Saturday 26 November 2011

ஹர்பஜன் சிங்கிடம் இல்லாத ஒன்று அஷ்வினிடம் உள்ளது



97 நவம்பரில் அனில் கும்பிளே இண்டிபெண்டன்ஸ் கோப்பை அரையிறுதியில் சயத் அன்வரால் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக சிக்சர்கள் விளாசப் பட்ட காரணத்தால் அணியில் இருந்து சற்று காலம் விலக்கி வைக்கப்பட்டார். அனில் உள்ளூர் பயிற்சியாளர்களிடம் அலோசித்து தன் பிழையை அறிந்து தயார் ஓட்டத்தில் சில அடிகள் குறைத்து திருத்தி ரஞ்சி கோப்பைக்கு திரும்பு விக்கெட்டுகள் குவித்து தேசிய அணிக்கு திரும்பிய போது அவரது இடம் பத்திரமாக இருந்தது. இது போல் கும்பிளே தன் ஆட்டவாழ்வில் ஏகப்பட்ட மறுவரவுகளை நிகழ்த்தினார். 2002இல் கங்குலிக்கு கீழ் தொடர்ந்து இரு டெஸ்டுகள் வெளியேற்றபட்ட போது மூன்றாவது டெஸ்டில் உடைந்த தாடையில் பெரிய கட்டுடன் பந்து வீசி அதிர்ச்சியான பிரையன் லாராவை ஒரு உயரப்பந்தால் வெளியேற்றியது, வெளியூரில் அவர் வெறும் மிதவேக வீச்சாளர் சுழலர் அல்ல என்ற தொடர் புகாரை பொய்யாக்க ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சோபித்து டெஸ்டு ஆட்டங்களை வென்று தந்தது என ஒரு சுயமுன்னேற்ற நூலுக்கான பல கிளாசிக்கல் தருணங்கள் கும்பிளேவின் ஆட்டவாழ்வில் உள்ளன. அவர் தொடர்ந்து தன் குறைபாடுகளை கடந்து விஞ்சியவராக இருந்தார். அவருக்கு முன் இருந்த பேடி, பிரசன்னா, சந்திராவிடம் இருந்தும், பின் வந்த ஹர்பஜன் இடமிருந்தும் கும்பிளே இவ்வாறு வேறு பட்டார் முன்னோடி மூவர் இயல்பான திறமையை கொண்டு போதுமான அளவு சாதித்தனர்; கும்பிளே சுமாரான திறமையை கொண்டு போதுமானதற்கும் அதிகமாக சாதித்தார்; ஹர்பஜன் மிக அதிகமான திறமையிருந்தும் தொடர்ந்து தனக்குத் தானே நிழல் யுத்தம் புரிந்து சோர்ந்து போகிறார். கும்பிளேவின் முன்னோடிகள் தம்மளவில் திருப்தியடைந்த தூய கலைஞர்கள் என்றால் ஹர்பஜன் முன்னூறு டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தும் தோல்வி பயமும் அவநம்பிக்கையும் மிக்கவராக இருக்கிறார். இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் தொடர்களில் அணியில் இருந்து விலக்கப்பட்ட பின் ஐ.சி.எல் மற்றும் செலஞ்சர், ரஞ்சி தொடர்களில் அவர் அணித்தலைவராக ஆடினார். தோனி, கிரெம் ஸ்மித், லாரா, ஸ்டீவ் வாஹ், பாண்டிங் போன்ற வீரர்கள் அணித்தலைவர்களாக மிக சிரமமான அழுத்தம் மிகுந்த சூழ்நிலைகளில் பொறுப்பெடுத்து ஆடி அணியின் பிற வீரர்களுக்கு உதாரணங்களாக திகழ்ந்தனர். இது எல்லா நல்ல அணித்தலைவர்களிடமும் நாம் காணும் பொதுவான பண்பு. ஹர்பஜன் மட்டும் மாறாக மேற்சொன்ன மூன்று தொடர்களிலும் நெருக்கடி மிகுந்த கட்டங்களில் பந்து வீச மறுத்து இளைய வீரர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தப்பித்து கொண்டார். உதாரணமாக சென்னைக்கு எதிரான ஒரு ஐ.சி.எல் ஆட்டத்தில் அவர் பந்தை இளம் கால்சுழல் பந்தாளர் சாஹலிடம் ஒப்படைத்ததை சொல்லலாம். வேறு வழியில்லாமல் போனாலோ நிலைமை சுமூகமானாலோ மட்டும் ஹர்பஜன் திரும்ப பந்து வீச வந்தார். நடந்து வரும் ரஞ்சி தொடர் ஆட்டங்களிலும் ஹர்பஜன் ஒவ்வொரு இன்னிங்சும் முப்பது ஓவர்களுக்கு மேல் வீசி விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் திணறுவதை கவனிக்கலாம். உள்ளூர் ஆட்டங்களில் கூட அவர் நிதானமாக இல்லை, ஒரு தோற்கடிக்கப்பட்ட படைவீரனை போல் வந்த பாதையிலேயே ஆவேசமாக திரும்ப ஓடுகிறார், துரதிர்ஷ்டவசமாக அவருக்கு முன்னோ பின்னோ யாரும் இல்லை. வெகுதொலைவில் அஷ்வின் உள்ளார். ஆனால் தொலைவில் உள்ள அப்புள்ளி ஹர்பஜனுக்கு பூதாகாரமாக தெரிகிறது.
இந்திய அளவில் கும்பிளே மற்றும் கபிலுக்கு அடுத்தபடியாய் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தின, உலகளவில் முன்னூறுக்கு மேல் விக்கெட்டுகள் பெற்றுள்ளதில் தற்போதும் ஆடிவரும் இரு சுழலர்களில் ஒருவரான ஹர்பஜனை இப்படி நெருக்கடிக்கு உள்ளாக்க, பின்னுக்கு தள்ள ஒரு இளம் அஷ்வினால் எப்படி முடிந்தது? ஹர்பஜனை தொடர்ந்து விமர்சித்து வந்துள்ள சஞ்சய் மஞ்சிரேக்கர் சொல்வது ஹர்பஜன் கடந்த ஐந்தாண்டுகளில் பரிணமிக்கவில்லை மாறாக தேங்கிப் போய் விட்டார் என்பது. இதன் பொருள் ஹர்பஜன் தன் திறன்களை இழந்து விட்டார் என்பதல்ல, அவரது திறன்கள் மழுங்கி விட்டன என்பதே. அப்படி மழுங்கக் கூடியனவா திறன்கள்? தூஸ்ராவை அவர் வீசுவதில்லை என்பது போக ஹர்பஜனால் இப்போதும் பந்தை எகிற வைக்கவும், நேர்பந்தால் மட்டையாளரை ஏமாற்றவும் முடியும். ஆப்ஸ்பின் எனப்படும் உள்வரும் பந்து என்றுமே அவரது இயல்பான பலமாக இருந்ததில்லை. நாடகீயமாக அகவெழுச்சியுடன் கதை சொல்லுகிற ஜெயமோகனுக்கு நகைச்சுவை வரவில்லை என்பதாலோ, எளிய மொழியில் அடக்கமாய் பெரும் மனித அவலத்தை பேசிய அசோகமித்திரனால் ஆர்ப்பாட்டமாய் வன்முறை சித்தரிக்க வராது என்பதால் அவர்கள் மோசமான எழுத்தாளர்கள் ஆவதில்லையே? எரப்பள்ளி பிரசன்னா ஹர்பஜனுக்கு சில தொழில்நுட்ப கோளாறுகள் உண்டு என்கிறார். அதையும் திருத்திக் கொள்ள முடியும். கங்குலி கூட கால்பக்கம் ஆடுவது எப்படி என்பதை ரொம்ப பிற்பாடே கற்றுக் கொண்டார். ஹர்பஜனின் பிரச்சனை உண்மையில் உள்ளார்ந்தது.
அவருக்கு நிகராக முன்னூறுக்கு மேல் விக்கெட்டுகள் கொண்ட உலகின் மற்றொரு மூத்த சுழலரான டேனியல் வெட்டோரி தனது ஆட்டவாழ்வின் முதல் பாதியை வேகவீச்சாளர்களின் நிழலில் கழித்தார். நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் அவர் அப்போதெல்லாம் பத்து ஓவருக்கு மேல் ஒரு இன்னிங்ஸில் வீச முடியாது இருந்தது. ஏனென்றால் நியூசிலாந்து பாரம்பரியமாக மிதவேக, வேக பந்து வீச்சை நம்பி இயங்கும் ஒரு அணி. அவ்வணியில் வெட்டோரி தலையான வீச்சாளரானது கெயிர்ன்ஸ், நாஷ் ஆகியோர் ஓய்வுற்று அவர்களின் வேகவீச்சு துறை பலவீனமான பின்பு தான். பின்னர் வெட்டோரி கடுமையான முதுகு காயம் காரணமாக இடதுகை சுழலருக்கு முதன்மையான பந்தாகிய வெளியே செல்லும் பந்தை வீச முடியாது போனது. பெரும்பாலான வீச்சாளர்கள் இக்கட்டத்தில் கிரிக்கெட்டில் இருந்தே வெளியே சென்றிருப்பார்கள். ஆனால் வெட்டோரி தன்னை வேறுபட்ட சுழலராக தகவமைத்துக் கொண்டார். உள்வரும் மற்றும் நேரே செல்லும் பந்துகளை வெவ்வேறு வேகங்களில் வீசுவது, பொறுமை, கற்பனை மற்றும் புத்திசாலித்தனம் ஆகியவற்றை பயன்படுத்தி தொடர்ந்து இன்றும் ஒரு அபாயகரமான சுழலராக நிலைக்கிறார். ஹர்பஜன் அறிமுகமான புதிதில் அவருக்கு சில அனுகூலங்கள் இருந்தன.
அவரது தூஸ்ரா எனப்படும் வெளியே செல்லும் பந்து, உள்வரும் பந்தின் உயரம் மற்றும் அவரது பொதுவான புதுமை. அவரை அடித்தாட பல மட்டையாளர்களும் ஆரம்பத்தில் முயன்று வெளியேறினர். இந்திய ஆடுகளங்களில் எதிரணியினர் அதிரடியாக ஆடும் போது தூஸ்ரா அவருக்கு உதவியது. தடுத்தாடினால் பவுன்ஸ் காரணமாக ஷார்ட் லெக், சில்லி பாயிண்டில் பிடிக்கப்பட்டு மட்டையாளர்கள் வெளியேறினர். கும்பிளே மறுமுனையில் ஆடினால் மட்டையாளர்கள் துரியோதனன் காந்தாரி முன் நின்றது போல் ஹர்பஜனிடம் எளிதில் மாட்டிக் கொண்டனர். ரெண்டாயிரத்தின் முதல் பாதி இவ்வாறு ஹர்பஜனுக்கு பொற்காலமாக விளங்கியது. பின்னர் கும்பிளே விலகினதும் ஹர்பஜன் மேல் நெருக்கடி அதிகமானது. ஆனால் ஹர்பஜன் பொறுப்பின் பாரத்தை தாங்க தயாராக இல்லை. அவர் தனிப்பட்ட சவால்களை ஆக்ரோஷமாக சந்திக்க விரும்பும் சர்தார்ஜியே அன்றி பொறுமையாக பெரும் காலச்சுமைகளை, வரலாற்று எதிர்பார்ப்புகளை தோளில் ஏந்தும் கும்பிளே அல்லது முரளிதரன் அல்ல. இதனால் தனக்கு தோதாக இல்லாத சூழல்களில் பாதுகாப்பாக மட்டும் வீச முற்பட்டார். சவாலாக அவற்றை ஏற்றுக் கொண்டு இங்கிலாந்தின் கிராம் ஸ்வான் போல் எதிர்தாக்குதல் தொடுக்க முயலவில்லை. சுவாரஸ்யமாக அசருதீன் மற்றும் தோனியை போல் அல்லாது ஹர்பஜனை அதிகமாக தலைமை தாங்கின கங்குலி எதிரணியை வேக வீச்சாளரர்களால் பிரதானமாய் விக்கெட் வீழ்த்தி தாக்க விரும்பியவர். அவரின் கீழ் சாதகமற்ற சூழல்களில் ஹர்பஜன் ஒரு வாளாக அல்ல கேடயமாகவே இருந்தார். இந்தியாவில் ஆடும் போது மட்டுமே ஹர்பஜன் ஒரு வீரியமிக்க வீரராக நோக்கப்பட்டார். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் ஒரு கட்டத்தில் பிடி கழன்று உறையிலேயே தங்கிப் போய் விட்டார். திராவிடின் தலைமையின் கீழ் இந்தியா பெற்ற அநேகமான தொடர் வெற்றிகளும் சரி, தோனியின் வெற்றிகளும் சரி ஸ்ரீசாந்த், ஆர்.பி சிங், சஹீர், இஷாந்த், அமித் மிஷ்ரா, ஓஜ்ஹா ஆகிய வீச்சாளர்களின் முக்கியமான பங்களிப்புகளுடன் ஹர்பஜனின் சிறிய ஆதரவுடனும் நிகழ்ந்தது. திராவிட் மற்றும் தோனியின் இரண்டாயிரத்தின் பிற்பகுதியிலான தலைமை கட்டங்களில் இப்படி இந்திய பந்து வீச்சும், ஒட்டுமொத்தமாக அணியின் தரமும் மேலோங்கிய போது ஹர்பஜன் மெல்ல மெல்ல வீழ்ந்து கொண்டிருந்தார். தனது அணியின் பொற்காலங்களில் ஒரு முரளிதரன், வார்னெ, கும்பிளே போல் அவர் தலைமை வீச்சாளராக அல்லாமல் எளிய காரணிகளில் ஒன்றாக மாறிப் போனார். இக்காலகட்டத்தில் அணி ஹர்பஜனை மீறி செல்ல முடிந்தது அல்லது முயன்றது. இதே வேளையில் தான் ஹர்பஜன் தன் மட்டையாட்டத்தை மெருகேற்றி பல முக்கியமான நெருக்கடி தருணங்களில் அணியை மீட்டவராக விளங்கினார். சொல்லப் போனால் ஆஸ்திரேலியா, நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஹர்பஜன் தன் மட்டையால் தான் பல ஆட்டங்களை வென்றளித்தார். சுவாரஸ்யமாக ஹர்பஜன் மட்டையாடும் போது மேலும் சுதந்திரமாக தோல்வி மனப்பான்மை இன்றி ஆடினார்.
இதே காலகட்டத்தில் இந்திய துணைக்கண்டத்தின் ஆடுகளங்கள் மெத்தனமானவையாக ஹர்பஜனுக்கு தோதற்றதவையாக மாறியதும் கவனிக்கத்தக்கது. அதனால் இந்தியாவில் ஆடினாலும் ஹர்பஜனை எதிர்கொள்வது மட்டையாளர்களுக்கு எளிதாயிற்று. மெத்தனமான ஆடுதளத்துக்கு ஈடுசெய்ய ஹர்பஜன் வேகமாக பந்தை திணிப்பார். ஜெயவர்தனே, காலிஸ் போன்ற மட்டையாளர்கள் அவரை பின்காலில் ஆடும் ஒரு முறையை வழமையாக வெற்றிகரமாக பின்பற்றினர். ஆப் மற்றும் மத்திய குச்சிகளில் இருந்து விலகி நாலு ஓட்டங்களுக்காய் லேட்கட் அல்லது குச்சிகளுக்கு குறுக்கே சென்று மிட்விக்கெட் பக்கமாய் ஒற்றை ஓட்டம். இந்த இரண்டு ஷாட்டுகள் கொண்டே நூற்றுகணக்காக ஓட்டங்கள் அவருக்கு எதிராய் எடுக்கப்பட்டன. ஹர்பஜன் ஓய்வுற்ற தாத்தா போல் தொலைவில் பதித்த விழிகளுடன் தான் தொடர்ந்து தட்டையாகி வருவதை ஏற்றுக் கொண்டார். இப்படி வீட்டுக்கு வெளியிலும் வீட்டுக்கு உள்ளேயும் ஹர்பஜன் எலியாகவே பரிணமித்தார்.
ஹர்பஜனை நாம் ஷோயப் அக்தருடன் ஒப்பிடலாம். இருவரும் அபரிதமான திறமை படைத்தவர்கள். ஆனால் தமக்குள் உள்ள சாத்தானை எதிர்த்து போராடியே சோர்ந்து போனவர்கள்.
ஹர்பஜன் இன்றும் அஷ்வினை விட மேலான திறமையாளர் மட்டும் அல்ல இந்தியாவின் சிறந்த ஆப்-சுழலரும் தான். அவர் முன்னூறு விக்கெட்டுகளை வீழ்த்திய போது சற்று சோர்வாகவே பேட்டியளித்தார். அந்த சாதனை வேளையில் தனக்கு வாழ்வின் தோல்விகளும் ஏமாற்றங்களுமே நினைவு வருவதாய் சொன்னார். அவர் மிக இளமையிலேயே சில ஏமாற்றங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தார். முதலில் தேசிய அணிக்குள் வரும் முன் ஒழுக்கமின்மை காரணமாய் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அணிக்கு வந்து பிரபலமடைய துவங்கிய போது அவரது பந்துவீச்சு பாணி சந்தேகத்துக்குள்ளாகியது. இந்த விசயங்கள் ஹர்பஜனை தளர்த்திட அவர் கிரிக்கெட்டை விட்டு மனதளவில் அகல தொடங்கினார். அப்போது அவரது அப்பா இறந்து விட குடும்பப் பொறுப்பை ஏற்க வேண்டிய எதிர்பார்ப்பும், ஏமாற்றத்தின் கசப்பும் அவரை ஊக்கப்படுத்தி அணிக்குள் மீள்வருகை நடத்த தூண்டின. ஒருவிதத்தில் ஹர்பஜன் முதிர்ச்சி அடைந்தாலும் அவர் தோல்விக் கூச்சம் மிக்கவராகவும் ஆனார். ஒரு தோல்வியுற்ற ஐ.பி.எல் ஆட்டத்தின் போது தன் அணியை வெறுமனே கேலி செய்ததற்காக ஸ்ரீசாந்தை சீரியசாக எடுத்துக் கொண்டு அறைந்தது ஒரு உதாரணம். அடுத்து இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் பொதுவாக அனுபவிக்கும் கோடானுகோடி ரசிகர்களின் எதிர்பார்ப்பு அழுத்தமும் அவரை எதிர்மறையாக பாதிக்கிறது.
அஷ்வினை விட ஹர்பஜன் காற்றில் பந்தை நன்றாக சுழல விட்டு லூப் எனப்படும் மிதவைப் பந்தை வீசுபவர். அஷ்வினை விட தந்திரம் மிக்கவர் மற்றும் நல்ல மட்டையாளர். மாறாக அஷ்வினிடம் மூன்று அனுகூலங்கள் உள்ளன. ஒன்று அவரது வேறுபட்ட பந்துகள். அநேகமாக அவரிடம் நான்கு பந்துகள் உள்ளன. ஒன்று உள்ளே வருவது, அடுத்து வெளியே செல்வது, மூன்று நேரே செல்வது, நான்கு டென்னில் பந்து எனப்படும் லெக் கட்டர். அஜெந்தா மெண்டிஸை அல்லது சக்லைன் முஷ்டாக் செய்த தவறு ஒன்றை அஷ்வின் தன் ஆட்டவாழ்வின் துவக்கத்திலேயே தவிர்த்து விட்டார். அதாவது, தன் வேறுபட்ட பந்துகளை அதிகமாக வீசி அதனையே மிகையாக நம்பியிருப்பதில்லை. அவர் பத்து ஓவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று டென்னிஸ் பந்துகளை தான் வீசுவார். பெரும்பாலும் பயன்படுத்துவது உள்வரும் மற்றும் நேராக போகும் பந்துகள் என்றாலும் மட்டையாளருக்கு எப்போதும் லெக் கட்டர் பற்றின ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருப்பதால் உள்வரும் பந்து அபாயகரமானதாக மாறுகிறது. அஷ்வின் இவ்வாறு சமயோஜிதமாக தன் வேறுபாடுகளை பயன்படுத்தி தன் முதல் இரு டெஸ்டுகளில் அதிக விக்கெட்டுகளை சாய்த்தார். முதல் கொல்கத்தா டெஸ்டில் ஓவர் தெ விக்கெட் முறையில் பந்து வீசினால் சுலபமாக ஆடி வந்த சந்தர்பாலை சமாளிக்க அவர் ரவுண்ட் த விக்கெட் வந்து குச்சிகளை நேராக தாக்கியது அவரது மாறுபட்ட சளைக்காத கற்பனைக்கு நல்ல உதாரணம். இதுவே ஹர்பஜன் என்றால் லெக் குச்சிக்கு வெளியிலோ ஆப் குச்சிக்கு வைடாக வீசி ஓட்டங்களை கட்டுப்படுத்த மட்டுமே முயன்றிருப்பார். அப்படி ஆகும் என்று எதிர்பார்த்து தான் சந்தர்பால் மிடில் குச்சிக்கு கார்டை மாற்றி நின்றார். உடனே அஷ்வின் ஒரு நேர்பந்தை நழுவ விட சந்தர்போல் எல்.பி ஆனார். அஷ்வினின் இந்த அமைதியான புத்திசாலித்தனத்தை அடுத்து பேசுவோம்.
அவர் ஐ.பி.எல்லில் ஜொலிக்க துவங்கிய போதில் இருந்தே மிக நிதானமாக கிரிக்கெட்டை எளிமையான ஒரு ஆட்டமாக புரிந்து கொண்டு செயல்படும் பாங்கு கவனிக்கப்பட்டது. இதே அமைதி தான் அவருக்கு டெஸ்டு ஆட்டங்களிலும் ஒருநாள் ஆட்டங்களின் நெருக்கடியான சந்தர்பங்களிலும் பயன்படுகிறது. குறிப்பாக அவர் ஒரு ஆட்டத்தில் தான் பந்துவீசும் ஓவர்களை சிறுசிறு கட்டங்களாக பிரித்து அந்தந்த போதுகளில் வேண்டிய சவால்களை மட்டும் எதிர்கொள்ள முயல்கிறார். வேண்டிய நேரத்தில் வந்து ஒரு மட்டையாளரை வீழ்த்த பார்க்கிறார். முடியாவிட்டால் அடுத்த சந்தர்பத்திற்காக காத்திருந்து மற்றொரு மட்டையாளருக்கு குறி வைக்கிறார். அவர் ஒரு ஆட்டத்தில் மொத்தமாக சோபிக்க வேண்டும் என்ற அழுத்தத்திற்கு தன்னை ஆட்படுத்துவதாக தெரியவில்லை. அஷ்வினால் இந்த பண்பை ஒரு பத்தாண்டுகளுக்கு தக்க வைக்க முடியுமா என்பது இப்போதைக்கு கணிக்க முடியாது என்றாலும் ஹர்பஜனுக்கு இதில் ஒரு பாடம் உள்ளது.
ஹர்பஜன் முன்னூறு விக்கெட்டுகள் வீழ்த்தின சாதனை வேளையில் ஒரு நிருபரிடம் தனக்கு ஐநூறு விக்கெட்டுகளாவது வீழ்த்த வேண்டும், அதற்கு அடுத்த ஐந்தாண்டுகள் ஆட வேண்டும் என்றொரு செயல்திட்டத்தை வெளியிட்டார். அது தன்னை சிறப்பாக ஆடத் தூண்டுவதாக இருக்கும் என்றார். சுருக்கமாக ஹர்பஜன் கும்பிளேவின் சாதனையை முறியடித்து இந்தியாவின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தின பந்துவீச்சாளராக விரும்புகிறார். ஆனால் அவர் புரிந்து கொள்ள வேண்டியது ஒரு வீரர் ஓய்வு கொள்ளும் போது மக்கள் நினைவில் கொள்வது அவரது விக்கெட் அல்லது ஓட்ட எண்களை அல்ல வரலாற்றில் அவர் செலுத்திய பங்கையே. உதாரணமாக கபில்தேவ் 83 உலகக்கோப்பைக்காகவும் கங்குலி தனது அணித்தலைமைக்காகவும், கவாஸ்கர் மற்றும் சச்சின் தமது தேச மத்தியவர்க்கத்தின் தன்னம்பிக்கையை நட்சத்திரமாக திகழ்ந்து இந்திய கிரிக்கெட்டை சுமந்ததற்காகவும் தாம் இன்றும் நினைத்துப் பார்க்கப் படுகிறார்கள். கவாஸ்கர் எத்தனை சதங்கள் அடித்தார் என்றோ கபில்தேவின் விக்கெட் எண்ணிக்கை என்னவென்றோ நாம் கவலைப்படுவதில்லை. வரலாறு எண்களால் கட்டப்படுவதில்லை. தற்செயல்களாலான வரலாற்றுடன் மனிதன் இணைவது தன் அகங்காரம் களைந்து ஈடுபாடு காட்டும் போதே. அதற்கு, ஒரு விளையாட்டை அதன் சவாலுக்காக ஆடும் மனப்பான்மையை ஹர்பஜன் மீட்டெடுக்க வேண்டும். இனிமேல் அவர் சாதனைகளை துரத்துவது பயனற்றது.
தன் ஆட்டத்தில் மகிழ்ச்சி காண முயன்றால் தான் ஹர்பஜனின் ஆட்டம் இனி மேம்படும். அவரிடம் தற்போது இல்லாததும் அஷ்வினிடம் நிரம்ப உள்ளதும் கொண்டாட்டமே..அடுத்தமுறை பந்துவீச தயாராகி சிறகடிக்கும் பறவை போல் இருப்பக்கமும் கைகளை வீசுகையில் நிஜமாகவே அவரது சிறகுகள் திறக்கட்டும்.
Share This

2 comments :

  1. ஜெயமோகனுக்கும் உங்களுக்குமான வம்பு பற்றிய கட்டுரையில் ஒருவர் உங்களை சக பிளாகர்களை மதிக்குமாறு சொல்லி இருந்தார்.

    பிளாகில் எழுதும் பல குப்பை கேஸ்கள் நீங்கள் பிளாகில் எழுதுவதால் உங்களை 'எழுத்தாளர்' என எண்ணாமல் சக blogger என்கின்றன.

    எஸ்.ரா போல், ஜெ போல் கமெண்ட் செக்க்ஷனையே நீங்கள் close செய்து விடலாம். வெறுமனே உங்கள் gmail idயை மட்டும் தந்து விட்டு அதோடு நிறுத்திக் கொள்ளலாம்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates