Sunday 27 November 2011

காதல் சந்திக்கும் சவால்கள் – குருதியும் ஊடகங்களும்



காதலுக்காக எக்காலத்திலும் குருதி சிந்தப்பட்டுள்ளது. இது பணம், சமூக அந்தஸ்து, சாதிப் பற்று ஆகிய காரணங்களினால் நடந்து வருவது. வடக்கில் இதற்கு honor killing என்று பெயர் உண்டு. ஆனால் சமகாலத்தில் தான் காதலுக்காக அல்ல காதலை தடை செய்யும் காரணத்துக்காக கடுமையான வன்முறை செயல்களில் குறிப்பாய் இளம் தலைமுறையினர் ஈடுபட்டு வருவதை காண்கிறோம்.
காதலில் ஈடுபவதை எதிர்த்ததற்காக அம்மாவை அம்மிக் குழவியால் இடித்து கொன்று தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் அமுக்கி கொல்லும் பெண்கள். பெற்றோர்களுக்கு மயக்க மருந்து கொடுத்து காதலன் துணையோடு நெரித்து கொல்லும் சகோதரிகள், வேறு பெண்தொடர்புகள் கொண்டிருந்ததால் உடற்பயிற்சி நிலைய பயிற்சியாள கணவனை கூலிப்படையை ஏவி மின்வயர்களை சுற்றி கொல்லும் மனைவிகள், காதலனை பழிவாங்க அவனது குழந்தையை கொல்லும் கள்ளக்காதலிகள் என இன்று நாம் காணும் இந்த வன்முறை வெளிப்பாட்டில் ஒரு விநோத தன்மை உள்ளது. இது சாதியம், மதம், ஒழுக்கம், காதல் என்ற லட்சியங்களுக்காக செய்யப்படும் கொலைகள் அல்ல. உறவுகளுக்குள் நாம் சகிப்புத்தன்மையை இழந்து வருவதை, பரஸ்பர சந்தேகத்தினால் தனிமையுணர்வை அடைந்து வருவதை காட்டுகின்றன. இவை காதலுக்கான கொலைகள் அல்ல, வெறும் காதல் கொலைகள்.
காதல் எனும் வெட்டவெளி
நுண்பேசி படக்கருவியும் முகநூல் போன்ற சமூகவலைதொடர்பு தளங்களும் ஆண் பெண் உறவை பொதுமேடைக்கு நகர்த்தி உள்ளன. ஒரு உறவை திரைகளுக்கு பின்னே இருட்டில் ஒளித்து வைப்பதும் வெட்டவெளியில் பலர் முன்னிலையில் கொண்டு வருவதற்கும் ஒரே நோக்கம் தான். அந்த உறவின் நெருக்கடியில் இருந்து தப்பித்தல்.
நுண்பேசியில் படம்பிடிக்கப்பட்ட ஏகப்பட்ட அந்தரங்க காட்சிகள் எம்.எம்.எஸ்களாகவும் இணையத்தில் மலிந்து வருகின்றன. இவை ரகசியமாக அல்ல இருசாராரின் அறிவுடன் தான் படம் பிடிக்கப்படுகின்றன. படக்கருவி முன் நிர்வாணமாய் தோன்றுவதிலும் உறவில் ஈடுபடுவதிலும் நமக்கொரு கிளர்ச்சி உள்ளது. இக்காட்சிகள் பின்னர் நண்பர்களிடம் பரவி இணையத்தில் சென்று போர்னோவாகின்றன. இணையத்தில் போர்னோ பார்ப்பவர்களுக்கு எந்நேரமும் தமக்கு தெரிந்த ஒரு முகம் அதில் தோன்றி அதிர்ச்சியுறும் அபாயம் உள்ளது. இணையை பின்னர் மிரட்டவும், பிறரிடம் தன் பாலியல் அந்த ஆற்றலை காண்பிக்கவும் உத்தேசித்தாலும் படம் பிடிப்பவர்கள் அந்தரங்க காட்சிகள் பல்கி பெருகும் ஒரு வைரஸ் கிருமி போன்றது என்பதை அதை செய்யும் போது உணர்வதில்லை. ஒரு கட்டத்தில் அவர்களின் அந்தரங்கம் அவர்களுக்கு அல்லாததாகிறது. அது கோடானுகோடி கோடி கண்களால் கொட்டாமல் பார்க்கப்படுவதை அவர்களால் என்ன முயன்றும் தடுக்க முடியாது.  இப்படி வெட்டவெளிச்சத்துக்கு காம உறவை கொண்டு வருவதன் மூலம் நமது தலைமுறை ஆண்-பெண் உறவை அதிக மதிப்பற்ற ஒரு தற்செயல் நிகழ்வாக மாற்றுகிறது. இன்று ஒரு பிரபலம் மீது ஊடகத்தில் பாலியல் புகார் ஆதாரத்துடன் வந்தாலும் அது ஒரு போர்னோவாக விரைவில் மாற்றப்பட்டு பரவலாக புழங்கியபின் மறக்கப்பட்டு விடுகிறது. பாலியல் குற்றங்களை நாம் இன்று அசட்டையாக பார்ப்பது போல் ஒன்றை நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் கற்பனையே செய்ய முடியாது. இதற்கு ஊடகங்கள் ஒரு முக்கிய காரணம்.
ஒரு திருமணமான நண்பர் தனக்கு நல்ல வாழ்க்கை துணை இல்லாமல் தவிப்பதாய் முகநூல் நிலைத்தகவலில் கூறுகிறார். அவரது ஆயிரக்கணக்கான நண்பர்களில் ஒருவர் அவரது சுவரில் “உங்களுக்கு விரைவில் திருமணமாகி நல்ல வாழ்க்கை துணை அமையட்டும் என்று வாழ்த்துகிறார். இதை அவர் மனைவி வாசித்தால் எப்படி குழம்பி போவார். பல தம்பதிகள் தமது குடும்ப விரிசல்களை இப்படி நிலைத்தகவல்கள் மூலம் பிரஸ்தாபித்து கோபத்தை வெளிக்காட்டுகிறார்கள். உதாரணமாக கீர்த்தனா மோகந்தாஸுக்கு தன் கணவனை பிடிக்காமல் போனால் உடனே இரண்டாவது பெயரை மாற்றி அப்பா பெயரை போட்டு கீர்த்தனா சந்திரசேகர் ஆகி விடுகிறார். இதன் மூலம் தனது திருமண உறவு நிலையை நண்பர்களை ஊகிக்க விடுகிறார். வேறு பல திருமண ஜோடிகள் முகநூலில் நேரடியாக ஒருவரை ஒருவரை தாக்கிக் கொள்கிறார்கள். தனிப்பட்ட வெளியில் நமது உறவுச் சிக்கல்களின் தீர்க்கும் சாத்தியங்களோ மன உறுதியோ நேர்மையோ இல்லை என்ற நிலையில் தான் முகநூல் போன்ற பொதுவெளியில் தம்பதிகள் மோதிக் கொள்கிறார்கள். ஜனநெரிசலில் பாதுகாப்பு உள்ளதாய் நினைக்கிறார்கள். நெருக்கமான நண்பர்களிடம் பிரச்சனையை விவாதிப்பதற்கும் நம்மை பரிச்சயமே இல்லாத ஆயிரக்கணக்கான முகநூல்வாசிகளிடம் தனிப்பட்ட கவலைகளை பகிர்வதற்கும் வித்தியாசம் உண்டு. இது நமது தனிமனித உறவுகள் எவ்வளவு பலவீனப்பட்டு போயுள்ளது, கட்டற்று தொடர்பு சாத்தியங்கள் உள்ள யுகத்தில் நாம் நம் முன் உள்ள ஒரு மனிதரிடம் மனம் திறந்து பேச எவ்வளவு அஞ்சுகிறோம் என்று காட்டுகிறது. வெளிப்படைத் தன்மையை சதா ஊக்குவிக்கும் ஊடகங்களால் சூழப்பட்ட இந்த வேளையில் தான் நாம் தினசரி வாழ்வில் நேரடியாக பேச கூட தயங்குகிறோம்.
நமக்குத் தேவை சில சொற்களை தனிமையில் பயமின்றி பேசும் அவகாசம். நான்கு கண்கள் மட்டுமே உள்ள அந்தரங்கம். அந்த கணத்தில் நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. உடனே காதலியை / காதலனை முழுமையாக நம்பத் தொடங்குகிறோம்.
Share This

2 comments :

  1. நீங்கள் நாகார்ஜுனனிடம் தான் கேட்க வேண்டும். மூன்று வருடங்களுக்கு முன் ஒரு எழுத்தாளரிடம் சென்று அவர் கட்டுரைகள் எனக்கு விருப்பம் என்பதை தெரிவித்து பாராட்டினேன். அவர் கேட்டுக் கொண்டதாகவே பாவிக்காமல் பக்கத்தில் நின்ற கண்ணனிடம் பேச தொடங்கி விட்டார். இப்படியும் தமிழ் எழுத்தாளர்களில் ஒரு வகையறா இருக்கிறார்கள். சில பேருக்கு ஆசை இருந்தால் வேண்டிய போது விரைப்பு கூடாதல்லவா அது போல். சில எழுத்தாளர்களுக்கு வாசகனின் அன்பை ஏற்க தெரியாது.

    ReplyDelete
  2. //அந்த கணத்தில் நம் மீதே நமக்கு நம்பிக்கை பிறக்கிறது. உடனே காதலியை / காதலனை முழுமையாக நம்பத் தொடங்குகிறோம்.//--->


    முழுமையாக நம்புகின்றோம் என்பதன் காரணம் முழுமையாக ஒருவரையாவது நம்ப விரும்புகின்றோம் என்பதே. ஆனால் உள்ளூர நாம் யாரையுமே முழுமையாக நம்பும் இயல்புடையவர்கள் அல்ல. ஆக, எந்த சமயத்தில் மறைந்து கிடக்கும் அந்த உண்மை முழு ஆவேசத்தோடு வெளியே வந்து செயல் பட்டு விடலாம். ஆகவே ஒருவரை முழுமையாக நம்புவது என்பது நமக்கு நாம் செய்து கொள்ளும் ஏமாற்று வேலை மட்டும் அல்ல யாரை முழுமையாக நம்புகின்றோமோ அவருக்கு நாம் செய்யும் துரோகமும் ஆகும்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates