Friday 25 October 2013

இடஒதுக்கீடு தேவையா?


சில மாதங்கள் முன் நடந்த TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வின் போது தமிழக அரசு இடஒதுக்கீடு விதிகளின் கீழ் ஆசிரியர்களை நியமனம் செய்யவில்லை. 20,000 ஆசிரியர்கள் இவ்வாறு பொதுப் பிரிவில் நியமிக்கப்பட்டார்கள். இது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அநியாயம் என்பதில் சந்தேகமில்லை.


 NCETஐ பொறுத்தமட்டில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் அரசுக்கு அந்த தார்மீக கடமை இருந்தது. அது இந்த் சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து முன்னேற வேண்டியிருக்கிற ஒரு பிரிவு மக்களை கைகொடுத்து தூக்கி விட வேண்டிய கடமை. இந்த வாதம் இப்படியிருக்க இன்னொரு புறம் எதற்கு கைதூக்கி விட வேண்டும், அனைவரையும் சமமாகத் தான் நடத்த வேண்டும் என்றொரு வாதமும் இன்று மேற்தட்டினரால், குறிப்பாக நகர்மய இளையதலைமுறையினரால் வைக்கப்படுகிறது. சமீபமாக ஒரு டி.வி விவாத நிகழ்ச்சியில் ஒரு இடஒதுக்கீடு பற்றின விவாதம் வந்த போது ஒட்டுமொத்த பங்கேற்பவர்களுமே அதற்கு எதிராக ஆவேசமாக பேசினர். ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட மாணவர் அப்போது தோன்றி “இடஒதுக்கீடு தேவையில்லை என்றே நினைக்கிறேன். அது என்னை மேலும் அந்நியப்படுத்துவதாக அவமானகரமானதாக உள்ளது” என்றார். அவருக்கு இடஒதுக்கீடு மறுப்பாளர்களிடம் இருந்து பலத்த கரவொலி. இதைப் பார்க்கையில் இன்றைய இளையதலைமுறை எத்தகைய வரலாற்று உணர்வுடன், சமூக அறிவுடன், லட்சியவாதத்துடன் இருக்கிறது என்கிற அதிர்ச்சி நமக்கு ஏற்படுகிறது. இன்று சமூக முன்னேற்றம் என்பது தனிமனிதனின் சுயமுன்னேற்றம் தான் என அபத்தமாக நம்பும் ஒரு தலைமுறையுடன் நாம் இருக்கிறோம்.
வரலாற்று நியாயத்தை விடுங்கள், இடஒதுக்கீடு என்பது தமது வாய்ப்பை தட்டிப்பறிக்கும் ஒரு உரிமைத் திருட்டுக்காக அவர்கள் கருதுகிறார்கள். கிரீமி லேயர் வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுவது. அதாவது இடஒதுக்கீட்டின் போர்வையில் தாழ்த்தப்பட்ட சாதிகளில் உள்ள பல பணக்காரர்கள் தாம் வேலை மற்றும் படிப்பில் முன்னுரிமைகள் மற்றும் பண உதவிகளைப் பெறுவதாக சொல்லுகிறார்கள். சில குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளில் உதிரியாக இப்படியான சுரண்டல்கள் நடந்தாலும் கூட ஒட்டுமொத்தமாக இதனைக் கொண்டு இடஒதுக்கீடு ஒரு சமூக ஏமாற்று என கோருவது உண்மையாகாது. இந்த கிரீமி லேயர் விவகாரத்தை நாம் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும்.
இந்திய சமூகத்தில் மக்கள் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்கள், மானியங்கள், பாதுகாப்புக்கான சட்டங்கள் அனைத்தும் ஏதாவதொரு முறையில் ஊழலுக்குள்ளாகின்றன. பொதுவிநியோகத் திட்டம் உட்பட. எப்போதும் ஒரு கையளவு நன்மை தான் குறிப்பிட்ட மக்களுக்கு போய் சேர்கிறது. இது ஒரு பொதுவான துர்விதி. அதற்காக எந்த மக்கள் நலத்திட்டமும் இனி வேண்டாம் என பொத்தாம்பொதுவாக முடிவுக்கு வரமுடியுமா? இடஒதுக்கீட்டு விசயத்திலும் அவ்வாறு தான். எனக்குத் தெரிந்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் முழுக்க நந்தனத்தில் உள்ள விடுதியின் காரணத்தினாலும் சலுகையை பயன்படுத்தியும் தான் கல்லூரிப் படிப்பு வரை முடித்திருக்கிறான். இலக்கிய ஆர்வமும் எழுத்துத் திறமையும் கொண்ட அவனை விடுப்பின் போது சொந்த ஊருக்கு போக வேண்டாம் என நான் வலியுறுத்துவேன். அங்கு சென்றால் அவன் கரும்பு வெட்ட போக நேரிடும். வெட்டும் போது பட்ட காயம் அவன் கையில் வடுவாக பதிருந்திருப்பதை பார்க்கும் போது எனக்கு மனம் பதறும். எழுத வேண்டிய அவனது கைவிரல் ஒன்று கரும்பு வெட்டுகையில் துண்டிக்கப்பட்டால் என பலசமயம் யோசித்து நடுங்கியிருக்கிறேன். இப்படியான எத்தனையோ இளைஞர்கள் அரசின் இட ஒதுக்கீட்டு சலுகையால் தான் படிக்கவும் தம் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் முடிகிறது.
இன்று ஒவ்வொரு சமுதாயமும் தனக்கான சலுகைகளை போராடிப் பெறட்டும், நாம் முடிந்தவரை இதை ஒரு போட்டியாக நினைத்து தடுக்க வேண்டும் என்கிற ஒரு பிளவுபட்ட மனப்பான்மை மக்களிடம் இன்று அழுத்தமாக உருவாகி விட்டது. அதனால் தான் தாழ்த்தப்பட்ட சாதிகளே கூட தமக்கு கீழுள்ள சாதியினரின் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குத் தொடுப்பதை பார்க்கிறோம். இந்த அணுகுமுறை பிழையானது. எல்லா பிரிவனரிடையேயும் மிகத்திறமையான கடுமையான உழைப்பாளிகள் இருக்கிறார்கள். அவர்களை மேலெழ ஊக்குவிக்கும் போது ஒட்டுமொத்த சமூக வளர்ச்சிக்கு அது பெரிதும் பயன்படும். வேலை மற்றும் தொழில் வாய்ப்புக்கள் இன்று அபரிதமாக உள்ள நிலையில் வேலை செய்யும் திறனும் மனப்பான்மையும் உள்ளவர்கள் தாம் குறைவு. உண்மையில் இங்கு யாரும் யார் இடத்தை ஆக்கிரமித்து இருப்பதில்லை. தாழ்த்தப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரமும் கல்விநிலையும் உயரும் போது ஒட்டுமொத்த இந்தியாவின் வாழ்க்கைத்தரமும் தான் மறைமுகமாக உயரப்போகிறது. தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து தோன்றும் ஒரு சிறந்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளரால் உங்கள் எல்லாருக்கும் தான் பயன் ஏற்படும்.
இடஒதுக்கீடு எதிர்ப்பு இரண்டு விசயங்களைச் காட்டுகிறது. ஒன்று ஒரு வாய்ப்பை பொருண்மையான நேரடியான ஒன்றாக பார்க்கும் நிலப்பிரபுத்துவ மனப்பான்மை தான் இன்று இந்த எதிர்ப்பாளர்களிடம் செயல்படுகிறது. நவமுதலாளித்துவ கட்டற்ற வாய்ப்புகளின் சமூகத்தில் இந்த அச்சத்துக்கு எந்த மதிப்பும் இல்லை. அடுத்து, கிரீமி லேயர், சம-உரிமை வாதங்கள் இட-ஒதுக்கீட்டை முடக்குவதற்கான தந்திரமான தர்க்கங்கள் மட்டும் தான். மேலும் அரசும் அதிகாரமட்டமும் இட-ஒதுக்கீட்டை வாக்கு வங்கியை உத்தேசித்து தக்க வைத்தாலும் கிடைக்கிற சந்தர்பங்களில் எல்லாம் அதனை புறக்கணிக்கவும் பலவீனப்படுத்தவும் முயல்கிறது. TET ஒரு நல்ல உதாரணம். உண்மையில் இன்றும் எத்தனையோ காலியிடங்கள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்படாமல் இருக்கின்றன. சில பதவி உயர்வுகள் தாழ்த்தப்பட்டவர்கள் அங்கு வரக்கூடாது என்ற உத்தேசத்தில் தொடர்ந்து தரப்படாமல் இருக்கின்றன. எம்.எட், முனைவர் பட்டம் வரை முடிந்த பார்வையற்றோர் ரயில்களின் கைப்பேசி உறைகளும் கிளிப்புகளும் கூவி விற்று பிழைக்கும் நிலையில் இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டை கராறாக செயல்படுத்த வேண்டிய தேவையுள்ள சூழலில் அதை எதிர்ப்பது போன்ற குரூரம் மற்றொன்று இருக்க முடியாது.
Share This

3 comments :

  1. இட ஒதுக்கீடு சமூகத்தின் எல்லா அங்கத்தினரும், சமுதாய வளர்ச்சியில் பங்குகொள்ள உதவும் ஒரு கருவி. அது அறுவைச் சிகிச்சை நிபுணர் கையாளும், கூரிய, இலகுவான கத்தி அல்ல, ஏற்றத்தாழ்வுகளை நிரவி சமன் செய்ய உதவும் பெரும் புல் டொசர் போன்ற கருவி தான் இட ஒதுக்கீடு. இந்தப் பெரும் சமூக முயற்சியில், தாம் பாதிக்கப்படுவதாகக் கருதுவர்கள், கூச்சலிடுவது இயல்பு தான்.
    இதை நாம் இரண்டு வகையில் எதிர்கொள்ள வேண்டும்.
    முதலில், தொடர்ந்து சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, ஆவணப்படுத்த வேண்டும். ஒரு கிராமத்தில் பிறந்த தலித் மாணவன், தன் உள்ளூர் பள்ளியில், சுமாராகப் படித்த ஆசிரியர் சொல்லித் தந்ததை கற்று வருபவனும், பெரு நகரப் பள்ளிகளில், இரண்டு வருடம் தனியார் பள்ளியில், தேர்ந்த ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்த மாணவனும், ஒரே IIT-JEE தேர்வு எழுதி, வெறும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே எடை போட வேண்டும் என்று சொல்வது சமூகத்தைப் பற்றிய அறியாமையில் இருந்து விளைவது. இப்படிச் சொல்வதால், கஷ்டப்பட்டுப் படித்த மாணவனுக்கு, இடம் கிடைக்கக் கூடாது என்பதல்ல பொருள். அந்த மாணவன், அவனைப் போன்ற அனுகூலங்கள் கொண்ட பிற மாணவர்களுடன் ஒப்பிடப்படுகிறான் என்பது தான். இந்தப் புரிதல் பொது அறிவாக மாறும் வரை இதைத் தொடர்ந்து, வெகு ஜன ஊடகங்களில், தரவுகளுடன், புள்ளி விவரங்களுடன் வாதாட வேண்டும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு, சமூக நீதியில் அக்கரை உள்ள அனைவருக்கும் உள்ளது. இதன் முதல் படி சமூக, ஏற்றத் தாழ்வுகளை – கல்வி, பொருளாதார, அரசியலதிகாரம், வேலை வாய்ப்பு – சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நிறுவணங்கள் (Gallup, NGOs etc.) – தொடர்ந்து ஆவணப்படுத்த வேண்டும்.

    இரண்டாவது, இந்தியாவில் சாதி சார்ந்த பொருளாதாரப் பிரிவு, வரலாற்று/நடைமுறை உண்மை. சாதியைக் கொண்டு இட ஒதுக்கீடு செய்வது எளிதில் நடைமுறைப் படுத்தக் கூடியது என்பதும் உண்மை. அதே சமயம், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டைப் பிழையற்ற அலகு என்று சொல்ல முடியாது என்பதை ஒத்துக் கொள்வதில் தவறில்லை. ஒரு சில, எளிய policy மாற்றங்களைச் செய்வதின் மூலம், பெரும்பாலான குற்றச் சாற்றுகளைத் தவிர்த்து விட முடியும். உதாரணமாக, இரண்டு அல்லது மூன்று தலைமுறைகள் சாதி சார்ந்த இடஒதுக்கீட்டில் பயன் பெற்ற, வசதியான குடும்பத்தில் இருந்து (வேலை வாய்ப்பிலோ/கல்வியிலோ) வரும் மாணவர்களுக்கு, கிடைக்கும் சலுகைகளை படிப்படியாகக் குறைக்கலாம். இத்தகைய, means testing, எதற்காக இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதை மக்களுக்கு தொடர்ந்து நினைவுறுத்தும்.

    ReplyDelete
  2. //தாழ்த்தப்பட்டவர்களிடம் இருந்து தோன்றும் ஒரு சிறந்த மருத்துவர், ஆசிரியர், எழுத்தாளரால் உங்கள் எல்லாருக்கும் தான் பயன் ஏற்படும்//
    ஆனால் ஒரு உழைப்பாளி,அல்லது கூலி அவர்களிடமிருந்து காணாமல் போகிறான்.நீங்கள் சொன்னது போல் மருத்துவராகவோ,ஆசிரியராகவோ,எழுத்தாளராகவோ தயாராய் இருக்கும் மேல்சாதி சமூகம்,எடுபிடி வேலைகள்,உடலுழைப்பு வேலைகள் செய்ய முன்வருவதில்லையே.

    ReplyDelete
  3. முக்கியமான கருத்து கரிகாலன். இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates