Sunday 25 December 2011

நவீன இலக்கியமும் கல்வித்துறையும்



நமது கல்வி அமைப்புகளுக்கும் இலக்கியத்துக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி நிலவியது. அது ஓரளவு தற்போது குறைந்துள்ளது. பெரும்பாலான தமிழாசிரியர்களுக்கு நவீன இலக்கிய பரிச்சயம் இல்லை. நவீன தமிழில் நேர்ந்துள்ள மாற்றங்கள் பற்றியும் போதம் இல்லை. இந்த இடைவெளி எப்படி உருவானது? இதற்கு வரலாற்று கலாச்சார ரீதியான காரணங்கள் உண்டு. ஆரம்பத்தில் தமிழாசிரியர்கள் சைவ, வைணவ இலக்கியங்களில் தோய்ந்தவர்களாக இருந்தனர். இந்த சமயப்பற்று தான் மொழிப்பற்றாக இருந்தது. பின்னர் திராவிட கழகங்கள் தமிழகத்தில் புயலாக கிளம்பியதும் தமிழாசிரியர்களில் ஒரு பகுதியினர் திராவிடப் பற்றாளர்களாக மாறினர். திராவிட இலக்கிய மறுமலர்ச்சி தமிழின் விபூதியை அழிக்கும் மேலோட்ட புரட்சியை தான் செய்தது. அது இலக்கியத்தை மொழி மற்றும் இனப்பற்றாக சுருக்கியது. இலக்கியத்தை மேலும் அணுகி அறிய கோட்பாடுகளும் தத்துவமும் அவசியம். இந்த மாற்றத்தை எழுபதுகளில் இடதுசாரிகளும் வானம்பாடிகளும் கல்வித்துறை தமிழ் அறிஞர்களிடத்து கொண்டு வந்தனர். தமிழ்ப்புதுக்கவிதை வடிவத்தை கல்விப்புலத்தில் பிரபலமாக்கிய பெருமை தமிழன்பன், மூ.மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து போன்ற வானம்பாடிகளை சேரும். துரதிஷ்டவசமாக பிறகு ஒரு தேக்கம் ஏற்பட்டது. நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்த மாபெரும் மாற்றங்களை, பரீட்சார்த்த முயற்சிகளை, முக்கிய சாதனைகளை அறியாமலே ஒரு தலைமுறை தமிழ்படித்து வந்தது. அவர்கள் வரையில் நவீன புனைகதை என்பது ஜெயகாந்தனில் ஆரம்பித்து தொடர்ந்து முடிந்தது. இதற்கு திராவிட×ஆரிய அரசியல் கோஷம் ஒரு காரணம்.
தமிழின் நவீனத்துவ பிதாமகர்களில் அநேகமானவர்கள் பிராமணர்கள். திராவிட கட்சிகள் சமூக ஏற்றத்தாழ்வுக்கும் சீரழிவுக்கும் பார்ப்பன சதியே ஏக காரணம் என்று கருதின. திராவிட ஆதரவு ஆசிரியர்களிடத்து பார்ப்பன விரோதம் வலுவான இருந்தது. அவர்கள் நவீனத்துவ இலக்கியத்தை பிராமண இலக்கியம் என்று மேலோட்டமாக புரிந்து கொண்டனர். தமிழ் நவீனத்துவவாதிகளோ திராவிட, மார்க்ஸிய தரப்பின் சமூகத் தரப்பை காண மறுத்தனர். இப்படி இரு தரப்பினரும் கண்களை இறுக்கக் கட்டிக் கொண்டு தொட்டுத் தடவி புரிந்து கொண்டதில் யானை கையடக்க பொருளாக மட்டுமே தென்பட்டது.
க.நா.சு, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோர் தங்களது முன்னோடிகளாக பிரெஞ்சு, ஜெர்மானிய, அமெரிக்க எழுத்தாளர்களையே கண்டார்கள். கம்பனையோ இளங்கோவையொ வள்ளுவனையோ அல்ல. சு.ராவும் அவரது வழிவந்தவர்களும் வள்ளுவம் இலக்கியம் அல்ல என்று மறுத்தனர். க.நா.சு இலக்கியத்தை தமிழ் ஆசிரியர்களிடம் இருந்து காப்பாற்றுவதே தலையாய பணி என்று நினைத்தார். இவ்வாறு நவீன எழுத்தாளர்களுக்கு மரபின் தொடர்ச்சி இருக்கவில்லை. தமிழாசிரியர்களில் அநேகம் பேருக்கு அன்று ஆங்கில பயிற்சியோ உலக இலக்கிய வாசிப்போ இருக்கவில்லை. நவீன தமிழ் இலக்கியம் மக்கள் இலக்கியம் அல்ல என்று தமிழாசிரியர்கள் வெகுகாலமாய் மறுத்தனர். பிராமணியம் போக, இது அவர்களின் முக்கிய புகாராக இருந்தது நவீனத்துவவாதிகளுக்கு வெகுஜன ரசனை என்பது ஒவ்வாமையாக இருந்தது. இது ஏற்படுத்திய பிளவு காரணமாய் இரு தரப்பினருக்கும் இழப்பு ஏற்பட்டது.
மரபை புத்துருவாக்குவதன் மூலமே நாம் நவீனத்துவத்தை அறிய முடியும். மரபை அறியாமல் நாம் பத்மவியூகத்தில் மாட்டிக் கொள்வோம். அனைத்து விதிகளையும் உடைத்துக் கொண்டு உள்ளே செல்லலாம்; ஆனால் வெளியேறத் தெரியாது. மரபுக்கும் நவீனத்துக்கும் இடையிலான இணைவு தான் படைப்பூக்கத்தை தூண்டும் என்றார் டி.எஸ் எலியட். மரபை புறக்கணித்தது நவீன தமிழுக்கு ஒரு இழப்பு தான். மேலும் மேற்கத்திய நாடுகளில் போல் இங்கு நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தி வாசிக்க வைக்கும் பயிற்சியை தமிழ் கல்வியாளர்கள் செய்யவில்லை. முந்நூறு பிரதிகள் விற்ற சிற்றிதழ்கள் மூலம் நவீன இலக்கியம் ஒரு ரகசிய இயக்கமாகவே அரைநூற்றாண்டு இயங்கியது. நவீனத்துவவாதிகளுக்கு வெகுஜன ஊடகத்தில் எழுதுவதில் உவப்பின்மை இருந்ததால் தீவிர இலக்கியம் மீதான அரை-இருட்டு முழு இருட்டானது.
இருபதாம் நூற்றாண்டில் ஏகப்பட்ட அறிவுத்துறைகள் இலக்கிய வாசிப்பில் பாதிப்பை ஏற்படுத்தின. இலக்கியம் வாசிக்க ஒருவர் அரசியல், உளவியல், மொழியியல், தத்துவம், பண்பாட்டு தத்துவம், மானுடவியல், வரலாற்றுவாதம் போன்ற எண்ணற்ற கருத்தியல்களை அறிய வேண்டியதானது. இந்தப் புதுவாசிப்பு முறைகள் தமிழர்களுக்கு நவீன இலக்கியம் வழியாகவே அறிமுகமானது. கண்ணை மூடி பால்குடித்துக் கொண்டிருந்த தமிழய்யாக்கள் உலகம் மாறி வருவதை அறியாமல் விமர்சனம் என்பதை எளிய பொழிப்புரையாக களிம்பேறிய மொழியில் கற்பித்தார்கள். இதன் காரணமாக தொண்ணூறுகள் வரை தமிழ் படித்தவர்கள் சமகால போக்குகள் குறித்த எந்த பிரக்ஞையும் இல்லாதவர்களாக உருவானார்கள். இன்றும் தமிழ்ப்பேராசியர்களில் இருந்து தமிழின் சிறந்த படைப்பாளிகளாக உருவாகி வந்தவர்களை அரிதாகவே பார்க்க முடியும். மேற்கில் இதற்கு முற்றிலும் மாறான நிலை நிலவுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
அண்மையில் தமிழ் கலாச்சார பரப்பில் குறிப்பிடத் தக்க மாற்றங்கள் நடந்தன. சிற்றிதழ்-வெகுஜன லட்சுமணக் கோடு அழிந்தது. சிற்றிதழ்வாதிகள் வெகுஜன ஊடகங்களை ஆக்கிரமித்தனர். பாலகுமாரனையும் பட்டுக்கோட்டை பிரபாகரையும் வாசித்தவர்கள் ஜெயமோகனையும் எஸ்.ராமகிருஷ்ணனையும் நாடி வந்தனர். நவீன இலக்கியத்தை நிராகரிப்பது இனிமேல் இயலாது என்ற நிலை கல்வியாளர்களுக்கு ஏற்பட்டது. திராவிட-மார்க்ஸிய சிந்தனைக்கு மாற்றாக பின்நவினத்துவமும் தலித்தியமும் பெயரளவிலேனும் தமிழ் வகுப்புகளுக்குள் பிரவேசித்தன. இன்று தமிழ்ப்படித்து வரும் பலருக்கும் தீவிர இலக்கியம் தெரிந்திருக்கிறது; குறைந்தபட்ச பரிச்சயமாவது உள்ளது. பாடத்திட்டத்திலும் ஓரளவு நவீன மற்றும் சமகால இலக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு வருகிறது.
சென்னை பல்கலையில் பாடத்திட்டத்தில் நவீனத் தமிழ் பகுதி எந்த எழுத்தாளனிடம் இருந்து துவங்குகிறது? கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. அவரைத் தொடர்ந்து பாரதியும், பாரதிதாசனும் வருகிறார்கள். பிறகு கொஞ்சம்  வானம்பாடி கவிதைகள். அதன் தூய அர்த்தத்தில் இவர்கள் நவீன எழுத்தாளர்கள் அல்ல என்று நாம் அறிவோம். இந்த வெளிநபர்களுடன் நீங்கள் சில அசல் நவீனத்துவ கவிஞர்களையும், சமகால பெண்கவிஞர்களையும் சேர்த்து படிக்கும் போது ஒரு வரலாற்றுக் குழப்பம் ஏற்படுகிறது. தோட்டக்காரரின் கத்திரிக்கோலை கொண்டு மீசை திருத்த முடியாதே? பிரமிளிலும் பாரதிதாசனிலும் நாம் ஒரே பண்புக்கூறுகளை காண முடியாது. புனைவிலும் தொ.மு.சி, ஜெயகாந்தன், மு.வா ஆகியோரை சு.ரா, எஸ்.ரா, ஜெ.மோவுடன் ஒரே தட்டில் வைத்து படிக்க முடியது. ஆக பொத்தாம்பொதுவாக நவீன இலக்கியத்தை புகட்டும் இந்த போக்கு கல்வியாளர்களின் அக்கறையின்மையை காட்டுகிறது. நவீன இலக்கியத்தில் திராவிட இலக்கியம், மார்க்ஸிய இலக்கியம், நவீனத்துவ இலக்கியம், பின்நவீனத்துவ இலக்கியம், பெண்ணிய இலக்கியம், தலித் இலக்கியம் என்ற தெளிவான பகுப்புகள் வேண்டி உள்ளது.
அடுத்து மரபிலக்கியத்தின் நவீன கோட்பாடுகளை கொண்டு காத்திரமான ஆய்வுகளை செய்யவும் அந்த புரிதலை மேற்கொண்டு பாடத்திட்டம் மற்றும் படிப்பித்தல் வழி மாணவர்களை ஏற்படுத்தவும் செய்ய வேண்டும். சென்னை பல்கலைக்கழக ஆய்வரங்கங்கள், அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்டம் ஆகியவை இதை நோக்கி நல்ல முயற்சிகள் என்றாலும் நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டி உள்ளது. 
 (2011 டைம்ஸ் நவ் தீபாவளி மலரில் வெளியானது)
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates