Friday 23 August 2013

கலைஞன் பாமரனாக தோன்றும் வேளை






நேற்று ஆனந்த காந்தியுடன் கூகிள் ஹாங்கவுட்டில் அரட்டையில் கலந்து கொண்டேன். துடிப்பாக பேசும் இளைஞர். விமர்சனபூர்வமான கேள்விகளை எதிர்கொள்கையில் பதற்றமாகிறார். தீஷியஸின் கப்பல் படத்தில் உள்ள தெளிவு, ஆழம், அமைதி எல்லாம் பார்க்கிற போது அதன் இயக்குநரிடம் நேரில் உள்ள முதிர்ச்சியின்மை வியப்பளிக்கிறது. பொதுவாக கலைஞர்களை நேரில் சந்திக்கையில் நாம் எல்லோருக்கும் தோன்றுகிற குழப்பம் தான் இது.


அவரது படத்தில் பேசப்படுகிற தத்துவ பிரச்சனைகளில் மேற்கத்திய தாக்கம் அதிகம் என்றேன். குறிப்பாக freewill கோட்பாடு, தனிமனித பொறுப்பு, உடலுக்கும் மனதுக்குமான போராட்டம் ஆகியவை. அவர் இக்கேள்வியை விவாதிக்கவே தயாரில்லை. இன்னொரு பார்வையாளர் மற்றொரு நல்ல கேள்வி கேட்டார். தீஷியஸின் கப்பல் உள்ளடக்கத்துக்கு அதிக அழுத்தம் கொடுப்பது பற்றி ஒரு கேள்வி. அவர் கேட்டார் இன்றைய பின்நவீனத்துவ காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை நம்பி விவாதிக்கும் உறுதிப்பாடு யாருக்கும் இல்லை; அதனால் பின்நவீனத்துவ சினிமாவில் கதையை விட கதை கூறும் மொழி தானே முக்கியம் என்று. அவர் கேட்டது தியாகராஜன் குமாரராஜா பாணியிலான கதைகூறல் தானே இன்றைய சினிமாவுக்கு ஏற்றது என்று. இக்கேள்வியும் ஆனந்த காந்தியை பதற்றமாக்கி விட்டது. இதையும் கருத்திற்கொள்ளாமல் ஒரேயடியாய் மறுத்து விட்டார். 

இதையெல்லாம் பார்த்த போது எனக்கு தோன்றியது அவர் தன் படத்தில் வரும் சார்வாகா போன்றவர் என்று. வாழ்க்கை புரிந்து கொள்வதற்கான பிரச்சனைகளை அவ்வளவு ஆழமாக தெளிவாக அலசும் ஒரு படத்தின் இயக்குநரிடம் அதே தெளிவோ கூர்மையோ இல்லை. ஒரு இளங்கலை முதலாம் வகுப்பு மாணவன் போல் இருக்கிறார். அது தான் கலையின் சிறப்பு இல்லையா! 
ஒரு கலைப்படைப்பு கலைஞனை தனக்கான ஊடகமாக பயன்படுத்துகிறது. கலை எப்போதும் கலைஞனை கடந்து மகத்துவம் கொள்ளுகிறது. இப்படத்தில் வரும் கண் தெரியாத புகைப்பட கலைஞர் வெறுமனே தன் உள்ளுணர்வு கொண்டு அற்புதமான படங்கள் எடுப்பார். தீஷியஸின் கப்பல் படமும் அப்படித் தான் நிகழ்ந்திருக்கிறது. கலைஞன் ஒரு விளக்கை போல இருக்கிறான். ஒளிதரும் சுடர் மறைந்ததும் அவன் ஒரு வெற்று உலோகமாகி விடுகிறான். சுடர் ஒரு ஞான தெறிப்பை போல் அவனிடம் வந்து அமர்ந்து பின் மறைந்து போகிறது.
ஆனந்த் காந்தியின் இப்பிரச்சனையை பற்றி விமர்சிக்கும் மற்றொரு பதிவு
http://www.firstpost.com/bollywood/why-is-anand-gandhi-irked-by-allegations-of-plagiarism-in-ship-of-theseus-1008795.html 
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates