Thursday 28 April 2011

உலகக்கோப்பை: பிரதிகளின் குழப்ப சீட்டாட்டம்



இந்திய கிரிக்கெட் தன்னளவில் குழப்பமானது. உலகக்கோப்பைக்கு பின் அது வழக்கம் போல் உலகக் கிரிக்கெட்டையும் பார்வையாளர்களையும் மீடியாவையும் நிபுணர்களையும் குழப்புகிறது.

இந்திய அணி தலைசிறந்த அணி அல்ல என்பது தன்னடக்கம் குறைந்த ஒரு இந்தியனுக்கே தெரிந்ததே. ஒரு சமநிலையோ தொடர்ச்சியான தரமோ அற்ற அணி உலக கோப்பை வென்றது நமக்கு தேசியவாத பெருமிதமும் கிளர்ச்சியும் ஏற்படுத்தினாலும் உலக பார்வையாளர்களுக்கு மாத்திரையை மாற்றி முழுங்கின நோயாளியின் உணர்வை ஏற்படுத்தி இருக்கும். இந்திய மீடியா சீட்டு குலுக்கி போட்டு தோனியின் தான் கோப்பையை வென்று தந்தார் என்று ஒருமித்து கண்டுபிடித்தது. தோனி தனது முன்னோடிகளான திராவிட், கங்குலி போன்றோரை அங்கீகரிக்க தவறவில்லை. ஆனாலும் ஆதார காரணம் ஜார்கண்ட் துர்க்கை அம்மன் என்பதால் ஜோதிடர் குறித்து கொடுத்த நள்ளிரவு வேளையில் மொட்டையிட்டு முடியை காணிக்கையாக்கினார். இந்திய பண்பாட்டின் படி மூத்தவர்களுக்கு மரியாதை செலுத்த அவர்களின் கால் நம் தலைக்கு சற்று கீழோ அல்லது மேலோ இருக்க வேண்டும். கோப்பை கொண்டாட்டத்துக்கு பின்னது தேர்ந்தெடுக்கப்பட்டது; பயிற்சியாளரும், மற்ற மூப்பரான சச்சினும் அணி வீரர்களால் மைதானத்தை சுற்றி சுமக்கப்பட்டனர். சுவாரஸ்யமாக இந்த கோப்பை தொடரில் இந்தியாவுக்கு ஒரு தெளிவான ஆட்டநாயகன், ஒரு பிரகாசமான நட்சத்திரம், இல்லை. யுவ்ராஜ் சில மலிவான விக்கெட்டுகளை வீழ்த்தினார். கோலி, ரெய்னாவுக்கு இணையாக அவர் களத்தடுப்பாடினார். ஆனால் அனைத்து முக்கியமான ஆட்டங்களையும் அவர் மட்டையாடி தொடர்ச்சியாக வென்று தரவில்லை. அவர் சேர்த்த ஒரே முக்கியமான அரைசதம் ஆஸி அணிக்கு எதிராக காலிறுதியில் தான். சஹீர்கான் தனிப்பட்ட வகையில் எந்த ஆட்டத்தையும் வென்று தரவில்லை என்பது மட்டுமல்ல அவர் தன் ஆட்டதிறனின் உச்சத்திலும் இருக்கவில்லை. காயம் காரணமாய் சற்றுகாலம் களிம்பேறி போயிருந்த சஹீர் ஒவ்வொரு படியாக ஏறி ஆட்டத்தொடர் முடியும் போது குன்றின் பாதி உயரமே எட்டியிருந்தார். அவர் இந்திய மழுங்கின பந்துவீச்சின் ஒரு பக்கத்தை கூர்மையாக காப்பாற்றினார் என்பதே நினைவுகொள்ளத்தக்கது. ஒப்பிடும் போது 96இல் சச்சினும், 99இல் திராவிடும், 2003இல் சஹீர்-நெரா-ஸ்ரீநாத் ஜோடியையும் போல் யாரும் இம்முறை நட்சத்திர வீரராக திகழவில்லை. சொல்லப்போனால் சச்சினுக்கு இந்த உலகக்கோப்பை ஒரு anticlimax தான். தென்னாப்பிரிக்க சதத்துக்கு பின் அவர் முன்னோ பின்னோ போகாமல் ஓரிடத்தில் மாட்டிக் கொண்டார். நினைவுகளை கிளரும் ஒரு அழகான vintage காரை போல் அணிக்குள் இருந்தார், அவ்வளவே. பிறரை விட அவர் தன்னை தானே பெரும்பாரமாக உணர்ந்திருப்பார். சச்சின் உலகக்கோப்பையை வென்று தர வேண்டும் என்ற கோஷம் சச்சினுக்காக உலகக்கோப்பை என்று மாறியது இதனை உத்தேசித்தோ என்னவோ. தோனி இறுதி ஆட்டத்தில் அரைசதம் அடித்தது தான் மீடியா எழுத நினைத்த எண்ணற்ற கிளைமேக்ஸ் காட்சிகளில் சிறந்ததாக இருந்தது. ஆகவே தோனி வருடத்துக்கு எத்தனை மட்டைகள் உடைக்கிறார் என்பது வரை செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இந்த ஒரு சின்ன இலையை பற்றிக் கொண்டு மீடியா மெல்ல நீந்தி கரையேறி விட்டாலும் கோப்பை வென்ற இரவு அவர்களுக்கு மிக திகைப்பாகவும் குழப்பமாகவுமே விடிந்தது. மேற்கத்திய ஊடகங்கள் ஒரு காரணத்தை கண்டுபிடித்தன. சுழல்சாதக ஆடுகளங்களில் வெள்ளை அணிகளால் அதிக ஓட்டங்கள் சேகரிக்க முடியவில்லை. காரணம் அவர்களால் சுழலர்களை தாக்கி ஆடமுடியவில்லை. விளைவாக ஓவருக்கு நான்கு அல்லது அதிக பட்சம் ஐந்து ஓட்டங்களே அவர்களால் சராசரியாக எடுக்க முடிந்து உயர்ந்த ஸ்கோர்களை எட்ட இயலவில்லை. இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். முன்னர் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இந்திய ஆடுகளங்களில் பந்து பம்பரமாக சுழலும், எதிர்பாராத உயரத்தில் எழும்பும். இம்முறை பந்து மெதுவாக வந்ததே அன்றி 96 உலகக்கோப்பை கால் இறுதியில் இந்தியாவை ஜெயசூரிய சுற்றி விட்டது போல் ஒருமுறை கூட நிகழவில்லை. வெள்ளை அணிகளால் ஆடும் முறையில், தொழில்நுட்பத்தில் இந்திய ஆடுதள மெத்தனத்துக்கு ஈடுகொடுக்கும் படியான மாற்றத்தை செய்ய முடியவில்லை என்பது உண்மையே. ஆனால் சிறந்த மட்டையாளர்கள் அந்நிய சூழல்களில் தான் பெரும்பாலும் சாதித்துள்ளார்கள். மேற்சொன்ன மேற்கத்திய மீடியா கண்டுபிடிப்பின் மிட்டாய் உறையை கழற்றினால் மற்றொரு உண்மை தெரியவரும். இம்முறை உலகக்கோப்பையில் பந்தை வெளியே அடிக்கக் கூடிய நிறைய பேர் இருந்தார்கள். ஆனால் அசலான அதிதிறமையாளர்கள் இல்லை. பதிலுக்கு முகமூடிக்கு பின் சில நல்ல வீரர்களும், அவர்களுக்கு பின்னால் சுமாரான திறமையாளர்களும், இருசாராருக்கும் பக்கபலமாக சச்சின், காலிஸ் போன்ற அனுபவஸ்த முன்னாள்களும் இம்முறை களமிறங்கினார்கள். எந்த சூழ்நிலையையும், தடையையும் மேலாதிக்கம் செலுத்தும் மனவலுவும், அதிதிறமையும் கொண்ட ஆளுமைகளின் காலம் 2003உடன் முடிந்து விட்டது. இந்த உலகக் கோப்பை நமக்கு உணர்த்தியது இது ஆளுமைகளின் பிரதிகளின் காலம் என்பதே.
இந்தியா தன் அணி ஒற்றுமையால், 11பேரின் ஒருங்கிணைந்த பங்களிப்பால் வென்றதா? ஒருவருக்காக மற்றவர் ஆடினோம் என்பதே இந்த வெற்றியின் தாரக மந்திரம் என்று தோனி கூறியுள்ளது கூடிவாழ்ந்தால் கோடி நன்மை, தோல்வி வெற்றியின் படிக்கட்டு போன்ற மற்றொரு வெற்று வாசகமே. நாம் ஒருவரை ஒருவர் கைவிட்ட ஏகப்பட்ட உதாரணங்கள் இந்த உலகக்கோப்பை முழுக்க பார்க்கலாம். நம்மை விட அதிக அணி உணர்வுடன் போராடின ஆஸ்திரேலியா ஏன் காலிறுதி தாண்டவில்லை? ஆக இந்த உலகக் கோப்பையில் அணிகளின் பொதுவான ஆட்டப் போக்கை இவ்வாறு சுருக்கலாம்: எங்கெல்லாம் சற்று சறுக்குமோ அங்கெல்லாம் அனைத்து கால்களும் சறுக்கின. யார் விரைவில் சுதாரித்தார்களோ அல்லது தாமதமாக பொருட்படுத்தப்படாத வகையில் சறுக்கினார்களோ அவர்கள் மெல்ல மெல்ல முன்னேறி பின்னர் கடைசியாக ஒரே சறுக்கில் இலக்கை அடைந்தனர். இந்த சறுக்கல் போக்குக்கு ஒரு உதாரணம் தரலாம். தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் போன்ற சிறந்த பந்துவீச்சுகளும், இந்தியா போன்ற மட்டையாட்ட வரிசைகளும் ஒரே ஆட்டத்தில் மிகச்சிறப்பாகவும் படுகேவலமாகவும் ஆடியதை பார்த்தோம். ஒரே நபர் விதூஷகனாகவும் ஹீரோவாகவும் தொடர்ந்து தோன்றுவதை பார்த்தோம். இதற்கு காரணம் பதற்றம் மற்றும் தோல்வி மனப்பான்மை. இவற்றின் அடிப்படை சராசரி ஆட்டத்தரம். வேறெந்த உலகக்கோப்பையிலும் அனைத்து அணிகளும் கடுமையான பதற்றத்தில், வெற்றிக் கோட்டின் முன்னும் பின்னுமாய் அடி வைத்து அணி வகுத்ததை நாம் பார்த்திருக்க முடியாது. முன்னதான உலகக்கோப்பைகளில் திரைக்கதை திருப்பங்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு ஸ்பெல்லினாலோ மட்டையாட்டத்தினாலோ ஏற்பட்டன, அதற்கு இன்சமாம், வாஸிம் அக்ரம், ஜெயசூரியா, டிசில்வா, மெக்ராத், கில்கிறிஸ்ட், சச்சின் என தனிப்பட்ட நாயகர்கள் இருந்தார்கள். ஏகப்பட்ட செவ்வியல் தருணங்கள் இருந்தன. இம்முறை நமக்கு கிளைமேக்ஸ்களின் போது பந்து எகிறுவதோ, மட்டை வீசப்படுவதோ அல்ல கட்டுப்பாடற்று அடிக்கும் உரத்த இதயத்துடிப்புகள் தாம் கேட்டன. 2011ஐ பதற்றத்தின் உலகக்கோப்பை எனலாம். பிரதிகள் மட்டுமே கலைத்து கலைத்து அடுக்கப்பட்ட ஒரு ஒரு புதிர் சீட்டாட்டம்.
இம்முறை மிக குறைவாக எதிர்பார்க்கப்பட்ட அணி நியூசிலாந்து. அவர்கள் எப்போதும் போல் கறுப்புக்குதிரைகளாக இருந்தனர். அது அவர்களின் மரபு. இந்தியா அதிகம் பந்தயம் கட்டப்பட்ட சோர்வுற்ற குதிரையாக இருந்தது. ஆனால் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் நாம் சற்றும் எதிர்பாராதது போல் கால்-அரை-இறுதி ஆட்டங்களில் இந்தியா இரட்டிப்பு மட்டையாட்ட திறன் பெற்ற நியுசீலாந்தை போல் ஆடியது.
இந்தியாவின் எதிர்பாரா உலகக்கோப்பை வெற்றிக்கு இப்படியும் ஒரு விளக்கம் தரலாம். 
Share This

4 comments :

  1. உலகக் கோப்பை குறித்தான மாற்றுகோண சிந்தனைமிக்க இக்கட்டுரை கொஞ்சம் தாமதம்தாங்க பாஸ்!! ஆனால் ஒட்டுமொத்தமாக ஏதோ ஒன்றை சொல்லவந்து சொல்லாமல் தவிர்த்தது போல இருந்தது!!

    இந்தியா வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் எப்பொழுதும் உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்னதாக இருக்குமெனக் கூறப்படுவதுண்டு. அது இம்முறை அதீத எதிர்பார்ப்புடனும் இருந்தது உண்மைதான் என்றாலும் வெளிப்படையான போட்டியின் முன்முடிவுகள் தெரியும்படியான ஆட்ட நோக்கும், செயல்பாடுகளும் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. கோப்பை வென்றபொழுது இருந்த உற்சாகம் சில மணிநேரங்களில் வடிந்து போனதற்கும் அது காரணமாக இருந்திருக்கலாம்.. நான் எதிர்பார்த்தது 2003ல் கட்டுக்கடங்காமல் சென்றுகொண்டிருந்த ஆஸியைப் போலுள்ள ஒரு எதிரணி... அப்படி ஏதும் அமையாமலிருந்ததுதான் துரதிர்ஷ்டம்.. ஒருவேளை 2003 ல் இந்தியா வாங்கியிருந்தால் இன்னும் மெச்சும்படியாகவும் அமைந்திருக்கலாம்!!

    யுவ்ராஜ் பற்றிய கருத்துக்களை ஓரளவு ஒத்துக்கொள்ள முடிந்தாலும் ஜாஹீர்கானைப் பற்றிய உங்கள் கருத்து என்னால் ஏற்கமுடியாது. ஜாஹீர்கான் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.. தனிப்பட்ட வகையில் வென்றுதர இது டென்னிஸ் அல்ல. கிரிக்கெட்! அதேமாதிரி 2003ல் நட்சத்திரமாக இருந்த சச்சினை நீங்கள் குறிப்பிடத்தவறியது ஏன்? நினைத்துப் பாருங்கள், சச்சின் தனிமனிதனாக இறூதிப் போட்டிவரைக்கும் இழுத்துச் சென்றார்!!

    ஆஸ்திரேலியா அதிக உணர்வுடன் ஆடியதையும் ஓரளவு மறுக்கலாம். ஆஸியின் கேப்டனுக்கு இப்போட்டிகள் நிர்பந்தத்திலேயே அமைந்திருந்தது. சிறந்த கேப்டன் அவர். இவர் வாங்கிய இரண்டு கோப்பைகளிலும் இவரது கேப்டன்ஸியும் அதைவிட டீம் மேட்களின் அபார பங்களிப்பும் இருந்தன.. இரண்டு போட்டிகளில் தோற்றுவிட்டதால் மாற்றப்படுமளவுக்கு மோசமான உணர்வுள்ளதாகவே விளங்கியிருக்கிறது ஆஸி கிரிக்கெட் துறை. பாண்டிங் டிவியைப் போட்டு உடைத்ததும், கேட்சுக்கு UDRS எடுத்ததும், தரையில் பட்டதை அவுட் என்று சொன்னதும் சிறந்த உணர்வுக்கான அடையாளமோ என்னவோ? தவிர, ஆஸியில் மற்ற எவரும் வெல்லவேண்டுமென ஆடவில்லை!!

    ReplyDelete
  2. இப்ப என்னதான் சொல்றிங்க?

    ReplyDelete
  3. கடைக்கோடி ரசிகனிலிருந்து விமர்சகர்கள் வரை இது ஃபிக்ஸ் செய்யப்பட்ட கோப்பையோ என்கிற சந்தேகம் இருந்தே வருகிறது. சரியான நேரத்தில் சரியான முடிவுகள்,சரியான வியூகம், தெளிவான Execution அவ்வளவே! அதை ஓரளவுக்கு சிறப்பாகவே செய்திருந்தார்கள்.

    எது எப்படியோ...நாம் கிரிக்கெட் உலகின் அமெரிக்கா ஆகிவிட்டதும்...மற்ற நாடுகள் எப்போது விளையாட வேண்டும் என தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து விட்டதும் நிதர்சனம்.

    ReplyDelete
  4. நன்றி ஆதவா, மதுமிதா மற்றும் ஆத்மா

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates