Sunday 26 September 2010

என்.டி ராஜ்குமார்: கோமாளி ஆக்கப்பட்ட கோமாளியின் குரல்





என்.டி ராஜ்குமார் தனது உச்சாடன தொனி மற்றும் தனித்துவமான நடைக்காக முதல் தொகுப்பான தெறியிலிருந்தே கவனிக்கப்பட்டவர். தலித் கவிதை வரலாற்றில் நிலைபெற்ற பெயர். அவரது ஆறாவது கவிதைத் தொகுப்பின் தலைப்பு குட்டிரேவதியின் “பூனையைப் போல் அலையும் வெளிச்சத்தை போல் நம்மை நெடுநேரம் அட்டைப் பக்கத்திலேயே நிலைக்க வைப்பது: சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள்.
இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் கேலி, அறச்சீற்றம், வன்மம், மாந்திரீகம், சமூக விமர்சனம், ஏக்கம், தலித் அரசியல், மதவிமர்சனம் (கிறித்துவம்), சுயமறுகல்-வெறுப்பு என பல்வேறு பழுத்த பழுக்காத சுளைகள் கொண்டவை. பல கவிதைகள் வடிவ ரீதியாக மரபார்ந்த பொருளில் முழுமையை அடைவதில்லை அல்லது திறக்காமலே மூடி விடலாம். அதாவது என்.டி ஒரு தொழில்நுட்ப கவிஞர் அல்ல.
நவீன கவிதைக்கான வழமையான இறுக்கம் கொண்டிருந்தாலும் இவரது படைப்புகள் சமூகவியல், தத்துவம், பௌதிகம், மதம் போன்ற நவீன கவிதையின் ஆழப்பதிந்த பாதைகளில் பயணிப்பதில்லை. தலித் தொல்வரலாற்று மற்றும் சடங்குகளின் அடையாளத்தை சுட்டி பேசுவது என்.டியின் தளம். ஆனால் முதலில் குறிப்பிட்ட மரபார்ந்த கவிதை தோற்றுவாய்களைப் போல் தலித் மரபை படிமமாக்குவது எளிதல்ல. மைய ஒழுக்கில் இருந்து அது விலகி இருப்பதும், வலுவான தத்துவ மரபு இல்லாததும் முக்கிய காரணங்கள்.


மேலும் archetype எனும் மூலப்படிமங்களை பயனபடுத்துவதும் எளிதல்ல. உதாரணமாக, டெட் ஹியூக்ஸ் விவிலிய வரிகளை காகக் கவிதைகள் மூலம் பகடி செய்யும் போது அல்லது பிரமிள் சைவப் படிமங்களை மீளுருவாக்கும் போது ஆழம் இயல்பாகவே உருவாவது அவை மைய சமூகத்தின் நனவிலி படிமங்கள் என்பதால் தான். தலித் வரலாற்றின் மரபான கதையாடல்களில் இருந்து அத்தகைய நனவிலிப் படிமங்களை உருவாக்குவது ஒரு பெரும் சவால். (என்.டி தனது வலுவான மொழி மூலம் இச்சவாலை திடமாகவே எதிர்கொள்கிறார், சில இடங்களில் நீர்,  நாய், சிவப்பு, மஞ்சள் போன்ற வழமையான மூலப்படிமங்களையும் கையாள்கிறார்.) ஆனால் இச்சவால ஒரு பரிமாணம் மட்டுமே. நமது தலித் படைப்பாளிகள் தங்களது வரலாற்றை அதன் மொழியில் எழுதித் தான் சமகால தமிழிலக்கியத்துக்கு வீரியமும், வேர்ப்பிடிப்பும் கொண்டு வந்தார்கள். படைப்பு மொழியை புதுப்பித்தார்கள். என்.டியின் பங்கு இவ்விதத்தில் குறிப்பிடத்தக்கது.
என்.டியை வாசிக்கும் போது அவர் வரலாற்றுத் துணிச்சலோடு வகுத்துக் கொள்ளும் எல்லையை கருத்தில் கொள்ள வேண்டும். வாள் வீசுவதானாலும், கனவு காண்பதானாலும், முன்னோர்களின் சுடலையில் அலைந்து திரிவதானாலும் அவர் தன் குதிரையில் இருந்து இறங்குவதில்லை. குதிரைப் பாய்ச்சல் தான் தனது குரல் என்பதில் தெளிவாக உள்ளார். அவர் இத்தொகுப்பில் மைய நீரோட்டத்தை ஒட்டியும் விலகியும் எழுதியுள்ள வரிகள் நாம் எண்ணற்ற முறை எழுதி உள்ளவை தாம்; ஆனால் தனது உயிர்ப்பும் உக்கிரமும் கூடிய உச்சாடன மொழியால் அவற்றை தனதாக்குகிறார். தீவிரமும் நுட்பமும் அபாரமான வாசிப்பு சுவாரஸ்யமும் கொண்டவை ஆக மாற்றுகிறார். தமிழில் அக்கறையின்றி பதிப்பிக்கப்படும் ஆயிரக்கணக்கான கவிதைகளின் பக்கம் சாய்ந்து விடாமல் தனது வரிகளை அவர் காப்பாற்றும் சூட்சுமம் ஆர்வமூட்டுவது. ஒரே சமயம் உங்களுக்கு தெரிந்ததும் தெரியாததுமான ஒரு இடம் இவரது கவிதைகளில் உள்ளது. மீள மீள வாசிக்கும் போது பொறிகள் தெறித்தபடியே உள்ளன. என்.டியின் தவிர்க்க முடியாத அம்சம் இதுதான். சுருக்கமாக, என்.டி ராஜ்குமாரின் கவிதைகள் மரபான விமர்சகனுக்கானவை அல்ல. மீண்டும் மீண்டும் புரட்டும் வாசக மனதுக்கானவை. உதாரணமாய்,

நடுநிசி நீராய் பரவிக்கிடந்த நான்
உள்ளிருந்தெழுந்த மீன்களை விட்டுன்
ஐம்புலனை கொத்திச் சென்றேன்

“மூடையில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட
காட்டுநெல்லிக் கூட்டத்திலிருந்து
உருண்டோடிச் சென்று கிடந்ததிந்த
இடமற்ற இடத்தில் தான்
இங்கு தான்
எனது சாமிக்கும் இன்னொரு சாமிக்கும்
முடிச்சு விழுந்தது

“எரியும் எனது பிணத்தின்
புகைகுடிக்கும் சுடலைப் பெண்ணே

“பச்சிலை மணக்கும் மூப்பத்தியின் சுவைகளைப் போல
கனிந்து தொங்கியது முலைகள்

சுடலைக்கு தின்ன வைத்திருக்கும்
எனதுடம்பில் ஒரு சூடேறிய கொள்ளி வந்து விழ

“சாராயம் மணக்கும் எனதுடம்பை
ஆதியில் அப்பன்
அம்மையின் அடிவயிற்கோடுகளாய்
போதையில் வரைந்து பார்க்க

“தாலிக்கயிற்றின் முடிச்சுகள் கொண்டெனது
ஆன்மாவின் மர்ம உறுப்பை இறுக்குகிறாள்
கட்டியவள்

“கள்ளுக்கலையம் பொங்குவது போல்
அப்பன் செத்த நாள் வருகிறது

“ஜன்னலுக்கு வெளியே காலொடிந்த காக்கைகளாய்
அலறிப் பறக்கின்றது புகைமூட்டம்

“முக்கண் சிரட்டைகளையும்
நுங்கு வண்டிகளையும் தொலைத்த நான்
கதைகளையும் விளையாட்டுகளையும்
போட்டு வைத்திருந்த ஓலைப்பெட்டியை தேடிய போது
அம்மா சொன்னாள்
“காக்க கொண்டு போச்சு

“நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரகம்
மேலும்
நண்பர்களே இல்லாத வாழ்க்கை
சுபம்

என்.டியின் இந்த தொகுப்பின் தலைப்பு மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. “சொட்டுச் சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப் பூக்கள் என்பதில் விழுதல் எனும் செயலும், அரளிப் பூவின் செந்நிறமும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்டவை. தடையற்ற ஒரு வெளிப்படலை விழுதல் நிகழ்வும், தீவிர ஆழ்மன எழுச்சியை செவ்வரளியும் குறிக்கின்றன. தொகுப்பின் முக்கியமான கவிதைகள் இந்த ஆழ்ந்த தீவிர வெளிப்படலின் புள்ளியில் குவிபவை தான். சில கவிதைகள் தடைபட்ட வெளிப்படலின் பெருந்துயரை பேசுபவை. சமூக விழுமியங்கள் பூட்டும் கட்டுகளை உடைத்து மனம் தனதேயான வாழ்வுநோக்கை அடைய வேண்டும் என்று என்.டியின் வரிகள் சொல்லுகின்றன. என்.டியின் கவிதைகளில் “நீ என்ற எதிர்நிலை சமூகமைய நீரோட்டத்தில் முக்குளித்து மறைந்த நடுநிலை மக்களை சுட்டுகிறது. தன்னிலை கவிதைசொல்லி பொதுசமூகத்தின் எதிர்சாரியில் ஒரு வேதாளமாக, பேயோட்டியாக, தலித்தாக, விளிம்புநிலை கலகவாதியாக, திருட்டு எலியாக தனியாக நின்று நடுநிலை மனப்போக்கை புறக்கணிக்கிறான், பரிகசிக்கிறான், கண்டிக்கிறான். தமிழில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான கவிதை ஆளுமைகளை விட என்.டியின் இந்த தனிமனித குரல் மிகுந்த வன்மமும், ஆவேசமும் கூடி ராட்சச ஆகிருதி பெறுகிறது. என்.டியின் கவிதைப் பரப்பில் மூன்று நிலைகளிலான மனிதர்கள் வருகிறார்கள். (1) நடுநிலை மனிதர்கள், (2) சுய-ஆற்றலை உணர்ந்தும் தன்னை முழுதும் வெளிப்படுத்தாது குடும்ப உணர்ச்சிகளின் அடிமையாக முன்னகர முடியாது தேங்கி விட்டவன். ஒரு நாணயமான பொறுக்கி. கவிதைசொல்லி இந்நிலையில் இருந்து தன்னிரக்கத்துடன் பலசமயம் புலம்புகிறான். (3) சமூகத்தில் இருந்து மீறி ஆழ்மனதின் பேராற்றலை வெளிப்படுத்தும், உச்சங்களை அடையும் மனத்திண்ணம் கொண்டவன். கிட்டத்தட்ட நீட்சேயின் அதிமனிதன். என்.டியின் கவிதைசொல்லி இந்த அதிநிலையை மாந்திரகத்தின் மற்றும் கனவு அல்லது புனைவின் பித்துநிலையில் மட்டும் அடைபவன். நீட்சேயின் பாதிப்பால் எழுதிய ஆலன் கின்ஸ்பெர்க், சார்ல்ஸ் புக்காவஸ்கி போன்றோரின் பிறழ்வின் உச்சவெளிப்படலை நாம் என்.டியின் வரிகளில் அடையாளம் காண முடியும். மேற்சொன்ன இரு கவிஞர்களும் ஒரு வலுவான தன்னிலை சுயத்தை பொது சமுகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக முன்வைத்தவர்கள் என்பதையும் இங்கு சொல்ல வேண்டும். ஆனால் என்.டியிடம் நாம் காணும் வேறுபாடு (அவரது மாந்திரிகப் பின்னணியுடன்) மேற்சொன்ன ஆளுமை முரண்பாடு. பொறியில் மாட்டிக் கொண்ட ஒரு வனமிருகத்தை போல் அவர் குருதிவடியும் கோரப் பற்களை திறந்து காட்டியபடி திமிறி ஒலமிட்டபடுகிறார். அறிவார்ந்த அமைதி அவரது தங்கப்பல் அல்ல.



என்.டியின் அதிஆளுமை சில தொடர்ச்சியான உருவகங்கள் மற்றும் உவமைகளால் இத்தொகுப்பில் கட்டப்பட்டுள்ளது. கருத்துக்களால் அவர் வெளிப்படுத்தும் அரசியல் ஆளுமை போக, இந்த அதி-ஆளுமை கவித்துவ எழுச்சியால் மட்டுமே தோற்றம் கொள்கிறது. இதுவே சமூகத்தில் எதிர்நிலையில் வைத்து பேசுவது. ஒரு கவிதையில் பாட்டி சுட்ட வடையை காக்கா திருடிப் பறக்க, பாட்டி காகத்தின் கவனம் திருப்ப நவீன கவிதை பாடக் கேட்டு முயன்று தோற்கிறாள். பிறகு அவளது பூர்வீக மனம் “நரியைப் போல் ஊளையிட சொல்கிறது. மற்றொரு கவிதையில் பட்டு விழுந்த வேதாள (முருங்கை) மரம் அவர் மீது தொற்றிக் கொள்கிறது. “மரநாயின் உருவமோ நரியின் ஊளைச்சத்தமோ வராத கனவு என்னை நடுவழியில் விட்டுச் சென்று விடுகிறது என்கிறார். தொடர்ந்து எலி, காகம், பன்றி போன்ற மிருகநிலைகளிலும், கோமாளி போன்ற விளிம்புநிலையிலும், கூடுவிட்டு கூடு தாவும் ஆன்மா, மனிதனின் ஐம்புலன்களை சுவீகரிக்கும் பிசாசு என அமானுட நிலையிலும் தன்னை இனம் காண்கிறார். இந்த விளிம்புநிலை, மிருக, அமானுட மொழி தான் என்.டி ராஜ்குமாரின் அதிஆளுமையை சொல்லும் ஆதாரக் குரல். இம்மொழி உயிர்கொள்ளும் இடங்களில் அவரது மிகச் சிறந்த கவிதைகள் பிறக்கின்றன.

தனது அதிமனித ஆளுமையை படைப்பியல் முறையில் வெளிப்படும் கவிதைகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் கீழ்வருவது:

“தேனீச்சிகளில் இருந்து வேறுபட்டு
வெகுகாலமாயிற்று
அம்மை என் அதீத வளர்ச்சி கண்டு
அந்தம் விட்டு நிற்கிறாள் (1)
கிளைக்கதைகள் சொல்லும் பசுமையான
கடம்பமரம் கொண்டு
வினோதமான வீடொன்றை
எழுப்புகிறேன்
பின்வாசலென்று இங்கு எதுவுமில்லை
ஒருவாசல் வழியாக நுழைந்து
இன்னொரு வாசல் வழியாக
குருவிகள் சிலம்புகள் போல்
பறந்து சளைக்கின்றது

(1)     அந்தம் விடுதல் என்றால் பெரும் வியப்பில் உறைந்து போவது

தொடர்ச்சியான பலநிலைகளிலான திறப்புகளை இது பேசுவதை கவனியுங்கள். பக்கவாசல்கள் மட்டும் கொண்ட மரவீடு; அதன் வழி பறவைகள் வெளிப்படுவதால் இருந்த இடத்திலேயே பெருவெளியின் மற்றொரு வாசலாக மாறும் அதன் விரிவு. அடுத்து, வீட்டிலிருந்து வானம் ஏகும் பறவைகள் சிலம்புகள் போல் ஒலித்து பறப்பதாய் சொல்கிறார். இந்த ஒலிப்படிமம் வானம் ஏகும் பறவையை மனதின் குறியீடாக்கி அலாதியான ஒரு அனுபவத்தை நமக்கு தருகிறது. இங்கு வீடு கட்டுவது முடங்க அல்ல, பறந்து உச்சி நோக்கி எழ. நடுநிலை வாழ்வை மீறுவது என்று இதையே குறிப்பிட்டேன்.

அபோத நிலையில் மட்டும் அடைய முடிகிற தூயமிருக நிலையை கொண்டாடுவதன் மூலம் இதே மீறலை மீண்டும் நிகழ்த்துகின்றன அவருடைய கவிதைகள். இதைப் பாருங்கள்.

கோளாறாகிவிட்ட  
உனது உள்ளொடுங்கிய வீடு
புதவல்களால் நிரம்பிக் கிடக்கிறது
பூச்சிகளோடு உள்ளிருக்கும்
மிக அழகான பூரான்கள்
வன்மம் இழையோடும் கால்களோடுப்
பின்னி பின்னி முன் விரைந்து
அற்புதமான குறும்புகளோடு வெளிவருகின்றது

இங்கும் வீடு கோளாறாகி இருப்பதே அதன் சாதகத்தன்மை. மனிதன் மேனிலை அடைவதற்கு அதீத துயரமே உதவும் என்று கருதினார் நீட்சே. அழிவு மனித மேம்பாட்டுக்கான பாதை என்றார் அவர். சிதிலமாகிய வீட்டில் இருந்தே அழகான பூரான்கள் வருகின்றன. இதில் குறிப்புணர்த்தப்படும் வன்மத்தின் அழகியல் மேலும் வலுவாக கூட்டில் கிடந்த புறாக் கூட்டம் கவிதையில் மேலெடுக்கப்படுகிறது. ஜோடிப் புறாக்களில் ஒவ்வொன்றை மட்டும் பிடித்து தின்கிறது ஒரு பூனை. புறா வளர்ப்பவன் பூனையை கொல்ல பலவிதங்களில் முயன்று தோற்கிறான். கடைசியில் பசியில் அது பரிதாபமாக தவிப்பது கண்டு அவன், வினோதமாக, தன்னிடம் மிஞ்சியிருந்த் ஒரே புறாக் குஞ்சைப் பிடித்து அதற்கு தின்னக் கொடுக்கிறான். ஒரு விதத்தில் இக்கவிதை பூனையின் நீதியை நீட்சேயிய பாணியில் ஏற்றுக் கொள்கிறது. புறாக்கள் அழிவதை விட பூனை கீழிறங்கி காந்தியாகாமல் இருப்பது முக்கியம். இதே அதிமனித அனுபவம் கனவிலும் (நடுஇரவை புனைந்து ...) எதேச்சையாக நடைமுறை வாழ்விலும் (எங்கெல்லாமோ அலைந்து ...) கூட நம்முன் திறக்கலாம். இரண்டுமே முக்கியமான கவிதைகள்.

மேலே குறிப்பிட்ட இரண்டாம் நிலையை இரங்கும் கவிதைகளும் தனிச்சிறப்பானவை தாம். நண்பனை அவனது அம்மா என்ற கவிதையில் அரைப்பைத்திய நண்பனும், கவிதைசொல்லியும் “பனங்காட்டுக்குள் வேதாள சிறகசைத்து ஆந்தைகள் தள்ளியிடும் பழங்கள்தின்று வாழாமல் நகரத்துக்கு வந்து மஞ்சளித்து போகிறார்கள். மஞ்சள் வண்டியில் நண்பனை ஏற்றி கொல்ல முயல்வதன் இடையில் அவன் பாதியில் இறங்கி விட முழுப்பைத்தியமாகிறான். இருவரும் பின்னர் பிரம்மையின் ஓலைத்தும்பில் பனித்துளி போல் தொங்குகிறார்கள். இந்த வெளியேற முடியா திணறல் மேலும் தீவிரமாக “நானொரு கோமாளி கவிதையில் வெளிப்படுகிறது. “இயல்பில் திரிய முடியாத கோமாளி/வலிந்து திணிக்கப்பட்ட கோமாளித்தனத்தோடு/திரிகிறான் என்னும் வரியில் கோமாளித்தனம் இயல்பானது என்ற குறிப்பை கவனியுங்கள். வாழ்வின் நடுநிலை சீரழிவை Thus Spoke Zarathustraவில் வரும் கழைக்கூத்தாடியைப் போன்று எதிர்கொள்வது ஒரு முறை. வாழ்வின் அபத்தத்திற்கு கெக்கலிப்பை பதிலாக தருவது ஒருவித உரையாடல் தான். அறிவுஜீவுக்கு கோமாளி மேல்!

அகநாழிகையில் வெளிவந்துள்ள எனது கட்டுரை
Share This

1 comment :

  1. change the format of archive... change to this kind of format... sep 2008 aug 2008 july 2008...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates