Thursday 11 October 2012

கல்லூரியில் இறுதி நாள்




நேற்று தான் அந்த நாள். முதல் கல்லூரி வேலையில் இருந்து வேண்டாவெறுப்பாக விலகும் நாள்.
மாணவர்களிடம் இறுதி வகுப்பு முடிந்து மணியடித்த பின்பான இறுதி சில நொடிகளில் தான் இனி வரமாட்டேன் என சொன்னேன். குரலை வறட்சியாக்கிக் கொண்டு மனதை சமநிலைப்படுத்திக் கொண்டு கண்களை வேறு திசையில் வைத்துக் கொண்டு சொன்னேன். அவர்கள் பெரும்பாலும் “ஏன் சார் போறீங்க?” என்று தான் கவலையாக கேட்டார்கள். “போக வேண்டிய நிலைமை” என்று மட்டும் தான் சொல்ல முடிந்தது. எனக்கு மிகவும் பிடித்தமான வகுப்புகளை விட்டு இறுதியாக பிரியும் போது ஒரு விபத்தை சந்திக்கும் முன்னான அந்த சில நொடிகளை போலத் தான் இருந்தது.
“நீங்க போகாதீங்க. இருங்க” என மாணவர்கள் உருக்கமாக வந்து சொன்னார்கள். ஆசிரிய வேலை என்பது வெறும் ஒரு பணி அல்ல, அது ஒரு பந்தம் என எனக்கு புரிந்தது. கல்வியையும் சார்பையும் கடந்து ஒரு பாத்தியதை அது. பொதுவாக நான் மாணவர்களிடம் உணர்ச்சிகரமாக உறவாடுவதில்லை. ஒரு ஆரோக்கியமான இடைவெளி வைத்துக் கொள்வேன். அதையும் மீறி சிலர் நெருக்கமாகும் போது நண்பர்களாக்கிக் கொள்வேன். அவர்களையும் பிறரிடம் நண்பன் என்றே அறிமுகப்படுத்துவேன். இவ்வளவு அன்பைப் பெற உண்மையில் என்ன தான் செய்தேன் என நேற்று வியந்தேன். உண்மையில் அன்பைப் பெற நாம் அன்பை நேரடியாக தர வேண்டியதே இல்லை. வேறு எத்தனையோ கண்காணா முறைகளில் அன்பு செலுத்தப்பட்டு வாங்கப்படுகிறது. அதனாலே அன்பு நம்மை நெகிழவும் கோபாவேசம் கொள்ளவும் வைக்கிறது.
மாணவர்கள் தங்கள் சக்திக்கு மீறின பரிசுகளை கொண்டு வந்து தந்தார்கள். எனக்கு வாழ்வில் கிடைத்த மிக உயர்ந்த பரிசுகளாக அவற்றை நினைக்கிறேன். ஒரு மாணவி நீண்ட நாலுபக்க கடிதம் ஒன்றை பரிசுடன் இணைத்திருந்தாள். பரிசை விட எழுத்து பெரிது; அதன் வழி அவளது இதயத்தை பறித்து தருவதாகவே நினைத்துக் கொண்டேன்.
ராஜினாமா கொடுத்த பின்னான இந்த ஒரு மாதமும் நான் மிக இயல்பாக இருக்க முயன்றேன். ஆனால் இறுதி இரு நாட்கள் மனம் மிகவும் சோர்வுற்றுப் போனது. தொடர்ந்து எதிலும் அது தங்கவில்லை. எதையெதையோ யோசித்து எதையும் சரியாய் கவனிக்காமல் இருந்தேன். துக்கத்தை மறைக்க முயன்றதாலோ ஏனோ அது என்னை மிகவும் பாதித்தது. போகும் வழியில் வண்டி பெட்ரோல் இன்றி நின்று விட்டது. பெட்ரோல் காலியானதை கூட கவனிக்க முடியாதபடி மனம் கலங்கிப் போயிருந்தது.
கல்லூரி போன்ற எந்த நிறுவனத்தின் கீழுள்ள வேலையும் எனது அசலான அடையாளமல்ல என நிஜமாக நம்பினேன். அதனாலே இந்த வேலை மாற்றத்தை சகஜமாக எடுத்துக் கொள்ள முயன்றேன். எந்த வேலையும் ஒன்று தான், அற்பமானது தான் என எனக்குள்ளே மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேன். ஆனால் அடிப்படையில் நான் மனிதன்; மனிதர்களுடனான உறவு மிகவும் முக்கியமானது, ஆசிரிய வேலை என்பது மனித உறவுகளின் பெரும் வலைப்பின்னலின் மையத்தில் இருப்பது என்பதை என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டேன்.
மனிதர்களைப் பிரிவது என்பது விபத்தில் ஒரு அங்கத்தை இழப்பது போல; கோமாவில் சில நாட்களை, மாதங்களை மறப்பது போல. அதற்கு நிவர்த்தியே இல்லை.
இறுதி நாள் அன்று எனக்கு அக்கல்லூரியில் எனது முதல் வேலை நாள் நினைவு வந்தது. ஏற்கனவே நான் படித்த கல்லூரியில் நான் ஊனமுற்றவன் என்று காரணம் காட்டி வேலை மறுத்த நிலையில் நான் இக்கல்லூரிக்கு சென்று துறைத்தலைவர் திருமதி.ரோஸலிண்டை பார்த்தேன். அவரிடம் ஒன்றே ஒன்று சொன்னேன்: “எனக்கு வேலை அனுபவம் இல்லை; ஆனால் மிகுந்த விருப்பமும் பற்றும் இவ்வேலையில் உள்ளது. ஒரு வாய்ப்பு தாருங்கள்”. அவர் என் கண்களை மட்டுமே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஒரு வகுப்புக்கு சென்று பாடமெடுக்க சொன்னார். வகுப்பு முடியும் தறுவாயில் அவர் வந்து இறுதி பெஞ்சில் அமர்ந்து கவனித்தார். சில ஆலோசனைகள் சொன்னார். அடுத்து சில வகுப்புகளுக்கு போக சொன்னார். இவ்வாறு நான் வேலை கேட்டுப் போன அன்றே என் முதல் வேலை நாளும் துவங்கியது. அன்று day order 1. நேற்று நான் வேலையில் இருந்து பிரியும் போதும் day order 1 தான். அன்று போன அதே வகுப்புகளுக்கு திரும்பவும் போய் வந்த போது ஏதோ முதல் நாள் கல்லூரியில் இருப்பது போல இருந்தது.
ஒரு மாணவன் ஒரு சிறு பரிசை கையில் வைத்து அழுத்தி விட்டு என்னை ஏன் பிடிக்கும் என்பதற்கு ஒரு காரணம் சொன்னான்: “நீங்க மட்டும் தான் எங்களைப் பார்த்து கத்த மாட்டீங்க. எப்பவும் அமைதியா வகுப்பில் நடந்துப்பீங்க”. இதை நான் என்றுமே பொருட்டாகவே நினைத்ததில்லை; மேலும் மற்றவர்கள் மாணவர்களை கடிந்து கொள்வார்கள் என்றும் எனக்குத் தெரியாது. கடிந்து கொள்வது கூட அன்பால் அக்கறையால் இருக்கலாம். ஆனால் ஒருவருக்கு நம்மை ஏன் பிடிக்கிறது என்பது இது போல் விநோதமான பல காரணங்கள் இருக்கக் கூடும். அந்த பட்டியலில் நாம் முக்கியமாக கருதுபவை இருக்காமல் போகலாம்.
எனக்கு மாணவர்களை பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அவர்கள் அன்புக்கு மரியாதைக்கு ஏங்குகிறார்கள். அதை வெளியே சொல்ல நம்மைப் போல் அவர்களுக்கு எந்த தயக்கமும் இல்லை.
Share This

3 comments :

  1. அடுத்து பணி புரிய இருக்கும்
    கல்லூரியில் இதே அளவும், இதை விடக் கூடுதலாகவும்
    மகிழ்ச்சியும், அன்பும் கிடைக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  2. நன்றி ராம்ஜி யாஹூ

    ReplyDelete
  3. ஆசிரியரை மாணவர்களும் மாணவர்களை ஆசிரியர்கள் பிரிவதும் மாணவர்கள் திசைக்கொருவராகப் பிரிந்தும் போவது முடிவற்ற சுழற்சி.
    கல்லூரிகளும் பள்ளிகளும் (அங்குள்ள மரம், மட்டைகள் உட்பட எல்லாவற்றுக்கும்)பிரிவுகளாலேயே
    அழகு பெறுகின்றன.
    எனது மாணவப் பருவத்தை நினைவு படுத்தி விட்டீர்கள்.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates