Monday 15 July 2013

வெறுப்பின் முகமும் முகநூலின் முகமும்




நம்மை காயப்படுத்த நினைக்கிறவர்கள் முதலில் முயற்சியெடுக்கிறார்கள். ஏன் முதலில் என்றேனென்றால் அது பல படிகளில் ஒன்று மட்டும் தான். அடுத்தடுத்து நாம் காயப்பட்டு விட்டோமா என வேவு பார்த்து உறுதி செய்வார்கள். நம் காயப்படவில்லை என்றால் அவர்கள்
1.   புண்பட்டு மனம் வருந்துவார்கள்.


2.   மீண்டும் ஒரு முறை ஆழமாக கத்தியை பாய்ச்சி பார்ப்பார்கள்
3.   அதற்கும் இணங்காவிட்டால் அவர்களுக்கு கோபம் வரும்
4.   நம்மை திமிர் பிடித்தவர்கள் என திட்டுவார்கள்
ஏதோ கோபத்தில் உணர்ச்சிவேகத்தில் தான் மனிதர்கள் காயப்படுத்துகிறார்கள் என ஒரு காலத்தில் நம்பினேன். அது உண்மை அல்ல. காயப்படுத்துபவர்கள் மனதுக்குள் ஒரு வெறுப்போடு திரிகிறார்கள். அந்த வெறுப்பை ஒன்று அவர்கள் தம்மை காயப்படுத்தி வெளியேற்றலாம் அல்லது பிறரை புண்படுத்தி வெளிப்படுத்தலாம்.
வெறுப்பு ஒரு பசியை போல இயங்குகிறது. வெறுப்பு மிகுந்தவர்கள் ஒரு மலைப்பாம்பை போல் யாரையேனும் பிடித்து விழுங்கும் ஆவேசத்தில் காத்திருக்கிறார்கள். பொதுவாக கோபப்படுபவர்கள் உடனடியாக தணிந்து விடுவது தம் தவறை உணர்வதனால் அல்ல; பலூனில் இருந்து காற்று வெளியாவது போல் தமக்குள் உள்ள அழுத்தம் குறைவதனால் தான். கோபப்படுவது ஒரு வித சுயமைதுனம். அதனால் தான் சும்மா சும்மா கோபப்படுபவர்களை பார்த்தால் எனக்கு எந்த மரியாதையும் ஏற்படுவதில்லை.
கோபப்படுவோரில் கணிசமானோருக்கு திடமான எதிரி என்று யாரும் இல்லை. பெரும்பாலும் அதிக சம்மந்தமில்லாதோரிடம் தான் கோபத்தை காண்பிப்பார்கள். அல்லது நேர் எதிராக மிகவும் நேசிக்கறவர்களிடம் காட்டுவார்கள். இரு சாராரிடமும் இருந்து தம் கோபத்துக்கு நியாயம் கூறாமல் சின்ன காயங்களை ஏற்படுத்தி தப்பித்து விடலாம் என்பது காரணம். அதனால் தான் பொதுவாக அலுவலகங்களில் மேலாளர்கள் அல்லது முதலாளிகள் அல்லது மேலதிகாரிகள் தமக்கு எளிய மென் இலக்குகளாக சிலரை வைத்திருப்பார்கள். அவர்களை கடுமையாக எதிர்க்கும் வெளிப்படை எதிரிகளை தாக்குதலில் இருந்து கவனமாக விலக்கி வைப்பார்கள். சிலவேளை நீங்கள் ஒருவரிடம் நேரடியாக எதிரியாக மோதத் துவங்கினால் அவர் உங்களுக்கு ஓரளவு மரியாதை கூட கொடுப்பார். ஏனென்றால் எதிரிகள் ஒரு அதிகாரபூர்வ தரப்பு. அவர்களிடம் காட்டும் வன்மத்துக்கு பதில் கூற நேரிடும். அவர்களை நீங்கள் மென் இலக்கு ஆக்க முடியாது. எதிரிகள் மாவோயிஸ்டுகள் போல. அவர்களைக் கொன்றால் அவர்கள் திரும்ப காவல் நிலையத்தை கொளுத்துவார்கள். போலீஸ் ஊர்வலத்தை குண்டு வைத்து தகர்ப்பார்கள். அரசு அவர்களை கவனமாக உரித்த மரியாதையுடன் நடத்தும். ஆனால் பழங்குடிகள் அப்படி அல்ல. அவர்களை ஓடச் சொல்லி புறமண்டையில் சுடும். நண்பர்கள், அன்பர்கள், பரிச்சயக்காரர்கள், மனைவி, கணவன் எல்லாம் இந்த பழங்குடிகளைப் போலத் தான்.
ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு நாம் புன்னகைப்பது குறைகிறது. நம்மைக் கடந்து நடந்து போகும் அந்நியர்களைப் பாருங்கள் எவ்வளவு முறைப்பாக இருக்கிறார்கள் என. அவர்களிடம் பேசிப் பாருங்கள் – விரோதமாக பதில் சொல்லுவார்கள். புதியவர்களிடம் சிநேக பாவம் காட்டுவது வயது ஆக ஆக குறைந்து கொண்டே போகும். இதற்கு ஒரு காரணம் உலக ஞானம் நமக்கு கற்றுத் தருகிற இந்த பாடம்: அன்பு, கருணை, நேசம், திறந்த அணுகுமுறை ஆகியவை பலகீனமாக பார்க்கப் படுகிறது. அத்தகையவர்கள் எப்போதும் பலிகடா ஆக்கப்படுவார்கள்.
அன்பானவர்களை முட்டாள்கள் என்றும் தர்ம அடிக்கு தகுந்தவர்கள் என்றும் நம் மக்கள் நம்புகிறார்கள். உதாரணமாக நீங்கள் உங்களை சுற்றி இருப்போரிடம் அன்பாக இருந்து அவர்களின் உணர்ச்சிகள், எண்ணங்களுக்கு வடிகாலாக உங்களை மாற்றிக் கொண்டால் நீங்கள் கடுமையாக காயப்படுவீர்கள். இது கிட்டத்தட்ட நாம் அனைவருக்கும் வாழ்வில் ஒரு கட்டத்தில் நடந்திருக்கும். அதனாலே நாம் இனி பிறரிடம் இருந்து ஒதுங்கி கௌரவமாக முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுப்போம். அப்போதும் கூட நம் உள்வட்டத்தை சேர்ந்தவர்கள் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் காயப்படுத்துவார்கள். அதனால் தான் வயதாக ஆக இந்த வட்டமும் சுருங்கிக் கொண்டு போய் வயோதிகத்தின் மீளாத் தனிமைக்குள் கொண்டு விடும்.
நம்முடைய நட்பு கொள்ளும் விருப்பம் குறைவதற்கும், பிறரிடம் விலகல் பாராட்டுவதற்கும் நாம் இருக்கும் கூட்டத்தின் எண்ணிக்கைக்கும் தொடர்புள்ளது. மிக ஜனநெருக்கடியான இடங்களில் மனிதர்கள் இயல்பாகவே பாதுகாப்பற்று உணர்வார்கள். இதனால் தான் கிராமங்களிலும், மக்கள் தொகை குறைவான இடங்களிலும் இருப்போர் அடுத்தவர்களை சகஜமாக ஏற்றுக் கொள்வதும், நம்பி பேசுவதும் அதிகமாக இருக்கிறது. ஆனால் மனிதனின் அசட்டுத்தனமே இது தான். உண்மையில் நெருக்கடி மிகுந்த இடங்களில் தான் அவன் பாதுகாப்பாக இருப்பான். பாதுகாப்பாக அவன் உணரும் உள்வட்டங்களில் தான் அவன் கடுமையான தாக்குதல்களை நேர்கொள்ள வேண்டி இருக்கும்.
கோபமும் காமமும் ஒரு புள்ளியில் இணைவதுண்டு. அதுவும் பிறரை நோகடித்து சுகம் தேடும் வகையில் தான். எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கும் எனக்கும் பொதுவாக ஒரு தோழி இருந்தாள். மூவருக்கும் திருமணமானவர்கள். ஒரே இடத்தில் வேலை. அவன் வேலையில் இருந்து அகன்ற பின் பதற்றமாக இருந்தான். பண நெருக்கடி அல்ல. வேறு வகை.
ஒருநாள் என்னை கடுமையாக திட்டி குறுஞ்செய்தி அனுப்பினான். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. நான் அவனுக்கு என்றுமே ரொம்ப நெருக்கம் இல்லை. ஆனால் அவன் நான் அவனிடம் போதுமாக அன்பு காட்டவில்லை, அவனிடம் விசுவாசமாக இல்லை என்று குற்றம் சாட்டினான். எனக்கு குழப்பமாக இருந்தது. எங்களுடையது வெறும் செயல்முறை நட்பு. அதற்கு மேல் இருவரும் எடுத்து சென்றதில்லை. இந்த குழப்பமும் அதிர்ச்சியும் ரொம்ப நாள் அலைகழித்தது. பிறகு ஒரு நாள் அவன் நான் அலுவலகத்தில் உள்ள என் தோழியிடம் தவறாக நடப்பதாக குற்றம் சாட்டி என் வலைதளத்தில் பின்னூட்டம் இட்டான். அதைப் படித்த போது தான் எனக்கு காரணம் விளங்கியது.
நண்பனுக்கு அந்த தோழி மீது ஒரு கண். இப்போது அவனுக்கு நான் அவளை அடைய முயல்கிறேனா என சந்தேகம். ஏன் இந்த சந்தேகம் வந்தது, ஏதாவது மனப்பிராந்தியோ என யோசித்தேன். நான் குறிப்பிட்ட தோழியிடம் இதைச் சொல்லி அவனிடம் கவனமாக இருக்க கூறினேன். பிறகு நடந்தது தான் சுவாரஸ்யம். நான் எப்போதாவது அந்த தோழியிடம் பேசினால் அவள் அதை அவனிடம் தெரிவிப்பாள். அவளாக என்னை அழைத்து பேசினாலும் அதையும் அவனிடம் சொல்லுவாள். அவன் உடனே என்னை திட்டி குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஏதாவது அனுப்புவான். இது வாடிக்கையாக இருந்தது. பிறகு அந்த தோழி சமீபமாக அவளும் நண்பனுமாக ஒரு வேலை விசயமாக சேர்ந்து ஒரு ஊருக்கு போவதாக மறைமுகமாக எனக்கு தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினாள். அவர்களின் உறவுக்கும் எனக்கும் சம்மந்தமில்லாத போது எனக்கு ஏன் தகவல் சொல்ல வேண்டும் என யோசித்தேன். அவர்கள் சேர்ந்து சுவிஸ்ஸர்லாந்துக்கோ சூரங்குடிக்கோ போகட்டும். அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது சம்மந்தப்பட்ட கணவன்/மனைவி தானே. ஆனால் அவள் ஒரு வரியையும் கூட சேர்த்திருந்தாள்: “உயிர்மையில் வந்த உன் திருமணத்துக்கு பிந்தைய நட்பு பற்றின கட்டுரை தான் எங்களுக்கு தூண்டுகோல்” என்று. எனக்கு அவள் எங்களை வைத்து ஒரு பகடையாட்டம் ஆடுகிறார் என அப்போது தான் புரிந்தது.
உளவியலில் இதனை முன்-துருத்தம் (projection) என்கிறார்கள். அதாவது நாம் செய்கிற குற்றம் ஒன்றை இன்னொருவர் செய்வதாக சித்தரித்து சாடுவது. உதாரணமாக பொய் சொல்பவன் அடுத்தவன் பொய் சொல்வதாக சொல்லிக் கொண்டிருப்பான். அதிகமாக ஒழுக்கவாதம் பேசுகிற பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் போர்னோ பார்ப்பது, திருடன் சதா அடுத்தவனை திருடன் எனக் கூறுவது, அமெரிக்க தீவிரவாதிகள் இஸ்லாமிய தீவிரவாதிகளை கொலைகாரனாய் பார்ப்பது, திரும்ப இஸ்லாமிய தீவிரவாதிகள் அமெரிக்கக்காரனை குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பது, இருசாராரும் தத்தமது கொலைகளை எதிர்கொள்ள மறுப்பது என பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். வரலாற்றில் சிறந்த உதாரணம் ஹிட்லர். அவர் யூதர்களால் தமக்கு ஆபத்து என சொல்லி சொல்லியே அத்தனை யூதர்களையும் அழித்தார். அதன் மூலம் ஜெர்மானியர்களின் அத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரு செயற்கையான வடிகால் கண்டார். நம் அலுவலகங்களில் அடுத்தவர்களின் வேலையை குறை கூறுபவர்கள் பொதுவாக சதா ஒ.பி அடிப்பவர்களாக இருப்பார்கள். எதுவொன்றைக் தவறு என நினைத்து குற்றவுணர்வு கொள்கிறோமோ அது நம் மனதை சதா ஆட்கொண்டபடி இருக்கும். இப்படி மனசாட்சி உறுத்துகிறவர்கள் பழியை பிறர் மீது போட்டு தம் மீதுள்ள கோபத்தை வெளியே ஒரு அப்பாவியிடம் காட்டி அதன் மூலம் தம்மையே வலிக்காமல் தண்டித்து கொள்வார்கள். இது பிரஞைபூர்வமாக அல்லாமல் தன்னிச்சையாக நடப்பது.
இதில் ஆக சுவாரஸ்யம் Projective Identification. அதாவது ”முன்-துருத்தப்பட்ட அடையாளப்படுத்தல்” என முரட்டுத்தனமாக மொழிபெயர்க்கலாம். சுருக்கமாக இது நம்மால் ஏற்க முடியாத நம்முடைய குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு நிற்காமல் மெல்ல மெல்ல உருவேற்றி அவரை அப்படியானவராக மாற்றி விடுவது. உதாரணமாக “ஏன் சார் உங்களுக்கு ரொம்ப கோபம் வருகிறது?” என திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் நிஜமாகவே உங்களுக்கு கோபம் வந்து விடும். அப்போது நான் “அப்பவே சொன்னேன் இல்லியா, உங்களுக்கு ரொம்ப கோபம் வருது சார். பி.பி இருக்கான்னு செக் பண்ணுங்க” என நியாயப்படுத்தலாம். ஒரு கட்டத்தில் உங்களுக்கு பி.பியும் வந்து விடும்.
அலுவலகத்தில் ஒரு மேலாளருக்கு ஒரு கீழ்நிலை ஊழியரை பிடிக்காது. ஆனால் அவர் நன்றாக வேலை பார்ப்பவராக இருப்பார். மேலாளர் தொடர்ந்து இவரை ”மோசமான ஊழியர்” என முத்திரை குத்தி சித்திரவதை செய்து, மட்டம் தட்டி அவமானப்படுத்தி, பதவி உயர்வை, சம்பள உயர்வை முடக்கி அவரது வேலை செய்யும் ஊக்கத்தை அழிப்பார். விளைவாக ஒரு கட்டத்தில் இந்த நல்ல ஊழியர் வேலையில் ஆர்வம் இழந்து தவறுகள் செய்யத் துவங்குவார். ஒ.பி அடிப்பார். விளைவாக மேலாளர் அவரை சுலபமாக வேலையில் இருந்து தூக்கி விடுவார்.
இதே போலத் தான் குடும்பத்தில் குழந்தைகளின் நிலையும். உதவாக்கரை, பொறுக்கி என தொடர்ந்து பழிகூறப்படும் ஒரு குழந்தை தன் எதிர்ப்பை கட்ட ஒரு கட்டத்தில் அவ்வாறே பொறுக்கியாக சோம்பேறியாக மாறக் கூடும். வகுப்பறையில் ஒரு ஆசிரியர் சில மாணவர்களை மோசமானவர்கள் என முடிவு செய்து பலவித தண்டனைகள் அளித்து ஒடுக்கும் போது அவர்கள் இன்னும் அதிகமாக அதே தவறுகளை செய்வதை பார்க்கிறோம். வகுப்பில் கவனிக்காத மாணவர்களை குற்றம் சாட்டாமல் இருந்தாலே அவர்கள் மெல்ல மெல்ல கவனிக்க துவங்குவதை தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன்.
நான் முதலில் குறிப்பிட்ட என்னுடைய தோழியும் நண்பனும் செய்தது Projective Identification தான். தம்முடைய குற்றவுணர்வை என் மீது சுமத்தி இரையாக்குவது நோக்கம். இவர்கள் தாம் திருடி விட்டு அடுத்தவரை திருடன் என்பார்கள். கொடுமை என்னவென்றால் அதை மனதார நம்பவும் செய்வார்கள். நான் இந்த பிரச்சனையில் இருந்து முழுக்க விலகிக் கொண்டேன். அப்படி அல்லாமல் நான் என்னை நிரூபிக்க முயன்றால் ஒரு கட்டத்தில் நானாகவே இந்த முக்கோண காதல் கதையில் போய் மாட்டிக் கொள்வேன். காமம் என்பது ஓடுகிறவரை நாய் துரத்துவது போலத் தான்.
மேலும், தோழிக்கு தன்னுடைய தோற்றம், ஈர்ப்பு குறித்த கவலை மற்றும் தாழ்வு மனப்பான்மை. 35 வயதுக்கு மேல் தன்னை என் நண்பர் பின் தொடர்கிறார் என்பதில் ஒரு கிளர்ச்சி. நண்பனுக்கு என் பால் சந்தேகம் என தெரிந்ததும் அதை பயன்படுத்தி அவனை இன்னும் அதிகமாக் தவிக்க வைப்பதில் அவருக்கு ஒரு கிளுகிளுப்பு. மற்றபடி அசலான காம நோக்கம் கொண்டவர்கள் இது போல் விளையாடிக் கொண்டு ஊருக்கு தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்க மாட்டார்கள். காம நிறைவேற்றத்துக்கும் அது சார்ந்த குற்றவுணர்வுக்கு இடையில் ஆப்பு போல் மாட்டிக் கொண்டவர்கள் தாம் இப்படி அல்லாடிக் கொண்டு அடுத்தவர்களையும் அல்லாட வைப்பார்கள்.
கோபத்தை காட்ட மட்டுமல்ல காமத்தை காட்டத் தெரியாதவர்களுக்கும் எப்போதும் தேவை ஒரு மென் இலக்கு தான். அப்போது கருணையும் பேரன்பும் மிக்கவர்கள் தான் அம்மிக்கும் குழவிக்கும் இடையில் மாட்டி நசுங்குவார்கள். உலகில் எதையுமே செய்ய இயலாதவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். சிலர் வெறுப்பின் பெயரில் சீரியல் கொலைகாரன் ஆகி சம்மந்தமில்லாதவர்களை கொல்லுகிறார்கள். சிலர் அன்பின், நட்பின், தாம்பத்தியத்தின் பெயரில் அணுக்கமானவர்களை டிராகுலாவாக கடித்து உறிஞ்சுகிறார்கள்.
நம்மிடம் யாராவது முகத்தை தூக்கிக் கொண்டு வந்தால் நாமும் முகத்தை கடுகடுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதையும் மீறி வெறுப்பை நம்மிடம் கக்கினால் அதை இரட்டிப்பாக நாம் திருப்பி கக்க வேண்டும். ஐயோ பாவம் மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க உதவுவோம் என எண்ணினால் நீங்கள் இரையாகி அடுத்து அவர்களைப் போல் பாரத்தை இறக்கி வைக்க யாரையாவது தேடி வேட்டையை ஆரம்பிப்பீர்கள்.
இது உக்கிரமான தகவல் பரிமாற்றத்தின் காலம் என்பதால் மாறி மாறி கிழித்துக் கொண்டு உலகமே ரத்தக் களறியாகி போகிறது. அடுத்த நாள் ஒன்றுமே நடக்காதது போல வந்து மீண்டும் மாறி மாறி கிழித்துக் கொள்ளுவார்கள். இன்று முகநூலில் நடப்பது பார்த்தால் இது எவ்வளவு உண்மை என புரியும். நடப்பு உலகில் நெருக்கமான உறவுகளில் அன்பின் பேரில் துன்புறுத்தி இன்பம் பெறுகிறோம். ஆனால் முகநூலில் நம்முடைய சுயவெறுப்பை சம்மந்தமில்லதவர்களிடம் காட்டுவது தான் அதிகம் நடக்கிறது.
இணையத்தில் காட்டப்படும் வெறுப்பு குறித்து நிறைய ஆய்வுகள் நடந்து வருகின்றன. பொதுவாக இணையத்தில் வசை பாட யாருக்கும் கூச்சம் இருப்பதில்லை. ஆனால் இவர்கள் நடப்பு வாழ்வில் மிக கூச்சமானவராக கண்ணியமானவராக இருப்பார்கள். இரண்டுமே உண்மை தான். இரண்டும் ஒருவேறு ஆளுமைகள் எனலாம். சாரு நிவேதிதா ஒரு நல்ல உதாரணம். நேரில் பழக அவர் அவ்வளவு மென்மையானவராக நட்பானவராக இருப்பார். நீங்கள் அவரை நேரில் பார்த்து கடுமையாக திட்டிப் பாருங்கள். அப்பாவியாக முழிப்பார். ஆனால் பதில் சொல்ல கணினி முன் அமர்ந்ததும் முற்றிலும் வேறொருவராக மாறி விடுவார். இது போல் எண்ணற்றவர்கள் இரட்டை ஆளுமையுடன் இருக்கிறார்கள். ஏன் இப்படி?
பொதுவாக இணையம் உங்களை அடையாளமற்றவராக மாற்றுகிறது. ஒற்றைக்கை மாயாவி போல் செயல்படலாம். இந்த சுதந்திரம் வசைக் கலாச்சாரத்துக்கு காரணம் எனப்படுகிறது. ஆனால் இது முழுக்க சரியல்ல. இன்று இணைய வசைக்காக நீங்கள் சிறை செல்ல நேரிடும். பெயர், புகைப்படம் உட்பட நம்முடைய அடையாளம் தெளிவாக தெரிந்த நிலையிலும் கூடத் தான் அடுத்தவரை வசை பாட தயாராகிறோம். ஒருவேளை போலி ஐடியில் இருந்தாலும் கூட கண்டுபிடிப்பது அத்தனை சிரமம் அல்ல. இப்போதெல்லாம் நீங்கள் போடுகிற கமெண்ட் எரிச்சலூட்டினால் போலிசுக்கு போகாவிட்டாலும் போனில் அழைத்து கடுமையாக திட்டி விடுகிறார்கள். ஆக இணையம் ஒன்றும் அத்தனை பாதுகாப்பானது அல்ல.
இன்னொரு சாத்தியமுள்ள காரணம் இது: இணையத்தில் இருக்கும் போது நீங்கள் உயர்வான ஒரு சுய அபிமானத்துடன் இருக்கிறீர்கள்; உங்கள் கருத்துக்களை பதிய உடனடி இடம் இருக்கும் போது, அதற்கு பிறர் பதில் கூற முனையும் போது உங்களுக்கு ஒரு தனி அந்தஸ்து, அதிகாரம் இருப்பதாய் ஒரு பிரமை ஏற்படுகிறது. உங்களுக்கு நீங்களே ஒரு சிம்மாசனம் போட்டுக் கொண்டு நியாயம் கூறி தண்டனை வழங்க துவங்குகிறீர்கள். பிற ஊடகங்களுடன் ஒப்பிடுகையில் இணையத்தின் முக்கிய வேறுபாடு அதன் பலதரப்பிலான உரையாடல் சாத்தியம். நடப்பு வாழ்வில் உங்களுக்கு ஒருவர் பதில் கூறினால் அவர் அதற்கு பாத்தியப்பட்டிருப்பதாக நம்புவோம் இல்லையா? ஆனால் நடப்பு வாழ்வில் யாரும் நம்மை பொருட்படுத்தி பதில் கூறுவதில்லை. ஏகப்பட்ட படிநிலை சிக்கல்கள், விதிமுறைகள் உள்ளன. அதையெல்லாம் கணக்கில் கொண்டு உங்களை ஒருவர் மதித்து பதில் கூறுவார். ஆனால் இணையத்தில் படிநிலை கிட்டத்தட்ட இல்லை. எல்லோரும் சமம். யாரும் யாரையும்  உதாசீனிப்பது எளிதல்ல. சின்மயி விவகாரம் ஒரு நல்ல உதாரணம். ஒரு அரசியல் தலைவரைக் கூட ரோட்டில் சும்மா திரிகிற ஒருவர் சட்டைக்காலரை பிடித்து கேள்வி கேட்க முடியும். கலைஞர் தன் ட்விட்டர் கணக்கையே மூடினார். இணையத்தின் இயல்பே இந்த பதில் கூறலாக இருக்கும் போது நமக்கு ஒரு அகம்பாவம், அதனாலான கிளுகிளுப்பு ஏற்படுகிறது.
முகநூலில் நண்பர்களை விட சம்மந்தமில்லாதவர்கள் தாம் படுஜோராக அவதூறு பேசுவதில் ஈடுபடுகிறார்கள். நிஜவாழ்க்கையின் நட்பு மற்றும் உறவு வட்டங்களில் உள்ள குரோதம் தாங்க முடியாததால் நாம் இப்படி முகநூல் வேட்டைக்களத்தில் அந்நியர்களிடம் வன்மத்தை காட்டுவதில் குதூகலிக்குறோமா? முகநூலில் பெரும்பாலும் மனம் லேசுபடுவதற்கு தான் வருகிறார்கள். ஏதாவது ஜோக் பரிமாறுவது நடைபெறும். அது உபயோகப்படாவிட்டால் கடும் பரஸ்பர தாக்குதல்கள் சம்மந்தமில்லாதவர்களிடையே மிக பரவலாக நடைபெறும்.
இந்த விர்ச்சுவல் உலகில் நண்பர்களிடையே கொடூரமான வசைகள் பரிமாறப் பட்டாலும் கூட நேரில் சந்திக்கையில் அன்பாக கட்டித் தழுவுவது எளிதாக உள்ளது. ஆக வலைதொடர்பு தளங்களில் நாம் பேசுவது வெறும் விளையாட்டுத்தனமானது என நினைக்கிறோம். இந்த விளையாட்டுத்தனம் நமக்கு அளப்பரிய சுதந்திரத்தை தருகிறது. நான் அடிப்பது போல் அடிப்பேன் நீ அழுவது போல் அழு என்பது விதிமுறை.
சுடுசொற்கள் ஆறாத காயத்தை ஏற்படுத்தும் என நம் பழந்தமிழ் இலக்கியத்திலும் பழமொழிகளிலும் சொல்லப்படுகிறது. ஆனால் இது உண்மையல்ல என முகநூல் நிரூபித்து உள்ளது. நமக்கு சுடுசொல்லும் வேண்டும், அதன் சூட்டை நிஜவாழ்க்கையில் அனுபவிப்பதும் கடினம். ஸூக்கர்பெர்க் இந்த சிக்கலுக்கு ஒரு அருமையான மாற்று வழி கண்டு தந்துள்ளார். நம்முடைய மனநோய்க்கு முகநூல் ஒரு சிறந்த தற்காலிக தீர்வாக விளங்குகிறது. அங்கு உலவுபவர்கள் அப்நார்மலாகவோ பைத்தியக்காரர்களாகவோ நமக்கு தோன்றுவது இதனால் தான். வீட்டுக்குள், படுக்கையறை வரை, அங்கிருந்து செல்போன் இணையம் மூலம் நம் சட்டை பாக்கெட் வரை ஒரு பைத்தியக்கார மருத்துவமனை கூடவே வருவது நவீன மனிதனின் மிகப்பெரிய அனுகூலம்.


2013 ஜூலை மாத உயிர்மையில் வந்த கட்டுரை
Share This

3 comments :

  1. திரு அபிலாஷ்,

    மிகவும் அற்புதமான கட்டுரை

    ஒரே ஒரு உறுத்தல்: நீங்கள் ஒற்றைக்கை மாயாவி என்று சொல்வது முத்து காமிக்ஸில் வரும் மறையும் மாயத்தன்மை கொண்ட காமிக்ஸ் ஹீரோவைத்தானே? அப்படி எனில் அவரை இரும்புக் கை மாயாவி என்று அழைத்தாலே சரியாகும்.

    நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள கட்டுரை..

    ReplyDelete
  3. // ஒருவரிடம் நேரடியாக எதிரியாக மோதத் துவங்கினால் அவர் உங்களுக்கு ஓரளவு மரியாதை கூட கொடுப்பார்//
    உண்மை. ஆனால் காத்துக்கொண்டிருக்கிறார்கள் சந்தர்ப்பத்திற்காக

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates