Friday 16 November 2012

சந்தர்ப்பம்




எனக்கு புது வேலை கிடைத்திருந்தது. அந்த செய்தி எந்த மகிழ்ச்சியையும் ஏற்படுத்தவில்லை.. மர்ம ஸ்தானத்தில் சின்னதாய் புண் வந்தது போல இருந்தது. அப்போதைய வேலையில் ஓரளவு அதிருப்தி இருந்தது; அதேவேளை புதிய வேலை முழுக்க திருப்திகரமாகவும் இல்லை. ஆனாலும் அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொள்ளும் விருப்பம் என்னை ஆட்கொண்டது.
அது என்னை செலுத்தியது. ஒரு பாலுறுப்பை போல அது என்னை தூண்டியது. சில நாட்கள் யோசிப்பது போல் பாவனை செய்து விட்டு ராஜினாமா கடிதத்தை கொடுத்தேன்.
ராஜினாமா கடிதம் கொடுக்கும் போது என் துறைத்தலைவர் ஆச்சரியப்பட்டதாய் மிகையாக காட்டிக் கொண்டார். நானும் அவரது ஆச்சரியத்தை ஏற்றுக் கொள்வதாய் முகத்தை வைத்துக் கொண்டேன்.
நான் அடுத்து சேரப் போகும் இடம் பற்றி விசாரித்தார். சம்பள உயர்வு இருக்குமா என்று கேட்டார். நான் உண்மை சொல்லவா பொய் சொல்லவா என்று யோசித்தேன். அவருக்கு நான் அங்கிருந்து விலகுவதற்கு வலுவான லௌகீக காரணம் ஒன்று தேவைப்பட்டது. அதை நான் நல்கினால் திருப்தி உறுவார். அதனால் சம்பள உயர்வு மிகக்குறைவுதான் என பொய் சொன்னேன். அதிக பணமும் வராது. மேலும் புதிய அலுவலகம் தற்போதையதை விட மேலானதும் அல்ல. வீட்டிலிருந்து தொலைவும் அதிகம். ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு போக அவர் நெற்றி சுளித்தார். “பிறகு நீங்கள் ஏன் அங்கே போக வேண்டும்?”. அந்த கேள்வியின் பொருள் “நீ இங்கிருந்து போவதை விரும்புகிறேன் தான். ஆனால் தோதான காரணத்தை ஏன் தரமறுக்கிறாய்? எப்போதும் போல் எரிச்சல்படுத்துகிறாய்?”. நான் சர்வமும் தெரிந்தது போல ஒரு புன்னகை பூத்தேன்.
பொய் சொன்னேன், “புதிய வேலை மேலும் வசதியாக இருக்கிறது. சம்பளமும் திருப்தியாக உள்ளது. அதனால் தான் மேடம்”. அவர் புதிய வேலையில் சம்பளம் ஒன்றும் திருப்தியாய் இல்லையே, பயணமும் அதிகம், என்னை ஏன் எரிச்சல் படுத்துகிறாய் என்றார். நான் புதிய வேலை ரொம்ப வசதியானது. சம்பளமும் அதிகம் தான் என்று திரும்பத் திரும்ப அதே பொய்யை சொல்லிக் கொண்டு இருந்தேன். என் துறைத்தலைவருக்கு யார் மாற்றுயோசனை சொன்னாலும் தான் சொன்னதையே அது அபத்தமாக இருந்தாலும் திரும்பத் திரும்ப சொல்லும் பழக்கம் இருந்தது. இப்போது நான் அதையே என்னையறியாது செய்து கொண்டிருந்தேன்.
இப்படி நாங்கள் சன்மியூசிக்கில் வி.ஜெ வீட்டுமனைவி ஷைலஜாவிடம் “ஓ நீங்களா சாப்டீங்களா மேடம்!” என்கிற ரீதியில் தனக்குப் பிடித்த பாடல் பற்றி உரையாடுவது போல் இருவேறு உலகங்களில் இருந்து பரஸ்பரம் எந்த அக்கறையும் இன்று நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். கேட்ட பாடலுக்கு மாறாக வேறு பாடலைத் தான் டி.வியில் போடுவார்கள். எனது துறைத்தலைவர் விசயத்தில் அந்தளவுக்கு அநியாயம் இல்லை. எங்கள் உரையாடல் அனர்த்தமாய் முடிந்தாலும் என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாய் சம்மதித்தார்.
நான் இருக்கையில் போய் அமர்ந்தேன். ஏன் புது வேலைக்கு போகிறேன் என்றோ ஏன் என் துறைத்தலைவருக்கு என்னை பிடிக்காமல் போயிற்று என்றோ இரண்டுக்கும் ஏதாவது சம்மந்தம் உண்டா என்றோ எனக்கு புரியவில்லை. கொஞ்ச நேரம் கடந்த கால சம்பவங்கள் ஏக்கத்துடன் கசப்புடன் மனதில் ஓடின. கழிப்பறையில் தலைவாரும் போது “அவருக்கு என் மூஞ்சி பிடிக்கவில்லை” என்று நினைத்துக் கொண்டேன். ஆம் அது தான் உண்மை. ஆனால் அதை ஒரு காரணமாக சொல்ல முடியாதே!
அடுத்து நிர்வாகக்குழுவுடன் சந்திப்பு. நிர்வாகக் குழு என்னை ராஜினாமாவை மறுபரிசீலனை செய்ய கேட்பார்கள் என்று கொஞ்சம் பயந்தேன். அவர்கள் எனக்கு சம்பள உயர்வு போன்ற தீர்வுகளை முன் வைக்கலாம். துறைத்தலைவரால் எனக்கு பிரச்சனை வராது என உறுதிப் படுத்தலாம். சொல்லப்போனால் அவர்கள் தீர்வுகளை பற்றி பேசினால் அதனை எதிர்கொள்ள என்னிடம் வலுவான எந்த காரணங்களும் இல்லை. அதனால் என்னை ஏதாவது பேசி குழப்பி விடுவார்களோ என்று பயந்தேன். திரும்பவும் அந்த கல்லூரியிலேயே தங்க நேர்ந்தால் என் நிலை அப்படியே தொடரலாம் அல்லது சீரழியலாம். ஆனாலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி என்ன நடக்கிறது என்று பார்த்து விட விரும்பினேன். ஒருவிதத்தில் என்னை ஒருமுகப்படுத்த அது அப்போது பயன்பட்டது.
ராஜிமானாமா பற்றி தெரிய வந்த நண்பர்கள் இந்த சந்தர்பத்தில் நான் துறைத்தலைவர் பற்றின எனக்கு வருத்தங்களை முழுக்க நிர்வாகத்திடம் கொட்டி அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று வற்புறுத்தினர். ஆனால் அப்போது நான் மனதளவில் களைப்பாக இருந்ததால் அதை வீண்வேலை என்று தவிர்த்து விட்டேன்.
நான் யாரிடமும் துறைத்தலைவர் உடனான தகராறு தான் காரணம் என வெளிப்படையாக கூறவில்லை. நிர்வாகத்திடம் கூட “சில சொல்ல விரும்பாத காரணங்களால் நான் இங்கு மகிழ்ச்சியாக இல்லை என்பதால் விலக விரும்புகிறேன்” என்று அசமஞ்சமாய் குழைந்தபடியே கூறினேன். இதற்கு மேல் கேட்காதீர்கள் என்று நான் கெஞ்சுவது போலவே இருந்தது.
நல்ல வேளை நிர்வாகம் எந்த ஒரு தீர்வையும் முன்வைக்கவில்லை. என்னை தங்கும்படி கேட்கவும் இல்லை. எனக்கு நிம்மதியாக இருந்தது. நிர்வாகக் குழுத் தலைவர் இரண்டு விசயங்களைச் சொன்னார். ஒன்று, அற்ப தகராறுகளுக்காக நான் அக்கல்லூரியை விட்டு விலக எந்த அவசியமும் இல்லை. அது போதுமான காரணம் அல்ல. இரண்டு, நான் அக்கல்லூரியை விட்டு விலகுவதால் நிர்வாகத்துக்கோ கல்லூரிக்கோ என் துறைக்கோ மாணவர்களுக்கோ எந்த பாரித்த இழப்பும் கிடையாது. நான் ஒன்றுமே அல்ல. துடைத்து வைத்த இடத்தில் தூசு அமர்வது போல் என் இடத்தில் இன்னொருவர் வரப் போகிறார்கள். கடைசி உதாரணத்தை சொல்லும் போது நிர்வாகக் குழுத் தலைவர் தன் அழகான சிவப்பான பரிசுத்தமான கையால் மேஜையை தடவிக் காண்பித்தார். அந்த மேஜையில் தூசே இல்லை என்ற தகவல் மட்டுமே என் மனதில் பதிந்தது.
நான் கொஞ்ச நேரம் அவர்கள் என்னை கல்லூரியில் தங்கும்படி சொல்கிறார்களா அல்லது போகக் கேட்கிறார்களா என புரியாமல் நின்றேன். இரண்டும் எனக்கு உவப்பானது இல்லை. ஆனால் இரண்டுக்கும் நான் “புரிகிறது புரிகிறது” என்று தலையாட்டி வைத்தேன். அதற்குப் பின் கிளம்பு என் தலையாட்டி வைத்தார்கள். ஆனால் வெளியே வந்ததும் எந்த குழப்பமும் இல்லை. பெரிய பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட நிம்மதி மட்டும் தான்.
புரளியை விரும்புகிறவர்களுக்கு இனிப்பான சேதிகள் பிடிக்காது. அதே காரணத்தினாலே சக பேராசிரியர்களிடம் நிர்வாகம் கூறியதில் இனிப்பான பாதியை மட்டும் வெளிப்படுத்தினேன்: நிர்வாகம் என்னை தங்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் நான் தான் விடாப்பிடியாய் மறுத்ததாகவும். அவர்களும் என்னிடம் இரண்டு ஆலோசனைகள் கூறினர். ஒன்று, நான் துறைத்தலைவரைப் பற்றிய கடும் புகார்களை சொல்லி அவரது முகத்திரையை கிழித்திருக்க வேண்டும். அமைதியாக இருந்ததற்காக என்னை கண்டித்தனர். இரண்டு, தற்போதைக்கு கல்லூரியில் இருந்து விலக எனக்கு எந்த அவசியமும் இல்லை என்பதால் நான் கடிதத்தை திரும்ப பெற வேண்டும். நான் “சரி தான் சரி தான்” என தலையாட்டி விட்டு வந்தேன்.
நான் சில நேரம் அக்கல்லூரியின் உள்நபர் போன்றும் சிலநேரம் வெளியாள் மாதிரியும் மாறி மாறி உணர்ந்தேன். வகுப்புக்கு சென்றால் நான் பொருட்டல்ல என்று கூறிய நிர்வாகத்தை பழிவாங்கும் விதமாய் பாடம் எடுக்காமல் வகுப்பை ஓட்ட தோன்றியது. ஆனால் சிறிது நேரத்தில் மிகுந்த ஆர்வத்துடன் பாடமெடுக்க துவங்கி விடுவேன். நான் ராஜினாமா செய்து விட்டவனா அல்லது அக்கல்லூரியின் முழுமையான ஆசிரியனா என குழப்பமாக இருந்தது. ராஜினாமா காலத்தில் இருப்பதால் நான் பாதி ஆசிரியன் மட்டும் தான். என் துறைத்தலைவர் என்னை அப்படியே நடத்தினார். அவர் துறை சம்மந்தப்பட்ட கூட்டங்களில் என்னை மட்டும் அழைக்கவில்லை; என்னிடம் எந்த கல்லூரி சார்ந்த அறிக்கைகளும் வரவில்லை. வகுப்பில் மாணவர்களின் பார்வையிலும் என் இருப்பு குறித்து சிறிது ஐயம் இருப்பதாக தோன்றியது.
துறைத்தலைவர் என்னை வழக்கம் போல் வதைத்துக் கொண்டே தான் இருந்தார். சுருக்கென்று குத்தும் படியாய் பேசினார். சின்ன சின்ன குற்றங்களை கண்டுபிடித்து கண்டித்தார். முமகன் கூறினால் எதையாவது கேட்டால் பாராமுகமாக இருந்து என்னை “ராஜாதி ராஜ” பாடும் அரண்மனை சேவகன போல் உணரச் செய்தார். எனது உபரி வகுப்புகளை துண்டித்து அதிக வருமானம் வர முடியாது செய்தார். துறையின் வேலைகள் எதிலும் என்னை பங்கெடுக்க விடாமல் பண்ணினார். நான் அங்கு இருந்தேன். ஆனால் அங்கு இல்லை. அவரைத் தொடர்ந்து பிறரும் என்னிடம் விலகல் பாராட்ட துவங்கினர்.
துறைத்தலைவர் தொடர்ந்து என்னை ஒரு குழந்தைத்தொழிலாளியைப் போல ஏவினார். கூட்டமான பேருந்தில் நெரிசலான உடல்களுக்கு இடையே மாட்டிக் கொண்ட கன்னியாஸ்திரியைப் போல நான் நெளிந்து கொண்டிருந்தேன். மாணவர்கள் என்னிடம் பேச துறைக்கு வந்தால் அவர்கள் முன்னிலையிலே என்னை வெளியே சென்று பேச சொல்லி அவமதித்தார். என் மர நாற்காலியை மாற்றி வலைப்பின்னல் கிழிந்த துருபிடித்த நாற்காலி ஒன்றைப் போட்டார். அது நான் அமர்ந்ததும் தஞ்சாவூர் பொம்மை போல் சாயும். ஆனால் விழ விடாது. சிலவேளை இடது பக்கம், சில வேளை வலப்பக்கம். இது கூட என் தவறு தானோ என்று எனக்கு தோன்ற ஆரம்பித்தது. முன்னே சாய்ந்தால் குசு விடுவது போல் ஓசை எழும். பின்னால் சாய்ந்தால் பற்கள் நறுநறுவென கடிபடுவது போல கேட்கும். இதனால் யாராவது என்னிடம் பேச வந்தால் எழுந்து நின்று விடுவேன். ஏதோ மரியாதைக்கு என்று அவர்கள் நினைத்துக் கொண்டால் பரவாயில்லை என்று பொறுத்துக் கொண்டேன்.
ஒரு நாள் என் மேஜையில் துறையின் அலுவலக ஆவணக் கோப்புகள் பூந்தொட்டி சாக்கட்டி டப்பா உள்ளிட்ட பொருட்களை அடுக்கி வைத்தனர். எனக்கு மேஜையும் இல்லாமல் ஆயிற்று. என் பையை ஓரமாக வைத்து விட்டு ஓய்வு நேரத்தில் யார் இருக்கை பக்கமாவது நின்று பேசிக் கொண்டிருப்பேன். அல்லது வெளியே போய் நிற்பேன்.
கால் வலிக்கும் போது காலியாக உள்ள ஒரே நாற்காலியான துறைத்தலைவரின் மேஜைக்கு முன்பான நாற்காலியில் சென்று அமர்வேன். அவர் வந்ததும் நான் அங்கில்லாதது போல் பாவிப்பார். நான் என் மேஜையை காலி செய்து தரக் கேட்பேன். அவர் என்ன புதுபாஷையில் உளறுகிறாய் என்பது போல பார்ப்பார். நான் எழுந்து வெளியே போவேன்.
பிறகு துறைத்தலைவர் எனக்கு ஒதுக்கப்பட்ட வகுப்புகளின் இண்டெர்னல் மதிப்பெண்களை திருத்தத் துவங்கினார். அவர் விருப்பத்துக்கு அவற்றை மாற்றினார். நான் குறைவாக போட்டிருந்தால் அதிகமாக்கினார். அதிகமாக போட்டிருந்தால் குறைத்தார். சில வகுப்புகளுக்கு சராசரியாக பத்துக்கு நான்கு ஐந்து மதிப்பெண் போட்டிருந்தேன். ஒரே போன்ற மதிப்பெண்ணை ஏன் திரும்பத் திரும்ப போட்டுள்ளாய் என்று கத்தினார். மாற்றுகிறேன் என்று முன்வந்தால் “அதெல்லாம் வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று இன்னும் அரை அங்குலம் என் மூக்கை நறுக்கினார். ஒரு பிரச்சனை அல்லது தேவை என்று என்னிடம் வந்த மாணவர்களை தன்னிடம் அழைத்து பஞ்சாயத்து நடத்தினார். அவர்கள் என் பக்கமும் அவர் பக்கமுமாய் பார்த்து முழித்தனர்.
இதெல்லாம் ராஜினாமா காலத்தில் நேரக் கூடியது தான் என்று சமாதானம் பண்ணிக் கொண்டேன். துறைத்தலைவரின் ஏச்சுபேச்சுகளை எல்லாம் நிச்சலமாய் பணிவாய் ஏற்றுக் கொண்டேன். அதற்கு ஒரு காரணம் எனக்கு இருந்தது. துறைத்தலைவர் நான் ராஜினாமாவுக்கு நம்பத்தகுந்த காரணத்தை வழங்காததால் என் மீது எரிச்சலாக இருந்தார். யார் கேட்டாலும் உண்மைக் காரணம் அதுவல்ல என்று புரியும் அளவுக்கு என் காரணம் அவ்வளவு பலவீனமாக இருந்தது. ஒரு பூமராங் போல் அக்காரணம் திரும்ப தன்னையே தாக்க உத்தேசிக்கிறது என்று அவர் புரிந்து கொண்டார். அதனால் அவர் என்னை சீண்டியபடியே இருந்தார். நான் என் கட்டுபாட்டை இழந்து அவரைப் பழித்து நேராகவோ அல்லது துறை சக-ஊழியர்களிடமோ பேச வேண்டும் என்று எதிர்பார்த்தார். அதை பயன்படுத்தி தன்னை பாதிக்கப்பட்டவராக அவரால் சித்தரிக்க முடியும்.
உண்மையில் எங்களது இருவரின் நியாயமும் அவ்வளவு நடுக்கமானதாய் இருந்தது; சஞ்சலம் கொண்ட மனதை போல் அது யார் பக்கமும் சாயக் கூடியதாய் இருந்தது. என் வார்த்தைகளையோ எதிர்வினையையோ அவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று நான் பிடிவாதமாய் இருந்தேன்.

அப்போது தான் என் நண்பன் தேசிங்கு ராஜாவிடம் இருந்து அந்த குறுஞ்செய்தி வந்தது.
அவன் என்னை கடுமையாக திட்டி எழுதியிருந்தான். அவனுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை. அவனது அந்த நீண்ட செய்தியின் பெரும்பகுதி எனக்கு புரியவும் இல்லை. இறுதியாக என் கைகால்கள் வெட்டி முண்டமாக்க போவதாக மிரட்டியிருந்தான். வேறு யாருக்காவது அனுப்ப வேண்டியதை மாற்றி எனக்கு அனுப்பி விட்டானோ என குழப்பமாக இருந்தது.
தேசிங்கு ராஜா எங்கள் கல்லூரியில் தமிழ்த்துறையில் வேலை பார்த்தான். நான் அவ்வளவு அன்னியோன்யம் கிடையாது என்றாலும் மணிக்கணக்காய் பரஸ்பரம் பேசும் நண்பர்களாக இருந்தோம். எங்களுக்குள் உரசலோ சச்சரவோ வந்ததில்லை. பிறகு அவனுக்கு ஒருநாள் அந்த விபத்து நேர்ந்தது.
தெருவில் வரும் போது ஆள்மாறி அவனது கழுத்தை யாரோ பின்னிருந்து கத்தியால் அறுத்து விட்டார்கள். ஆழமான காயம் ஒன்றும் இல்லை. ஆனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு அவனது முகம் கோணி விட்டது. ஒரு பக்கம் முகம் தளர்ந்தது. சாதாரணமாய் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று கண்ணீர் கொட்டும். அவனால் அதை கட்டுப்படுத்தவே முடியாது. இறுதியாய் அவனைப் பற்றி எனக்கு இருந்த மனப்பிம்பம் அவ்வாறு கைகுட்டையால் கண்களை ஒற்றிக் கொண்டிருந்த முகம் தான். பாதி புன்னகைத்து மீறி உறைந்து போகிற முகம் தான்.
தன் தோற்றம் குறித்த கவலை இருந்தாலும் அவன் தனது மருத்துவ நிலையால் அதிகம் கவலைப்படவில்லை. எல்லாம் சரியாகி விடும் என்றான். பிறகு ஒருநாள் ஒரு நிர்வாகக் கூட்டத்தின் போது ஆசிரியர்களை குற்றம் சாட்டி பேசிய போது உணர்ச்சிவசப்பட்டு எதிர்த்து கத்தினான். எங்களுக்கெல்லாம் வியப்பாக இருந்தது. அவன் அப்படியெல்லாம் வார்த்தையை விடக் கூடியவன் அல்ல. அவனுக்கும் முதல்வருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. நிர்வாகத்தின் தவறுகளை பட்டியலிட்டு சர்ச்சித்தான். நிர்வாகக் குழு அவனை பின்னால் அழைத்து சமாதானம் பேசியது. அப்போது அவன் முரண்பட்டே பேசினான்.
தேசிங்குராஜாவின் அணுகுமுறை எங்களுக்கு எல்லாம் கவலை ஏற்படுத்தியது. வேலை பயம் காரணமாய் நாங்கள் யாரும் அவனுக்கு வெளிப்படையாய் ஆதரவு தெரிவிக்கவில்லை. மேலும் அவன் எதற்கு சண்டை போடுகிறான் என்றே எங்களுக்கு தெளிவாக விளங்கவில்லை. அவனால் வேலையையும் அப்படி எளிதாய் விட்டு விட முடியாது. அவனது குடும்பம் அவன் சம்பளத்தை மட்டுமே நம்பியுள்ளது.
அவனுக்கு ஆறுமாதக் குழந்தை உள்ளது. அப்பாவுக்கு புற்றுநோய், அம்மாவுக்கு அல்செமெயர்ஸ். இருவரும் அவனுடம் தங்கி சிகிச்சை எடுத்து வந்தனர். ஊரில் அவனுக்கு நிறைய கடன் உள்ளது. எங்கள் எல்லோரையும் விட அவனுக்கு அந்த வேலை மிக அவசியமானது. ஆனால் தேசிங்குராஜா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவன் திடீரென ஆதிக்க வர்க்கத்துக்கு எதிராக கிளர்ந்தெழுந்தான். நிர்வாகம் அவனை எச்சரித்து அனுப்பியது. ஆனால் அடுத்த வாரமே ஒரு சின்னப் பிரச்சனைக்கு எதிர்வினையாற்றும் விதமாய் அவன் வேலையில் இருந்து ராஜினாமா செய்தான். நான் அதற்குப் பிறகு அவனை பார்க்கவில்லை.
நான் தேசிங்குராஜாவை போனில் அழைக்க முயன்றேன். அவன் எடுக்கவில்லை. ஆனாலும் நிலைமையை தெளிவுபடுத்தும் பொருட்டு நான் அவனைத் தேடி வீட்டுக்கு சென்றேன். அதே வீட்டில் தான் இருந்தான். கலைந்த தலையுடன் கொட்டாவி விட்டபடி கதவைத் திறந்தான். என்னைப் பார்த்ததும் சிறிது புரியாமல் யோசித்து விட்டு உள்ளே அழைத்தான்.
அவனைத் தவிர வீடு காலியாக இருந்தது. ஊருக்கு போயிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அழுக்குத்துணிகள் சோபா தரை மேஜை என அங்கங்கே கிடந்தன. சிறுபத்திரிகைகள் இந்து பத்திரிகை தாள்கள் சிதறிக் கிடந்தன. சாப்பிட்ட தட்டுகள் ஊசிப் போய் ஓரமாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த வீச்சத்துடன் சேர்த்து நீண்ட நாட்களாய் சுத்தம் செய்யப்படாத வீட்டின் வாடையும் கலந்து அடித்தது. பகல்வேளையிலும் அடுக்களையில் ஒரு விளக்கு எரிந்தபடி இருந்தது. டி.வி சத்தமின்றி ஓடியது. ஏதோ இந்திச் சானலில் முடி உதிர்வதை தவிர்ப்பதற்கான நிகழ்ச்சி. எட்டினால் தொட்டுவிடும் அளவுக்கு காற்றாடியில் இருந்து சிலந்தி வலை ஒன்று தொங்கியது.
முகத்தை சீரியஸாக வைத்தபடி அவனது குறுஞ்செய்தியைப் பற்றி விசாரித்தேன். அவனிடம் உருப்படியான பதில்கள் ஏதும் இல்லை. மூர்க்கமாக என்னை பழிகூறிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு நான் நிறைய துரோகம் இழைத்து விட்டதாக கூறினான். உண்மையிலேயே அவன் அதை நம்பி விட்டிருந்ததாகவே எனக்கு தோன்றியது. எனக்கு அப்படி எந்த உத்தேசமும் இல்லை என்று திரும்பத் திரும்ப விளக்கினேன். கொஞ்ச நேரத்தில் அவனை அமைதிப் படுத்தினேன். ஆனாலும் தன் பக்கமே நியாயமிருப்பதாய் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கு அவன் மீது இரக்கம் தோன்றியது.
அவனது புகார்கள் முழுக்க கற்பனையானவை என்று என்னால் புரிய வைக்க முடியவில்லை. அவன் குற்றம் சாட்டியது போல நான் அவனைப் பற்றி பிறரிடம் தவறாக பேசியிருக்கவோ அவன் ராஜினாமாவுக்கு நான் மகிழ்ந்திருக்கவோ இல்லை. ஏனென்றால் நான் அவனைப் பற்றி சமீபமாய் பேசுவது போக யோசிக்கவே இல்லை. இதை அவனிடம் கூற முடியாது. ஏனெனில் அது தான் அவனது அடுத்தக் குற்றச்சாட்டே. நான் அவனிடம் எந்தவிட அன்போ அக்கறையோ பாராட்டவில்லை. ஆனால் சிலநேரங்களில் அன்பு காட்டுவது நமக்கு அவ்வளவு ஆடம்பரமான ஒன்றாகி விடுகிறது. அதை என்னால் அவனுக்கு புரிய வைக்க முடியவில்லை.
விளைவாக நான் அவனிடம் தன்னம்பிக்கையின்றி வழவழவென்று பேசினேன். அவன் இதை நான் என் தவறுகளை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்பதாய் தவறாக புரிந்து கொண்டு தலையாட்டி சரி என்றான். அடுத்து என்னை ஆறுதல்படுத்த வேறு முன்வந்தான். எப்படியொ பிரச்சனை ஒழிந்தது என்று நானும் நிம்மதியானேன். நாங்கள் தேநீர் குடிக்க வெளியே கிளம்பினோம்.
தேநீர் குடிக்கும் போது நினைவு வர குடும்பம் பற்றிக் கேட்டேன். அவன் மீண்டும் இறுக்கமானான். “விவாகரத்தாகி விட்டது, அப்பாவும் அம்மாவும் ஊருக்கு போய் விட்டார்கள்” என்றான். அதிர்ச்சியை கூடுமானவரை மறைத்து விட்டு உறுத்தாதபடி விசாரித்தேன். இப்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும் அதுவரை மனைவி குழந்தையும் அவளது மாமா வீட்டில் தங்கி இருப்பதாகவும் சொன்னான். பிறகு அவனாகவே காரணத்தையும் சொன்னான்: “எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப மாசமாவே தினமும் தகராறு தான். நான் சரியா சம்பாதிக்கிறதில்லை என்று முதலில் எரிந்து விழுந்தாள். பிறகு என் தனிப்பட்ட காரியங்களை கட்டுப்படுத்த துவங்கினாள். அதுகூட பரவாயில்லை. என் குடும்பத்தினரை பழித்தாள். அதுவும் பரவாயில்லை. ஒருநாள் கல்யாண வீட்டில் என் குடும்பம் தரித்திரம் பிடித்ததென்று அவளது சொந்தக்காரர்களிடம் நக்கல் அடிப்பதைக் கேட்டேன். வீட்டுக்கு வந்ததும் பளாரென்று அறை விட்டேன். பாத்திரம் பண்டங்களை தூக்கி வீசினாள். பாதி சாமான்களை தெருவில் போய் விழுந்தன. ஒருவாரம் சமைக்கவில்லை. பிறகு நான் சம்பாதிக்க லாயக்கற்றவன் என்று கத்தினாள். என் பெற்றோரின் பாரத்தை வேறு தான் சுமக்க நேர்வதாய் அலுத்துக் கொண்டாள். நான் அவளை மீண்டும் அடிக்கப் போக அவள் உறவினரை அழைத்து வந்து பஞ்சாயத்து பேசினாள். என்னை மன்னிப்பு கேட்க வைத்து உத்திரவாத பத்திரம் எழுதி வாங்கினார்கள். நினைவுமறதி மிக்க என் அம்மாவை சுத்தம் செய்வது, அவரை கழிப்பறை அழைத்துப் போவது போன்ற வேலைகளை அவள் செய்ய வேண்டியதில்லை என்று உறுதியளித்தேன். அதற்கு தனியாக செவிலியை நியமிப்பதாய் ஏற்றுக் கொண்டேன். விரைவில் நல்ல சம்பளம் வரும் புதுவேலையை தேடுவதாய் கூட சொன்னேன். அவள் திரும்ப என்னுடன் வாழ சம்மதித்தாள். பிறகு தான் இத்தனையும் அவளது அம்மாவின் தூண்டுதலில் நடக்கிறது என்று அறிந்து கொண்டேன். பிறகு நாங்கள் ஏதோ பேருக்கு சேர்ந்து வாழ்ந்தோம் என்றாலும் எந்த தகராறோ பிரச்சனையோ இல்லை. குழந்தைக்காக உறவினர் மத்தியில் என் மரியாதைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தேன். அப்புறம் போகப் போக பழகி விட்டது. ஆனாலும் எல்லாம் ஒரு நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்தது. எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. ஆனால் ஏதோவொரு விதத்தில் தேவைப்பட்டது. சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தோம். எவ்வளவு நாள் என்பது தான் கேள்வி. யார் முதலில் விவாகரத்து கேட்பது, குழந்தை யார் பொறுப்பு என்பன தான் கேள்விகள். பிறகு அந்த விபத்து நடந்தது.”
நான் அவன் முகத்தைப் பார்த்தேன். சின்ன வீக்கம் போல் லேசாக முகவாயில் கோணல் இருந்ததே ஒழிய காயம் முழுக்க ஆறியிருந்தது. ஆனால் தன்னால் இன்னமும் முழுதாய் தூங்க முடியவில்லை என்றான் தேசிங்குராஜா. அது மட்டுமல்ல கடுமையான தலைவலி. நீங்காத தலைவலி.  “மருந்து சாப்பிடுகிறாய் அல்லவா?”
“ஆமாம். ஆனால் தலைவலி விடுவதே இல்லை. நான்கைந்து மணிநேரம் வலியில் துடிப்பேன். அது எப்போது என்று தெரியாது. மிச்ச நேரம் மந்தமாக ஒரு வலி தோன்றியபடியே இருக்கும். அதை எப்படி உனக்கு புரிய வைக்க? சிலநேரம் யாரோ தலையில் பேஸ் கிட்டார் வாசிப்பது போல, சிலநேரம் மெத்து மெத்தென்று தலையின் இருப்பக்கமும் உலக்கையால் இடிப்பது போல். திடீரென்று ஆயிரம் ஊசிகள் சுருக் சுருக் என்று குத்துவது போல தோன்றும். கன்னத்தில் இருந்து ஆரம்பித்து பின் மெல்ல மேலே ஏறி கட்டெறும்புகள் போல சுருக் சுருக் என்று துளைக்கும் வலி பரவும். எலும்பு மஜ்ஜை வரை கூசும். அந்த வலி எப்படி என்று உனக்கு விளக்கவே முடியாது. அதை அனுபவிக்க வேண்டும். ஆனால் இப்போது பரவாயில்லை. முதல் சில மாதங்கள் தாங்கமுடியா வண்ணம் கடுமையாக இருந்தது. சிலசமயம் எனக்கு வலியில் பைத்தியம் பிடிப்பது போல இருக்கும். ஆனால் வலி இல்லாத போது தான் நான் என் கட்டுப்பாட்டை இழந்து என்னன்னமோ பேசுவேன். ஒருமுறை என் மைத்துனனை அடிக்க போய் விட்டேன். பிறகு பஸ் ஏறி மதுரை திருச்சி என்று எங்கெங்கோ சுற்றி விட்டு திரும்பினேன். வந்த போது வீடு காலியாக இருந்தது. அப்போது தான் நான் விவாகரத்துக் கேட்க முடிவு செய்தேன்.”
ஒரு சிகரெட்டை பற்ற வைத்து விட்டு தொடர்ந்தான். மழை பெய்ய ஆரம்பித்தது. டீக்கடையில் இன்னும் பலர் வந்து ஒதுங்கினர்.
“எனக்கு ஒரு நெருக்கடி வரும் போது உறுதுணையாக இல்லாத குடும்பம் இருந்து எதற்கு என்று தோன்றியது. அவ்வளவு தான். என் மனைவி திரும்ப வந்து என்னிடம் விளக்கப் பார்த்தாள். நான் எதையும் கேட்க தயாராக இல்லை. இப்போது யோசித்தால் அவள் எனக்கு நலமில்லாத போது மிகுந்த கரிசனத்துடன் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று புரிகிறது. சிலசமயம் மனிதர்களின் அன்பை அறிய வாழ்வில் நெருக்கடி வர வேண்டும். ஆனால் அப்போது அவள் என்னை முக்கியமான சந்தர்பத்தில் கைவிட்டு விட்டதாகவே எண்ணினேன். கோபத்தில் குழந்தையின் முகத்தை கூட பார்க்க மறுத்து விட்டேன். அதைத் தான் இப்போது நினைத்தாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.” அவன் தலையை புறா போல சாய்த்து அழத் தொடங்கினான். ஒரு கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் கோடாக வழிந்தது. இன்னொரு கண் அசைவற்று என்னை வெறித்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு கண்ணைத் துடைத்து இயல்பானான்.
அவனது ஒரு கண்ணுக்கு என்னாயிற்று என்று விசாரித்தேன். கொஞ்ச நாளாய் அப்படித் தான் இருக்கிறது என்று பார்வையில் எல்லாம் இரட்டையாய் தெரிகிறது என்றும் கூறினான். “நான் கூடவா இரண்டாக தெரிகிறேன்?” என்று கேட்டேன்.
“ஆம்”
எனக்கு இவ்விசயம் ஏனோ சங்கடமாய் இருந்தது. அந்த நிலையில் அவனிடம் எந்த முகபாவத்துடன் என்னவித சைகையுடன் உரையாடுவது என சிந்தித்தேன். குழப்பமாக இருந்தது. அவன் ஒரு கண்ணை மட்டும் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டான். பிறகு அந்த சிவந்து போன ஒற்றைக் கண்ணைக் கொண்டு புறா போல என்னைப் பார்த்து சொன்னான்: “எல்லாம் இந்த விபத்தினால் தான். இந்த விபத்து நேராமல் இருந்திருந்தால் விவாகரத்தை தள்ளிப் போட்டிருப்பேன். என் குடும்பம் என்னோடு இருந்திருக்கும். என் குழந்தை என் கண்முன்னே வளர்ந்திருப்பான். அவனது சிரிக்கின்ற முகத்தை பார்த்தால் என் கவலையெல்லாம் பறந்து விடுமே! என்ன சொல்ல, விபத்துக்குப் பின் நான் வெறும் பாதி மனிதன் தான். அப்படித் தான் தோன்றுகிறது, நிஜமாகவே. பாதி மனிதனை யாருக்கு வேண்டும்? குடும்பத்துக்கும் வேண்டாம், வேலை பார்க்கும் நிறுவனத்துக்கும் வேண்டாம், அப்படித்தானே?”
நான் அவனுடைய மனப்பதிவு ஆதாரமற்ற வெறும் பிரமை என்றேன்.
“இருக்கலாம். நன்றாக இருந்திருந்தால் உன்னைப் போல் ஜோராக அந்த கல்லூரி வேலையில் இன்னமும் இருந்திருப்பேன். அடிமையாக எல்லா கொடுமையையும் பொறுத்துக் கொண்டிருக்க மனிதனுக்கு முதலில் தேவை ஆரோக்கியம். நல்ல உடல். இல்லையா?” அவன் வக்கிரமாக சிரித்தான்.
நான் எனது ராஜினாமாவை குறிப்பிட்டேன். அவன் ஆச்சரியம் காட்டினான். “ஏன் திடீரென்று ராஜினாமா செய்ய நேர்ந்தது? என்ன பிரச்சனை உனக்கு?” என்று கேட்டான். “எந்த பிரச்சனையும் இல்லை. கிளம்புவதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.”
“ஆனால் உனக்கு இங்கு அப்படி ஒன்றும் பிரச்சனை இல்லையே?” என்றான் சந்தேகமாக.
எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை “ இப்போது இதனால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை லாபமும் இல்லை.” என்றேன்.
“ஏன் உனக்கு போக பிடிக்கவில்லையா?”
“பிடிக்குதோ இல்லியோ போக வேண்டும். இங்கேயே இனி இருக்க முடியாது” என்றேன்.
அவன் ஆம் என தலையாட்டியபடி பல மாதங்களுக்கு முன்பு தனக்கு நிகழ்ந்த விபத்தை துல்லியமாக விவரிக்க ஆரம்பித்தான். பின்னிருந்து யாரோ கத்தியால் குத்தியது. கண்ணில் மின்னல் போல பளிச்சிட்டது. சூடாக ரத்தத்தை உணர்ந்தது. அந்த ரத்தத்தை கையில் வழித்து பார்க்கக் கூட இல்லை. அதற்கு முன்பு மயக்கம் போட்டு நடுசாலையில் விழுந்து விட்டான்.
வெம்மையான சூடான ரத்தம். பின்னங்கழுத்தில் வழியும் ரத்தத்துக்கு வேறு நிறமோ உருவமோ இல்லை. தேவையும் இல்லை.

நன்றி: அமிர்தா, நவம்பர்
Share This

No comments :

Post a Comment

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates