Wednesday 14 August 2013

இளவரசனின் மரணம்: நம் கள்ள மௌனத்தின் பின்னுள்ள உளவியல்






கொல்லப்பட்ட அல்லது சாவை நோக்கி துரத்தப்பட்ட தலித் இளைஞன் இளவரசனின் வாழ்க்கை மற்றொரு ஜாதிய பாடமாக, அமர காதல் கதையாக மீடியாவால் சித்தரிக்கப்பட்டு மெல்ல மெல்ல நினைவின் அடுக்களில் மறைந்து போகிறது. ஆரம்பத்தில் இருந்தே சட்டமும் நீதியும் இளவரசனுக்கு எதிராகவே இருந்து வந்தது. அவனது கொலையை ஒரு தற்கொலையாக்கி மூடி மறைக்க காவல்துறை, மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள், மீடியா என அனைத்து தரப்பினரும் மனமுணர்ந்து உதவி வருகிறார்கள். ஒரு சில பத்திரிகை டி.வி அலைவரிசைகள் தவிர பெரும்பாலும் இக்கொலை ஒரு காதல் விவகார பிரச்சனை என்கிற அளவில் மூடி மறைக்கப்பட்டது. 


பா.ம.கவுடன் சமீபமாக ராஜ்யசபா தேர்தல் விவகாரத்தில் முரண்பாடு ஏற்பட்ட ஒரு கட்சியின் டி.வியில் கூட இது குறித்து ஒரு விவாதம் நடத்த அனுமதி வாங்க அதன் ஒருங்கிணைப்பாளர் கடுமையாக போராடி பல சமரசங்கள் செய்ய வேண்டி வந்தது. குறிப்பாக இக்குற்றத்தில் பா.ம.கவுக்கு உள்ள பங்கு பற்றி ஒரு சிறு குறிப்பு கூட வரக்கூடாது என்பதில் நிகழ்ச்சியில் கவனமாக இருந்தார்கள். அதையும் மீறி ஒரு சிறப்பு விருந்தினர் “கையை வெட்டுவோம் என்று சொன்னார்கள். இப்போது சொன்னதையும் மீறி செய்தும் காட்டி விட்டார்கள்” என பெயர் குறிப்பிடாமல் சொன்னார். ஏன் இவ்வளவு தணிக்கை? ஏனென்றால் தர்மபுரி பகுதியில் அ.தி.முக, தி.மு.க ஆகிய கட்சிகளுக்கும் ஒரு பொதுச் சிக்கல். அவர்களின் கட்சியிலும் கணிசமாக வன்னியர்கள். அதனால் தேன்கூட்டை கலைக்க அவர்கள் விரும்பவில்லை.

மேலும் ஜெயலலிதா ராமதாஸை விஜயகாந்த அளவுக்கு ஒரு முக்கிய தேர்தல் விரோதியாக பார்க்கவில்லை. போன தேர்தலில் விஜயகாந்த அளவுக்கு அவர் கட்சி ஓட்டு வாங்கவில்லை என்பது மறைமுகமாக இம்முறை ராமதாஸை காப்பாற்றி இருக்கிறது. உம் என்றாலே விஜயகாந்த், வைகோக்களை உள்ளே தள்ளி பலவித தடை உத்தரவுகளை பிறப்பிக்கும் ஜெயலலிதா இவ்விசயத்தில் மௌனமாகவே இருக்கிறார். பெயருக்கு ஒரு நீதிமன்ற விசாரணை. பா.ம.கவை தண்டிக்க நினைத்து அவர்களுக்கு தம் சாதி ஆதரவை தாமாகவே ஏற்படுத்தி கொடுக்கக் கூடாது என அவர் ஒரு பக்கம் கணக்கு போடலாம்.
பலவீனப்பட்ட தன் ஓட்டுவங்கியை மீட்கும் ராமதாஸின் சக்கரவியூகத்தில் மாட்டி இளவரசன் திவ்யா ஜோடி பிரிய நேர்ந்து குடும்பம் சிதைபட்டு இப்போது அதே வியூகங்களின் அடிப்படையில் இளவரசனின் கொலையும் மறைக்கப்பட்டு கொலையாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள். இது ஜாதி அரசியலின் தீயவிளைவா? ஜாதி அரசியல் தான் அத்தனைக்கும் காரணமா?
ஜாதி அரசியலுக்கு பல அனுகூலங்கள் உண்டு. அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு ஜனநாயக குரலை தந்தது. அதே வேளை அதை அடிமட்டத்துக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்பதை வன்னிய, தேவர் சாதி சங்கங்கள் தாம் நிரூபித்திருக்கின்றன. இரண்டுமே வன்முறையை வழிபடும் சாதிகள் என்பது ஒரு பிரதான காரணம்.
விவசாயம் அல்லது வணிகத்தை பிரதானமாக நினைக்கிற சாதிகளிடையேயும் இதே சுயசாதி வெறியும் அதை பாதுகாக்கும் முனைப்பும் உண்டு. ஆனால் “வீர” அடைமொழி போட்டுக் கொள்ளும் சாதிகளைப் போன்று இவர்கள் அப்பட்டமாக நூற்றுக்கணக்கான மக்களை கொன்று கொள்ளையடிப்பதை செய்வதில்லை. தர்மபுரியில் நடந்தது ஒரு கலவரம் அல்ல, அது ஒரு திட்டமிட்டு நடத்தப்பட்ட போர். போர் சமூகங்கள் தம்முடைய பழங்குடி மனப்பான்மையில் இருந்து மீளாதது தான் தமிழ் சமூகத்தின் மிகப்பெரிய அவலம். உதாரணமாக தம்முடைய இரு கிராமங்கள் தாக்கப்பட்டதற்கு தலித்துகள் திரும்ப அதே வகை வன்முறையில் ஈடுபட முனையவில்லை என்பதும் அவர்கள் தொடர்ந்து அமைதி காக்கிறார்கள் என்பதும் வன்முறை களைந்த மையநீரோட்ட வாழ்க்கைக்கு அவர்கள் கல்வி, வேலை வாய்ப்புகள் மூலம் வர விரும்புகிறார்கள் என்பதை காட்டுகிறார்கள். ஆனால் நிலப்பிரபுத்துவ விவசாய வாழ்வுமுறையால் நிறைய பயன்பெற்ற வன்னிய, தேவர் சாதிகள் நவீன வாழ்வுக்கு ஏற்ப மாற விரும்பாதது புரிந்து கொள்ளத் தக்கது தான். அவர்கள் நவீன ஜனநாயக விழுமியங்களை எதிர்க்கிறார்கள். மன்னர் கால நிலப்பிரபுத்துவ மற்றும் வன்முறை அடிப்படையிலான ஒரு பண்பாட்டை மீட்டெடுக்க விரும்புகிறார்கள். தர்மபுரி கலவரங்களின் போது திட்டமிட்டு தலித் குடும்பங்களின் பணம், நகை சூறையாடப்பட்டது, புல்லட்டுகள் தீக்கிரையாக்கப்பட்டது ஆகியவை தலித்துகளை மீண்டும் நவீன பாதையில் இருந்து நிலப்பிரபுத்துவ வாழ்க்கைக்கு இழுக்கும் ஒரு முயற்சி தான். இன்று இந்த அபத்த நிலப்பிரபுத்துவ கனவின் அவலத்தை நம் கண்முன் படுகொலைகளாக பார்த்து வருகிறோம். ஆக பிரச்சனை ஜாதி கட்சிகள் அல்ல நிலம் சார்ந்த ஒரு பழமைவாத அரசியல் தான். ஜாதிக்கட்சி என்ற ஒன்று இல்லாவிட்டால் இந்த விசயத்தில் குறைந்தபட்ச கண்டனக் கூட்டங்கள் கூட இளவரசனுக்காக நடக்காது.
இது போல் முன்னரும் பல கலப்பு மண ஜோடிகள் கொடூரமாக அடித்தும் காதில் விஷம் ஊற்றியும் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அதே வரைவு இங்கும் செயல்படுத்தப்பட்டுள்ளது மனசாட்சி உள்ளவர்களை கடுமையாக தொந்தரவு செய்யும் ஒன்று. இந்தியாவில் ஜாதி, மதம் சார்ந்த குற்றங்கள் எப்போதும் ஏன் சட்டம், நீதி, தண்டனைகளுக்கு புறம்பாகவே உள்ளது என்கிற கேள்வியும் எழுகிறது. ஒரு சமூகமாக நாம் எப்போதும் சாதி, மத குற்றங்களை நேரிட தயங்குகிறோம். இந்த குற்றங்கள் நாளை நம் வாசலை வந்து தட்டாது என நம்புகிறோம்.
இரண்டு கேள்விகள். ஏன் சாதி குறித்த கேள்விகளை எதிர்கொள்ள தயங்குகிறோம்? ஏன் இன்றைய நவீன சூழலுக்கு முற்றிலும் அனர்த்தமாக தெரிகிற சாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறோம். மிக அதிகமாக படிப்பு பெற்ற உயர்தட்டினர் கூட சாதியை வலுவாக பிடித்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். இது ஏன்?
நாம் தொடர்ந்து சாதியை ஒழிப்பது பற்றி பேசி வந்திருக்கிறோம். அதன் ஒரே விளைவு நாம் பட்டவர்த்தமாக சாதி பெயர்களை பயன்படுத்தாதது, ஓரளவு ரகசியமாக சாதி விசாரணைகள், உரையாடல்கள் நடத்துவது என்பது தான். ஆனால் சாதி விவாதங்கள் என்பவை மைய சாதிகளுக்கான ஜஸ்டிஸ் கட்சி, திராவிட கழகம் துவங்கி இன்றைய சின்ன ஜாதி சங்கங்கள் வரை இங்கு இன்னொரு சாதியை எதிர்ப்பது என்கிற அளவில் தான் நடந்து வந்துள்ளது. ஆனால் சாதி எதிர்ப்பு எனும் பெயரில் அடுத்த சாதியை எதிர்க்கும் சாதி எதிர்ப்பு இயக்கங்களுக்கும் சாதி படிநிலையை கைவிடுவதில் தயக்கம் உண்டு. விஷம் கலந்த பாலில் இருந்து எப்படி விஷத்தை நீக்குவது என்பதே நம் சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளின் நோக்கமாக வந்துள்ளது. பாலை அப்படியே கொட்டுவதில் நமக்கு என்ன பிரச்சனை என கேட்க வேண்டும்.
சாதி என்பது நமக்கு அவசியமான ஒரு அடையாளம் என கருதி வந்திருக்கிறோம். சாதி மக்களை ஒன்றிணைக்கும் ஒரு உணர்வு. சாதி ஒரு பண்பாட்டு வாழ்வின் அடையாளம். ஒரு பழங்குடி இன உணர்வு என பலவகையில் விளக்கியிருக்கிறோம். இந்த விளக்கங்கள் அத்தனையும் பாசாங்கானவை. ஊறுகாய் தொடுவதற்காக சாராயம் குடிக்க பிடிக்கும் என ஒரு சொல்வது போல இது. ஒரு பண்பாட்டு அடையாளமாக அல்ல படிநிலையாகத் தான் நமக்கு சாதி அவசியமாக உள்ளது. ஆனால் சாதி ஒரு படிநிலையாக இருப்பது தானே அடிப்படை சிக்கல். அதனால் தானே இவ்வளவு கலவரங்கள் நேர்கின்றன!
சாதியின் அடிப்படை தூய்மை vs அசுத்தம் என்கிற எதிரிடை தான். வன்னியர்கள் தலித்துகளை அசுத்தம் என்றால் வன்னியர்களை பிள்ளைமார் அசுத்தம் என்பார்கள். இன்னொரு பக்கம் தலித்துகள் கூட தமக்கு கீழே உள்ள சாதிகளை அசுத்தமாக பார்த்து ஒடுக்குவதை பார்க்கிறோம். சாதியை அழிப்பது பற்றி வீரவசனம் பேசும் முன் சாதி நமக்கு ஏன் தவிர்க்க முடியாத ஒரு அமைப்பாக இருக்கிறது என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.
சாதியின் முக்கியமான இடம் அது படிநிலையில் நமக்கு ஒரு உயர்ந்த இடத்தை எளிதில் தருகிறது என்பது தானே. அதற்காகத் தான் நாம் அதை பல உயிர்களை யாகத்தீயில் வார்த்து சாதியை இன்னமும் தக்க வைத்து வந்துள்ளோம். மொழி உணர்வு கூடத் தான் பண்பாட்டு இயக்கமாக உள்ளது; மொழியும் மக்களை உணர்வு பூர்வமாய் ஒன்று திரட்டும் சக்தி கொண்டது தான் என்பதை சமீப பாலசந்திரன் படுகொலை தொடர்பான போராட்டங்களில் பார்த்தோம். ஆனால் நாம் மொழியை சாதியைப் போல ஒரு நீங்காத அடையாளமாக நாம் எங்கும் கூட கொண்டு செல்வதில்லை. சாதியை தக்க வைப்பதற்கான முயற்சிகளை மொழிக்காக எடுப்பதில்லை. காரணம் சாதியை போல் மொழி நமக்கு ஒரு உயர் அந்தஸ்து குறித்த போலி பெருமிதத்தை தருவதில்லை.
ஆனால் போலி பெருமிதத்தை ஏன் இன்னும் நம்புகிறோம்? இங்கு தான் மனிதனின் அடிப்படையான உளவியல் வருகிறது.
சமூக விலங்கான மனிதர்களுக்கு பொதுவாக உணவு, காமத்தை விட அந்தஸ்து, அதிகாரம் ஆகியவை தவிர்க்க முடியாத தேவைகள். அந்தஸ்துக்காக ஒரு மனிதன் பட்டினி கிடப்பான், கொலை செய்வான், துரோகிப்பான், பல அநியாயங்களுக்கு துணை போவான். இன்றைய நவீன சமூகத்தில் அந்தஸ்து பணத்தின் அடிப்படையில் உருவாகிறது. அதாவது நம்முடைய படிநிலை இன்று மிக நெகிழ்வான ஒன்றாக மாறி இருக்கிறது. ஒரு பழமையான சமூகத்தில் பணம் அல்ல அந்தஸ்து அதன் அளவில் மட்டுமே தக்க வைக்கப்படுகிறது. அதாவது அந்தஸ்தை பெற நீங்கள் உழைக்க வேண்டியதில்லை, அறிவை பெற வேண்டியதில்லை, பண்பாட்டில் உயர வேண்டியதில்லை. ஒரு டூத் பேஸ்டு வாங்கினால் தங்க நாணயம் இலவசம் என்கிற விளம்பரத்தை போன்றது தான் இதுவும். என்ன சாதியில் நிஜமாகவே தங்க நாணயம் தருகிறார்கள்.
இந்தியாவில் சாதியின் இன்னொரு வடிவம் தான் படிநிலை. ஐரோப்பாவில் அப்படி அல்ல. அங்கு நிலப்பிரபுத்துவ அடிப்படையில் படிநிலை இருந்தது. ஆனால் சுமார் பதினாறாவது நூற்றாண்டில் இருந்தே அவ்வகை படிநிலை சிதையத் துவங்கியது. எந்திரமயமாக்கலுடன் ஐரோப்பிய சமூகத்தின் மரபான படிநிலையும் மாற்றமுற்றது. பொருள்வழி படிநிலை தோற்றம் கொண்டது. அதனால் படிநிலை குறித்த ஆய்வு செய்த சமூகவியலாளர் லூயி டூமண்ட் படிநிலைக்கு சரியான உதாரணம் இந்திய சாதியமைப்பு தான் என கூறினார். ஐரோப்பிய படிநிலை அமைப்பு கராறாக ஒரு படிநிலை அல்ல என்றார்.
இந்திய சாதி அமைப்பு குறித்த ஆய்வு செய்ய டூமண்ட் இந்தியாவுக்கு வந்து பயணம் செய்து மதுரையில் சில காலம் தங்கி கள்ளர்களின் சாதி அமைப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வட இந்தியாவுக்கு போய் அங்குள்ளவர்களிடம் சாதி இயங்கும் விதம் குறித்து ஆராய்ந்தார்.. அவரது Human Hierarchicus என்கிற நூலில் நமது சாதிப் பற்றின் வேர் குறித்து அறிந்து கொள்ளலாம். டூமண்டை பொறுத்த மட்டில் ஒரு அசலான படிநிலையில் அந்தஸ்து எந்த நடைமுறை காரணமும் இன்றி மக்களுக்கு பல நிலைகளில் வழங்கப்படும். இந்திய சாதி படிநிலையின் பிரதான “அனுகூலம்” இது தான். தீபாராதனை முடிந்ததும் பூசாரி வரிசையில் நிற்பவர்களுக்கு தன் ”கணக்குப்படி” பிரசாதம் விளம்புவார் இல்லியா? எல்லாருக்கும் நிறையவோ கொஞ்சமோ பிரசாதம் கட்டாயம் கிடைக்கும். கொஞ்சம் கிடைத்தவர் தன் பின்னால் பார்த்து என்னை விட அவனுக்கு கம்மி என திருப்தி கொள்ளலாம்.
இந்திய சமூகத்தில் மக்கள் தாம் செய்யும் வேலை, தமது அறிவுக்கு சம்மந்தமில்லாமல் தான் மதிக்கப்படுகிறார்கள் என்று டூமண்ட் சொன்னது ஒரு முக்கிய கண்டுபிடிப்பு. இதை அவர் status without power என விளக்கினார். இங்கே அதிகாரம் (power) என்பதை ஒரு நடைமுறை வசதி, பொருளாதார சக்தி, அறிவின் வலிமை என புரிந்து கொள்ள வேண்டும். வரிசையில் போய் சும்மா நின்றால் போதும் உங்களுக்கு இறைவனின் அருளுடன் பிரசாதம், தீர்த்தம், பொங்கல் எல்லாம் கிடைக்கும். அதற்காக நீங்கள் உழைக்கவெல்லாம் வேண்டியதில்லை. நமக்கு இப்பிடி வரிசையில் நின்று பழகி விட்டது. திடீரென்று வரிசையை கலை என்றால் கோபம் வருகிறது. அப்போது வரிசை இருக்கட்டும் நான் கொஞ்சம் முன்னே போகிறேன் என்று பேரம் பேசிகிறோம்.
பிராமணர்களை எடுத்துக் கொள்வோம். நம் சமூகத்தில் மிக வெளிப்படையாக தம் சாதி அடையாளங்களை அணிபவர்கள் பிராமணர்கள். பொதுவழக்கில் தம் பிராமண பாஷையை கலப்படமின்றி பயன்படுத்துவதும் அவர்கள் தாம். நம் சமூகத்தில் மிக அதிகமாக சடங்கு, புனஸ்காரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், பி.ஜெ.பி போன்ற பழமைவாத கட்சிகளுக்கு ஆதரவளிப்பதும், நடைமுறையில் எவ்வளவு நவீனப்பட்டாலும் இன்னொரு பக்கம் கடுமையாக மரபை ஒழுகுபவர்களும் இவர்கள் தாம். நம் பாரம்பரியம் குறித்து மிக அதிகமாக பெருமிதம் கொள்பவர்களும் பிராமணர்கள் தாம். இதற்கான காரணங்களில் ஒன்று அந்த பட்டை, நாம, பூணூல் ஆகிய அடையாளங்களும் மந்திரம், பூஜை, சந்தியாவந்தனம், சூரிய நமஸ்காரம் போன்ற சடங்குகளும் அவர்களுக்கு உச்சபட்ச மதிப்பை அளித்து விடுவது. இன்னொன்று உணவுப் பண்பாடு. பிராமணர்கள் அசைவம் தவிர்ப்பதே “தூய்மை vs அசுத்தம்” எதிரிடையை தக்க வைக்கத் தான். நான் கலப்பு திருமணம் செய்த புதிதில் என் மாமியார் “உனக்கு பூணூல் போட்டு விடட்டுமா?” என ஆர்வமாக கேட்டார். நான் அந்த பூணூல் மூலம் எனக்கு என்னதான் கிடைக்கப் போகிறது, பிராமணன் ஆவது அவ்வளவு முக்கியமா என வியந்தேன். எங்கள் ஊரில் “பிராமணரில் முட்டாள் இல்லை. முட்டாள் என்றால் படுமுட்டாளாக இருப்பான்” என்கிற பொருளில் வரும் ஒரு பழமொழி உண்டு. இந்தியாவில் ஒரு கீழ்சாதி ஆள் என்னதான் படித்து சம்பாதித்து மேலே வந்தாலும், ஜனாதிபதி ஆனாலும் கூட அவர் ஒரு பிராமணனுக்கு கீழ் தான். அந்த பிராமணன் ஒரு பிச்சைக்காரனாக, பத்தாம் வகுப்பு முடிக்காதவனாகவும் இருந்தாலும் அவன் சட்டமேதை அம்பேத்கரை விட மேல் தான். இந்த அபத்தத்தை குறித்து தான் டூமண்ட் ஆய்வு செய்தார்.
சாதி அமைப்பின் அனுகூலம் என்ன? வெறுமனே ஒருவரை ஒடுக்கி கட்டுப்படுத்துவதா? ஒரு நிலப்பிரபுத்துவ சூழலில் ஒரு கீழ்சாதியை கட்டுப்படுத்தி வேலை வாங்க பயன்பட்டிருக்கலாம். ஆனால் நிலங்கள் அருகி விவசாய வேலைக்கே ஆள் கிடைக்காத நிலையில் படிநிலைக்கு நடைமுறையிலான பொருளாதார பயன் என்பது அதிகம் இல்லை. இன்னொரு பயன் கூட்டாக சாதி அடையாளத்தின் கீழ் இருப்பதன் மூலம் வணிகம் செய்வதில் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் பரஸ்பரம் உதவி செய்வது. சொல்லப்போனால் நமக்கு வேலை கிடைப்பது என்பது கணிசமாக நம் சாதியை நம்பித் தான் இருக்கிறது. ஆக நாம் ஒரு வேலையில் சேர்ந்ததும் இன்னொரு சாதி ஆளை ஆதரிக்கிறோம் அல்லது சேர்த்து விடுகிறோம். ஆனால் இது சரி என்றால் இந்த வரைமுறைக்குள் வராத, தலித்துகள் ஏன் தமக்குள் சாதி பாராட்டுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஒரு தலித் ஏன் இன்னொரு தலித்தை ஒடுக்குகிறான்? அவன் நிலப்பிரபு அல்ல. சாதி மூலம் வணிகம், வேலையில் ஆதரவு போன்ற பயன்களும் அதிகம் இல்லை. கீழே இருக்கிற ஒரு தலித்தை இன்னொரு தலித் கட்டுப்படுத்தி அவனுக்கு நடைமுறை பயன் இல்லை. ஆனால் வேறொன்று கிடைக்கிறது: அந்தஸ்து இது தான் நம் சாதி அமைப்பின் அடித்தளம்.

இந்தியாவில் இந்த அந்தஸ்தை நீங்கள் சுயமுயற்சியால் சம்பாதிக்க அவசியமில்லை. அது தானாக உங்கள் பிறப்புடன் வருகிறது. இந்திய சாதி படிநிலை அந்தஸ்தை அனைவருக்கும் பல அளவுகளில் அளிக்கிறது என்பது தான் அதன் முக்கிய பலம். அதாவது நீங்கள் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் கூட உங்கள் சாதி மூலம் உங்களை ஏதோ ஒரு வகையில் உயர்ந்த ஆளாக நினைத்துக் கொள்ள முடியும். இது மேல் சாதியில் இருந்து கீழ்சாதி வரை பொருந்தும். இந்த “வசதி” ஒரு ஐரோப்பியனுக்கு கிடையாது. நவீனத்தின் பெயரிலான ஐரோப்பிய பண்பாட்டை இந்தியர்கள் கடுமையாக எதிர்ப்பதன் காரணம் இது தான்.
பொதுவாக செயலின்மையை “சும்மா இருத்தல்” என்கிற பெயரில் ஒரு ஆன்மீக முறையாகவே மாற்றி கொண்டாடுகிற இந்தியர்களுக்கு சும்மா கிடைக்கிற ஜாதி அந்தஸ்து ஒரு பெரும் வசீகர ஏற்பாடாக இருப்பதில் வியப்பில்லை. நம் ஜாதி அமைப்பின் முக்கிய பண்புகளில் ஒன்று சும்மா இருப்பது. சும்மா இருப்பதன் வழி தான் நாம் ஜாதியை காப்பாற்றி வருகிறோம். இளவரசனின் கொலை விசயத்தில் நாம் அதைத் தானே செய்கிறோம். சும்மா இருக்கிறோம். இது குறித்து விரிவாக சமூகவியல் ரீதியாக வி.எஸ்.நைப்பால் தம் புத்தகங்களில் நையாண்டி பண்ணியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா நவீனப்பட்டு ஒரு நவமுதலாளித்துவ சூழலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதை பார்க்கிறோம். இந்த மாற்றம் அனைத்து சாதி தரப்பினருக்கும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. வலுவான சாதிகள் பல்வேறு அமைப்புகளின் பெயரில் ஒன்றிணைந்து விழா எடுப்பது, பிற சாதிகளை எதிரிகளாக கற்பித்து வன்முறையில் ஈடுபடுவது ஆகியவை சமீப காலங்களில் அதிகமாகி உள்ளது. இவர்கள் மூன்று விசயங்களை பண்ணுகிறார்கள். 1. சாதிய பண்பாட்டு விழாக்களை நடத்துகிறார்கள். அவற்றின் நீட்சியான சாதிய படங்களை எடுக்கிறார்கள். “காவல்கோட்டம்” போன்று வெளிப்படையான அல்லது “நெடுங்குருதி” போன்ற மறைமுகமான உயர் சாதி ஆதரவு நாவல்கள் எழுதுகிறார்கள். 2. ஒரு பொது எதிரியை கட்டமைக்கிறார்கள். 3. ஒரு அற்பமான பிரச்சனையை ஒட்டி பெரும் அளவிலான கலவரங்களை நிகழ்த்துகிறார்கள். இவை திட்டமிடப்பட்டு நடக்கின்றன. இந்த சாதிய திட்டப்பணியின் நோக்கம் கீழ்சாதியை அழிப்பது என்பதல்ல. அவர்களுக்கு கீழ்சாதி தம் சாதி அளவுக்கு முக்கியம். இதன் பிரதான லட்சியம் தம் சாதி விழுமியங்களை புது வலுவோடு மீட்டெடுப்பது தான். நவீன ஜனநாயக விழுமியங்களுக்கு மாற்றாக பழமைவாத நிலப்பிரபுத்துவ விழுமியங்களை புத்துருவாக்குவது தான். இந்த சாதியவாதிகள் கடுமையான மதவாதிகளாக பழமைவாதிகளாக இருப்பது இயல்பு தான். ராமதாஸ் கர்நாடக இசையை விரும்புபவர். மதுவிலக்குக்கு குரல் கொடுப்பதன் மூலம் பிராமணர்கள் போல் தம்மையும் தூய்மையின் தரப்பில் நிறுத்தி பிற சாதியினரை அசுத்தம் என நிறுவிக் கொள்கிறார். தேவர் சாதி விழாக்களில் மதவாதத்துக்கு ஒரு முக்கிய இடம் கொடுக்கப்படுகிறது.
இவர்கள் தம்மை ஒரு நவீனத்துக்கு முந்தைய சமூகமாக கற்பனை செய்வதற்கும் அதனை குறித்து பெருமிதங்கள் உருவாக்குவதற்கும் இந்த திட்டமிட்ட சாதி கலவரங்கள் உபயோகப்படுகின்றன. நவீன வாழ்வு, அதில் உள்ள சம்பாதித்தால் தான், படித்தால் தான் மரியாதை என்கிற கட்டாயம் நம் மக்களை அவ்வளவு அச்சுறுத்துகிறது. நமக்கு சும்மா இருந்தாலே கிடைக்கிற அந்தஸ்து வேண்டும். அதைக் கொண்டு இன்று நவீன வாழ்வு ஏற்படுத்துகிற உள்ளீடற்ற தன்மை, பாதுகாப்பின்மை பதற்றம், அடையாளமின்மை ஆகியவற்றை போக்கி விடலாம் என நம்புகிறார்கள். அதற்காக சாதியை வலுவாக பற்றிக் கொள்கிறார்கள்.
இது இந்திய சமூகத்தை ஒட்டுமொத்தமாக வியாபித்துள்ள வியாதி. நமக்கு நவீன வாழ்வின் பொருளியல் வசதிகள் அத்தனையும் வேண்டும். ஆனால் பொருளாதார அடிப்படையிலான ஒன்றாக நம் சமூக படிநிலையை மாற்றுவதை நாம் விரும்பவில்லை. சம்பாதித்தால் / படித்தால் மட்டுமே அந்தஸ்து கிடைக்கும் என்கிற கட்டாயம் பரவலான ஒரு பதற்றத்தை அனைத்து தரப்பினருக்கும் உருவாக்குகிறது. விளைவாக சாதியம், மதவாதம் ஆகியவை பெருமளவிலான ஒரு எழுச்சியை இன்றைய தலைமுறையினரிடையே அடைந்து வருவதை இன்று காண்கிறோம். இன்றைய இளைஞர்கள் முந்தைய தலைமுறையினரை விட அதிக சாதி மத வெறி பிடித்தவர்களாக உள்ளார்கள் என்பதே உண்மை. மோடி நவீன இந்தியாவின் அடையாளமாக முன்வைக்கப்படுவது, அவருக்கு இணையப்பயனர்கள், மற்றும் அயல்வாழ் இந்தியர்களான கணிசமான இளைஞர்களிடையே உள்ள பிரபல்யம், ஆதரவு இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
இந்த மத்திய/உயர் மத்திய வர்க்க தரப்பினர் தம்மை பழமைவாதிகளாக பார்ப்பதில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான விபரீதம். இவர்கள் தம்மை நவீனவாதிகளாக பார்க்கிறார்கள். உடை, பண்பாடு, அறிவு ஆகிய நிலைகளில் நவீனமாகத் தான் தெரிவார்கள். ஆனால் நுட்பமான அரசியல் தளத்தில் மிகப் பழமையாக இருப்பார்கள். ஊடகங்களில் கப் பஞ்சாயத்துகளின் கௌரவக் கொலைகளை கடுமையாக எதிர்த்ததில் இவர்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. கப் பஞ்சாயத்தின் முண்டாசு தாத்தாக்களை எதிர்ப்பதன் வழி தம்மை முற்போக்காக காட்டிக் கொள்வார்கள். ஆனால் பின்வாசல் வழியாக மோடியின் பேரணியில் இணைந்து தம்மளவில் சாதியை தக்க வைக்கவும் முயல்வார்கள். நவீன இந்தியர்களின் சாதியம் இவ்வாறு சிக்கலானது.
இந்த சிக்கலான அணுகுமுறை காரணமாகத் தான் நாம் பா.ம.க, தேவர் சாதி அமைப்புகள் போல் வெளிப்படையாக சாதி மேலாண்மையை ஆதரிக்காமல் இருந்தபடியே அதை எதிர்க்காமலும் இருக்கிறோம். அதாவது ஆரம்பத்தில் சொன்னது போல் “சும்மா இருக்கிறோம்”. இதுவரை இந்தியாவில் சாதி மற்றும் மதத்தின் பெயரால் கணிசமான மக்கள் கொல்லப்பட்டு ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஊழலின் பெயரில் ஒன்று திரளும் நம் மக்கள் இவ்விசயத்தில் மௌனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். இது நாம் இதை “அடுத்தவரின்” பிரச்சனையாக நினைப்பதனால் மட்டுமல்ல. சாதியை விட்டு விட்டால் வெட்டவெளியில் நிற்க நேரும் என்கிற பயத்தினாலும் தான். நவீன வாழ்க்கை ஏற்படுத்தும் ஒரு பெரும் வெற்றிடத்தை ரொப்ப நமக்கு சாதி அந்தஸ்து தரும் ஒரு உள்ளமைதி தேவைப்படுகிறது. நவீன வாழ்வின் பிரச்சனைகளை நேரடியாக தத்துவார்த்த தளத்தில் சந்திக்க நமக்கு திராணியில்லை. அதனால் சாதியை விட்டுத் தர நாம் இன்னும் தயாராக இல்லை.
இறுதியாக ஒரு கேள்வி. இதுவரை காதலித்த குற்றத்துக்காக பல தலித்துகள் பொதுப்படையாக கொல்லப்பட்டு விட்டார்கள். இதுவே இளவரசன் ஒரு முஸ்லீமாகவும் திவ்யா இந்துவாகவும் இருந்திருந்தால் அவர்களை பா.ம.க இவ்வளவு தைரியமாக பிரித்து வைத்து கொன்றிருக்குமா? காதலின் பெயரில் முஸ்லீம் கிராமங்களை கொளுத்த துணிந்திருப்பார்களா? அதை நம் முதல்வர் காணாதது போல் விட்டிருப்பாரா? இல்லை. முதலில் இங்கு மதப்பிரச்சனை வரும் சூழல் ஏற்பட்டாலே முதல்வர் பெரும் போலீஸ் படையை அனுப்பி தடுத்திருப்பார். உங்கள் வீடுகள் கொளுத்தப்பட உள்ளன, காடுகளில் போய் ஒளிந்து கொள்ளுங்கள் என கூற மாட்டார். ஒரு இஸ்லாமியன் தாக்கப்பட்டால் இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் உள்ள அத்தனை இஸ்லாமியர்களும் கோந்தளிப்பார்கள்; ஒன்றிணைந்து எதிர்ப்பார்கள். ஹுசேன் சயிதி தனது Black Friday நூலில் எப்படி மும்பை குண்டு வெடிப்புகளுக்கு பிறகு அங்குள்ள இஸ்லாமியர் ஓரளவு பாதுகாப்பாக உணர்ந்திருப்பார்கள் என எழுதுகிறார். இது வன்முறையை நியாயப்படுத்தும் கூற்றல்ல. ஆனால் இன்றைய அறமற்ற இனவெறி மிக்க சூழலில் ஒற்றுமையும் கட்சி ரீதியிலான ஒருங்கிணைந்த வன்முறையும் (தீவிரவாதம் அல்ல) ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்புக்கு முக்கியம் என்பதை பார்க்க வேண்டும். திருப்பித் தாக்குவது கடவுள் நமக்களித்த ஒரு அவசியமான பாதுகாப்பு திறன். தர்மபுரி பிரச்சனையை ஒட்டி இந்தியா முழுக்க உள்ள தலித்துகள் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக அளவில் கூட இந்த கோபம் ஒருங்கிணைக்கப்பட வில்லை. நபியை கேலி செய்த கார்டூன் எதிர்ப்புக்காக சென்னை மவுண்ட்ரோடில் இஸ்லாமியர் சேர்ந்து போராடி அரசாங்கத்தை பிரமிக்க வைத்தார்கள். ஏன் இந்த இஸ்லாமியர் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜெயலலிதா தயங்கினார்? ஏனென்றால் தம் ஓட்டு வங்கி பாதிக்கப்படும், அது இந்திய அளவில் பெரும் பிரச்சனையாக மாறி தேசிய மீடியா முழுக்க பேசப்படும், தமிழகத்தின் மானம் போகும், தன் எப்படியும் நிறைவேற வாய்ப்பற்ற பிரதமர் கனவு மொத்தமாக காலியாகும் என அவர் அறிவார். அதே நேரத்தில் தலித்துகளை கொல்லுவது ஒரு நிழல் விழுவது போல் சத்தமில்லாமல் நடக்கிற ஒன்று எனவும் அவர் அறிவார்.
தமிழக தலித்துகள் தம் கோபத்தை வன்முறையாக காட்டும் அவசியம் கூட இல்லை; ஒன்றிணைவதிலும், பிரச்சாரம் செய்வதிலும், போராடுவதிலும் காட்டலாம். இஸ்லாமியர் தம்மை பாதுகாத்து கொள்வதில் காட்டும் ஒற்றுமை மற்றும் போராட்ட குணத்தில் இருந்து நம்மூர் தலித்துகளுக்கு முக்கிய பாடம் உள்ளது. இல்லாவிட்டால் டோடோ என்றொரு பறவை முன்னர் நியூசிலாந்தில் இருந்தது. அதன் நிலை தான் நாளை உங்களுக்கும்.

Share This

4 comments :

  1. அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.......யாரும் எதற்கும் எல்லையைத் தாண்டக்கூடாது......

    ReplyDelete
  2. சிந்தனையைத் தூண்டும் ஆழமான பதிவு.

    எந்த முயற்சியும் இல்லாமல், ஒரு சாதியில் பிறந்ததாலேயே கிடைக்கும் அந்தஸ்து தான், இந்திய சாதி அமைப்பின் அடித்தள வலு என்பது ஒரு குறிப்பிடத்தக்க நோக்கு. ஆனால், இத்தகைய நோக்கு, இந்திய சாதி அமைப்புக்கு மட்டுமல்ல, பிற தேசங்களில், பல வகைகளில் பயன்படுத்தப் பட்டுள்ளது. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாடுகளில், டு புவாய்ஸ் (Du Bois) போன்றவர்கள், இதே கருத்தை “வெள்ளைத் தோல் அனுகூலம்” (White Skin Privilage) என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிடுகிறார்கள். சமுதாய, பொருளாதார அனுகூலங்களைப் பெற உங்களுக்கு, எந்தத் தகுதியும் தேவை இல்லை. வெள்ளைத் தோல் மட்டும் இருந்தால் போதும். வெள்ளைத் தோல் கொண்டவர்களுக்குக் கிடைக்கும் அனுகூலம், மறைமுகமாக, வெள்ளைத் தோல் இல்லாதவர்களை,சமுதாயத்தில் கீழே வைத்திருக்க உதவும் கண்ணுக்குப் புலப்படாத சங்கிலியும் கூடத் தான். அமெரிக்க முற்போக்காளர்கள் தொடர்ந்து வலியுருத்திப் போராடியதால், இப்போது “வெள்ளைத் தோல் அனுகூலம்” என்ற பார்வை சட்ட ரீதியான வலு கொண்ட, ஒரு பார்வையாக இருக்கிறது. அது போல், சாதி அளிக்கும் அந்தஸ்து, என்ற பார்வையும் மக்களிடம் வலுப்பட்டால், அந்தப் புரிதலே மாற்றத்திற்கு வழி வகுக்கலாம்.
    தலித் மக்கள், இத்தகைய வன்முறையை, ஒன்றாக நின்று எதிர்கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொல்வது ஒரு தற்காலிக ( temporary ) தீர்வாகத் தான் இருக்க முடியும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில், கறுப்பினப் பிரச்னையின் போது கருஞ்சிருத்தைகள் (Black Panthers), Nation of Islam, போன்ற அமைப்புகள், உருவாகின. இப்போது அவை, வலுவிழந்து போய் விட்டன. (Ironically, the only groups that seem to really like them are the white supremacist groups, as a prop fund raising), அதற்கு, முக்கிய காரணம், சட்ட ரீதியான பாதுகாப்பும், அமெரிக்க முற்போக்குச் சிந்தனையாளர்கள், civic groups, போன்ற அமைப்புகள், இதைப் பற்றி, வெகுஜன்ங்கள் மத்தியில், வெளிப்படையாக பேசத் தேவையான, மொழியை/வெளியை உருவாக்கியது தான்.

    அந்த ரீதியில், நம் “கள்ள மௌன’த்தைப் பற்றிய புரிதல், இந்த விஷயத்தை வெளிப்படையாக பேசுவதில் இருந்து தான் ஆரம்பிக்க முடியும்.


    (மதுரையைச் சார்ந்தவன் அல்ல என்பதாலோ என்னவோ, ஒரு விஷயம் புரியவில்லை. 'காவல் கோட்டம்', எந்த விதத்தில், உயர் சாதியினருக்கு வெளிப்படையான ஆதரவு அளிக்கிறது?)


    அன்புடன்

    ReplyDelete
  3. status என்ற வார்த்தைக்கு பதிலாக ego satisfaction என்ற வார்த்தையை நான் போட்டுக் கொள்ளலாமா? (உளறல் கேள்வியோ இது)

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates