Thursday 18 April 2013

புத்தக விமர்சனக் கூட்டங்கள்: வேடிக்கை விரோதங்கள்





என்னுடையநண்பர் ஒருவரை சுமார் பத்துவருடங்களுக்கு முன் ஒரு சினிமா நடிகரின் சார்பில் அவரது உதவியாளர் எழுதின கவிதைத் தொகுப்பு வெளியீட்டு கூப்பிட்டு பேசக் கேட்டார். நண்பர் அப்போது தீப்பிழம்பு போல் இருப்பாராம். அவர் சொன்னார்: “நான் பேசுகிறேன். ஆனால் புத்தகம் பற்றின என் உண்மைக் கருத்துக்களை தான் சொல்லுவேன்”.
அரைமணி கழித்து உதவியாளர் போனில் மீண்டும் அழைத்து “நீங்க கூட்டத்துக்கு வாங்க, ஆனால் பேச வேணாமுன்னு சார் சொல்றாரு” என்றாராம் பணிவாக. இப்போதெல்லாம் நண்பர் தணிந்து விட்டார். பொதுவாக என்னை விமர்சனக் கூட்டங்களுக்கு அழைக்கும் போது இந்த சம்பவம் நினைவு வரும்.
பிடித்த புத்தகங்களைப் பற்றி பேசுவது ஒரு கொடை. ஒரு அற்புத வாய்ப்பு. ஆனால் அது அரிது. 

பொதுவாக புத்தகக் கூட்டங்கள் கல்யாண வரவேற்பு போல. பையன் வீடு பெண் வீடு என பல பக்கங்களில் இருந்து வருவார்கள். எழுத்தாளனின் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், கூட்டங்களில் கலந்து கொண்டு இலக்கிய அப்டேட் செய்வதற்காக, பொழுது போக்க, என்னவென்றே தெரியாமல் வந்து அமர்வது என பல ரகங்களில் வருவார்கள். 
இடங்களைப் பொறுத்து எல்லா கூட்டங்களுக்கு ஒரு எண்ணிக்கையில் கூட்டம் வரும். 

மாலையானால் பூங்கா, கடற்கரை, டீக்கடை என கூடுவது போல் மக்கள் நிகழ்ச்சி அரங்கங்களுக்கும் கூடுவார்கள். பண்பாட்டு நிகழ்வுகளில் பங்கெடுக்க மக்களுக்கு நிச்சயம் ஆர்வமுண்டு. சென்னையில் அதற்கான இடம் குறைவு. இருந்தால் நூற்றுக்கணக்கான மக்களை தினமும் கூட திரட்டி பேச்சு, விவாதம் கொஞ்சம் இசை, நகைச்சுவை என வெற்றிகரமாக நடத்த முடியும். மேலும் கிராமங்களில் வாழ்ந்த காலத்தில் இருந்தே வேலை முடித்த பின் வில்லுப்பாட்டு, அரசியல் பேச்சு என கூடிய மரபு நமக்குண்டல்லவா. இந்த இடத்தை பின்னர் பட்டிமன்றம் ஆக்கிரமித்தது. இப்போது இலக்கிய கூட்டங்கள். தமிழர்களுக்கு பேச்சை கேட்பதிலும் பேசுவதிலும் உள்ள தாகம் அளப்பரியது. ஒரு இலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து கூடி கைத்தட்டும் மக்கள் எங்கிருந்து வருகிறார்கள் என விளக்கவே இவ்வளவும் சொன்னேன். 

ஒரு பெரிய பேச்சாள எழுத்தாளருக்கு வரும் ஆயிரக்கணக்கான ரசிகர்களையும், சின்ன எழுத்தாள பேச்சாளர்களுக்கு வரும் நூற்றுக்கணக்கானோரையும் வைத்து நாம் இங்கு இலக்கிய மறுமலர்ச்சி ஏற்பட்டு விட்டதாய் மயங்கி விடக் கூடாது.

சரி, அடுத்து வேறு விசயத்துக்கு வருவோம். விமர்சன அல்லது நூல் அறிமுகக் கூட்டங்களில் பேசுபவர்கள் இரண்டு அணுகுமுறைகள் வைத்திருப்பார்கள். மூத்த எழுத்தாளர் என்றால் கண்ணை மூடி புகழ்ந்து தள்ளி விடுவார்கள். அந்த மூத்த எழுத்தாளரை விட பேச்சாளர் மூத்தவர் என்றால் ஒன்றிரண்டு அறிவுரைகள் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றால் ஏகத்துக்கு அறிவுரையாய் பொழிந்து விடுவார்கள். “சின்னப் பையன் என்னவோ பண்ணி வச்சிருக்கான், பாருங்க” என்கிற ரேஞ்சில் தைரியமாக விமர்சிப்பார்கள். இது கூட நல்லது தான். நேர்மையான கருத்துக்கள் வந்து விழும்.

நடுவயது எழுத்தாளன் என்றால் பேச வந்திருப்பவர்கள் அவனுடன் அதே காலகட்டத்தில் எழுத வந்த அதே வெளுத்த ஆடையும் பிய்ந்த செருப்பும் அணிந்த ஆசாமிகளாக இருப்பார்கள். அவர்கள் “இவனை புகழக் கூடாது. அதுக்காக திட்டவும் வேணாம். ஏதாவது மையமாக பேசுவோம்” என நினைத்து பேசுவார்கள். பெரும்பாலும் “எழுத்தாளர்” என்றில்லாமல் “என் நண்பர்” என்று அழைத்து பேச ஆரம்பித்தால் “உன்னை எல்லாம் எழுத்தாளனாக அங்கீகரிக்க நாங்க தயார் இல்லை” என பொருள். அதனால் கடந்த கால நினைவுகள், கசப்புகள், வருத்தங்கள், சுயதம்பட்டம் என அரைமணிக்கு குறைவாக பேசுவார்கள். பேச்சை முடிக்கும் போது “இந்த புத்தகத்தில் எனக்கு சில இடங்கள் பிடித்திருக்கின்றன” என கண்ணாடியை பொருத்திக் கொண்டு புத்தகத்தை திறந்து தேடத் துவங்குவார்கள். சம்மந்தப்பட்ட எழுத்தாளன் அப்போது தான் ஆர்வமாகி நிமிர்ந்து உட்கார்ந்து கவனிப்பான். ஆனால் தேடின பக்கம் கிடைக்காது. பொத்தாம் பொதுவாக வாழ்த்தி அமர்வார்கள். மொத்தம் பத்தே நொடிகள் தான் புத்தகம் பற்றி பேசி இருப்பார்கள். அதற்கே “ரொம்ப புகழ்ந்துட்டோமோ” என மனசுக்குள் குமுறுவார்கள். 

இன்னும் ஒரு வகை நடுவயது அறிவுஜீவி பேச்சாளர்கள். இவர்கள் கோட்பாடு, தாம் படித்த பிற நூல்களைப் பற்றி அரைமணி ஜல்லியடித்து விட்டு “சார்த்தர், காம்யு இடத்தில் இந்த எழுத்தாளரையும் நாம் வைக்கலாம்” என சொல்லி சம்மந்தப்பட்ட எழுத்தாளரை நெளிய வைப்பார்கள். இந்த மாதிரி மிகையாக புகழ்வதும் பாராட்டாமல் இருப்பதற்கான ஒரு தந்திரம் தான். யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.

உண்மையிலேயே நமக்கு உவப்பில்லாத ஒரு நூலைப் பற்றி எப்படி பேசுவது? ஒன்று நேர்மையாக மனதில் பட்டதை காயப்படுத்தாமல் சொல்லி விடலாம். யாரும் உங்களை கடித்து விடப் போவதில்லை. இறுதியில் பேசினால் நல்லது. முதலில் பேசினால் அடுத்து வருபவர் உங்களுக்கு பதில் கூறும் சாக்கில் நிறைய freehit சிக்ஸர்கள் அடித்து கைத்தட்டு வாங்குவார். நடுவில் பேசும் போது முன்னே வந்தவர்கள் பேசி உருவாக்கிய ஒரு குறிப்பிட்ட பாங்கை, தொனியை நீங்கள் முறித்து பேசும் சிக்கல் வரும்.

இன்று ஆங்கில நூல் விமர்சனக் கூட்டங்களில் உள்ள விவாத முறை இன்னும் மேலானது. நான்கு பேர் சுற்றி உட்கார்ந்து புத்தகம் பற்றி ஏதோ ஒரு புள்ளியில் இருந்து தம் விவாதத்தை ஆரம்பிக்கலாம். உதாரணமாக, “எனக்கு இந்த நாவல் சரளமாக எழுதப்பட்டது போல உள்ளது. ரெண்டே நாளில் படித்து விட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என ஒருவர் ஆரம்பித்து இன்னொரு பேச்சாளரிடம் மைக்கை கொடுக்கலாம். பின்னர் பார்வையாளர்களிடம் கேள்விகள் கேட்க சொல்லலாம். யாராவது ஒருவர் புத்திசாலித்தனமாக ஒருங்கிணைத்தால் இந்த மாடல் வெற்றி பெறும்.

தமிழில் புத்தக கூட்டங்களில் உள்ள மேடைப்பேச்சு பாணியை யாராவது மாற்ற வேண்டும்.
Share This

1 comment :

  1. பல இடங்களில் இதே பாணியைப் பார்த்து விட்டு அலுத்து விட்டது...

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates