Sunday 14 April 2013

சென்னையும் மீனும்







என்னதான் சிக்கன் மட்டன் முருங்கைக்காய் வெண்டைக்காய் சாப்பிட்டாலும் திருப்தி, மனநிறைவு, வயிற்று சுகம் வருவது நல்ல மீன்சாப்பாட்டுக்கு பிறகு தான். சாப்பிட்ட பிறகு வாயில் கமழும், விரல்களில் ஒட்டிக் கொண்டிருக்கும், உடல் வீச்சத்தில் கலந்து விடுகிற மீன் வாசனையை ரசிப்பேன். அதே போல் உள்நக்கில் ஒட்டிக் கொள்ளும் லேசான கசப்பு.

மீனுக்கென்று தனி சுவையுண்டா தெரியவில்லை. ஆனால் அதன் வாசனை தான் சிறப்பு. மீன் சந்தையை கடந்து செல்லும் போது மூக்கை பொத்த மாட்டேன். அது போலத் தான் கருவாட்டுக் கூடைகள் கொலுவைத்த கடைகளும். சமைக்காத சிக்கனின் வாசம் எனக்கு குமட்டலைத் தரும். மட்டன் கூட சமைத்த பின் தான் நெய் மணத்தை தரும். அதே போல் மீனின் மிருதுவான சதை, கூர்மையான முள் இரண்டும் பிரியமானவை. மீன் முள் தொண்டையில் மாட்டிக் கொண்டால் ஊரில் நல்ல சூடு சோற்றை உருட்டி விழுங்க சொல்வார்கள். சின்ன முள் பல்லிடுக்கில் மாட்டிக் கொண்டால் வருகின்ற அவஸ்தை சுகமானது. சதா அந்த முள்ளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம். சாரு நிவேதிதா முள்ளை காமமாக்கி “முள்” என்றொரு சிறுகதை எழுதி இருக்கிறார். ஊரில் ஒருவர் ஆற்றில் மீனை வாயால் பிடிக்க முயன்று அதை எதேச்சையாக்கி விழுங்கி அவஸ்தைப்பட்ட கதையை சின்ன வயதில் கேட்டிருக்கிறேன். பின்னர் ஹைதராபாத்தில் எங்கோ ஆஸ்துமாவுக்கு மீன் விழுங்கி சிகிச்சை இருப்பதாய் கேள்விப்பட்ட போது கொஞ்சம் பயமாக இருந்தது.
எலும்பு மஜ்ஜையை விட மீன் தலைக்குள் உள்ள கொழுப்பு அதிக சுவையானது. அதுவும் குழம்பில் ஊறிய மீன் தலையை உறிஞ்சுவது அலாதியானது. அதே போன்று தான் கண். சின்ன வயதில் எனக்கும் அக்காவுக்கும் யார் முதலில் மீன் கண்ணை மெல்லுவது என போட்டி நடக்கும்.
எங்கள் ஊரில் படு ஏழையாக இருக்கக் கூடியவருக்கு கூட மீன் வாசனை இல்லாமல் சோறு இறங்காது என்பார்கள். அப்போதெல்லாம் மீன் மலிவாக இருந்தது. வீட்டுக்கு வரும் மீன்காரிகளிடம் அம்மா இருபது முப்பது ரூபாய்க்கு கூட நல்ல துண்டம் வாங்கி குழம்பு வைப்பார்.
சென்னைக்கு வந்த பிறகு மீன் அரிதாகி போனது. இங்கே எங்கு பார்த்தாலும் சைவம். அசைவம் என்றால் சிக்கன். எனக்கு சிக்கனும் கூட சைவமோ எனத் தோன்றும். அதுவும் பிராய்லர் சாப்பிட ஏதோ முள்ளங்கி போல இருக்கிறது. இங்கே மத்திய வர்க்கம் தினமும் மீன் சாப்பிடுவது கிட்டத்தட்ட சாத்தியமே இல்லை. இங்கே மீன்களின் பெயர்களும் வேறு. எனக்குப் பிடித்த வாளை, வெளமீன் கணமை, நெத்திலி, கூனி போன்றவை இங்கு எளிதில் கிடைப்பதில்லை. எங்கள் ஊரிலே மீன்குழம்பு வைப்பதற்கு மூன்று நான்கு முறைகள் உள்ளன. தேங்காய் அரைத்து, தேங்காய் சேர்க்காமல், தேங்காயை வறுத்து அரைத்து என. கூனியை தேங்காய் அரைத்து மஞ்சள் சேர்த்து பொரியல் போல செய்வார்கள். அதன் வாசனையும் சாறு ஊறும் சுவையும் சாப்பிட்டால் தான் புரியும். சின்ன வயதில் ஒருமுறை ஆமை சாப்பிட்டிருக்கிறேன். முட்டை போன்ற மணமும் மாவான சுவையும் கொண்டது.

இங்கே சென்னையில் மட்டமான மீனைப் போட்டு தண்ணியாய் ஒரு குழம்பு வைக்கிறார்கள். அல்லது வஞ்சிரம் பொரித்தது. சென்னை மக்களின் உணவுப் பண்பாட்டில் வேறுபட்ட தன்மை இல்லை. சீரான ஒரே மாதிரியான உணவுகள் மூன்று நான்கை தான் மீண்டும் மீண்டும் தினமும் சாப்பிடுகிறார்கள். எங்களூரில் சாதாரணமாக வாரத்துக்கு ஐந்து குழம்பு வைப்பார்கள். பொரியல், கூட்டு மட்டும் இருபத்தைந்துக்கு மேல் இருக்கும். அதாவது அன்றாட உணவுகளை சொல்கிறேன். ஆனால் சென்னையில் டிபன் பாக்ஸை திறந்தால் ரசமும் பொரியலும் தான். அதே வியர்த்து புளித்த வாசனையும் வெளிறின நிறமும் கொண்ட உணவுகள். சென்னைவாசிகளுக்கு விதிவிதமாய் வேண்டுமென்றால் வடமாநில உணவுகளை நாடுவார்கள். அதுவும் எப்போதாவது. இவர்கள் சாம்பார், ரசம், பொரியல் என்றால் தேவாமிர்தம் போல் விழுந்து விழுந்து சாப்பிடுகிறார்கள். அது எங்களூரில் மாட்டுக்கு வைக்கிற காடித் தண்ணீர் போல இருக்கிறது. நான் சென்னைக்கு வந்த முதல் ஐந்து வருடங்கள் சாம்பார், ரசத்தை சாப்பிட பிடிக்காமல் ஏதோ கோழி போல தின்று வந்தேன்.

கோழி என்றதும் நினைவுக்கு வருகிறது. எனக்கு கல்லூரி வயது வருகிற வரையில் வீட்டில் நிறைய கோழிகள் இருந்தன. நாங்கள் இறைச்சிக்கடை போவது அறவே இல்லாமல் இருந்தது. ஞாயிறானால் வீட்டில் வளர்த்த சேவல் தான் பலி. அதைப் பிடிப்பது ஒரு விளையாட்டு. பொதுவாக சேவல் என்றால் ரொம்ப அடாவடி பண்ணிக் கொண்டு திரியும். அதனாலே எனக்கு அதைப் பிடித்து வந்து தலையை வெட்டி விட்டு அது ரத்தம் சிதற விட்டு துள்ளுவது பார்க்க ஜாலியாக இருக்கும். ஒரு சின்ன வேட்டையாடும் கிளர்ச்சி. ஆனால் கடைக்கு போய் கறி வாங்கி வருவது கொஞ்சம் பரிதாபமாக ஏதோ கீரையை வேரோடு பிடுங்கி வருவது போல இருக்கிறது. அதுவும் தண்ணீரில் முக்கி கோழியை கொல்வதும், அதற்கு அந்த மூளையற்ற கோழிகள் சிறைக்கைதி போல் அனுமதிப்பது பார்க்க அருவருப்பாக இருக்கிறது. ஊர்க் கோழிகளை பிடிக்க தனி சாமர்த்தியம் வேண்டும். ஒவ்வொரு முறையும் City of Godஇல் வருகிற அந்த முதல் காட்சி போலத் தான்.

என்னுடைய பாட்டியின் ஊர் ஒரு கடலோர கிராமம். கோடை விடுமுறையில் பேரன் பேத்திகள் பெருங்கூட்டமாக போவோம். அப்போது அவர் கை உயர மீன்களை வாங்கி சமைப்பார். மூன்று வேளையும் மீன் தான். நாங்கள் விடுமுறை முடிந்து திரும்பும் போது பாட்டி கொஞ்சம் கடனில் மூழ்கி விடுவார். 

 

என்னுடைய மனைவியின் குற்றச்சாட்டு இது. அசைவம் சாப்பிடுகிறவர்களுக்கு சோறும் கறியும்/மீனும் போதும். வேறு பொரியல் கூட்டு தேவையில்லை. எப்படி வெறும் கறி வைத்து சாப்பிடுகிறீர்கள் என கொஞ்சம் வெறுப்பாக கேட்பாள். எனக்கு சின்ன வயதில் மனிதர்கள் ஏன் காய் கனி சாப்பிடுகிறார்கள் என வியப்பாக இருக்கும். மீன் இருந்தால் வேறொன்றும் எனக்கு தேவை இல்லை. எங்கள் வீட்டில் சைவம் சமைத்தால் அம்மாவிடம் பணத்தட்டுப்பாடு என புரிந்து கொள்வேன். சென்னையில் தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் என பல கல்வி நிலையங்கள், வேலையிடங்களில் மீனுக்கு தடை உள்ளது. அசைவம் ஒரு கீழான பண்பாடாக நினைக்கப்படுகிறது. சுத்த சைவம் தான் இங்கே உயர்த்தட்டு கலாச்சாரமாகி மாறி உள்ளது. இப்போது வெளிநாட்டு உணவு வகைகளின் அறிமுகத்தின் ஊடாகத் தான் அசைவம் தன் மதிப்பை மீட்டு வருகிறது. உயர்த்தட்டு பிராமணர்கள் ஐந்து நட்சத்திர ஓட்டல் என்றால் அசைவம் சுவைக்க தயாராக இருக்கிறார்கள். சமீபமாக மணிரத்னம் வெளிநாடு போயிருந்த போது மீன் உணவை விரும்பி சாப்பிட்டதாக படித்தேன்.

சைவம் என்றால் என்றைக்குமே வறுமை தான். சென்னையில் சைவமாக்கல் கூட ஒருவித பண்பாட்டு வறுமையை தான் காட்டுகிறது. பல்வேறுபட்ட இனங்களும் மொழி சாதியினரும் வாழும் இந்நகரத்திற்கு ஒற்றைபட்டையான பண்பாடு உருவாவது ஒரு உளவியல் நோயைத் தான் சுட்டுகிறது.

சமீபத்தில் நேஷ்னல் ஜ்யோகிரபி சேனலில் ஒரு ஆவணப்படம் காட்டினார்கள். ஒரு அமெரிக்கர். அவர் சின்ன வயதில் இருந்து இப்போது வரை முப்பது வருடங்களாக தினமும் சீஸ் பர்க்கர் மட்டுமே தினமும் சாப்பிடுகிறார். வேறென்ன சாப்பிட்டாலும் அவருக்கு வாந்தி வந்து விடும். தன் மனைவி கட்டித்தரும் உணவை தினமும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு முதல்வேலையாக வெளியே போய் சீஸ் பர்க்கர் சாப்பிடுகிறார். விளைவாக உடல் ரொம்ப பருத்து, நீரிழிவு வந்து விட்டது. சதா படுத்து தூங்கியபடி இருக்கிறார்.
இப்படியான ஒரு மனநோயை நோக்கித் தான் சென்னை மக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். நான் வெறும் மீன் vs காய்கறி உணவுப் பண்பாட்டை பற்றி சொல்லவில்லை என உங்களுக்கு புரியும்.




Share This

1 comment :

  1. நல்ல பதிவு. சைவ உணவுப் பழக்கம் உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்காதது என்பது தற்போது மருத்துவ விஞ்ஞானம் கண்டறிந்திருப்பது. அசைவம் சாப்பிட்டால் ”உடல் உழைப்பு” அதிகம் இருக்கவேண்டும். அது சென்னை போன்ற மெட்ரோக்களில் சாத்தியமில்லை. உடற்பயிற்சிக்கு தனியாக எத்தனை பேருக்கு நேரம் ஒதுக்க முடியும்? புரோட்டீன் அதிகமுள்ள மீன் அவ்வளவாக ஊறு செய்யாதது என்றாலும் சென்னையில் விற்கப்படும் மீன் எந்த அளவுக்கு புதியதாக இருக்க வாய்ப்புள்ளது?

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates