்டுகின்றன.
தென்னாப்பிரிக்கா ஏன் கால்-இறுதியில் தோற்றது? தென்னாப்பிரிக்காவின் மன இறுக்கம் கொண்ட ஆட்டமரபு அவர்களை சில சமயங்களில் பதற்றமடைய விநோதமாய் தோல்வியை தட்டிப் பறிக்க செய்கிறது என்றனர் நிபுணர்கள். தெ.ஆ உலகக்கோப்பை கால், அரைஇறுதிகளில் ஐந்தாவது முறையாய் தடுமாறி வீழ்ந்துள்ளது. ஆனால் இதே அதி-கவன, சுயகட்டுப்பாட்டு ஆட்டமுறை தான் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எண்ணற்ற ஆட்டங்களை உத்திரவாதமாய் வெல்ல அவர்களுக்கு உதவியுள்ளது. இன்றைய ஒருநாள் அணிகளில் தெ.ஆ தான் அனைத்து துறைகளிலும் மிகத் திறமையான தன்னிறைவான அணி. தெ.ஆ தன்னை உடனடியாக மாற்றிக் கொண்டு ஆசிய அணிகளை போல் வாலில்-தீப்பிடித்த-கிரிக்கெட் ஆடப் போவதில்லை.  அவர்களை இத்தனை வருடங்களாய் சீராய் வழிநடத்திய உருவாக்கிய ஆட்டமரபையும் துறக்க போவதில்லை. தெ.ஆ தனது வலிமையையும் பலவீனத்தையும் ஒருங்கே கொண்டே வளரப் போகிறது. அதுதான் அவர்களின் தனித்தன்மை. வரலாற்றை திருத்தி எழுதும் நோக்கில் ஒரு அணி தன் ஆளுமையை இழக்க கூடாது. நவீன கிரிக்கெட் அணிகளின் வரலாறு வணிக, விளம்பர நிறுவனங்கள், மீடியா வியாபாரிகள் மற்றும் நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களின் கற்பனையால் ஒன்றன் மேல் ஒன்றாய் படலம் படலமாய் உருவாக்கப் படுவது. தென்னாப்பிரிக்கா இப்படியே இருப்பதனாலும் ஒன்றும் இழப்பில்லை. தெ.ஆ மிகச் சின்ன ஓட்டை கொண்ட பிரம்மாண்ட பலூனாக இருப்பதில் ஒரு நாடகீயம் உள்ளது. இது கிரிக்கெட் சூழ் உலகுக்கு பிடித்து தான் இருக்கிறது. இந்த ஓட்டையை மூடி விட்டால் தெ.ஆ தன் பாத்திரத்தை மாற்றி கொள்ள வேண்டி வரும். அதாவது, அது ஆஸ்திரேலியாவின் முள்கிரீடத்தை பெற வேண்டும். ஒரு அதி-ஆரோக்கியமான உடலை போல் அனைவரையும் சலிப்பூட்டியபடி மெல்ல மெல்ல மரிக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா ஏன் கால்-இறுதியில் தோற்றது?
ஆஸ்திரேலியாவின் சுழலர்கள் மோசமாக வீசியதே காரணம் என்றனர் நிபுணர்கள். ஆனால் ஆஸி அணியின் ஒரே சுழலரான வயதான கிரேஜ்ஹா விக்கெட்களை கொய்வார் என யாரும் எதிர்பார்க்க இல்லையே. தெ.ஆ, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியுசிலாந்து, ஏன் இந்திய அணிக்கு கூட முக்கியமான கட்டங்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை அமைத்து தந்தது சுழலர்கள் அல்ல வேகவீச்சாளர்களே. இலங்கை மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ஆக மொத்தமாய் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை அல்ல தரத்தை கருதுகையில் இந்த உலகக் கோப்பை தொடரில் சுழலர்கள் செய்ததெல்லாம் எச்சிற் பருக்கைகளை கூட்டி பெருக்கியது தான்.
ஆஸ்திரேலியா தோற்றதற்கு அசல் காரணம் அவர்களின் வேகவீச்சாளர்கள் மோசமாக வீசினது தான். அவர்கள் திறமையாக ஆவேசமாக இயங்கினார்களே ஒழிய தந்திரமாக சமயோசிதமாக வீசவில்லை. கால்-இறுதி ஆட்டத்தில் பிரெட் லீக்கு அடுத்த படியாய் அச்சுறுத்தக் கூடியவராக இருந்தவர் பகுதி நேர மிதவேக வீச்சாளர் வாட்சன். காரணம் அவர் இந்திய ஆடுதளங்களின் சிணுங்கல் குணத்தை அறிந்தவராக இருந்தார். திசையையும் நீளத்தையும் வேகத்தையும் தொடர்ந்து மாற்றி எதிர்பாராத வகையில் வீசினார். வேகத்தை விட கூர்மையும் மதிநுட்பமும் ஆசிய ஆடுதளங்களில் எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தினார். அவர் எறிந்த இரு மெதுவான பந்துகள் சச்சினின் மட்டை ஓரத்தை உரசி கீப்பரையும் உரசி போயின. சச்சினுக்கு அவரை வாசிக்க நேரம் பிடித்தது. வாட்சனுக்கும் பிரெட் லீக்கும் இங்கு ஐ.பி.எல் ஆடின அனுபவம் பயன்பட்டிருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் ஒட்டு மொத்த ஆட்டதிட்டம் நேர்முரணாக இருந்தது. அவர்கள் வேகத்தை கொண்டு அதிரடியாய் விக்கெட்டுகளை வீழ்த்த உத்தேசித்தனர். இது பலவீன அணிகளுக்கு எதிராக பயன்பட்டு, வலுவான அணிகளுக்கு எதிராக சொதப்ப செய்தது. ஆனால் லீக் கட்டத்தை அடையும் வரை ஆஸியினரின் வேக வீச்சு பெரும் வலிமையாக அச்சுறுத்தலாக கருதப்பட்டது. கால்-இறுதியில் ஆஸி அணிக்கு எதிராக இந்தியா இரண்டாவதாக மட்டையாடினால் அநேகமாய் தோல்வி தான் என்று கணித்தார் கவாஸ்கர். ஆனால் எது பலமாக கருதப்பட்டதோ அதுவே பலவீனமாக அமைந்தது. வாழைப்பழம் விழுங்கியவாறே வழுக்கியும் விழுந்தனர்.
ஆனால் ஆஸ்திரேலியாவிடம் ஒரு அஸ்திரமே இருந்தது. அவர்கள் இது போன்றதொரு நெருக்கடி ஆட்டத்தில் வேறு ஒன்றுமே செய்திருக்க முடியாது. அந்த அஸ்திரமும் எய்த போது தேர்க்கால் தரைக்குள் அழுந்தி விட்டது. இந்த வெளியேற்றம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் எழுச்சியின் கடைசி மூச்சோ என்று அதிக சுவாரஸ்யமின்றி மெல்ல கேட்கிறோம். அதற்கு இன்னும் பெரும் தொலைவு இருக்கிறது. அவசரப்படாமல் நாம் இந்த இரு அணிகளின் சறுக்கல்களை கவனிக்கலாம். மீள்-எழுச்சிகளை எதிர்பார்க்கலாம். கசப்பை விட ரசிக்கத்தக்க சுவை வேறொன்றில்லை.
Share This

1 comment :

  1. இறுதி ஆட்டத்தினையும் சுவையாய் தொகுப்பீர்கள் என எண்ணுகிறேன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates