Thursday 30 September 2010

இறைவனின் ஒன்பது பில்லியன் பெயர்கள் - ஆர்தர் சி கிளார்க்




”இது சற்று விசித்திரமான வேண்டுகோள் தான்”, பாராட்டத்தக்க கட்டுப்பாடு என்று தான் எதிர்பார்த்த ஒன்றுடன் டாக்டர் வாக்னர் கேட்டார். “எனக்கு தெரிந்த வரையில் ஒரு திபத்திய மடாலயத்துக்கு ஆட்டோமெட்டிக் சீக்குவன்ஸ் கணினி வழங்கும்படி கேட்கப்பட்டது இதுவே முதன் முறை. நான் அத்துமீறி ஆர்வம் காட்ட விரும்பவில்லை, ஆனால், உங்கள் உ ...ம்... நிறுவனத்துக்கு இத்தகைய ஒர் எந்திரத்தினால் பயனுண்டு என்று நான் சிறிதும் நினைத்திருக்க மாட்டேன். நீங்கள் அதைக் கொண்டு என்ன செய்ய உத்தேசிக்கிறீர்கள் என்று தயவு கூர்ந்து விளக்க முடியுமா?”

“மகிழ்ச்சியுடன்”, செலாவணி உரையாடல்களுக்காக தான் பயன்படுத்தி வந்த உழற்படி அளவைகோலை கவனமாக போட்டு விட்டு, தன் பட்டு மேலங்கியை சரிசெய்தபடி லாமா பதிலுரைத்தார். “உங்கள் மார்க் V கணினியால் எந்த வழக்கமான பத்து இலக்கங்கள் சார்ந்த கணித இயக்க செயல்களை செய்ய முடியும். ஆனால் எங்கள் பணிக்கு நாங்கள் எண்களில் அல்ல எழுத்துக்களிலேயே ஈடுபாடு கொண்டுள்ளோம். வெளியீட்டு தரவுகளின் மின்சுற்றுப் பாதையை நீங்கள் மாற்றி அமைக்க நாங்கள் விரும்புவதால், கணினி சொற்களை அச்சிடும், நிலைக்குத்தான எண்வரிசைகளை அல்ல”
“எனக்கு அவ்வளவாய் புரியவில்லை ..”

“கடந்த மூன்று நூற்றாண்டுகளாக நாங்கள் உழைத்து வரும் திட்டப்பணி இது – சொல்லப்போனால், லாமாலயம் ஆரம்பித்ததில் இருந்தே. உங்கள் சிந்தனாமுறைகு இது ஒருவிதத்தில் அந்நியமானது என்பதால் நான் இதை விளக்கும் போது நீங்கள் ஒரு திறந்த மனதுடன் கவனிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்”

”நியாயமாகவே”
“நிஜமாகவே இது ரொம்ப எளிதானது. இறைவனின் சாத்தியமுள்ள அனைத்து பெயர்களின் பட்டியல் ஒன்றை தயாரித்து வருகிறொம்”
“புரியவில்லை மன்னிக்கவும்”
”இந்த பெயர்களை எல்லாம்“, லாமா நிதானம் குன்றாமல் தொடர்ந்தார், ”நாங்கள் உருவாக்கி உள்ள எழுத்துத் தொகுதியின் ஒன்பது எழுத்துக்களுக்கு உள்ளாகவே எழுதிட முடியும் என்பதை நம்ப எங்களிடம் காரணம் உள்ளது”
“ஆக நீங்கள் இதை மூன்று நூற்றாண்டுகளாக செய்து வருகிறீர்கள்?”
“ஆமாம் எங்களுக்கு இப்பணியை முடிக்க பதினைந்தாயிரம் வருடங்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்”
”ஓ”, டாக்டர் வேக்னர் பிரமித்தது போல் தோன்றினார், “எங்களுடைய கணினிகளில் ஒன்றை நீங்கள் வாடகைக்கு எடுக்க ஏன் விரும்பினீர்க்ள் என்பது இப்போது தெரிகிறது. ஆனால் உங்களது திட்டப்பணியின் நோக்கம் சரியாக என்ன?”

லாமா நொடியின் ஒரு சிறு பகுதி அளவுக்கு தயங்கினார்; வேக்னர் தான் அவரை காயப்படுத்தி விட்டோமோ என்று வியந்தார். ஒருவேளை இருந்தாலும், அவரது பதிலில் எரிச்சலின் சிறுதடயமும் இல்லை.
“ நீங்கள் இதை ஒரு சடங்கு என்று வேண்டுமானால் அழைக்கலாம், ஆனால் அது எங்கள் நம்பிக்கையின் ஆதாரப் பகுதி. இறைவனின் அனைத்து பெயர்களும் – கடவுள், ஜெனோவா, அல்லா, மேலும் பலர் – மனிதனால் செய்யப்பட்ட
அடையாளக் குறிப்புகள் மட்டுமே. சற்று சிரமமான ஒரு தத்துவ பிரச்சினை இங்குள்ளது, அதை நான் விவாதிக்க உத்தேசிக்கவில்லை; ஆனால் எழுத்துக்களின், நிகழ்-சாத்தியம் உள்ள், அனைத்து விதமான சேர்க்கைகளின் இடையே இறைவனின் நிஜப் பெயர்கள் என்று சொல்லக்கூடியவை உள்ளன. திட்டமிட்ட வரிசை-மாற்ற ஒழுங்கமைவின் வழி நாங்கள் அனைத்தையும் பட்டியலிட முயன்று வருகிறோம்”

ஓஹோ, நீங்கள் AAAAAAAAA-வில் ஆரம்பித்து ... ZZZZZZZZZ வரை போட்டு பார்த்து வருகிறீர்கள்”
“மிகச்சரியாக – ஆனால், நாங்கள் எங்களுக்கேயான ஒரு பிரத்தியேகமான எழுத்துத் தொகுதியை பயன்படுத்துகிறோம். இதை சமாளிக்க எலக்டுரோமெட்டிக் தட்டச்சு எந்திரத்தை தகவமைப்பது, நிச்சயமாக, அற்பமே. ஏறத்தாழ அதைவிட பிரச்சினை முட்டாள்தனமான சேர்க்கைகளை நிர்மூலமாக்க தோதான மின்சுற்றுப் பாதையை உருவாக்குவதே. உதாரணமாக, எந்த ஒரு எழுத்தும் தொடர்வரிசையில் மூன்று தடவைகளுக்கு மேல் தோன்றக் கூடாது”
“மூன்றா? நிச்சயமாக இரண்டு என்று தானே உத்தேசித்தீர்கள்”
“மூன்றுதான் சரி. ஏன் என்பதை விளக்க ரொம்பவே காலம் பிடிக்கும் என்று அஞ்சுகிறேன், உங்களுக்கு எங்கள் மொழி விளங்கும் பட்சத்திலும் கூட”
“அதிர்ஷ்டவசமாக உங்கள் ஆட்டோமெடிக் சீக்குவென்ஸ் கணினியை இந்த பணிக்காக மாற்றியமைப்பது எளிய விசயமாகவே இருக்கும், ஏனென்றால் அதை சரியாக புரோகுரோம் செய்து விட்டால் ஒவ்வொரு எழுத்தையும் அதன் முறைப்படி வரிசை மாற்ற ஒழுங்கமைவு செய்து, முடிவை அச்சாக்கி தரும். எங்களுக்கு பதினைந்தாயிரம் வருடங்கள் தேவைப்பட்டிருக்கக் கூடியதை அதனால் ஒரு ஆயிரம் வருடங்களில் செய்து விட முடியும்”

கீழே உள்ள மன்ஹாட்டன் தெருக்களின் சன்னமான ஒலிகள் குறித்து சிறிதும் டாக்டர் வேக்னர் பிரக்ஞை கொண்டிருக்கவில்லை. அவர் ஒரு வித்தியாசமான உலகில் இருந்தார், மனிதனால் செய்யபட்டிராமல், இயற்கையால் உருவான மலைகளின் உலகில் இருந்தார். உயரே தங்களது தொலைதூர கூடுகளில் இந்த பிக்குக்கள், பரம்பரை பரம்பரையாக, பொறுமையாக, தங்களது பொருளற்ற சொற்களின் பட்டியல்களை தொகுத்து பணி செய்து வந்துள்ளனர். மனிதகுலத்தின் அசட்டுத்தனங்களுக்கு எல்லையே இல்லையா? இருந்தாலும், அவர் தனது உள்-எண்ணங்கள் குறிதத எந்த ஒரு ஜாடையும் காட்டக் கூடாது. வாடிக்கையாளர் எப்போதும் சரிதான் ...
“இந்த விதத்திலான பட்டியல்களை அச்சிடும்படி மார்க் V-ஐ மாற்றியமைக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை”:, பதிலுரைத்தார் டாக்டர், “ நிறுவுதல் மற்றும் பராமரித்தல் குறித்துதான் எனக்கு அதிக கவலை. திபெத்துக்கு கொண்டு போவது தற்போது எளிதல்லவே”
“அதை நாம் ஏற்பாடு செய்யலாம். விமானத்தில் அனுப்பும் வண்ணம் பகுதிகள் சிறியனவே – அதனால் தானே உங்கள் கணினியை தேர்ந்தெடுத்தோம். உங்களால் அவற்றை இந்தியாவுக்கு கொண்டு போக முடிந்தால், அங்கிருந்து போக்குவரத்தை நாங்கள் அளிக்க முடியும்”

”அதோடு உங்களுக்கு எங்களது பொறியாளர்களில் இருவரை நியமிக்க வேண்டும் அல்லவா?”
“ஆமாம், திட்டப்பணி நடக்கும் மூன்று மாதங்களுக்கு”
“எங்களது பணியாளர்களால் அதை சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லை”, டாக்டர் வேக்னர் தனது மேஜைக் குறிப்பேட்டில் குறிப்பொன்றை கிறுக்கினார். “வேறு இரண்டு விசயங்கள் உள்ளன –”

அவர் தனது சொற்றொடரை முடிக்கும் முன் லாமா ஒரு சிறிய காகிகத் துண்டை நீட்டினார்.
“ஏசியாட்டிக் வங்கியில் எனது அங்கீகரிக்கப்பட்ட வங்கி இருப்பு மிச்சத் தொகை”
“ நன்றி. இது உ ... ம் போதுமானது என்று படுகிறது. ரெண்டாவது விசயம் ரொம்ப அற்பமானது என்பதால் அதை குறிப்பிடவே தயக்கமாக உள்ளது – ஆனால் வெளிப்படையானவை எவ்வளவு முறை அடிக்கடி உதாசீனிக்கப்படுகின்றன என்பது வியப்பளிப்பது. உங்களிடம் உள்ள மின்சக்தி ஆதாரம் என்ன?”

“110 வோல்ட்ஸில் 50 கிலோவாட்ஸ் தரும் ஒரு டீஸல் ஜெனரேட்டர். அது ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டது. பிரார்த்தனை சக்கரங்களை இயக்குவதற்கான மின்சாரம் பெறுவதற்காக நிறுவப்பட்டாலும், அது லாமாலய் வாழ்வை மேலும் வசதியானதாக்கி உள்ளது”
“நிச்சயமாக”, டாக்டர் வேக்னர் எதிரொலித்தார், “ நான் அதை பற்றி யோசித்திருக்க வேண்டும்”

கைப்பிடிச்சுவரில் இருந்து காட்சி தலைசுற்ற வைத்தது, ஆனால் காலம் செல்ல ஒருவர் எதற்கும் பழகி விடுவார். மூன்று மாதங்களுக்கு பின்னர் படுபாதாளம் நோக்கிய ரெண்டாயிரம்-அடி பாய்ச்சலோ அல்லது கீழே பள்ளத்தாக்கில் உள்ள தொலைதூர சதுரங்கப்பலகை வயல்களோ ஜார்ஜ் ஹேன்லியை கவரவில்லை. காற்றில் மிருதுவான கற்கள் மீது சாய்ந்தபடி, தான் எப்போதுமே கண்டறிய விரும்பியிராத பெயர் கொண்ட தூரத்து மலைகளை கடுகடுப்புடன் வெறித்துக் கொண்டிருந்தான். ஜார்ஜ் நினைத்தான், அவனுக்கு நேர்ந்து இருப்பதிலே பைத்தியக்கார விசயம் இதுதான். “திட்டப்பணி ஷாங்க்ரி லா”, ஆய்வுக்கூடங்களில் உள்ள எவனோ புத்திஜீவி இப்படி பெயரிட்டிருக்கிறான். பல வாரங்களாக மார்க் V ஏக்கர் கணக்காய் தாள்களில் பொருளற்ற சொற்களை கக்கியபடி உள்ளது. ஒரு பிரிவை சார்ந்த சொற்களை காலி செய்த பின் அடுத்தது என்று பொறுமையாக, விடாப்பிடியாக கணினி எழுத்துக்களை அனைத்து சேர்க்கைகளிலுமாக மாற்றியமைத்து வருகிறது. எலெக்டுரோமெட்ரிக் தட்டச்சு எந்திரத்திலிருந்து
தாள்கள் வெளிவர, பிக்குக்கள் அவற்றை கவனமாக வெட்டியெடுத்து பிரம்மாண்ட புத்தகங்களில் ஒட்டினர். இன்னொரு வாரத்தில், ஆண்டவரே ஸ்தோத்திரம், அவர்கள் முடித்து விடுவார்கள். பத்து, இருபது அல்லது நூறு எழுத்துக்கள் கொண்ட வார்த்தைகளை நாடிச் செல்லாதிருக்க அவர்களை எந்த குழப்படியான கணக்குகள் நம்ப வைத்தனவோ ஜார்ஜுக்கு தெரியவில்லை. திட்டத்தில் ஏதாவது ஒரு மாற்றம் நேர்ந்து, திட்டப்பணி ஏறக்குறைய கி.பி 2069 வரை நீட்டிக்கப்படும் என்று தலைமை லாமா (அவரை அவர்கள் சேம் ஜாப் என்று இயல்பாகவே அழைத்திருந்தனர், ஆனால் அவரை போல் இவர் சிறிதும் தோன்றவில்லை) திடீரென்று அறிவிப்பது அவனுக்கு மீண்டும் மீண்டும் வரும் துர்சொப்பனங்களில் ஒன்று. அவர்கள் செய்யக் கூடியவர்கள் தாம்.
சக் அவனருகே மாடிச்சுவருக்கு வந்த போது ஜார்ஜ் தடிமனான மரக்கதவு காற்றில் மோதி அறையப்படும் ஓசையை கேட்டான். வழக்கம் போல், சக் தன்னை பிக்குக்களிடம் மிகவும் பிரபலப்படுத்தி இருந்த சுருட்டு ஒன்றை புகைத்தபடி இருந்தான்; இந்த பிக்குக்கள் அனைத்து சிறு மற்றும் பெரும்பாலான பேரின்பங்களை அரவணைக்க ரொம்பவே தயாராக இருப்பதாக பட்டது. அவர்களுக்கு அனுகூலமாக இருந்த ஒன்று அதுதான்: அவர்கள் கிறுக்கர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் கடுந்தூய்மைவாதிகள் அல்லர். உதாரணமாக, கிராமங்களுக்கு அவர்கள் அடிக்கடி மேற்கொண்ட பயணங்கள் ... “கேள் ஜார்ஜ்”, சக் அவசரமாக சொன்னான், “ நான் இடர்பாட்டுக்கு உரிய ஒன்றை அறிந்து வந்துள்ளேன்.”.

“என்ன பிரச்சனை? கணினி சரியாக வேலை செய்யவில்லையா?” இருப்பதிலே மட்டமான எதிர்கால சூழலாக ஜார்ஜால் அதைத்தான் கற்பனை செய்ய முடிந்தது. அது அவன் ஊர்திரும்பலை தாமதமாக்கும், அதை விட கொடுமையான வேறொன்று இல்லை. இப்போது அவன் உணர்வது படி ஒரு தொலைக்காட்சி விளம்பரக் காட்சி கூட சுவர்க்கத்தில் இருந்து வரும் அமிர்தம் தான். குறைந்தது ஊருடனான ஏதாவது ஒரு தொடர்பாக ஆவது அது இருக்கும்.
"இல்லை – அப்படி ஒன்றும் இல்லை”, சக் மாடிச்சுவர் மீது நிலைப்படுத்திக் கொண்டான்; அவனுக்கு கீழே விழுவது குறித்து பீதி ஆதலால் அது வழக்கத்துக்கு மாறான் ஒன்றே.
“இதெல்லாம் எதற்கு என்று நான் தற்போதுதான் கண்டறிந்தேன்”
“என்ன சொல்றே – நமக்கு தெரியும் என்றல்லவா நினைத்தேன்”
“ நிச்சயமாக – பிக்குக்கள் செய்ய முனைவது என்ன என்று நமக்குத் தெரியும். ஆனால் நமக்கு அது ஏன் என்று தெரியாது. அது இருப்பதிலே லூசுத்தனமானது –”
“ஏதாவது புதுசாக சொல்லு”, ஜார்ஜ் உறுமினான்.
“ஆனால் நம்மாளு சேம் இப்போது தான் என்னிடம் ஒத்துக் கொண்டார். தாள்கள் சுருண்டு வருவதைக் காண ஒவ்வொரு பிற்பகலும் அவர் வருகிற விதம் தான் உனக்கு தெரியுமே. சரி இம்முறை அவர் கிளர்ச்சிடடைந்து, அல்லது அவரால் அடைய முடிகிற அளவு அடைந்து, தெரிந்தார். நாம் கடைசி சுழற்சியில் இருப்பதாய் அவரிடம் நான் சொன்னபோது, தன்னுடைய சுட்டியான ஆங்கிலத்தில், தாங்கள் செய்ய முயலவது என்ன என்று நான் வியந்தது உண்டா என்று கேட்டார். நான் சொன்னேன், ’ நிச்சயமாக’ – அவர் சொன்னார்”

“தொடர்ந்து சொல், நான் வெளியே சொல்ல மாட்டேன்”
“அதாவது, அவர்கள் இறைவனின் அனைத்து பெயர்களையும் – அவை ஒன்பது பில்லியன் என்று அவர்க்ள் நம்புகிறார்கள் – பட்டியலிட்ட உடன் இறைவனின் நோக்கம் நிறைவேறி விடும். மனித குலம் அது என்ன செய்ய படைக்கப்பட்டதோ அதை முடித்திருக்கும்; மேலும் தொடர்வதில் எந்த பொருளும் இருக்காது. அட, இக்கருத்தே ஏதொ ஒரு தெய்வ நிந்தனையை போன்றது”
“அதனால் நாம் என்ன பண்ண வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள்? தற்கொலை செய்ய வேண்டுமா?”
“அதற்கெல்லாம் தேவை இருக்காது. பட்டியல் முடிக்கப்பட்ட உடன், இறைவன் இறங்கி வந்து எல்லாவற்றையும் இழுத்து மூடி விடுவார் ... புஸ்”
“ஓ, புரிகிறது. நாம் பணியை முடிக்கும் போது அது உலகின் முடிவாக இருக்கும்”
சக் பதற்றமாக குறுஞ்சிரிப்பு சிரித்தான்.
” நான் சேமிடம் அதைத்தான் சொன்னேன். உனக்கு என்னாச்சு என்று தெரியுமா? அவர் என்னை படு விநோதமாக பார்த்தார், நான் ஏதோ வகுப்பிலே முட்டாள் என்பது போல்; அதோடு சொன்னார், “அது அத்தனை சிறுமையானது அல்ல”
ஜார்ஜ் இதைக் குறித்து ஒரு நொடி யோசித்தான்.
“இதைத்தான் விரிவான பார்வையை மேற்கொள்வது என்று சொல்வது”, அவன் அப்போது சொன்னான்.
“நாம் இதைக் குறித்து என்ன செய்யலாம் என்று நினைக்கிறாய்? நாம் இதை எதற்கு பொருட்படுத்த வேணும் என்று தெரியவில்லை. எப்படி என்றாலும், அவர்கள் பைத்தியங்கள் என்று நமக்கு ஏற்கனவே தெரியுமே”
“ஆமா, -- ஆனால் என்ன நடக்கப் போகிறது என்று உனக்கு புரியவில்லையா? பட்டியல் நிறைவடைந்து கடைசி துருப்பு சீட்டும் -– அல்லது அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்களோ -- எடுபடாமல் போகையில், நம் மீது தான் பழி வரும். நம்முடைய் கணினியை அல்லவா அவர்கள் பயன்படுத்துவது. எனக்கு நிலைமை சற்றும் பிடிக்கவில்லை”

“அப்படியா”, ஜார்ஜ் மெதுவாக சொன்னான், “ நீ சொன்னதில் விசயம் இருக்குது. ஆனால் இது போன்ற விசயங்கள் இங்கு முன்னர் நடந்துள்ளன, தெரியுமில்லையா. லூசியானாவில் நான் சிறு பையனாக இருக்கையில் உலகம் அடுத்த ஞாயிறு அழியப் போகிறது என்று சொன்ன ஒரு மரைகழன்ற போதகர் இருந்தார். நூற்றுக்கணக்கான மக்கள் அவரை நம்பினர் – தங்களுடைய விட்டைக் கூட விற்றனர். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை; எதிர்பார்த்தது போல் அவர்கள் சினம் கொள்ளவும் இல்லை. அவர் தனது கணிப்பில் ஏதோ தவறிழைத்து விட்டதாக மட்டும் முடிவு செய்து, தொடர்ந்து அவரை நம்பினர். இன்னும் சில பேர் நம்பி வருகின்றனர் என்று நம்புகிறேன்”

“ஆனால் இது லூசியானா கிடையாதே, நீ கவனித்திருக்காத பட்சத்தில் சொன்னேன். நாம் இருவரும், நூற்றுக்கணக்கான பிக்குகளும் தாம் உள்ளோம். எனக்கு அவர்களை பிடிக்கும்; சேமின் வாழ்க்கைப் பணி எதிர்மாறான பலனை தரும் போது நான் அவருக்காக இரக்கப்படுவேன். ஆனாலும், நான் வேறெங்காவது இருந்திருக்கலாம் என்று விரும்புகிறேன்”

“நான் அதை வாரக்கணக்காக ஆசைபடுகிறேன். ஆனால் ஒப்பந்தம் முடிந்து, நம்மை ஏற்றிக் கொண்டு பறக்க போக்குவரத்து வரும் வரை நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது”
“நிச்சயமாக”, சக் சிந்தனைவயப்பட்டபடி சொன்னான், “ நாம் சற்று சேதம் எற்படுத்த முயலலாம்”
“கிழித்தோம்! அது விசயங்களை இன்னும் மோசமாக்கும்”
“நீ நினைப்பது போல் அல்ல. இப்படி யோசி. தற்போதைய நாளுக்கு இருபத்தி நாலு மணி நேர அடிப்படையில் இன்றிலிருந்து நாலு நாட்களில் கணினி தன் ஓட்டத்தை முடித்து விடும். போக்குவரத்து ஒரு வாரத்தில் வந்து விடும். சரி, நாம் செய்ய வேண்டியது எல்லாம் செப்பனிடும் வேளைகளில் ஒன்றில் மாற்றீடு செய்ய வேண்டிய ஏதாவது ஒன்றை -- ரெண்டு நாட்கள் வேலையை நிறுத்தி வைக்கும் ஒன்றை – கண்டுபிடிக்க வேண்டியது தான். நாம் அதை, நிச்சயமாய், சரி செய்வோம், ஆனால் ரொம்ப விரைவாக அல்ல. நாம் விசயங்களை ஒழுங்காக நேரத்தை கணித்தோமானால், பதிவுப்பட்டியலில் இருந்து கடைசி பெயர் சட்டென வெளிவரும் போது நாம் விமானதளத்தில் இருக்கலாம். அவர்களால் அப்போது நம்மை பிடிக்க முடியாது”
”எனக்கு அது பிடிக்கவில்லை”, ஜார்ஜ் சொன்னன், “நான் ஒரு வேலையை துறப்பது அதுவே முதல் தடவையாக இருக்கும். மேலும், இது அவர்களை சந்தேகப்பட வைக்கும். இல்லை, நான் பொறுமை காத்து, வருகிறதை சந்திப்பேன்”
“இப்போதும் எனக்கு அது பிடிக்கவில்லை”, ஏழு நாட்கள் கழித்து சிறு வலுவான மட்டக்குதிரைகள் அவர்களை நேளிந்து போகும் சாலையில் சுமந்து சென்றிட அவன் சொன்னான்.” நான் பயந்து போய் ஓடிப் போவதாய் உனக்கு படவில்லையா. அங்கே உள்ள அந்த பாவம் மனிதர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது; தாம் எத்தகைய ஏமாளிகளாக இருந்து உள்ளோம் என்று அவர்கள் அறியும் போது அங்கிருக்க நான் விரும்பவில்லை. சேம் இதை எப்படி எடுத்துக் கொள்வார் என்று வியக்கிறேன்”
“இது வேடிக்கையானது”, சக் பதில் சொன்னான், “ஆனால் நான் விடைபெற சென்ற போது நாம் அவரை கைவிட்டு போவதான எண்ணம் எற்பட்டது – மேலும் கணினி தடையற்று ஓடிக் கொண்டிருப்பதாலும் பணி சீக்கிரம் முடிந்து விடும் என்பதாலும் அவர் பொருட்படுத்த இல்லை என்று பட்டது. அதற்கு பிறகு – சரி நிச்சயமாய், அவருக்கு தான் அதற்கு பின்னால் என்று ஒன்று இல்லையே …”

ஜார்க் தனது சேணத்தில் திரும்பி அந்த மலைப்பாதையை வெறித்துப் பார்த்தான். லாமாலயத்தின் ஒரு தெளிவான காட்சி கிடைக்கும் இறுதி இடம் அதுதான். குட்டையாய், வீங்கி, கூர்முனைகள் கொண்ட கட்டிடங்கள் அஸ்தமனத்தின் பின் அழலொளிக்கு எதிராக கருவுருவங்களாகின; அங்குமிங்குமாய் விளக்குகள் ஒரு நெடுந்தொலைவு சமுத்திர பயணக்கப்பலின் பக்கச்சுவர் சாளரங்களைப் போன்று ஒளிவிட்டன. கட்டாயம், மார்க் V-இன் அதே மின்சுற்றுப்பாதையை பங்கிடும் மின்விளக்குகள். எவ்வளவு நேரம் அவை பங்கிடும்?, ஜார்ஜ் வியந்தான். பிக்குகள் தங்கள் வெஞ்சினம் மற்றும் ஏமாற்றத்தில் கணினியை அடித்து நொறுக்குவார்களா? அல்லது அமைதியாக அமர்ந்து கணிப்புகளை மீண்டும் ஆரம்பிப்பார்களா?

மலைக்கு மேல் அந்த கணத்தில் என்ன நடக்கிறது என்று அவனுக்கு மிகச்சரியாக தெரிந்தது. அவர்களது கீழ்நிலை பிக்குகள் தாள்களை தட்டச்சுகளில் இருந்து எடுத்து போய் பெரும் நூல்களில் ஒட்டிட, தலைமை லாமா மற்றும் அவரது உதவியாளர்கள் பட்டு ஆடைகள் அணிந்து அமர்ந்தபடி அவற்றை சோதித்துக் கொண்டிருப்பர். யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். பொத்தான்கள் காகிதத்தை தட்டும் தொடர்ச்சியான மென்தட்டல்கள், ஒருபோதும் முடிவுறாத புயல்மழை, தாம் ஒரே சத்தமாக இருக்கும்; ஏனெனில் தனது பல்லாயிரம் கணிப்புகளின் ஊடாய் நொடியில் பளிச்சிட மார்க் V அறவே அமைதியாக இருந்தது. இப்படியான மூன்று மாதங்கள் போதும், ஜார்ஜ் யோசித்தான், எவரையும் மதில் ஏற வைக்க.
“அதோ பார்” சக் கூவினான், பள்ளத்தாக்கை சுட்டியபடி, “என்ன அழகு இல்லையா!”
ஆமாம் நிச்சயமாய், ஜார்ஜ் யோசித்தான். பொலிவிழந்து பழசாகிய DC-3 ஓடுதளத்தின் முடிவில் ஒரு குட்டி வெள்ளி சிலுவை போல் கிடந்தது. இரண்டு மணி நேரத்தில் அது அவர்களை சுதந்திரம் மற்றும் இயல்பான மனநிலைக்கு சுமந்து சொல்லும். அருமையான மதுவைப் போன்று சுவைத்து நுகர வேண்டிய எண்ணம் அது. மட்டக்குதிரை பொறுமையாக இறக்கத்தில் உலைந்து இறங்கிட ஜார்ஜ் அவ்வெண்ணத்தை தன் மனதை சுற்றி உருள விட்டான்.

இமய உச்சியின் விரையும் இரவு அப்போது ஏறத்தாழ அவர்கள் மீது சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்பிரதேசத்தில் உள்ள சாலைகள் போன்றே, அச்சாலை மிக நன்றாக இருந்தது; அவர்கள் கைவிளக்குகள் வைத்திருந்தனர். அங்கு சற்றும் ஆபத்தில்லை; கடுமையான பனியினாலான குறிப்பிட்ட அசௌகரியம் தவிர. தலைக்கு மேல் ஆகாயம் பரிச்சயமான, நட்பார்ந்த நட்சத்திரங்களால் மிகத் துல்லியமாக கொழுந்துவிட்டு எரிந்தது. குறைந்த பட்சமாய், பருவ நிலை காரணமாய் விமான ஓட்டி விமானத்தை பறக்க முடியாதபடியான ஆபத்து-வாய்ப்பு ஒன்றும் இல்லை, ஜார்ஜ் யோசித்தான். அதுதான் அவனது ஒரே மிச்ச கவலையாக இருந்தது.

அவன் பாட தொடங்கினான், ஆனால் சற்று நேரத்துக்கு பின் கைவிட்டான். இருபக்கமும் வெண்ணிறமாய் முக்காடிட்ட பிசாசுகளைப் போல் மென்னொளி வீசும் அந்த மாபெரும் மலைகளின் பரப்பு அத்தகைய உற்சாகப் பீறிடலை ஊக்குவிக்க இல்லை. தற்போது ஜார்ஜ் தன் கைக்கடிகாரம் மீது பார்வையை ஓடவிட்டான்.

“இன்னும் ஒரு மணிநேரத்தில் அங்கிருக்க வேண்டும்:, அவன் தன் தோளுக்கு பின்னால் சக்கிடம் கூவினான். பிறகு ஒரு மறுயோசனையாக சேர்த்தான், “கணினி தன் ஓட்டத்தை முடித்திருக்குமா என்று வியக்கிறேன்? இப்போதுதான் எதிர்பார்த்த நேரம்”
சக் பதில் கூறவில்லை; அதனால் ஜார்ஜ் தன் சேணத்தில் இருந்து பின்னால் திரும்பினான். அவனால் சக்கின் முகத்தை மட்டுமே காண முடிந்தது, ஆகாயம் நோக்கி திரும்பிய ஒரு வெள்ளை முட்டை வடிவம்.
“பார்” சக் முணுமுணுத்தான்; ஜார்ஜ் தன் கண்களை வானம் நோக்கி உயர்த்தினான். (எல்லாவற்றுக்கும் ஒரு கடைசி தடவை எப்போதும் உண்டு)

தலைக்கு மேல், அலட்டாமல் கொள்ளாமல், நட்சத்திரங்கள் அணைந்து கொண்டிருந்தன.
Share This

1 comment :

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates