Wednesday 13 October 2010

ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டின் ஆதிதேவதையும்





பெரும்பாலும் டெஸ்டு ஆட்டங்கள் பொறுமையாலும், சாமர்த்தியத்தாலுமே வெல்லப்படுகின்றன. டெஸ்டு ஆட்டத்தின் ஆதார இலக்கே வலிமையை முன்னிறுத்தி பலவீனத்தை மறைப்பது தான். அதற்கான அவகாசமும், நேரமும் டெஸ்டில் உண்டு. ஒரு அணியைத் தவிர உலகின் அனைத்து நாடுகளும் சராசரிகளை கேடயமாக்கி ஒன்றிரண்டு மேதைகளை தாக்குதல் முனையாக்கி வெற்றி நோக்கி கால் இஞ்ச் அரை இஞ்ச் என்று நண்டுக்கால்களால் முன்னேறுபவை தாம். உதாரணமாக இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா. மேற்சொன்ன எந்த அணியுமே முதல் நாளே ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாய் எவ்வளவு சீக்கிரம் வென்று முடிக்கலாம் என்று யோசிப்பதில்லை. ஒவ்வொரு செஷனாய் தங்கள் சீட்டுக்கட்டின் விரிப்பை கலைத்து கலைத்து அடுக்குவதே இவ்வணிகளின் தலைவர்களின் பணி. முதலில் தோல்வியை தவிர்த்தல், பின்னர் வாய் சிவக்குமென்றால் மட்டும் வெற்றிலை. ஆனால் தொண்ணூறுகளின் பிற்பகுதியில் டெய்லர் மற்றும் ஸ்டீவ் வாஹின் தலைமைகளின் கீழ் ஆஸ்திரேலியா ஒரு மாறுபட்ட தடத்தில் சென்றது. ஒரு சைக்கோ கொலைகாரனைப் போல் எதிரணிகளை கால் பதியும் இடமெல்லாம் முறியடித்து கிட்டத்தட்ட அப்படி செய்வதை விட ஒரு வேறுபட்ட நிதானமான அணுகுமுறை இருக்கவே முடியாது என்று திடமாக நம்பியது. ஒரு குமாஸ்தாவின் கோப்பைப் போல் அவர்கள் எதிரணிகளை சுலபமாக திறந்து மேலும் ஒன்றுமில்லை என்று அலுப்பில் மூடினர்.
இதற்கு காரணம் மற்றெந்த அணியையும் விட ஆஸ்திரேலியாவிடம் ஏகப்பட்ட அதிதிறமையாளர்கள் இருந்தனர் என்பதே வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்டு, வாஹ் சகோதரர்கள், ஹெய்டன் என்று ஒரு நீண்ட வரிசை. அப்படி ஒரே கட்டத்தில் ஒரு அணிக்கு அமைவது கால விசித்திரம். இத்தோடு இறுதிவரை தொடர்ந்து முரட்டுத்தனமாய் போராடும் அவர்களின் விடாப்பிடி ஆற்றலும் சேர்ந்து கொண்டது. பின்னர் இந்த அதிதிறமையாளர்கள் ஓய்வு பெற ஆஸ்திரேலியா சமதள வாழ்வுக்கு திரும்பியது. ரிக்கி தலைவரானார்; ஆஸி அணி திரும்பிப் பார்த்து தாம் இங்கிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்காவை விட ஒன்றும் மோசமில்லை என்று நினைத்து சமாதானம் கொண்டது. சமதள வாழ்வில் ஆஸ்திரேலிய அணி தன்னை தக்க வைக்க கடுமையாக உழைக்க நீண்ட நேரம் மௌனமாக பொறுமை காக்க வேண்டியிருந்தது. இயல்பான போராட்ட குணம் ஆஸ்திரேலியாவை இந்த மானுட அவதாரத்தின் போது அடிக்கடி சளி பிடித்து தும்மாமல் காப்பாற்றியது. ஆனால் விமர்சகர்களுக்கு இந்த வில் அம்புகளுடன் கானகத்தில் சின்ன சின்ன அரக்கர்களை கொன்று திரிந்த ஆஸ்திரேலியாவை பிடிக்கவில்லை. நேரம் கிடைத்த போதெல்லாம் “அந்த காலத்திலே என்று அலுத்துக் கொண்டார்கள். முக்கியமாக ஆஸ்திரேலியாவுக்கு ஒரு சராசரி குணம் விடாத வாசனையாக ஒட்டிக் கொண்டது. அவர்கள் தோல்வியை தவிர்ப்பது பற்றி ரொம்பவே அக்கறை கொண்டனர். இதனால் ரெண்டாயிரத்துக்கு பிறகு மிக சங்கடமான பல தோல்விகளை கண்டனர். ஆனாலும் பூர்வாங்க வாசனை கிடைத்து மூக்கு வேர்க்கும் போது ஒவ்வொரு விமர்சகனையும் ஆஸ்திரேலியா சிலிர்க்க வைத்தது. இந்த சிறப்பு குணத்தை மட்டும் அவர்கள் இழந்து விட இல்லை.
ஒவ்வொரு சராசரி அணியும் வெற்றி அடையப் போகும் போது வெற்றியை பற்றி கவலை கொள்ளும்; தோல்வியின் சறுக்கில் விரையும் போதோ தோல்வியை பற்றி கவலை கொள்ளும். தோல்வி உறுதி என்றானபின் ஒரு விடுதலை உணர்வை பெறும் அணி ஆஸ்திரேலியா மட்டும்தான். அந்நிலையில் அது தன் பிரக்ஞைக்குள் அரவை எந்திரத்தை நிறுத்தி தூய மிருக நிலைக்கு திரும்புகிறது. சவாலை எதிர்கொள்ளும் மிருகத்தை போல் தன் உடல்மொழியை மிகுந்த வன்மம் கொண்டதாக மாற்றுகிறது. பிறகு எதிரியை முடிந்த அளவுக்கு காயப்படுத்த, தளர்த்த முயல்கிறது. ஒரு சராசரி அணியைப் போல் எதிர்காலத்தை அலசி ஆராய்ந்து சோர்வடையவோ, முடிவை தீர்மானித்து சரணடைந்து தோள் உலுக்கவோ அது விழைவதில்லை. ஏனெனில் திறமைக்கு அடுத்தபடியாய் ஆஸ்திரேலியாவின் ஆளுமையின் சாரம் இந்த தூய மிருகநிலை குணம் தான்.
2010 ஜூலை மாதம் இங்கிலாந்தின் லீட்சில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாம் டெஸ்டு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா ஒரு சராசரி அணியாகவே நான்கு நாட்களும் ஆடியது. பாகிஸ்தானுக்கு வெற்றி பெற நூற்று எண்பது ஓட்டங்களே இலக்கு நிர்மாணித்து ஆடி கிட்டத்தட்ட தோல்வி நிச்சயம் என்ற நிலையில் ஆஸ்திரேலியாவின் கண் முன் திடீரென சிவப்பு துண்டு காண்பிக்கப் பட்டது. “தோல்வி அக்கறை, வெற்றி பற்றின கவலை இனி தேவை இல்லை என்பதே அந்த சிவப்புத் துண்டு. இந்த தோல்வியை கடந்த மனநிலை ஒரு அணிக்கு இரண்டு காரணங்களால் தோன்றலாம். முதலில், உச்சபட்ச திறமை.தரும் தன்னம்பிக்கை. அடுத்து, தோல்வி உறுதி என்றான் பின், முட்டுசந்தை முட்டிய பின் ஏற்படும் விடுதலை உணர்வு. அதிதிறமையாளர்களை இழந்து தட்டையாகி விட்ட ஆஸ்திரேலியர் தோல்வியை நேரிடும் போது மட்டும் தங்கள் மரபான உச்சத்தை அடைகின்றனர். வருடங்கள் பின்னோட பத்தாண்டுக்கு முன்பான வலிமையை, பராக்கிரமத்தை சில மணிநேரங்களுக்கு பெறுகின்றனர். இந்த தற்காலிகமாய் உருமாறிய ஆஸ்திரேலியா அன்று பாகிஸ்தானின் மென்னியை கூடிய மட்டும் நெரித்தது. சில மூச்சுகள் இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளுடன் பாகிஸ்தான் பிழைத்தது. பின்னர் சன்னதம் இறங்கி ஆஸ்திரேலியா அடுத்த ஆட்டங்களில் தோசைக் கரண்டியை பற்றிக் கொண்டு மந்தமாய் நகர்ந்தது. விமர்சகர்கள் “அட என்று வியந்தனர். இம்மாதம் (அக்டோபர்) நடந்த இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் மூன்றரை நாளும் ஆஸ்திரேலியா, பாதி பரிணாம நிலையில், சொறிந்து விட்டும் பேன் பார்த்தும் பொழுதைக் கடத்தியது. கிளையை விட்டிறங்க தயங்கியது. இறுதியாய் இந்தியாவுக்கு 216 இலக்கை நிர்மாணித்து கிட்டத்தட்ட தோல்விதான் என்று எண்ணிய தறுவாயில் அது தனது தூயமிருக நிலைக்கு சட்டென்று திரும்பி நான்கு எதிரணி விக்கெட்டுகளை சாய்த்து ஐந்தாம் நாளுக்கு திரும்பியது. நான்காம் நாள் வரை இரு அணிகளும் ஒரு வழுக்குப்பாறைகள் அடந்த மலை ஏறுபவர்களைப் போல் மிகுந்த பிரக்ஞை உடன் மாறி மாறி தாக்கியும் பதுங்கியும் ஆடி வந்துள்ளனர். இனிமேல் ஏதும் இழக்க இல்லை என்ற நிலையில் ஆஸ்திரேலியா ஒரு வேறுபட்ட அணியானது. கிட்டத்தட்ட இந்தியா குழம்பிப் போனது. இரவில் கணக்குப் பார்த்து கடை அடைக்கத் தயாரான மளிகைக்கடை அண்ணாச்சியை பின்னிருந்து தோளில் தட்டி யாரோ அழைத்தது போல் திடுக்கிட்டது. இப்படியும் ஒரு அணி இருக்க முடியுமா என்று திகைத்தது. ஐந்தாம் நாள் ஆஸி 9 விக்கெட்டுகளை வீழ்த்திட இந்தியா அவிழ்ந்த ஆடையை கணநேரத்தில் பற்றி தப்பித்தது. இந்த ஆஸி அணியை எதிர்கொள்வது நெருப்பை அணைப்பது போல நண்பனானாலும் விரோதியானாலும் நெருப்பு தின்றே ஆக வேண்டும். நெருப்பான பின் ஆஸ்திரேலியாவுக்கு வேறு ஏதும் தெரியாது. கிரிக்கெட்டின் முன்கற்பு நிலை, களங்கமற்ற கனவுநிலை இப்படித்தான் இருக்க வேண்டும். முதலாம் டெஸ்டு ஆட்டத்தின் முடிவு முக்கியமல்ல. ஏனெனில் வெற்றி தோல்வியின் பாசாங்கை சில மணிநேரங்களில் ஆஸ்திரேலியா நிரூபித்து விட்டது. கிரிக்கெட்டின் ஆதிதேவதை மிகச்சில தருணங்களிலே விழித்துக் கொள்கிறாள் அப்போது கிரிக்கெட்டின் நிறம் மஞ்சளில் இருந்து சிவப்பாக மாறுகிறது.
Share This

6 comments :

  1. ரசிக்க வைக்கும் நடை..
    பல காரணங்கள்,கருத்துக்களை ஆழமாக யோசித்தேன்.சரி தான்.

    ReplyDelete
  2. நன்றி லோஷன். தொடந்து இந்த பக்கம் வாருங்கள்

    ReplyDelete
  3. அருமை நண்பரே

    ReplyDelete
  4. நன்றி ஞானப்பிரகாஷ்

    ReplyDelete
  5. தங்களின் வித்தியாசமான பார்வையும் எழுத்து நடையும் ஆச்சர்யமானவை

    ReplyDelete
  6. நன்றி ராஜசூரியன்

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates