Thursday 11 July 2013

ஜெயலலிதா, கனிமொழியை அரசியலில் இருந்து தடை செய்யலாமா?

ரெண்டு ஆண்டுகள் தண்டனை பெறுபவரின் எம்.பி, எம்.எல்.ஏ பதவியை பறிக்கலாம் என்றொரு தீர்ப்பு வந்துள்ளது. இதை ஒரு புறம் விநோதமாய் எதிர்க்கிற “சமூக ஆர்வலர்களும்” இருக்கிறார்கள். அவர்களின் தரப்புகள் இரண்டு.


ஒன்று ஆளுங்கட்சி பொய் வழக்கு ஜோடித்து எதிர்க்கட்சி ஆட்களை முடக்குவதற்கு தேர்தலில் பங்கு கொள்ள விடாமல் பண்ணுவதற்கு இச்சட்டத்தை பயன்படுத்தலாம் என்கிறார்கள். இதை நாம் மறுப்பதற்கில்லை. அதே வேளை இதைக் கொண்டு அச்சட்டத்தை எதிர்ப்பது தவறு. வரதட்சணை சட்டம், தாழ்த்தப்போர் பாதுகாப்பு சட்டங்கள் கூட தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் உண்டு. அதற்காக அச்சட்டங்களின் சாதகமான விளைவுகளை மறுக்கலாமா? கூடாது.

ஒருவர் குற்றவாளி என அறிந்தும் மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி இருக்க இச்சட்டம் மக்களின் உரிமையில் குறுக்கிடல் ஆகாதா? ஆகாது. மக்கள் ஒன்று தனிநபரின் திறமை ஒழுக்கம் பார்க்காமல் கட்சி விசுவாசத்துக்காக, ஜாதிக்காக, லஞ்சத்துக்காக ஓட்டுப் போடுகிறார்கள். மக்களின் பொறுப்பின்மை, அரசியல் பிரக்ஞையின்மை புரிந்து கொள்ளக் கூடியது தான். ஒரு ஜனநாயக அமைப்பு சரியாக செயல்பட ஒன்று மக்களுக்கு நல்ல கல்வி அறிவும் அரசியல் ஆர்வமும் வேண்டும். முக்கியமாக அனைவரும் சமம் என்கிற புரிதல் வேண்டும். அது தான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால் நம் ஊரில் கணிசமான மக்கள் இன்னும் ஒரு மன்னராட்சி மனநிலையில் தான் இருக்கிறார்கள். அதனால் தான் வாரிசு அரசியல் தழைக்கிறது. இன்னொரு புறம் எதிலும் குறுக்கிட விரும்பாத மத்திய வர்க்க மனநிலையை பெரும் தடையாக இருக்கிறது. ஆக மக்களுக்கு வழிகாட்டும் பொறுப்பை நீதித்துறையும், சமூகத்தின் அறிவுஜீவிகள், போராளிகள் ஆகியோர் எடுத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இந்த சட்டம் அப்படி நம் மக்களுக்கு வழிகாட்டும் ஒரு முயற்சி தான். அலஹபாதில் சாதியின் பெயரில் பேரணி நடத்துக் கூடாது என ஒரு சட்டம் வந்துள்ளது. அதற்கு மக்கள் சாதி பாராட்டுகையில் நாம் ஏன் பேரணியில் மட்டும் சாதியை தடை செய்யலாம் என கேட்கலாமா? ஜனநாயகம் என்றால் மக்கள் செய்கிற தவறுகளை எல்லாம் கண்மூடி அனுமதிப்பது அல்ல.
மேலும் மக்களின் தேர்வு உரிமை என்பது எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படுவது இல்லை. ராஜ்யசபா எம்.பியை மக்கள் தேர்வதில்லை. அதில் கனிமொழி மாதிரி ஒரு குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவர் தேர்வாவது பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? கனிமொழிக்கு பதில் திருச்சி சிவாவை அனுப்பத் தான் மக்கள் விரும்பினார்கள். அப்போது மக்களின் உரிமை பாதிக்கப்படுவதில்லையா? இங்கு சொந்த குடும்பத்துக்காக மக்கள் உணர்வை உதாசீனிப்பது ஜனநாயக விரோதம் இல்லையா?
அடுத்து ஒருவர் குற்றம் நிரூபிக்க படும் வரை நிரபராதி தானே? அப்படியே தீர்ப்பு எதிராக ஆனாலும் அவர் மேல்முறையீடு செய்யலாமே? இந்த காலகட்டத்தில் அவர் பதவியில் இருப்பதில் என்ன தவறு என்கிறார்கள்? இந்த நிரபராதி வாதத்தை ரொம்பவே ஜவ்வாக இழுக்கிறோம் என நினைக்கிறேன். சில குற்றங்கள் கண்கூடானவை. அஜ்மல் கசாப் அல்லது தில்லியில் ஓடும் பேருந்தில் அப்பெண்ணை கற்பழித்து கொன்றது போல. கசாப்பை தூக்கிடவே எவ்வளவு வருடம் ஆகிற்று என பார்த்தோம்? அவர் தூக்கில் தொங்கும் முன் வரை அவர் நிரபராதி என நான் சொன்னால் ஏற்பீர்களா? 2G, நிலக்கரி ஊழல் போன்று இன்றுள்ள பல ஊழல்கள் இப்படி அப்பட்டமான குற்றங்கள் தாம். நீதிவிசாரணை என்பது இவர்கள் தம்மை பணம், மற்றும் செல்வாக்கை கொண்டு தப்பிப்பதற்கான ஒரு செயல்பாடாக மாறி உள்ளது. இந்தியாவில் 30% மக்கள் பிரதிநிதிகள் மீது இன்று வழக்கு நடக்கிறது. இவர்கள் அத்தனை பேரையும் நிரபராதி என்ற பெயரில் நடக்கின்ற வழக்கின் பெயரில் பதவியில் இருக்க அனுமதிப்பது மேலும் குற்றங்களை செய்ய தூண்டுவதோடு ஏற்கனவே உள்ள வழக்குகளை மூடி மறைக்கவும் பயன்படும். இதை யோசிக்க ஏன் மறுக்கிறோம்?
மேலும் குற்றவிசாரணையின் போது பதவியில் நீடிப்பது இங்கு ஒரு சாதாரண ஆளுக்கு உள்ள வசதியா? இல்லை. நீங்கள் நாளை கொலைக்குற்றம், கற்பழிப்புபண்ணினதாக ஒரு சந்தேகம் வந்தால் பிறகு வேலையில் தொடர முடியாது. வேலை, குடும்பம், சமூக மரியாதை, இடம் எல்லாம் காலியாகி விடும். எல்லோருக்கும் இது தான் இங்கு நிலை. அரசியல்வாதிக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்க வேண்டும்?
தாவூத் இப்ராஹின் மீது இப்போதும் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சந்தேகம் தான் உள்ளது. இன்னும் நிரூபிக்க படவில்லை. அவர் நாளை இந்திய வந்து எம்.பி தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? அவர் தன் மீதுள்ள குற்றங்களை நிறைய செலவு செய்து மறுத்து நிரபராதி என நிரூபித்து பிரதமர் பதவி அடைகிறார் என்று சொல்வோம், கற்பனையாக, நீங்கள் அவரை பிரதமராக ஆவதை ஆதரிப்பீர்களா?
மேலும் இந்தியாவை முழுமையான ஒரு ஜனநாயக அமைப்பாக கருத முடியாது. இது மன்னராட்சியும் ஜனநாயகமும் கலந்து ஒரு அமைப்பு. இங்கு மக்கள் ஆட்சியில் அறிவுபூர்வமாகவோ செயல்ரீதியாக கலந்து கொள்வதில்ல்லை. அவர்களுக்கு அரசியல் பிரக்ஞை குறைவு. ஆக நீதிபதிகள், அறிவுஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மக்களின் சார்பில் சீரழிந்த அரசியல்வாதிகளை எதிர்க்க வேண்டி வருகிறது. இதை moral policing என்று அரசியல்வாதிகள் நீதித்துறை மீது குற்றம் சாட்டுகிறார்கள். இது தப்பு. இது ஒழுக்க போலீஸ் வேலை அல்ல. இது ஒரு நெறிகாட்டல். அவர்கள் இதை செய்யாவிட்டால் நம் நாடு மீள்முடியா பள்ளத்தில் போய் விழும்.
இங்கு வழக்குகள் முடிவுக்கு வர நீண்ட காலம் எடுப்பது தான் உண்மையான சிக்கல் எனப்படுகிறது. உண்மை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கிய வழக்குகளை துரிதப்படுத்த fast-track நீதிமன்றங்களை அமைக்கலாம். அவ்வளவு தான். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதி ஆவதை தடுத்தாலே அவர்களின் அதிகாரம் காலி ஆகி விடும். இது அவர்களை தளர்த்தும். ஒன்று இதையே ஒரு தண்டனையாக பார்க்கலாம். இன்னொன்று அதிகாரத்தில் இல்லாத ஒருவரை இன்னும் துரிதமாக விசாரித்து நியாயமாக தீர்ப்பு சொல்ல முடியும். ஜெயலலிதா ஒரு உதாரணம். அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு வந்தவுடன் அவரது அரசியல் வாழ்வு தடை செய்யப்பட்டிருந்தால் அவ்வழக்கு இன்னும் துரிதமாக நியாயமாக நடந்திருக்கும். அவர் தன் செல்வாக்கு, பணம், அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பிக்க முடியாது. கட்சி உடைந்து அவர் நிர்கதி ஆகியிருப்பார். ஒருவேளை தீர்ப்பில் இருந்து தப்பித்தாலும் இதுவே அவருக்கு பெரும் தண்டனையாகி இருக்கும்.
ஆக இந்த குற்றவாளிகள் மக்கள் பிரதிநிதி ஆவதை தடை செய்யும் சட்டம் சிக்கலான, மெத்தனமான, “பல அடுக்கு கொண்ட” நம் நீதி அமைப்பில் இந்த ஊழல் அரசியல்வாதிகளுக்கு மறைமுகவேனும் தண்டனை பெற்றுத் தருவதற்கான ஒரே வழி. இதைப் போய் எதிர்க்கலாமா? எதிர்த்தால் உங்களுக்கும் இந்த அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?

Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates