Sunday 5 May 2013

ஜி.நாகராஜன் நினைவோடை: வீழ்ச்சியும் காரணங்களும்




இந்த சின்ன நூலில் சு.ரா ஜி.நாகராஜன் குறித்த நினைவுகளை நிறைய கவனம், கொஞ்சம் கோபம், எரிச்சலுடன் கசப்பு ஏமாற்றம் மற்றும் துக்கம் ஆகியவற்றை விளக்க முடியாத ஒருவகை அன்புடன் கலந்து பேசுகிறார். சு.ராவுக்கு உரித்தான மென்மையான அங்கதமும் கூர்மையும் கூடிய குரல் இதிலும் ஒலிக்கிறது. தனக்கு தெரியாத எதையும் கூறி விடக் கூடாது, ஜி.நாகராஜனை மிகைப்படுத்தி ஒரு சீரழிவு நாயகனாக சித்தரிக்க கூடாது என்கிற அக்கறையும் இருக்கிறது. இந்த நேர்மை தான் இப்புத்தகத்தின் பலம். வாசகனை ஆச்சரியப்படுத்தி அதிர்ச்சிக்குள்ளாக்கும் எத்தனிப்புகள் எதையும் செய்யவில்லை.


பிரமிள் குறித்தும் சு.ராவுக்கு நிறைய கசப்பு உள்ளது அவர் குறித்த நினைவோடையில் தெரியும். ஆனால் ஜி.நாகராஜன் குறித்து அவருக்கு தனியான பிரியமும் அக்கறையும் உள்ளது. ஜி.நாகராஜன் தனக்கு உதவுபவர்களை பொருட்படுத்த மாட்டார் என்றாலும் அவர் பிரமிளைப் போல தன் உற்றவரை காயப்படுத்த மாட்டார் என்கிறார்.

அதிகம் வெட்டாமல் சு.ராவுடனான உரையாடலை அப்படியே உள்ளிட்டிருக்கிறார்கள். சில இடங்களில் பேச்சு ஜி.நாவை விட்டு வேறு நண்பர்கள், ஜவுளிக்கடை விபரங்கள், சு.ராவின் அப்பா மீதான அங்கதம் என அலைபாய்கிறது. பொதுவாக எழுத்தாளர்கள் பிறரை பற்றி பேசுவதன் மூலம் தம்மை பற்றி தான் அதிகம் வெளிப்படுத்துவார்கள். இந்நூலில் நாம் ஜி.நாகராஜனை விட சு.ராவை பற்றி இன்னும் விளக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, சு.ரா ஏன் கம்யூனிசத்தை துறந்தார், வானமாமலை மீது அவருக்கு உள்ள வருத்தங்கள் மட்டுமல்ல மதுரையில் ஒரு லாட்ஜில் அவரை எவ்வளவு நன்றாக கவனித்துக் கொள்ளுவார்கள் என்பது வரை தகவல்கள் வருகின்றன. இப்படி நினைவுகள் தடம் மாறுவது சு.ராவின் வயோதிக மனநிலையின் காரணமாகவும் இருக்கலாம்.

சு.ராவை பற்றி மேலும் மூன்று விசயங்கள் தெரிய வருகின்றன. ஒன்று, மனசுதந்திரத்துக்கு அவர் கொடுக்கும் அழுத்தம். இடதுசாரி இயக்கத்தின் மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டு அது அறிவு சுதந்திரத்தை கட்டுப்படுத்துகிறது என்பது. ஜி.நாகராஜன் தன்னை அசைவ ஓட்டல்களுக்கு அழைத்து செல்வார். ஆனால் அசைவம் சாப்பிட வற்புறுத்த மாட்டார். அது போல் மதுவருந்தவும் ஒருநாளும் சொன்னதில்லை என அவரிடம் தமக்கு பிடித்த பண்பாக பிறரது சுதந்திரத்தில் தலையிடாத தன்மையை குறிப்பிடுகிறார். ஆனால் புத்தகத்தின் ஊடாக நமக்கு கிடைக்கும் சித்திரத்தில் இருந்து ஜி.நாகராஜன் அடுத்தவரின் ஈடுபாட்டில் காட்டாத அக்கறையின்மையை இதிலும் கொண்டிருக்கலாம் என தோன்றுகிறது. ஜி.நாகராஜனுக்கு தான் என்ன குடிக்கிறோம் என்பதே முக்கியம். அவருடன் உட்கார்ந்து நீங்கள் விஷமே குடித்தாலும் கண்டு கொள்ள மாட்டார். தனிமனித சுதந்திரம் சார்ந்து அவருக்கு ஏதேனும் நம்பிக்கை இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

அடுத்து ஜி.நாகராஜனின் அஜானுபாகுவான உடல், ஆரோக்கியம், வலிமை, பௌதீகமான வாழ்வில் அவர் திளைக்கும் விதம் சு.ராவிடம் பெரும் ஈர்ப்பை உண்டு பண்ணியிருக்கிறது. ஜி.நா ஓட்டலுக்கு போனால் நான்கு பேருக்கு சேர்த்து சாப்பிடக் கூடியவர். அதே போல் எளிதில் களைப்பு கொள்ளாத கடுமையான அலைச்சலையும் தாங்கும் உடல் அவருக்கு. இளமையில் இருந்தே சீக்கானவராக பலவீனமானவராக திகழ்ந்த சு.ராவுக்கு ஜி.நாவின் பூரண ஆரோக்கியம் மீது ஒருவித அசூயை கலந்த கவர்ச்சி இருந்திருக்கலாம். இவ்வளவு அருமையான உடலை சிறுக சிறுக அழிக்கிறாரே என்கிற ஆற்றாமை இப்பக்கங்களில் வெளிப்படுகிறது.
மூன்றாவதாக, சு.ரா உறவுநிலையில் ஒரு கண்ணியத்தை கடப்பாட்டை எதிர்பார்ப்பவராக இருந்திருக்கிறார். குறிப்பாக ஒருவர் தன்னை சார்ந்திருக்கும் இன்னொருவரை காயப்படுத்தவோ நோகடிக்கவோ கூடாது என நம்புகிறார். இந்த உறவுசார்ந்த நேர்மை ஜி.நாகராஜனிடம் சுத்தமாக இல்லை என்பது சு.ராவுக்கு அவர் பால் கோபத்தையும் ஏமாற்றத்தையும் உருவாக்குகிறது. ஒருமுறை நாகராஜன் தனது இரண்டாம் மனைவி தான் தனது சீரழிவுக்கு காரணம் என கடிதம் எழுத அதைப் படித்து சு.ரா கொதித்துப் போய் அவரைத் திட்டி பத்து பக்கங்கள் பதில் எழுதுகிறார். நாகராஜன் ஒரு மனிதரே இல்லை, அவரை இனி நண்பராகவே ஏற்றுக் கொள்ள போவதில்லை என எழுதுகிறார். தான் வெறுமனே நக்கலாக சொன்னதாக பிறிதொரு முறை நாகராஜன் அதை நியாயப்படுத்துகிறார். சு.ரா ஒரு லட்சியவாதி. அவர் குடும்பம், உறவுகள் அனைத்திலும் கராறான கண்ணியத்தை நியாயத்தை கடைபிடிக்க விரும்பியவர். ஜி.நாகராஜன் எல்லா உறவுகளில் இருந்தும் வெளியே நின்று விட்டேத்தியாக வாழ்ந்தவர். சு.ராவுக்கு மனித உறவு சார்ந்த விழுமியங்களில் இருந்த நம்பிக்கை நாகராஜனுக்கு இல்லை. இது ஒரு பக்கம் இருக்க நாம் இன்னொரு கேள்வியையும் இங்கு கேட்க வேண்டும்: ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எவ்வளவு முக்கியம் என்பது அது.

நம்மிடத்து அசலான அக்கறை காட்டுவோர் ஒன்றிரண்டு பேரே இவ்வுலகில் இருக்கக் கூடும். கணிசமானோருக்கு அப்படி ஒருவர் இல்லாமலே இருக்கலாம். குறிப்பாக அன்றாட வாழ்வின் பாதுகாப்பின்மை மிகும் போது மனிதன் பதற்றப்படுகிறான். அவன் தன்னை நோக்கி சதா அத்தனை முனைப்புகளையும் திருப்புகிறான். அவன் பிறரிடம் பேசும் போதும் தன்னிடமே பேசுகிறான். தன்னை எப்படி காப்பாற்றுவது, முன்னேற்றுவது, பாதுகாப்பது என்பதே அவரது லட்சியமாக இருக்கிறது. அப்படியான நிலை இன்று கிட்டத்தட்ட அனைவரிடமும் உள்ளது. இன்னொருவருக்காக செலவு செய்ய நேரமோ வீணாக்க அக்கறையோ காட்டுவதற்கு ஈடுபாடோ நமக்கு இல்லை. ஆனாலும் நாம் முன்னெப்போதையும் விட நேரடியாகவும் ஊடகங்கள் வழியாகவும் நூற்றுக்கணக்கான மனிதர்களிடம் சதா பேசிக் கொண்டே இருக்கிறோம். நட்பு, கணவன் - மனைவி உறவு, பெற்றோர் உறவு என அணுக்கமான உறவுகளில் கூட இன்று பாசாங்கும் மேலோட்டமான சடங்கு சார்ந்த நலம் விசாரிப்புகளும் தான் பிரதானமாக தெரிகின்றன. உதாரணமாக உங்களது முக்கியமான தீவிரமான அந்தரங்கமான பிரச்சனை ஒன்றை பகிர நம்பிக்கையான ஒரு ஆளை தேடிப் பாருங்கள். ஒருவர் கூட மாட்ட மாட்டார். ஆனால் உங்களைச் சுற்றி நூறு பேருக்கு மேல் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் இயல்பாகவே மனிதன் தன் அத்தனை பிரயத்தனங்களையும் கடந்து தன்னைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கிறான். அவன் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன பகுதி மட்டுமே பிறருக்கு அளிக்கிறான். இது கணவன், மனைவி, நண்பர், உறவினர் என அனைவருக்குமே பொருந்தும். நாம் ஒரேநேரத்தில் பரஸ்பரம் வெறுத்தபடியும் நேசித்தபடியும் இருப்பதன் காரணம் இது தான். நாம் நமக்காகத் தான் வாழ்கிறோம் என ஏற்றுக் கொள்வதில் தான் நிம்மதியும் மகிழ்ச்சியும் உள்ளது. தன்னுடைய சுயமுன்னேற்றத்தை ஒருவர் உழைப்பாக மாற்றும் போது இயல்பாக அது பிறருக்கும் பயனளிக்கும். இல்லாதபட்சத்தில் அவர் வெறுக்கப்படுபவராக மாறுவார். நாகராஜனுக்கும் அதுவே நடக்கிறது. அவருக்கு திருமணத்துக்கு பின்பும் விலைமாதருடன் தொடர்பு நிலைக்கிறது. இது அவரது மனைவிக்கு கடுமையான உளைச்சலை வேதனையை அளித்திருக்கும். ஆனால் சு.ரா செய்தது போல நாம் இதை ஒரு குற்றமாக பார்க்க முடியுமா என்கிற கேள்வி முக்கியமானது.

கணவன் – மனைவி உறவு பரஸ்பர விசுவாசம் என்கிற விதியை அடித்தளமாக கொண்டது. அது தகரும் போது பரஸ்பர பயன்பாடு என்று ஒன்று அந்த உறவை தாங்கும். ஜி.நாகராஜன் தன் மனைவிக்கு இரண்டையும் தரவில்லை. ஆனால் அவர் தன் மனைவியை அடிக்க மட்டும் செய்கிறார். மனைவி பிரிந்து போகிறார். அவர் ஒழுங்காக சம்பாதித்து மனைவியிடம் மேம்போக்கான அளவில் மென்மையாக நாகரிகமாக நடந்து கொண்டிருந்து விட்டு மறைமுகமாக விபச்சாரிகளிடத்து தொடர்பு கொண்டிருந்தால் சமூகமும் மனைவியும் அவரை ஏற்றுக் கொண்டிருப்பர். நிதர்சனத்தில் விசுவாசம், பரஸ்பர மரியாதை ஆகிய விழுமியங்களுக்கு எல்லாம் எந்த மதிப்பும் இல்லை. ஜி.நாகராஜனுக்கு சாமர்த்தியமாக தப்பு செய்ய வரவில்லை அல்லது அவருக்கு அது சலிப்பாக இருந்திருக்க வேண்டும்.

சு.ரா கொண்டிருந்த விழுமியங்கள் இன்று நமக்கு அர்த்தமற்ற பொய்களாக  படுகின்றன. அது அவரது தவறல்ல, நம் குற்றமும் அல்ல. நாம் பொய்க்கும் உண்மைக்கும் நடுவிலான ஒரு காலத்தில் வாழ்கிறோம்.
ஜி.நாகராஜன் ஆரம்பத்தில் அடித்தட்டு விபச்சாரிகளுடன் பழகுபவர், ஒழுக்கங்களை துறந்த உலகினை அறிந்தவர் என்கிற அளவில் தான் சு.ராவை ஈர்க்கிறார். ஜி.நா மூலம் தமக்கு ஒரு முற்றிலும் வேறுபட்ட ஒரு உலகு திறந்ததாக கூறுகிறார். இது கொஞ்சம் வியப்பாக உள்ளது. ஒரு விபச்சாரியை சந்திப்பதோ தெருவில் அவளிடம் பேசுவதோ சு.ராவுக்கு அவ்வளவு மனச்சிக்கல் தருகிற விசயமாக இருந்திருக்கிறது. ஒருவேளை நகரத்தில் இன்றைய சூழலில் வாழ்ந்திருந்தால் அவருக்கு இது மிக சாதாரணமான சம்பவமாக தோன்றி இருக்கும். இதே கோணத்தில் தான் இந்த நினைவோடையில் ஜி.நாகராஜன் நள்ளிரவில் பாலியல் வேட்டைக்கு கிளம்புவது போன்ற குறிப்புகள் நமக்கு ஏதோ ஒருவர் காலையில் லுங்கீ கட்டியபடி பால் வாங்க போவது போல தோன்றுகிறது.

ஜி.நா தன்னை ஒரு எழுத்தாளராக கருதவில்லை, அவர் அதிகம் சிரத்தை எடுத்து படித்ததில்லை என்கிறார் சு.ரா. இது முக்கிய தகவல். அவர் தன் உள்ளுணர்வின் தடத்தில் தூயமிருக நிலையில் தூண்டுதலின் படி வாழ்ந்தவராக இருந்தார். ஆனால் அவருக்கு அபார திறமைகள் இருந்திருக்கின்றன. அவர் நினைத்திருந்தால் இருபதுக்கு மேற்பட்ட தொழில்களில் முன்னுக்கு வந்திருக்கலாம் என்கிறார் சு.ரா. அவர் அரசியில் நுழைந்தால் எம்.எல்.ஏ கூட ஆகியிருப்பார் என்கிறார். இதை அவர் ஜி.நாவிடம் கூறும் போது அவர் வெறுமனே சிரித்து விட்டு விடுகிறார். ஜி.நாவுக்கும் இது தெரிந்திருக்கும். ஆனால் தன்னால் முடிகிறது என்பதாலே இத்தகையோர் அதை செய்ய மாட்டார்கள். எளிதாக வருகிற காரியங்கள் சலிப்பூட்டும். எஸ்.ராமகிருஷ்ணன் (இப்போதைய எஸ்.ரா அல்ல) என்றொருவர் எப்படி ஜி.நாவிடம் இருந்ததில் சொற்ப அளவே திறமையை வைத்துக் கொண்டு கடுமையான உழைப்பின் மூலம் ஒரு மேடைப்பேச்சு நட்சத்திரமாக அக்காலத்தில் உயர்ந்தார் என சு.ரா அடிக்கோடிடுகிறார்.

ஜி.நாவிடம் நிறைய திறமைகளுடன் தீராத ஆவேசமும் ஆற்றலும் இருந்தது. அதுவே அவரது பலவீனமாகவும் மாறியது. அவருக்கு ஆர்வமூட்டுவது பெண்களை வேட்டையாடுவதிலும் உணவை தேடி உண்பதிலும் உள்ள மிருகீயமான சாகச உணர்வு. நாகரிக உலகின் விளையாட்டுகள் அவருக்கு அற்பமாக தோன்றி இருக்கும். அவரது சீரழிவுக்கு இது முக்கிய காரணம்.

இந்த 96 பக்கங்களுக்கு இடையில் அஜானுபாகுவாக தோன்றி இறுதியில் ஒருநாளைக்கு ஒரு லட்டு மட்டுமே தின்ன முடிகிற அளவுக்கு பலவீனமாகி மாறி விடுகிற ஜி.நாவை ஆரம்பத்தில் நாடிச் செல்கிறவராக, பின்னால் பணம் தந்து ஆதரிப்பவராக, அதற்கு பின் தொந்தரவாக உணர்கிறவராக, பின் கடுமையாக வெறுத்து “இனி ஊருக்கு வந்தால் ரௌடியை வைத்து விரட்டுவேன்” மிரட்டுகிறவராக பல நிலைப்பாடுகளை கொள்ளுகிறார் சு.ரா. எதையும் அவர் நியாயப்படுத்தவில்லை என்பது முக்கியம். அந்தந்த சூழலில் தன்னால் முடிகிறபடி நடந்து கொண்டுள்ளதை உணர்த்துகிறார். சு.ராவின் மிரட்டலையும் மறுதலிப்பையும் மீறி ஜி.நா நாகர்கோவில் போய் அவரது கடையில் வந்து நிற்க சு.ரா அவரை பார்க்க மறுத்து விடுகிறார். இதற்கு பின் சில வருடங்கள் கழித்து பால்வினை வியாதிகளாலும், வயிற்று புற்றுநோயாலும் முற்றிலும் தகர்ந்து போன நிலையில் ஜி.நாவை அவர் சந்திக்கிற காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

ஒரு சம்மந்தமில்லாதவரின் திருமண நிகழ்வுக்கு சு.ராவை பார்க்கும் பொருட்டு மட்டும் அவர் வந்து பக்கத்தில் அமர்கிறார். சு.ரா சாப்பிடும் படி கேட்க “ரெண்டு வருடங்களாக சாப்பாடு ஏதும் இல்லை. தினமும் சின்ன லட்டு மட்டும் தான்” என்கிறார். இதை அவர் கவலையோ கழிவிரக்கமோ இன்றி தான் சொல்லுகிறார். இதற்கு முன்பே ஜி.நா கொஞ்சம் புத்தி பேதலித்த நிலையில் தான் இருக்கிறார். அவர் தனது துயரத்திற்கு வெளியே நின்று அதனை பார்க்கிறார். அது தான் நம் மனதை உருக்குகிறது. அவர் சொல்லுகிறார்: “நான் இப்படியே இருந்து விட்டு போகிறேன். நீ கவலைப்படாமல் உன் பாட்டுக்கு குடும்பத்தை கவனித்து, வியாபாரத்தை நடத்தி, எழுதியபடி, காரில் வந்து போய்க் கொண்டு இரு” என்கிறார் சாதாரணமாக. இது கேட்க கேட்க ராமசாமிக்கு அழுமை பொங்கி வருகிறது. பொதுவெளியில் அழுது விடுவோமோ என அஞ்சுகிறார். வாசிக்கிற நாமும் தான்.

ஜி.நாகராஜன் தான் வாழ்கிற வாழ்க்கைக்கு முற்றிலும் வெளியே நின்று அதனை பார்க்கக் கூடியவராக இருந்திருக்கிறார். அவர் அதனாலேயே தான் செய்கிற எதற்கும் தன்னை பொறுப்பாக நினைக்கவில்லை. அதனாலே தான் அவருக்கு இறுதியில் குற்றவுணர்வோ கழிவிரக்கமோ இல்லை. இதில் ஒரு களங்கமின்மை உள்ளது. களங்கமற்றவனின் அழிவு நம்மை மனம் கலங்க வைக்கிறது.

ஜி.நாகராஜன் செல்லப்பாவையும் க.நா.சுவையும் விட நமக்கு ஆகர்சமான ஆளுமையாக இருப்பதும் இதனாலேயே. லட்சியங்கள் அல்லது பாசாங்கின் துணையின்றி நல்லவனாய் இருப்பதன் துன்பியல் தான் அவர் வாழ்க்கை. ஒரு முட்டாள்தனமான நல்ல ஆன்மாவாக அவர் இந்நூல் வழி துலங்குகிறார்.
Share This

1 comment :

  1. nalla pathivu.. adding to that, the madurai. the city creates lots of G.Ns every now and then.

    ReplyDelete

Contact Us

So you think we’re the right folks for the job? Please get in touch with us, we promise we won't bite!



Designed By Blogger Templates