Sunday 6 October 2013

குடி, கொண்டாட்டம், எதிர்சினிமா: தமிழ் சினிமாவின் திசையற்ற போக்கு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை




மலையாளத்துடனோ அல்லது இந்தியுடனோ ஒப்பிடுகையில் கடந்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவில் ஒரு தனித்தன்மை உருவாகி உள்ளது. குடி, கொண்டாட்டங்களில் திளைப்பது, அக்கறையின்மை, பொறுப்பின்மையை போற்றுவது, லட்சியங்களை மறுப்பது என இதை வரையறை செய்யலாம்.

இந்த வகைப் படங்களின் உச்சபட்ச உதாரணம் என “சூதுகவ்வுமை” சொல்லலாம். அப்படத்தில் சேகரிடம் பகவலன் கூறும் “எதுக்கு தொழில் பண்ணனும்?” என்பது நம் தலைமுறை படங்களின் பண்பாட்டை விளக்கும் ஆகச்சிறந்த முத்திரை வசனம். பகலவன் ஒன்றரை லட்சம் பணத்தை நயந்தாராவுக்கு சிலை வைப்பதில் வீணடிக்கிறான். அதை வீண் செலவென்று அவன் நம்ப தயாராக இல்லை. ஒழுக்கமான வழியில் அப்பணத்தை முதலீடு செய்து சம்பாதிக்க நினைப்பது தான் வீண் என்பான் பகலவன்.
 ஒழுக்கம், கராறான, கட்டுப்பாடான செலவு, கஞ்சத்தனம் ஆகியவை மத்தியவர்க்க விழுமியங்கள். மத்திய வர்க்கத்தில் இருந்து வணிக வர்க்கமாக மேலெழுந்த பனியா வர்க்கத்தினரிடமும், குறிப்பாக அவர்களின் அரசியல், ஆன்மீக தலைவரான காந்தியடிகளிடமும், இந்த ஒழுக்க கட்டுப்பாட்டை உயர்பண்பாக காணும் போக்கை காண முடியும். இன்றைய தலைமுறை தன் கண்முன்னே ஏழை-பணக்கார வேறுபாட்டில் ஒரு பெரும் பிளவை காண்கிறது. முந்தைய தலைமுறை போல் பொறுமையாக உழைத்து ஒவ்வொரு படியாக தாண்டி வர அது தயாராக இல்லை. உழைத்தால் முன்னேறலாம் என்கிற அறிவுரை பெரும் அபத்தமாக அதற்கு தோன்றுகிறது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கிற ஒரு உயர்மத்திய வர்க்கம் சில பத்தாயிரங்கள் மட்டுமே உச்சபட்சமாய் ஈட்ட முடிகிற பெரும்பான்மை மக்களை வெறும் ஈ புழுக்களாய் சித்தரிக்கிறது.
இன்னொரு பக்கம் எண்பதுகளில் துவங்கிய இலட்சியங்களின் வீழ்ச்சி. அரசியல், சமூகம், ஊடகங்கள் என இது வியாபித்து எப்படியும் மில்லியனர் ஆனால் போது, இதில் “எப்படி” என்பது முக்கியமல்ல என்கிற எண்ணத்தை வலுவாக விதைத்து விட்டது. ரௌடிகளும், பாலியல் தரகர்களும், மனசாட்சியற்ற வியாபாரிகளும் நம் கண்முன்னே தவறான வழிகளில் கோடீஸ்வரர்களாகி முக்கிய அரசியல் கட்சிகளை கைப்பற்றி பொருளாதார குற்றங்களுக்கு ஒரு நியாயத்தன்மையை ஏற்படுத்தினர். இதன் ஒரு பக்கவிளைவு தான் பொறியியலும், பிற உயர் படிப்புகளும் முடித்த இளைஞர்கள் பைக், செயின் திருட்டுகள் துவங்கி வங்கி கொள்ளைகள், கொலைகள், கோடிகள் வரை நீளும் இணைய குற்றங்கள் செய்வதும், அரசியலில் நுழைந்து யாராலும் கற்பனை செய்ய முடியாதளவு குற்றங்களை சில வருடங்களிலேயே நிகழ்த்தி காட்டுவதும் (மாரன், கனிமொழிகளில் இருந்து யாதவ் வரை). “சூது கவ்வுமில்” கடத்தல், லஞ்சம் ஆகிய குற்றங்களை நியாயப்படுத்துகிறதா அல்லது பகடி பண்ணுகிறதா என்பதை விளக்குவது சிரமம். ரசனைக்கும், கண்டனத்துக்கும் இடையிலான மெல்லிய கோடு படத்தில் ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுகிறது. ஏனென்றால் படத்தில் பாதிக்கப்பட்டவரின் தரப்பு என்று ஒன்றே இல்லை. இது டரண்டினோவின் படங்களில் உள்ள அதே பிரச்சனை தான். மிகைஎதார்த்தம், பகடி மூலம் குற்றங்களை ரசிக்க வைக்கிற குற்றங்களை இவ்வகை இயக்குநர்கள் செய்கிறார்கள். 
சத்யா

”சத்யா”, “மகாநதி” போன்று ஊழலையும், சமூக சீரழிவுகளை சாடும் வகையான படங்கள் தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்தன. அத்தகைய படங்களில் இருந்து இன்று நாம் வந்து சேர்ந்திருக்கிற இடம் நினைத்தால் பிரமிப்பூட்டுகிற ஒன்று. இன்று நாம் “மகாநதியை” திரும்ப எடுத்தால் அது அந்த குடும்பத்தை சீரழிக்கிற வில்லனின் கண்ணோட்டத்தில் இருந்து தான் இருக்கும். “வறுமையின் நிறம் சிகப்பு”, “நிழல்கள்” போன்று படித்த வேலையில்லாத திறமையிருந்தும் வீணாய் போகிற ஏழை நாயகன்கள் இன்று மத்திய வர்க்கத்தை நோக்கி நகர்ந்து விட்டார்கள். அவர்களுக்கு இன்று மேல்மத்திய வர்க்கத்திற்கும் (“கற்றது தமிழ்”), உயர்வர்க்கத்திற்கும் (“சூது கவ்வும்”, “பீட்சா”) தமக்கும் இடையிலான தாண்ட இயலாத பள்ளத்தாக்கு தான் கடும் வெறுப்பையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. உலகின் அத்தனை வசதிகளையும் வாய்ப்புகளையும் நம் முன் திறந்து காட்டும் மீடியாவும், தன் பிரம்மாண்ட வளர்ச்சியில் சிறு பங்கு கூட தராமல் தொடர்ந்து வெளியே துரத்தும் நகரம்யமாக்கலும் மத்திய வர்க்கத்தை சட்டென்று மீண்டும் தன்னை ஏழையாக நினைக்க வைத்துள்ளது.
இந்த குழப்பத்தில் மத்திய வர்க்கத்துக்கு தன்னுடைய உண்மையான எதிரி யாரென புரியவில்லை. “தங்க மீன்கள்” படத்தில் தன் மத்திய வர்க்க அப்பாவுக்கு உதவுவதற்காக தனியார் பள்ளியின் பணக்கார மாணவர்களின் ரப்பர், ஸ்கேல்களை திருடி வரும் செல்லம்மாவை போலத் தான் இன்றைய குற்றம் புரியும் நாயகர்கள் நடந்து கொள்கிறார்கள்.
இன்று தீராத கொண்டாட்டத்துக்கும், கண்மூடித்தனமான பொழுதுபோக்குக்கும் நாம் அளிக்கும் இடம் இந்த குழப்பத்தின் ஒரு விளைவு தான். எண்பதுகளிலும் தொண்ணூறுகளும் போல இன்றைய இளைஞனால் தன்னை ஒடுக்குவது சமூகம் தான் என உறுதியாக சொல்ல முடியவில்லை. ஏனென்றால் சமூகம் எங்கிருக்கிறது என்றே அவனுக்கு புரியவில்லை. 
விக்கிரமனின் படங்களில் முன்னேற விரும்புகிற திறமையான ஆனால் வாய்ப்புகளற்ற இளைஞர்கள் வருவார்கள். அவர்கள் இசை, நடனம் மூலம் சட்டென்று ஒரு நாள் மேலே வருவார்கள். நண்பர்கள் சேர்ந்து போராடுவது, மகிழ்ச்சியையும் துயரங்களையும் அனுபவிப்பது என்கிற சமாச்சாரத்தை சேரனும் சில படங்களில் கையாண்டார். ஊரை விட்டு நகரங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒண்டி வாழும் இளைஞர்களின் இந்த வாழ்க்கைப் பாட்டை வெங்கட் பிரபுவின் சென்னை 28யில் முற்றிலும் மற்றொரு கதையாடலாக மாற்றினார். அதன் பின் “கோவா”வில் இருந்து “சூது கவ்வும்” வரை நண்பர்கள் என்றால் அற்ப பிரச்சனைகளுக்காக மண்டையை உடைத்து தாமாகவே பிரச்சனைகளை உருவாக்கி எதேச்சையாக அவற்றுக்கு தீர்வு காண்பது என இவ்வகை படங்களின் போக்கு மாறியது. “இன்று போய் நாளை வா”வில் கூட இதே வேலையற்ற நண்பர்கள் தாம். ஆனால் அவர்கள் மீது சதா பெற்றோரின் கண்காணிப்பும் அங்கலாய்ப்பும் அலுப்பும் கழுகுப்பார்வையாக இருந்து கொண்டிருக்கும். ஆனால் ரீமேக்கான “கண்ணா லட்டு தின்ன ஆசையாவில்” எந்த சமூக பொருளாதார அழுத்தமும் கண்காணிப்பும் இராது. 
சென்னை 28
வெங்கட் பிரபு முடுக்கி விட்ட இளைஞர் பாத்திரங்கள் தான் இன்று “தேசிங்கு ராஜா”, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” வரை சுழன்று கொண்டே வருகின்றன. இவர்களுக்கு குறிப்பாய் எந்த பிரச்சனையும் இல்லை என்பதே பிரதான பிரச்சனை. சேர்ந்து அற்ப சாகசங்களை தேடி அலையும் நண்பர்கள் என்கிற பாத்திர அமைப்பில் கொஞ்சம் காதலை சேர்த்தால் ராஜேஷ் போன்றவர்களின் “பாஸ் என்கிற பாஸ்கரன்” “ஒரு கல் ஒரு கண்ணாடி” பார்முலா வந்து விடுகிறது. இந்த ஊதாரி நாயகனை கிராமத்தில் “கள்ளர்” சாதியத்தில் தோய்த்தால் “களவாணி” பார்முலா. சசிகுமாரின் மதுரைக்கார படங்களிலும் இதே வகை உதவாக்கரை இளைஞர்கள் தாம் நிலப்பிரபுத்துவ பின்னணியில் வருகிறார்கள். ஒவ்வொரு வகையின் அரசியலும், நிலவியல், சாதிய பின்னணியும் வேறுவேறு.
இதை நாம் “அட்டக்கத்தியுடன்” ஒப்பிடுகையில் தெளிவாக காண்கிறோம். பா.ரஞ்சித் தெளிவான விளிம்புநிலை அரசியல் கொண்டவர். ஆனால் “அட்டகத்தி” அரசியலை தேசலாக பின்னணியில் வைத்து விட்டு ஒரு தலித் இளைஞனின் எதிலும் ஒட்டாத அசட்டையான வன்முறை மற்றும் காதலை, அதன் ஒருவித கோமாளித்தனத்தை காட்டுகிறது. இப்படத்தின் முக்கியத்துவம் இன்றைய தலைமுறைக்கு காதலில் “இருப்பது” தான், காதலிப்பது அல்ல முக்கியம் என சொன்னது. ஆழமான தீவிரமான உணர்ச்சிகளை ஏற்பதில் நமக்குள்ள பிரச்சனைகளையும் அட்டகத்தி பேசியது. தினகரன் படத்தின் இறுதியில் வரும் அந்த பித்தனை போன்றவன். காதலின் தீவிர நிலைகளான நிரந்தரமாய் துய்ப்பது, ஏமாற்றத்தின் வலியை அனுபவிப்பது அவனால் முடிவதில்லை. அவன் காதலிக்கும் பூர்ணிமாவை பற்றின ஒரு பிம்பம் மட்டுமே அவனுக்குள் உள்ளது. அவளைப் பற்றி அவனுக்கு எந்த அடிப்படை தகவல்களும் தெரியாது. இருந்தும் அவளை உக்கிரமாய் காதலிப்பதாய் ஒரு மனத்தோற்றத்தில் ஊறித் திளைக்கிறான். இறுதியில் தான் ஏமாற்றப்பட்டதாய் உணரும் போதும் அவனால் காத்திரமான வலியை உணர முடியவில்லை. அவன் விலகி சிரிக்கிறான். காதலிக்கும் தன்னை காதல் அனுபவத்தில் இருந்து விடுபட்டு உணர்கிறான். இன்றைய தலைமுறையினரின் மனநிலை இது.
ரயில் பயணங்களில்
காதல் ஒரு லட்சியம். எண்பதுகளில் பொருளாதார வாய்ப்புகளற்ற சூழலில் இருந்து ஏமாற்றத்தின் கசப்பாக “ரயில் பயணங்களில்” போன்ற படங்களில் இருந்து “அந்த ஏழு நாட்கள்” போன்ற சமரச காதல் வரை இந்த ரொமாண்டிக்கான காதலின் வடிவங்களை பார்த்தோம். பின்னர் தொண்ணூறுகளில் நேர்ந்த பொருளாதார எழுச்சி தந்த நம்பிக்கை காரணமாக காதல் வாழ்க்கை சாத்தியம் என்கிற சேதி உள்ளடக்கின படங்கள் பல வந்தன. இந்த பத்தாண்டுகளின் இறுதியில் ஷங்கரின் “காதலன்” போன்ற படங்களில் காதலின் சாத்தியங்களை எழுச்சி மனநிலையில் ரொம்பாண்டிக்காக முழுநம்பிக்கையுடன் சித்தரிக்கப்பட்டதை கண்டோம். ரெண்டாயிரத்தின் துவக்கத்தில் “ஆட்டோகிராப்” ஒரு புறம் விக்கிரமன் பாணியில் காதலிப்பதில் உள்ள சமூக பொருளாதார பிரச்சனைகளை ரொமாண்டிக்காகவும், “காதல்” இன்னொரு புறம் இதே பிரச்சனைகளை கராறான எதார்த்தவாதத்துடனும் கொஞ்சம் மானுடவாதத்துடனும் சித்தரித்தன. ரெண்டாயிரத்தின் பிற்பகுதியில் காதலிப்பது என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமே என்கிற போக்கு உருவானது. “காதல்” போன்று அன்பையும் கருணையும் வலியுறுத்தும் வகையான படங்களை பின்னர் அதிமமாய் நாம் பார்க்கவில்லை. காதலை கையாள்வதை பொறுத்த மட்டிலும் “காதலில்” இருந்து “அட்டக்கத்தி” வரை தமிழ் சினிமா ஒரு சுழற்சியை முடித்துள்ளது எனலாம். காதலில் ஏமாற்றப்பட்டதால் பித்தனாகும் முருகனும் தினகரனும் “அட்டக்கத்தியில்” சந்தித்து கொள்ளும் இடம் வெகுசுவாரஸ்யமானது. தினகரன் முழுக்க காதலுக்கு வெளியே இருந்து காதலிப்பவன். அவன் காதல் தோல்வியால் பைத்தியமாக மாட்டான். பைத்தியத்துடன் சேர்ந்து தன் காதலை நினைத்து சிரித்தபடி மற்றொரு பெண்ணை காதலிக்க துவங்கி விடுவான்,
 
தில் சஹ்தா ஹெ - “நாம் நண்பர்களாய் இருந்தோம், இருக்கிறோம், இருப்போம்”

சென்னை 28 வகையான படங்களுக்கு முன்மாதிரி என்று “தில் சாத்தாஹெ”வை சொல்லாம். சுவாரஸ்யமாக, இப்படம் சீரியஸான நான்கு நண்பர்களை பற்றியது. அவர்கள் மேற்தட்டை சேர்ந்தவர்கள். தமிழ் சினிமா இந்த ஊதாரிகளை மத்திய வர்க்கமாக மாற்றிக் கொண்டது. இந்தியில் மட்டுமல்ல மலையாளத்திலும் கூட நாம் தமிழில் காண்கிற அசட்டை மனப்பான்மையை வலுவாக காண முடியாது. அங்கு தேசியவாதம், காதல் பற்றின மிகையான நம்பிக்கைகள் படங்களுக்கு ஒரு சீரியஸ் தன்மையை கொடுக்கின்றன. அனுராக் காஷ்யப்பின் “தேவ் டி”, “தில்லி பெல்லி” போன்ற படங்கள் அங்கு மையநீரோட்டத்தில் இல்லை. இங்கு அத்தகைய படங்கள் பிரதான வணிக படங்களாக மாறி உள்ளன. மலையாளத்தில் வடிவத்தில் தான் பின்நவீனத்துவ கூறுகளை கொண்டுவருகிறார்கள் (”திருவனந்தபுரம் லாட்ஜ்”, ”நெத்திலி ஒரு சிறிய மீனல்லா”). ஆனால் உள்ளடக்கம் இன்னமும் எண்பதுகளில் இருந்த கிளாசிக்கலான விசயங்களை கொண்டே இருக்கிறது.
தமிழில் கடந்த ஐந்தாண்டுகளில் டாஸ்மாக் கடைகளின் பெருக்கமும் அது தமிழ் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ள விதமும் கூட இத்தகைய கண்மூடி கொண்டாட்ட வகை படங்களின் போக்கிற்கு ஒரு காரணமாகலாம். நாம் வேறு எப்போதையும் விட மிக அதிகமாக இப்போது தான் அதிக டாஸ்மாக் காட்சிகளை சினிமாவில் பார்க்கிறோம். சமகால இந்திப் படங்களில் கூட இந்தளவுக்கு பார் காட்சிகள் இல்லை எனலாம்.
இந்த வகையான கட்டற்ற எதிர்ப்பண்பாட்டு வாழ்க்கை உண்மையில் நாம் வாழக் கூடிய ஒன்றா என்றால் இல்லை என்றே சொல்வேன். இன்றும் நமக்கு வாழ்வில் அடிப்படையான நம்பிக்கைகள் உள்ளன; ஒரு மையம் உள்ளது – அது குடும்பமோ, சமத்துவம் பற்றின கருத்தியலோ ஆக இருக்கலாம். முழுக்க முழுக்க இந்த படங்களில் காட்டுவது போல் குருட்டுத்தனமாய் நம் நடைமுறை வாழ்க்கை இல்லை என்பதை அறிவோம். இந்த கட்டற்ற எதிர்ப்பண்பாட்டை நாம் நிலத்தையும் அடையாளத்தையும் இழந்து மாநகர சேரிகளில் துயருறும் விளிம்புநிலை மக்களிடம் தான் காண முடியும். தமிழ் சினிமாவில் விளிம்புநிலை மக்களின் முகமூடியில் நம்பிக்கை இழந்த மத்திய வர்க்க இளைஞர்கள் திரிகிறார்கள் எனலாம். Gangs of Wasyapur போன்ற படங்களில் இந்த வாழ்க்கை ஒருவேளை நியாயமாக இருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் குடிகாரர்களாக, காதலிலும், வன்முறையும் எந்த ஆழ்ந்த பிடிப்புமற்றும் நம் ஹீரோக்கள் சித்தரிக்கப்படுவது மிகையானது தான்.
தமிழ் மத்திய வர்க்க இளைஞனின் வாழ்க்கை எங்கே போவது என தெரியாமல் முட்டி மோதி நிற்கிறது. அவன் விளிம்புநிலை முகமூடி அணிந்து குடியையும் காதலையும் கொண்டாடுவதாய் பாவனைகள் செய்து தன்னை ஏமாற்றுகிறான். இந்த பத்தாண்டு கால தமிழ் சினிமாவின் பாதை மாற்றத்தை நாம் இப்படியும் புரிந்து கொள்ளலாம்.
 நன்றி: vikatan.com
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates