Saturday 23 June 2012

UGC NET தேர்வும் எலியின் நெருக்கடியும்




இன்று தமிழகத்தில் ஆயிரக்கணக்கான வேலையிடங்கள் இருந்தும் UGC NET தகுதி இல்லாததால் அந்த இடங்கள் நிரப்பப்படாதது பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். இன்னொரு பக்கம் பல aided கல்லூரிகளில் யுஜிசி பதவியிடங்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்காததால் அந்த இடங்களில் கால்வாசி சம்பளத்துக்கு “தகுதியற்ற ஆசிரியர்கள் வேலைபார்க்கிறார்கள். சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் போன்றவர்கள் “தகுதியற்ற ஆசிரியர்கள் நீக்கப்பட வேண்டும் என்று மேலும் நெருக்கடி அளிக்கிறார்கள். பல கல்லூரிகளில் “தற்காலிக ஆசிரியர்களுக்கு தம்மை தகுதிப்படுத்திக் கொள்ள கெடு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுவாரஸ்யமாக, பல கல்லூரிகளில் “தகுதியற்ற ஆசிரியர்கள் நிரந்தரமானவர்களை விட அதிக மணிநேரங்கள் வகுப்பெடுக்கும் கட்டாயம் உள்ளது. இப்படி “தகுதியற்றவர்களால் கூடுதல் வகுப்புகள் கற்பிக்கப்படும் மாணவர்களின் நிலைமை என்னவாகும் என்று யாருக்கும் கவலை இல்லை.

தமிழும் ஆங்கிலமும்

தமிழைப் பொறுத்தவரையில் அநேகமான பட்டதாரிகள் தகுதித்தேர்வில் வென்றவர்கள். ஏனெனில் தமிழாசிரியர்களுக்கான தேர்வு ஒப்பீட்டளவில் சிக்கலற்றது. 90% மேல் பழந்தமிழ் இலக்கியக் கேள்விகள். தமிழ் இலக்கியம் என்றால் பழைய இலக்கியம் என்கிற பொது அபிப்பிராயம் அனைத்து தமிழாசிரியர்களிடமும் உள்ளதால் தேர்வின் பாடத்திட்டம் அவ்வாறு இருப்பதாக நாம் கணிக்கலாம். நவீன இலக்கியக் கேள்விகள் “சித்திரப்பாவை எழுதியது உ.வே.சாமிநாதய்யரா, நா.பார்த்தசாரதியா, கல்கியா? என்ற அளவிலே இருக்கும். மாறாக ஆங்கில இலக்கியத்தில் மிக சமீபமாக வந்த புத்தகம் பற்றிக் கூட கேள்விகள் இருக்கலாம். ஒரு வருடம் அநேகம் நவீன இலக்கிய கேள்விகள் என்றால் மற்றொரு வருடம் மத்திய காலகட்டம் பற்றி கேட்பார்கள்; அதோடு ஆஸ்திரேலியா, நியுசீலாந்து, ஆப்பிரிக்கா, இந்தியா என ஆங்கிலம் எங்கெங்கு எல்லாம் எழுதப்படுகிறதா அது குறித்தெல்லாம் கேள்விகள் இருக்கும். இதில் சிக்கல் என்னவென்றால் ஆங்கில இலக்கியம் உலகு தழுவியதா, அல்லது பிரித்தானிய இலக்கியம் மட்டும் தானா, நவீன இலக்கியத்துக்கு பிரதான இடமா பழைய இலக்கியத்துக்கா என்கிற விசயங்களில் இந்திய முழுக்க உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் ஒற்றுமை இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் பாடத்திட்டத்தை அணுகுவதால் நீங்கள் முதுகலையில் படிப்பதற்கும் தகுதித்தேர்வில் கேட்பதற்கும் உள்ள வித்தியாசம் ஒரு பழைய தமிழ் பண்டிதர் கோணங்கியிடம் பேசுகிற அளவில் இருக்கும். இதனால் தான் தகுதித் தேர்வுக்கு தனியாக படிக்க வேண்டியதாகிறது. நீங்கள் முதுகலையில் மிக சுமாரான மாணவராக இருந்தாலும் கூட தகுதித்தேர்வில் ஜொலிக்கலாம். தகுதித்தேர்வில் மொத்தம் மூன்று தாள்கள். முதல் தாள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பது பல தமிழிலக்கிய மாணவர்களுக்கு தடையாக இருக்கும்; இதைக் கடந்து விட்டால் தேறி விடுவார்கள். பிற பாடங்களில் இருப்பவர்களுக்கு மாறாக முதல் தாளுக்கு தான் இவர்கள் அதிக சிரமமும் நேரமும் எடுத்து தயாரிப்பார்கள். இதனால் தமிழில் NET தகுதி உள்ளவர்கள் அதிகரித்து விட்டார்கள்; அவர்களுக்கு போதுமான வேலை இடங்கள் இல்லை. ஆங்கிலத்தில் நேர்மாறான நிலைமை. (ஆனால் மொழிப்பாடங்களில் தாம் ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகம் பேர் தேர்வாகின்றனர். அறிவியல் உள்ளிட்ட மற்றபாடங்களில் தேர்வாகும் எண்ணிக்கை மிக மிக குறைவு. இதற்கான காரணங்களை அறிவியல் மாணவர்கள் தாம் சொல்ல வேண்டும்.)

ஆக ஒன்று தெரிகிறது: இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றபடி ஆட்களை தேர்வாக்கும் நோக்கம் யுஜிசிக்கு இல்லை. ஏனென்றால் ஆட்கள் தேர்வானால் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு தனியாக அதிக பணம் ஒதுக்க வேண்டும். தற்போதைக்கு யுஜிசி பணம் உள்கட்டமைப்பு, ஆய்வுக்கான உதவித்தொகைகள், மற்றும் மேலதிகாரிகள் விவாதம், ஆய்வு என்கிற பெயரில் ஊர் விட்டு ஊர் பறந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி செலவு செய்வதற்கு பயன்படுகிறது. பல இடங்களில் யுஜிசி நிதிகள்போலிக் கணக்குகள் காட்டி முழுங்கப்படுகின்றன. அல்லது கல்வி நிர்வாகங்களால் பயன்படுத்தப்படாமல் திரும்ப அனுப்பப்படுகின்றன. சரி அடுத்து நாம் “தகுதி“ எனும் அளவுகோலுக்கு செல்வோம்.

தகுதி எனும் போலிச் சொல்

எண்பதுகளில் பலர் வெறும் முனைவுப் பட்டங்கள் மட்டுமே கொண்டு கல்லூரி ஆசிரியர்கள் ஆனார்கள். இதை வாசிக்கும் உங்களது ஆசிரியர்கள் அப்படித் தான் தேர்வானார்கள். அவர்களில் பலரும் முனைவர் பட்டங்களை இறுதி வரை பெறவில்லை; முதலில் அவர்களின் கற்பிக்கும் தரம் எப்படி இருந்தது? வெறும் அடிப்படைத் தகுதியுடன் அற்புதமாக பாடம் நடத்திய பல ஆசிரியர்களை உங்களுக்கு தெரிந்திருக்கும். இன்றும் அவர்கள் அவ்வாறான “தகுதியுடன் அதே உயர்ந்த தரத்துடன் தான் இருக்கிறார்கள். பாடத்திட்டம் ஒன்றும் கடந்த இருபது வருடங்களில் மாறி விடவில்லை. மொழிகளைப் பொறுத்தவரையில் அதே கம்பனும் சேக்கிழாரும் சாஸரும் ஷேக்ஸ்பியரும் தாம் அநேகமான இடங்களில் கற்பிக்கப்படுகிறார்கள். அரசோ யுஜிசியோ நமது வெறும் முதுகலைப்பட்டத் தகுதி ஆசியர்களை தம்மை மேம்படுத்திக் கொள்ளும் படி வற்புறுத்தவில்லை. மாணவர்களாகிய நாமும் அதற்கான தேவையை உணரவில்லை. இன்றைய தலைமுறை ஆசிரியர்களை வற்புறுத்துகிறார்கள் என்றால் வேலைக்கு விண்ணப்பிப்போருக்கான எண்ணிக்கை இன்று அதிகரித்து விட்டது என்பது தான் முக்கிய காரணம். குறைந்த ஆட்கள் இருந்த போது இருந்த “தகுதிநிறைய ஆட்கள் வரும் போது குறையுமா என்ன? இல்லை. தகுதி என்பது வடிகட்டுவதற்கான ஒரு யுக்தி. வடிகட்டுவது நல்லது தான் என்று நீங்கள் சொல்லுவீர்கள். எதன் அடிப்படையில் வடிகட்டப்படுகிறது என்பது அடுத்த கேள்வி.

தகுதித் தேர்வின் அடிப்படை கோளாறு

கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வு கடினமானது தான், ஆனால் கடுமையாக உழைத்து அதனை வெல்பவர்கள் தாம் சிறந்த ஆசிரியர்களாகவும் இருக்கக் கூடும் என்று பலர் கருதுகிறார்கள். இந்த தர்க்கத்தில் ஒரு அடிப்படையான கோளாறு உள்ளது. ஒரு அரசாங்க குமாஸ்தா தேர்வில் அடிப்படையான புத்திசாலித்தனத்தை அளக்கும்படி நினைவுத்திறன், தர்க்க சிந்தனை ஆகிய அளவுகோல்களை பயன்படுத்தலாம். ஆனால் இதே பாணியை நீங்கள் ஆசிரியர்களுக்கு பயன்படுத்த முடியாது. ஆசிரியருக்கு தேவை காந்தி எந்த தேதியில் எந்த வேளையில் சுடப்பட்டார் என்கிற தகவல் அறிவு மட்டுமல்ல. அதை விட முக்கியமாய் காந்தியின் பின்னுள்ள அரசியல், கலாச்சார, வரலாற்றுக் கோணங்கள்; காந்தியை எப்படி விளக்குவது என்கிற நுண்ணுணர்வு. ஒரு சின்ன தகவலை நினைவில் வைப்பதல்ல, அதை விரிவுபடுத்துவதும் ஒரு சரியான கண்ணோட்டத்தில் முன்வைப்பதுமே முக்கியம். ஏனென்றால் தகவல்கள் அனைத்துமே பாடநூலில் உள்ளன. அதை அப்படியே வாசித்துக் காட்ட ஆசிரியர் தேவை இல்லை. NET தேர்வு ஆசிரியர் தகுதி என்பது நினைவுத்திறன் மட்டுமே, விளக்கும் திறன் (interpretative skill) அல்ல என்கிறது. பிரச்சனை இது தான்: என்னால் துப்பாக்கி பற்றி ஒரு நூல் எழுத முடியும்; ராணுவ திட்டமைப்புகள், வரலாறு பற்றி மணிகணக்காய் பேச முடியும் என்று கொள்வோம். ஆனால் உடல்தகுதி இல்லாமல் என்னை உள்ளே விட மாட்டார்கள். அந்த நடைமுறை வேலைக்கு உடற்தகுதி தான் பிரதானம் என்பதில் தெளிவாக இருக்கிறோம். இந்த ஒரு சின்ன விசயம் யுஜிசிக்கு தெரியாதா என்ன? தெரியும். ஆனால் வேறு ஒரு பிரச்சனை உள்ளது.

லட்சக்கணக்கான பேர் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்றால் அவர்களின் பேசும் திறம், விளக்கும் திறன், ஆழ்ந்த ஞானம் ஆகியவற்றை அளவிடுவதற்கான கட்டமைப்பு மற்றும் ஆள்பலம் யுஜிசிக்கு இல்லை. ஆக multiple choice கேள்விகளை பிரதானப்படுத்தினார்கள். ஆனால் மேற்சொன்ன கேள்வியை யாராவது கேட்பார்கள் என்று யுஜிசிக்கு முன்னரே தெரியும். அதனால் ஒரு தாள் விரிவான நீண்ட கேள்விகளுக்காக ஒதுக்கினார்கள். ஆனால் முதல் இரு multiple choice தேர்வுகளை வென்றால் மட்டுமே மூன்றாவதை திருத்துவார்கள். இதில் யுஜிசிக்கு உள்ள அனுகூலம் நூற்றில் பத்து பேரின் தாள்களை மட்டும் ஆள் வைத்து குறைந்த செலவு செய்து திருத்தினால் போதும் என்பது. 90% தாள்களையும் கணினி திருத்தும். இதில் இன்னொரு அபத்தம் முதலில் சொன்ன முதல் தாள்.

ஒருவர் இலக்கியத்தில் அனைத்து கேள்விகளையும் தெரிந்து வைத்திருக்கலாம். ஆனால் முதல் தாளின் Venn diagram போன்ற விசயங்கள் தெரியாமல் போனால் இலக்கியக் கேள்விகளுக்கான இரண்டாம் தாளின் விடைகளை திருத்த மாட்டார்கள். மூன்று பசு மாடுகள் முப்பத்து மூன்று லிட்டர் பால் கறந்து அதை நான்கு குழந்தைகள், மூன்று அத்தைகள், 28 தாத்தாக்கள் குடித்தால் சராசரி என்ன என்பது போன்ற துறை சாராத கேள்விகளை அறிந்திருந்தால் தான் நீங்கள் வகுப்புக்கு போய் பின்நவீனத்துவமும் பூக்கோவும் கற்பிக்க முடியும்.

மேற்சொன்ன பிரச்சனை 2008 ஜூன் 3 அன்று நடந்த யுஜிசி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முதல் தாளில் ஜெயித்தால் தான் அடுத்த தாளை திருத்துவது என்கிற நடைமுறையை விடுத்து மூன்று தாள்களையும் சேர்த்து திருத்தி அவற்றின் மொத்த மதிப்பெண்களில் 100க்கு 40 வாங்கினால் வெற்றி என்கிற விதிமுறையை அக்குழு பரிந்துரைத்தது. ஆனால் இந்த பரிந்துரை நான்கு வருடங்களாயும் நிலுவைக்கு வரவில்லை.

இப்போது மூன்றாவது தாளையும் multiple choiceஆக மாற்றி விட்டார்கள். இது விண்ணப்பதாரர்கள் எளிதில் தேர்வாக உதவும் என்பதெல்லாம் உதார். Farewell to Arms எனும் நாவலில் எத்தனை பாகங்கள் (நிஜமாகவே கேட்கப்பட்ட கேள்வி) என்பது போன்ற கேள்விகளை அந்த நாவலை ரசித்து வாசித்தவர்களால் கூட எளிதில் பதிலளிக்க முடியாது. புளியமரத்தின் கதை நாவலில் புளியமரம் பற்றின குறித்து முதலில் எந்த பக்கத்தில் குறிப்பாக வருகிறது என்று கேட்டால் சு.ராவின் ஆன்மாவாலே சொல்ல முடியாது

உண்மையில் இந்த புதுமாற்றம் மூன்றாவது தாளை ஆள் வைத்து திருத்தும் செலவையும் இல்லாமல் செய்வதற்கான ஒரு வழி தான். ஆக NET தேர்வு என்பது குறைந்த செலவில் எந்த சிரமமும் இல்லாமல் எந்திரமயமாக ஆசிரியர்களை தேர்வு செய்யும் ஒரு மார்க்கம் தான். “தகுதி என்பது ஒரு நடைமுறை பிரச்சனையை மறைவாக சமாளிப்பதற்கான ஒரு அரசியல் சொல்.
முங்கேக்கர் குழுவின் பரிந்துரைகளும் U-திருப்பமும்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முங்கேக்கார் தலைமையிலான குழுவை அமைத்து NET தேர்வை மீளாய்வு செய்ய சொன்னது. இந்த குழு NETஐ ரத்து செய்ய பரிந்துரைத்தது. அதற்குப் பதில் இளங்கலை பாடங்களை கற்பிக்க Mphil முடித்தவர்களும் முதுலைக்கு முனைவர் பட்டம் பெற்றவர்களையும் நியமிக்கலாம் என்றது. அமைச்சகம் இந்த பரிந்துரையை யுஜிசிக்கு அனுப்பியது. ஆனால் யுஜிசி தன் வருமானத்தை இழக்க விரும்பவில்லை. பின்னர் முங்கேக்கர் குழு தன் முடிவை மாற்றிக் கொண்டது. நாட்டில் ஏகப்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் குறைந்த தரத்திலான முனைவர் பட்டங்களை வழங்குவதால் தனது முதல் முடிவை செயல்படுத்திய உடன் கல்வித் தரம் சட்டென்று வீழ்ந்து விட்டதாக தெரிவித்தது. அதை எப்படி இந்தியா பூரா உள்ள கல்வித்தர வீழ்ச்சியை அது உடனடியாக கண்டறிந்தது என்று அது விளக்கவில்லை. NETஇன் கோளாறுகளையும் முங்கேக்கர் மறுக்கவில்லை. ஆனால் வேறு வழியில்லை என்பதால் குறைந்தபட்ச தகுதித் தேர்வாக அதுவே இருந்தாக வேண்டும் என்றார். தேர்வை மேம்படுத்துவது பற்றி ஏன் பரீசிலிக்கவில்லை என்பது பற்றியும் முனைவர் பட்டங்களின் தரத்தை உயர்த்துவது பற்றியும் அவர் பேச இல்லை. முங்கேக்கரின் நிலைப்பாட்டின் நியாயம் நாம் வைக்கும் அளவுகோலைப் பொறுத்தது. ஒன்றுமே தெரியாதவர்கள் காசு கொடுத்து முனைவர் பட்டம் வாங்கி வேலையில் நுழைவதற்கு மனப்பாட நிபுணர்கள் ஆசிரியரானால் பரவாயில்லை என்பது அவரது வாதம்.

ஆனால் மற்றொரு வாதம் அமைப்பு ரீதியான பிரச்சனைக்கு நேரடியான தீர்வு தான காண வேண்டும், தற்காலிக தீர்வுகளை அல்ல என்பது. உதாரணமாக TNPSC தேர்வுகளில் கோடிக்கணக்கான ஊழல் நடப்பதாக நமக்கு ரொம்ப காலமாய் தெரிந்திருந்தது. ஒரு எளிய லைன்மேன் பதவிக்கு கூட எவ்வளவு காசு கொடுக்க வேண்டும் என்பது தெருவில் போகிறவர்களுக்கே தெரிந்த பொது அறிவு விடை. இதற்கு தீர்வு ஊழலை நேரடியாக சந்திப்பது தான். ஆக ஆட்சி மாறியதுடன் தேர்வு அமைப்பின் அதிகாரிகள் கைதானார்கள். ஊழல் முழுக்க தடுக்கப்பட இல்லை என்றாலும் பிரச்சனையை நேரடியாக இப்படித் தான் கையாள முடியும். இதற்குப் பதில் தேர்வுக்கு தேர்வுக்கு தேர்வு நடத்தக் கூடாது. இன்று ஊழல் மற்றும் பிற சீரழிவுகள் காரணமாய் பட்டங்களில் மதிப்பு குறைந்து விட்டதால் அதற்கு பட்டங்களுக்கு மேல் தேர்வு நடத்துவது வழமையாகி உள்ளது. இதற்கு முடிவே இல்லை. மலேரியா அதிகமானால் சாக்கடை நீரை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்த வேண்டும். வெறுமனே கொசுவலைக்குள் வாழ்வது நடைமுறை பயனற்றது.

யுஜிசி எப்படி ஊழலை எதிர்கொண்டது தெரியுமா? எல்லா முனைவர் பட்டங்களுக்கும் பொது நுழைவுத்தேர்வு கட்டாயம் என்றது. ஆனால் இந்த தேர்வுகள் ஏதோ பெயருக்கு நடக்கின்றன. நேர்முகத்தேர்வுகளும் அவ்வாறே. முனைவர் பட்டங்கள் மட்டும் அல்ல இளங்கலை முதுகலை பட்டங்கள் கூட இன்று வாங்கப்படலாம். ஆக தரத்தை உயர்த்த யுஜிசி நேரடியாக முனைவர் பட்ட ஆய்வுகளை அலசுவது தான் ஒரே வழி. அதற்கான மனிதவளமோ உள்கட்டமைப்போ இல்லை என்றால் வெறுமனே பெயரளவிலான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து கற்பனையாய் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

யுஜிசியோ அரசாங்கமோ என்றும் நேரடியாக களத்தில் வந்து பிரச்சனைகளை தீர்க்க முயல்வதில்லை. பட்டங்களின் தரம் மீது சமூகம் நம்பிக்கை இழந்து விட்டது. அரசு NETஐ கொண்டு தரம் பற்றின ஒரு போலியான பிம்பத்தை மக்களிடையே தக்க வைத்து அடிப்படையான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபட பார்க்கிறார்கள்.

NETஐ ஆதரிக்கும் மூன்று பேர்

NET தேர்வுக்கான மிகப்பெரிய ஆதரவு மூன்று தரப்புகளில் இருந்து வருகிறது. இந்த ஆதரவு “தகுதியின் பெயரை பயன்படுத்தினாலும் நோக்கங்கள் வேறு.

முதலில் ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் நிரந்தர கல்லூரி ஆசிரியர்கள். இவர்கள் ஓய்வுக்கு பிறகும் கல்வி நிறுவனத்துடனான உறவைப் பொறுத்து தம் வேலையில் 70 வயது வரை superannuation முறையில் நீடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் தற்போதைய நிலையில் இவர்களுக்கு நிர்வாகம் தற்காலிக ஆசிரியர்களுக்கு வழங்கும் குறைந்த சம்பளத்தை தான் ஓய்வுக்கு பிறகு வழங்கும். ஆனாலும் பரவாயில்லை என்று சில துறைத்தலைவர்கள் வேலையில் ஓய்வுக்கு பின்னும் குறைந்த சம்பளத்தில் தொடர்வதுண்டு. 90களில் வேலை நிரந்தரமானவர்கள் தமது சேவைக் காலம் குறைவு என்று விசனிக்கிறார்கள்.

ஆக நிரந்தர கல்லூரி ஆசிரியர்களின் தேசிய அமைப்பான AIFCTU மே 23 அன்று NET தேர்வை ரத்து செய்யக் கூடாது என்று ஒரு கோரிக்கை வைத்தது. அவர்களின் நோக்கம் சமூகப் பொறுப்பல்ல என்பது அடுத்த கோரிக்கையில் விளங்கியது. ஓய்வு வயதை 58இல் இருந்து 65க்கு உயர்த்த வேண்டும் என்றது அடுத்த கோரிக்கை. இரண்டுக்கும் ஒரு தொடர்பு உள்ளது.

NET தேர்வில் இந்தியா முழுக்க 5% மேல் யாரும் தேர்வாவதில்லை என்பதால் வேலைக் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்த சாக்கைக் கொண்டு நிரந்தர ஆசிரியர்கள் தம் ஓய்வு வயதை கூட்ட வேண்டும் என்கிறார்கள். NET தேர்வை ரத்து செய்து Mphil PhD அடிப்படையில் வேலை கொடுத்தால் கல்வித் தரம் குறைந்திடும் என்று AIFCTU காரணம் சொல்கிறது. ஆனால் நகைமுரணாக AIFCTU அமைப்பில் யாருமே NET முடித்தவர்களாக இருக்க மாட்டார்கள். பெரும்பாலானவர்கள் முனைவர் பட்டமே ஓய்வு பெறும் வயதில் தான் தயங்கித் தயங்கி பெறுவார்கள். ஆக இவர்கள் NETஐ ஆதரிப்பது தொடர்ந்து காலியிடங்களை தக்க வைப்பதன் மூலம் அரசையும் கல்வி நிறுவனங்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்கி தமது ஓய்வை நீட்டித்து மேலும் 7 வருடங்கள் அரசு சம்பளமும் சலுகைகளும் அனுபவிப்பதற்கு தான்.

அடுத்த ஆதரவாளர்கள் NETஇல் தேர்வாகி ஆனால் முனைவர் பட்டம் இன்னும் வாங்காதவர்கள். பொதுவாக நேர்முகத்தேர்வில் முனைவர் பட்டங்கள் பெற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவதாக இவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால் NET vs PhD என்கிற இழுபறி இருக்கிற வரை இந்த பிரிவினர் NETஐ கடுமையாக ஆதரிப்பார்கள். ஆக இதுவும் சுயநலம் தான்.

இன்னொரு பிரிவினர் முப்பத்தைந்தில் இருந்து ஐம்பதுக்குள்ளான வயதை சேர்ந்தவர்கள். இவர்கள் NET தேர்வே எழுதினதில்லை என்றாலும் இதைக் கடுமையாக ஆதரிப்பார்கள். NET தேர்வு காரணமாக வேலையிடங்கள் நிரப்பப்படுவது தாமதமானால் இவர்களுக்கு உடனடி பலன்கள் ஒன்றும் இல்லை என்றாலும் தமது நிறுவனத்துக்குள் தற்காலிக ஆசிரியர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு படிநிலை அதிகாரத்தை அளிக்கிறது. “தமக்கு வாய்த்த அடிமைகளைஎளிதில் விட்டுத் தர இவர்கள் தயாரில்லை.

ஆக NETஐ ஆதரிப்பவர்கள் இதன் உள்ளார்ந்த சிக்கலை அறியாத சாமான்ய மக்கள். அல்லது அதன் அனுகூலங்களை அனுபவிக்குள் நிரந்தர ஆசிரியர்கள்.

சிபாரிசும் சூர்யநாராயண சாஸ்திரியும்

மிகுந்த மக்கள் தொகையும் அதனாலான போட்டி நெருக்கடிகளும் மிக்க தேசங்களில் அசலான திறமையாளர்களை அமைப்பு மற்றும் விதிமுறைகள் படி வேலைக்கு தேர்வது சாத்தியமற்றது. கல்லூரி வேலையில் இது மேலும் சிக்கலானது. இன்று நாம் பார்க்கும் பல நல்ல ஆசிரியர்கள் தமது ஆசிரியர்கள் அல்லது பரிச்சயங்களின் சிபாரிசு வழி உள்ளே வந்தவர்கள் தாம். சென்னை கிறித்துவக் கல்லூரியின் ஆங்கிலத் துறையை ஒரு நல்ல உதாரணமாக சொல்ல முடியும். ஒரு காலத்தில் அங்கு ஆசிரியர்கள் தங்களது சிறந்த மாணவர்களை பட்டம் முடித்ததும் ஊக்குவித்து துறைக்கு உள்ளே ஆசிரியராக கொண்டு வந்தனர். அங்கு ஆங்கிலத் துறை வலுவானதாக இருந்ததற்கு இதுவும் காரணம். சிபாரிசு கலாச்சாரம் மிக கீழ்மையானது என்றாலும் இதன் வழி நம்மூரில் சிறந்த அறிவுஜீவுகள் வேலை பெற்றிருக்கிறார்கள்; சேவை செய்திருக்கிறார்கள். இந்துப் பத்திரிகையில் தனது Madras Miscellany எனும்  பத்தியில் எஸ்.முத்தையா சூர்யநாராயண சாஸ்திரி என்பவரைப் பற்றி சமீபமாக குறிப்பிட்டார். இவர் அக்காலத்தில், அதாவது இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ஆக்ஸ்போர்டு சென்று படித்தவர். சென்னை பல்கலைக்கழக தத்துவத் துறையின் ஸ்தாபகர் மற்றும் முதல் துறைத்தலைவர். எஸ்.ராதாகிருஷ்ணனின் மாணவர். இந்திய தத்துவத்தில் பெரும் அறிவு கொண்டவர். உலகப் போரின் போது இவர் இந்தியாவுக்கு ஒரு கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரது கப்பல் ஜெர்மானியர்களால் தாக்கப்பட்டது. ஐரிஷ் புரட்சிப்படையினர் இவரை காப்பாற்றி கொண்டு வந்தனர். இந்தியா திரும்பியதும் இதுவே வினையாகியது. இவர் ஐரிஷ் புரட்சியாளர்களுடன் தொடர்பு கொண்டவர் என்று சந்தேகித்த அரசு வேலை தர மறுத்தது. பின்னர் இவர் ராஜன் என்கிற ஒரு நண்பரின் உதவியுடன் (சிபாரிசு) தான் ஆசிரியர் வேலை பெற்று மேற்சொன்ன நிலைக்கு உயர்ந்தார்.

அமைப்பு எனும் எலிப்பொறி

ஆக யுஜிசிக்கு இப்படி தகுதித்தேர்வை எந்திரமயமாக்குவதற்கு அதற்கான நடைமுறை நோக்கம் உள்ளது. இது நம் நாடு முழுக்க உள்ள அமைப்பு ரீதியான பிரச்சனை. தனியாரில் கூட நம் கல்வியமைப்பில் நம்பிக்கை இன்றி நுழைவுத்தேர்வு வைத்து தான் ஆளெடுக்கிறார்கள். ஆனால் அவசரமாக ஆட்கள் தேவைப்பட்டால் சில நிறுவனங்கள் இந்த campus recruitment தேர்வில் கூட காப்பி அடிக்க அனுமதிக்கிறார்கள். இப்போது இறுதி செமிஸ்டரில் தோற்றவர்கள் கூட வேலைக்கு சேரலாம் என்று விதிமுறை வந்துள்ளது. அசலான ஆழ்ந்த அறிவு கொண்டவர்களை இந்தியாவின் பெரும்பாலான அமைப்பு ரீதியான தேர்வுகள் மூலம் கண்டறிய முடியாது. உண்மையான திறன் கொண்டவர்கள் இந்த அமைப்பை எதிர்த்து வெல்ல முடியாது; ஏனென்றால் அமைப்பை வளைக்க முடியாது; நீங்கள் தான் வளைய வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு எலிப்பொறிக்குள் இருக்கிறீர்கள். நான் எலி இல்லை என்று கத்தி பிரயோஜனமில்லை. பட்டினி கிடக்கவும் முடியாது. வடையையும் தின்ன வேண்டும்; ஆனால் கதவும் மூடக் கூடாது இது தான் சவால்.
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates